நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா சொன்னதை இனியனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

"நீ ஏன் இப்படி சொல்ற சந்தியா..? இந்த வீட்டுல என்னை விட உனக்கு உரிமை அதிகம்.."

"இந்த டிராமாவ நிறுத்து இனியா.. எனக்கு உன் டிராமா வசனங்களை கேட்டு கேட்டு சலிச்சி போச்சி.. உன்னோட ஒவ்வொரு வார்த்தையும் நீ எனக்கு இந்த வாழ்க்கையை பிச்சை போட்ட மாதிரியான நினைப்பை தருது. நீ என்னைக்கு என் வாழ்க்கையில வந்தியோ அன்னைக்கே என் வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சி.. இந்த வீட்டுல நான் விருந்தாளியா இருக்கற மாதிரி தோணுது.. என் மாமா என் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தார் தெரியுமா.? எனக்கு சின்ன அடிப்பட்டா கூட அவர் துடிப்பாரு. என்னை ஒருத்தன் கல்யாணம் செய்ய கடத்திட்டு போனபோது அவனை கொல்லும் அளவுக்கு போனவர் அவரு. ஆனா நீ எப்ப என் வாழ்க்கையில வந்தியோ அப்பவே நான் அனாதையாகிட்டேன். என் மாமாவுக்கு என் மேல பாசமும் போயிடுச்சி. என்னை ஒருத்தன் காதல்ன்னு பேர் சொல்லி ஏமாத்திட்டான்னு தெரிஞ்சும் கூட என்னோட மனசுல எவ்வளவு வேதனை இருக்கும்ன்னு அவர் கேட்கல. நான் அந்த சமயத்துல எப்படி வாழ்க்கையை வெறுத்திருப்பேன்னு அவர் யோசிக்கல. என்னை ஏமாத்தினவனை கூப்பிட்டு வச்சி ஏன்டா இப்படி செஞ்சன்னு ஒரு வார்த்தை கேட்கல.. ஆனா அவன் வேணும்ன்னு கேட்டான்னு என்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு.." அவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வேதனை இருந்தது. அவள் ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் அவளது கண்கள் கண்ணீரை சிந்தியது.

இனியன் அவளின் பேச்சில் சற்று நிலைதடுமாறி விட்டான். அவளின் இழப்பு என்னவென்று அவள் விவரித்து விட்டாள். ஆனால் அந்த இழப்பு தன்னால் ஏற்பட்டது என்பதைதான் இனியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

"நீ சொல்வதை என்னால புரிஞ்சிக்க முடியுது சந்தியா. ஆனா நான் உன்னை விரும்புறேன்டி. எங்க அப்பா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னுதான் நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு. எப்ப நமக்கு கல்யாணம் ஆச்சோ அப்பவே உன்னை கவனிச்சிக்கற பொறுப்பு எனக்கு வந்துடுச்சி.. ஆனாலும் கூட எங்க அப்பா உன் மேல பாசமாதானே இருக்காரு.. அவரை விட ஆயிரம் மடங்கு பாசம் காட்ட நான் இருக்கேன். என் காதல் ராணி நீ.." அவளுக்கு சமாதானம் சொன்னான் இனியன்.

"நீ என்னை காதலை காரணம் காட்டி ஒன்னும் கல்யாணம் பண்ணலையே.. அன்னைக்கு உன்னை பொறுத்தவரை நான் ஒரு போகப்பொருள். உனக்கு தேவை என் உடம்புதான். அப்படி இருக்கும்போது இன்னைக்கு நீ காதலிக்கறதா சொன்னா நான் எப்படி நம்புறது.? என் வாழ்க்கை முழுக்க ஏமாந்துக்கிட்டே இருக்கட்டா.?" கசப்பாக கேட்டவளின் அருகே நெருங்கினான் இனியன்.

