நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் நட்புக்களே.. இது லவ் ஸ்டோரி மட்டுமில்ல ஒரு போலிஸ் ஸ்டோரியும் கூட.. அதனால மர்டரும் மிஸ்ட்ரியும் தவிர்க்க முடியல.. உங்களுக்கு சந்தியா எவ்வளவு பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்.. இந்த ஒரு எபிசோட்ல சந்தியா சீன் இல்ல.. ஆனா நாளையில் இருந்து சந்தியா இல்லாம கதை இருக்காது.. ஸோ இந்த ஒரு எபிசோட் மட்டும் கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பா♥️♥️♥️

மேகலையின் அண்ணன் சொன்னதை இனியனால் கொஞ்சமும் நம்பமுடியவில்லை.
"நான் சொல்வதை உங்களால நம்ப முடியாதுன்னு தெரியும் சார்.. ஆரம்பத்துல எங்களாலயே நம்ப முடியாத விசயம்தான் இது.." என்றான் அண்ணன்களில் பெரியவன்.
"கொஞ்சம் விவரமா சொல்றிங்களா‌.?" என்றான் இனியன்.

"பல நூறு வருசத்துக்கு முன்னாடி எங்க தலைமுறைக்கு வாக்கப்பட்டு வந்த பெண் ஒருத்திக்கு வரிசையா ஆறு பெண் குழந்தைங்க பிறந்ததாம்.. பொட்ட புள்ளை பொட்ட புள்ளைன்னு சொல்லி ஆறு குழந்தைகளுக்கும் பிறந்த கொஞ்ச நேரத்துலயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னுடுவாங்களாம்.. அது மட்டுமில்லாம ஆண் குழந்தை வேணும்ன்னு புகுந்த வீட்டுல இருந்தவங்க அந்த பொண்ணோட புருசனுக்கு இரண்டாம் தாரம் கட்டி வைக்க இருந்தாங்களாம் .. அந்த பொண்ணு அதை எதிர்த்து நின்றிருக்கா.. புகுந்த வீட்டு ஆளுங்களை எதிர்க்கிறது குற்றம்ன்னு சொல்லி அந்த பொண்ணை உயிரோடு கட்டையில் வச்சி எரிச்சி இருக்காங்க அவங்க.. அந்த பொண்ணு நெருப்புல எரிஞ்சபடியே சாபம் ஒன்னு தந்திருக்கா.. "இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கு பொண்ணை கொடுமை பண்ண மட்டும்தான் தெரியுது.. பொண்ணோட சிறப்பு ஏதும் தெரியல.. உங்க வம்சத்துக்கு பெண் குழந்தை பிறந்தா அது வீண்தான்.. பெண் சிறப்பு தெரியாத உங்களுக்கு எதுக்கு பெண் செல்வம்.? பொண்ணு இல்லா வீடு பொணம் போனா கூட தெரியாது.. பொண்ணா பிறந்த என்னை கொடுமை பண்ணி சாகடிக்கிறிங்க.. பொட்ட புள்ளைங்கன்னு என் குழந்தைகளையும் கொன்னுட்டிங்க.. ஆனா இனி நீங்களே ஆசைப்பட்டாலும் உங்க வம்சத்துக்கே பொட்ட புள்ளை இருக்காது.. உங்க வம்சத்துல எட்டு தலைமுறைக்கு ஒருமுறைதான் ஒரே ஒரு பெண் குழந்தை பிறக்கும்.. ஆனா அதையும் நீங்க கொஞ்ச முடியாது.. அதையும் நீங்க என்னை எரிச்ச மாதிரி கட்டையில் வச்சி உயிரோடு எரிக்கலன்னா அப்புறம் உங்க வம்சமே தளைக்காது'ன்னு சொல்லிட்டு அவங்க எரிஞ்சி போயிட்டாங்களாம்.. இவ விடுற சாபம் பழிக்குமான்னு இருந்தவங்க அதுக்கடுத்து வந்த தலைமுறையில் பெண் குழந்தை பிறக்காத போது சாபம் பழிச்சிடுச்சின்னு புரிஞ்சிக்கிட்டாங்களாம்.. சரியா எட்டாவது தலைமுறையில் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்ததாம். ஆனா அந்த பொண்ணை பெத்தவங்க இந்த சாபம் பலி எதையும் நம்பலையாம்.. அப்புறம் கொஞ்ச நாளுலயே அந்த குடும்பத்துல இருந்த பலரும் பயங்கரமான முறையில இறந்து போனாங்களாம்.. மேலும் இறப்பை தடுக்க அந்தப் பொண்ணை பெத்தவங்களே அந்த பொண்ணை கொண்டு போய் நெருப்புல வச்சிட்டாங்களாம்.. அதுக்கப்புறம் அந்த இறப்பும் நின்னு போச்சாம்.. ஒவ்வொரு எட்டாவது தலைமுறைக்கு மட்டும் பெண் குழந்தை பிறக்கறதும் அவங்க பலி தராம காலம் கடத்துறதும் வீட்டுல உள்ளவங்க பயங்கரமா செத்து போறதை பார்த்து அவங்களே அந்த பொண்ணை கொல்லுறதும் வாடிக்கை ஆயிடுச்சாம்.." மேகலையின் பெரிய அண்ணன் சொன்னான்.

"ஆனா‌ இந்த காலத்துல கூடவா இப்படியெல்லாம் இருக்கு.?" தேவன் பொறுமையில்லாமல் கேட்டான்.

"இந்த காலம் இல்ல சார்.. சரியா ஏழு தலைமுறைக்கு முன்னாடி பிறந்த கடைசி பெண் குழந்தையை கடைசி முறையா பலி கொடுத்து இருக்காங்க.. அடுத்த வந்த ஏழு தலைமுறைக்கு பெண் குழந்தைகளே பிறக்கலயாம்.. நாங்க அத்தனை தலைமுறையிலையும் வாழல.. அதனால் அவங்க சொன்னதுல இருந்த உண்மை தன்மை எங்களுக்கும் தெரியாது. ஆனா எங்க அப்பா கூடவோ தாத்தா கூடவோ பெண் குழந்தைகள் பிறக்கல.. இது மட்டும் தெரியும்.. எட்டாவது தலைமுறையில கண்டிப்பா ஒரு பெண் குழந்தை பிறக்கும்.. அந்த குழந்தையை பழி தரணும்ன்னு காத்திட்டு இருந்திருக்காங்க.. எங்க பெரியப்பா சித்தப்பான்னு அத்தனை பேரோட மனைவிகளையும் கவனமாக கவனிச்சிட்டு இருந்திருக்காங்க.. ஆனா யாருக்கும் பெண் குழந்தை பிறக்கல.." என பெரியவன் சொல்ல, அடுத்து சின்னவன் ஆரம்பித்தான்.

"எங்க அம்மாவுக்கு இந்த வரலாறு எதையும் சொல்லாமலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு எங்க அப்பா.. முதல் இரண்டும் நாங்க பசங்களா பிறந்துட்டோம்.. மூணாவதா மறுபடியும் அவங்க பிரகனென்ட் ஆன பிறகுதான் எங்க அப்பா இதை பத்தி சொல்லி இருக்காரு.. இப்படி ஒரு விசயம் எங்க அம்மாவுக்கு தெரிய வந்தவுடனே அப்பாக்கிட்ட சண்டை போட்டாங்க.. அவங்களை விட்டுட்டும் வந்துட்டாங்க.. ஆனா அவங்க யாரும் என் அம்மாவை விடல.. தினமும் அவங்களை கண்காணிச்சிட்டு இருந்திருக்காங்க.. பிரசவ நாளுக்கு நாலு நாள் இருக்கும்போது அவங்க கண்காணிப்புல இருந்து தப்பிச்ச எங்க அம்மா எங்க இரண்டு பேரையும் எங்க அம்மா வழி பாட்டி வீட்டுல விட்டுட்டு அவங்க மட்டும் தூரமா ஒரு கிராமத்துக்கு போயிருக்காங்க.. அங்கேயே குழந்தையை பெத்தவங்க அங்கிருந்த குழந்தை இல்லாத தம்பதி ஒருத்தருக்கு குழந்தையை தந்துட்டாங்க.. அதுக்கப்புறமும் இரண்டு வருசத்துக்கு அவங்க எங்க அப்பா வீட்டு ஆளுங்க கண்ணுல படல.. ஆனா அதுக்கப்புறம் எப்படியோ இவங்க அம்மாவை கண்டுபிடிச்சி அவங்க ஊருக்கு இழுத்துட்டு போயிருக்காங்க.. பிறந்த குழந்தை பத்தி கேட்டு இருக்காங்க.. தனக்கு பிறந்தது ஆண் குழந்தை அதுவும் செத்துதான் பிறந்ததுன்னு எங்க அம்மா பொய் சொல்லி சாதிச்சிட்டாங்க.. அவங்களுக்கு எங்க அம்மா மேல நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் அம்மா கையில் பெண் குழந்தை‌ ஏதும் இல்லாததால அவங்களால இவங்களை தொல்லை ஏதும் பண்ண முடியல.. அதுவுமில்லாம ரொம்ப தொல்லை பண்ணினா இவளும் ஏதாவது சாபம் வச்சிட்டு செத்துடுவான்னு பயந்து இருந்திருக்காங்க.." என அவன் சொல்லி முடிக்க தேவனும் இனியனும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

"எங்க அம்மா அதுக்கப்புறம் அரசியல்ல சேர்ந்து நிலையான ஒரு இடத்துக்கும் வந்து சேர்ந்தாங்க.. எங்க அப்பா கொஞ்ச வருசத்துல செத்துட்டாரு.. எங்க அப்பா வீட்டு ஆளுங்க எங்களோடு சொந்தத்தை தொடர்ந்துட்டுதான் இருந்தாங்க.. அதுக்கு காரணம் போன தலைமுறையில் பிறக்காத அந்த பெண் குழந்தை இந்த தலைமுறையில் எங்க இரண்டு பேருல யாருக்காவது பிறக்குதான்னு தெரிஞ்சிக்கதான்.‌ ஆனா எங்க அம்மா நாங்க வளர்ந்த பிறகு இதை பத்தி சொல்லிட்டாங்க.. வளர்ந்து வர இந்த காலகட்டத்தில நாங்க இதை எதையும் நம்ப தயாரா இல்ல.. எங்க தங்கச்சி எங்கேன்னு தேடி கண்டுபிடிச்சோம்.. அவளோட தத்து பேரண்ட்ஸ் ஒரு ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாங்க.. அதனால அவ எங்க சித்தி பொண்ணுன்னு பொய் சொல்லி அவளை எங்க வீட்டுக்கு கூட்டி வந்தோம்.. நாங்க வெளிநாடு போய் செட்டில் ஆனதே எங்க தங்கையை அங்கேயே கூட்டி போய் பத்திரமா பார்த்துக்கதான்.. ஆனா ரொம்ப வருசம் கழிச்சி வந்து சேர்ந்த பொண்ணை கொஞ்ச நாள் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி சொல்லியே அம்மா வருசங்களை ஓட்டிட்டாங்க.. எங்க சித்தப்பா பெரியப்பாவுக்கெல்லாம் அதிகம் சந்தேகம் வந்துட கூடாதுன்னு அவளை வேலைக்காரின்னு சொல்லியே சமாளிச்சாங்க.. நாங்க அடிக்கடி ஊருக்கு வந்தா மேகாக்கிட்ட உண்மையை சொல்லிடுவோமோன்னு பயந்து எங்க அம்மா எங்களை ஊருக்கு கூட வர விடாம தடுத்துட்டாங்க.. நாங்க அவளை எங்களோடு கூட்டி போறோம்ன்னு சொன்னதுக்கு அம்மா அவளை எங்களோடு அனுப்ப மறுத்துட்டாங்க.. நாங்க அவளை அம்மாக்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறதா சொல்லி எங்களோடு சண்டையும் போட்டுட்டாங்க.. சாகும்வரை அவங்க எங்க கூட ஃபோன்ல கூட பேசல.." பெரியவன் சோகத்தோடு சொன்னான் இதை.

"ஆனா உங்களுக்கும் மேகலைக்கும் ஆகாதுங்கற மாதிரி உங்க சொந்தக்காரங்க பேசிக்கிட்டாங்களே.." சந்தேகத்தோடு கேட்டான் தேவன்.

"அப்படி ஏதும் இல்ல சார்.. நாங்க அவங்களோடு ஃபோன்ல கூட டச் வச்சிக்கிட்டது கிடையாது.. அந்த மிருகங்களோடு எந்த மனுசன் சொந்தம் வச்சிப்பான்.?"

"அப்புறம் ஏன் நீங்க உங்க அம்மா இறுதி சடங்குல கலந்துக்கல.. அதுவும் இல்லாம அன்னைக்கு மேகலையை அந்த வீட்டுல இருந்து போக சொன்னிங்களே.?" இனியன் தன் சந்தேகத்தை கேட்டான்.

"இறுதி சடங்குல கலந்துக்காததுக்கு காரணம் எங்களுக்கு டிக்கெட் கிடைக்க சார்.. அதான்.. ஆனா மேகாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதுக்கு காரணம் இருக்கு சார்.. எல்லாம் எங்க அம்மாவால் வந்ததுதான்.. இவங்க மேகா மேல ஓவரா பாசம் வச்சது பார்த்து அவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சி.. வேலைக்காரிக்கு ஏன் இவ்வளவு செல்லம் தரன்னு அடிக்கடி கேட்பாங்க.? தேவையில்லாம சொத்தை வேற அவ பேருல எழுதி வச்சிட்டாங்க.. சித்தப்பா பெரியப்பா இவங்களுக்கு ஏதும் சந்தேகம் வர கூடாதுன்னுதான் அவளை அந்த வீட்டை விட்டு வெளியே போக சொன்னேன்.. யாராவது அவ யாருன்னு தெரிஞ்சிட்டு அவளை கொன்னுடுவாங்களோன்னு பயமா இருந்தது சார்.. நான் அந்த நேரத்துக்கு அவளை அங்கிருந்து வெளியே அனுப்பிட்டா கூட போதும்ன்னு நினைச்சிட்டேன்.. அவ வெளியே வந்த பிறகு அடுத்து என்ன பண்றதுன்னு சொல்லலாம்ன்னு இருந்தேன்.. ஆனா பைத்தியக்காரி ஃபோனை எடுக்கவே மாட்டேன்னுட்டா.." என்றவன் சோகமாக இனியனை பார்த்தான்.

"இப்ப மட்டும் அவ யாருன்னு தெரிஞ்சா எங்க சித்தப்பா பெரியப்பாவெல்லாம் சேர்ந்து அவளை கொன்னுடுவாங்க சார்.. எங்க அம்மா கொலையால செத்தாங்க.. ஆனா அதுக்கும் அந்த சாபம்தான் காரணம்ன்னு ஸ்ட்ராங்கா சொல்லிடுவாங்க சார்.." என்றவனை கை காட்டி நிறுத்தினான் இனியன்.

"கொலை.. சாபம்.. சாபம்.. கொலை." என திரும்ப திரும்ப யோசித்தவன் "தேவன் அந்த பொண்ணு யாருன்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா என்ன பண்ணி இருப்பாங்க.?" என்றான்.

"ஐ திங்க்.. கொன்னு இருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்.. இல்லன்னா இந்த கால கட்டத்துக்கு ஏத்த மாதிரி ஆக்ஸிடென்ட் பண்ணியோ இல்ல ப்ளானிங் மர்டராவோ செஞ்சி இருப்பாங்க.."

"ஓகே வாங்க நாம புது விருந்தாளி ஒருத்தரை இங்கே கூட்டி வரலாம்.." என்றபடி எழுந்து நின்றான் இனியன்.

அவனை புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.

"என் மொத்த சந்தேகமும் அந்த சிவப்பு சட்டைக்காரன் மேலதான்‌.. அவன்தான் மேகலை மேல கடுப்பு இருக்கிறதை தன் வார்த்தைகளால காண்பிச்சான்.. இவர் அவங்க கூட ஃபோன்ல கூட பேசாத போது அவன்தான் இவருக்கும் மேகலைக்கும் செட்டாகுதுங்கற மாதிரி பொய் சொன்னான்.. அவனை தூக்கிட்டு வந்தா இந்த கேஸ் பாதி முடிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்.." என்றவன் மேகலையின் அண்ணன்கள் பக்கம் திரும்பினான்.

"உங்க தகவலுக்கு தேங்க்ஸ்.. ஒரு கால் மணி நேரம் இங்கேயே வெயிட் பண்ணுங்க.. நாங்க திரும்பி வந்திடுறோம்.." என்ற இனியன் வெளியே நடந்தான்.

"சார் சிவப்பு சட்டைக்காரன் மேல ஏன் உங்களுக்கு திடீர் சந்தேகம்.?" என்ற தேவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த இனியன் "அந்த பூஜை கோடும் பூஜை பொருளும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தருதா தேவன்.?" என்றான்.

இனியனின் சந்தேகம் தேவனுக்கும் புரிந்தது. "ஆனா அங்கே செத்தது மேகலை கிடையாதே.." என்றான் அவன்.

"இப்ப என்னை யாராவது கொல்ல வரும்போது நீங்க வந்து குறுக்க நின்னா என்ன ஆகும்.?"

"நான் முதல் பலியாவேன்.. ஆனா உங்களுக்கு ஏன் இவ்வளவு பேராசை.?" சிறு கோபத்தோடு கேட்டான் தேவன்.

"உங்களை கொன்னவனுக்கு என்னை கொல்ல போதுமான நேரம் கிடைக்கலன்னாவோ இல்ல வாய்ப்பு கிடைக்கலன்னாவோ உங்களை கொன்னது நான்தான்னு பழியை திருப்பி விடுவான்.. கரெக்டா.?" என்றான்.

"ஆமா.." என்றவனுக்கு அதன் பிறகே விசயம் புரிந்தது.

"சார் இத்தனையும் கெஸ்ஸா.? செம சார்.." என்றான்.

"கெஸ்ஸிங்தான் தேவன்.. ஆதாரம் கண்டுபிடிக்கலன்னா கடைசி வரை கெஸ்ஸிங்காவே இருந்திடும்.. அந்த வீட்டுல இருக்கற யாரோதான் இத்தனையையும் ஏற்பாடு செஞ்சி இருக்கணும்.. மேகலையை கொலை செய்ய திட்டம் போட்டவங்க குடுகுடுப்பைக்காரன் மூலமா பூஜை ஏற்பாடு செஞ்சி இருக்கணும்.. மேகலையை கொன்னு பழியை பூசாரி மேல போட இருந்திருக்கணும்.. ஆனா மேகலையை கொலை பண்ண முடியாதபடி தேவ சுந்தரி தடுத்து இருக்கணும்.. தன் பொண்ணு வாங்க வேண்டிய கத்தி குத்தை இவங்களே வாங்கி இருக்கணும்.. கொலை பண்ணவன் ஏதோ ஒரு காரணத்தால மேகலையை கொல்லாம திரும்பி இருக்கணும்.. இப்ப சான்ஸ் கிடைச்ச உடனே பழியை அவ மேல போட்டு இருக்கணும்.. இதுல நீங்க இன்னொன்னு கவனிச்சிங்களா.? பாரன்சிக் ஆபிசர்ஸ் முழுசா செக் பண்ண அந்த வீட்டுல கொலை நடந்து இரண்டு நாள் கழிச்சி மேகலை ரூம்ல கத்தி கிடைச்சிருக்கு.. இங்கேயே நாம சுதாரிச்சி இருந்திருக்கணும்.." என்றவன் மேகலையின் வீட்டின் முன்னால் கார் நின்றவுடன் முதல் ஆளாக இறங்கி அந்த வீட்டை நோக்கி நடந்தான்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1160
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN