செங்கா 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திங்கட்கிழமை காலையில்..

செங்கா காட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததுமே அவளது மனநிலை இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

இயற்கையின் சுகந்தம் அவளது உற்சாகத்தை அதிகப்படுத்தியது.

செங்கா இருபத்தியொரு வயது மங்கை. நல்ல வாட்டசாட்டம். பெண் வாட்டசாட்டமா என குழம்பலாம் நீங்கள். ஆனால் அவள் உண்மையில் வாட்டசாட்டம்தான். காடுகளில் ஓயாமல் அலைந்ததின் விளைவாக மாநிறமே அவளது நிரந்தரம். ஆனால் அந்த அலைச்சலே அவளை வலுவுள்ள பெண்ணாக மாற்றி விட்டிருந்தது. ஒரு ஆணின் பலம் அவளிடமும் இருந்தது. வெடுக்கென அடியெடுத்து வைத்து நடப்பாள். அவளது நடையால் பூமி அதிரும். அதற்காக கலையரசியிடம் நிறைய முறை திட்டு வாங்கி விட்டாள். ஆனால் அவளால் பூ போல் அடியெடுத்து வைத்து நடக்க முடியவில்லை.

சாமிநாதன் இவளை ஒரு ஆணை போல வளர்த்துவிட்டதாக சொல்லி கலையரசி அடிக்கடி குற்றம் சாட்டுவாள். ஆனால் அப்பனும் மகளும் அவளது திட்டுகளை காதிலேயே வாங்கி கொண்டதில்லை.

பொன்னா தூரத்து நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறாள். அவள் பெண்மையின் லட்சணமாக உள்ளதாக செங்காவிடம் கலையரசி சொல்லுவாள்.

பூமி பார்த்து நடந்து, வார்த்தைகளில் மென்மையை மட்டும் கொண்டு,சமைக்கும் உணவில் உப்பு காரம் பார்த்து, தோளை சுற்றி உள்ள துப்பட்டா ஒரு இன்ஞ் மேலேயும் ஏறாமல் கீழேயும் இறங்காமல் பார்த்துக் கொண்டு, முகத்தில் உள்ள பவுடரின் அளவு அதிகமும் ஆகாமல் குறையவும் செய்யாமல் பார்த்து பார்த்து கன்னத்தை தடவி தந்துக் கொண்டு இருக்க என்னால் முடியாதென சொல்லி விட்டாள் செங்கா. இவ்விடத்தில் செங்காவின் ஒப்பனைகளை சொல்லியே ஆக வேண்டும்.

அவள் பெரும்பாலும் அணிவது பாவாடை சட்டையும், தாவணியும்தான். விசேச நாளில் கூட தலையில் கொண்டை மட்டும்தான் போடுவாள். தலை முடியை காற்றில் பறக்க விட்டுக் கொள்ள அவளுக்கு துளியும் ஆகாது. அது என்னவோ அவளுக்கு தன் பின்னங்கழுத்தில் தலை முடி மோதினால் சுத்தமாக பிடிக்காது. பொட்டு வைக்க மாட்டாள். பூ வைக்க மாட்டாள். ஆனால் எப்போதேனும் ஒற்றை பூவை எடுத்து தன் கொண்டையில் சொருகி கொள்வாள். கழுத்தில் கையில் ஆபரணமென ஏதும் அணிய மாட்டாள். ஆனால் அம்மாவின் வற்புறுத்தலால் காதில் உள்ள தோட்டை மட்டும் கழட்டவில்லை. அந்த தோடும் ஒரு சிறு முட்டை வடிவ சாதாரண தோடுதான்.

இந்த வயசிலும் பாவாடை சட்டை போட்டுக்கிட்டு ஏன்டி என் மானத்தை வாங்குற.?" என கலையரசி ஒரு நாள் பயங்கரமாக பிடித்து கத்தி வைத்தாள்.

"எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. பொன்னா மாட்டிட்டு இருக்கற மாதிரி பேண்டும் டாப்பும் என்னால போட்டுக்க முடியாது.." என்று பதில் சண்டை போட்டாள் செங்கா.

"இல்லன்னா சேலையாவது கட்டி தொலைடி.." என்றவளிடம் " அந்த ஆறடி கருமத்தையும் என்னால சுத்திக்க முடியாது. உனக்கு பிடிக்கலன்னா நீ என்னை பார்க்காம கண்ணை மூடிக்க.. பிரச்சனை முடிஞ்சிடும்.." என தன் முடிவை செல்லி விட்டாள் இவள்.

இவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டையை பார்க்க இயலாமல் மறுமுறை ஊருக்கு வருகையில் சில ஆடைகளை வாங்கி வந்து தந்தாள் பொன்னா.

