நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சீனுவின் அருகில் இருந்த ஒருத்தன் தனது துப்பாக்கியை எடுத்து பொன்னாவின் முகத்துக்கு நேராக நீட்டினான். அதை சட்டென தட்டி விட்டான் சீனு.

"யாராவது இவ பக்கத்துல வந்திங்கன்னா உங்களை இங்கேயே புதைச்சிடுவேன்.." என்றவன் மின்னும் கண்களோடு பொன்னாவை பார்த்தான்.

"நீ இவங்க பொண்ணா.?" என்றான். அவள் பயத்தோடு ஆமென தலையசைத்தாள்.

"நீ எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு.." என்ற சாமிநாதன் பொன்னாவை தன் முதுகுபுறம் இழுத்து விட்டுக் கொண்டான். அவனின் முதுகு புறம் இருந்து எட்டி பார்த்த பொன்னா அவனை இதற்கு முன் எங்கு பார்த்தோம் என்பதை புரிந்துக் கொண்டாள்.

'இந்த பொறுக்கி ஏன் இங்கே வந்திருக்கான்.?' என சந்தேகித்தாள்.

பொன்னாவை ஆசை நிறைந்த கண்களோடு வெறித்தான் சீனு. "உன் பேர் என்ன.? உன்னை பார்த்ததிலிருந்து நான் பைத்தியமா மாறிட்டேன் தெரியுமா.? நீ யாருன்னு விசாரிக்க இருந்தேன். ஆனா அதுக்குள்ள உன்னை பார்த்துட்டேன்.." ஆச்சரியத்தோடு சொன்னவன் கலையரசியையும் பொன்னாவையும் மாறி மாறி பார்த்தான்.

"நீ என் அத்தை பொண்ணுன்னு நான் கனவுல கூட நினைக்கல.." ஆச்சரியத்தோடு அவன் சொல்ல பொன்னா அப்பாவியாக தன் அம்மாவை பார்த்தாள்.

'அத்தை பொண்ணா.?'

"அவளோடு ஏன் பேசுற.? உனக்கு தேவை கையெழுத்துதானே.? எங்கே போட்டு தரணும்ன்னு சொல்லு. நான் கையெழுத்தை போட்டு தரேன்.." என்ற கலையரசி அவன் கையில் இருந்த பத்திரங்களை பறித்தாள். ஆனால் உடனே அதை திருப்பி பறித்துக் கொண்டான் சீனு.

"இல்ல.. அதுக்கும் முன்னாடி வேற ஒன்னு பேச வேண்டி இருக்கு.." என்ற சீனு பொன்னாவை தலை முதல் கால் வரை அளந்தான்.

"இரண்டு நாள் முன்னாடி உங்க பொண்ணை ஒரு ரெஸ்டாரண்ட்ல பார்த்தேன் அத்தை. இதுவரை நான் எப்படி இருந்தேன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆனா உங்க பொண்ணை பார்த்த உடனே நெஞ்சுக்குள்ள தீ பிடிச்சிடுச்சி. இரண்டு நாளா இவ நினைவால பசிக்கல, தூக்கம் வரல.. இவளோட பிண்ணனி விசாரிச்சி இவளை பொண்ணு கேட்டு போகணும்ன்னு இருந்தேன். ஆனா பழம் நழுவி பாலுல விழுந்த கதையா இவ என் அத்தை பொண்ணானது விதின்னுதான் சொல்லணும்.." அவன் சொன்னதை கேட்டு சாமிநாதனுக்கு கோபமாக வந்தது.

"நான் என் பொண்ணை உனக்கு தரதா இல்ல.. நீ உன் அத்தைக்கிட்ட என்ன கையெழுத்தை வாங்கணுமோ வாங்கிட்டு கிளம்பு.." என்ற சாமிநாதன் மகள் பக்கம் திரும்பினான்.
"நீ வீட்டுக்குள்ள போம்மா.." என்றான்.

சீனுவுக்கு கோபம் வந்தது. "இங்கே பாருங்க மாமா.. நான் அவளை உயிரா நேசிக்கிறேன்.. அவளை எனக்கு நல்லபடியா கட்டி தந்துடுங்க.. இல்லன்னா இங்கே நடக்கறதே வேற.." என்றான்.

பொன்னா பயத்தோடு அவர்களை கடந்து வீட்டிற்குள் சென்றாள். பதட்டமாகவே இருந்தது அவளுக்கு. கதவை பிடித்தபடி நின்றிருந்தவள் அடுத்து என்ன நடக்குமோ என்று பார்த்தாள்.

"என் பொண்ணுக்கு நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணுவதாக இல்ல.. அப்படியே இருந்தாலும் அவளை பாழுங்கிணத்துல தள்ளுவேனே தவிர உனக்கு கட்டி தர மாட்டேன்.."

"நீங்க ஏன் இப்படி சொல்றிங்க மாமா.? நீங்க என் வீட்டு பொண்ணை கட்டிக்கும்போது நான் உங்க பொண்ணை கட்டிக்க கூடாதா.?" என்றான்.

கலையரசி பக்கம் பார்த்த சாமிநாதன் "இவன் வந்த வேலையை முடிச்சி சீக்கிரம் இங்கிருந்த அனுப்பி வச்சிடு.. இல்லன்னா நான் வேற ஏதாவது பண்ணிடுவேன்.." என்றான்.
கலையரசி இவனையும் சீனுவையும் மாறி மாறி பார்த்தாள்.

"அத்தை நீங்களாவது என் காதலை புரிஞ்சிக்கங்க.. உங்க பொண்ணுன்னா எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு.. நீங்க இவளை எனக்கு கட்டி தரதா இருந்தா இந்த மொத்த சொத்தையும் நான் உங்களுக்கே தந்திடுறேன்.." என்றான்.

"சரிப்பா.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்.. அப்புறம் இதை பத்தி பேசிக்கலாம்.." என்று சொன்னவளை சடக்கென தன் பக்கம் திரும்பினான் சாமிநாதன்.

"என்னடி சொல்ற.? என் மகளை இந்த பொறுக்கி கூட சம்மதம் பண்ண உனக்கு என்ன உரிமை இருக்கு.? அவன் சொத்தை தரேன்னு சொன்ன உடனே மனசு மாறிட்டியா.? உன் குடும்பத்து குணம்தானே உன்கிட்டயும் இருக்கும்.?" என்று கேட்டவனுக்கு தன் நண்பன் மகேஷ் சீனுவை பற்றி சொன்ன அத்தனையும் நினைவுக்கு வந்தது. பார்க்கும் பெண்களையெல்லாம் காதல் என சொல்லி சீரழித்த இவனுக்கு தன் மகள் பொருத்தமா என்று எண்ணினான்.

கலையரசி முகம் இவன் சொன்னதை கேட்டு வாடி போனது. அவள் ஏதோ சொல்ல முயலும் முன் சீனு தன் கையிலிருந்த துப்பாக்கியை சாமிநாதனுக்கு நேராக நீட்டினான்.

"பார்த்து பேசுங்க மாமா.. உங்க பொண்ணு என் பொண்டாட்டின்னு ஆண்டவனே தீர்மானிச்சிட்டான். நீங்க இங்கே அதை மாத்த பார்க்காதிங்க.." என்றான். அவனது வார்த்தைகளை கேட்கும்போது அப்பாவி யாரேனும் இருந்தால் உண்மையென நம்பி விடுவார்கள். அவ்வளவு உருக்கமாக பேசினான்.

"துப்பாக்கி காட்டி மிரட்டினா நான் என் பொண்ணை தந்துடுவேன்னு நினைச்சியா.?" என அவன் கேட்க சீனு துப்பாக்கியின் டிரிக்கரில் விரலை பதித்தான். துப்பாக்கியை சாமிநாதனின் நெற்றியில் பதித்தான். சாமிநாதன் அந்த துப்பாக்கியை பறிக்க முயன்ற நேரத்தில் அவனை அடியாட்கள் பிடித்து நிறுத்தினர்.

"மிரட்டலோ கெஞ்சலோ.. எனக்கு தேவை உங்க பொண்ணு.. அவ எனக்கு வேணும்.." என்றான் சீனு.

சாமிநாதன் நெற்றியில் துப்பாக்கி பதியவும் பொன்னை பயந்துபோய் வெளியே ஓடி வந்தாள்.

"உள்ளேயே இரு பொன்னா.. இங்கே வராத.." என்று எச்சரித்தான் சாமிநாதன்.

சீனுவின் முன்னால் வந்து நின்றாள் அவள். "எங்க அப்பாவை ஏதும் பண்ணிடாதிங்க.. ப்ளீஸ்.." என்றாள் கையெடுத்து கும்பிட்டபடி.

அவளை சட்டென தனக்கு முன்னால் திருப்பியவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவனது பிடியிலிருந்து நகர நினைத்தபோது அவனது கரம் இன்னும் வலிமையானது. "உங்க அப்பாவை கொல்ல எனக்கு மட்டும் ஆசையா என்ன.?‌" என்றான் அவளின் காதோரம். அவளது கைகள் பட்ட இடம் அவளுக்கு அருவெறுப்பை தந்தது.
அவனது மூச்சுக்காற்று தன் முகத்தில் மோதியதில் துக்கமும் பயமும் வந்து சேர்ந்தது‌.

"உன் பேர் என்ன.?" என்றான் அவளது கூந்தலில் முகம் புதைத்தபடி.

"பொ.. பொன்னாம்பல்.." நடுங்கும் குரலில் சொன்னாள் அவள்.

"அவளை இப்போதைக்கு அமைதியா விடு சீனு.. நான் உனக்கு என் பொண்ணை கட்டி தரேன்.. நீ என்னை நம்பலாம்.." என்றாள் கலையரசி.

தன்னை பிடித்தி வைத்திருக்கும் அடியாட்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னேரம் சாமிநாதன் தன் மனைவியின் கன்னத்திலேயே நாலு அறை தந்திருப்பான்.

"என் அத்தை எனக்கு சப்போர்டா இருந்தா போதும். எனக்கு அதே போதும்.." என்றவன் தன் முன் நின்றிருந்த பொன்னாவின் முகத்தை ஆழ்ந்து சுவாசித்தான். அவனது செயலால் பொன்னாவிற்கு மொத்த உடம்பும் பற்றி எரிந்தது. கண்ணீர் வேறு கன்னம் தாண்டி விட்டிருந்தது.

பொன்னாவை தன் அணைப்பிலிருந்து விடுவித்தான். அவள் அவசரமாக விலகி நின்றாள்.
"கல்யாணத்தை எப்ப வச்சிகலாம் அத்தை.?" என்றான் சீனு.

கலையரசி சற்று நேரம் யோசித்தாள். "இப்பதானே தாத்தா செத்திருக்காரு.. கொஞ்ச நாள் ஆகட்டும்ப்பா.." என்றாள்.

பொன்னாவிற்கு அம்மா சொன்னது அதிர்ச்சியை தந்துவிட்டது. விஷ்வாவை நினைத்து உள்ளூர அழுதாள். அம்மா மீது இருந்த கோபத்தில் வேகமாக அங்கிருந்து வயல் பக்கம் கிளம்பினாள்.

அவள் பின்னாடி செல்ல இருந்த சீனுவை கை பிடித்து நிறுத்தினாள் கலையரசி. "அவ சும்மா காலார நடந்துட்டு வர போயிருக்கா.. கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துடுவா.." என்றாள்.

பெற்றவர்கள் இங்கே காவலில் இருக்கும்போது அவள் எங்கும் வெளியே செல்ல மாட்டாள் என்று நம்பினான் சீனு. இருந்தாலும் தன் ஆள் ஒருவனை கண் சைகை காட்டி அவளை பின்தொடர சொன்னான். அந்த அடியாளும் பொன்னாவை தேடி புறப்பட்டான்.

"புதுசா வந்திருக்க நீ.. அதுவும் கையில் துப்பாக்கி வேற.. அதான் அவளுக்கு தயக்கம்.. கொஞ்ச நாளுல சரியா போயிடுவா‌.. விடு.." என்றாள் கலையரசி அவனுக்கு ஆறுதல் சொல்லும் நோக்கோடு. அவள் பேசியதையெல்லாம் கேட்டு பற்களை அரைத்தான் சாமிநாதன்.

சீனுவுக்கும் அவள் சொல்வது சரியென பட்டது. "சரிங்க அத்தை. வாங்க நாம எல்லோரும் நம்ம ஊருக்கே போகலாம்.." என்றான்.

சாமிநாதன் ஏதோ சொல்ல முயலும் முன் கலையரசியே முந்தினாள். "என் பையன் வெளியூர்க்கு வேலைக்கு போயிருக்கான். அவன் இன்னும் இரண்டு நாளுல வந்துடுவான். அவன் வந்ததும் நாங்க மொத்த பேரும் ஒன்னாவே ஊருக்கு வரோம்.." என்றாள்.

கலையரசி சொன்னதில் சாமிநாதன் முதலில் குழம்பி போய்விட்டான். அவள் எதையோ திட்டமிடுகிறாள் என்று தெரிந்ததும் தன் மனைவியை அவசரப்பட்டு சந்தேகித்து விட்டோமே என்று தன்னையே நொந்து கொண்டான்.

"ஓ.. எனக்கு மச்சான் கூட இருக்கானா.?" என்று சிறு குதூகலமாக கேட்டான் சீனு.
"ஆமாப்பா.. மச்சானேதான்.." என்றாள் கலையரசி.

"ஓ.. சரி.. நீங்க மெதுவாவே வாங்க.." என்றவன் துப்பாக்கியை தனது பாக்கெட்டில் போட்டு கொண்டான்.

"வீட்டுக்குள்ள வாப்பா.. சாப்பிடுவ.." அன்பாக அழைத்தாள் கலையரசி.

இயல்பில் சகஜம் கலந்து விட்டதை உணர்ந்தான் சீனு.

"இவன் இவனோட குடிப்பழக்கத்தை விடும் வரைக்கும் நான் என் பொண்ணை இவனுக்கு தர மாட்டேன்.." என்றான் சாமிநாதன் தானும் கலையரசி நாடகத்தில் பங்கு கொள்ளும் நோக்கத்தில்.

"மாமா.. நான் இப்பவெல்லாம் குடிக்கிறது இல்ல.. அதை விட்டு கூட ஆறு மாசம் ஆகுது.. நீங்க தாராளமா என்னை நம்பி உங்க பொண்ணை தரலாம்.." என்றான்.

"ஊருக்கு வந்த பிறகு உன்னை பத்தி விசாரிக்காம நான் எந்த முடிவையும் சொல்ல மாட்டேன்.." என்றவன் தன்னை பிடித்து வைத்திருந்த ஆட்களிடமிருந்து விலகி நின்றான். அவன் வீட்டுக்குள் செல்ல நடந்தான். அவனை பின்தொடர இருந்த தன் ஆட்களை கை காட்டி நிறுத்தினான் சீனு.

"விடுங்க.. மாமனார் ஆக போறாரு.. ரொம்பவும் தொல்லை தர வேண்டாம்.." என்றவன் தன் அத்தை பக்கம் பார்த்தான்.

"நான் சாப்பிட்டுதான் வந்தேன் அத்தை.." என்றவன் சற்று தயங்கினான்.

"எனக்கு ஊருல அவசர வேலை இருக்கு அத்தை.. அதனால நான் இப்ப கிளம்பறேன்.. வேலை முடிச்சிட்டு இரண்டு நாளுல வந்துடுறேன்.. மச்சானோடு சேர்த்தே உங்களை ஊருக்கு அழைச்சிட்டு போறேன்.. அது வரைக்கும் இவங்க நாலு பேரும் இந்த வீட்டுக்கு காவலா இருக்கட்டும்.." என்றான்.

அவன் தன்னை முழுமையாக நம்பி விடவில்லை என்பது அந்த நேரத்தில்தான் கலையரசிக்கு புரிந்தது.

"சரிப்பா.." என்றாள் தன் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல்.

அவன் தன் ஆட்களை அங்கேயே விட்டுவிட்டு தனது காரில் ஏறி கிளம்பினான்.

அடியாட்கள் மூவரும் சென்று வாசலில் ஆளுக்கொரு மூலையில் நின்றனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1023
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN