நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் தனது வேலைக்கு கிளம்பினான். அவனின் பின்னால் ஓடினாள் சந்தியா. அவன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு திரும்பி பார்க்க சந்தியா கதவை பிடித்தபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் தயக்கத்தை கண்டவன் புன்னகையோடு தன் கையை ஆட்டி விடை தந்தான்.

சந்தியா தயக்கத்தோடு டாடா காட்டினாள். ஆனால் அதற்குள் அவன் அந்த வீட்டின் கேட்டை தாண்டி சென்று விட்டான்.

சக்தி தனது வேலைக்கு புறப்பட மகேஷ் தனது தினசரி அலுவல்களை பார்க்க கிளம்பி விட்டான்.

அவர்கள் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் வந்தான் மூர்த்தி.

''அப்பா.." ஆசையோடு வாசல் வரை சென்று வரவேற்றாள் சந்தியா. ஆனால் அவனோ அவளை முறைப்போடு பார்த்துவிட்டு அவளை தாண்டிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

'இவர் ஏன் இப்படி கோபமா முறைச்சிட்டு போறாரு..' என யோசித்தபடி அவரை பின்தொடர்ந்தாள் சந்தியா.

''வாங்க மாப்பிள்ளை.. சாப்பிடுவிங்க வாங்க..'' பொன்னி அழைத்தாள். மூர்த்தி சந்தியாவை முறைத்து பார்த்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தான்.

''உங்களுக்கு இப்பதான் சாப்பாடு கொடுத்து விடலாம்ன்னு இருந்தோம்.. அதுக்குள்ள நீங்களே வந்துட்டிங்க.. சந்தியா இனியனுக்கு சமைச்சா.. அதனால மல்லி சமைக்க லேட் ஆயிடுச்சி.. அதனாலதான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட லேட்டாயிடுச்சி.." பொன்னி மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னாள்.

மல்லி உணவை பரிமாறினாள். அவள் முன் கையை காட்டி தடுத்தான் மூர்த்தி. "சந்தியா சமைச்சதை பரிமாறுங்க.." என்றான்.

சந்தியா தயக்கமாக அப்பாவை பார்த்தாள். "அப்பா நான் அவருக்காக மட்டும் கொஞ்சமாதான் சமைச்சேன்.."

சமையல் கட்டிலிருந்து திரும்பிய மல்லி "கொஞ்சமா குழம்பு மட்டும்தான் இருக்கு.." என்றவள் சந்தியா வேண்டாமென தடுக்கும் முன்பே மூர்த்திக்கு அதை பரிமாறினாள்.

"அப்பா.. அந்த குழம்பு நல்லாருக்காது.. ப்ளீஸ் சாப்பிடாதிங்க.." கெஞ்சினாள் சந்தியா.

"இதைதானே என் பேரனும் சாப்பிட்டான்.. இப்ப என்ன புதுசா நல்லா இருக்காதுன்னு இப்படி கெஞ்சுற.." பொன்னி சந்தேகமாக கேட்டாள்.

சந்தியா பொன்னிக்கு என்ன பதிலை சொல்வதென புரியாமல் நின்றுக் கொண்டிருந்த வேளையில் மூர்த்தி ஒரு வாய் உணவை சாப்பிட்டு விட்டு தொண்டையை செருமிக் கொண்டே எழுந்தான்.

காரத்தால் கண்களில் நீர்துளிர்த்து. அவன் இரும்புவதை கண்டு மல்லி தண்ணீரை கொண்டு வந்து தந்தாள். அதை அவசரமாக வாங்கி குடித்தவன் சந்தியாவை ஆத்திரத்தோடு பார்த்தான். மூர்த்தியின் முகத்தை பார்த்து சந்தேகம் கொண்ட பொன்னி குழம்பை கொஞ்சமாக ருசித்து பார்த்தாள். அவளுக்கும் காரம் நாக்கை சுட்டு விட்டது. அருகிலிருந்த தண்ணீரை எடுத்து கடகடவென குடித்தவள் வாயை ஊதிக் கொண்டு சந்தியாவை பார்த்தாள்.

சந்தியா திட்டை எதிர்பார்த்து தலைகுனிந்து நின்றாள்.

"மல்லி.. உனக்கு வேற வேலை ஏதாவது இருந்தா அதை போய் பாரு.." என்றான் மூர்த்தி.

அவள் தலையசைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

பொன்னி சந்தியாவை திட்ட இருந்த நேரத்தில் சந்தியாவின் கன்னத்தில் பளீர்ரென ஒரு அறையை விட்டான் மூர்த்தி. அவள் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

"தாயில்லா புள்ளைன்னு உனக்கு ஓவரா செல்லம் கொடுத்தது தப்பா போயிடுச்சி.. என்ன சமையல் இது.. இதை எப்படி அவன் சாப்பிட்டானோ தெரியல.. சாதாரண சமையல் கூட உனக்கு சரியா வரலன்னா அப்புறம் பூமிக்கு பாரமா ஏன் இருக்க..?" மூர்த்தியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்தியாவிற்கு அதிக வருத்தத்தை தந்தது. அவர் தந்த அறையை விட அவரது வார்த்தைகள் அதிகமாக காயத்தை தந்து விட்டது. இதுவரை ஒரு வார்த்தை கடும் சொல்லென சொல்லாதவன் அவன். அவனிடம் அறையையும் வாங்கி திட்டையும் வாங்கியது அவளுக்கு அதிக வருத்தம்.

"எனக்கு அவ்வளவா சமைக்க வராதுப்பா.." தரை பார்த்து சொன்னவளை ஆத்திரம் குறையாமல் பார்த்தார் அவன்.

"கட்டிய புருசன் மேல பாசம் வச்சி சமைச்சிருந்தா எல்லாமே சரியா வரும்.. அவனை தெருவுல சுத்துற பரதேசிக்கு சமமா நினைச்சா இப்படிதான் இருக்கும் குழம்பும்.." மூர்த்தி இப்படி சொல்லவும் சந்தியா அதிர்ச்சியோடு அவரை பார்த்தார்.

"என்னப்பா சொல்றிங்க நீங்க..? நான் அவர் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கேன்.." என சந்தியா சொல்லவும் பொன்னி முகத்தை திருப்பிக் கொண்டாள். மூர்த்தியோ சந்தியாவை அறைய மீண்டும் கையை ஓங்கினான். அவள் பயத்தோடு கண்களை மூடவும் அவன் கையை பின்னிழுத்துக் கொண்டு அவளை முறைத்தான்.

"நீ செய்றது எதுவுமே சரி கிடையாது சந்தியாம்மா.. உன் புருசன்தான் இனி உனக்கு எல்லாமே.. அவனை பிடிக்கலன்னு சொல்லவும் அவன் மேல வெறுப்பை காட்டுவதும் ரொம்ப தப்பு.. அவனே இத்தனை வருசம் அனாதையா வளர்ந்தவன்.. அவனை அனாதைன்னு சொல்லுறது ரொம்ப தப்பு.." அவர் திட்டிக் கொண்டே இருந்தார்.

'நான் அவனை பிடிக்கலன்னு சொன்னது இவருக்கு எப்படி தெரியும்..?' என்ற ஒரு யோசனையே அவளின் மனதை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தது.
மூர்த்தி திட்ட திட்ட பொன்னிக்கு ஆத்திரம் கொஞ்சம் மட்டுப்பட்டது. அவள் திட்ட நினைத்ததை விட அதிகமாவே திட்டினான் மூர்த்தி.

"பொம்பள புள்ளைன்னா பொறுப்போடு நடந்துக்கணும்.. நீ இன்னமும் சின்ன பொண்ணு கிடையாது.. மகேஷும் சக்தியும் உன் மேல உயிரையே வச்சிருக்காங்க.. அதனாலதான் அவங்க பையனுக்கே உன்னை கட்டி வச்சி உன் மேல பாசம் காட்டிட்டு இருக்காங்க.. அவங்க பையனை நீ அவமானப்படுத்தற விசயம் தெரிஞ்சா அவங்க மனசு எவ்வளவு வேதனை படும்ன்னு கொஞ்சமாவது நினைச்சி பாரு.. நல்ல பொண்ணா நடந்துக்கோ.. இனியும் நீ அவனை ஏதாவது மனசு வருந்துற மாதிரி சொன்னா அப்புறம் நீ என்னை எப்பவுமே பார்க்க முடியாத மாதிரி கண்காணாத தேசம் புறப்படு போயிடுவேன்.." என அவர் சொல்ல சந்தியாவிற்கு கண்ணீர் கரை புரண்டது.

தன் பக்க நியாயத்தை காது கொடுத்து கூட கேட்காமல் அப்பா இனியனை மட்டும் நம்புகிறாரே என நினைத்து வருந்தினாள். அவள் கண்ணீரை துடைத்தபடியே அங்கிருந்து சென்றாள். அப்பா அவள் செல்வதை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு பொன்னியின் பக்கம் திரும்பினான்.

"ஏதோ சின்ன பொண்ணு அத்தை.. அவ ஏதாவது தப்பு செஞ்சா கூட சரியா சொல்லி கொடுங்க.. அவளுக்கு இந்த வீட்டாளுங்களை விட்டா வேற யாரும் இல்ல.."

"அவளை பார்த்துக்கதான் நாங்க இருக்கோமே.. நீங்க ஏன் கவலை படுறிங்க. உட்கார்ந்து சாப்பிடுங்க.." என்றவள் அவனுக்கு உணவை பரிமாறினாள்.

இனியனுக்கு பணி சுமையாக ஏதும் இல்லை. அவன் எதிர்பார்த்ததை விடவும் சுலபமாகதான் இருந்தது. மகேஷ் சம்பந்தபட்ட பைலை எடுத்து வந்தவன் இருக்கையில் அமர்ந்து அதை பிரித்தான்.

சாட்சியோடு நிரூபிக்கப்பட்டு அவன் சிறை சென்று வந்த குற்றங்கள் இனியனுக்கு பெருமிதத்தை தந்தது. மகேஷ் எவ்வளவு தைரியமாக குற்றங்களை தன் பாணியில் தட்டிக் கேட்டு உள்ளான் என்பதை புரிந்துக் கொண்டான். ஒருவேளை மகேஷ் மட்டும் காவல்துறையில் பதவி புரிந்து இருந்தால் இந்த வட்டத்தில் ஒரு குற்றம் கூட நிகழ்ந்து இருக்காது என்பதை புரிந்துக் கொண்டான்.

குற்றங்கள் மட்டும் சாட்டப்பட்டு ஆதாரம் இல்லாமல் முடிக்கப்பட்ட வழக்குகள் இனியனுக்கு சிரிப்பை தந்தது. சாமிநாதன், கலை கொலையில் ஆரம்பித்த குற்றங்கள் வரிசையாக வந்துக் கொண்டே இருந்தன. அந்த வழக்குகள் அனைத்தும் சக்தியால் பதியப்பட்டவை. தன் அம்மாவிற்கு அப்பாவின் மேல் எந்த அளவிற்கு கொலைவெறி இருந்துள்ளது என்பதை அறிந்து மனதுக்குள் சிரித்தான்.

சீனுவோடு சம்பந்தபட்ட வழக்கு இனியனை ஒரு நொடி யோசிக்க வைத்தது. அவனால்தான் அம்மா மீண்டும் கத்தி குத்துப்பட்டு ஹாஸ்பிட்டலில் மயங்கி கிடந்தாள் என்பது நினைவிற்கு வந்ததும் அவன் மீது ஆத்திரமாக வந்தது. அப்பா அவனை கொல்லாமல் விட்டதற்காக வருத்தப்பட்டான்.

ரகுவை பற்றி சேகரித்து வைத்திருந்த தகவல்கள் இனியனுக்கு புதிதான ஒரு விசயம். சந்தியாவை அவன் கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்ய இருந்ததும், சக்தியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதும் விவரமாக எழுதி இருந்தது. ஆனால் அதற்கு சாட்சி சொல்ல சந்தியா வராததால் அதை வழக்காக கூட பதியவில்லை என்பதையும் தெரிந்துக் கொண்டான்.

முன் பின் பார்த்திராத ரகுவின் மீது கொலைவெறி கொண்டான் இனியன். சந்தியாவை அவன் கடத்தியுள்ளான் என்பதையும் அவள் கழுத்தில் தாலி கட்ட இருந்தான் என்பதையும் இனியனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

தனக்கு சொந்தமானவளை எவனோ ஒருத்தன் உரிமை கொண்டாட இருந்துள்ளான் என்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனை கொல்லும் அளவுக்கு கோபத்தில் இருந்தான் இனியன்.

"என்னடா மாப்பிள்ளை பலமான யோசனையில இருக்க போல.." என்றபடி அங்கு வந்தார் குமரன்.

"குட் ஆப்டர்நூன் ஸார்.." எழுந்து வீர வணக்கம் வைத்தான் இனியன்.

"எவ்வளவு பொறுப்பா மேலதிகாரி வந்த உடனே வணக்கம் வைக்கிற.. ஸார்ன்னு கூப்பிடுற.. ஆனா பாரு இவரை.. வேலையில இருக்கற ஒரு அதிகாரிக்கிட்ட என்னடா.. மாப்பிள்ளைன்னு பேசுறதை.." கிண்டலாக சொல்லியபடி குமரனை தொடர்ந்து உள்ளே வந்தான் மகேஷ்.

"அப்பா.. இங்கே என்ன பண்றிங்க..?" ஆச்சரியத்தோடு கேட்டான் இனியன்.

"எனக்கு பொழுது போகல.. அதான் என் மகன் இந்த ஆபிஸ் சேர்ல உட்கார்ந்திருக்கும் போது எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க வந்தேன்.." என்றவன் வந்து அவனுக்கு முன்னால் உட்கார்ந்தான்.

"செமையா இருக்குடா இனியா.. சக்தி மகன் சக்தி மகன்தான்.." என சொன்னவன் குமரன் முகத்தை அஷ்ட கோணலாக்குவதை கண்டு முகம் சுளித்தான்.
"உங்களுக்கு ஏன் பொறாமை..?" என அவன் கேட்க அவர் கலகலவென சிரித்தார்.

"எனக்கு பொறாமையா..? இவன் மேல பொறாமை பட என்ன இருக்கு..? இவன் உன்னை மாதிரி இல்லாம சக்தி மாதிரி இருக்கறதை நினைச்சி நான் சந்தோசப்படுறேன்.." குமரன் சொன்னதற்கு மகேஷ் மறுமொழி கூற இருந்த நேரத்தில் இனியன் பேச ஆரம்பித்தான்.

"நான் எங்க அப்பா மாதிரிதான் மாமா.." என்றவனை இருவரும் ஆச்சரியத்தோடு திரும்பி பார்த்தனர்.

"எனக்கு அடிதடிதான் ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.." என அவன் சொல்ல மகேஷிற்கு அளவுக்கு அதிகமான ஆச்சரியத்தில் உடல் சிலிர்த்தது.

"அடப்பாவி.. உன் மேல சக்தி வச்ச நம்பிக்கை எல்லாத்தையும் இப்படி ஒரு வார்த்தையில காலி பண்ணிட்டியே.." குமரன் அதிர்ச்சியோடு சொன்னான்.

"அதுக்கு நான் என்ன பண்ணட்டும் மாமா..? என் மனசுல பட்டதை நான் சொல்ல கூடாதா என்ன..? எந்த ஒரு தடையும் இல்லாம தப்பு செய்றவங்களை தூக்கி போட்டு மிதிக்கணும்.. எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு.."

"இதை முன்னயே சொல்லி இருக்க கூடாதா..? உனக்கு படிக்க செலவு பண்ண காசாவது மீதி ஆகி இருக்குமே.." குமரன் கேலியாக சொல்ல, மகேஷ் முக வாட்டத்தோடு எழுந்து நின்றான்.

"தப்பு தப்பா யோசிக்காத இனியா.. நீ இப்படி இருக்கறதுதான் சரி.. உனக்கு அடிதடி வேண்டாம்.. உன் அம்மா உன் மேல வச்சிருக்கற நம்பிக்கையை கெடுக்காத.. உன் பேருல ஏதாவது தப்பு வந்தா அப்புறம் அவ உன்னை சும்மா விட மாட்டா.. இந்த விசயத்துல என்னாலயும் கூட உனக்கு உதவ முடியாது.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான். குமரன் இனியனை பார்த்து கண்கள் சேரா புன்னகை ஒன்றை அளித்து விட்டு மகேஷை பின்தொடர்ந்து சென்றார்.

"உனக்கு என்னப்பா ஆச்சி..?" மகேஷின் கையை பிடித்து நிறுத்தி கேட்டார் குமரன்.

"இவனுக்கு பைத்தியமா மாமா..? ஏன் இவனுக்கு இப்படியெல்லாம் தோணுது..? ரவுடி ரவுடின்னு என்னை எல்லோரும் கேவலமா பார்க்கறது இவனுக்கு புரியலையா..? நான் நல்லதே பண்ணா கூட தப்பா பார்க்கற சமூகம் இவன் கெட்டதை பண்ணா கூட சரின்னு பார்க்கும்.. இது ஏன் இவனுக்கு புரியல.. கத்தி எடுத்தவனுக்கு கத்தயாலதான் சாவு.. இதை நான் அனுபவத்துல உணர்ந்திருக்கேன். அதே மாதிரி அவனும் பீல் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்.." என்றவனை தன்னோடு அணைத்துக் கொண்டார் குமரன்.

"சின்ன பையன் ஏதோ விளையாட்டா சொல்லிட்டான்.. இதை எல்லாம் பெருசா எடுத்துக்காத.." அவர் ஆறுதல் சொன்னார். அவன் புரிந்துக் கொண்டவனாக தலையை அசைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.

அப்பாவின் மனதை வருத்தபட வைத்ததற்காக இனியன் தன் மீதே கோபம் கொண்டான். இனி முட்டாள் மாதிரி பேச செய்ய கூடாது என முடிவெடுத்துக் கொண்டான்.

அன்றைய நாளில் தன் மனதை வருத்தத்தில் ஆழ்த்திய விசயம் இது மட்டும்தான் என நினைத்தவனுக்கு நிஜ வருத்தத்தை அளிக்க இருந்தாள் சந்தியா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
SHARE
FOLLOW
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top