அவன் நெருங்குவதை கண்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள் சந்தியா. "என்னை விட்டுடு இனியா.. என் லைப்ல என்னால ஹேண்டில் பண்ண முடியாத டாஸ்க் எதையும் தராத. இந்த ரூமுக்கு வெளியே என்னை உன் பொண்டாட்டியா நடத்திக்க.. நீ பொண்டாட்டின்னு சொல்லி திட்டினாலும் கேட்க மாட்டேன்.
கொஞ்சினாலும் கேட்க மாட்டேன். ஆனா இந்த ரூமுக்குள்ளயாவது நான் நானா வாழ்ந்துக்க விடு. உன் பொய் காதலை சொல்லி என்னை உன் வலையில விழ வைக்காத. உன் காதல் உண்மையாவே இருந்தாலும் கூட எனக்கு அது தேவையே இல்லை. எனக்கு என் வாழ்க்கையே அந்த அளவுக்கு வெறுத்து போச்சி. உன் காதல் சர்வாதிகாரத்தை தாங்கிக்கற அளவுக்கு என் மனசுல தெம்பு இல்ல. எங்க அப்பா இந்த வீட்டோட மாப்பிள்ளையா இருக்காரு. அதனால எனக்கு இந்த வீட்டை வெளியே போக இடம் இல்ல.. அதனால ப்ளீஸ் என்னை இந்த ரூம்க்குள்ளயாவது தொல்லை பண்ணாம விட்டுடு.." கை எடுத்து கும்பிட்டு கேட்ட சந்தியா ஒருநொடி கூட யோசிக்கவே இல்லை அவன் தந்த வலிகளை விடவும் தான் அவனுக்கு அதிக வலிகளை தருகிறோம் என்று.

அவள் இப்படி சொன்னதை கேட்டபிறகு அவனால் பேச கூட முடியவில்லை. வெளுத்து போன முகத்தோடு வெளியே வந்தான்.

அருணாவின் அப்பா சொன்னதில் இருந்த நியாயத்தை மகேஷும் சக்தியும் புரிந்துக் கொண்டனர்.

'அவனவன் காதலிக்காக என்னவெல்லாம் செய்றாங்க. நாம வீட்டோட மாப்பிள்ளையா வருவதால என்னவாகிட போகுது.?' என யோசித்தான் ரகு.
அருணா கதவோரம் நின்றபடி ரகுவையே சிறு பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் சொல்லும் சொல்லில்தான் தனது மொத்த வாழ்க்கையும் உள்ளது என்பதை அறிவாள் அவள்.

"எனக்கு ஓகேங்க.. உங்களுக்கு ஓகேன்னா கல்யாணத்துக்கு தேதி பாருங்க.. இந்த வீட்டுல நான் தங்கினாலும் என் சாப்பாட்டுக்கான செலவை கொடுக்கதான் விரும்புறேன்.. என் செலவுல என் பொண்டாட்டி செலவும் சேர்ந்துதான் வரும்.." என்றான். அவன் இப்படி சொன்னதும் அருணாவின் முகம் சந்தோசத்தில் பளிச்சிட்டது. தனது புன்னகையை மறைக்க இயலாமல் துள்ளிக் கொண்டு அறைக்குள் போனாள்.

ரகுவின் தோளில் தட்டி தந்தான் மகேஷ்.

ரகுவின் பதில் அருணாவின் வீட்டிலிருந்தோருக்கு மிகுந்த திருப்தியை தந்தது.

அவர்கள் இருவருக்குமான கல்யாணத்திற்கான அனைத்தும் பேச ஆரம்பித்தனர் பெரியவர்கள்.

இனியன் தனது அலுவலகத்திற்கு கிளம்பி வந்து விட்டான். தனது அன்றாட அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தான். ஐந்து வருடமாக சந்தியாவை கனவில் கூட நினைத்துக் கொண்டிருந்தவன் இப்போது ஒரு நொடி மறந்தால் போதும் என தனது சிந்தையிடம் கெஞ்சினான்.

அந்த அறைக்குள் அவசரமாக வந்தான் தேவன். அவன் இனியனுக்கு அடுத்த நிலையில் பணிபுரிபவன்.

"ஸார் ஒரு அர்ஜென்ட் மேட்டர்.. நம்ம ஊர் அரசியல்வாதி தேவ சுந்தரியை பயங்கரமா வெட்டி கொன்னுட்டாங்க.." என்றான்.

இனியன் தனது துப்பாக்கியை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு எழுந்தான்.

"அந்த லேடியை யாருய்யா கொன்னது.?" குழப்பத்தோடு கேட்டான் இனியன்.

"தெரியல ஸார்.. எதிர் கட்சி கூலி தந்து ஆள் இறக்கி இருப்பாங்க.. அந்த அம்மாவை கொலை செய்ய ஏற்கனவே பல முயற்சி நடந்திருக்கு. காசு தந்தா கொலை செய்ய ஆள் போட்டி போட்டுட்டு வருவாங்க.. ரவுடிங்க இல்லாத இடமா இருக்கு.?" என்ற தேவனை ஒரு நொடி நின்று பார்த்தான் இனியன்.

"திறமை பேச்சுல மட்டும் காட்டாம செயலிலும் காட்டணும்.." என்றவன் தனது பைக்கில் ஏறி அமர்ந்தான்.

"ஸார் நான் காருலயே வரேன் ஸார்.." என்ற தேவன் அவசரமாக காரில் ஏறினான்.

இனியன் தேவ சுந்தரி வீட்டிற்கு வந்தபோது அந்த வீட்டை சுற்றி பொது மக்கள் கூட்டமும் செய்தியாளர்கள் கூட்டமும் நிரம்பி இருந்தது. அவர்கள் அனைவரையும் தாண்டி அவன் வீட்டுக்குள் சென்றான்

வீட்டின் கூடத்தில் கருப்பு வட்டம் பெரியதாக வரையப்பட்டு இருந்தது. வட்டத்தின் உள்ளே எலுமிச்சைகளும் உருவ பொம்மைகளும் இருந்தது. இன்னும் ஏதேதோ பூஜை பொருட்களும் இருந்தது. அதன் இடையே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள் தேவ சுந்தரி. அவளின் ரத்தம் அந்த கூடம் முழுக்க சிந்தி இருந்தது. பாரன்ஸிக் டிபார்ட்மென்ட் அவர்களின் வேலையை பார்த்துக் கொண்டிருந்தது.

கருப்பு கோட்டை பார்த்து குழம்பினான் இனியன்.

"என்னய்யா இது..?" மூச்சிறைக்க தன் அருகே வந்து அவசரமாய் நின்ற தேவனை பார்த்து கேட்டான் இனியன்.

"ஸார் எனக்கும் முழுசா எதுவும் தெரியாது. போன்ல இன்பர்மேஷன் கிடைச்சவுடனே எனக்கு தெரிஞ்சதை உங்ககிட்ட சொல்லிட்டேன்.." என்றான் தேவன்.

கருப்பு வட்ட கோட்டின் வெளியே நின்றபடி ஒரு இளம்பெண் அழுதுக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது இனியனுக்கு.

"ஏம்மா பொண்ணே இங்கே வா.." என அழைத்த இனியனை தயக்கமாக பார்த்துக் கொண்டே அவனருகே வந்து நின்றாள் அந்த பெண்.

"இங்கே என்னதான் நடந்துச்சி..?"

"இப்ப வர போற தேர்தல்ல ஜெயிக்க எங்க தேவ சுந்தரி அம்மா ஒரு ஸ்பெஷல் பூஜை நடத்தினாங்க ஸார். பூஜை நடந்திட்டு இருக்கும் போது திடீர்ன்னு பூசாரி அரிவாள் எடுத்து இவங்களை வெட்டிட்டு ஓடிட்டான்.." என்றாள் தேம்பிக் கொண்டே.

"அரசியல்வாதிங்க கூட இந்த ஸ்பெஷல் பூஜைகளை நம்புறாங்களா.?" என தேவனின் காதில் கிசுகிசுப்பாக கேட்டான் இனியன்.

"அது மனுசன் வீக்னெஸ் ஸார்.. இதுல அரசியல்வாதி என்ன வேற ஒருத்தன் என்ன.?"

"அந்த பூசாரி யாருன்னு தெரியுமா.?" அந்த பெண்ணிடம் கேட்டான் இனியன்.

"ஸார் சிசிடிவி ரெக்கார்ட் எல்லாம் எப்பவோ ஆபிஸ்க்கு போயிடுச்சி.. நம்ம டிபார்ட்மெண்ட்ல நீங்களும் நானும்தான் லேட்டு.." என்றவன் தன் போன் ஒலிக்கவும் அதை பேச ஆரம்பித்தான்.

பேசி முடித்து விட்டு திரும்பியவன் "ஸார் குமரன் ஸார் உங்களை அவரோட ஆபிஸ்க்கு வர சொல்றாரு.. சிசிடிவி ரிப்போர்ட் அங்கேதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.." என அவன் சொல்லிய நேரத்தில் அங்கிருந்த தேவ சுந்தரி உடல் ஸ்டெக்சரில் ஏற்றி ஆம்புலன்ஸ்க்கு எடுத்து செல்லப்பட்டது.
தேவனும் இனியனும் அந்த இடத்திலிருந்து கிளம்பினர்.

"எங்க தலைவியை கொன்னவனை இன்னும் ஒரு நாளுல கண்டுபிடிச்சி உடனடியா தூக்குல போடலன்னா நான் பெட்ரோல் ஊத்திக்கிட்டு கொளுத்திப்பேன்.." இனியனின் பைக் அருகே நின்றபடி ஒருத்தன் இப்படி ஒரு அறிக்கையை விட்டபடி பெட்ரோல் கேனை பொது மக்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்தான். அவனை கண்டதும் இனியனுக்கு கோபம் வந்தது.

"இப்பவே கொளுத்திக்கிட்டு சாவு.." என இனியன் சொல்லவும் அவன் ஒரு கணம் அதிர்ந்து நின்று விட்டான்.

"போலிஸ்காரன் ஒன்னும் மந்திரவாதி இல்ல.. தப்பு செஞ்சவனை தேடி கண்டுபிடிக்கறது ஒன்னும் அவ்வளவு ஈஸியான விசயம் கிடையாது.. எங்களுக்கு இந்த ஒரு கேஸால ஆயிரம் டென்சன். ஆனா வெறும் பெட்ரோல் கேனை வச்சிக்கிட்டு கலவரம் பண்ற உன்னால எங்க வேலைக்கும் தடைதானே தவிர எந்த உபயோகமும் இல்ல. அதனால இப்பவே கூட கொளுத்திக்கிட்டு செத்து போ.." என்றான் இனியன்

"என் தலைவிக்காக நான் இப்பவே சாவேன்டா.." என்றவன் பெட்ரோல் கேனின் மூடியை கழட்டி எறிந்து விட்டு பெட்ரோலை இனியன் மீது கொட்டினான்.

"என் தலைவிக்காக நான் சாவேன். ஆனா நீ என்னடா பண்ற.? உங்க டிபார்ட்மெண்ட் என்னடா பண்ணுது.? ஒரு வேலையை கூட சரியா செய்ய தெரியாத உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க மொத்தமா சாகணும்டா.."

இனியனும் மற்றவர்களும் அதிர்ந்து நின்ற வேளையில் அவன் தன் பாக்கெட்டிலிருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க ஆரம்பித்தான்.

"ஸார்.." அதிர்ச்சியோடு அழைத்தபடி அருகில் வர இருந்த தேவனை கை காட்டி நிறுத்தினான் இனியன். தன் முகத்தில் இருந்த பெட்ரோலை கையால் துடைத்தான். பெட்ரோல் வாசம் அவன் நாசியில் குடி கொண்டு விட்டது.

"கொளுத்துடா.." என்றான் இனியன் தன் எதிரில் இருந்தவனிடம்.

அவனின் எதிரில் இருந்தவன் தீக்குச்சியை எடுத்து உரச ஆரம்பித்தான். அவனின் பிசுபிசுத்த கையால் சட்டென தீக்குச்சியை பற்ற வைக்க முடியவில்லை. சற்று நேர போராட்டத்திற்கு பின் அவன் கையில் எடுத்து உரசிய தீக்குச்சி நெருப்பு பிடித்துக் கொண்டது.

Word count 1049

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top