"என்ன இது.? பாவாடை சட்டை மாதிரிதான் இருக்கு.." என்று கேட்ட செங்காவிடம் "இந்த ஸ்கர்ட், டாப்.. பாவாடை சட்டையோட நியூ வெர்சன்தான்.. நீ இவ்வளவு நாள் சாக்கு மாதிரி மாட்டிக்கிட்டு இருந்த பாவாடைக்கு பதிலா இதை போட்டுக்கோ.. உன் சட்டைகளை தூர எறிஞ்சிட்டு இந்த டீசர்ட்ஸை போட்டுக்க.. இது கொஞ்சம் ஸ்டைலிஸா இருக்கும்.." என்றாள்.

அவள் வாங்கி வந்ததில் ஒரு ஸ்கர்ட்டில் அழகாய் பூக்கள் ஸ்பிரில் இருந்தது. அதை உடனடியாக பிரித்து எறிந்தாள் செங்கா.

"ஏன்டி.?" என கோபமாக கேட்டவளிடம் "இது செடி முள்ளுல மாட்டிக்கும். இது வேணாம்.." என கேட்டு அதை சாதாரண உடையாக மாற்றிக் கொண்டாள் செங்கா.

தனக்கு எது அழகு என இவள் பார்க்கமாட்டாள். தனக்கு எது வசதி என்று மட்டும்தான் பார்ப்பாள்.

"குரங்கு கையில பூமாலையை தந்தது என் தப்புதான்.." என தலையில் அடித்துக் கொண்டாள் பொன்னா.

"அடி போடி இவளே.." என சொன்ன செங்காவை சில நேரங்களில் பொன்னாவிற்கும் பிடிக்காது.

"இவளோடு இரட்டை பிறவியா பிறக்க வச்சிட்டியே ஆண்டவா.." என அடிக்கடி புலம்புவாள்.
செங்காவும் பொன்னாவும் மட்டுமே சாமிநாதன் கலையரசியின் ஒரே உலகம். தங்கள் காதலுக்கு பல எதிர்ப்புகள் வந்தபோது தங்களது காதலையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் வந்து தஞ்சமடைந்த இடம்தான் இந்த மலையடிவார கிராமம். இதை கிராமம் என்று கூட சொல்ல முடியாது. அங்கு மொத்தமாகவே பத்து பன்னிரெண்டு வீடுகள்தான் இருந்தது. ஆனால் ஒரு கிலோ மீட்டர் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளிகளில் இவர்களது ஊரை போல இன்னும் சில ஊர்கள் இருந்தன. ஆனால் இவர்களது செடிமலை அடிவாரத்திற்கு மட்டுமே மின்சார வசதி இருந்தது. அதை சாமிநாதன்தான் செய்து தந்திருந்தான். தன் வயலின் வெள்ளாமை பணத்திலிருந்து சூரிய ஒளியால் அந்த மொத்த கிராமத்திற்கும் மின்சார வசதி கிடைக்கும்படி செய்திருந்தான்.
அவர்களது அழகான குடிசை வீடு. வாசலில் சில அடிகளுக்கு பந்தல் இருந்தது. அதை தாண்டியும் வாசல் பெரியதாக அமைத்திருந்தார்கள். வாசலின் ஓரங்களில் பொன்னா சில பூச்செடிகளை வைத்திருந்தாள்.

கல்லூரி மாணவர்களாக இந்த ஊருக்கு ஓடி வந்த கலையரசிக்கும் சாமிநாதனுக்கும் ஆரம்பத்தில் அனைத்துமே கடினமாகதான் இருந்தது. ஆனால் இன்று அவர்களின் சொர்க்கமே இந்த ஊரும் அவர்களது குடிசையும்தான். ஆரம்பத்தில் அக்கம் பக்கத்து வீட்டாரோடு சேர்ந்து அவர்களின் வயலுக்கு வேலைக்கு சென்றனர் இருவரும். ஆனால் விரைவிலேயே அவர்களுக்கு விவசாயம் பிடித்து போய் விட்டது. அவர்கள் இங்கு உயிரோடு தப்பி வந்து வாழ உதவி செய்த அவர்களின் நண்பன் மகேஷ் செய்த பண உதவியால் சொந்தமாக வயலை வாங்கினார்கள். இப்போது இவர்களுக்கென சில ஏக்கரில் வயல் உள்ளது. அதன் மூலம் நல்ல வருமானம் வருகிறது.

சாமிநாதன் கலையின் வாழ்க்கை வரலாறை கொஞ்சமாக அறிந்து வைத்திருந்தாள் செங்கா. அவர்கள் உயிருக்கு பயந்து ஓடி வந்ததில் இவளுக்கு விருப்பம் இல்லை. எதிர்த்து நிற்பவனை நாலு மிதி மிதித்து விட்டு முன்னேறி நடக்க வேண்டியதுதானே என்பாள்.
அவள் இப்படிதான். அவளது மனமே கரடுமுரடுதான். அவளது உலகமும் கரடுகள்தான்.

பேயை போல காற்றை போல காடுகளை சுற்றுவாள். அவளிடம் கேமரா ஒன்று இருக்கிறது. அதை வைத்து அந்த காடுகளை படம் பிடிப்பாள். அவளிடம் சிறு புல்லாங்குழலும் இருந்தது. குழல் இசைக்க அவளாகவே கற்றுக் கொண்டாள். எப்போதாவது தன் மனதின் மகிழ்ச்சியையோ சோகத்தையோ அவளால் இனம் காண இயலாத நேரத்தில் அந்த குழலை இசைப்பாள்.

பச்சை போர்த்திய காட்டில் இலைகளின் சிறு இடைவெளிகளில் சூரிய கதிர் உள்ளே வந்துக் கொண்டிருந்தது. தரையில் கிடந்த காய்ந்த இலைகளின் மீது தன் அடிகளை வைத்து நடந்தாள். இலைகள் அவளது காலடி பட்டு சருகாகி போயின. சில்வண்டுகள் ரீங்காரம் எப்போதும் இருக்கும் அடர்ந்த காடுகளே அவளுக்கு மிகவும் பிடித்த இடம். ஒன்றிரண்டு பறவைகள் கானம் பாடின.

'தான தான தானின்ன தான..' என்று வாயில் வந்ததை ராகமாக பாடியபடி நடந்துக் கொண்டிருந்தவள் சட்டென தன் நடையை நிறுத்தி பக்கவாட்டில் பார்த்தாள். அடர்ந்த அந்த காட்டில் ஏதோ ஓர் முனகல் சத்தம் வந்ததை உணர்ந்தாள்.

சத்தத்தின் இருப்பிடம் எங்கே என கண்டுபிடிக்க முயற்சித்தாள். பத்து நிமிட தேடலில் ஒரு பெரிய புதரின் பின்னாலிருந்து சத்தம் வருவதை கண்டுபிடித்தாள். அந்த புதரின் பின்னால் காட்டுப்பன்றி ஒன்று கண்ணி ஒன்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

பன்றியை கண்டவள் பயந்து போய் பின்னால் நகர்ந்து தொப்பென தரையில் விழுந்தாள்.

அவளுக்கும் பன்றிக்கும் மட்டும் எப்போதுமே ஒத்துப் போகாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை பன்றி ஒன்று அவளை துரத்தி துரத்தி வேட்டையாடியது. அந்த வேட்டையில் செங்கா தப்பி விட்டாலும் கூட அந்த பன்றியால் அவளது வலது கால் தொடையில் ஆழமான காயம் ஏற்பட்டு விட்டது. அதன் தழும்பு கூட இன்னமும் இருந்தது.
அந்த பன்றி வேறு இவளை கண்டதும் இன்னும் அதிகமாக உறுமியது. அதன் சத்தத்தில் செங்காவிற்கு கை கால்கள் நடுங்கியது.

"இங்கே பாரு.. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஆபத்துல இருக்கறது நீதான். ஆனாலும் என்னை மிரட்டுற.. என்னால உன்னை காப்பாத்த முடியாதுன்னு உனக்குமே தெரியும். அதனால நான் இங்கிருந்து போறேன் பார்த்துக்க.." என்றவள் தரையிலிருந்து எழுந்து வேகமாக ஓடினாள்.

ஒரு பெரிய சொட்டை காட்டிற்கு வந்ததும் தன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தாள். அங்கே செல்போனுக்கு டவர் கிடைக்கும் என்பதால் தனது போனை எடுத்து வனகாவலர் அருவிக்கு கால் செய்தாள்.

"எண்ணா.." இவளின் கத்தலில் அவர் முகம் சுளித்திருப்பார் என இவளுக்கும் தெரியும்.
"என்ன செங்கா.."

"எண்ணா இங்க ஒரு பன்னி கண்ணியில மாட்டி சாகற மாதிரி இருக்கு.. வந்து காப்பாத்து.." என்றாள்.

"இன்னைக்கு எனக்கு கம்பார மலையில ஒரு வேலை இருக்கு.. என்னால அங்க வர முடியாது.."

"நீ வந்து இந்த பன்னியை காப்பத்தலன்னா அப்புறம் நான் உன் மேல பாரஸ்ட் ஆபிசர்கிட்ட புகார் தருவேன்.. அவர் என் கூட்டாளி தெரியும்தானே..?" என்றாள். சின்ன புள்ளையில இருந்து காட்டை மட்டும் சுத்தினா பாரஸ்டரும் ரேஞ்சரும்தானே நண்பர்களாக இருப்பாங்க.?

"வந்து தொலையிறேன்.." என போனை வைத்தவர் அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரை அழைத்துக் கொண்டு பன்றி இருந்த இடத்திற்கு சென்றாள் செங்கா. அந்த பன்றி இப்போது அரை மயக்கத்தில் இருந்தது. அருவி தன் கையிலிருந்த சிறு துப்பாக்கியால் அந்த பன்றியை சுட்டார்.

"அடப்பாவி பனங்கொட்டை மண்டையா.. அந்த பன்னியை எதுக்கு சுட்ட.?:" என கேட்டவள் கீழே கிடந்த கம்பு ஒன்றை கையில் எடுக்க அவர் பதறி போய் ஓரடி நகர்ந்து நின்றார்.

"அந்த தடியை கீழ போடும்மா.. அந்த பன்னிக்கு மயக்க ஊசியை போட்டிருக்கேன்.. இது நானே தயார் செஞ்ச துப்பாக்கி.." என்றார் அவசரமாக அவர்.

செங்கா பன்றியை பார்த்து விட்டு தன் கையில் இருந்த கம்பை கீழே போட்டாள். அந்த பன்றியின் அலட்டல் இப்போது முழுவதுமாக குறைந்து போயிருந்தது. அருவி அதன் அருகே சென்று அது சிக்கி கொண்டிருந்த கண்ணிகளை விடுவித்து எடுத்தார்.

அந்த கண்ணிகள் பையில் போட்டுக் கொண்டு திரும்பியவர் பாதையை தேடி புறப்பட, அவர் பின்னால் ஓடிய செங்கா "அதுக்குள்ள போறிங்கள.? அந்த பன்னியை ஆஸ்பத்திரி கூட்டிப்போய் ஊசி போட்டு விடுங்க.." என்றாள்.

அவர் கடுப்போடு நின்று திரும்பி பார்த்தார். "அந்த பன்னி நல்லாதான் இருக்கு.. அதுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல.. பத்து நிமிசத்துல மயக்கம் தெளிஞ்சி எழுந்து ஓடிடும்.. என்னை விடு.. நான் கிளம்பறேன்.. எனக்கு வேற வேலை நிறைய இருக்கு.." என்றவர் வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தார்.

"ஆமா இப்ப எதுக்கு சிலுத்துக்கிட்டு போறிங்க.?" என செங்கா கோபமாக கேட்கவும் அவர் ஆத்திரத்தோடு அவளை பார்த்தார்.

"என் பனங்கொட்டை தலையை வச்சிக்கிட்டு உன்கிட்ட நான் வேற என்ன பேசுறது.?" என்றார்.

செங்கா சிரிப்பில் தான் விட்ட வார்த்தையை மறைக்க பார்த்தாள்.

"அட இதெல்லாம் பாசமா கூப்பிடுறது. இதுக்கெல்லாம் கோவிச்சிக்கலாமா.?" என்றவள் அவரை நெருங்கி வந்தாள். அவரது கையை பற்றினாள். அவளது மற்றொரு கை அவரது பின் பாக்கெட்டுக்கு சென்றதை அவர் கவனிக்க தவறி விட்டார்.

"உங்க துப்பாக்கி நல்லா இருக்கு.. எனக்கு தரிங்களா.? நான் ரெண்டு நாளுல திருப்பி தந்துடுறேன்.." என்று கொஞ்சலாக கேட்டாள்.

அவளிடமிருந்து விலகி நின்றார் அருவி. "என்னை என் வேலையை விட்டு துரத்த நீயும் ரொம்ப நாளா முயற்சி பண்ற.. ஆனா அது மட்டும் உன்னால முடியாது.." என்றவர் அங்கிருந்து கிளம்பி போய் விட்டார்.

அவர் கண் பார்வையிலிருந்து மறைந்ததும் தன் முதுகு பின்னால் இருந்த துப்பாக்கியை முகத்திற்கு நேராக கொண்டு வந்தாள் செங்கா.

"இந்த வார பயணம் களை கட்ட போகுது.." என துள்ளலோடு சொன்னவள் அடர்ந்த வனத்தின் உள்ளே துள்ளிக்கொண்டு ஓடினாள்.

இவள் இங்கு துள்ளலோடு ஓடிய அதே நேரத்தில் வீடு திரும்பியிருந்த கலையரசி சாமிநாதனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

word cound 1208
LIKE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN