நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"ரகு உனக்கு என்ன ஆச்சி..?" கேள்வியோடு நெருங்கிய சந்தியாவை புன்னகையோடு பார்த்தான் ரகு.

"இது சின்ன அடிடா.. வேற ஒன்னும் இல்ல.." அவன் அவளுக்கு தைரியம் சொன்னான்.

இனியனை வெறுப்போடு பார்த்தாள் அவள். ரகுவை ஏதும் செய்ய மாட்டேன் என சொல்லிவிட்டு இப்படி அடித்து காயத்தோடு அழைத்து வந்து விட்டானே என அவன் மீது ஆத்திரம் கொண்டாள்.

அவர்கள் இருவருக்கும் பின்னால் உள்ளே வந்த மகேஷ் பெருமூச்சோடு இருக்கை ஒன்றில் அமர்ந்தான். அவனை தொடர்ந்து வந்த சக்தி ரகுவை கவலையோடு பார்த்தபடி சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

"லவ் பண்ண உனக்கு ஊருல வேற பொண்ணே கிடைக்கலையா..? மாசி உன் உயிரை எடுக்கணும்ன்னு இருக்கான். அவனுக்கு கௌரவம்தான் உயிரே. உன்னை அவன் பொண்ணுக்கிட்ட இருந்து பிரிக்க அவன் என்ன வேணாலும் செய்வான்.." சலிப்போடு சொன்னாள் அவள். சக்தி சொன்னது சந்தியாவை குழப்பியது.

"எ.. என்ன ஆச்சி அத்தை..?" அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ரகுவை நாற்காலி ஒன்றில் அமர வைத்து விட்டு தனது அறையை நோக்கி சென்றான் இனியன்.

"மாசி இவன் மேல பொய்யா கம்ப்ளைண்ட் பண்ணி இருக்காரு. அதுவும் இல்லாம போலிஸ்காரர் ஒருத்தருக்கு லஞ்சம் தந்து இவனை அடி பின்னி எடுக்க சொல்லி இருக்காரு. இனியன் கரெக்ட் டைம்க்கு அங்கே போகலன்னா இவனை அடிச்சே கொன்னிருப்பாரு அந்த போலிஸ்.." மகேஷ் ‌இதை சொல்லவும் சந்தியா அதிர்ச்சியோடு தன் வாய் மீது கை வைத்தாள்.

"ரகு.. உனக்கு ஒன்னும் ஆகலையே.." அக்கறையோடு அவனை விசாரித்தாள் சந்தியா.

"எனக்கு ஒன்னும் இல்லடா.. இனியன் என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய் புல் செக்கப் பண்ணிட்டாரு.. பெருசா ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு.. பாவம் அருணாதான் பயந்துட்டு இருப்பா.." தரை பார்த்து கவலையோடு சொன்னவனை அவளும் கவலையோடு பார்த்தாள்.

"அந்த பொண்ணு நீ கூப்பிட்டா அவங்க அப்பாவை விட்டுட்டு வருவாளா சொல்லு.. நான் இன்னைக்கே அவளை கூட்டி வந்து உனக்கு கட்டி வைக்கிறேன்.." மகேஷ் அழுத்தமாக சொன்னான்.

"வேணாம்ப்பா.. அவங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. அவங்களும் ஆசையா பெத்து வளர்த்தி இருக்காங்க இல்லையா..? இன்னைக்கு நான் இழுத்துட்டு வந்து கட்டிக்கிட்டா அவங்க மனசு வருத்தப்படும் ப்பா.. அப்புறம் அந்த வருத்தத்துல காலம் முழுக்க எங்க வாழ்க்கையில தொல்லை மட்டும்தான் தருவாங்க.." சிறு குரலில் சொன்னான் ரகு.

"நீ சொல்றதுதான் சரி ரகு.. நான் அவர்க்கிட்ட பேசி பார்க்கிறேன்.." ஆறுதல் சொன்னாள் சக்தி.

"தேங்க்ஸ் ம்மா.." சிறு குரலில் சொல்லி விட்டு மீண்டும் தலை குனிந்துக் கொண்டான். அவனுக்கு அருணாவை நினைத்து கவலையாக இருந்தது. அவளது வீட்டில் அவளை ஏதேனும் திட்டி விடுவார்களோ என நினைத்து மனம் கலங்கினான்.

சந்தியா ரகுவின் முக வாட்டம் கண்டு கவலை கொண்டாள்.

"சந்தியா.." இனியன் கத்தி அழைத்தான்.

"வந்துட்டேன்.." அவனது குரலில் உடல் நடுங்கியவள் பயத்தோடு பதில் குரல் தந்து விட்டு ஓடினாள்.

அவளது இந்த செய்கை கண்டு மகேஷும் சக்தியும் குழம்பினர்.

"திடீர்ன்னு இவளுக்கு என்ன வந்துச்சி..? எதுக்கு ஒரு குரலுக்கே இப்படி பயந்து போறா..?" குழப்பத்தோடு கேட்டாள் சக்தி.

மகேஷ் எனக்கு தெரியாது எனும் விதமாக கையை விரித்து காட்டினான்.

ஆனால் அவளது இந்த பயம் ரகுவிற்கு ஓரளவிற்கு புரிந்தது. அவள் இனியனை பார்க்கும் போதெல்லாம் காதல் ஏதும் தென்படவில்லை. ஆனால் மாறாக பயமும் வெறுப்பும் மட்டும் அவளது பார்வையில் நிறைந்து இருந்ததை ரகுவும் புரிந்துக் கொண்டான். இனியனும் சந்தியாவை எப்போதும் கோபத்தோடுதான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குள்ளும் இருக்கும் உறவின் உண்மை தன்மை பற்றி ரகுவிற்கு ஏதும் தெரியாது. ஆனால் அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு என்பதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

சந்தியா அவசரமாக இனியனின் முன்னால் வந்து நின்றாள். ரகுவின் இந்த நிலைக்கு காரணம் இவன் இல்லை என்று தெரிந்த போதே அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவாள் அவள்.

"என்ன வேணும்..?" தரை பார்த்து தயக்கமாக கேட்டாள்.

"மேடம் முகம் பார்த்தெல்லாம் பேச மாட்டிங்களோ..?" நக்கலாக கேட்டான் அவன்.

"என்ன இருந்தாலும் நீங்க எஜமான். நான் அடிமை. நான் எப்படி உங்க முகம் பார்த்து பேச முடியும்..?" அவள் அமைதியாக இருக்க நினைத்தாலும் அவளது நாக்கு அமைதியாக இருக்க மறுத்தது.

அவள் சொன்னது அவனுக்கு மன கஷ்டத்தைதான் தந்தது. ஆனாலும் அந்த கஷ்டம் கூட ஆணவமாகதான் மாறியது.

"என் சட்டையை கழட்டி விடு.." அவளை நெருங்கி வந்து நின்றபடி கட்டளையிட்டான்.

"ஏன் உனக்கு கை இல்லையா..?" எரிச்சலோடு கேட்டாள் சந்தியா.

"இருக்கு.. ஆனா எனக்கு அடிமை இருக்கும் போது நானே ஏன் இதை செய்யணும்..?" நக்கலாக அவன் கேட்க, தனது வார்த்தை தன்னையே திருப்பி அடிப்பதை கண்டு நொந்தவள் அவனது சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தாள்.

அவன் அருகில் நிற்பது தனது மனதிற்கு அபாயமான ஒன்று என்பதை அவளும் அறிவாள்.
ஆனால் அவள் மனம் அவள் பேச்சைதான் கேட்க மறுத்து விட்டது. அவன் வாசம் அவளை ஏதோ செய்தது.

'ஹார்மோன்ஸ் அத்தனையும் நாசமா போகட்டும்..' என அவள் திட்டியதை அவளின் மனம் கேட்டுக் கொள்ளவில்லை.

அவளையும் அறியாமல் அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்றாள் சந்தியா. இனியன் அவளது முகத்தின் ஒவ்வொரு நொடி மாற்றத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
"காதலை தவிர வேற எல்லா பீலிங்குக்கும் உயிர் வரும் போல.." அவன் தனக்குள் முனகியது அவளுக்கு சரியாக கேட்கவில்லை.

"என்ன சொன்ன..?" புரியாமல் கேட்டாள்.

"தள்ளி நில்லுடி.. நானும் மனுசன்தான்.." அவன் சொன்னதை கேட்டு நெற்றியில் அறைந்துக் கொண்டவள் அவனை விட்டு ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

அவசரமாக அவனது சட்டையிலிருந்த பட்டன் அனைத்தையும் கழட்டினாள்.

"நான் கிளம்பட்டும்மா..?" அவசர கதியில் கேட்டவள் முன் மருந்து பேக் ஒன்றை நீட்டினான்.

"அவனோட டேப்ளட்ஸ் இதுல இருக்கு.."

"தேங்க்ஸ்.. ரொம்ப தேங்க்ஸ்.." என்றவள் அவன் கையிலிருந்த மருந்து பையை எடுக்க முயன்றாள்.

இனியன் சட்டென தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.

"எதுக்கும் ஒரு விலை இருக்கு.. எல்லாத்தையும் சும்மா பண்ண நீ ஒன்னும் என் காதலி கிடையாது.."

சந்தியா உதட்டை கடித்தபடி தரையை பார்த்தாள். தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று மனதுக்குள் ஆண்டவனிடம் கேட்டாள்.

"ஒரு முத்தம் கொடுத்துட்டு இந்த டேப்ளட்ஸை வாங்கிக்க.." அவன் இதை சொல்லும் போதே அவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று விட்டது.

தான் கேட்ட வார்த்தை சரிதானா என்ற சந்தேகத்தோடு அவனை பார்த்தாள். அவன் ஒற்றை பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு அவளை ஒரு ஒய்யார பார்வை பார்த்தான்.

"நா.. நா.." அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது.

"எனக்கு வேலை இருக்கு சந்தியா.. சீக்கிரம் இதை வாங்கிட்டு கிளம்புறியா..?" அவன் அதட்டல் போல் கேட்டான்.

சந்தியா அவசரமாக அவனது கன்னத்தில் தனது இதழை பதித்தாள். அவன் அவளது முத்தத்தை எதிர்பார்த்தான். ஆனால் அவள் அதை தந்த போது அதிர்ந்து போனான். இன்ப அதிர்ச்சியில் அவன் உறைந்து நிற்கும் போதே அவனது கையிலிருந்த மருந்து பையை வாங்கி கொண்டு வெளியே ஓடினாள் சந்தியா.

வியர்த்த மேனியும் சிவந்த முகமுமாக மூச்சிறைக்க ஹாலுக்கு ஓடி வந்தவளை அங்கிருந்த மூவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

"என்ன ஆச்சி சந்தியா ம்மா..? ஏன் இப்படி ஓடி வர..?" சக்தி எழுந்து வந்து அவளது தலையை வருடி விட்டபடி கேட்டாள்.

"அ.. அது.. அது ஒன்னுமில்ல அத்தை.. ரகுவுக்கு மருந்து சீ.. சீக்கிரம் தரணும்ன்னு வேகமா வந்தேன்.. ம.. மத்தபடி ஒன்னும் இல்ல.." திக்கி திணறி சொல்லி முடித்தவள் தன் கையிலிருந்த மருந்து பையை காட்டினாள்.

"மாத்திரையா..? வ்வேக்.. நான் சாப்பிட மாட்டேன்.." ரகு மருந்து பையை பார்த்த உடனே முகம் சுளித்தான்.

"மாத்திரை சாப்பிடலன்னா உடம்பு எப்படிடா சரியாகும்..?" என கோபத்தோடு கேட்ட சக்தி சந்தியா கையில் இருந்த மருந்து பையை வாங்கினாள்.

"நீ போய் தண்ணி கொண்டு வாம்மா.." என்றவள் ரகுவிற்கு முன்னால் வந்து அமர்ந்தாள். மாத்திரைகளை ரகம் பார்த்து பிரித்து அவன் கையில் தந்தாள்.

"அம்மா.. இது கசக்கும்.." நாக்கை வெளியே நீட்டி முகம் சுளித்து சொன்னவனின் பின்னந்தலையில் பட்டென ஒரு அடி விழுந்தது.

"இவ ஒருத்தி.. என்னை அடிச்சி கொல்லவே பிறந்திருக்கா.." ரகு எரிச்சலோடு சொல்லிக் கொண்டு திரும்ப அவன் பின்னால் நின்றிருந்த சந்தியா அவனது மற்றொரு கையில் தண்ணீர் டம்ளரை நீட்டினாள்.

"மாத்திரை சாப்பிடலன்னா உனக்குதான் சீக்கிரம் குணமாகாது.. அப்புறம் உன் கனவு கன்னி அருணா உனக்காக காத்திருந்து சலிச்சி போய் வேற எவனாவது கிடைக்கிறானான்னு பார்த்துட்டு கிளம்பிடுவா.."

சந்தியாவை பற்களை கடித்தபடி பார்த்தான் ரகு. "அவ நல்ல பொண்ணு.. அப்படிலாம் போயிட மாட்டா.." என்றவன் கண்களை மூடிக்கொண்டு மாத்திரைகளை விழுங்கினான்.

மாத்திரையின் கசப்பில் அவனுக்கு மொத்த உடலும் சிலிர்த்தது.

"சந்தியா.." இனியன் மீண்டும் கத்தி அழைத்தான்.

"வந்துட்டேன்.." இந்த முறை பயத்தை விட தயக்கம் அதிகமாக இருந்தது அவள் குரலில்.

"அவன் எதுக்கு இப்படி ஓயாம உன் பேரை ஏலம் போட்டுட்டு இருக்கான்..?"

"தெரியல அத்தை.. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்.." என்றவள் அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

குளித்து முடித்து ஜீன்ஸும் டீ சர்ட்டுமா இருந்தவன் கண்ணாடியின் முன் நின்று தனது தலையை வாரிக் கொண்டிருந்தான்.

"எதுக்கு கூப்பிட்ட..?" என கேட்டு வந்தவளிடம் தன் கழுத்து பகுதியை சுட்டி காட்டினான்.
"பட்டன் போட்டு விடு.." அந்த டீ சர்டில் ஒரே பட்டன்தான் இருந்தது.

"இந்த ஒரு பட்டனை கூட நான்தான் போட்டு விடணுமா..?" எரிச்சலோடு கேட்டபடி அவனருகே வந்து பட்டனை போட்டு விட்டுவிட்டு நகர்ந்து நின்றாள்.

"உனக்கு என்ன ஆச்சி..? எதுக்கு இப்படி வேற லெவல் இம்சை பண்ணிட்டு இருக்க..?"

அவன் தன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான். "ஓ.. இது வேற லெவல்ல டார்ச்சர இருக்கா..? அப்ப ஓகே.. சரி வா.. வந்து என் கண்ணுக்கு மை வச்சி விடு.."

சந்தியா தன் கண்களை சுழற்றினாள். 'இவன் இன்னும் இந்த பழக்கத்தை விடலையா..?'
அவன் முன்னால் வந்து நின்றவள் அவன் கையில் இருந்த கண் மையை கையில் வாங்கினாள்.

"எதுக்கு இன்னும் இப்படி பழைய காலம் மாதிரி இதை யூஸ் பண்ணுற..? என்கிட்ட ஐ காஜல் இருக்கு. அதை வேணா தரட்டா..?" தலை சாய்த்து கேட்டவளின் கன்னம் கிள்ளினான் இனியன்.

"நான் மேக்கப் கிங் இல்ல.. நீ இதையே வச்சி விடு.." என்றான்.

"நீ மேக்கப் கிங் இல்ல.. டார்ச்சர் கிங்.." என்றவள் தன் சுண்டு விரலில் மையை தொட்டுக் கொண்டு அவனை பார்த்தாள்.

அவன் இருந்த உயரத்திற்கு அவளால் மை வைக்க இயலாது என தெரியும்.

"கொஞ்சம் இப்படி உட்காருங்க உயர்ந்த மகராசா.." என அவள் நாற்காலியை கை காட்டினாள். அவளை பார்த்தபடியே நாற்காலியில் அமர்ந்தான் இனியன்.

அவனது கண்களின் உயரத்திற்கு குனிந்தவள் தனது சுண்டு விரலில் இருந்த மையை அவனது இமையோரத்தில் தீட்ட ஆரம்பித்தாள்.

விழியசையாமல் பார்த்தான் அவன். அவனது விழிகளில் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தாள் சந்தியா. அந்த சக்தி தன் இரும்பு மனதை கூட மெழுகாக உருக்கும் என அறிந்தபடியே அவன் விழிகளில் மையை தீட்டி முடித்தாள்.

"ஆண் விழிகளுக்கு போட்டி வைத்தால் கவர்ச்சியில் இவன் கண்ணுதான் முதல் இடம் பிடிக்கும்.."

"ஓ.. தேங்க் யூ.." என அவன் சொல்ல அவள் தன் வாயின் மீது கையை வைத்தாள்.

"யோசிக்கிறதா நினைச்சி வெளியே பேசிட்டேனா..?"

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top