நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தியும் மகேஷும் மேகலையை நோட்டமிட்டனர்.‌ அவள் தரையை மட்டுமே பார்த்தபடி இருந்தாள்.

"ஏற்கனவே கல்யாணம் ஆனவர் ஒரு வயசு பொண்ணை வீட்டுக்கு கூட்டி வந்தா இது சரியா வருமா.?" என்றான் ரகு. அவனுக்கு சந்தியாவின் வாழ்க்கை மீது அதிக அக்கறை இருந்தது
ரகுவை முறைப்போடு பார்த்தான் இனியன்.

"நீங்க தங்க எத்தனையோ இடம் இருந்தாலும் இங்கே ஏன் தங்கியிருக்கிங்க.? கல்யாணமான ஒரு பொண்ணு இருக்கற வீட்டுல ஒரு வயசு பையன் தங்கலாமா..?" என்றான்.

அவனது ஒற்றை கேள்வி அங்கிருந்த மொத்த பேரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. ரகு முகம் கறுத்து விட்டது. சந்தியா கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித்து விட்டது. ரகுவை நேர் கொண்டு பார்க்க கூட அவளால் முடியவில்லை. தரை பார்த்து நின்றவளின் கண்களில் கண்ணீர் சிந்தியது.

"டேய்.. பைத்தியமாடா நீ.? ரகுகிட்ட மன்னிப்பு கேளுடா.." என்றாள் சக்தி.

"இந்த வார்த்தை அவருக்கு வலிச்ச மாதிரிதான்ம்மா ரகுவோட கேள்விகள் என்னையும் கஷ்டப்படுத்தி இருக்கும்.. அத்தனை போலிஸ்கிட்டயும் தேவ சுந்தரி கேஸை தரல.. எனக்குதான் தந்தாங்க. நான் அந்த கொலைக்கான பிண்ணனியில் இருப்பவனை கண்டு பிடிக்கணும். அவனோட அடுத்த குறி இந்த பொண்ணுதான்.. இந்த பொண்ணுக்கு கொலை மிரட்டல் இருக்குன்னு தெரிஞ்சும் நான் எப்படி அசால்டா இவங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டு வர முடியும்..?" என்றவன் ரகுவின் அருகே வந்தான்.

"இந்த பொண்ணோட வீட்டுல நடந்ததை உங்ககிட்ட தெளிவாதான் சொன்னேன்.. ஒரு நாளுல நீங்க எப்படி அனாதை ஆனிங்களோ அதே போலதான் இந்த பொண்ணும் ஒரே நாளுல அனாதை ஆகிட்டா.. உங்களுக்காகவது லவ்வர், பிரெண்ட், பிரெண்ட் குடும்பம்ன்னு இருக்கு.. ஆனா இவங்களுக்கு அப்படி யாருமே கிடையாது.. அப்பா அம்மா பாட்டி தாத்தா இத்தனை பேர் இருக்கற வீட்டுக்கு இந்த பெண்ணை கூட்டி வரது தப்புன்னு எனக்கு தோணல.. அதனால்தான் கூட்டி வந்தேன்.. இந்த பொண்ணை நான் இங்கே கூட்டி வந்தது தப்பா இருந்தா அதை என் பொண்டாட்டி மட்டும் சொல்லட்டும்.." என்றவன் சந்தியா பக்கம் பார்த்தான்.

"இந்த பொண்ணு வீட்டுல தங்கறதுல உனக்கு ஏதும் பிரச்சனையா சந்தியா.?" என்று கேட்டான் அவன்.

அவன் தனது வேலை சம்பந்தமாக அவளை அங்கு அழைத்து வந்திருக்கும் போது அதற்கு தடை சொல்வது தவறென்றே சந்தியாவுக்கு தோன்றியது. இல்லை என தலையை ஆட்டினாள் தரையை பார்த்தபடியே.

"எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லு சந்தியா.." அவனது வழக்கமான அதட்டல் இன்று வார்த்தைகளில் வந்து விட்டது.

அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். "எ.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.." என்றாள்.
மற்ற அனைவரையும் பார்த்தான் இனியன். "பிரச்சனை முடிஞ்சது.. அவ்வளவுதான்.. இனி புதுசா எந்த கேள்வியும் கேட்காதிங்க.." என்றவன் சந்தியாவை பார்த்தான்.

"இந்த பொண்ணுக்கு கெஸ்ட் ரூமை காட்டு.. அப்படியே சாப்பாடு எடுத்து வை.. பசிக்குது.." என்றவன் தனது அறையை நோக்கி நடந்தான்.

சந்தியா மேகலையின் அருகே வந்தாள். "ஒரு நிமிஷம்.. ப்ளீஸ்.." என்றவள் ரகுவின் அருகே ஓடி வந்தாள்.

ரகுவின் கையை பற்றியவள் "சாரி ரகு.. அவன் சொன்னது எதையும் மனசுல வச்சிக்காத.. ப்ளீஸ்.. இனியனுக்கு அவனோட வேலை எவ்வளவு முக்கியம்ன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும்.. அவன் வேலை டென்சன்ல ஏதோ அப்படி பேசிட்டான்.. அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன்.." என்றாள். அவளது குரல் கரகரத்து போயிருந்தது.

சக்தி அவர்கள் இருவரையும் ஆதுரத்தோடு பார்க்க அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் மகேஷ்.

"சின்ன பசங்க விளையாட்டுல நாமதான் குறுக்க போகாம இருந்துக்கணும்.." என்றான்.
சக்தி புரிந்தவளாக தலையசைத்தாள்.

ரகு அவளது கன்னத்தை கிள்ளினான். "இதையெல்லாம் யாராவது பெருசா எடுத்துப்பாங்களா.? இனியனை பத்தி எனக்கும் நல்லா தெரியும்.. நாம சீண்டாத வரை அவரும் நம்மள சீண்ட மாட்டாரு.. நான்தான் தேவையில்லாம வார்த்தையை விட்டுட்டேன் போல.. அவரை பார்த்து சாரி கேட்டுக்கிறேன் விடு.. நீ இது எதையும் நினைச்சி குழப்பிக்காத.." என்றான்.

தனது அறைக்கு சென்ற இனியன் பாதியிலேயே திரும்பி வந்தான். ரகுவிடம் அப்படி பேசியது தவறோ என அவன் மனம் பரிதவித்தது. மனம் கேட்காமல் திரும்பி வந்தவன் சந்தியாவும் ரகுவும் பேசிக் கொண்டிருந்ததை கண்டு மனம் நெகிழ்ந்தான்.

ரகுவின் அருகே வந்தவன் "நீ ஓவர் நைட்டுல ஹீரோவாக டிரை பண்ணாத.. தப்பு என் மேலதான்.. இன்னும் கொஞ்சம் சொல்லி புரியவைக்காம எடுத்த உடனே வார்த்தையை விட்டது நான்தான்.. தப்பெல்லாம் என் மேலதான்.. சாரி.." என்றான்.

ரகு புரிந்துக் கொண்டவனாக தலையை அசைத்தான். அவனது தோளில் தட்டி தந்துவிட்டு அறைக்கு திரும்பினான் இனியன்.

சந்தியா இனியனின் முதுகை பார்த்துக் கொண்டிருக்க அவளின் முன்னால் தனது கையை ஆட்டினான் ரகு.

"கனவு உலகத்துல இருந்து வெளியே வாங்க மேடம்.. உங்க ஆளு அவர்தான் ஹீரோன்னு ப்ரூப் பண்ணிட்டு போறாராம்.." என்றான்.

அவனை பார்த்து பல்லை காட்டினாள் சந்தியா. "அவங்க ரொம்ப நேரமா நிக்கறாங்க.. நான் அவங்களுக்கு ரூம் காட்டிட்டு வரேன் இரு.." என்றவள் மேகலையின் அருகே வந்து அவளின் கை பிடித்து கெஸ்ட் ரூம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள்.

"இந்த ரூம்ல நீங்க தங்கிக்கோங்க.. உங்களுக்கு ஏதாவது வேணும்ன்னா என்னை கேளுங்க.. ஒரு அஞ்சி நிமிசம் கழிச்சு டைனிங் ரூமுக்கு வாங்க.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்றவள் திரும்பி நடந்தாள்.

"மேடம்.." என்றாள் மேகலை.

திரும்பி பார்த்தாள் சந்தியா.

"ரொம்ப தேங்க்ஸ்.." என்றாள். சந்தியா சிறு புன்னகையோடு திரும்பி வந்தாள். அவளது கை மீது தன் கையை வைத்தாள்.

"உங்களோட இழப்பு திரும்பி வராத ஒன்னுதான்.. ஆனா போனதையே நினைச்சிட்டு இல்லாம இனி நடக்க போறதை நினைங்க.. நாங்க எல்லோரும் உங்களுக்கு துணையா உண்டு.. நீங்க எதுக்கும் கவலைபடாதிங்க.. என் புருசன் சீக்கிரமாவே கொலைக்காரனை பிடிச்சிடுவாரு.." என்றாள். அவள் என் புருசன் என்றதில் அழுத்தம் அதிகமாகவே இருந்தது.

"தேங்க்ஸ்.." என்றாள் மேகலை மீண்டும். "என் பேர் மேகலை.. நீங்க மேகான்னே கூப்பிடுங்க.." என்றாள்.

"நான் சந்தியா.. நீங்களும் என் பேரை சொல்லியே கூப்பிடுங்க.." என்றாள்.

இனியன் தனது போனுக்கு சார்ஜரை போட்டு விட்டு வெளியே வந்தான்.

சந்தியா இரண்டு தட்டுகளில் சுட சுட உணவை பரிமாறினாள்.

"அம்மா நீ சாப்பிட வரலையா.?" என்றான் இனியன் நாற்காலியில் அமர்ந்தபடியே.

"அவங்க எல்லோரும் சாப்பிட்டுடாங்க.." என்ற சந்தியா அங்கு வந்தமர்ந்த மேகலையின் முன்னால் தட்டை நகர்த்தி வைத்தாள்.

இனியன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சந்தியாவை பார்த்தான். "பாட்டி எங்கே.?"
சந்தியா கால் பெருவிரலால் தரையை தேய்த்தாள்.

"தாத்தா இன்னும் இரண்டு வாரத்துல ரிலீஸ் ஆக போறாரு.. அப்புறம் பாட்டியால வெளியே அதிகம் சுத்த முடியாதாம்.. அதனால இப்பவே கோவில் கோவிலா சுத்த போயிருக்காங்க.."

"இந்த வயசான காலத்துல தனியா ஏன் போனாங்க..?" பாட்டி மீது உள்ள பாசத்தில் கேட்டான் இனியன்.

"தனியா போயிருக்காங்க.. ஆனா தனியா சுத்த மாட்டாங்க.. ஏற்கனவே கோவில்களை சுத்திட்டு இருந்த சுந்தரம் தாத்தா இப்ப பழனியில இருக்காராம்.. பாட்டியும் அங்கே போன பிறகு இரண்டு பேரும் சேர்ந்து திருப்பதி போறாங்க.. அப்புறம் அப்படியே கோவிலா கோவிலா சுத்த போறோங்க.." என்றவள் அவனது தட்டில் குழம்பையும் பொரியலையும் வைத்தாள்.

மேகலைக்கு தயக்கத்தோடு பரிமாறியவள் "சாரி இது நான் செஞ்ச சமையல்.. அவ்வளவா டேஸ்ட் இருக்காது.. நீங்க வரிங்கன்னு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா மல்லியக்காகிட்ட சேர்த்து சமைக்க சொல்லி இருப்பேன்.." என்றாள்.

"பரவாலைங்க.. எனக்கு இந்த சாப்பாடே ஓகே.." என்ற மேகலை ஒரு வாய் உண்டு விட்டு உதட்டை கடித்தாள்.

வழக்கம் போல் சமையலின் ருசி தலைகீழ்தான். அடுத்த வாய் அள்ளி சாப்பிட அவளால் முடியவில்லை. எதிரில் அமர்ந்து சாப்பிட்ட இனியனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். மனைவி சமையலுக்காக தவம் கிடப்பவனுக்கு அவள் சமைப்பது அமிர்தம்தானே.? ரசித்து ருசித்து அவன் சாப்பிட்ட அந்த நொடியில் அவன் மீது பெரும் மதிப்பு கொண்டு விட்டாள் மேகலை.

இனியன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு மேகலையை‌ பார்த்தான். அவள் அவனது பார்வையை உணர்ந்து சட்டென தலை குனிந்து சாப்பிட தொடங்கினாள்.

"நீ சாப்பிட்டியா சந்தியா.?" என்றான் மனைவியை பார்த்து.

"சாயங்காலத்துல இருந்து உனக்காக வாசல்லயே தவம் கிடந்தா.. அதனால அவ இன்னும் சாப்பிடல.." என்று குரல் தந்தாள் சக்தி.

"உட்கார்ந்து நீயும் சாப்பிடு.." என்றான் இனியன். அவள் அமைதியாக தரை பார்த்தாள்.
உணவு இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தான். அனைத்தும் காலியாக இருந்தது.

சந்தியா தரை பார்த்து நின்றுக் கொண்டிருக்கும் போதே சட்டென சாப்பிட்டு விட்டு எழுந்து நின்றான். அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள் மேகலை. அவளை விட்டால் இன்னும் நான்கு மணி நேரத்திற்கு அந்த உணவில் கோலம் போடுவாள். ஏனெனில் அந்த அளவிற்கு இருந்தது அந்த உணவின் ருசி. இவன் எப்படி இவ்வளவு வேகமாக இந்த உணவை சாப்பிட்டான் என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தவள் அவன் கிச்சனுக்குள் புகுந்து அடுப்பை பற்ற வைத்ததும் அவனை கண்டு மனதுக்குள்ளேயே விசிலடித்தாள்.

"இனியா எனக்கு பசிக்கல.." என்று சிறு குரலில் சிணுங்கினாள் சந்தியா.

அவன் சட்டென அவனது கையை அவளது வயிற்றில் வைத்து பார்த்தான். சந்தியா மூச்சி விட மறந்து விட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடியது அவளுக்கு.

"வயிறு காலியா இருக்கு.. இரு நான் உனக்கு உப்மா செஞ்சி தரேன்.." என்றவன் ரவையை தேடி எடுத்தான்.

"உப்மாவா.?" சந்தியா குரலில் இருந்த ஏமாற்றம் கண்டு சிரித்தான் அவன்.

"நான் செய்ற உப்மா ருசியில் பிரியாணி தோத்துடும்.." என்றவன் பத்து நிமிடத்தில் ஆவி பறக்கும் உப்மாவை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.

சந்தியாவை அமர வைத்து உப்மாவையும் பரிமாறினான். எதிரில் அமர்ந்திருந்த மேகலை உப்மாவின் வாசனையில் நாக்கில் எச்சில் ஊறியபடி அமர்ந்திருந்தாள். அவளது பார்வையிலேயே அவள் எந்த அளவிற்கு உப்மா மீது காதல் கொண்டு விட்டாள் என்பதை சந்தியாவும் புரிந்து கொண்டாள்.

"அதை வச்சிட்டு உப்மா சாப்பிடுங்க.." என்றவள் இனியன் கையில் இருந்த கரண்டியை வாங்கி அவளுக்கும் உப்மாவை பரிமாறினாள்.

இனியன் சமையலை சொல்லவா வேண்டும்.? சுவை அள்ளியது. சந்தியாவின் அருகே அமர்ந்து கன்னத்தில் கை வைத்தபடி அவள் சாப்பிடுவதையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்.

"உப்மா எப்படி.?" என்றான்.

"சூப்பர்.." என்றவளுக்கு அவனது பார்வையை கண்டே கன்னம் சிவந்து போனது.

"சூப்பர்ன்னு நீ சொன்னா எப்படி நம்புறது.? நான்தான் அதை சொல்லணும்.." என்றபடி அவளருகே வந்த ரகு சந்தியா தட்டில் இருந்த உப்மாவை எடுத்து சாப்பிட்டு விட்டு தன்னை மறந்து உச்சு கொட்டினான்.

"நீங்க மட்டும் பொண்ணா இருந்திருந்தா.." அவன் பாதி சொல்லும்போதே குறுக்கிட்டாள் சந்தியா.

"நீ இவரையே கல்யாணம் பண்ணி இருப்ப.. சரியா.?" என்றாள்.

தனது உளறலை நினைத்து அவன் முகம் சிவக்க இனியன் விசிலடித்தான்.

"நீங்களும் பொண்ணா இருந்திருந்தா நானும் உங்களையே கட்டியிருப்பேன்.. என்னம்மா வெட்கப்படுறிங்க.?" என்றான் இனியன்.

இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த சந்தியாவுக்குதான் அவர்களது கொஞ்சல் கண்டு புல்லரித்தது.

அவர்களது கொஞ்சலை பார்த்தபடியே உப்மாவை சாப்பிட்ட மேகலை அந்த உணவின் ருசிக்கு விழுந்து விட்டாள்.

ஒரு ஆண் மகனால் இப்படி கூட சுவையாக சமைக்க முடியுமா என ஆச்சரியப்பட்டாள்.
அவனது ஒவ்வொரு செய்கைக்கும் தன்னை அறியாமலேயே அவள் அவன் மீது நேசம் கொண்டதை அந்த நொடியில் அவள் உணரவேயில்லை.

Word count 1124

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN