நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உயிர் தொலைத்த பார்வையோடு நடந்து சென்றாள் யதிரா. அவளையே விழியெடுக்காமல் பார்த்தபடி காரில் அமர்ந்திருந்த முகிலுக்கு அவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் தன் உயிரையே நெருப்பினில் போட்டு உருக விட்டது போல வலித்தது.

"யதிரா.." என்று முனங்கினான் இதயம் பறித்தெறியும் வேதனையோடு.

மனமெங்கும் வேதனையும் சோகமும் இருந்தது அவனுக்கு. தன் சொந்த தந்தையே தன்னிடம் இப்படி ஒரு பொய்யை சொல்லி தன்னை நடமாடும் பிணமாக மாற்றியது அவனுக்குள் நெருப்பை கொழுந்து விட்டு எரிய செய்வதை போல இருந்தது. துரோகத்தின் உச்சத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு தன் மொத்த உலகத்தையுமே நெருப்பிடும் அளவுக்கு அவ்வளவு கோபம் வந்தது.

அவனுக்கு பின்னால் வந்து நின்றிருந்த வாகன ஓட்டி வழிவிட சொல்லி ஹாரன் அடித்தான்.
முகில் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டினான். வேகும் நெஞ்சத்தில் வேகாத தன் காதலை நினைத்தபடியே சென்றவன் வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு இறங்கினான்.

அந்த வீட்டை விட்டு அவன் சென்று முழுமையாக மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. என்று அவன் கட்டிய தாலி யதிரா கழுத்தில் இருந்து அவிழ்க்கப்பட்டதோ அன்றே தன் ஜீவனில் பாதியை தொலைத்து விட்டான் அவன்.

ப்ளட் கேன்சரில் தான் இறக்கப்போகும் செய்தியை யதிரா அறிய வேண்டாம் என எண்ணி தன் வீட்டில் உள்ளோருக்கு மட்டும் விசயத்தை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் இருந்த தன் நண்பனின் ஒருவனின் வீட்டுக்கு சென்று விட்டான் முகில். வெளிநாடு சென்று விட்ட அவனது நண்பன் முகில் கேட்டான் என்று அந்த வீட்டை வாடகையில்லாமல் இவன் குடியிருக்க விட்டான்.

அங்கு சென்ற ஆரம்ப நாட்களில் மருத்தவமனைக்கு சென்று பரிசோதிக்க பயந்து நாட்களை கடத்தி கொண்டிருந்தான் முகில். ப்ளட் கேன்சரால் இறப்போருக்கு வரும் அறிகுறிகளை தேடி தேடி படித்து பயந்து அறை ஒன்றினுள் முடங்கினான். உடல் சிறிது வாடினாலும் தனது நோய் முற்றி போனதோ என நினைத்து அறையின் மூலையில் அமர்ந்து அழுதான். உயிர் போகும் பயம் உயிரோடு இருக்கும்போதே அவனை கொன்று தின்றது.

தினம் இரவிலும் பகலிலும் பயத்தோடும் கண்ணீரோடும் யதிராவின், அவளது அழுகை சத்தம் கேட்கும் விலகா நினைவோடுமே நாட்கள் கடந்தது. இவன் ஹைதராபாத் சென்ற அடுத்த மாதத்தில் சௌந்தர்யாவுக்கும் அவளது நண்பன் ஒருவனுக்கும் திருமணம் முடிந்ததாக செய்தி வந்தது. அத்தனை வேதனையிலும் கூட அக்காவின் மறுவாழ்க்கையை எண்ணி மனம் மகிழ்ந்தான் முகில்.

சௌந்தர்யா திருமணம் முடிந்த இரண்டாம் மாதத்தில் யதிராவுக்கும் திருமணம் நடந்து முடிந்ததாக அப்பா போனில் தகவலை சொன்னார். அடுத்து வந்த நாட்களில் இன்னும் அதிகமாக அழுதான் முகில். தன் மனைவியை மாற்றான் ஒருவன் மாலையிட்டு சொந்தமாக்கி கொண்டான் என்ற செய்தி அவனது நெஞ்சத்தையே உடைத்து விட்டது.
அடுத்து வந்த ஒன்றிரண்டு மாதங்கள் பைத்தியக்காரனை போலவே இருந்தான் அவன். நேரத்துக்கு நேரம் உண்ண ஆசையில்லாமல் போனது. நடு இரவிலும் நிலவு பார்த்து பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.

பகலெல்லாம் வெற்று சுவற்றை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் மனைவி இந்த நேரம் இந்த நொடிகளில் என்ன செய்துக் கொண்டிருப்பாள் என்று ஒவ்வொரு நொடியும் நினைத்தான். எவனோ ஒருவனின் மடியில் தலை சாய்ந்து படுத்திருப்பாளோ.. தன் ஸ்பரிசம் மறந்து புது ஸ்பரிசத்தில் தன்னை
தொலைத்திருப்பாளோ.. கன்ன குழியில் கவி பாடிய புது கணவனுக்கு கதவை பிடித்தபடி கை அசைத்து வேலைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருப்பாளோ.. உணவில் உப்பு அதிகம் சேர்ந்ததென்று அவன் அடித்தேதும் வைத்ததில் கண்களின் கண்ணீரை கன்னத்தில் வழிய விட பயந்து என்னை நினைத்திருப்பாளோ.. நொடிக்கு நூறாக வந்த நினைவுகளின் பிடியிலிருந்து தப்பி செல்ல இயலாதவனாக எந்த தற்கொலை வலி இல்லாதது என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் கடைசி நொடிகளில் வந்த தயக்கம் காரணமாய் அந்த தற்கொலைகளிலும் சிக்காமல் மனதுக்குள் வாடி வதங்கினான்.
தன் மனைவி மாற்றான் கை சேர்ந்ததில் தான் இன்னும் அதிகமாய் இரண்டு மாதங்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் நலமாய் இருப்பதை மிகவும் தாமதமாகதான் உணர்ந்தான்.

சிறு அறிகுறி கூட தனக்கு இல்லை என்பதை அடுத்து வந்த நாட்களில் கண்டுக்கொண்டவன் பயத்தோடே மருத்துவமனை சென்று தன்னை பரிசோதித்தான்.
தனக்கு எந்த வித நோயும் இல்லை என அவன் அறிந்துக் கொண்ட நேரத்தில் வானம் முழுவதும் தன் கையில் வசப்பட்ட ஆனந்தத்தை அடைந்தான். ஆனால் அந்த வானமும் யதிரா இல்லாததால் தன் கையை விட்டு சென்றதை உணர்ந்தான்.

அன்று மட்டுமல்ல இன்று வரையிலுமே கூட அவனுக்கு சௌந்தர்யாவின் பொய்கள் பற்றி ஏதும் தெரியாது. வீணாய் போன ஒரு மருத்துவர் தனக்கு ப்ளட் கேன்சர் உள்ளதாக சிறு தவறாய் ரிப்போர்ட்டில் மாற்றி எழுதி விட்டார் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறான்.
தனக்கு கேன்சர் இல்லை என்று அவன் அறிந்துக் கொண்ட பிறகு அவனது நாட்கள் இன்னும் நரகமாக மாறி போனது. "யதிரா யதிரா.." என்று ஓயாமல் புலம்ப ஆரம்பித்து விட்டான். புது கணவனோடு உள்ளவளை கடத்தி வந்து விடலாமா என்று தினம் ஆயிரம் முறை எண்ணினான். ஆனால் விதியால் பிரிந்து சென்றவளை மீண்டும் சேர அதே விதியில் இடமேதும் இல்லை என்ற நிதர்சனம் உரைத்ததில் கண்ணீரோடு தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்.

அதன் பிறகு ஏனோ வாழ்வின் மீது பிடிப்பு ஏதும் இல்லை. நேரம் போகாமல் தன்னிடமிருந்த பணத்தை பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தான். லாபம் பற்றியும் மகிழவில்லை. நட்டம் பற்றியும் கவலைபடவில்லை. மூன்று மாத லாபங்களையும் ஒரே நாளில் தொலைத்தான். மூன்று மாத சரிவுகளையும் ஒரே இரவில் கைப்பற்றினான். அவனை கண்டு குருட்டு அதிர்ஷ்டம் என்று அவனை போல முதலிடும் சிலர் பேசிக் கொண்டார்கள். ஆனால் அது அவனது மனம் உடைந்ததில் வந்த குருட்டு தைரியம் என்பதை அவனும் அப்போது அறியவில்லை.

நிமிடங்கள் நாட்களாய், நாட்கள் மாதங்களாய், மாதங்கள் வருடங்களாய் மாறியது. எதில் எந்த நேரத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் வரும் எவ்வளவு சரிவை சந்திக்க நேரும் என்று மனதுக்குள்ளேயே துல்லியமாக கணக்கு போடும் அளவுக்கு அந்த நாட்களில் பங்கு சந்தை முதலீட்டில் புகுந்து விளையாடி விட்டான்.

வேலைக்கு செல்லும் முன் திருமணம் வேண்டாம் என்று மறுத்தவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணத்தை நடத்தி வைக்கப்பட்டது அப்போது‌. அன்றைய நாட்களில் தன் மனைவிக்கு பத்து ரூபாய் பூ வாங்கி தர கூட தந்தையிடம் பணத்திற்காய் காத்து நின்றவன் இன்று பணத்தை பணமாய் பாராமல் செலவு செய்யும் அளவுக்கு சம்பாதித்து வைத்து கொண்டிருந்தான்.

இவன் ஊரை விட்டு சென்றதில் இருந்து அம்மா மட்டும் வாரம் ஒருமுறையாவது ஃபோன் செய்வாள். அப்பா ஏதாவது செய்தி சொல்ல வேண்டும் என்றால் மட்டும் அழைப்பார். அக்கா அவளுக்கு திருமணம் முடிந்த மறுநாளில் இருந்தே ஃபோன் செய்யவில்லை. 'தம்பி செத்தானா பிழைத்தானா என்று கூட கேட்க தோணவில்லையா அக்கா உனக்கு.?' என்று அவ்வப்போது காற்றோடு கேட்டு கொள்வான்.

தனக்கு ப்ளட் கேன்சர் இல்லையென தெரிந்ததும் ஆசையோடு அன்றே அம்மாவிற்கு சொன்னான். அம்மா குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்க போவதாக போனில் சொன்னாள். அன்று அந்த நொடியில் அதுவே அவனுக்கு முழு சந்தோசத்தை தந்தது.
காலங்களின் பயணத்தில் ஊர் பக்கமே வர கூடாது என்று எண்ணி முடிவெடுத்து இருந்தவன் அவன். மூன்று வருடங்களாய் கண்டும் காணாமல் இருந்த அக்கா 'தன் குழந்தைக்கு காது குத்த தாய்மாமன் மடி வேண்டும், காது குத்து அழைப்பிதழில் பெயர் போட்டாகி விட்டது' என்று சொல்லி அழைத்திருந்தாள். மறக்காமல் மருமகனுக்கு நாலு சவரனில் பட்டையாய் இழையோடும் தங்க சங்கிலி வாங்கி வரவேண்டும் என்றும் சொன்னாள். சிறு வயதில் சோறூட்டி வளர்த்த அக்கா தன் மறுமணத்திற்கு அழைக்கா விட்டாலும் கூட குழந்தையின் காது குத்துக்காவது அழைத்திருக்கிறாளே என்று ஆவலோடு ஊர் வந்தவன் ஊருக்குள் நுழையும் முன்பே யதிராவைதான் முதலில் பார்த்தான்.

தன் மனைவி மாற்றான் வீட்டு தலைவியாய் உள்ளதை தூரத்தில் இருந்தாவது ஒரு நொடி பார்த்து செல்லலாம் என்று நினைத்திருந்தவன் வரம் தரும் தேவதை நேரில் வந்ததை போல அவளை கண்டதை நினைத்து முதல் நொடி மகிழ்ந்து போனான். ஆனால் தாலியில்லா வெறும் கழுத்தோடும், தன்னை போலவே அடையாளம் தெரியாத அளவுக்கு ஆள் உருகி தூரத்து ஏக்க பார்வை பார்த்து நடந்தவளையும் கண்டவனுக்கு காலடியில் இருந்த தரை உடைந்து விழுந்ததை நன்றாக உணர முடிந்தது.

காரில் இருந்து முகில் இறங்குவதை கண்டு கொலுசொலியோடு ஓடி வந்தாள் சௌந்தர்யா.

"நல்லாருக்கியாடா.?" என்று நலம் விசாரித்தாள். "ம்.." என்றவனுக்கு தனது அப்பாவின் பதில் உடனடியாய் தேவைப்பட்டது. அவரை பார்வையால் தேடினான்.

"இப்படி இளைச்சிட்டியேடா.." என்று கண்களை துடைத்து கொண்டாள் அக்கா.

"அப்பா எங்கே.?" கட்டை குரலில் கேட்டான் முகில்.

"அவர் காது குத்து பத்திரிகை வைக்க நம்ம பெரியம்மா ஊருக்கு போயிருக்காரு.. நைட்டுக்குள்ள வந்துடுவாரு.. நீ உள்ளே வா.. வந்து சாப்பிடு.." என்று அவனை கை பிடித்து உள்ளே இழுத்து சென்றாள்.

வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த ஒருவன் இவனை கண்டதும் புன்னகைத்தான். அவனை அக்காவின் கல்லூரியில் அடிக்கடி பார்த்த நினைவு உண்டு முகிலுக்கு. பதில் புன்னகை தந்தான் முகில். நடு ஹாலில் இருந்த தொட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை. இரண்டு வருடங்கள் இருக்கும் குழந்தைக்கு. அக்கா சென்று குழந்தையை தூக்கி வந்தாள்.

"மாமா பாரு செல்லம்.." என்று குழந்தையிடம் சொன்னவள் "இந்தாடா.." என்று இவனிடம் குழந்தையை தந்தாள்.

குழந்தையை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அவனை போன்ற நிறத்தில் இல்லாமல் அக்காவை போலவே சிவந்த நிறத்தில் அழகாய் இருந்தது குழந்தை. "மாமா.." என்று மழலையில் அழைத்தது. அதன் அழைப்பில் சொக்கி மீண்டும் முத்தம் தந்தான்.

"முகில்.." அம்மாவின் குரலில் திரும்பி பார்த்தான். மாடி படிகளில் இருந்து இறங்கி ஓட்டமாய் இவனருகில் வந்தாள் அம்மா.

"நான் பெத்த ராசா.. இந்த அம்மாவை கூட இத்தனை வருசம் பார்க்காம இருக்க உனக்கு எப்படி மனசு வந்தது.?" என கேட்டு அழுதாள். குழந்தையை அக்காவிடம் தந்துவிட்டு அம்மாவை தன்னோடு அணைத்துக் கொண்டான் முகில்.

"சாரிம்மா.." என்றான் கரகரத்த குரலில்.

"ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி இளைச்சி போயிட்டியேடா.." என்று அழுதாள் அம்மா. அவளது அழுகை கண்டு அவனுக்கும் கண்ணீர் வந்தது.

"சரி விடும்மா.. வந்தவுடனே உன் அழுகாச்சியை ஆரம்பிக்காத.." என்று சொன்ன அக்கா "வாடா சாப்பிடுவ.." என்றாள்.

அம்மாவை விலக்கி நிறுத்தியவன் "குளிச்சிட்டு வரேன் அக்கா.." என்று மாடிக்கு நடந்தான்.
சாத்தியிருந்த தன் அறையின் கதவை திறந்தான். லைசாலின் வாசம் நாசியை தாக்கியது. அம்மா இன்று அறையை சுத்தம் செய்துள்ளாள் என்பதை புரிந்து கொண்டான். அந்த லைசால் வாசத்தின் இடையே யதிராவின் வாசம் இயல்பாய் மணந்தது.

அறையின் கதவை சாத்தி விட்டு உள்ளே நடந்தான். யதிரா சிரிப்போடு கட்டிலில் அமர்ந்திருப்பது போல தோன்றியது. நிலை கண்ணாடியில் இருவரும் ஒன்றாய் நின்று தங்களின் பிம்பம் பார்த்த நாட்கள் நினைவுக்கு வந்தது. தானாய் நடந்த கால்கள் நிலை கண்ணாடியின் முன்னால் வந்து நின்றது. மூன்று வருடங்களுக்கு முன்னால் பிம்பமாய் தெரிந்த குண்டு பையன் இன்று மூன்றில் ஒரு பகுதிதான் இருந்தான். யதிரா கிள்ளி விளையாடிய குண்டு கன்னங்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை.

"எனக்கு தலையணை வேணாம் மாமா.. நீங்களே நல்லா புசுபுசுன்னு இருக்கிங்க.." என்று ஆனந்த சிரிப்போடு அவள் தலை வைத்து தூங்கிய நெஞ்சை தொட்டு பார்த்தான்.
புசுபுசுவென இல்லை இன்று. அவனின் மனதை போலவே கல்லாய் மாறி போய் இருந்தது.

"உங்களுக்கு அவங்க வேலை தரலன்னா பரவால்ல மாமா.. இன்னொரு நல்ல கம்பெனியில் உங்களுக்கு நல்ல வேலையா கிடைக்கும்.. உங்களுக்கு வேலை கிடைக்கற வரைக்கும் நான் பூ பொட்டு கூட வாங்கி தர சொல்லி கேட்க மாட்டேன்.. ஆனா வேலை கிடைச்ச முதல் மாசம் சம்பளம் வாங்கும் போது அத்தைக்கு புடவை வாங்கும்போது எனக்கும் புடவை வாங்கிட்டு வரணும்.. இல்லன்னா நான் உங்களை வீட்டுக்குள்ளயே விட மாட்டேன்.." என்று வேலை கிடைக்காமல் சோர்ந்து போய் வீடு திரும்பியவனின் மூக்கை பிடித்து ஆட்டியபடி சொன்னவள் இன்றும் நேரில் இருப்பதாய் அவனின் பிரமை சொன்னது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

word count 1215
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN