நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திங்கட்கிழமை காலை..

பொழுது விடிந்து வெகு நேரம் ஆகி விட்டிருந்தது. தன் குடிசை வீட்டின் வாசலில் இருந்த கயிற்று கட்டிலில் போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தாள் செங்கா.

வாசலில் ஒரு ஓரமாக இருந்த விறகடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பு பாத்திரத்தை எடுத்து சென்று வீட்டிற்குள் வைத்தாள் கலையரசி. மீண்டும் வெளியே வந்தவள் வாசலில் இருந்த கட்டிலை கண்டு சிறு கோபத்தோடு அடுப்பு மேடையில் இருந்த குழம்பு கரண்டியை கையில் எடுத்தாள்.

நல்ல கனவில் இருந்தாள் செங்கா. ஆனால் தன் காலில் சுளீரென அடி ஒன்று விழவும் பதறியடித்து எழுந்து அமர்ந்தாள்.

"யம்மா.." என்றவளின் கையில் மீண்டும் ஒரு அடியை தந்தாள் கலையரசி.

"ஏழுமதியம் ஆகுது.. இன்னும் உனக்கு என்னடி தூக்கம்.?" என்றவள் கரண்டியை அடிக்க ஓங்கினாள். அவளது கையை சட்டென பிடித்தாள் செங்கா.

"கையை விடுடி.. கையை உடைச்சிடுவ போல இருக்கு.. ஆம்பள பையன் கூட இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்க மாட்டான்.." தனது கையை விடுவித்துக் கொள்ள போராடினாள் அம்மா.

"காலையிலயே என் மவக்கிட்ட என்னடி சண்டை.?" வயலுக்கு தண்ணீரை பாய்ச்சி விட்டு மண்வெட்டியோடு வந்த சாமிநாதன் கேட்டான்.

"இவ இப்படி குட்டிச்செவுரா போக நீதான் காரணம்.." அவள் தனது வழக்கமான பாட்டை ஆரம்பித்தாள்.

செங்கா செவிடு போல கட்டிலை விட்டு இறங்கி நின்றாள். தூக்கத்தில் கலைந்து விட்ட தாவணியை சரி செய்துக் கொண்டாள்.

"யப்பா நான் இன்னைக்கு கரட்டுக்கு போறேன்.." என்றவளின் மேல் பறந்து வந்து விழுந்தது கலையரசி கையில் இருந்த கரண்டி.

"வீட்டை விட்டு வெளியே போனின்னா நான் உன் காலை உடைச்சி அடுப்புல வச்சிடுவேன் செங்கா.." கோபத்தோடு சொன்னவளை அலட்சியமாக பார்த்தாள் செங்கா.

"கலையரசி.." வீட்டின் ஓரம் இருந்த வரப்பின் மேல் நின்றபடி ஒரு பெண்மணி அழைத்தாள்.

"என்னக்கா.?" என திரும்பியவளிடம் "குப்பாயி கெழவி செத்ததுக்கு எழவுக்கு வரேன்னு சொன்னியே.. வரலையா.?" என்றாள் அவள்.

முந்தானையை எடுத்து தலையில் போட்டுக் கொண்டாள் கலையரசி. "நான் செத்த நேரத்துல திரும்பிடுவேன்.. இவ இந்த வீட்டை விட்டு வெளியே போக கூடாது.." என்று எச்சரித்தவள் குப்பாயி கிழவி வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் செங்கா அவசரமாக வீட்டிற்குள் ஓடினாள். பொன்னாவின் பழைய தோள் பையை எடுத்து அதில் தனக்கு தேவையானவற்றை நிரப்ப ஆரம்பித்தாள். அவளது அவசரத்தில் ராகி மாவு இருந்த பாத்திரம் வேறு தரையில் உருண்டது. அதை எடுத்து நேராக நிறுத்தி மாவை அள்ளி ஒரு கவரில் நிரப்பினாள்.
வீட்டிற்குள் வந்த தகப்பனிடம் "யப்பா அந்த போனை எடு.." என்றாள். சாமிநாதன் சமீபத்தில்தான் அவளுக்கு செல்போனை வாங்கி தந்திருந்தான்.

"உங்கம்மாகாரி என்னை வந்து கத்த போறா.." என்றவன் ஃபோனை எடுத்து அவளது பேக்கில் வைத்தான்.

"அதோ அந்த அட்டேலி மேல இருக்கற தூக்கு போவினியையும் எடு.. ஒரு இடத்துல கொம்பு தேனு பார்த்துட்டு வந்திருக்கேன்.. வரும்போது அதை அழிச்சிட்டு வரேன்.." என்றாள்.

சாமிநாதன் அவளது பரபரப்பில் தானும் பாதிக்கப்பட்டவனாக அவசரமாக வந்து பரண் மேல் இருந்த சிறு தூக்கு வாளி ஒன்றை எடுத்து அவளது பையில் வைத்தான்.

பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டவள் "யப்பா நான் நாலு நாளுல வந்துடுவேன். அம்மா கேட்டா சொல்லிப்புடு.." என்றாள். விரைந்து செல்லும் வேகத்தில் அடுப்பு திட்டின் மீது இருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொண்டாள்.

கட்டிலில் கிடந்த போர்வை ஒன்றை இரண்டாய் மடித்து தோளில் போட்டுக் கொண்டாள். வாசல் தாண்டி ஓடியவள் சட்டென நின்று திரும்பி ஓடி வந்தாள்.

"யப்பா முத்தா.." என்றாள் சாமிநாதனிடம். 'இன்னமும் குழந்தையாவே இருக்கியே..' என நினைத்தவன் அவளது கன்னத்தில் முத்தத்தை தந்தான். அவளும் அவனது கன்னத்தில் ஒரு முத்தத்தை தந்து விட்டு காட்டு பாதையை நோக்கி ஓடினாள். கண் மறையும் தூரத்தில் திரும்பி நின்று தன் தந்தைக்கு கை அசைத்து விடை பெற்றாள்.

அவளுக்கு டாடா காட்டிய சாமிநாதன் அந்த நொடியில் நினைத்து இருக்க மாட்டான் தனது அன்பு மகளை தான் பார்க்கும் கடைசி நிமிடம் இதுதான் என்று.

***
திங்கட்கிழமை காலையில்...

அதியன் ப்ளைட்டுக்கு நேரமாகி விட்டது என வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். விஷ்வாவுக்கு மூன்றாவது முறையாக போனில் அழைத்தான். ஆனால் விஷ்வா ஃபோனை எடுக்க தாமதம் செய்துக் கொண்டிருந்தான்.

விஷ்வா நான்காவது அழைப்பில் ஃபோனை எடுத்ததும் "டேய் என்னடா பண்ணி தொலையுற.? ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா.?" கோபத்தோடு கேட்ட அதியன் காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு தோள் பையோடு விமான நிலையத்திற்குள் ஓடினான்.

"சாரிடா.. புவி கூட பேசிட்டு இருந்தேன். ஃபோன் சைலண்ட்ல இருந்தது.."

'புவி.. புவி.. எப்ப பார்த்தாலும் புவி.. அப்படி என்னதான் சிறப்போ அவகிட்ட.?' அதியனுக்கு எரிச்சலாக இருந்ததை புவியை பற்றி நினைக்கையில்.

"நான் ப்ளைட் ஏற போறேன் விஷ்வா.. நாளன்னைக்கு சிபி பிரதர்ஸ் அன்ட் கோ டீல் முடிய போகுது.. பெரிய ப்ரோஜக்ட்.. உன்னை நம்பிதான் விட்டுட்டு போறேன்.. புவி பின்னாடி சுத்தாம தயவு செஞ்சி டீலிங்கை பாருடா.." அழ மாட்டாதா குறையாக சொன்னான்.

"நான் என்ன சின்ன பிள்ளையா.? அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவேன்.. நீ பத்திரமா போய்ட்டு வா.." என்ற விஷ்வா அதியன் அடுத்த வார்த்தை பேச இடம் தராமல் ஃபோனின் அழைப்பை துண்டித்து கொண்டான்.

***
திங்கட்கிழமை காலையில்...

சீமா கன்ஸ்டரக்சன் நிறுவனத்தின் ஜிஎம் தனது செகரட்டியிடம் கோபத்தோடு வினாவி கொண்டிருந்தான். "இந்த டீல் மட்டும் நம்ம கைக்கு வரலன்னா நாம மொத்த கம்பெனியையும் இழுத்து மூடிட்டுதான் போகணும்.. நீ என்ன செய்வியோ தெரியாது.. இந்த டீல் நம்ம கம்பெனிக்குதான் கிடைச்சாகணும்.." என அழுத்தமாக சொன்னான் அவன்.

***
திங்கட்கிழமை காலையில்..

சீனு தன் முன்னால் அமர்ந்திருந்த வழக்கறிஞரை கேலியோடு பார்த்தான்.

"என்ன சொல்ற.? என் தாத்தன் உயில்ல சொத்து முழுக்க மகளுக்குதான்னு எழுதி வச்சிருக்காரா.?" என கேட்டவன் அந்த வீடே அதிரும்படி சிரித்தான்.

"சார்.. உயில்ல இருக்கறதைதான் நான் சொல்ல முடியும்.. இந்த சொத்து சட்டப்படி உங்க அத்தைக்குதான் சொந்தம்.."

"நீ என்னய்யா இப்படி உளருற.? என் அத்தைதான் செத்து போய் பல வருசம் ஆச்சே.." என்றான் சீனு.

"இல்ல சீனு.. உங்களுக்கு விசயம் தெரியாது போல.. உங்க அத்தை கலையரசி தனது காதலன் சாமிநாதனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊரை விட்டு ஓடிட்டாங்க.. அவங்க ஊரை விட்டு ஓட உதவி செஞ்ச மகேஷ் அவங்களை தான் கொன்னுட்டதா சொல்லவும் உங்க குடும்பமும் உங்க அத்தை செத்துட்டதா நினைச்சிட்டிங்க.. ஆனா உங்க அத்தை சாகல.. இத்தனைக்கும் உங்க அத்தைக்கு இரண்டு குழந்தைகள் கூட இருக்காங்க.. இந்த மொத்த சொத்தும் அவங்களுக்குதான் போய் சேர போகுது.. நீங்க இந்த வீட்டையும் சொத்தையும் அவங்ககிட்ட நல்லமுறையில ஒப்படைச்சிடுறது ரொம்ப நல்லது.." என்ற வழக்கறிஞர் அந்த வீட்டை விட்டு வெளியே நடந்தார்.

"நல்ல முறையில ஒப்படைக்கிறதா.? அதுவும் நானா.?" என கேட்டு சிரித்தவன் "ஊர் உலகத்தை பொறுத்தவரை என் அத்தை செத்துட்டா.. அவ அப்படியே செத்துடறதுதான் நல்லது.." என்றவன் தனது குறுக்கு புத்தியில் ஏதேனும் கிறுக்கு ஐடியாக்கள் கிடைக்கிறதா என யோசித்தான.

***
திங்கட்கிழமை காலையில்...

நகரத்தில் இருந்த தனி வீடு அது. ஒருத்தி ஆத்திரத்தோடு உலாவி கொண்டிருந்தாள்.

"நான் பெத்த புள்ளையை எனக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டாளே.. ஏதோ ஒரு கால நேரம் என் புள்ளையை அவக்கிட்ட தத்து கொடுத்தேன். ஆனா இன்னைக்கு திருப்பி கேட்டா தர மாட்டேன்னே சொல்லிட்டாளே.. நான் யாருன்னு அவளுக்கு சரியா தெரியல போல.. தெரிய வைக்கிறேன். புரிய வைக்கிறேன்.." என்று பைத்தியம் போல சபதம் எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

***
அதியன் சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறான். விஷ்வா கூட்டாளியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுதான் நிறுவனத்தில் இணைந்தான். இந்த இரண்டு ஆண்டுகளும் அவன் ஒழுங்காகதான் தன் வேலையை செய்து வந்தான். ஆனால் என்று புவியை பார்த்தானோ அன்றே நிறுவனத்தையும் மறந்து விட்டான். நண்பனையும் குடும்பத்தையும் கூட மறந்து விட்டான். எப்போதும் புவி புவி என சுற்றி கொண்டிருப்பவனுக்கு அவளையே திருமணம் செய்து வைத்து விட்டாள் சரியாகி விடும் என்று விஷ்வாவின் அம்மா காயத்ரி சொன்னாள். அதியனும் அதை பற்றி யோசித்தான். நண்பன் குடும்பஸ்தனாக மாறுவது அவனுக்கு மகிழ்ச்சியே.

இந்த முறை ட்ரிப் போய் விட்டு வந்து புவியின் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசலாம் என்று காயத்ரியிடம் வாக்குறுதி அளித்து விட்டுதான் பயணம் கிளம்பினான் அதியன்.

நண்பனின் திருமணத்தை எப்படியெல்லாம் நடத்தலாம் என்று யோசித்தபடியேதான் வெளிநாட்டில் நாட்களை கடத்தினான். அவன்தான் நண்பன் நண்பன் என்று விஷ்வாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தானே தவிர விஷ்வா இவனது ஃபோனை எடுக்கவில்லை.

அலுவலத்திற்கு ஃபோன் செய்தாலும் விஷ்வாவை யாரும் பார்க்கவில்லை என்றே தகவல் வந்தது. ''புவி மயக்கத்துல ஆபிஸ் வர கூட மறந்துட்டானா.?" கோபத்தோடு தனது ஹோட்டல் அறையில் நடை பழகி கொண்டிருந்தான். அன்று மாலையில் சிபி நிறுவனத்தின் டீலிங் வேறு கம்பெனிக்கு கை மாறி விட்டதாக தகவல் வந்து சேர்ந்தது. விஷ்வா மீது கொலை வெறி கொண்டு விட்டான் இனியன். பல கோடி ரூபாய் கான்ட்ராக்டை விஷ்வா இப்படி கோட்டை விட்டு விட்டானே என ஆத்திரமடைந்தவன் விஷ்வாவுக்கு ஃபோனை செய்தான். மறுமுனையில் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

"காதலிச்சா இப்படியா முட்டாளா மாற சொல்லுது.?" கோபத்தோடு விமானம் ஏறியவன் விஷ்வாவை துவைத்து எடுத்து விடும் நோக்கத்தோடுதான் தனது வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக விஷ்வா வீட்டிற்கே சென்றான்.

சனிக்கிழமை காலையில்..

சாத்தியிருந்த கதவை படபடவென அதியன் தட்டியதும் அவசரமாக வந்து கதவை திறந்தாள் காயத்ரி.

"விஷ்வா எங்கேம்மா.?" கையை இறுக்கியபடி கேட்டான்.

காயத்ரி முகம் கவலையில் வாடி போயிருந்தது. "அவன் வீட்டை விட்டு போய் மூணு நாளைக்கு மேல ஆச்சி அதியா.. ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான்.." என்றவளின் குரலில் பயம் இருந்தது.

"மூணு நாளா வரலையா.? எங்கே போனான்.?' குழப்பத்தோடு கேட்டான் அவன்.

"புவிக்கு ஏதோ பிரச்சனைன்னு சொன்னான். வந்துடுவேன்ம்மான்னு சொன்னான். மூணு நாளைக்கு மேல ஆச்சி. ஆனா இன்னும் வரல.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு அதியா.. செழியன்கிட்ட சொல்லி போலிஸ்ல புகார் தரலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா பாப்பாதான் அதியன் அண்ணா வந்த பிறகு பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டா.." என்றவள் தனது கண்களோரம் இருந்த ஈரத்தை துடைத்துக் கொண்டாள்.

"நான் என்னன்னு பார்க்கறேன் ம்மா.. நீங்க தைரியமா இருங்க.. இவன் அந்த பொண்ணோடு சேர்ந்து எங்கேயாவது சுத்த போயிருப்பான்.. இரண்டு நாளுல திரும்பி வந்துடுவான். நான் அவனை கூட்டி வந்து கை காலை உடைச்சி வீட்டுலயே இருக்க வைக்கிறேன்.." என்றவன் வந்த வேகத்திலேயே தனது காருக்கு திரும்பினான்.

"சாப்பிட்டு போவ வாப்பா.." காயத்ரி வாசலில் நின்றபடி அழைத்தாள்.

"இல்லம்மா.. நான் இப்போதான் சாப்பிட்டேன்.." என்றவன் காரை ஸ்டார்ட் செய்து வேகத்தோடு கிளம்பினான்.

சனிக்கிழமை காலையில்..

செங்கா தனது காட்டு பயணம் முடித்து வீட்டிற்கு வந்தாள். அவள் வீடு இருந்த இடத்தில் மண்மேடுதான் இருந்தது. அவளது குடும்பம் இருந்த இடம் தெரியாமல் போனது.
அப்படி என்ன ஆச்சி அவ குடும்பத்திற்கு.?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN