நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியாவை புன்னகையோடு பார்த்தான் இனியன்.

"மனசுல நினைக்கறதா நினைச்சி வெளியே பேசுறதை நீ இன்னும் விடலையா..?" எழுந்து நின்று அவளை பார்த்து கேட்டான்.

சந்தியா அசட்டு சிரிப்போடு அவனுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் இரண்டு எட்டு எடுத்து வைக்கும் முன்பே "சந்தியா.." என அழைத்தான் அவன்.

"இன்னும் உனக்கு என்ன வேணும்..?" சிறு சிடுசிடுப்போடு கேட்டபடி அவன் பக்கம் திரும்பினாள்.
இங்கே வா எனும் படி கையால் சைகை காட்டினான் அவன். முகத்தில் சிடுசிடுப்பு குறையாமல் அவன் அருகே சென்றாள்.

அருகில் வந்தவளை நாற்காலியில் அமர வைத்து அவள் முன் மண்டியிட்டான் இனியன். அவளது கையை எடுத்தவன் அவளது மணிக்கட்டு பகுதியில் சிவந்திருந்த இடத்தை வருடினான்.

மருந்து ஒன்றை அவளது மணிக்கட்டை சுற்றிலும் தடவி விட்டான். "வலிக்குதா..?" என்றான் மருந்தை தடவியபடியே.

சந்தியாவிற்கு கோபம்தான் வந்தது. "ரெஸ்டாரன்ட்ல வலிக்குதுன்னு நான் சொன்னபோது உன் காதுகளை எங்கேயாவது வாடகைக்கு விட்டுட்டு வந்திருந்தியா..?" எரிச்சலோடு கேட்டாள்.

"அவனோட வருங்கால மாமனார் அவரோட பொண்ணுக்கு அவன் செக்ஸுவல் டார்ச்சர் தரதா கம்ப்ளைண்ட் தந்திருந்தாரு. அவன் உன்னை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்க இருந்த கேஸையும் அதுக்கு முன்னாடி நாள்தான் படிச்சேன். அந்த நேரத்துக்கு எனக்கு அவன் மேல எவ்வளவு கோபம் இருக்குன்னு உன்னால புரிஞ்சிக்க முடியாது. அவனை அரெஸ்ட் பண்ண வந்த இடத்துல நீ அவனோடு ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருந்த. அந்த நேரத்துல என் இடத்துல எவனா இருந்தாலும் உன்னை பிச்சி எடுத்திருப்பான்.. நீயும் அவனும் பிரெண்டுன்னு எனக்கு எப்படி தெரியும்.? அஞ்சி வருசத்துல ஏதாவது ஒரு நிமிஷத்துலயாவது எனக்கு போன் பண்ணி 'எனக்கு இங்கே ரகுன்னு ஒரு பிரெண்ட் இருக்கான்'னு நீ சொல்லி இருக்கலாம். ஆனா உனக்கு என்கிட்ட சொல்ல ஏதும் இல்ல. என் அம்மாவும் அப்பாவும் உங்களுடைய நட்பை பத்தி சொல்லும் வரையிலும் என்னை பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளிதான்.." என்றவன் தன் கையிலிருந்த மருந்தை மேஜையின் ஓரத்தில் வைத்தான்.

சந்தியா பதில் சொல்லாமல் தரை பார்த்து அமர்ந்திருந்தாள். அவன் சொன்னதன் நியாயம் அவளுக்கு புரிந்தது. தான் தனது நட்பை பற்றி அவனிடம் ஏதும் சொல்லாத ஒரு நிலையில் அவன் மனதில் இப்படிதான் தோன்றியிருக்கும் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"ஸாரி..'' மெல்லமாக முனகினாள்.

இனியன் பெருமூச்சோடு தலையசைத்தான். "உன்னை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்க இருந்தவனை கூட மன்னிச்சி பிரெண்டா ஏத்துக்க முடிஞ்ச உன்னால என்னை மன்னிக்க முடியல.." கசப்பாய் சிரித்தபடி சொன்னவன் அந்த இடத்திலிருந்து நகர்ந்தான்.

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் குற்ற உணர்வை தந்தது. ஆனால் ரகு இவனை போல இதயத்தில் நம்பிக்கையை தந்து ஏமாற்றவில்லையே என சொல்லி தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். உரிமைகள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் நாம் அதிகம் கோபத்தை காட்டுவோம் என்பதை அவள் உணரவில்லை.

ரகு தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவனின் எதிரில் வந்து அமர்ந்தான் இனியன்.
அரவம் கேட்டு நிமிர்ந்த ரகு இனியனை கண்டதும் நேராக அமர்ந்தான். அவனது முகத்தை பார்த்தவன் இமைக்க மறந்து விட்டான்.

"என்ன அப்படி பார்க்கற..?" தன் விழிகளை உருட்டி கேட்டான் இனியன்.

"மை.. கண்ணுக்கு மை வச்சிருக்கிங்களா..?" திக்கலாக கேட்டவனின் முகத்தில் ஆச்சரியம் அளவுக்கு அதிகமாக இருந்தது.

"ஆமா. ஏன் நல்லா இல்லையா..?" அவன் புருவத்தை உயர்த்தி கேட்க அவன் கண்களை பார்த்துக் கொண்டிருந்த ரகு தன்னை மீறி உடல் சிலிர்த்ததை கண்டான்.

"இல்ல.. நல்லாருக்கு.." என்றவன் தயக்கமாக "ஆனா இதை நீங்க ஏன் வச்சிருக்கிங்க..?" என்றான்.

"ஏன் வைக்க கூடாது..? ஆண்கள் மை வைக்க கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா..?" அவன் ரகுவை கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த சந்தியா டைனிங் டேபிள் மேல் இருந்த தண்ணீரை எடுத்து பருக ஆரம்பித்தாள்.

"அப்படி ஏதும் இல்ல.." என்றவன் இரண்டு நொடிகள் தயங்கி விட்டு "உங்க கண்கள் ரவுடி லுக் தருது.. ஆனா செம செக்ஸியா இருக்கு.." என்றான்.

அவன் சொல்லியதை கேட்டு இனியன் சற்று அதிர்ந்தான். அவன் எதையோ சொல்ல இருந்த நேரத்தில் சந்தியா ரகு சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை துப்பி விட்டாள்.

ரகுவும் இனியனும் அவளை முறைத்தனர். அவள் சும்மாகவே தன் தலையை தட்டியபடி வேறு திசைக்கு திரும்பி நின்றுக் கொண்டாள்.

'செக்ஸியாம்.. ச்சீ.. ச்சீ.. இந்த ரகுவுக்கு பைத்தியம் முத்திடுச்சி போல..' என நினைத்தவளுக்கு சற்று முன்தான் தான் அவனது கண்களை விழியெடுக்காமல் பார்த்தோம் என்பதை மறந்து விட்டாள்.

இனியன் சட்டென தனக்குள் பூத்த மகிழ்ச்சியை முகத்தில் புன்னகையாக மலர விட்டான்.

"தேங்க்ஸ் ப்பா.. ரவுடி லுக் இருக்கு இல்ல.. அது போதும்.." என அவன் கண்ணடித்து சொல்ல ரகுவிற்கே முகம் சிவந்து போனது.

"அந்த பொண்ணும் நீயும் உண்மையா லவ் பண்ணா தனியா வந்து கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல..?" யோசனையோடு கேட்டான் இனியன்.

"இல்லிங்க வேண்டாம்.. அவங்க அப்பா சம்மதம் வாங்கிட்டே கல்யாணம் பண்ணிக்கிறோம்.." என்றவன் தரையை பார்த்தான்.

"அவங்க அப்பா நிச்சயம் உனக்கு சம்மதம் சொல்ல மாட்டாரு. உனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கறது மட்டும்தான் ஒரே வழி.."

"அப்படியே உங்க அப்பா புத்தி இருக்கு.." என சலித்துக் கொண்டே அவர்களின் எதிரே வந்து அமர்ந்தாள் சக்தி.

"அவன் சொன்னதுதான் சரி. உனக்கு கல்யாணம் பண்ணிக்க ஒரே வழி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறதுதான்.. அவங்க அப்பா சம்மதிக்கவே மாட்டாரு.." சக்தியின் அருகில் வந்து அமர்ந்த மகேஷ் சொன்னான்.

"இல்லப்பா.. அந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்க எனக்கு அரை மணிநேரம் கூட ஆகாது. ஆனா வரும்காலத்துல அவ என் கல்யாணத்தை என் அப்பா அம்மா பார்க்க கொடுத்து வைக்கலையேன்னு பீல் பண்ணிட்டான்னா அப்புறம் என்னால அதை தாங்கவே முடியாது.. அவங்க தவமிருந்து எத்தனை கோவில்லயோ வேண்டுதல் வச்சி அவளை பெத்திருப்பாங்க. இன்னைக்கு நான் காதலிக்கிறேன்ங்கற காரணத்துக்காக அவளை பிரிச்சி கூட்டிட்டு வந்துட கூடாது இல்லையா..? இன்னைக்கு இல்லன்னா இன்னொரு நாள் சம்மதிக்க போறாங்க.. அவங்க சம்மதிக்கற வரைக்கும் நாங்க இரண்டு பேரும் போராடுவோம்.."

"இந்த வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே.." என்ற மகேஷ் சக்தியின் பக்கம் பார்த்தான்.

"நீதானே பெத்தவங்க சம்மதம் இல்லாம வாழ வர மாட்டேன்னு பத்தொன்பது வருசமா என்னை பிரிஞ்சி இருந்தவ..?" என அவன் நக்கலாக கேட்க அவள் தன் கையை கட்டிக் கொண்டு ரகுவை பார்த்தாள்.

"நீ சொல்றதுதான் கரெக்ட் ரகு.. அந்த பொண்ணோட மனசை பத்தி யோசிச்ச பார்த்தியா.. அங்கேதான் உண்மையான காதல் வாழுது.."

இனியன் முகத்தில் சிறு கோபம் தென்பட்டது.

"காதலிக்கிற பொண்ணு மனசை யோசிக்கிறது தப்பு இல்ல. ஆனா அவ தன் கூடவே இருக்கணும்ன்னு நினைக்கணும். அவங்க வீட்டுல அந்த பொண்ணுக்கு வேற இடத்துல கட்டாய கல்யாணம் பண்ணி வைக்கலாம். அவளும் கொஞ்ச நாள் அழுதுட்டு கட்டிக்கிட்டவன் கூட வாழ ஆரம்பிக்கலாம். இல்ல காதலிச்சவனை மறக்க முடியாம செத்தே கூட போகலாம். ஆனா அதே கட்டாயப்படுத்தி நாமளே கட்டிக்கிட்டா நாளைக்கு அவ தன் அம்மா அப்பாவை நினைச்சி அழும்போது ஆறுதல் சொல்லவாவது நாம கூடவே இருப்போம். அழுதுட்டே இருந்தாலும் நம்ம காதலியா மனைவியா நம்ம கண் முன்னாடி இருந்தாலே போதும்.." என சொன்னவன் எழுந்து வெளியே நடந்தான்.

"திடீர்ன்னு இவனுக்கு என்ன வந்தது..?" சக்தி புரியாதவளாக கேட்டாள்.

ஆனால் அவன் சொன்னது சந்தியாவிற்கு புரிந்து இருந்தது. அத்தனையும் காதலின் வெளிபாடு என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளதான் முடியவில்லை அவளால்.

"அருணாவோட அப்பாக்கிட்ட நான் நாளைக்கு பேசி பார்க்கிறேன்.." என ஆறுதல் சொன்னான் மகேஷ்.

பக்கத்து ஊர் கோவிலுக்கு சென்றுவிட்டு அப்போதுதான் வீட்டுக்கு வந்தாள் பொன்னி. தான் கொண்டு வந்த திருநீறை அங்கிருந்த எல்லார் நெற்றியிலும் வைத்து விட்டாள்.

"ரகு.. ஏன் உனக்கு இப்படி அடிப்பட்டிருக்கு..? உன் கையை காலை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா..?" என்றவள் அவனது நெற்றியில் பெரியதாக பட்டையை இழுத்து விட்டாள். ரகு பதில் சொல்லும் முன் அவளே பேச ஆரம்பித்தாள்.

"அந்த கருமாரியாத்தா உனக்கு இதுக்கு மேலயாவது நல்ல புத்தியா கொடுக்கட்டும்.." என்றவள் தன் பேரனை தேடினாள்.

"இனியன் எங்கே..?" சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கேட்டாள்.

"அவரு வெளியே போயிருக்காரு பாட்டி.." என சொன்ன சந்தியாவின் கையில் திருநீற்றை தந்தாள்.

"என் பேரன் வந்ததும் இதை வச்சி விடு.." என்றாள்.

"ரகு உனக்கு கஞ்சி ஏதும் செய்யட்டா..?" கிச்சன் பக்கம் நடந்துக் கொண்டே கேட்டாள் பாட்டி.

"வேணாம் பாட்டி.. நான் வீட்டுக்கு கிளம்பறேன்.." என்றவன் சிறு தள்ளாட்டத்தோடு எழுந்து நின்றான்.

"வீட்டுக்கு போய் என்ன பண்ண போற..? அங்கே சுடு தண்ணி வச்சி தர கூட ஆள் இருக்காது. அதுவும் இல்லாம நீ வம்பு இழுத்துட்டு வந்தவனுங்க உருட்டு கட்டையோட வாசல்ல நிப்பாங்க.. இருக்கற கை காலையும் முழுசா உடைச்சிக்க ஆசைப்படுறியா..?" பாட்டி கிச்சனிலிருந்து குரல் தந்தாள்.

ரகுவிற்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

"நாலு நாளைக்கு இங்கேயே இருப்பா.. அப்புறமா வீட்டுக்கு போவ.." என்று சக்தியும் சொன்ன பிறகு அவனால் மறுத்து ஏதும் சொல்ல முடியவில்லை.

இனியன் தன் மனம் போன திசையில் தன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான். ரகுவை போல தன்னால் நினைக்க முடியாது என்று எண்ணி தனக்குள் உழன்றுக் கொண்டிருந்தான்.
அவன் செய்வது அத்தனையும் தவறு என உலகமே சொன்னாலும் சந்தியா அவனோடு இருக்கும் வரை அத்தனையும் சரியென்று மட்டும்தான் அவனுக்கு தோன்றும்.

கட்டிடம் ஒன்றின் முன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான். அரை மணி நேரம் கழித்து அவன் பைக்கிற்கு திரும்பி வந்தபோது அவனது மொத்த முகமும் சந்தோசத்தால் நிறைந்து இருந்தது.

சந்தியா தனது மணிக்கட்டை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மருந்து போட்டு விடுபவன் அவன் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் அடிப்படலாம் என உள்ளுக்குள் ஒரு குரல் ஒலிக்க, தன் மனசை திட்டி தீர்த்தாள். காதல் எனும் மாயவலையில் சிக்கினால் நாம் மட்டுமே மீள முடியும். ஆனால் நம் மனம் அங்கேயேதான் இருக்கும் போல என அவள் நினைத்த நொடி அறைக்குள் நுழைந்தான் இனியன்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN