நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விஷ்வா ஊரின் ஒரு ஓரத்தில் தனது காரை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தான்.

பொன்னா அனுப்பி இருந்த இடம் அங்குதான் உள்ளது என்று அறிந்துக் கொண்டவன் அந்த அரை இருளில் அங்கிருந்த பத்து வீடுகளையும் பார்த்தபடி நடந்தான். லொக்கேஷனை வேறு அதற்கு மேல் தெளிவாக காட்ட மறுத்தது அவனது ஃபோன். பொன்னாவை உடனே பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது அவனுக்கு. அவனது நினைவை தடைப்போடும் விதமாக ஒலித்தது அவனது ஃபோன்.

அவன் சிபி பிரதர்ஸ் அலுவலகத்தை விட்டு வந்ததிலிருந்து அந்த போன் இரண்டு மூன்று முறை ஒலித்து விட்டது. ஆனால் இவன்தான் அதை எடுக்க விருப்பமில்லாமல் இருந்தான். பொன்னாவிற்கு திருமண ஏற்பாடு என்ற ஒற்றை சொல்லே அவனது நினைவு முழுக்க இருந்தது. அதனால் மற்ற விசயங்களை பற்றி யோசிக்கவும் மறந்து விட்டான்.

ஒலிக்கும் ஃபோனை அணைக்கும் எண்ணத்தில் இருந்தவன் அழைத்திருப்பது அம்மா என்று தெரிந்ததும் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ அம்மா.." என்றான்.

"அடேய் எங்கடா இருக்க.? எப்போதிலிருந்து ஃபோன் பண்றேன்.? ஃபோன் கூட எடுக்காம என்னடா பண்ற.?" என்றாள்.

"அம்மா.. அது இங்கே பொன்னா.. இங்கே ஒரு சின்ன பிரச்சனைன்னு வந்திருக்கேன்ம்மா.. நான் அப்புறம் ஃபோன் பண்றேன்.." என்றவன் அந்த அழைப்பை துண்டித்துக் கொண்டு ஃபோனை பார்த்தபடி மேலும் நடந்தான்.

'இது சரி வராது.. அவளுக்கு போன் பண்ணி பார்க்கலாம்..' என நினைத்தவன் அங்கிருந்த குடிசை ஒன்றின் பின்புற சுவற்றில் சாய்ந்து நின்றபடி பொன்னாவின் போனுக்கு அழைத்தான்.

ஐந்தாறு நிமிட இடைவெளியில் பொன்னா போனோடு அவன் முன்னால் வந்தாள். அவன் நின்றிருந்த இடத்தை பார்க்க தவறி விட்டவள் அவனுக்கு முன்னால் பறந்து விரிந்திருந்த பருத்தி காட்டிற்குள் போனோடு நுழைந்தாள்.

'இவ ஏன் இப்படி புதருக்குள்ள போறா.?' என எண்ணி குழம்பியவன் அவளின் பின்னால் நடந்தான்.

"ஹலோ.." பொன்னா மெல்லிய குரலில் சொன்னாள்.

"ஹலோ.." என்றவன் அவளின் தோளில் கை பதித்தான். அவள் ஆவென கத்தியபடி திரும்பினாள். அவளின் கத்தலில் இவன் பயந்து போய் விட்டான். கத்தலோடு திரும்பியவள் அரை இருளில் அது விஷ்வா என அறிந்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக வாய் திறந்து நின்றாள்.

அங்கு யாரோ ஓடிவரும் சத்தம் கேட்கவும் விஷ்வா அதிர்ந்து போனான். அவன் அங்கிருந்து வரும்போதே ஏழெட்டு சண்டை காட்சிகள் ஐந்தாறு ஓட்டங்கள் என்று கற்பனை செய்தபடி தான் வந்தான். பொன்னாவின் முன் தன் திறமையை காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாக எண்ணியவன் இரு கைகளையும் சண்டை போடும் வடிவில் வைத்தபடி திரும்பி நின்றான்.

"அந்த பக்கம் போங்க.." அவனை சட்டென அந்த புறம் பிடித்து தள்ளி விட்டாள் பொன்னா.
தள்ளப்பட்ட திசையில் இருந்த பாத்திகளின் கரை மேட்டில் கால் இடித்து கீழே விழுந்தான் விஷ்வா. "அம்மா.." என கத்த இருந்தவன் பொன்னாவின் முன்னால் தன் வீரம் நிலைத்து நிற்க வேண்டுமென நினைத்து வலியோடு வாய்க்குள் ''அம்மா..'' முனகினான்.

அவன் எழ இருந்த நேரத்தில் தடியர்கள் நால்வர் தடதடவென அங்கு ஓடி வந்து பருத்தி காட்டின் மேட்டில் நின்றனர். 'இவங்கதான் இவளோட சொந்தகாரங்களா.? ஆனா அதுக்கு ஏன் இவ என்னை கீழே தள்ளி விட்டா..?' என நினைத்தவன் எழ இருந்த நேரத்தில் "என்ன ஆச்சி.?" என கேட்டு ஒருவன் தன் போனில் இருந்த டார்ச் லைட்டை இயக்கினான்.

"அதோ அந்த வேப்ப மரத்துல கருப்பா எதையோ பார்த்தேன்.. அதான் பயந்துட்டேன்.." என்று எதிர் திசையில் கை காட்டினாள் அவசரமாக.

அவளின் அவசரம் விஷ்வாவுக்கு எதையோ உணர்த்தியது. அதனால் சத்தம் போடாமல் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டான்.

அவர்கள் நால்வரும் வேப்பமரம் இருந்த திசைக்கு திரும்பி பார்த்தனர். அந்த மரம் இருட்டில் பேய் போலவே ஆடிக்கொண்டு இருந்தது.

"அங்கே கருப்பா என்ன இருக்கு.?" என கேட்டான் ஒருவன்.

"சாரி இருட்டுல நான் பயந்துட்டேன்.. நான் போன் பேசி முடிச்சிட்டு வரேன்.. நீங்க போங்க.." என்றாள். தனது ஃபோனை காதில் வைத்து "ஹலோ.. சொல்லுடி.." என்றபடி மறுபக்கம் திரும்பி நின்றுக் கொண்டாள்.

"நான் வேணா துணைக்கு இருக்கட்டுமா.?" என கேட்டான் ஒருவன்.

"இல்ல.. வேண்டாம்.. நான் கொஞ்ச நேரத்தில வந்துடுவேன்.." என்று சொன்னவள் மீண்டும் போனில் பிசியாக இருப்பது போல் காட்டினாள்

அவர்கள் அங்கிருந்து சென்றதும் நெஞ்சில் கை வைத்தபடி போனின் டார்ச்சை இயக்கி விஷ்வா விழுந்து கிடந்த இடத்தை பார்த்தாள். அவன் ஒய்யாரமாக சாய்ந்து படுத்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

"சாரி.." என்றபடி கை தந்தாள். அவன் எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். பொன்னா தனது போனின் டார்ச்சை அணைத்துக் கொண்டாள்.

"நான்தான் பிரச்சனை இல்லன்னு மெஸேஜ் அனுப்பினேனே.?" என்றாள் குழப்பமாக.

"பிரச்சனை தீர்ந்தா மாதிரி தெரியலையே.. ஆமா யார் இவனுங்க.. ஒரே ஒரு தங்கச்சி மட்டும்தான்னு சொன்ன.." என்றான் சந்தேகமாக.

பொன்னா மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.

காலையிலிருந்த நடந்த விசயங்களை அவனிடம் விவரித்தாள்.

"நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். அதனால்தான் உங்களுக்கு மெஸேஜ் பண்ணிட்டேன்.. சாரி.." என்றாள்.

அவன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான். "ஏன் ஓடணும் நீங்க.? போலிஸ்ல கம்ப்ளைண்ட் தரலாம் இல்ல.?" என்று கேட்டான் அவன்.

"காவலுக்கு நாலு பேர் இருக்கும்போது எப்படி நாங்க போலிஸ்ல கம்ப்ளைண்ட் தர முடியும்.?"

"உன் ஃபோன்ல இருந்து எனக்கு மெஸேஜ் அனுப்பிய மாதிரி போலிஸ்க்கு அனுப்பி இருக்கலாம் இல்ல.? ஆரம்பத்துல முடியற ஒரு விசயத்தை நாமதான் சரியா கையாளாம விட்டு பெரிசாக்குறோம்.." என்றவன் தனது போனில் சில நம்பர்களை அடித்தான். பொன்னா அவசரமாக அவனது கையை பற்றி தடுத்தாள்.

"வேணாம்.. எங்களுக்கு இது செட் ஆகாது.. என் தங்கச்சி வந்தவுடனே நாங்க மொத்த பேரும் வேற ஊர்க்கு போக போறோம்.." என்றாள்.

"அந்த ஊருக்கு உன் மாமன் வரமாட்டானா.?" என்று கேட்டான்.

"இவங்க கையில் துப்பாக்கி வச்சிருக்காங்க.. இவங்களுக்கு ஏதாவது சின்ன சந்தேகம் வந்தா கூட எங்களை ஏதாவது பண்ணிடுவாங்க.. எங்க அம்மா வேற ஏதோ பிளான் போட்டு இருக்காங்க.. என் வாழ்க்கையை ரிஸ்க் எடுக்க அவங்க தயாரா இல்ல.." என்றாள்.
விஷ்வாவிற்கு தனது வீரசாகத்தை காட்ட ஆசையாக இருந்தது.

"சாப்பிட்டிங்களா.?" என்றாள் தயக்கமாக.

"ம்.." என்றான் பொய்யாகவே.

"நீங்க ஊருக்கு கிளம்புங்க.. நாங்க வேற ஊர் போனதும் உங்களுக்கு தகவல் சொல்றேன்.." என்றாள்.

'வேற ஊரா.? இப்பவே போலிஸ் ஸ்டேஷன் போறேன்.. இந்த அடியாளுங்களை பத்தி சொல்றேன்.. அவங்களை கையோடு கூட்டி வரேன்..' என நினைத்தவன் "சரி நான் கிளம்பறேன்.." என்றான்.

அவன் தனது கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடக்க அவளும் அவன் பின்னால் நடந்தாள்.

"ஏன் என் பின்னால வர.?" என குழப்பமாக கேட்டான் அவன்.

"முதல் முறையா எங்க ஊருக்கு வந்திருக்கிங்க.. வீட்டுல உள்ளவங்ககிட்ட அறிமுகப்படுத்தியும் வைக்க முடியல.. அதான் கொஞ்ச தூரம் வந்து வழியனுப்பி வைக்கலாம்ன்னு.." அவள் சிறு குரலில் சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது.

"வழியனுப்பி வைக்கிறதுக்கு பதிலா ஒன்னு இரண்டு முத்தம் தந்தா கூட ரொம்ப நல்லா இருக்கும்.." என்றான்.

இணைந்து நடந்தவனின் தோளில் அடித்தாள் அவள். "சாமி கண்ணை குத்தும்.. கல்யாணத்துக்கும் முன்னாடி முத்தம் தர கூடாது.." என்றாள்.

காரின் அருகே வந்ததும் இவள் பக்கம் திரும்பியவன் இவளின் கன்னத்தை பிடித்து கிள்ளினான்.

"அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காத.." என்றான். அவனின் கையை தட்டி விட்டாள் அவள்.

பொன்னா ஃபோன் பேச சென்று வெகுநேரம் ஆனதை உணர்ந்த சாமிநாதன் துண்டை தோளில் போட்டு கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தான். தடியர்கள் ஆளுக்கொரு பக்கம் நின்றுக் கொண்டிருந்தனர்.

இவன் சுற்றும் முற்றும் பார்த்தான். பொன்னாவை காணவில்லை. "என் பொண்ணு எங்கே.?" என்றான் அவர்களிடம்.

"வீட்டுக்கு பின்னாடி.." என்று கையை காட்டினான் ஒருவன்.

"இந்த பிள்ளை இந்த இருட்டுல எதுக்கு வீட்டு பின்னாடி போனா.? அப்புறம் எதையாவது பார்த்தேன் பயந்தேன்னு விடிய விடிய அனத்திட்டு இருப்பாளே.." என்று புலம்பியபடி வீட்டின் பின்னால் சென்று பார்த்தான்.

"டாடா.. பத்திரமா போய்ட்டு வாங்க.." என்றாள் பொன்னா. சரியென தலையசைத்தான் விஷ்வா. அதே நேரத்தில் அவனின் பின்னந்தலையை கட்டையால் தாக்கியது ஒரு கை. தலையில் ரத்தம் வழிந்தபடி அவன் அங்கேயே மயங்கி விழுந்தான். அதை பார்த்த பொன்னா கத்த நினைத்த நேரத்தில் அவளது நெற்றியிலும் வந்து மோதியது அந்த கட்டை. அவளும் அப்படியே மயங்கி விழுந்தாள்.

அவர்கள் இருவரையும் கட்டையால் அடித்து மயங்கி விழ வைத்த பூங்கோதை அவர்கள் இருவரையும் சிரமப்பட்டு அந்த காரில் ஏற்றினாள். காரின் ஜன்னல்களை சாத்தி விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை இயக்கினாள். சாலையை நோக்கி காரை திரும்பினாள். சீரான வேகத்தில் காரை ஓட்ட ஆரம்பித்தாள். அவள் வந்த கார் இருபது அடி தொலைவில் நின்றுக் கொண்டிருந்தது. அதற்கு டாடா சொன்னாள். பின்னர் இந்த காரின் வேகத்தை அதிகரித்தாள்.

பொன்னாவை வீட்டின் பின்னால் தேடி பார்த்தும் சாமிநாதனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.

"என் பொண்ணு எங்கே.?" என்றான் மீண்டும் அந்த தடியர்களிடம் வந்து.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

சாமிநாதன் மகளுக்கு ஃபோன் செய்தான். ரிங் ஆனதே தவிர அவள் ஃபோனை எடுக்கவில்லை.

வாசலுக்கு வந்த கலையரசி "என்ன ஆச்சி.?" என தன் கணவனிடம் விசாரித்தாள்.

"பொன்னா எங்கே போனான்னு தெரியல.. போனையும் எடுக்க மாட்டேங்கிறா.." என்றான் கவலையோடு.

"அந்த பக்கம் இந்த பக்கம் எங்கேயாவது இருக்காளோ என்னவோ தேடி பார்க்கலாம்.." என்று தைரியம் சொன்னாள் அவள்.

அங்கிருந்த அனைவரும் அவளை தேடி கிளம்பினர். கலையரசியும் வீட்டிலிருந்த பேட்டரி லைட்டை எடுத்துக் கொண்டு அருகிருக்கும் வயல்வெளி பக்கம் தேடினாள்.‌

வெகுநேரம் எங்கெங்கோ தேடி பார்த்தனர் அனைவரும். சாமிநாதன் தூரத்தில் இருக்கும் வீடுகளுக்கு சென்று அங்கு பொன்னா வந்தாளா என்று கேட்டு வந்தான்.

ஆனால் அவளை எங்கும் காணவில்லை. அவள் அந்த இடத்தில் இல்லை என்பதை தாமதமாகதான் உணர்ந்தனர் தடியர்கள்.

சீனு அப்போதுதான் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அப்போதுதான் பொன்னா காணாமல் போனாள் என்று செய்து அவனுக்கு போய் சேர்ந்தது. டிரைவரை அழைத்து காரை ஓட்ட சொன்னான். பொன்னா வீட்டில் இருக்கும் தடியர்களிடம் சில கட்டளைகள் இட்டான்.

சீனுவிடம் போனில் சரியென தலையசைத்தான் அந்த தடியர்களில் ஒருவன்.

"இவங்க இரண்டு பேரையும் பிடிச்சி வைக்க சொல்லி இருக்காரு பாஸ்.." என்றான் அவன்.
சாமிநாதன் பொன்னாவை காணவில்லை என்ற கவலையோடு வீடு திரும்பினான்.
கலையரசியும் அதே கவலையோடு வந்து சேர்ந்தாள். தடியன்கள் அவர்கள் இருவரும் அசந்திருந்த ஒற்றை நொடியில் இருவரையும் பிடித்துக் கொண்டு போய் அந்த வீட்டின் உள்ளே தள்ளினர்.

"ஒன்னு உங்க பொண்ணு இங்கே வரணும்.. இல்லன்னா எங்க பாஸ் வரணும்.. அதுவரைக்கும் நீங்க இரண்டு பேரும் உள்ளேயே இருங்க.." என்றவர்கள் அந்த வீட்டின் கதவை பூட்டினர்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1084
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN