என் நெஞ்சுநேர்பவளே -14

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
AKN-14

நீல பட்டுடுத்தி, தலை நிறைய பூச்சூடி, கழுத்தாரமும் காதணிகளும் கவி பாடிட, எழில் முகம் தனை திருத்தி அழகாய் ஆரதியை அந்நிகழ்விற்கு தயார் செய்ய, பொம்மை கல்யாணத்தில் அமர்ந்திருக்கும் பொம்மையாய் யாதொரு விருப்பமும் இன்றி அமர்ந்திருந்தாள்...

சுற்றி இருக்கும் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் விருப்பம் துளி கூட இல்லை.. கடனாய் அனைவர் மீதும் பார்வையை பதித்து வைத்தாலும் எள்ளளவும் யார் முகமும் பதிய வில்லை..

அலங்காரப் பந்தலின் கீழ் பலி குடுக்கப் போகும் ஆட்டின் நிலையில் அமர்ந்திருந்தாள்... அதுவும் இவள் சம்மதத்துடன் நடக்கும் இந்த பலி போடும் சம்பவம்.. தன் அருகில் அமர்ந்திருப்பவன் யார் என்று கூட தெரியாது.. அவன் முகம் கூட பார்த்ததில்லை..

அவன் அண்ணன் தங்கை அப்பா அம்மா எல்லோரிடமும் என்னதான் பேசி இருந்தாலும் அவர்கள் முகம் கூட பதியவில்லை.. அவள் மனம் முழுவதும் ஆதி மட்டுமே நிறைந்திருந்தான்.. இந்த ஒரு மாதத்தில் அவன் நினைவுகளிலே சிக்கி சிதைந்து வாடி வற்றி போயிருந்தாள்..

ஆனாலும் ஒரு வீராப்பு.. தன் மனதில் அவன் இல்லை என்று காட்டிடும் வேகம்.. தன் கல்யாண பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு அவன் முன் சென்றாள்...

"வாங்க ரதி மேடம்... எப்படி இருக்கீங்க.. "துள்ளலாய் வந்தது அவன் வார்த்தைகள்..

"நான் ரொம்ம்ப நல்லா இருக்கேன் சார்... "என்றாள் மனதின் வேதனை மறைத்து...

"சூப்பர்... சரி என்ன விஷயம்.. என்னை பார்க்க வந்துருக்கீங்க.. "

"இதோ இதுக்கு தான்... " என்று கல்யாண பத்திரிக்கையை அவனிடம் நீட்டினாள்.. அவன் கொஞ்சமும் அசராமல் அதை வாங்கி படித்து பார்த்தவன்,

"வெரி குட்... கங்கிராட்ஸ்... கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து மொய் வச்சு சாப்பிட்டு தான் போவேன்.. "என்று சொல்ல, சட்டென கண்கள் கலங்கித் தான் போனது இவளுக்கு...

அதை கண்டுகொண்ட ஆதி 'சாரிடி ஆருகுட்டி.... 'என்று மனத்திற்குள்ளாய் சொல்லிக் கொண்டான்...

"உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சார் வரேன்.... "என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டாள்...

அதன் பிறகு அவன் மீதான நம்பிக்கை சுத்தமாய் உடைந்து போயிருந்தது.. தன் வீட்டினருக்காக இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டாள்..

ஆனால் மாப்பிள்ளையை பற்றிய எந்த ஒரு விவரமும் தெரியாது.. அவனை இப்பொழுது வரை பார்க்கவும் இல்லை.. பேசவும் இல்லை.. அவனும் அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை..

அதைப் பற்றி யோசிக்க வேண்டியவளோ தன் நிலையிலேயே உழன்றதில் வேற எதிலுமே கவனத்தில் கொள்ளவில்லை.. நேற்று இரவு நடந்த நிச்சயத்திலுமே கூட அவள் மாப்பிள்ளையை பார்க்கவே இல்லை.

அவன் கைப்பற்றி கடனே என்று மோதிரத்தை போட்டு விட்டவள் மறந்தும் நிமிர வில்லை.. மற்றவர்களுக்கு ஒரு வழியில் அது வெக்கமாக தோன்றியும் இருக்கலாம்.. அல்லாது இவர்களுடன் நடந்த விதுரன் சுரபி நிச்சயத்தில் கவனம் வைத்ததாலும் இருக்கலாம்..

எது எப்படியோ இவள் மன நிலையை யாரும் உணரவில்லை அல்லது உணர்ந்ததை காட்டிக்கொள்ளவில்லை.. அப்படி இருந்தால் அதன் காரணத்தையும் நாள்போக்கில் தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் இப்போது வரைக்கும் அனைத்தும் மூடு மந்திரம் தான்..

இதற்கு இடையில் ரஞ்சியின் பின்னாலேயே ஒருத்தன் தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருந்தான்.. காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான்...

"டி அபிகுட்டி... இப்படி சுத்தல்ல விடுறியே நியாயமா... "

"இங்க பாரு.. இப்படி டி குட்டின்னு கொஞ்சிட்டு இருந்தேன்... நானே இதுக்குன்னு வேலை மெனக்கெட்டு பருப்பு வடை செஞ்சு, அதை உன் தலையில் போட்டு கொன்றுவேன்.. "

'இதென்னடா புது வித கொலையா இருக்கு...பருப்புக்கே இப்படின்னா நாளைக்கு இவ வைக்கிற சாம்பார் சாப்பிட்டு சாம்பல் ஆகிடுவோம் போலயே.. ஒவ்வொரு தடவை ரசம் சாப்பிடும் போதெல்லாம் வெசத்தை முழுங்கற மாதிரி இருக்குமோ.. அய்யகோ டெய்லியும் மூணு வேளையில் செத்து செத்து பிழைக்கணுமா.. 'என்று அவன் மனக்குதிரை மல்லுக்கட்டிக்கொண்டு ஓட, தெறித்து விழுந்து விடும் போல் முழித்துக் கொண்டிருந்த சஞ்சயை பார்த்து ரஞ்சிக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்தது..

"இப்படி ஒரு வடைக்கே பியூஸ் போய் நிக்குறியே நாளைக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு தினமும் சொர்க்கத்துக்கு எட்டி பார்த்துட்டு வருவடா நீயி... அதனால் உனக்குன்னு எங்கயாச்சும் மார்க்கெட்டுல பதவிசா காய்கறி வாங்கிட்டு இருக்க பொண்ணா பார்த்து லவ்வு பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.. நானெல்லாம் சாப்பிட மட்டும் தான் பாத்திரத்துல கையே வைப்பேன்.. என்ன புரியுதா.." என்று சொல்லி சிலுப்பிகிட்டு சென்றவளை பார்த்து,

"என்ன டிசைனுடா இவ.. அடேய் ஆண்டவா இப்படி என் மனச இவகிட்ட குப்புற விழ வச்சுட்டியே "என்று புலம்பினாலும் அவள் பின்னாடியே சுத்துவதை அவன் நிறுத்தவில்லை...

இந்த குப்புற விழுந்த இடம் அன்று ரஞ்சி இவனிடம் காபிக் கடையில் பேசியது தான்.. முதலில் அதை சாதாரணமாய் எடுத்துக்கொண்டாலும் பிறகு அவள் ஆராதனைக்கே வராமல் போக இவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்..

வேறு வழியின்றி போனில் அழைத்தால் ராங் நம்பர் என்று கட் பண்ணி பிளாக் பண்ணிவிட்டாள் பாதகத்தி..

இப்பொழுது ஆரதியின் திருமணத்தை சாக்காய் வைத்து ரஞ்சியின் பின் அலைந்து கொண்டிருக்கிறான்.. அபி அபிக்குட்டி என்று கொஞ்சிக்கொண்டு...

இவன் செத்து செத்து விளையாடணும்னு விதி இருந்தால் நாம் என்ன செய்வது.. முடிந்த வரைக்கும் பிரித்து விட ட்ரை பண்ணுவோம்.. முடியாத பட்சத்தில் புத்தம் சரணம் கச்சாமி என்று அவளிடம் பிடித்து தள்ளிவிட்டுருவோம்..

ரஞ்சிக்கு நேற்றில் இருந்து மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.. இந்த ஒரு மாதமாய் ரதியின் சோக மூடில் இவளும் மூழ்கி போய் கிடக்க, இங்கு மண்டபத்தில் மாப்பிள்ளையை பார்த்த பிறகு எப்போ என்ன நடக்குமோ என்று இருந்தது..

ரதியின் காதல் விஷயமும் ஆதியை பற்றியும், திருமண விஷயம் பற்றி பேசிய அன்றே ரதி இவளிடம் அனைத்தையும் கொட்டி விட்டிருக்க, இவள் மனமும் சோக குப்பை நிறைந்து அழுக்கு பிடித்து போய் கிடந்தது..

இப்போது மாப்பிள்ளையை பார்த்த பிறகு எப்போ என்ன பூகம்பம் நடக்குமோ என்று இருந்தது.. சொல்ல முடியாது ஆரதி மாப்பிள்ளையை பார்த்து விட்டால் அப்படியே அவனை ஹோம குண்டத்தில் தள்ளி கொன்றாலும் கொன்று விடுவாள்.. அத்தனை வேலைகளை செய்து விட்டு ஒன்னும் அறியாத பச்சை பிள்ளையாய் மணமேடையில் ரதியின் அருகில் அமர்ந்திருந்த ஆதிரனை பார்த்தாள்..

இவளுக்குமே ரண கொடூரமாய் கோவம் வருகிறது.. ஏனென்றால் ரதி இந்த ஒரு மாதமாய் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்.. இப்போது கூட ஆசிட்டின் மேல் உக்காந்திருப்பது போல் அமர்ந்துள்ளாள்... இவன் மட்டும் மயக்கும் கண்ணனாய் முழு நீளத்திற்கும் வாயை இளித்துக்கொண்டு அமர்ந்திருந்தால் இவளுக்கு கோவம் வருமா வராதா..

அதில் இவன் கூடயே சுற்றும் சைத்தான் பிசாசும் கூட்டு என்ற காரணத்தாலேயே கார்த்தியை மனதோரத்தில் பிடித்தும், பிடிக்காதது போல் சுற்றலில் விட்டுக்கொண்டிருந்தாள்..

இதோ அதோவென்று முகூர்த்த நேரமும் நெருங்க அச்சதை அனைவரிடமும் விநியோகம் செய்யப்பட்டது.. அதே போல் மாங்கல்யமும் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கப்பட்டு விதுரனிடம் குடுக்கப் பட, சுரபி விதுரன் திருமணம் இனிதாய் முடிந்தது...

அந்த நேரத்திற்காக தான் காத்திருந்தார் போல், அதற்கும் மேலும் இந்த நிலையை தாங்க முடியாது என்ற நிலையை எட்ட, சட்டென மணமேடையில் இருந்து எழ போன ரதியின் கை பிடித்து அவளை எழ விடாமல் தடுத்தான் ஆதிரன்....,

நூறு டிகிரி அளவில் இவளது கோவம் பொங்கி கொண்டு வர, தன்னருகில் அமர்ந்திருந்த மாப்பிளையாகப் பட்டவனை அப்போது தான் முதல் முறையாக பார்த்தாள்.. அதிலும் பெரும் உக்கிரமாய்..

ஆதியை அந்த இடத்தில் அதுவும் தனக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையாய் எதிர்பாராதவளுக்கு ஒரு நிமிடம் கோவமெல்லாம் பறந்து போய் பொங்கி பொங்கி அழுகையாய் வந்தது...

அளவில்லா நிம்மதியை க்ஷண நேரம் மனம் உணர, அந்த கிடைத்த கேப்பில் மிஸ் ஆரதியை மிஸஸ் ஆரதி ஆதிரனாய் மாற்றி விட்டான் அந்த கள்ளன்...

சிறிது நேரத்தில் நடப்பு நிகழ்வுகள் நினைவில் வர ஆரம்பிக்க ஆதியின் நிராகரிப்பும் உதாசீனங்களும் மிக முக்கியமாய் இவள் அக்காவை அவன் அண்ணா திருமணம் செய்ததால் இவன் குடும்ப ரூல்ஸ் படி, அதாவது ஒரே வீட்டில் இருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற கொள்கைக்காய் மட்டுமே தன்னை திருமணம் செய்துள்ளான் என்று தோன்றிய மறு நிமிடம், இவள் நிம்மதியெல்லாம் ஓட்ட பந்தயத்தில் ஓடும் உசேன் போல்ட் போல் ஓடியே விட்டது..

பல்லை இறுக கடித்துக் கொண்டிருந்தாள்.. எந்த வித கோபத்தையும் வெளிப்படுத்த முடியாத சூழல்.. அப்படி ஒரு கோவம் வெறுப்பு எல்லாம் சேர்ந்து எரிமலை லாவாவாய் அவன் மேல் பொங்கிவிடும் நிலையில் இருந்தாள்..

அதைக் கண்ட ஆதிரன், அவள் கைப்பற்றி யாரும் அறியா சமாதான புறாவை பறக்க விட, அவளோ ஒட்டு மொத்த கோபத்தையும் அவன் உள்ளங்கை கிள்ளலில் காட்டி விட்டிருந்தாள்.. வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு அது அவர்களுக்கு இடையேயான சீண்டல் போல தான் தோன்றும்..

ஆனால் அவள் கிள்ளியதில் சட்டென அவன் கண்கள் கலங்கி விட்டிருந்தது.. அவ்வளவு வலி.. மெதுவாய் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. லேசாய் சதையே பிய்ந்து வந்திருந்தது..

அவனுக்கு அதைக் கண்டு காய்ச்சலே வரும் போல் இருந்தது.. இனி அவளை எதிர் கொள்வதை நினைத்து உருவமில்லா உருண்டை ஒன்று வயிற்றுக்கும் தொண்டைக்கும் படகோட்டியது..

மேடையின் கீழே நின்ற ரஞ்சி ஆரதியின் கோவத்தை கண்டாள் என்றால், கார்த்தி ஆதியின் கண்களில் மரண பயத்தைக் கண்டான்..

அதில் சட்டென சிரிக்க அருகில் இருந்த ரஞ்சி "இப்ப என்ன காமெடி நடந்துச்சுன்னு இப்படி சிரிக்கிற.." என்று கேட்டாள்..

"இல்ல.... ரதி ஏதோ செம்மயா செஞ்சு விட்டுருப்பா போல...பய மூஞ்சி அல்லு விடுது... "

"ஏதோ இவ்ளோவோட விட்டாளே.. நானெல்லாம் எங்க அக்கினி குண்டத்துல தள்ளி விட்ருவாளோன்னு பாட்டில்ல தண்ணியெல்லாம் ரெடியா வச்சிருந்தேன்.. "என்று சொல்லி கையில இருந்த தண்ணீர் பாட்டிலை காமிக்க,

"பரவாயில்லயே ஏதோ இந்த அளவுக்கு கரிசனம் இருக்கே அது போதும்... "

"ஹலோ இதெல்லாம் ஆதி சார்க்கு தான்.. நீயெல்லாம் நாளைக்கு கல்யாணத்துக்கு பிறகு என்னை அழ வச்ச டைரக்டா வைட் பெட்ரோல் தான்.. "

"எது பெட்ரோலா ஆள விடு சாமி"என்று கும்பிட்டவன், அப்போது தான் அவள் பேச்சின் முழு சாராம்சமும் புரிய,

"ஹே அபிக்குட்டி நிஜமாவா.. "

"ஆமாம் ஆமாம்.. அதுக்குன்னு இப்படி முழிச்சு வைக்காத.. உள்ள விழுந்து தொலச்சிற போறேன்.. "என்று கிண்டலாய் சொன்னாலும் நாணத்தில் முகம் சிவந்து தான் போனது...

ஆச்சு அவனை தள்ளிவிடும் வேலையை சிறப்பா செஞ்சாச்சு.. இனி அவன் பாடு அவ பாடு.. நாம அப்பிடிக்கா ஓரமா போய் ஒரு தூக்கத்தை போட்டுட்டு வருவோம்..
புத்தம் சரணம் கச்சாமி 🙏🙏🙏
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN