நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தலைவலி என சொல்லிய சந்தியா விரைவிலேயே இனியனின் தோள் மீது சாய்ந்து உறங்கி விட்டாள்.

அவளை படுக்கையில் விட்டு விட்டு எழுந்து சென்று குளித்து வந்தான் இனியன்.
இனியன் ஹாலுக்கு வந்த போது பொன்னி காப்பியோடு அவனெதிரே வந்தாள். "சூடு குறையும் முன்னாடி காப்பி குடி.." என்றவள் காப்பி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.

அந்த காப்பியை வாங்கி கொண்டவன் நேராக கிச்சனுக்கு சென்று இஞ்சியை தேடி எடுத்தான்.

"என்னடா பண்ற.?" பாட்டி புரியாதவளாக கேட்டாள்.

"சந்தியாவுக்கு டீ வச்சி தர போறேன்.." என்றவன் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சுட வைக்க ஆரம்பித்தான்.

"அதை நான் பண்ணிக்கிறேன்.. நீ தூர போடா.. போலிஸ்காரன் டீ போட்டா பார்க்கறவன் என்னடா நினைப்பான்.?" பாட்டி அலுத்துக் கொண்டாள்.

இனியன் பாட்டியை செல்லமாக முறைத்தான்.

"போலிஸ்காரனுக்கும் பொண்டாட்டி இருக்கா பாட்டி.. பார்க்கறவன் என்ன சொல்றான்றதா முக்கியம்.? என் பொண்டாட்டிக்கு என் கையால டீ போட்டு தந்தா என் மனசு நிம்மதியா இருக்கும் இல்லையா.?" என்றவன் கொதித்த தண்ணீரில் டீத்தூளையும் இஞ்சியையும் போட்டான்.

"என்னவோ பண்ணு.." என்ற பொன்னி அவ்விடத்தை விட்டு கிளம்பி சென்றாள்.
இனியன் டீயோடு சந்தியாவிடம் வந்தான்.

"சந்தியா.. எழுந்து டீ குடிச்சிட்டு மாத்திரை போட்டுக்க.." என்றான்.

எழுந்து அமர்ந்தவள் அவன் தந்த டீயை வாங்கி குடித்தாள். "நல்லாருக்கு டீ.." என்றவளிடம் "நான்தான் போட்டேன்.." என்றான் அவன்.

சந்தியாவுக்கு மனம் நெகிழ்ந்து போனது. "தேங்க்ஸ்.." என்றவளிடம் மாத்திரையை நீட்டினான் அவன்.

அவள் மாத்திரையை விழுங்கி விட்டு மீண்டும் உறங்கி போனாள். தாங்க முடியாத தலைவலி போல என எண்ணிக் கொண்டான் இனியன்.

"சார்.." என அழைத்தபடி வந்தாள் மேகலை.

சந்தியா முகத்தை பார்வையால் விழுங்கி கொண்டிருந்தவன் மேகலையின் குரல் கேட்டு எழுந்து வந்தான்.

"என்னம்மா.?"

"உங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு சார்.." என்றவள் கடிதம் ஒன்றை அவனிடம் நீட்டினாள்.

இனியன் அந்த கடிதத்தை பிரித்து படித்தான். அவன் சந்தேகப்பட்டது போலவே அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த கடிதம்தான் அது.

'உன் நிம்மதி அழிவதில்தான் என் நிம்மதி பிறக்கும்..' என மீண்டும் ஒரு மொட்டை கடுதாசிதான் வந்திருந்தது.

'இதுவரைக்கும் இரண்டு கேஸைதான் கை தொட்டிருக்கேன்.. அதுக்குள்ள இப்படி ஒரு மிரட்டல் கடிதமா‌.?' சலிப்போடு நினைத்தவன் கடிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

மேகலை அவன் முன் தயங்கியபடியே நின்றுக் கொண்டிருந்தாள்.

"என்ன விசயங்க.?" என்றான் இனியன்.

"சார்.. நீங்க ஏன் இப்படி இருக்கிங்க.? சந்தியா மேடம் உங்களை மதிக்க கூட மாட்டேங்கிறாங்க.. ஆனாலும் ஏன் அவங்களுக்கு இவ்வளவு அடங்கி போறிங்க.? ஆணா இருந்தா எப்பவும் கம்பீரமாதானே இருக்கணும்.. ஏன் நீங்க மட்டும் எப்பவும் பூனைக்குட்டி மாதிரி சந்தியா மேடம் காலை சுத்துறிங்க.? நீங்க எவ்வளவு லவ்வோடு சுத்தினாலும் அவங்க உங்களை குறை மட்டும்தான் சொல்றாங்க.." மேகலை தனது மனதில் தோன்றியதை அவனிடம் கேட்டு விட்டாள்.

அவள் சொல்லியதை கேட்டு இனியனுக்கு சிரிப்புதான் வந்தது.

சந்தியா இந்த பேச்சு சத்தத்தில் எழுந்து விட்டாளா என திரும்பி பார்த்தான். அவளின் மூடிய விழிகள் அப்படியேதான் இருந்தது.

"உங்களுக்கு என்னை பத்தி எதுவும் தெரியாது.. அதனாலதான் இப்படி சொல்றிங்க.. நீங்க நினைக்கிற ஆள் நான் இல்ல.. நீங்க வர்ணிக்கிற அளவுக்கு சந்தியாவும் மோசமானவ இல்ல.. இதெல்லாம் உங்களுக்கு சொன்னாலும் புரியாது.. எங்களோட காதல் கொஞ்சம் வித்தியாசமானது.." என்றவன் அறைக்குள் திரும்பி நடந்தான்.

அவனின் பதில் மேகலைக்கு திருப்திகரமானதாக இல்லை. ஆனால் அவன் அவளிடம் மீண்டும் பேச விருப்பமில்லை என சொல்வதை போல திரும்பி சென்று விட்டதால் இவளுக்கும் என்ன செய்வதென தெரியவில்லை. அவளும் அமைதியாக திரும்பி நடந்தாள்.
சந்தியாவின் அருகில் வந்து அமர்ந்தான் இனியன். அவளது கேசத்தை வருடி விட்டவன் அவள் நெற்றியில் சிறு முத்தமிட்டான்.

சந்தியாவின் கண்ணீரை தாங்கும் சக்தி அவனுக்கு இல்லை. ஆனால் அவனோடு அவள் இருக்க வேண்டும். அழுதுக்கொண்டேவானாலும் சரி. தன்னோடு இருந்தால் போதும் என்றுதான் நினைத்தான் அவன்.

இனியன் ஊருக்கு வந்து சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. மேகலையின் வழக்கும், ரகுவின் திருமணமும்தான் முன்று மாதங்களை சுலபமாக கடக்க வைத்தது என்றாலும் அவனுக்கு சந்தியாவுடனான ஊடல் கூடலில் நான்கு மாதங்கள் சென்றதே தெரியவில்லை.

'எனக்காய் பிறந்த தேவதை இவள்..' என பெருமையோடு நினைத்தவன் படுக்கையில் சாய்ந்தான். அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு ஜென்மம் முழுக்க இப்படியே முடிய வேண்டும் என ஆசையாக இருந்தது.

அவன் ஆசை அப்படியே நடக்குமா என்ன.? இரண்டு மணி நேரம் கழித்து பொன்னி வந்து இருவரையும் சாப்பிட வர சொல்லி எழுப்பி விட்டு சென்றாள்.

"எவனுக்கு வேணும் சோறு.?" என புலம்பியபடியே எழுந்து சாப்பிட சென்றான் அவன்.
மறுநாள் காலையில் அலுவலகம் வந்ததும் தேவனை அழைத்து தனக்கு வந்த கடிதத்தை காட்டினான் இனியன்.

"இந்த வேலையை யார் பார்க்கறாங்கன்னு தெரியலையே சார்.. மேகலையோட குடும்பம் ஜெயில்ல இருக்கு.. மீராவோட ரேப் கேஸ்ல சம்பந்தப்படவங்களும் ஜெயில்லதான் இருக்காங்க.." என்றவன் வேறு யார் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என யோசித்தான்.

"அதிகம் யோசிக்காம விடுங்க தேவன்.. ஏதாவது உதவாக்கரை வேலை வெட்டி இல்லாம இப்படி லெட்டர் அனுப்பிட்டு இருக்கு போல‌‌.." என்றவன் அதை அதோடு விட்டு விட்டான்.
மீராவின் வன்புணர்வு வழக்கு அவனுக்கு அதிக வேலைகளை வாங்கி விட்டது. வீட்டிற்கு வந்தால் கூட அந்த வழக்கு சம்பந்தப்பட்ட பைலைதான் புரட்டிக் கொண்டிருந்தான். நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது.

ஆனால் இன்னும் மேகலையின் அண்ணன்கள் அவளை அழைத்து செல்ல வரவில்லை. அவளது அண்ணன்கள் இருவருக்குமே அவர்களது கம்பெனி இன்னும் இரு மாதங்களுக்கு ஓயாத வேலையை தந்திருப்பதாக வருத்தத்தோடு போனில் சொன்னார்கள். அவர்கள் இல்லாமல் இவளாலும் வெளிநாடு செல்ல தேவையான டாக்குமெண்ட்ஸ் எதையும் சரி பார்த்து வாங்க முடியவில்லை.

'அதற்கென்ன பரவாயில்லை.. இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு அவள் இங்கேயே இருக்கட்டும்' என்று பொன்னி தன் முடிவை சொல்லி விட்டாள்.

அன்றைய நாள் வயலில் உள்ள நெற்கதிர்களை அறுவடை செய்வதாக சந்தியா இனியனிடம் சொன்னாள்.

"எனக்கு இன்னைக்கு ரொம்ப வேலை இருக்கு.. நீ அறுவடையை பார்த்துக்க.." என்றபடியே தனது வேலைக்கு செல்ல தயாரானான் இனியன்.

"ஈவினிங்காவது பார்ம்க்கு வா இனியா.." சந்தியா கொஞ்சலோடு கேட்டாள்.

அவளின் கன்னம் கிள்ளியவன் "சரி வரேன்.. நீ பத்திரமா இரு.. வெயில்ல இருக்காத.. அறுவடை செய்ற மெஷின் பக்கத்துல போகாதே.‌." கண்டிப்போடு சொல்லி விட்டு கிளம்பினான் இனியன்.

"ஆமா நான் குழந்தை பாரு.." என முனகிக் கொண்டே அவளும் தன் பார்ம்க்கு கிளம்பினாள்.

அன்றைய நாளில்தான் மீரா வன்புணர்வு வழக்குக்கு தீர்ப்பு சொல்வதாக நீதிபதி சொல்லி இருந்தார். தேவனோடு சேர்ந்து இனியனும் அந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.

"இவனுங்களை கோர்டுல நிறுத்தாம நாமலே என்கவுண்டர்ல போட்டுடணும் தேவன்.." இனியன் இதை மட்டும் ஐம்பதாவது தடவையாக இந்த மாதத்தில் சொல்லி விட்டான்.

"ஆனா சட்டம் வேறயாச்சே சார்.. இவங்க வன்புணர்வு செஞ்சி கொன்னுட்டா யாரும் கேட்க மாட்டாங்க.. ஆனா நாம என்கவுண்டர் பண்ணிட்டா நிறைய மக்கள் அமைப்புக்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.." எதார்த்தம் எதுவென்பதை சொன்னான் தேவன்.

"எனக்கு இந்த கேஸ் கடுப்பை தந்துடுச்சி தேவன்.. இன்னைக்கு தீர்ப்பு கரெக்டா வரலன்னா நானே இவங்களை சுட்டு கொல்ல போறேன்.." என்றவன் தன் கள்ள துப்பாக்கியை தொட்டு பார்த்துக் கொண்டே, அந்த கொலைகளின் சந்தேகத்திற்கு உரிய நபர்களின் பட்டியலிலிருந்து தான் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்றும் யோசிக்க தொடங்கினான்.
ஆனால் அவனது எண்ணத்தை செயல்படுத்த அவசியமே இல்லாமல் நீதிபதியே அவர்களுக்கு நல்ல தண்டனையாக அளித்தார்.

"எப்படியோ ஒரு வழியா இந்த கேஸ் முடிஞ்சிடுச்சி.." என்றபடி கோர்டை விட்டு வெளியே நடந்தான் இனியன். அவனோடு இணைந்து நடந்த தேவனுக்கும் இந்த வழக்கு முடிந்ததில் மகிழ்ச்சியே.

சந்தியா வயலின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். அறுவடை செய்யும் வண்டி தனது வேலைகளை முடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டது. அறுவடையான கதிர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட நெற்மணிகளை பார்ம் கட்டிடத்தில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தனர் இரு ஆண்கள்.

"எப்படியோ ஒரு வழியா இந்த முறை வெள்ளாமை நல்லா முடிஞ்சது.." என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் நித்யரூபா.

"இதையெல்லாம் உடனே விவசாயிகளுக்கு கை மாத்தி விடணும் ரூபா.. இந்த வகை நெல் பயிரிட்டாலும் லாபம் உண்டுன்னு நாம நிருப்பிச்சிட்டோம்.. இதை உண்மையான விவசாயிங்க பயிரிட்டாதான் நமக்கான லாபம் முழுசா கிடைக்கும்.. " என்றாள் சந்தியா.

"அடுத்து என்ன பயிரிட போறிங்க மேடம்.?" என்று கேட்டாள் மேகலை.

தன் கைப்பையிலிருந்த சில விதைகளை எடுத்து காட்டினாள் அவள். "இது ஒரு வகையான துவரை.. இது கொடியாக ஓடும்.. கொத்து கொத்தான காய்கள் செடி முழுக்க காய்க்கும்.. ஆனா இது எந்தவித மாற்றமும் இல்லாத பழங்கால துவரை.. இதோட விதைகள் அதிகமா புழக்கத்துல இல்ல.. இதைதான் அடுத்ததா பயிரிட போறேன் நான்.." என்றவள் தனது சொந்த கற்பனையில் லயித்து இருந்தாள்.

"வீட்டுக்கு கிளம்பலாமா மேடம்.? டைம் ஆச்சி.." என்று தன் கை கடிகாரத்தை பார்த்தாள் மேகலை.

இனியனை இங்கு வர சொல்லி இருக்கிறோமே என நினைத்த சந்தியா தனது ஃபோனை எடுத்து அவனுக்கு அழைத்தாள். ஆனால் அவன் ஃபோனை எடுக்கவேயில்லை.

'இங்குதான் வந்துட்டு இருக்கான் போல..' என நினைத்தவள் "நீங்க இரண்டு பேரும் போங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அப்புறமா நான் வீட்டுக்கு வந்திடுறேன்.." என கூறி இருவரையும் அனுப்பி வைத்தாள்.

சூரியன் மேற்கில் மறைய ஆரம்பித்து இருந்தான். சந்தியா வரப்பு ஒன்றின் மீது அமர்ந்து சாலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

நேரம்தான் சென்றதே தவிர இனியனை காணவில்லை. "பிசாசு.. வர முடியலன்னு முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே.? வரேன்னு சொல்லி ஏன் ஏமாத்தணும்.?" என திட்டியவள் எழுந்து நின்றாள்.

பார்ம் கட்டிடத்தை பூட்டி விட்டு சாலைக்கு வந்தாள். அரை இருளில் ஒரு வாகனம் கூட அந்த வழியில் வரவே இல்லை.

"இந்த சாயங்கால வேளையில் என்னை நடக்க விட்டுட்டானே.." இனியனை திட்டி கொண்டே நடந்தாள்.

அவனை திட்ட ஆசைக்கொண்டவள் மீண்டும் அவனுக்கு அழைத்தாள். இவ்வளவு நேரமும் ரிங் ஆன ஃபோன் இப்போது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.

"கொடுமை இவனோடு‌‌.." என எண்ணியவள் எட்டி அடியெடுத்த வைத்து நடந்தாள்.

கார் ஒன்று அவளை உரசியபடி வந்து நின்றது. அந்த வாகனத்தில் லிஃப்ட் கேட்கலாமா என அவள் நினைத்த நேரத்தில் காரில் இருந்து இறங்கினர் இருவர். அவர்களின் காண்டாமிருக பார்வையை அந்த அரை இருளில் கண்டவள் பயந்து போய் பின்னால் நகர்ந்து நின்றாள்.

'யார் இவங்க.? இந்த நேரத்துல இங்கே என்ன பண்றாங்க.? ஒருவேளை என்னைத்தான் கடத்த வந்திருக்காங்களா.? ஆனா எனக்குதான் கல்யாணம் ஆயிடுச்சே.. ரகுவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சே..'

அவளது மூளை ஆபத்து என்பதை உணர்ந்தது. அவள் அங்கிருந்து ஓட முயலும் ஒருவன் அவளது வாயை பொத்தி அவளை காரில் ஏற்றினான். இன்னொருவன் அந்த பக்கத்து கதவை சாத்தி விட்டு மறுபக்க கதவு வழியாக காரில் ஏறினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1113
VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN