நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் மாலையில் வீடு திரும்பியபோது சந்தியா வீட்டில் இல்லை.

"பாட்டி சந்தியா எங்கே..?" உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் முதலில் கேட்டது இதைதான்.

"அவ அவளோட பார்ம்ல இருந்து இன்னும் வரலப்பா.." என்றவள் டீயை அவனிடம் நீட்டினாள்.

பாட்டி தந்த டீயை குடித்து முடித்தவன் "நான் போய் அவளை பார்க்கறேன் பாட்டி.." என சொல்லி விட்டு எழுந்து வெளியே நடந்தான்.

"சின்ன சிருசுங்க அம்மா.." சிரிப்பை அடக்கி சொன்னாள் மல்லி.

சந்தியா பூந்தொட்டி ஒன்றில் மண்ணை நிரப்பிக் கொண்டிருந்தாள். அவள் முன்னால் பரந்து விரிந்திருந்த வயலில் புதுவகை நெல்லை பயிரிட்டு இருந்தாள் அவள்.

"சந்தியா நான் கிளம்பறேன்.. நாளைக்கு பார்க்கலாம்.." சந்தியாவின் உடன் படித்த தோழி ப்ரீத்தி அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். சந்தியாவோடு சேர்ந்து வேலை செய்கிறாள் இவள்.

"அதுக்குள்ள கிளம்பிட்டியா..? நீ இப்படி இருந்தா அப்புறம் பார்ம் எப்படி வளரும்..?" பூந்தொட்டியோடு எழுந்து நின்று கேட்டாள் சந்தியா.

"மணி ஆறுக்கு மேல ஆகுது.. ஏன் இப்படி படுத்தற நீ..? உன்னை மாதிரியா நான்..? எனக்கு வீட்டுல வேலை நிறைய இருக்கு.. மாமியார், மாமனார், மச்சன், கொழுந்தன், புள்ளை குட்டின்னு பெரிய பட்டாளமே இருக்கு எங்க வீட்டுல.. உன்னை மாதிரி வெட்டி ஆபிசர் இல்ல நான்.. நான் கிளம்பறேன்ம்மா.. நாளைக்கு பார்க்கலாம்.." என நடந்தாள் அவள்.

சந்தியா அவள் செல்வதை பெருமூச்சோடு பார்த்தாள். தோட்டத்தின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு வந்தாள். செடிகளை வளர்க்க உருவாக்கிய கட்டிடம் அது.

தன் கையிலிருந்த மண் தொட்டியோடு மேஜை ஒன்றிற்கு வந்தாள். அங்கே இருந்த விதை ஒன்றை எடுத்து மண்ணில் புதைத்தாள். "கடவுளே இந்த செடி நல்லபடியா வளர்ந்துடணும்.." என வேண்டிக் கொண்டாள்.

மலை பிரதேசத்தில் மட்டுமே விளையும் ஒரு வகை கனி அது. சாதாரண மண்ணிலும் அதை விளைவிக்க முடியும் என்பது சந்தியாவின் எண்ணம். அதைதான் இப்போது செயல்படுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

இருள் அந்த இடத்தில் பரவி கொண்டிருந்தது. விளக்கை ஒளிர விட நினைத்தவள் இப்போது செய்துக் கொண்டிருக்கும் வேலையை முதலில் முடித்து விடலாம் என்று இருந்தாள். தண்ணீரை தொட்டியில் தெளித்தாள்.

மேஜையின் ஒரு ஓரத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட மற்ற செடிகளின் தொட்டிகளில் ஈரம் குறைந்திருப்பதை கண்டவள் அவற்றிற்கும் தண்ணீரை விட்டாள்.

இனியன் பாட்டி வழி சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான். பசேலென இருந்த தோட்டத்தை மகிழ்ச்சியோடு பார்த்தவன் எதிரில் தெரிந்த கட்டிடத்தை நோக்கி நடந்தான்.

அரை இருளில் பாடல் ஒன்றை முனகியபடி செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தவளை கண்டவன் சத்தமில்லாமல் கதவில் சாய்ந்து நின்றான்.
ஒவ்வொரு செடியாக பார்த்து பார்த்து தண்ணீரை விட்டாள். நேரம் அதன் போக்கில் சென்றுக் கொண்டிருந்தது. இருளும் கண்ணை குருடாக்குவதை போல பரவ ஆரம்பித்தது.

"எதுக்கு இருள் வருது..?" தன்னை தானே கேட்டாள்.

"நிலாவை கண்ணுல காட்ட இருள் வருது.." குரல் ஒன்று இருளில் ஒலித்தது. சந்தியா செய்யும் வேலையை விடுத்து சிலையாக நின்றாள்.

'இவன் இங்கே என்ன பண்றான்..?' சிந்தனையோடு ஸ்விட்ச் போர்டின் அருகே சென்று விளக்கிற்கான ஸ்விட்சை தட்டி விட்டுவிட்டு திரும்பி பார்த்தாள். இனியன் கதவில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். கையை கட்டிக் கொண்டு ஆளை சாய்க்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனை கண்டதும் துள்ளிக் குதிக்கும் தன் மனதை திட்டி தீர்த்தாள்.

அவனிடம் இருந்து பார்வையை திருப்பிக் கொண்டவள் செடிகளுக்கு தண்ணீர் விடும் வேலையை தொடர்ந்தாள். இனியன் அந்த இடத்தை சுற்றி பார்த்தான். வகைவகையான செடிகள் அந்த இடம் முழுக்க இருந்தது. ஆங்காங்கே இருந்த பூச்செடிகளில் பூத்த வண்ண பூக்கள் அந்த இடத்தை வானவில்லாக மாற்றிக் காட்டின.

தன் அருகே இருந்த செடியை பார்த்தான். என்ன பூ என அவனால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அழகாய் ஒற்றை பூ பூத்திருந்தது அந்த செடியில். சந்தியாவின் நீள கூந்தலை ஒருதரம் பார்த்தவன் அந்த செடியிலிருந்த பூவை பறித்தான்.

தனது வேலையில் கவனமாக இருந்தவள் தனது கூந்தலில் ஒரு கரம் படரவும் தயக்கத்தோடு திரும்பினாள். அவளின் கூந்தலில் தான் பறித்த பூவை சூடியவன் சந்தியா தன் பக்கம் திரும்பவும் அவளை விட்டு ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

சந்தியா தன் பின்னந்தலையில் கை வைத்தாள். அவளது பார்வை அவன் பூ பறித்து வந்த செடியினை நோக்கி சென்றது. செடியில் பூ இல்லை என்பதை கண்டதும் அவளது முகம் ஏமாற்றத்தில் சோர்ந்து போனது.

அந்த பூச்செடி அழிந்து வரும் வகையை சேர்ந்தது. "இந்த செடியை தோட்டமா பயிரட ஆசை எனக்கு.. ஆனா பயிரிடும் அளவுக்கு செடிகள் கிடைக்கல.. பூ செடியிலேயே இருந்தா இருபது நாளுக்கு கூட வாடாது.. ஆனா நீ இதை பறிச்சிட்ட.. இந்த பூ நாலு மணி நேரத்துல கருகிடும்.."

"இருபது நாள் அது வாடாம இருந்தாதான் எனக்கென்ன..? உன் தலையில இது அழகா இருக்கு.. இதுக்காக நான் இந்த பூமியில் இருக்கற கடைசி செடியில் இருக்கற பூவை கூட பறிப்பேன்.." என்றவனை முறைத்தாள் அவள்.

"நீ வளர்த்திய செடியிலிருந்து அப்படி பூவை பறிச்சி பாரு.. அப்ப தெரியும் என் வருத்தம்.." என்றவள் மேஜை மேலிருந்த பொருட்களை சரியாக அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

அவனுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.

"எதுக்கு இவ்வளவு லேட்டாகுற வரைக்கும் வேலை செய்ற..? நாளையிலிருந்து சாயங்காலம் அஞ்சி மணிக்கு வீடு வந்து சேர்ந்திடு.." என்றான் சில நிமிடங்களுக்கு பிறகு.

"சரிங்க எஜமான்.." நக்கலாக சொன்னாள் அவள்.

அவன் குழப்பமாக அவளை பார்த்தான்.

"என்னடி குரல்ல நக்கல் அதிகமா இருக்கு..?" சந்தேகமாக கேட்டவன் பக்கம் திரும்பினாள் சந்தியா.

"அதுவும் தப்பா எஜமான்..? சரி இனி இப்படி நக்கல் இருக்காது எஜமான்.." என்றவளின் கையை பற்றினான் இனியன்.

"காலையில் நல்லாதானடி இருந்த.. அதுக்குள்ள உனக்கு என்ன வந்தது..?" அதட்டலாக கேட்டவனின் பிடியிலிருந்து தன் கையை விடுவிக்க முயன்றாள் அவள். ஆனால் அந்த இரும்பு பிடியிலிருந்து அவளால் தன் கையை விலக்கி கொள்ள முடியவில்லை.

"என் கையை விடு.."

"உனக்கு என்ன ஆச்சின்னு சொல்லு.." என்றவன் அவளின் கன்னத்தில் இருந்த சிறு வீக்கத்தை பார்த்தான். மூர்த்தி அவளை அறைந்த போது அவனது விரலில் இருந்த மோதிரம் பட்டு விட்டதில் அந்த ஒரு இடத்தில் மட்டும் அடி சற்று பலமாக பட்டு விட்டது. கொஞ்சம் கொஞ்சமா குறைந்த வீக்கம் இன்னும் முழுமையாக மறையவில்லை.

"உன் கன்னத்துக்கு என்ன ஆச்சி..?" சந்தேகத்தோடு கேட்டவன் அவளின் கன்னத்தை தன் கை விரல்களால் வருடினாள்.

அவன் விரல் பட்ட இடம் எரிந்தது. முகத்தை பின்னால் இழுத்துக் கொண்டவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

"உன் ஆசை நிறைவேறியாச்சி.. உன் ஆசைப்படியே என் அப்பாவுக்கும் என்னை பிடிக்கல.. எனக்கு திமிர் அதிகம்ன்னு சொல்லி என் கன்னத்துல ஒரு அறை விட்டுட்டாரு.." கசந்த சிரிப்போடு அவள் சொல்ல அவனுக்கு நொடியில் ஆத்திரம் தலைகேறியது.

அவளின் கையை விட்டுவிட்டு வெளியே நடந்தான். அவனின் வேகம் கண்டு குழம்பியவள் அவனுக்கு முன்னால் சென்று கை விரித்து நின்று அவனை மேலே செல்ல விடாமல் நிறுத்தினாள்.

"எங்கே போற..?"

"உங்க அப்பாவுக்கு நல்ல பாடம் சொல்லி தர போறேன்.." என அவன் சொல்ல சந்தியா கோபத்தோடு தன் தலையை பிடித்தாள்.

பல்லை கடித்துக் கொண்டு அவனை பார்த்தவளுக்கு முகம் கோபத்தில் சிவந்து போய் விட்டது.

"உனக்கு என்னதான் பிரச்சனை..? ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்ற..? என் அப்பா என்னை வெறுக்கணும்ன்னுதானே அவர்கிட்ட போய் பொய் சொன்ன.. நீ ஆசைப்பட்ட மாதிரியே இப்ப அவர் என்னை வெறுக்கறாரு.. இன்னும் உனக்கு என்னதான் வேணும்..?"

"அவர் உன்னை வெறுக்கவும் நான் ஆசைப்படல.. உன்னை அடிக்கவும் நான் ஆசைப்படல.. உன்கிட்ட நல்ல முறையா பேசி உன் மனசை அவர் மாத்துவாருன்னு மட்டும்தான் நான் நினைச்சேன்.. என் பொண்டாட்டியை அடிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கு.." என்றவன் அவளை தாண்டி செல்ல முயன்றான்.

அவனின் கை பிடித்து நிறுத்தியவள் அவனை பின்னால் தள்ளினாள்.

"அவருக்கு என்னை அடிக்க மட்டும் இல்ல எல்லா உரிமையும் இருக்கு.. என் மேல அதிகாரம் செலுத்த உரிமை இல்லாதவன் இங்கே நீ மட்டும்தான்.."

"என் கோபத்தை கிளறாத சந்தியா.. நான் உன்னை ரொம்ப நேசிக்கறேன்.. என் கோபத்தை நீ அதிகம் பண்ணினா அப்புறம் நான் என்னை அறியாமலேயே உன்னை காயப்படுத்திடுவேன்.."

அவன் சொல்லியதை கேட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள் அவள். சிரித்து முடித்து விட்டு நிமிர்ந்தாள்.

"இப்ப நீ என்னை காயப்படுத்தலன்னு நினைக்கிறியா..? ஒரு அறை அதன் விசை இருக்கும் வரை மட்டும்தான் வலிக்கும்.. ஆனா நீ மனசளவில் எனக்கு தர காயம் நான் சாகும்வரை என் நெஞ்சில் அப்படியேதான் இருக்கும்.."

இந்த முறை இனியன் சிரித்தான். சிரித்து முடித்துவிட்டு அவளை பார்த்தவன் "இதையெல்லாம் நீ சொல்றதுதான் எனக்கு சிரிப்பை தருது.. என்னை பிடிக்கலன்னு சொன்னியே.. நீ தந்த வலியை விடவா நான் தர வலிகள் உனக்கு பெரிசு..?" என்றான்.

"உன்னை எனக்கு பிடிக்கல இனியா.. இனியும் பிடிக்காது.. உன்னை சந்திச்சதுதான் நான் செஞ்ச மிகப்பெரிய பாவமே.. நீ ஒருத்தன் குறுக்க வராம இருந்திருந்தா என் வாழ்க்கை எவ்வளவு நல்லா இருந்திருக்கும் தெரியுமா..? உன்னை பார்த்ததும் விழுந்தேனே.. அதுக்குதான் இன்னைக்கு வரைக்கும் தண்டனை அனுபவிக்கிறேன் நான்.."

"தண்டனை உனக்கு இல்லடி.. எனக்கு.. ஹாஸ்பிட்டல் மாடி படியில கால் இடறி என் மடியில் விழுந்தவ நீ.. ஆனா அந்த செகண்டல இருந்து என் மொத்த வாழ்க்கையும் இடறி விழுந்துடுச்சி.. உன் நினைப்பில விழுந்த எனக்கு சாவுல மட்டும்தான்டி விடுதலை. என் வலியில பாதியை நீ அனுபவிக்கறதால ஒன்னும் குறைஞ்சிட மாட்டடி.." என்றவன் அவளை நெருங்கினான்.

சந்தியாவின் கன்னத்தில் இருந்த காயத்தின் மீது வருடியவன் "இன்னொரு முறை உன் அப்பா உன்னை அடிச்சாருன்னா அப்புறம் நான்தான் அவருக்கு எமனா இருப்பேன்.." என்றான். அவளின் கன்னத்தின் மீது தன் உதடு பதித்தான் அவன். திகைத்து போய் பின்னால் நகர்ந்து நின்றாள் அவள்.

பயத்தோடு அவனை பார்த்தாள். புறங்கையால் தன் கன்னத்தை துடைத்துக் கொண்டாள். அவளது கண்களில் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்த்தது.
அவளின் தந்தை பாசம் கண்டு தனக்குள் மருகினான் அவன்.

"இதையும் எல்லாக்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்.." என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுகையோடு சொன்னாள்.
அவன் குழப்பதோடு "என்ன சொல்ல கூடாது.?" என்றான்.

"நமக்குள்ள நடந்ததை சொன்ன மாதிரி இந்த முத்தத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லிடாத.." என்றவளுக்கு அழுகை அதிகமானது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top