நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புதன் கிழமை காலை..

கலையரசி தனது வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள். வாசலை தெளித்து கோலத்தை போட்டு முடித்தாள். பொன்னா வீட்டை சுற்றி உள்ள புற்களை பிடிங்கி எறிந்தாள். அதன் பிறகு அவளால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்தாள். ஆனால் அவளது நினைவெல்லாம் விஷ்வா மட்டுமே இருந்தான். அவனோடு கோபித்து கொண்டது தவறோ என நினைத்தாள். விடாமல் ஃபோன் செய்பவனிடம் ஒரு வார்த்தை பேசி விட்டாலாவது தன் மனம் நிறையும் என்று எண்ணினாள். அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் மனதின் போராட்டத்தை நிறுத்தவேணும் ஃபோன் செய்யலாம் என நினைத்தாள்.
தனது ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு தள்ளி இருந்த ஒரு பாலை மரத்தடிக்கு சென்றாள். அம்மா கண்டுபிடிக்கும் முன்னால் ஃபோனை பேசி முடித்து விட வேண்டும் என நினைத்து விஷ்வாவுக்கு அவசரமாக போன் செய்தாள்.

விஷ்வாவிற்கு அப்போதுதான் ஃபோன் செய்திருந்தான் அதியன்.

"மீட்டிங்க்ல கரெக்டா நடந்துக்கோடா.." என்றான் அவன்.

"ஒரே வார்த்தையை இன்னும் எத்தனை தடவைதான் சொல்வ.? நான் என்ன குழந்தையா விடு.. பார்த்துக்கறேன்.. நீ உன் பிரெண்ட் கல்யாணத்தை பாரு.." என சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான். அவன் இன்னும் கட்டிலை விட்டே எழாமல்தான் இருந்தான்.

"புவி.. புவி.." என்று அருகிலிருந்த தலையணையை தன் முகத்தோடு அணைத்தான். "ஏன் இப்படி பண்ற.? என் ஃபோனை எடுத்தா நீ என்ன குறைஞ்சா போயிடுவ.?"

தலையணையோடு அவன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவனது போன் ஒலித்தது.

"ஆ.. கடவுளே.. இந்த அதியன் எதுக்கு இப்படி அடிக்கடி ஃபோனை பண்ணி உயிரை எடுக்கறானோ.?" என புலம்பியபடி போனை எடுத்தவன் திரையில் இருந்த புவி என்ற பெயரை கண்டதும் சட்டென எழுந்து அமர்ந்தான்.

முகத்தை துடைத்து தலையை கோதி விட்டுக் கொண்டான். வாயின் வாசத்தை சோதித்தான். கட்டிலை விட்டே இன்னும் எழவில்லை என்பதால் தன் வாயின் வாசத்தை சுவாசித்து விட்டு நெற்றியில் அடித்துக் கொண்டான். அருகில் யாராவது இருந்திருந்தால் "போன்லதான் நீ பேசபோறா அதுக்கு ஏன் மவுத் ப்ரஸா இருக்கான்னு பார்க்கற"ன்னு கேட்டிருப்பாங்க.

"ஹலோ புவி.. பொன்னா.." என்றான். தான் செய்த தவறுக்கு நாக்கை கடித்துக் கொண்டான்.

"ஏன் இப்படி பண்றிங்க விஷ்வா.?" என கேட்டவளின் குரலில் இருந்த சோகம் கண்டு நெற்றியில் அறைந்து கொண்டான் இவன்.

"சாரி.." என்றான் அவசரமாக.

"நீங்க என்னை புவின்னு கூப்பிடுற ஒவ்வொரு முறையும் நான் எனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை உணருறேன். என் பேர் நல்லா இல்லன்னு ஒரு எண்ணத்தை எனக்குள்ள பதிய வைக்கிறிங்க நீங்க.. இன்னைக்கு சாதாரண பேருல ஆரம்பிக்கிறது நாளைக்கு கௌரவம், வசதின்னு வந்து முடியும்.." என்று வருத்தத்தோடு சொன்னவள் "நான் உங்களுக்கு போன் பண்ணது தப்பா.?" என்றாள்.

"இ.. இல்ல பொன்னா.. இனி எப்பவும் புவின்னு கூப்பிட மாட்டேன்.. ப்ராமிஸ்.. ப்ளீஸ். ஃபோனை வச்சிடாத.."

அவள் முகத்தில் குறும் சிரிப்பு படர்ந்தது.

"என்ன பண்ணிட்டு இருக்க.?" என்றவன் தலையணையில் ஒய்யாரமாக சாய்ந்தான்.
அவளோடு பேசுவதே தன்னை ஏதோ செய்வதை உணர்ந்தான்.

"நான் உங்ககிட்ட போன்ல பேசிட்டு இருக்கேன்.."

"ஓ.. அதுக்கும் முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்த.?" அவனது குரலில் கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சல் கலந்துக் கொண்டிருந்தது.

"நான் வீட்டை சுத்தி இருந்த களைகளை பறிச்சிட்டு இருந்தேன்.."

"இந்த வேலையெல்லாம் நீ ஏன் செய்ற.? உன் தங்கச்சியை செய்ய சொல்ல வேண்டியதுதானே.?"

"அவ மறுபடியும் கரட்டுக்கு போயிட்டாப்பா.. மறுபடி வர நாலஞ்சி நாள் ஆகும். நானும் நாளைக்கு காலேஜ்க்கு கிளம்பிடுவேன் இல்லையா. அதான் இந்த சின்ன வேலைகளையாவது செய்யலாமேன்னு செஞ்சேன்.." என்றாள் பாலை மரத்தில் சாய்ந்தபடி.
மரத்தின் தோலை நகத்தால் கீறியவள் "நீங்க என்ன பண்றிங்க.?" என்றாள். குரலில் வெட்கம் கலந்தது ஏனென அவளுக்கே தெரியவில்லை.

"நான் இப்பதான் தூக்கத்துல இருந்து எழுந்தேன்.." என்றான் கொட்டாவி விட்டுக் கொண்டே.
"ஓ.." என்றவளுக்கு அதன் பிறகு என்ன கேட்பது என தெரியவில்லை.

"உன் வீடு இருக்கற லொகேஷன் ஷேர் பண்ணேன்.. ப்ளீஸ்.."

பொன்னா தலையை அசைத்தாள். "மாட்டேன்.. நான் லவ் பண்றது என் அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்க.."

"நாம கல்யாணம் பண்ணி குழந்தையெல்லாம் பெத்துக்கறதா இருந்தா அதுக்கு இன்னும் ஒரு யுகம் ஆகும் இல்ல.?" பெரு மூச்சோடு அவன் கேட்க இவளுக்கு சிரிப்பு வந்தது.

"உங்க ஊர் எதுன்னுதான் சொல்ல மாட்டேனுட்ட.. ஒரு செல்பியாவது எடுத்து அனுப்பும்மா.." கடைசி அம்பை எறிந்தான்.

பொன்னா சில நொடிகள் யோசித்தாள். பின்னர் "சரி அனுப்புறேன்.." என்றாள். தன்னை ஒரு புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

"போட்டோ வந்துடுச்சா.?" என்றாள்.

"ம்.. வாவ் நீ காலையிலேயே செமையா இருக்க.. உன் பேக்கிரவுண்ட் கூட சூப்பரா இருக்கு.." என்றவனிடம் "ஆமா.. எங்க ஊர் சூப்பராதான் இருக்கும்.." என்றாள் வெட்கத்தோடு.

"வெட்கப்படுறியா.? நான்தான் நேர்ல இல்லாம போயிட்டேன்.."

"பொன்னா.." கலையரசியின் குரல் ஃபோன் மூலம் விஷ்வாவிற்கும் கேட்டது.

"எங்க அம்மா கூப்பிடுறாங்க.. நான் அப்புறம் ஃபோன் பண்றேன்.. டாடா.." என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு அவசரமாக வீட்டை நோக்கி ஓடினாள்.

நொடி நேரத்தில் வியர்த்து விட்டது முகம். பயத்தில் துடிக்கும் இதயத்தோடு வாசலுக்கு வந்தவள் "ஏன்ம்மா கூப்பிட்ட.?" என்றாள்.

கலையரசி உணவை சமைத்து முடித்து அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்தாள்.

"ஆளை காணமேன்னு கூப்பிட்டேன்.. எங்க இருந்த இவ்வளவு நேரம்.." என கேட்டவள் மகளின் கலைந்த கேசத்தை பார்த்ததும் அவளை திருப்பி நிறுத்தி பின்னலை அவிழ்த்தாள்.
தன்னை விட தன் மகள் உயரமாக இருந்தது சிறு பெருமையாக இருந்தது அவளுக்கு. மற்ற நேரங்களில் அப்பன் குணம் என சொல்லி திட்டுபவள் இந்த உயரத்திற்கு மட்டும் சாமிநாதனை தனியொரு ரகசியமாக நேசித்தாள்.

"போய் சீப்பு எடுத்துட்டு வா.." என்றாள். அவள் சீப்போடு திரும்பி வந்ததும் அவளுக்கு தலையை வாரி விட ஆரம்பித்தாள்.

"இந்த செங்காதான் என்ன பிறப்பா பிறந்தாளோ சாமி.. அவ தலையில கூட என்னை கை வைக்க விட மாட்டேங்கிறா.. காளை மாட்டை அடக்கினவனால கூட இவளை அடக்க முடியாது போல. எங்க இருக்கானோ மகராசன். இவளை கட்டிக்கிற வரைக்குமாவது நல்லா இருக்கட்டும்.." கலையரசி சொன்னதை கேட்டு பொன்னாவிற்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

"அந்த கழுதைக்கு ஏதாவது எருமை மாடா பார்த்துதான் கட்டி வைக்கணும்மா.." என்றாள் பொன்னா பதிலுக்கு.

கலையரசி அவளுக்கு தலையை வாரி பின்னி முடித்தாள். மகளை முன்னால் திருப்பியவள் மகளின் அழகை கண்டு தன் கண்ணே பட்டுவிட்டது என்று திருட்டி கழித்து நெட்டி முறித்தாள்.

"உங்க அப்பன் வயலுக்கு போய் ரொம்ப நேரம் ஆகுது.. சாப்பாட்டு வேளை வந்தது கூட தெரியாம இருக்காரு போல.. நீ போய் அவரை கூட்டி வா தங்கம்.." என அனுப்பி வைத்தாள்.
பொன்னா எப்போதுமே கலையரசியின் செல்லம்தான். செங்கா சாமிநாதனின் செல்லம் மட்டுமல்ல வெல்லக்கட்டியும் கூட.

பொன்னா சாமிநாதனை தேடி வயலுக்கு சென்ற நேரத்தில் அவர்கள் வீட்டின் முன்னால் வந்து நின்றது ஒரு கார்.

நான்கைந்து ஆட்கள் இறங்கி அவர்களது வீட்டை நோக்கி வந்தனர். கலையரசி வந்தவர்களை கண்டதும் சந்தேகமானாள். சுத்து வட்டார வீடுகளில் இருந்தவர்கள் கூட அனைவரும் வயலுக்கு வேலைக்கு சென்றிருந்த நேரம் அது. துணைக்கு ஆள் இல்லாத நேரத்தில் தன்னை தேடி யார் வருகிறார்கள் என்றெண்ணி சிறிது பயந்தாள்.

"யார் நீங்க.?" என்றாள் பந்தல் அடியில் வந்து நின்றவர்களிடம். அவளுக்கு அவர்கள் பதில் தரவில்லை. ஒருவன் துப்பாக்கி ஒன்றை எடுத்து அவளது தலைக்கு குறி வைத்தான்.

அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற மற்றொரு காரிலிருந்து சீனு இறங்கி வந்தான். தன் கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி விட்டு அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தான்.

"நல்ல இயற்கையான சூழல்.." என்றான். பின்னர் கலையரசியின் அருகே வந்து அவள் முன்னால் நின்றான். அவளை மேலும் கீழும் பார்த்தான்.

அவள் உயிரோடு இருப்பது அவனுக்கு இப்போதும் கூட பெரும் அதிர்ச்சியை தந்தது. அவனுக்கு பத்து பன்னிரெண்டு வயதிருக்கும் போதுதான் கலையரசி வீட்டிலிருந்து தன் காதலன் சாமிநாதனை தேடி ஓடினாள். அவளை கொல்ல வேண்டுமென தேடி போன சீனுவின் தாத்தா சாமிநாதனின் நண்பனான மகேஷ் என்றவன் கலையரசியையும் சாமிநாதனையும் கொன்று விட்டதாக வந்து சொன்னார். யாரோ ஒருத்தர் கொன்று விட்டால் போதும் என்று அமைதியாக இருந்து விட்டது அவர்களின் குடும்பம்.
அவளை தனது முப்பத்தைந்தாவது வயதில் மீண்டும் பார்ப்போம் என அவன் இதுவரை நினைத்து பார்த்ததே இல்லை.

பத்து பன்னிரெண்டு வயதில் வாழ்க்கை என்னவென தெரியாவிட்டாலும் கூட சீனுவிற்கு தங்கள் வீட்டுக்கு எது கௌரவம் என்று புரிந்தது. சாதி தாண்டி அந்தஸ்து தாண்டி காதலித்த தன் அத்தையால் தங்கள் மொத்த வீட்டுக்கும் அவப்பெயர் மட்டுமே வரும் என்று நம்பியவன் இதுவரை பத்து பெண்களையாவது வீட்டிற்கே கூட்டி வந்து குடும்பம் நடத்தி இருப்பான்.

துப்பாக்கி ஏன் தன் தலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரியாமல் இருந்த கலையரசி தன் முன் வந்து நின்ற சீனுவை கண்டதும் ஏதோ ஒன்றை யூகித்தாள். அவள் தனது ஊரை விட்டு ஓடி வந்து விட்டாலும் கூட நண்பன் மகேஷ் மூலம் தன் வீட்டின் நிலவரம் என்னவென்று அடிக்கடி கேட்டுக் கொண்டேதான் இருப்பாள். அவன் சீனுவின் புகைப்படத்தையும் இரண்டு மூன்று முறை இங்கு அனுப்பி இருக்கிறான். அதனால் பார்த்தவுடனே சீனு யாரென கண்டுக் கொண்டாள் அவள்.

"உனக்கு என்ன வேணும் சீனு.? இத்தனை வருசம் முடிஞ்ச பிறகும் கூட ஏன் எங்களை நிம்மதியா வாழ விட மாட்டேங்கிறிங்க.?" என்றாள் கோபத்தோடு.

"ஓ.. என் அத்தைக்கு நான் யாருன்னு தெரிஞ்சிருக்கே.. பரவால்ல.. நான் கூட என்னை அறிமுகப்படுத்திக்க டைம் ஏதும் வேஸ்ட் பண்ணனுமோன்னு நினைச்சேன்.." என்றவன் "உட்கார்ந்து பேசலாமா.?" என கேட்டான்.

கலையரசி தலையை ஆட்டினாள்.

"முடியாது.. எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லிட்டு கிளம்பு.." என்றாள் வெறுப்போடு.

"ஒரு அண்ணன் மகனை வரவேற்கும் லட்சணமா இது.?" அவன் கிண்டலாக கேட்க அவள் தன் தலையை குறி வைத்திருந்த துப்பாக்கியை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

"நேர்ல பார்க்கும் முன்னாடியே துப்பாக்கியை நெத்தியில வச்ச உன்னை நடுவீட்டுல உட்கார வச்சி கறி விருந்தா சமைச்சி போட முடியும்.?" என்றாள் நக்கலாக அவள்‌.

"ஓ.." என்ற சீனு தன் கையில் இருந்த பத்திரம் ஒன்றை அவள் முன்னால் காட்டினான்.

"உன் அப்பன் சாகும் நேரத்துல நல்ல புத்தி வந்து சொத்து முழுசா உங்க பேருல எழுதி வச்சிட்டாரு.. இதை என் பேருக்கு மாத்தி எழுதி கொடுங்க எனக்கு அதுவே போதும்.."
கலையரசியின் கண்களில் உடனே கண்ணீர் திரண்டது. "அ.. அப்பா இறந்துட்டாரா.?" என்றாள் அதிர்ச்சியாக.

ஊரை பற்றியும் உறவுகளை பற்றியும் அனைத்தையும் சொல்லும் மகேஷ் ஏன் தன் தந்தை இறந்ததை தன்னிடம் சொல்லவில்லை என நினைத்து அவன் மீது கோபமானாள்.

"தாத்தா எப்ப செத்தாரு..?" வேதனையோடு கேட்டாள்.

"இரண்டு வாரம் ஆச்சி.. இதை அந்த மகேஷ் சொல்லலையா.?" என்றான் நக்கலாக சீனு.

"இந்த சொத்தை நீங்க எனக்கு மாத்தி எழுதி தரணும். இதுக்கு உங்க மொத்த குடும்பமும் கையெழுத்து போடணும்.. இதை எனக்கு மாத்தி தந்துட்டிங்கன்னா அப்புறம் நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.." என்றான் அவன்.

கலையரசி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். "ம். நான் எல்லோர்கிட்டயும் கையெழுத்து வாங்கி தரேன்.. எந்த ரெஜிஸ்டர் ஆபிஸ் வரணும்.?" என்றாள்.

சீனு சிரித்தான். "ரோசம்ன்னா இப்படிதான் இருக்கணும்.. நீங்க எங்கேயும் வந்து சிரமப்பட தேவையில்லை. நான் காட்டுற இடத்துல எல்லாம் கையெழுத்தை போடுங்க.. மீதியை நாங்க பார்த்துக்கறோம்.." என்றான்.

கலையரசி சரியென தலையசைத்தாள்.

சாமிநாதன் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தான்.

"அப்பா.. அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க.." என்று இவள் அழைத்ததும் அவன் நிமிர்ந்து பார்த்தான். செய்யும் வேலையை விட்டுவிட்டு அவளோடு சேர்ந்து வீட்டிற்கு கிளம்பினான்.

இருவரும் தூரத்தில் வரும்போதே கலையரசி நெற்றியில் இருந்த துப்பாக்கியையும் சீனுவையும் பார்த்து விட்டனர்.

"ஏய்.. எல்லோரும் அவகிட்ட இருந்து தள்ளி நில்லுங்க.." என்று ஓடி வந்த சாமிநாதன் அந்த நாலைந்து பேரையும் கலையிடமிருந்து தூர தள்ளினான்.

சீனு துப்பாக்கி ஒன்றை எடுத்து சட்டென சாமிநாதனுக்கு குறி வைத்தான்.

அனைவரையும் முறைப்போடு பார்த்தவன் சீனுவை கண்டதும் கடுப்பாகி போனான். "நீ ஏன் இங்கே வந்த.?" என்றான்.

"இதோடா.. என் மாமனுக்கும் கூட நான் யாருன்னு தெரிஞ்சிருக்கு.." நக்கலாக சொன்னவன் "இதோ இந்த பத்திரங்களில் நீங்க கையெழுத்தை போட்டு தந்தா நான் இப்படியே கிளம்பி போயிடுறேன்.. இல்லன்னா உங்களை இப்பவே கொன்னுடுவேன்" என்றான்.

அந்த நேரத்தில்தான் சாமிநாதனுக்கும் சீனுவுக்கும் இடையில் ஓடி வந்து நின்றாள் பொன்னா. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு என்ன பிரச்சனை என்றுதான் தெரியவில்லை.

"எங்க அப்பாவை விட்டுடுங்க.." என்றாள் கெஞ்சலாக. அவளது கெஞ்சல் குரலை கேட்டு சாமிநாதனுக்கு கோபம் வந்தது.

'இதெல்லாம் ஒரு பிள்ளையா.? இன்னேரம் என் செங்காவா இருந்திருந்தா உதையை இவன் மூஞ்சியை பார்த்து தந்திருப்பா..' என்று எண்ணினான்.

பொன்னாவை கண்டதும் அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் கண்டதும் சீனுவின் கையில் இருந்த துப்பாக்கி தானாக கை நழுவியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1324
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN