நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் தேவ சுந்தரியின் வீட்டிற்கு வந்த போது நேற்றை விடவும் கூட்டம் அதிகமாக இருந்தது. வாசற்படியிலேயே அமர்ந்திருந்த மேகலை இவனை கண்டதும் தன் கண்களை துடைத்துக் கொண்டு இவனருகே ஓடி வந்தாள்.

"நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு தேங்க்ஸ் ஸார்.." என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"என்னன்னு சொல்லும்மா.." என்றான் இனியன் தயக்கமாக.

தன் இடுப்பில் சொருகியிருந்த செல்போனை எடுத்தவள் அதிலிருந்த மெஸேஜை அவன் பார்க்கும்படி நீட்டினாள்.

அவன் அதிலிருந்த மெஸேஜை படித்தான். "அடுத்த குறி நீதான். தேவ சுந்தரியை விடவும் அதிகமா துடிதுடிச்சி நீ சாக போற.." அதிலிருந்ததை படித்தவன் அதிர்ச்சியோடு மேகலையை பார்த்தான். இது போன்ற மிரட்டல் செய்திகள் இன்னும் சில அதில் இருந்தது.

"இது என் சித்தி நம்பர்தான் ஸார்.. கொலைக்காரன் அவங்க ஃபோனை எடுத்துட்டு போனதை கூட நான் கவனிக்கல.. ஆனா நேத்து நைட் இப்படி ஒரு மெஸேஜ் வரவும் நான் ரொம்ப பயந்துட்டேன் ஸார்.. என்னை எப்படியாவது காப்பாத்துங்க ஸார்.." என்றாள்.

"நம்பர் மூலமா ஃபோன் இருக்கற இடம் கண்டுபிடிச்சி அவனையும் அரெஸ்ட் பண்ணிடுவோம்.. நீங்க எதுக்கும் பயப்படாதிங்க.. எப்படி கொலை நடந்ததுன்னு கொஞ்சம் நீங்க விவரமா சொல்றிங்களா.?" என்றவன் அங்கேயிருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்தான்.

"நேத்தே ஒரு போலிஸ்க்கிட்ட விவரமா சொல்லிட்டேனே ஸார்.?" கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் அவள்.

"ஆனா இந்த கேஸ்க்கு இப்ப நான்தான் இன்சார்ஜ்.. நீங்க சொன்ன தகவல் எனக்கு போதுமானதா இல்ல.. இப்ப நான் கேட்கற கேள்விக்கு யோசனை பண்ணி கரெக்டா பதில் சொல்லுங்க.." என்றான்.

மேகலை அவனை தயக்கமாக பார்த்துக் கொண்டே அவனருகே அமர்ந்தாள்.

"கொலை நடந்தபோது நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க.?"

அவள் உதட்டை கடித்தபடி தரையை பார்த்தாள். "நேத்து பூசாரி வரப்போறதா சித்தி சொன்னாங்க.. பூஜை பொருட்களை வாங்கி வந்து வைக்க சொன்னாங்க.. நானும் எல்லா பொருளையும் வாங்கி வந்து வச்சிட்டேன்.. ஆனா அதுக்கப்புறம் எனக்கு பயங்கர தலைவலி ஸார்.. அதனால என் ரூம்ல ரெஸ்ட் எடுக்க போயிட்டேன்.. அப்படியே தூங்கியும் போயிட்டேன். திடீர்னு எங்க சித்தி கத்துற சத்தம் கேட்டுதான் எழுந்து வெளியே ஓடி வந்தேன். ஹால்ல எங்க சித்தி பிணமா இருந்தாங்க.. நான் ஹாலுக்கு வந்த அதே நேரத்துல பூசாரி வீட்டை விட்டு ஓடிட்டான்.." என்றவள் பொங்கி வரும் அழுகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"அவனை சீக்கிரம் கண்டுபிடிச்சி ஜெயில்ல போடுங்க ஸார்.." என்றாள்.

"இந்த வீட்டுல வேற யாரும் அந்த பூசாரியை பார்க்கலையா.?" என இனியன் கேட்ட அவள் விசித்திரமாக அவனை பார்த்தாள்.

"இந்த வீட்டுல வேற யாரும் இல்ல ஸார்.. நானும் எங்க சித்தியும் மட்டும்தான் குடி இருந்தோம்.." அவள் சொன்னதை ஆச்சரியப்பட்டான் அவன்.

"பெரிய அரசியல் கட்சி தலைவி இவங்க.. உங்க வீட்டுல ஒரு வேலைக்காரங்க கூடவா இல்ல.?" ஆச்சரியத்தோடு கேட்டான் இனியன்.

"எங்க சித்தி தனிமை விரும்பி சார்.. அதனால வேலைக்காரங்க கூட இல்ல.. எல்லா வேலையும் நான்தான் பார்ப்பேன்.. என்னோட ஒரே துணையும் அவங்கதான்.. இப்ப அவங்களும் இல்ல.." என்றவள் கண்ணோரம் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.

அவள் அழுவது கண்டு அவனுக்கு மனம் வருந்தியது. "அழாதிங்க.." என்றான்.

"எங்க சித்தி பசங்க அவங்களுக்கு லீவ் கிடைக்கலன்னும் அதனால எங்க சித்தியோட இறுதி சடங்குல கூட அவங்களால கலந்துக்க முடியாதுன்னும் சொல்லிட்டாங்க.."
அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென இனியனுக்கு தெரியவில்லை.

அதே நேரத்தில் போஸ்ட் மார்டம் முடித்த தேவ சுந்தரியின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதை கண்டதும் மேகலை ஓவென அழுதபடி பிணத்தருகே ஓடினாள். இனியன் பெருமூச்சோடு எழுந்து நின்றான்.

தனது ஃபோனை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைத்தான். "ஹலோ சார்.. தேவ சுந்தரியோட ஃபோன் இப்ப எங்கே இருக்குன்னு தெரியணும்.. நம்பர் சொல்றேன்.. அதை ட்ரேஸ் பண்ணி சொல்றிங்களா.?" என்றான்.

"சொல்லுங்க சார்.." என எதிர் முனையில் பதில் வந்ததும் தேவ சுந்தரி ஃபோன் நம்பரை சொன்னான் இனியன்.

சில நிமிட அமைதிக்கு பின்னர் எதிர்முனையில் சலசலப்பு கேட்டது. "சார்.. இந்த நம்பர்ல இருந்து ஒரு மெஸேஜ் மட்டும் இன்னைக்கு போயிருக்கு சார்.. அதுவும் தேவ சுந்தரி வீட்டுல இருந்துதான் சிக்னல் காட்டுது.. இப்ப ஃபோன் டெத் சார்.. மறுபடியும் ஆன் பண்ணாதான் இடம் தெரியும்.."

"சரிங்க சார்.. ஃபோன் எங்கே இருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு தகவல் சொல்லுங்க சார்.." என்றவன் தன் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

இந்த கொலையின் மூளைக்காரன் அந்த கூட்டத்தில்தான் இருக்கிறான் என்பது இனியனுக்கு புரிந்து போனது. அவனை எப்படி கண்டுபிடிப்பது என்ற யோசனையோடு கூட்டத்தை பார்த்தான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தேவ சுந்தரிக்கு இறுதி சடங்குகள் நடைப்பெற்றது. ஊரிலிருந்து வந்திருந்த பெரியவர்கள் சிலர் யாரோ ஒரு இளைஞனை முன் நிறுத்தி அனைத்து காரியத்தையும் செய்தனர்.

கட்சி தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு தேவ சுந்தரி பிணத்திற்கு மாலை அணிவித்தனர். பெண்கள் பலரும் ஒப்பாரி பாடிக் கொண்டிருந்தனர்.

சந்தேகப்படும்படி யாராவது மேகலையை நெருங்குகிறார்களா என கவனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்‌.

அவனது கவனத்தை கலைக்கும் விதமாக அவனது ஃபோன் ஒலித்தது. சந்தியாதான் அழைத்திருந்தாள்.

"சொல்லு சந்தியா.. ஏதாவது முக்கியமான விசயமா.?" மேகலையின் மீது இருந்து பார்வையை விலக்கி கொள்ளாமல் கேட்டான்.

"சாப்பிட்டியா இனியா.?" அக்கறையோடு கேட்டாள் சந்தியா.

அவள் இப்படி கேட்டதும் அவனுக்கு பசியின் நினைவு வந்தது. இன்னும் மதிய உணவு உண்ணவில்லை அவன்‌. அவளின் குரலில் இருந்த கனிவு வயிற்று பசியை அதிகப்படுத்தியது. மேகலையை விட்டு போக முடியாத சூழலால் அவன் இப்போதைக்கு சாப்பிட முடியாது.

"சாப்பிட்டேன் சந்தியா.. நீ சாப்பிட்டியா.?" என்றான்.

"ம். சாப்பிட்டேன் இனியா.. பத்திரமா இரு.." என்றாள் தயக்கத்தோடு அவள்.

'என்ன வாழ்க்கைடா இது.? விலகி இருக்கற வரை நல்லவளா இருக்கா.. நெருங்கினா தள்ளி போடான்னு சொல்லி எதிரியாகுறா.. நிலவை ஏக்கத்தோடு பார்க்கற சின்ன புள்ளையை விட அதிக கஷ்டத்தை அனுப்பவிக்கிறேன் நான்..'

"சரி சந்தியா.. எனக்கு வேலை இருக்கு.. அப்புறம் பேசுறேன்.." என்றவன் ஃபோனின் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

தொண்டர்கள் படை சூழ சொந்தங்களின் கண்ணீரோடு தேவ சுந்தரி இறுதி பயணத்தை தொடங்கினாள். அவளின் உடலை எரிவூட்டி விட்டு திரும்பியபோது அந்த வீட்டின் வாசலிலேயே இனியனுக்காக காத்திருந்தான் தேவன்.

"ஸார்.. காளியை பிடிச்சாச்சி.." என்றான் அவன் அருகே வந்தவுடன்.

"சூப்பர் தேவன்.. உங்களோட திறமையை நான் கூட சாதாரணமா நினைச்சிட்டேன்.. நீங்க ஒரு சிறந்த வீரர்ன்னு நிருப்பிச்சிட்டிங்க.." என இனியன் சொல்ல அவன் வெட்கத்தில் சிவந்த முகத்தோடு இனியனை பார்த்தான்.

"நான் பிடிக்கல சார்.. உங்க அப்பாதான் பிடிச்சி கொண்டு வந்து ஒப்படைச்சாரு.."

"ஓ.." என்ற இனியன் உதட்டை கடித்தபடி வானம் பார்த்தான்.

"காளி உயிரோடு இருக்கானா..?" என்றான் சந்தேகத்தோடு.

"உயிர் மட்டும்தான் இருக்கு சார்.. ஹாஸ்பிட்டல்ல மயக்கமா இருக்கான்.."

இனியனுக்கு சிரிப்பு வரும் போல இருந்தது. ஆனால் தேவன் முன் சிரித்து வைத்தால் பைத்தியமென நினைப்பானோ என நினைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்த மொத்த கூட்டமும் கலைந்து போனது.

"இனி இங்கே நமக்கு வேலை ஏதும் இல்ல சார்.. நாம கிளம்பலாம்.." என்ற தேவன் அங்கிருந்து கிளம்ப அவனை கை பிடித்து நிறுத்தினான் இனியன்.

தேவனை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குள் சென்றான்.

ஓரிரு சொந்தங்கள் மட்டும் அந்த வீட்டில் இருந்தது.

"இனி இந்த வீட்டுல நீ இருக்க வேணாம்.. உன் ஊருக்கே கிளம்பு.." மேகலையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி.

"நான் எங்கே பாட்டி போவேன்.? எனக்கு ஊருல யாருமே இல்ல.." மேகலை கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள்.

மேகலையிடம் வெள்ளை வேட்டி பெரியவர் ஒருவர் நெருங்கினார். "தேவ சுந்தரிக்கு நீ வாரிசு கிடையாது மேகலை.. அவளோட புகுந்த வீட்டு ஆளுங்க நாங்க இத்தனை பேர் இருக்கும்போது ரத்த சம்பந்தம் இல்லாத உனக்கு இந்த வீட்டுல வாரிசு உரிமை கிடைக்காது.. புரிஞ்சிக்க.." என்றார்.

"என்னங்க சொல்றிங்க நீங்க.? நான் எப்ப வாரிசு உரிமை கேட்டேன்.? எங்க சித்திக்கு நீங்க இத்தனை பேர் புகுந்த வீட்டு சைட்ல இருந்தாலும் இத்தனை நாளுல ஒரு ஆள் வந்து பார்த்திருப்பிங்களா.?" அழுகையோடு கேட்டாள் அவள்.

"உன் அழுகையையும் சீனையும் நிறுத்து மேகலை.. தேவ சுந்தரியோட பெரிய பையன் லைன்ல இருக்கான். நீயே பேசு.." என்று ஃபோனை நீட்டினார் ஒரு மொட்டை மனிதர்.

"அண்ணா இங்கே என்னதான் நடக்குது.?" சிறு கோபத்தோடு கேட்டாள் மேகலை.

"மேகா நான் இந்த சொத்து எல்லாத்தையும் விக்க போறேன். அதுக்கு என் பெரியப்பாதான் உதவியா இருக்க போறாரு.. கொலை நடந்த வீட்டுல நீ இருக்கறதும் நல்லது இல்ல.. நீ ஊருக்கே கிளம்பு.."

"ஆளாளும் ஊருக்கு கிளம்புன்னு சொன்னா நான் என்ன செய்வேன்.? ஊருல எனக்கு யாரும் கிடையாது அண்ணா.. சித்தி இல்லன்னா நான் அனாதை‌.."

"அதேதான். நீ இப்ப அனாதை.. புரிஞ்சிக்கிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பு.." என்றவன் ஃபோனை துண்டித்துக் கொள்ள அவள் கண்ணீரோடு ஃபோனை வெறித்தாள்.

அவள் கையிலிருந்த ஃபோனை பிடுங்கி கொண்டார் மொட்டை மனிதர்.

மேகலை சுவற்றில் மாலை போட்டு போட்டோவாக இருந்த தேவ சுந்தரியை பார்த்தாள்.

"என் லைஃப் எந்த அளவுக்கு பலவீனமா இருந்திருக்கு.? ஒத்தை ஆள் போன உடனே என் மொத்த வாழ்க்கையும் முடிஞ்சி போச்சி.." என்றவள் தனது ஃபோனை இறுக்கி பிடித்தபடி வெளியே நடந்தாள்.

தேவன் இனியனின் தோளை பிடித்து உலுக்கினான். "என்ன சார் நடக்குது இங்கே.? பத்தே நிமிசத்துல ஒரு பொண்ணை அனாதையாக்கி தொரத்தி விட்டுட்டாங்க.." என அதிர்ச்சியோடு அவன் சொல்ல இனியன் கேட்டை தாண்டி போய் கொண்டிருந்த மேகலையை நோக்கி ஓடினான்.

இருளில் தன்னை தொலைக்கும் வழி தெரியாமல் நடந்துக் கொண்டிருந்தவளின் கையை பற்றி நிறுத்தினான். "எங்கே போறிங்க.? உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு.." என்றான்.

மேகலை முகத்தை துடைத்துக் கொண்டு அந்த வீட்டை திரும்பி பார்த்தாள். "இந்த வீட்டை விட பெரிய ஆபத்து ஏதும் இருக்காது சார்.. கொலைக்காரன் கூட சுலபமா கொன்னுடுவான்.
ஆனா இவங்களை எதிர்த்திட்டு இங்கேயிருந்தா இவங்க கொஞ்சம் கொஞ்சமாக பேசியே கொன்னுடுவாங்க.. என்னால இவங்களை எதிர்க்கற அளவுக்கு தைரியம் ஏதும் இல்ல சார்.‌." என்றவளை அங்கு வந்த தேவன் பரிதாபத்தோடு பார்த்தான்.

"எங்கே போறிங்கன்னு சொன்னா மறுபடியும் ஏதாவது டீடெயில்ஸ் தேவைப்பட்டா வந்து கேட்டுப்போம்.." என்றான் தேவன் கடமையே கண்ணாக.

"எனக்கு எங்கே போறதுன்னு தெரியல சார்.. எனக்கு இந்த வீட்டை விட்டா வேற எங்கேயும் நிற்க நிழல் கூட கிடையாது.. தேவ சுந்தரி அம்மாவை விட்டா சொந்தம்ன்னு சொல்லிக்க ஒரு நாய் பேய் கூட கிடையாது.." அவள் சொல்ல சொல்ல அவள் மீது இனியனுக்கு பரிதாபம் அதிகமாகி கொண்டே இருந்தது.

"நீங்க ஹாஸ்டல்ல தங்ககிக்க நான் ஏதாவது ஏற்பாடு செய்யட்டா..?" தேவன் நல்ல மனிதனாக கேட்டான்.

"இல்ல தேவன்.. யாரோ இவங்களுக்கு கொலை மிரட்டல் விட்டிருக்காங்க.. இவங்க ஹாஸ்டல் சேர்ந்தா அது அவனுக்கு ஈஸியா ஆகிடும்.."

"ஆனா காளியைதான் பிடிச்சாச்சே சார்.."

இனியன் தலையை இடம் வலமாக ஆட்டினான். "காளிக்கு பின்னணி யாருன்னு தெரியும் வரை இந்த பொண்ணை நாமதான் பத்திரமா பார்த்துக்கணும்.."

"ஓ.. ஓகே சார்.. நம்ம ஸ்டேசன் கூட்டிட்டு போயிடலாம் சார்‌.. நம்ம லாக்அப்பை விட பத்திரமான இடம் எங்கேயும் இருக்காது.. ஒரு பெட்ஷீட்டும் கொசுவர்த்தியும் நான் போய் வாங்கிட்டு வரேன்.." என தேவன் கிளம்ப அவனை கை பிடித்து நிறுத்தினான் தேவன்.

"உங்க மூளைக்கு அவார்ட் தரணும் தேவன்.. எந்த தப்பும் செய்யாத பொண்ணை லாக்அப்ல வச்சா என்னாகும் தெரியுமா.? போலிஸ் அநியாயம் ஒழிகன்னு பதாகை ஏந்திய மனுசங்க ஊர்வலம் போவாங்க.. பத்திரிக்கையோட முதல் பக்கத்துல நம்ம இரண்டு பேர் போட்டோவும் கலர் போட்டு இதுதான் காவல்துறையான்னு கேட்பாங்க.." என்றவன் மேகலை பக்கம் திரும்பினான்.

"உங்களுக்கு ஓகேன்னா எங்க வீட்டுல வந்து தங்கிக்கிறிங்களா.? எங்க வீட்டுல ஒரு லேடி போலிஸ் உண்டு. உங்களுக்கு காவலா இருப்பாங்க.." என இனியன் சொல்ல அவனை ஓரடி பின்னால் இழுத்தான் தேவன்.

"சார் நீங்க இந்த பொண்ணை கரெக்ட் பண்ண பார்க்கறிங்களா.?" என்றான் அதிர்ச்சியோடு. இனியனும் அதே அதிர்ச்சியோடு அவனை திரும்பி பார்த்தான்.

"ஏன்ய்யா உனக்கு இப்படி புத்தி போகுது.? ஏற்கனவே ஏன்டா ஒருத்தியை கட்டினேன்னு அழறேன்.. அதுவுமில்லாம இந்த பொண்ணை பார்த்தா எனக்கு பாவமா இருக்குய்யா.."

"நல்லா சமாளிக்கறிங்க சார்.." என தேவன் முனகினான்.

சந்தியா வீட்டின் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தாள். இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. இனியனுக்கு வேலை முடிந்து வெகு நேரம் ஆகியிருக்கும் என்பதை அறிவாள் இவள். இனியனுக்கு இரண்டு மூன்று முறை போன் செய்து பார்த்தாள். அவன் போனை எடுக்கவேயில்லை.

"சந்தியா இங்கே கொஞ்சம் வா.." உள்ளிருந்து மகேஷின் குரல் ஒலித்தது. வீட்டிற்கு செல்லலாம் என திரும்பியவள் இனியனின் பைக் வரும் சத்தம் கேட்டதும் ஆவலோடு அங்கேயே நின்று திரும்பி பார்த்தாள்.

இனியன் பைக்கை சந்தியாவின் அருகே நிறுத்தினான்.

"இனியா.. ஏன் லேட்‌..?" என கேட்டவள் அதன் பிறகே அந்த பைக்கிலிருந்து கீழே இறங்கிய கன்னியை கண்டாள்.

Word count 1360

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN