நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா இனியனை வெறுப்பதாக சொல்லிவிட்டு சமையலறையை விட்டு வெளியே நடந்தாள்.

இனியன் அவள் சொல்லி சென்ற வார்த்தைகளையே நினைத்துக் கொண்டு சமைத்து முடித்தான்.

அன்று உணவு உண்ணும்போதும் அதன் பிறகு உறங்கும் போதும் கூட இனியன் சந்தியா பக்கம் பார்வையை திருப்பவே இல்லை. அவனது இந்த திடீர் மாற்றம் சந்தியாவிற்கு சிறிது குழப்பத்தை தந்தது. ஆனால் அவள் அவனிடம் அதை பற்றி கேட்க விரும்பவில்லை.

அதன் பிறகு வந்த நாட்களிலும் கூட இனியன் அவளிடம் பேசவேயில்லை. அவளும் இதை கண்டும் காணாதது போல இருந்து விட்டாள்.

ஒரு வாரம் கடந்திருந்தது. சந்தியா தனது தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது அவளுக்கு போன் செய்தான் ரகு.

ரகு தான் செய்த தவறுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே மன்னிப்பு கேட்டு விட்டான்.

இனியனின் பொய் காதலோடு ஒப்பிடுகையில் ரகுவை மன்னிப்பதில் தவறு இல்லை என்று அவளுக்கு தோன்றவும் அவனை அவள் மன்னித்து விட்டாள்.

அவனது குடும்பம் மொத்தமும் ஒருநாள் ஆக்ஸிடென்ட் ஒன்றில் இறந்துபோக அன்று அனாதையாக நின்றவனுக்கு சந்தியாதான் தோழியாக ஆறுதல் சொன்னாள். அன்றிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டனர்.

"சேன்டிம்மா.. ஒரு அரைமணி நேரம் டைம் தரியா..?" என அவன் எடுத்த எடுப்பில் கேட்க சந்தியாவிற்கு சிரிப்புதான் வந்தது.

"நான் நேரம் விற்க டைம் மெஷின்னு நினைச்சி கேட்கறியா..?" என சிரிப்போடு இவள் கேட்க மறுமுனையில் அவனும் சிரித்தான்.

"என் கூட ஒரு இடத்துக்கு நீ வரணும்.. ப்ளீஸ்.. மாட்டேன்னு சொல்லிடாதடா.." என அவன் செல்ல குரலில் கேட்க அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

"சரி.. நான் என் ஃபார்ம்ல இருக்கேன். வந்து பிக்அப் பண்ணிட்டு போ.." என்றவள் தன் கை கால்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

பதினைந்து நிமிடம் முடியும் நேரத்தில் தோட்டத்தின் அருகே இருந்த தார்சாலையில் தன் பைக்கை நிறுத்திவிட்டு ஹாரன் அடித்தான் ரகு.

தனது பர்ஸை எடுத்துக் கொண்டவள் தன் ஃபோனை எடுக்க மறந்து சாலைக்கு வந்தாள். "எங்கே போறோம்..?"

"கேள்வி கேட்காம உட்காரு.. எனக்கு டைம் ஆகுது.." என்றவன் அவள் அமர்ந்ததும் பைக்கை காற்றின் வேகத்தில் விரட்ட ஆரம்பித்தான்.

"மெதுவா போ குரங்கே.." அவனின் தோளில் அடியை விட்டாள் சந்தியா.

ஆனால் அவன் தன் பைக்கின் வேகத்தை குறைக்கவில்லை. சந்தியா பயத்தோடு கண்களை மூடிக்கொண்டு அவனது தோளை இறுக்க பற்றிக் கொண்டாள்.

ரெஸ்டாரன்ட் ஒன்றின் முன்னால் வந்ததும் பைக்கை நிறுத்தினான் ரகு. சந்தியா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குழப்பத்தோடு இறங்கினாள்.

"இங்கே ஏன் கூட்டி வந்திருக்க..?" என கேட்டவளுக்கு பதிலை தராதவன் பைக் மிரரில் தன் முகத்தை ஒரு தரம் பார்த்துக் கொண்டு அவளை கை பிடித்து ரெஸ்டாரண்ட் உள்ளே இழுத்து போனான்.

ரெஸ்டாரன்டில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருத்தியின் முன்னால் அமர்ந்த ரகு தன் அருகே இருந்த இருக்கையில் அமர சொல்லி சந்தியாவிற்கு சைகை காட்டினான். அவள் குழப்பத்தோடு அவன் அருகில் அமர்ந்தாள். எதிரில் இருந்த பெண் நல்ல அழகாய்.. சந்தியாவை விட அழகாய் இருந்தாள். தயக்கத்தோடு சந்தியாவை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.
"சேன்டிம்மா இவ அருணா.. என் லவ்வர்.." என அவன் சொல்ல அவள் ஆச்சரியமாக எதிரில் இருந்தவளை பார்த்தாள். அந்த பெண் வெட்கத்தோடு தலை குனிந்தாள்.

"அருணா.. இதுதான் என் பிரெண்ட் சேன்டி.." என்றவன் நெற்றியில் அடித்துக் கொண்டு "சந்தியா.. இவதான் நான் சொன்ன என் பிரெண்ட் சந்தியா.." என்றான்.

அந்த பெண் வெட்கத்தோடு சந்தியாவை பார்த்து தன் கையை நீட்டினாள். சந்தியா அவளது கையை குலுக்கினாள்.

"இவர் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்காரு.." என்றாள் அவள் மெலிதான ஒரு குரலில்.
'வாவ்.. செம பிகர்.. செம வாய்ஸ்..' தனக்குள் நினைத்த சந்தியா "இவன் என்னை பத்தி சொன்ன எதையும் நம்பாத.. இவன் எப்பவும் ஏதாவது விஷமமாதான் சொல்வான்.." என்றாள்.

ரகு தலையை கோதியபடி இருக்கையில் தலையை சாய்த்து கூரையை பார்த்தான். "எனக்கு மட்டும் சுத்த முட்டாளா ஒரு பிரெண்டை தந்திருக்கியே.. உனக்கு இது நியாயமா ஆண்டவா..?" அவன் தனக்குள் முனகியது சந்தியா காதிலும் விழுந்தது.

"அப்படியெல்லாம் ஏதும் இல்லக்கா.. நீங்க அவரோட ரொம்ப நல்ல பிரெண்டுன்னுதான் சொன்னாரு.." அவள் தரையை பார்த்தபடி சொன்னாள்.

'நம்பற மாதிரி இல்லையே..' என யோசித்தாள் சந்தியா.

"சாப்பிட என்ன வேணும் ஸார்..?" என கேட்டபடி சர்வர் வரவும் "மூணு காப்பி.." என பதில் சொல்லிவிட்டு சந்தியா பக்கம் திரும்பினான் ரகு.

"சேன்டிம்மா இப்ப என் வாழ்க்கையே உன் கையிலதான் இருக்கு.." என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள் சந்தியா.

"என்ன பண்ணனும்..? என்கிட்ட காசு ஏதும் கேட்காத.." அவள் இன்னும் பேசும் முன் குறுக்கிட்டான் ரகு.

"நான் சொல்றதை முழுசா கேளு பன்னாடை.." அவளது நெற்றியில் இரு விரலை வைத்து பின்னால் தள்ளினான் அவன்.

அவனது கையை தட்டி விட்டு நேராக அமர்ந்த சந்தியா ரகுவையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்தாள்.

"வேற என்ன வேணும்..?"

"அருணாவோட ஃபேமிலி கொஞ்சம் பெருசு.. என் சார்ப்பா இவளை பொண்ணு கேட்டு போக நீ உன் மாமாக்கிட்டயும் அத்தைக்கிட்டயும் கேட்கறியா..? ப்ளீஸ்.. எனக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா..?" இரு கன்னத்திலும் கை வைத்து தலை சாய்த்து கேட்டான் அவன்.

சந்தியா அவனை அன்போடு பார்த்தாள். "என்னைக்கு பொண்ணு கேட்டு போகலாம்..?" அவள் யோசனையோடு கேட்க அவளது கன்னம் கிள்ளி தன் விரல்களுக்கு முத்தமிட்டான் ரகு.

"தேங்க்ஸ் சேன்டிம்மா.. நீ ஓகே சொன்னா நாளைக்கே கூட பொண்ணு கேட்டு போகலாம்.." என்றவன் சர்வர் கொண்டு வந்து தந்த காப்பியை அவள் முன்னாலும் நகர்த்தி வைத்தான்.

"நான் அத்தை மாமாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்.." காப்பியை குடித்தபடியே சொன்னாள் சந்தியா.

அதன் பிறகு அருணா தன்னை பற்றிய தகவல்களை சந்தியாவிடம் சொன்னாள். அருணாவை சந்தியிவிற்கும் பிடித்திருந்தது. தனது நண்பனுக்கு அம்சமாக காதலி அமைந்ததில் சந்தோசம் அவளுக்கு.

அந்த பெண் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி சந்தியாவிடமும் ரகுவிடமும் விடைப்பெற்று கொண்டு கிளம்பினாள்‌.

அவள் சென்ற பிறகு ரகுவிடம் திரும்பினாள் சந்தியா.

"ஆமா.. இந்த பொண்ணை எப்படி நீ கரெக்ட் பண்ண..? ரொம்ப அழகா இருக்கா.. அறிவாவும்தான் பேசுறா.. இந்த ஊருல நிஜமாவே அவளுக்கு ஆம்பள பசங்க யாரும் கண்ணுல படலையா..?" கேட்டுவிட்டு எழுந்து நின்றவள் அவன் பாய்ந்து வரும் முன் வாசலை நோக்கி ஓடினாள்.

அவளை துரத்தி வந்து அவளது பின்னலை பிடித்து இழுத்து நிறுத்திய ரகு அவளது தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்தான்.

"நாங்களும் ஹீரோதான்ம்மா.. எல்லா பொண்ணுங்களையும் உன்னை மாதிரி குருடுன்னு நினைக்காத.. நான் பேச்சிலர்ன்னு சொல்லிட்டேன்னா என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க வரிசை கட்டுவாங்க தெரியுமா..?" என கேட்டவனின் கையிலிருந்து தன் பின்னலை உருவிக் கொண்டவள் அவனது பின்னந்தலையில் ஒரு அடியை விட்டாள்.

"பெரிய மன்மத ராசான்னு நினைப்பு.." என்றவளை அவன் முறைத்து பார்த்தான்.
அவன் தன் கையில் இருந்த காப்பை ஏற்றி விட்டுக் கொண்டு அவளை நெருங்கினான். அவனிடம் பழிப்பு காட்டிவிட்டு அங்கிருந்து ஓட நினைத்து திரும்பினாள் சந்தியா. ஆனால் எதன் மீதோ மோதி நின்றாள்.

நிமிர்ந்து பார்த்தவளின் முன்னால் இனியன் காவல்துறை அதிகாரியாக நின்றுக் கொண்டிருந்தான். அவனது கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது.

"இ.. இனியா..? இங்கே என்ன பண்ற..?" என கேட்டபடி ஓரடி பின்னால் நகர்ந்தவளின் கையை பிடித்து அங்கேயே நிறுத்தினான் இனியன்.

அவன் கையின் இறுக்கத்தில் அவளுக்கு தன் கை உடைந்து விடுமோ என பயமாக இருந்தது.

"இனியா கை வலிக்குது.." அவள் சொன்னதை காதில் வாங்காமல் ரகுவை முறைத்து பார்த்தான் அவன்.

சந்தியா அவன் ரகுவை முறைப்பதை அறிந்து குழப்பமாக ரகுவை பார்த்துவிட்டு இனியன் பக்கம் திரும்பினாள். அவளுக்கு அவனது கோபத்தின் காரணம் சுத்தமாக புரியவில்லை.

"இனியா என் கையை விடு.." அவனது பிடியிலிருந்து தன் கையை விடுவிக்க போராடினாள்.
ரகு சந்தியாவின் முகத்தில் இருந்த வேதனையை கண்டு அவளை நோக்கி நடந்தான். ஆனால் அவனை யாரோ கை பிடித்து நிறுத்தினார்கள். அவன் தன் கையை பார்த்தப்போது அவனது கைகள் இரண்டையும் இணைத்து விலங்கிடப்பட்டு இருந்தது. அவன் அருகே காவலர் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார்.

ரகுவின் கையில் விலங்கை பார்த்த சந்தியா பதட்டத்தோடு அவனை நோக்கி ஓடினாள். ஆனால் அவள் ஓரடி கூட நகர முடியாதபடி அவளின் கையை இன்னும் அதிகமாக இறுக்கி பிடித்தான் இனியன்.

"எதுக்கு ஸார் எனக்கு விலங்கு போட்டு இருக்கிங்க..?" ரகு பயத்தோடு காவலரை கேட்டான்.

"மாசியோட பொண்ணுக்கு நீ விடாம டார்ச்சர் தரதா உன் மேல கம்ப்ளைண்ட் வந்திருக்கு.."
ரகு அவசரமாக மறுத்து தலையசைத்தான். "இல்ல ஸார்.. நானும் அருணாவும் உயிருக்கு உயிரா லவ் பண்றோம்.." என்றான்.

"அதை ஸ்டேசன்ல வந்து சொல்லு.." என்றவர் அவனை தன்னோடு இழுத்துக் கொண்டு புறப்பட்டார்.

"ஸார் அவன் மேல தப்பு ஏதும் இல்ல ஸார்.." என உரத்த குரலில் சொன்ன சந்தியாவை திரும்பி பார்த்தார் காவலர். ரகுவின் கண்களில் இருந்த பயம் சந்தியாவிற்கு வருத்தத்தை தந்தது. அவன் கையிலிருந்த விலங்கு அவளுக்கும் பயத்தை தந்தது.

"ஸார் கொஞ்ச நேரம் முன்னாடிதான் அந்த பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருந்தோம்.. அந்த பொண்ணும் இவனை லவ் பண்றா ஸார்.." இனியன் கையிலிருந்து தன் கையை விடுவிக்க போராடியபடியே சொன்னாள் அவள்.

அந்த காவலர் இனியனை பார்த்தார். அவரது பார்வையை கண்டு இனியன் முகத்தை பார்த்தாள் சந்தியா.

அவன் தலையசைத்ததும் காவலர் ரகுவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

"ப்ளீஸ்.. அவனை விட்டுடு.. அவன் அந்த மாதிரி கிடையாது.. அந்த பொண்ணும் இவனும் லவ்தான் பண்றாங்க.. ப்ளீஸ் அவனை விட சொல்லு.." கண்ணீரோடு கெஞ்சியவளை சலனமற்று பார்த்தான் இனியன்.

"நான் ஏன் விட சொல்லணும் தப்பு முழுசா உன்கிட்ட இருக்கறப்போது..?" என்று அவளின் காதோரம் அவன் கிசுகிசுக்க அவளுக்கு மூச்சி நின்றுவிட்டது.

"இது உன் வேலையா..?" அவனை நிமிர்ந்து பார்த்து கேட்டவளுக்கு கண்ணீர் ஆறாக பெருக காத்திருந்தது. சிரமத்தோடு கண்ணீரை அடக்கினாள்.

"இது எவ்வளவு கேவலமான விசயம் தெரியுமா..? என்கிட்ட நேரா மோத முடியாம என் பிரெண்டை பொய் கேசுல உள்ள போடுற.." என்றவளை நக்கல் சிரிப்போடு பார்த்தான் அவன்.

"பிரெண்டா..? உன்னை கடத்தி போய் கல்யாணம் பண்ண இருந்தவன் உனக்கு பிரெண்டா..?" என அவன் கேட்க அவள் மிரண்டு போய் அவனை பார்த்தாள்.

எப்போதோ நடந்த விசயம் இவனுக்கு எப்படி தெரியும் என குழம்பியவளுக்கு இவன் அவனை பழி வாங்குகிறான் என்பது புரிந்து போனது. தனது நண்பன் இப்போது ஆபத்தில் இருக்கின்றான் என்ற விசயமே அவளுக்கு உள்ளூர நடுக்கத்தை தந்தது.

"அவனை பழி வாங்காத இனியா.. ப்ளீஸ்.." கண்ணீரோடு மன்றாடினாள் சந்தியா.

"நான் ஏன் உன் பேச்சை கேட்கணும்..?" என்றவன் அங்கிருந்தவர்கள் தங்களை கவனிக்கின்றார்கள் என்பதை அறிந்து அவளை தன்னோடு இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN