நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டிற்குள் வந்த இனியன் பைக்கின் சாவியை ஒரு ஓரமாக வீசி விட்டு தனது அறைக்கு சென்றான்.

காலியாக கிடந்த அறையை குழப்பமாக பார்த்தவன் அறையை விட்டு வெளியே வந்தபோது மகேஷின் அறை வாசலில் தலையணையை அணைத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் சந்தியா.

"நான் இன்னைக்கு அத்தையோடு தூங்கட்டுமா..?" என கேட்டவளை மகேஷ் ஆச்சரியத்தோடு பார்த்த நேரத்தில் சந்தியாவின் கையை பற்றினான் இனியன்.

மனைவியின் தோளில் கையை போட்டுக் கொண்டு அப்பாவை பார்த்தான்.

"உடனே வந்துடுறேன்னு சொல்லிட்டு வெளியே போனேன்.. அஞ்சி நிமிசம் லேட்டாயிடுச்சின்னு கோவிச்சிக்கிட்டு அம்மாவை பார்க்க வந்துட்டா இவ.. இவளை நான் சமாதானம் செஞ்சிக்கிறேன்.. நீங்க போய் தூங்குங்க.." என்றவன் சந்தியாவை தனது அறைக்கு இழுத்து வந்தான்.

அறைக்குள் வந்ததும் அவளது கையை விட்டுவிட்டு கோபமாக அவளை பார்த்தான்.

"உனக்கு என்ன பைத்தியாமாடி..? எதுக்கு இப்ப சின்ன புள்ளை மாதிரி எங்க அம்மா கூட தூங்க கிளம்பின..? இதையெல்லாம் கேட்டா ஊர் சிரிக்கும்‌‌.." என்றான் எரிச்சலோடு.

சந்தியாவிற்கு கண்ணீர் துளிர்த்தது

"நீ சின்ன புள்ளை தனமா நடந்துக்கற போது நான் சின்ன புள்ளை மாதிரி செஞ்சா தப்பா..?" என கேட்டவளை பரிதாபத்தோடு பார்த்தான் இனியன்.

"அதுக்கு நான் என்ன செய்யட்டும்..? நான் சின்ன புள்ளை தனமா நடந்துக்கறதையே உன்னால தாங்கிக்க முடியல.. அப்புறம் எப்படி நான் உனக்கு நிஜமான பிரச்சனைகளை தர முடியும்..? ஒன்னே ஒன்னை மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ.. உன் தைரியம், உன் தாக்குப்பிடிக்கும் திறன், மனசு உடையவதின் கடைசி அளவு எல்லாமே எனக்கு ரொம்ப சரியா தெரியும்.. உன் எல்லையை தொடுவனே தவிர தாண்ட மாட்டேன்.. இது உனக்கு புரியுதா‌..?" என அவன் கேட்க சந்தியாவிற்கு தன்னை நினைத்தே கோபம் கோபமாக வந்தது.

அவன் நிருபிக்க நினைப்பது இதைதான். அவள் எதற்கும் உதவாதவள். அவளால் சிறு பிரச்சனைகளை கூட தாங்க இயலாது. அவனின் தயவு இல்லாமல் அந்த வீட்டில் அவள் எதையும் சமாளிக்க மாட்டாள். அவன் நிரூபிக்க நினைப்பதை புரிந்துக் கொள்ள முடிந்த அவளால் அதை ஏற்றுக் கொள்ளதான் முடியவில்லை.

அவளுக்கு தன் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் விருப்பம் இல்லை. அவனை வெற்றியடைய வைக்கவும் ஆசையில்லை. அதனால் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஒரு முடிவோடு அவனை பார்த்தாள்.

"உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு.. ஆனா நான் என் மனசை மாத்திக்க மாட்டேன்.. நீ ஒரு சீட்டர்.. ஒருமுறை உன் வலையில தெரியாம விழுந்துட்டேன்.. ஆனா இனி அது கனவுல கூட நடக்காது.. நீ என்ன மாதிரி பரிட்சை வச்சாலும் என் மனசை உடைக்கவே முடியாது உன்னால.." என சொன்னவளின் மனதில் 'அதுதான் ஏற்கனவே உடைஞ்சிடுச்சே..' என ஒரு குரல் ஒலித்தது.

இனியன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். எதிர்த்து போராடும் அவளின் குணம் அவனுக்கு பிடித்திருந்தது. எதிராளி சரியாக அமையாவிட்டால் விளையாட்டு எதுவும் சூடு பிடிக்காது என்பதை அறிவான் அவன்.

"ஓகே.. உன்னோட தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கேன் நான்.." என்றவன் சிரிப்போடு அவளின் கன்னம் தட்டினான்.

"ஆனா அதிகமா அழுந்துடாத.. என்னால அதை தாங்கவே முடியாது.." என்றான். அவனை வெறுப்போடு பார்த்தாள் அவள். இந்த மாதிரி வார்த்தைகளால்தான் தான் ஏமாந்து போகின்றோம் என்பதை புரிந்துக் கொண்டு தன்னையே திட்டிக் கொண்டாள்.

"என்னை தொட்டு பேசாத.." அவனது கையை தட்டி விட்டாள்.

"ஏன்..? நான் தொட்டா கரைஞ்சிடுவியா நீ..? இல்ல நான் தொட்டா உன் மனசு கரையுதா..?" என அவன் கேட்க அவளது அனுமதி இல்லாமலேயே அவளது கன்னத்தில் செம்மை படர்ந்தது. அதை கண்டவனுக்கு அதிர்ச்சியில் இதயம் ஒரு நொடி நின்றது.

ஐந்து வருடத்திற்கு முன்பு சிறு தீண்டலுக்கே அதன் முடிவில் அவளையே அவனிடம் தந்துவிட்டாள் அவள். அதை நினைத்து பார்த்தவனுக்கு இப்போது பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவளின் பலவீனம் அறிந்து அவளை உடைக்க நினைத்தவனுக்கு அந்த பலவீனமே தான்தான் என புரிந்ததும் தனது உறுதி உடைவதை கண்டான். அவளின் மிகப்பெரிய பலவீனம் தான்தான் என புரிந்துக் கொண்டவனுக்கு அத்தனை கோபத்திலும் சிறு சந்தோசமாகதான் இருந்தது.

அவளை விட்டு அவனாகவே விலகி நின்றான்.

"ஓகே.. இனி நான் அவசியம் இல்லாம உன்னை டச் பண்ணல.." என்றவன் அதன்பிறகு எதையும் பேசாமல் கட்டிலின் மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான்.

அவனால் அதன்பிறகு எதையும் சிந்திக்க கூட முடியவில்லை. உறங்க முயற்சித்து கண்களை மூடினான் அவன்.

சந்தியா கட்டிலின் மறு பக்கத்தில் படுத்தாள். இனி என்ன செய்ய போகிறானோ என நினைத்து பயந்தாள் அவள்.

"சந்தியா.." சில நிமிடங்களுக்கு பிறகு அழைத்தான் இனியன்.

அவன் பக்கம் திரும்பினாள் சந்தியா. கையை கட்டியபடி படுத்துக் கொண்டிருந்தவன் அவளை ஆளை அடிக்கும் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

"எதுக்கு கூப்பிட்ட..?"

"உனக்கு ஏன் என்னை பிடிக்கல..?" உதட்டை கடித்து உணர்ச்சிகளை அடக்கியபடி கேட்டான் அவன்.

"ஏன் பிடிக்கணும்..? என்னை காதல் வசனம் சொல்லி ஏமாத்தியதுக்கா..? இல்ல என் சம்மதம் கேட்காம என் அனுமதி இல்லாமலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கா..?"

"உன்னை ஏமாத்த நினைச்சிருந்தா உன்னை நான் ஏன்டி கல்யாணம் பண்றேன்..?" கசந்த சிரிப்போடு கேட்டவன் நெற்றியில் கையை வைத்தபடி மேற் கூரையை பார்த்தபடி படுத்தான்.

அவனது முகத்தை தன்னை மறந்து பார்த்தாள் சந்தியா. அவனது தோற்றம் எப்போதுமே அவளுக்கு பிடிக்கும். அவனது முகத்தில் முன்பு இருந்த குழந்தை தனம் இப்போது முழுவதுமாக மறைந்து விட்டிருந்தது. கம்பீரமும் கடுமையும், அத்தோடு நக்கல் சிரிப்பும் மட்டுமே இருந்த இந்த முகமும் கூட அவளுக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் அவனின் திமிருக்கு ஒரு முடிவு கட்டாமல் தான் தன் மனதின் எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை என முடிவெடுத்துக் கொண்டவள் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள்.

காலையில் இனியன் கண் விழித்தபோது அவன் முன்னால் ஈர கூந்தலில் துண்டை சுத்தியிருந்த சந்தியா புன்னகையோடு நின்றிருந்தாள்.

தன் கண்களை நம்ப முடியாமல் கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தான் அவன். கழுத்தின் ஓரங்களில் இருந்த தண்ணீர் துளிகள் அவள் இப்போதுதான் குளித்து இருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்லின. அவள் கட்டியிருந்த புடவை அந்த காலை நேர வேளையில் அவளை பேரழகியாக்கி காட்டியது.

"என்ன அப்படி பார்க்கற..? டீயை எடுத்துக்க.. எனக்கு வேற வேலை நிறைய இருக்கு.." என்றவள் தன் கையிலிருந்த தேனீர் கோப்பையை அவனிடம் நீட்டினாள்.

இன்னும் கனவு கலையவில்லை போலும் என்ற எண்ணத்தோடு தேநீர் கோப்பையை கையில் வாங்கி கொண்டான் அவன்.

அவள் சிறு புன்னகையோடு அங்கிருந்து திரும்பி நடந்தாள். நடந்து சென்றவளை பார்த்தபடியே தேனீரை குடித்தவன் குடித்த நொடியில் அதை துப்பி விட்டு தேனீரை பார்த்தான்.

உப்பு கலந்த தேனீர் மொத்த தூக்கத்தையும் கலைத்து சென்று விட்டது. சந்தியா காலையிலேயே தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு சிரிப்புதான் வந்தது. எத்தனை கரண்டி உப்பை கலந்தாளோ என நினைத்து சிரித்தவன் அதே சிரிப்போடு குளிக்க கிளம்பினான்.

அவன் தனது பணிக்கு செல்ல தயாராகி வெளியே வந்தபோது அனைவரும் டைனிங் ஹாலில் இருந்தனர்.

"சாப்பிடுவிங்க வாங்க.." என இனிப்பான குரலில் அழைத்தாள் சந்தியா.

சாப்பிட வந்து அமர்ந்தவனின் அருகே அமர்ந்தவள் அவன் முன் தட்டை வைத்து உணவுகளை பரிமாறினாள்.

தன் முன் இருந்த உணவை பசியோடு பார்த்தான். "நான்தான் சமைச்சேன்.. உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.." என அவள் சொல்ல அவனது மொத்த பசியும் பறந்து விட்டது.

இருந்தாலும் தன் ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தான். உப்பு கலந்த தேனீரே பரவாயில்லை எனும் அளவிற்கு இருந்தது அந்த உணவு. காரம் அவனது நாக்கை நெருப்பாக சுட்டது.

"இன்னைக்கு எப்படிப்பா இருக்கு சமையல்..? காலையில் நாலு மணியிலிருந்து சமைச்சா.." என்றாள் பாட்டி.

'ரொம்ப உழைச்சி இருப்பா போல..' இனியனுக்கு அவள் மேல் பரிதாபமாக இருந்தது.

"நல்லா இருக்கு பாட்டி.." என அவன் சொல்ல சந்தியா ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள்.

"செம டேஸ்ட்.. நீ இன்னும் சாப்பிடலையா சந்தியா..?" அக்கறையோடு கேட்டான் அவன்.

"நான் உங்களுக்கு மட்டும்தான் சமைச்சேன்.. எங்களுக்காக மல்லி அக்கா சமைக்கிறாங்க.. அவங்க சமையலை முடிச்ச உடனே நான் சாப்பிட்டுடுவேன்.." என கண்ணடித்து சொன்னவளை யோசனையோடு பார்த்தான் அவன்.

"அது வரைக்கும் நீ பசியோடு இருப்பியா..? நான் உனக்கு ஊட்டி விடுறேன்.. நீ சாப்பிடு.." என்றவன் அவளுக்கு உணவை ஊட்டினான்.

பாட்டியின் முன்னிலையில் முடியாதென சொல்ல முடியாமல் அவன் ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டாள். காரமான காரம். நாக்கு எரிந்தது. காரம் தொண்டையிலும் பிடித்துக் கொண்டதால் இருமல் வேறு. கண்களில் கண்ணீரோடும், நாக்கின் எரிச்சலோடும் அவள் இரும்ப அவள் முன்னால் தண்ணீர் டம்ளரை நீட்டினான் இனியன். அவசரமாக தண்ணீர் டம்ளரை வாங்கியவள் ஒரே மூச்சில் தண்ணீர் முழுமையும் குடித்தாள். காரம் சற்று மட்டுப்பட்டது.
ஆனாலும் எரிச்சல் அடங்கவே இல்லை. நாக்கை கடித்துக் கொண்டு திரும்பியவள் இனியன் அமைதியாக அந்த உணவை சாப்பிடுவதை கண்டு அதிர்ந்து விட்டாள்.

காலையில் தேனீரில் வேண்டுமென்றேதான் உப்பை கலந்தாள். ஆனால் சமையலில் அவள் எந்த குழப்பமும் வேண்டுமென்று செய்யவில்லை. சாப்பாடு கேவலமாக இருக்கும் என்று மட்டும்தான் நினைத்தாளே தவிர அது இவ்வளவு காரமாக இருக்கும் என அவள் நினைக்கவே இல்லை. அவன் ஏதும் சொல்லாமல் சாப்பிடுவது அவளுக்கு மனதை வருத்தியது.

அவன் முன்னால் இருந்த உணவு தட்டை தள்ளி வைத்தாள். இனியன் நிமிர்ந்து அவளை பார்த்தான். கண்ணீரோடு தரை பார்த்தாள் அவள்.

"ஸாரி.. நான் வேணும்ன்னு காரம் போடல.. இதை சாப்பிடாதே.. மல்லி அக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல சமைச்சிடுவாங்க.." என மெல்லிய குரலில் கெஞ்சலாக சொன்னாள் சந்தியா.

"பரவால்லை நான் இதையே சாப்பிடுறேன்.." என்றவனை கோபமாக பார்த்தாள் அவள்.

"ஏன் இப்படியெல்லாம் பண்ற..?"

"எனக்கு தேவை ருசியான சமையல் இல்ல.. என் மனைவி செய்த சமையல்தான்.." என்றவன் தட்டிலிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் சொன்ன வார்த்தைகள் சந்தியாவை வியப்பில் ஆழ்த்தி விட்டன. அவள் அவனை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே உணவை முடித்துக் கொண்டு எழுந்தான் இனியன். அவனின் செய்கையும் பேச்சும் அவளை என்னவோ செய்தது. தவறு முழுக்க அவள் மீது உள்ளது என்பதை போல உணர்ந்தாள். இந்த முறை தவறு அவள் மீது என்றாலும் கூட அதை அவன் தவிர்த்து இருக்கலாமே.. ஏன் இப்படி செய்கிறான்..? என்ற குழப்பத்தில் இருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top