நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா அங்கிருந்து சென்றது இனியனுக்கு மனதை வருத்தி விட்டது.

"நான் ஏதோ கிண்டலுக்கு சொன்னேன்.. இதை அவ சீரியஸா எடுத்துக்கிட்டாளா..?" என வருத்ததோடு சொன்னான் மகேஷ்.

"அவளை நான் சமாதானம் பண்ணிக்கிறேன்.. நீங்க சாப்பிடுங்க அப்பா.." என்ற இனியன் சாப்பிட்டு முடித்ததும் எழுந்தான். உணவு பொட்டலம் ஒன்றை எடுத்துக் கொண்டு சந்தியாவை தேடி சென்றான்.

சந்தியா அறை மூலையில் அமர்ந்திருந்தாள். கால் முட்டியில் தலை புதைத்து அமர்ந்திருந்தவளுக்கு மனம் முழுக்க சோகம் மட்டுமே இருந்தது.
இவ்வளவு நாளும் இந்த வீட்டின் செல்ல இளவரசி இவள். இதுநாள் வரையிலும் அவளை யாரும் எதிர்த்து பேசியதில்லை. அவள் செய்யும் சிறு சிறு விசயம் கூட பாராட்டைதான் பெற்றிருக்கிறது. அப்படி இருக்கையில் இன்று தன் சொந்த மாமனே தன்னை குறை சொல்லி விட்டதில் அவளுக்கு மிகுந்த சோகம். அவளின் ஆசை கோபுரம் அத்தனையையும் உடைத்து விட்டான் இனியன். வீட்டின் செல்ல பெண்ணாக இருந்தவளின் பதவியை பிடுங்கியவன் அவளை அனைவர் முன்னாலும் கோமாளியாக்கி விட்டான். இதையெல்லாம் நினைக்க நினைக்க அவளுக்கு அழுகைதான் வந்தது. ஆனால் அவனின் காரணமாக அழவே கூடாது என மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டதால் தன்னை தானே தேற்றியபடி அமர்ந்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் இந்த தேற்றலுக்கும் குறுக்கீடாக அறைக்குள் வந்தான் இனியன்.

சந்தியாவை தேடி வந்த இனியன் சந்தியா அறையின் மூலையில் அமர்ந்திருப்பதை கண்டு அவளருகே வந்தான்.

"இங்கே ஏன் உட்கார்ந்திருக்க..? எழுந்து வந்து சேர்ல உட்காரு.." என அவன் சொல்ல அவனின் கரிசனம் கண்டு மனதுக்குள் சிரித்தாள் சந்தியா.
அவள் எழவும் இல்லை. பதிலும் ஏதும் சொல்லவில்லை. இது இனியனுக்கு கோபத்தைதான் தந்தது.

"என்னை பார்த்தா உனக்கு பைத்தியமா தெரியுதாடி..? மரியாதையா எழு.." என அவன் அதட்டவும் விம்மும் தன் மனதை வெளிக்காட்டாமல் எழுந்து நின்றாள் சந்தியா.

அவளின் கை பிடித்து இருக்கைக்கு அழைத்து வந்தவன் அவளை அமரவைத்து விட்டு அவளெதிரே அமர்ந்தான். உணவு பொட்டலத்தை பிரித்தான். உணவை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

ஆனால் சந்தியா வாயை திறக்கவில்லை. தன் முன் அமர்ந்திருந்தவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"எதுக்கு இப்படி பார்க்கற..? உன்னை சாப்பிட வைக்க கூட நான் வில்லன் அவதாரம் எடுக்கணுமா என்ன..?" என அவன் புருவம் உயர்த்தி கேட்க அவள் பயத்தோடு அவன் கையிலிருந்த உணவை சாப்பிட்டாள்.

அவன் கையால் சாப்பிட அவளுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் இனியன் இந்த தண்டனையைதான் அவளுக்கு தர விரும்பினான்.
"நானே சாப்பிட்டுக்கிறேன்.." மெல்லிய குரலில் சொன்னவளை நக்கலாக பார்த்தான் அவன்.

"ஏன்..? நான் ஊட்டி விடுறதால உனக்கு என் மேல காதல் வந்துடும்ன்னு பயமா..?" குரல் முழுக்க கேலியோடு அவன் கேட்க சந்தியாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"உன் சமையல் படு கேவலம் தெரியுமா..? நீ எதுக்குமே உதவாதவ.. இது இன்னைகாவது உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.. குட்டி இளவரசி கனவை கலைச்சிக்கிட்டு நிஜத்தை பாரு.. எங்க அப்பாவும் அம்மாவும் உனக்கு எக்கச்சக்கமா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிட்டாங்க.. அதனாலதான் கட்டிய கணவனை கூட மதிக்காம திமிரோடு திரியற நீ.." அவன் இப்படி திட்டிக் கொண்டே உணவை ஊட்டினான். அதை காதில் வாங்கியபடியே உண்டவளுக்கு உணவு விஷமாகதான் இருந்தது.

"எனக்கு போதும்.." என்றவளை நக்கல் சிரிப்போடு பார்த்தான் அவன்.

"ஏன் டயட் மெயின்டன் பண்றியா..? புருசனையே மதிக்காதவளாச்சே நீ.. டயட் எதுக்கு..? அப்பதான் மத்த ஆண்களை பின்னால சுத்த வைக்க முடியும்ன்னு நினைக்கிறியா..?" அவன் சொன்னதை கேட்டு சந்தியாவிற்கு கோபம்தான் வந்தது. ஆனால் தந்தையின் நினைவில் தன்னால் வெளிகாட்ட இயலாத அவளின் கோபம் கண்ணீராக மாறி கசிந்தது.

இனியன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டான். "சின்ன சின்ன வார்த்தைகள் கூட நம்ம குட்டி இளவரசியின் குட்டி மனசை உடைக்குதா..?" என கேலியாக கேட்டான் அவன்.

சந்தியாவிற்கு அவமானமாக இருந்தது அவன் முன்னால் அழ. ஆனால் தன்னால் இதை தவிர வேறு ஏதும் செய்ய இயலாது என்ற விசயம் அவளுக்கு இன்னும்தான் கண்ணீரை தந்தது. ஒற்றை கையால் அவளது முகத்தை நிமிர்த்தினான் அவன்.

"நான் சொன்ன சின்ன வார்த்தைகள் உனக்கு அவ்வளவு வலிக்குதா..? அப்ப எனக்கு வலிக்காதா என்னை பிடிக்கலன்னு நீ சொன்ன வார்த்தைகள்..?" சாந்தமாக அவன் கேட்க அவனின் கண்களை வெறுப்போடு பார்த்தாள் அவள்.

"பிடிக்கலன்னா பிடிக்கலன்னுதான் சொல்ல முடியும்.. எனக்கு உன்னை பிடிக்கல.. உன் அதிகாரம் பிடிக்கல.. உன் ஆணவம் பிடிக்கல.." அவள் ஒவ்வொரு வார்த்தை சொல்லும் போதும் அவனுக்கு ஆத்திரம்தான் அதிகமானது. தனது கோபத்தால் அவளை சேதம் செய்ய விரும்பவில்லை அவன். அதனால் அவளை விட்டுவிட்டு எழுந்து நின்றான்.

உணவை அருகில் இருந்த மேஜையின் மீது வைத்தான். "நான் திரும்பி வரும் முன்னாடி இது எல்லாத்தையும் சாப்பிட்டுடு.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

பைக் சாவியோடு வீட்டின் கதவை திறந்தவனை கண்டு "எங்கே போற இனியா..?" என கேட்டாள் பொன்னி.

"சும்மா வெளியே போறேன் பாட்டி.. சீக்கிரம் வந்திடுறேன்.." என்றவன் வாசலுக்கு வந்து தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

மூர்த்தி மாந்தோப்பில் இருந்த குடோனின் வாசலில் இருந்த கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். பசி வேறு அவனின் வயிற்றை கிள்ளியது. தினமும் வீட்டிலிருந்து இவனுக்கு உணவு கொண்டு வரும் வீரய்யா இன்று இன்னமும் வந்து சேரவில்லை. தாமதத்தின் காரணத்தை அறியாமல் வானம் பார்த்து படுத்துக் கொண்டிருந்தான் அவன்.

இனியன் இன்று ஊருக்கு வந்து விட்டதாக மதியம் வீரய்யா சொல்லி சென்றார். தன் மருமகன் இப்போது எப்படி இருக்கிறானோ என பார்க்க ஆவல் கொண்டான் மூர்த்தி. குமரனுக்கு தம்பியான அவனுக்கு இதுநாள்வரை தான் ஒரு முன்னால் கைதி என்பது சிறிதும் வருத்ததை தரவில்லை. ஆனால் இனியனின் மாமனாராகி விட்டவனுக்கு தான் செய்த தவறுக்களை நினைத்தும் தான் ஜெயிலுக்கு சென்று வந்ததை நினைத்தும் அவமானமாக இருந்தது.

தன்னால் தன் மருமகனுக்கு கரும்புள்ளி ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என மனதுக்குள் பிராதித்தான் அவன். ஆனால் அண்ணனுக்கு தன்னால் இந்த கரும்புள்ளி ஏற்பட்டு இருக்குமோ என்பதைதான் யோசிக்கவே மறந்து விட்டான்.

வானம் பார்த்துக் கொண்டிருந்தவன் மாந்தோப்பிற்குள் பைக் ஒன்று வரும் சத்தம் கேட்டு கட்டிலை விட்டு எழுந்து நின்றான். அவனின் முன்னால் பைக்கை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் இனியன்.

விளக்கு வெளிச்சத்தில் இனியனை பார்த்த மூர்த்தி அசந்து நின்று விட்டான். தனது மாப்பிள்ளை இவ்வளவு அம்சமானவனாக மாறி விட்டது அவனுக்கு பெருமிதத்தை தந்து விட்டது. என்ன நடை.. என்ன உருவம்.. என்ன கம்பீரம்.. அவனை வியந்து பார்த்தான் மூர்த்தி.

மூர்த்தியின் அருகில் வந்த இனியன் குனிந்து அவனின் காலை தொட்டான். என்னை "ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா.." என்றவனை சட்டென எழுப்பி நிறுத்தினான் மூர்த்தி.

"நூறு வருசம் சந்தோசமா இரு.." என்றவனை பார்த்து புன்னகைத்தான் இனியன்.

"தேங்க்ஸ் மாமா.. வீரய்யாவுக்கு வீட்டுல வேலை அதிகம்.. அதனாலதான் நான் சாப்பாடு கொண்டு வந்தேன்.." என்றவன் தான் வழியில் வாங்கி வந்த ஹோட்டல் உணவை அவனிடம் நீட்டினான்.

"எதுக்கு கடையில கட்டிட்டு வந்திருக்க..? வீட்டுல சமைக்கலையா..?" குழப்பமாக கேட்டான் மூர்த்தி.

"சந்தியா சமைச்சா மாமா இன்னைக்கு.. இன்னைக்கு நான்தான் சமைப்பேன்னு அடம்பிடிச்சி மத்தவங்களை சமைக்க விடாம இவளே சமைச்சா.. சாப்பாடு கொடூரம்தான்.. என்னை தவிர வேற யாராலயும் அதை சாப்பிட முடியல.. அதனால வீட்டுல எல்லோருக்கும் கடை சாப்பாடுதான்.. அதனாலதான் உங்களுக்கும் கடையிலயே கட்டிட்டு வந்துட்டேன்.." என்றவனை பரிதாபமாக பார்த்தான் மூர்த்தி.

"அவ சின்ன பொண்ணுப்பா.. ஏதாவது குறை இருந்தா மன்னிச்சிடு.." சிறு குரலில் அவன் சொல்ல இனியன் கட்டிலில் அமர்ந்து தரையில் இருந்த சிறு கற்களை காலால் உதைத்துக் கொண்டிருந்தான். அவனின் முகத்தில் இருந்த சோகம் கண்டு துணுக்குற்ற மூர்த்தி அவன் அருகே அமர்ந்தான்.

"என்ன ஆச்சிப்பா..?" என்றான் அக்கறையோடு.

பொய் சொல்வதில் பட்டம் பெற்ற இனியன் மீண்டும் தனது திறமைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தான். "என்னவோ சரி இல்ல மாமா.. என்னை அவ திரும்பி கூட பார்க்க மாட்டேங்கறா.. அவளுக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா மாமா.. அவ அழகுக்கு நான் சமம் கிடையாது போல.. அனாதையா வளர்ந்த நான் அவளுக்கு தகுதியானவன் இல்லை போல..‌" என்றவன் தலை தலையை கோதியபடி பெருமூச்சி விட்டான்.

அவன் சொன்னதை கேட்டு மூர்த்திக்கு சந்தியா மேல் ஆத்திரமாக வந்தது. சந்தியா இப்படி சொல்லி இருப்பாளா என மூர்த்தி யோசிக்க கூட முடியாத அளவுக்கு இனியன் அவ்வளவு அழகாய் நடித்து இருந்தான்.

"அவ பைத்தியம் மாப்பிள்ளை.. அவ சொல்ற எதையும் மனசுல வச்சிக்காதிங்க.. இவ்வளவு நாளும் உங்க கூட போன்ல கொஞ்சிட்டு இருந்தவளுக்கு இப்ப என்ன வந்துச்சின்னு தெரியல.. நான் நாளைக்கு வந்து அவக்கிட்ட பேசி பார்க்கறேன்.." என அவனுக்கு ஆறுதல் சொன்னான் மூர்த்தி.

இனியன் சோகமாக தலையசைத்தான்.

"உங்களுக்கு சாப்பாடு தந்துட்டு போகதான் வந்தேன் மாமா.. தேவையில்லாம ஏதேதோ பேசிட்டேன்.. அவக்கிட்ட நீங்க ஏதும் கேட்க வேணாம். என் தலையெழுத்து எப்படியோ அப்படியே இருந்துட்டு போறேன் நான். அம்மாவையும் அப்பாவையும் இத்தனை வருசமா பிரிஞ்சி வாழணும்ன்னு எனக்கு விதி. அது மாதிரி இப்ப பொண்டாட்டிக்கிட்ட கேவலமா பேச்சு வாங்கணும்ன்னும் விதி.. என் விதி என்னோடு முடியட்டும் மாமா.. நீங்க ஏதாவது பேசி வச்சா அப்புறம் சந்தியா மனசு வருத்தப்படும்.." என்றவன் சோகத்தோடு எழுந்து நின்றான்.

"நான் வீட்டுக்கு கிளம்பறேன் மாமா.. நீங்க பார்த்து பத்திரமா இருங்க.." என்றான்.

அவனை கண்டு மூர்த்திக்கு பரிதாபமாக இருந்தது. அவன் அவனுக்கு சமாதான மொழிகள் கூறும் முன்பே அங்கிருந்து விருட்டென கிளம்பி விட்டான் இனியன்.
தான் பெற்ற பெண் ஏன் இவ்வளவு திமிரோடு இருக்கிறாள் என சந்தியா மீது கோபம் கொண்ட மூர்த்தி அவளுக்கு போன் செய்தான். மறுமுனையில் ஸ்விட்ச் ஆப் என வரவும் அதற்கும் சந்தியா மீதே கோபம் கொண்டான்.

சந்தியா மேஜை மேல் இருந்த உணவை வெறித்து பார்த்தாள். அவளுக்கு அதை உண்ணவே பிடிக்கவில்லை. உணவை எடுத்து கொண்டு போய் கொட்டி விட்டு அறைக்கு வந்தவள் தலையை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தாள்.

இவனது அதிகாரத்திற்கு தன் தன்மானத்தை அடமானம் வைக்க விரும்பவில்லை இவள். அவனது வார்த்தைகளை நம்பி தன்னையே இழந்த நாள் நினைவில் வந்து போனது. நெஞ்சில் ரணமாக இருந்ததை மறக்கவே முடியவில்லை அவளால். அன்று தனது தந்தையை பழி வாங்க தன்னை காதலின் பெயரில் ஏமாற்றியவன் இன்று தன்னை பழி வாங்க என்ன செய்ய போகிறானோ என நினைந்து பயந்தாள் அவள்.

வெகு நேரம் யோசனையில் இருந்தவள் பைக்கின் சத்தம் கேட்டதும் பதறி எழுந்து நின்றாள். கட்டிலை பார்த்தவள் நொடியும் தாமதிக்காமல் தலையணை ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வந்து கதவை திறந்தான் மகேஷ். அறை வாசலில் தலையணையை நெஞ்சில் அணைத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் சந்தியா. இவள் ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்து இப்படி தலையணையோடு நிற்கிறாள் என்ற குழப்பத்தோடு அவளை பார்த்தான் மகேஷ்.

"என்ன சந்தியாம்மா..?"

"நான் இன்னைக்கு அத்தையோடு தூங்கட்டுமா..?" என்றாள் தயக்கமாக அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top