நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அருணாவின் வீட்டிலிருந்து மற்றவர்கள் திரும்பி வந்ததும் சந்தியா தனது அறையிலிருந்து வெளியே வந்தாள். அழுது ஓய்ந்த முகத்தை உள்ளங்கையால் அழுத்தி தேய்த்தி துடைத்து விட்டுக் கொண்டவள் கண்கள் எட்டாத புன்னகையோடு கூடத்திற்கு வந்தாள்.

மகேஷும் சக்தியும் ஆளுக்கொரு இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

"உனக்கு என்னடி ஆச்சி.? ஏன்டி பொண்ணு வீட்டுல அப்படி பேசி வச்ச.?" பாட்டி வந்தவுடனே கோபத்தோடு கேட்டாள்.

"விடுங்க பாட்டி. அவ என் மேல இருக்கற அக்கறையில அப்படி பேசிட்டா.." என்று தன் தோழிக்காக வாதாட வந்தான் ரகு.

"நீ இதுல கலக்காம தூரமா இருடா.." என்று அவனிடம் சீறினாள் பொன்னி.

"உனக்கு வர வர வாய் கொழுப்பு அதிகமாகிக்கிட்டு இருக்கு சந்தியா.. பெரியவங்ககிட்ட எப்படி பேசணும்ன்னு கூட நீ மறந்துட்ட.. எல்லாரையும் எதிர்த்து பேசினதும் இல்லாம அங்கிருந்து கிளம்பியும் வந்துட்ட.. உன்னால நாங்க எல்லாரும் அந்த வீட்டுல தலை குனிஞ்சி நின்னுட்டு வரோம்.." என்றாள்.

"விடுங்க அத்தை.. சின்ன பொண்ணுதானே.." என்ற சக்தி எழுந்து கிச்சனுக்கு கிளம்பினாள்.
பொன்னி தன்னை தாண்டி சென்ற சக்தியை முறைத்தாள்.

"ஏதோ அவங்க நல்லவங்களா இருந்ததால நீ சொன்னதை பெருசா எடுத்துக்காம இவனுக்கு பொண்ணும் கொடுத்து இவனை வீட்டோடும் வச்சிக்க சம்மதம் சொன்னாங்க.." என பாட்டி சொல்ல சந்தியா ரகுவை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அவன் வெட்கத்தோடு தரையை பார்த்தான்.

நண்பன் வீட்டோடு மாப்பிள்ளையாக செல்வதில் சந்தியாவிற்கு உடனபாடு இல்லைதான். ஆனால் நண்பனின் முகத்தில் தெரிந்த வெட்கமும் சந்தோசமும் அவள் மனதை வளைந்து கொடுக்க செய்தது.

"என் பேரன் எங்கே.?" பொன்னி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கேட்டாள்.

"அவரு வேலைக்கு போயிட்டாரு பாட்டி.." யூகித்துதான் சொன்னாள் சந்தியா.

"மகேஷ் உனக்கு மேங்கோ ஜூஸ் வேணுமாடா.?" என சக்தி கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.

"கொண்டு வாம்மா.." என சொன்ன மகேஷ் அதன்பிறகுதான் தன் முன்னால் அமர்ந்து கொண்டிருந்த அம்மா தன்னை முறைக்க ஆரம்பித்தது புரிந்தது.

சந்தியாவும் ரகுவும் தங்களுக்கு பொங்கி வந்த சிரிப்பை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

சக்தி சற்றி நேரத்தில் ஜூஸ் டம்ளர்களோடு வந்தாள்.

"ஜூஸ் எடுத்துக்கங்க அத்தை.." என்றவள் தன்னை முறைக்கும் பொன்னியை விசித்திரமாக பார்த்து விட்டு மகேஷின் அருகே சென்று அமர்ந்தாள்.

ரகுவும் சந்தியாவும் ஆளுக்கொரு டம்ளரை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் திரும்பி நின்றுக் கொண்டனர்.

"நீயும் எடுத்துக்க மகேஷ்.." என்ற சக்தி ஜூஸை குடிக்க ஆரம்பித்தாள்.

சந்தியாவும் ரகுவும் ஆளுக்கொரு விழுங்கு ஜூஸை குடித்து விட்டு ஒருவருக்கொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

ஜூஸை ஒரு விழுங்கு குடித்தவுடன் டம்ளரை டப்பென கீழே வைத்தாள் சக்தி. தனது நெற்றியில் அறைந்துக் கொண்டாள்.

"ஜூஸ்ல சர்க்கரை போடல.." என அவள் சொல்லிய நேரத்தில் ஜூஸை சுவைத்து விட்டிருந்த பொன்னி முகத்தை அஷ்டகோணலாக்கி கொண்டு சக்தியை பார்த்தாள்.

"உனக்கு என்னதான் சரியா வரும்.? ஒரு ஜூஸ் கூட ஒழுங்கா போட தெரியல.. என் முன்னாடியே என் மகனை டா போட்டு கூப்பிடுற.." என கோபத்தோடு பொன்னி சொல்ல சக்தி அதிர்ச்சியோடு மகேஷை பார்த்தாள்.

அவன் சிரிப்பை அடக்கியபடி சீலிங்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் ஏதோ நினைவில் அவனை டா என அழைத்து விட்டாள். தான் அப்படி அழைத்ததையும் கூட அவள் கவனிக்க மறந்து விட்டாள்.

நெற்றியில் வியர்த்த வியர்வை துளிகளை புறங்கையால் துடைத்தபடியே மாமியாரை பார்த்தாள் சக்தி.

"ஸாரி அத்தை நான் கவனிக்காம விட்டுட்டேன்.." என்றாள் தலை குனிந்தபடி.

"மாமியாரே இப்படி இருந்தா மருமக எப்படி இருப்பா.? இரண்டு பேருக்கும் சமைக்க வக்கில்ல.. இரண்டு பேரும் புருசனுக்கு மரியாதை கொடுக்கவும் தெரிஞ்சிக்கல.. பெரியவங்களை எதிர்த்து பேச மட்டும் கத்து வச்சிருக்கிங்க.." என சிடுசிடுத்தாள்.
பொன்னி திட்டியதை கேட்டு சக்தியின் முகம் வாடி போனது. உதட்டை கடித்தபடி தரையை பார்த்தவளின் உள்ளங்கையில் தன் கையை கோர்த்தான் மகேஷ். சக்தி அவனை நிமிர்ந்து பார்த்தாள். சிறு புன்னகையோடு கண் சிமிட்டினான் அவன். சக்தியின் முகம் உடனடியாக புன்னகையின் வசமானது.

பாட்டி சொன்னது சந்தியாவின் மனதையும் காயப்படுத்தி விட்டது. தன்னை போலவே திட்டு வாங்கிய அத்தையை பார்த்து தன் சோகம் தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்து சக்தியை பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு சக்திக்கும் மகேஷ்க்கும் இடையில் நடந்த புன்னகை பரிமாற்றம் மிகப்பெரிய அடியை தந்து விட்டது.

எவ்வளவு பெரிய சோகத்தையும் வேதனையையும் கணவனின் சிரிப்பு முகம் மாற்றி விடும் என கண்டு கொண்டவளுக்கு தான் ஏதோ ஓர் இடத்தில் இடறி விழுந்ததை போல இருந்தது. இனியனுக்கு தர வேண்டிய உரிமையை தான் தந்திருந்தால் தனக்கு இப்போது இப்படி ஒரு பேச்சு விழுந்திருக்குமா என யோசித்தாள். ஆயிரம் முரண்பாடுகளை உடையவனாக இருந்தாலும் தன் கணவன் தனக்கு உரிமைப்பட்டவன்தானே.? சரியான வகையில் நாம்தான் கையாளாமல் போய் விட்டோமோ.? என நினைத்து குழம்பினாள்.

இவள் இப்படி குழப்பதில் இருக்கும் போதே கிச்சனுக்கு சென்று சர்க்கரை எடுத்து வந்த ரகு அனைவர் ஜூஸிலும் சர்க்கரையை கலந்து விட்டு சந்தியா அருகிலும் வந்தான்.

"இந்தா சர்க்கரை.." என்றவன் அவள் டம்ளரில் சர்க்கரையை கொட்டி விட்டு ஒரு ஸ்பூனையும் தந்து விட்டு கிச்சனுக்கு திரும்பினான்.

அவன் திரும்பி வந்தபோது "அந்த டிவியை போடுடா ரகு.. சீரியல் பார்க்கலாம்.." என்றாள் பொன்னி.

ரகு தொலைக்காட்சியை இயக்கி விட்டு பாட்டியின் அருகே வந்து அமர்ந்தான். அவர்கள் சீரியல் எதிர்ப்பார்த்து காத்திருந்த சேனலில் முக்கிய செய்தி என தேவ சுந்தரி கொலையை பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

"இவளை ஏன்டா கொன்னாங்க.." என ஆச்சரியத்தோடு கேட்டாள் பொன்னி.

"தெரியலையே பாட்டி.." என சொன்ன ரகு அடுத்த சேனலுக்கு தாவினான்.

செய்தியை கேட்டதும் அவசரமாக தனது போனை தேடினாள் சக்தி. வனஜாவிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்ட்கால்கள் வந்திருந்தது. அவள் வனஜாவிற்கு அழைப்பு விடுத்தாள். ஆனால் வனஜாவோ போனை எடுக்கவேயில்லை. தான் விடுப்பு எடுக்கும் நாளில்தான் இப்படி ஏதாவது நடக்குமா என அலுத்துக் கொண்டாள் அவள்.

ரகு இயக்கிய அடுத்த சேனலிலும் அதே செய்திதான் ஓடிக் கொண்டிருந்தது. தேவ சுந்தரி வீட்டின் முன் நின்றபடி நேரலை வாசித்துக் கொண்டிருந்தார் அந்த செய்தியாளர்.

"எல்லாத்திலும் இதுதான் ஓடுது பாட்டி. நாம இதையே பார்க்கலாம்.." என்ற ரகு ரிமோட்டை ஓரம் வைத்து விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

"இப்ப பார்த்திங்கன்னா எல்லா போலிஸ் அதிகாரிகளும் இந்த இடத்தை வந்து பார்வையிட்டுட்டு இருக்காங்க. ஆனா ஒருத்தர் கூட உள்ளே அப்படி என்னதான் நடந்துச்சின்னு நமக்கு சொல்ல மாட்டேங்கறாங்க.. ஒரு அரசியல்வாதிக்கே நாட்டுல பாதுகாப்பு இல்லன்னா சாதாரண பொது மக்களோட நிலையை பத்தி சொல்லவே வேண்டியது இல்லை.." என செய்தி வாசித்து கொண்டிருந்த நங்கை திடீரென முகம் மாறினாள்.

"கேமராவை அந்த பக்கம் திருப்புங்க ஏ.எஸ்.." என்றாள் அவசரமாக. கேமரா வேறு திசைக்கு திரும்பியது. நின்ற இடத்திலிந்து வேறு இடத்திற்கு அவசரமாக ஓடினார் கேமராமேன்.

"உங்க டிபார்ட்மென்ட்ல இருப்பவங்கதான்டா சாகணும்.." என ஒருவன் சொல்லிக் கொண்டே போலிஸ் ஒருவர் மேல் பெட்ரோலை ஊற்றுவது திரையில் மங்கலாக தெரிந்தது.

"என்னடா நடக்குது அங்க.? போலிஸ் மேல ஏன்டா அவன் பெட்ரோலை ஊத்துறான்.? ஒருவேளை போலிஸ்காரன்தான் சுந்தரியை கொன்னிருப்பானோ.?" என கிண்டலாக கேட்ட பொன்னி திரையின் மங்கல் சரியாகவும் தன் கையில் இருந்த ஜூஸ் டம்ளரை கீழே விட்டாள்.

செய்தியை பார்த்துக் கொண்டிருந்த மொத்த பேரின் முகமும் அதிர்ச்சியில் உறைந்து போனது.

இனியன் தன் முகத்தில் இருந்த பெட்ரோலை துடைத்துக் கொண்டே எதிரில் இருந்தவனை பார்த்தான். "கொளுத்துடா.." என்றான்.

"ஐயோ என் பேரன்.. அடேய் என்னடா நடக்குது அங்கே.? இவன் ஏன்டா அவனை கொளுத்த சொல்றான்.?" பொன்னி வெடவெடவென நடுங்கும் கரங்களுடன் கேட்டாள்.

"இங்க பார்த்திங்கன்னா தொண்டர் ஒருவருக்கும் போலிஸ் ஒருவருக்கும் நடுவுல வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அந்த வாக்கு வாதத்துல அந்த தொண்டர் தன் கையில் வச்சிருந்த பெட்ரோலை போலிஸ் மேல ஊத்திட்டாரு.. ஆனா அந்த போலிஸூம் கொஞ்சம் கூட பயப்படாம தொண்டர்க்கிட்ட கொளுத்துடான்னு சொல்றாரு. தன்னை நெருங்கி வர மத்த போலிஸையும் கூட பக்கத்தில வர வேண்டாம்ன்னு சைகை காட்டுறாரு.." என முன்பு திரையில் பேசிய அதே இளம்பெண் மைக்கை கையில் பிடித்துக் கொண்டு சொன்னாள்.
சந்தியா பயத்தோடு தொலைக்காட்சி திரையை பார்த்தாள். இப்படி ஒரு சூழல் வரும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

"இத்தனை படுபாவிங்க வேடிக்கை பார்க்கறாங்களே.. ஒருத்தன் கூட என் பேரனை காப்பாத்த மாட்டேங்கறாங்களே.." அங்கு சுற்றி நின்றிருந்த அனைவரையும் வசைப்பாடினாள் பொன்னி.

அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தவள் வெளியே செல்ல எத்தனிக்க அவளை கைப்பிடித்து நிறுத்தினான் ரகு.

"நீங்க போய் காப்பாத்த போறிங்களா..? இது லைவ் நியூஸ்.. இந்த இடம் இருக்கற இடத்துக்கு நீங்க போய் சேர அரை மணி நேரம் ஆகிடும்.." என அவளுக்கு புரிய வைக்க முயன்றான் ரகு.

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு கண்களில் நீர் திரள ஆரம்பித்து விட்டது. மகேஷ் கொதித்துக் கொண்டிருந்தான். இனியனின் முன்னால் நிற்பனுக்கு தனது கையால்தான் சாவு என மனதுக்குள் அழுத்தமாக எழுதிக் கொண்டிருந்தான்.

சந்தியாவிற்கு நிற்கவும் தெம்பில்லாமல் போய் விட்டது. 'இனியா உனக்கு ஒன்னும் ஆக கூடாது..' என மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்.

'கடவுளே எனக்கு அவன் மேல கோபம் இருக்கறது உண்மைதான். ஆனா அதுக்காக நீ அவனுக்கு தண்டனை தரதா நினைச்சி எனக்கு தண்டனையை கொடுத்துடாத. அவன் இல்லன்னா என்னால இந்த உலகத்துல வாழவே முடியாது. ப்ளீஸ் அவனை பத்திரமா என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடு..' கடவுளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

"டேய் எனக்கு உள்ளமெல்லாம் பதபதைக்குதுடா.. என்னை என் பேரன்கிட்ட கூட்டிட்டு போங்கடா.." பொன்னி தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சொல்ல, அவளை இருக்கையில் சாய்ந்து அமர வைத்த ரகு சமையலறைக்கு சென்று தண்ணீரை கொண்டு வந்தான்.

"தண்ணி குடிங்க பாட்டி.." என்றவன் அவளுக்கு தண்ணீரை குடிப்பித்தான்.

பாட்டி கொஞ்சமாக தண்ணீரை குடித்தாள். தன் நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டே தொலைக்காட்சியை பார்த்தாள்.

இனியனின் எதிரே இருந்தவன் தீக்குச்சி ஒன்றை எடுத்து தீப்பெட்டியின் ஓரத்தில் வைத்து உரசினான். அந்த தீக்குச்சி பற்ற ஆரம்பித்ததுமே அதற்கு மேல் தாங்க இயலாமல் மயங்கி விழுந்து விட்டாள் சந்தியா.

தீக்குச்சி பற்ற ஆரம்பித்த நொடியே சக்திக்கும் மகேஷ்க்கும் இதய துடிப்பே நின்று விட்டது.

"சேன்டிம்மா.." ரகு பொன்னியை விட்டுவிட்டு மயங்கி விழுந்த சந்தியாவை நோக்கி ஓடினான்.

அதே நேரத்தில் யாரோ அலறும் சத்தம் தொலைக்காட்சியில் ஒலித்தது.

Word count 1052

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN