நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகளை காணவில்லை என்ற பதட்டத்தில் இருந்தனர் கலையரசியும் சாமிநாதனும்.
விஷ்வாவும் பொன்னாவும் பின் இருக்கையில் மயங்கி கிடக்க, அந்த காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தாள் பூங்கோதை.

கார் ஒரு மலை மீது இருந்த பாதையில் ஏறியது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் காரை சரக் சரக்கென வளைத்தாள் பூங்கோதை. அதிகம் புழங்காத சாலை என்பதால் அந்த நேரத்தில் வேறு வண்டிகள் ஏதும் தென்படவில்லை.

"என் பொண்ணை நீ எனக்கு தரல இல்ல.. இரு இனி நான் உன் பையனையும் உன் பொண்ணையும் உனக்கு தராம மறைச்சி வைக்கிறேன்.." என்று சபதம் போல சொன்னாள் அவள்.

"நேத்து பார்த்து வச்சிட்டு வந்த அந்த ஊருக்கு ஒதுங்கிய ஆளில்லா பழைய பங்களா போறேன்.. இவங்க இரண்டு பேரையும் கட்டி வைக்கிறேன்.. உடனே இவங்க அம்மாகிட்ட போய் என் பொண்ணை கொடு நான் உன் பையனையும் உன் பொண்ணையும் தரேன்னு சொல்றேன்.. அப்புறம் அவ தானா என் பொண்ணை என்கிட்ட கொடுத்துடுவா.." என்று தனது திட்டத்தை காற்றோடு சொன்னாள்.

காரை ஓட்டியபடி திரும்பி பார்த்தாள்.

"அவளுக்கு ஒரு பையன்னுதானே லாரன்ஸ் சொன்னாரு.. இப்ப எப்படி இன்னொரு பொண்ணு வந்தா.?" என கேட்டவளுக்கு கோபமாக வந்தது.

"அவளுக்கே பெண் இருக்கே.. அப்புறம் ஏன் என் பொண்ணை தர மாட்டேன்னு சொன்னா.?" என்று பொன்னாவின் முகத்தை பார்த்து கேட்டாள் பூங்கோதை.

அதே சாலையில் அவளது காரை பின்தொடர்ந்து வந்த ஒரு லாரி அந்த காரை ஒரு கொண்டை ஊசி வளைவில் படீரென வேகமாக இடித்தது. கார் நொடி நேரத்தில் அருகிருந்த பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. அந்த இருளில் பூங்கோதையின் அலறலும் அந்த காரின் இன்ஜின் சத்தமும் காற்றோடு கரைந்து போனது.

அந்த லாரியின் டிரைவர் கீழே இறங்கி வந்து அந்த பள்ளத்தாக்கை எட்டி பார்த்தான்.
பின்னர் தனது ஃபோனை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

"ஹலோ சார்.. நீங்க சொன்ன காரை முடிச்சிட்டேன்.." என்று தகவலை சொன்னவன் தனது லாரியில் ஏற்றி தனது அடுத்த வேலையை பார்க்க கிளம்பினான்.

நடு இரவில் செடிமலை கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் சீனு. மகளை காணாத சோகத்தில் இருந்த கலையரசியை ஆத்திரத்தோடு பார்த்தான். "உன் மகள் எங்கே.?" என்று கேட்டான்.

"நாங்களே அவளை காணமேன்னுதான் தேடிட்டு இருக்கோம்.." வருத்தத்தோடு சொன்னாள் அவள்.

இவன் அவளது கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டான். அடிக்க பாய்ந்த சாமிநாதனை அந்த தடியர்கள் நால்வரும் பிடித்தனர்.

"உன் பொண்ணும் உன்னை மாதிரி ஓடுகாலியாதானே இருப்பா.?" என கேட்டவனுக்கு அடக்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது.

பொன்னாவுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று பெரிதொரு கற்பனை செய்து வைத்திருந்தான் அவன். அந்த கற்பனை அனைத்தும் நொடியில் தவிடுபொடியானதில் அவனுக்கு பெரிய ஏமாற்றம்.

"என் பொண்ணை ஓடுகாலின்னு சொல்லாத.." கோபமாக சொன்ன கலையரசிக்கு மீண்டும் ஒரு அறையை தந்தான் அவன்.

"காவலுக்கு இருந்த நாலு பேரை மீறிட்டு இங்கே இருந்து அவ போயிருக்கா.. நீயும் இப்படிதானே எங்க அப்பன் தாத்தன் காவலையெல்லாம் மீறி ஓடிப்போய் இவனை கட்டிக்கிட்ட.? உன் ரத்தம்தான் உன் பொண்ணு உடம்புலயும் ஓடும்.. அவ எங்கே போயிருந்தாலும் என்னை தேடி வந்து என் காலுல விழ போறா.." என்றவன் தனது ஆட்களை பார்த்தான்.

"இந்த வீட்டை தூள் துளா இடிச்சி போடுங்க.. போனவ வந்து பார்த்தா இங்கே வெறும் தரைதான் இருக்கணும். நிழலுக்கு ஒதுங்க சுவரும் இருக்க கூடாது. மழைக்கு ஒதுங்க கூரையும் இருக்க கூடாது.. அப்படியே இவங்களை கை காலை கட்டி கொண்டுபோய் காருல ஏத்துங்க.. வந்து பார்க்கறவளுக்கு அப்பா அம்மான்னு யாரும் இங்கே இருக்க கூடாது.. அப்புறம் தானா என்னை தேடி அவளே வருவா.." என்றான். இருவர் அந்த வீட்டின் ஓரத்தில் இருந்த கடப்பாரைகளை கையில் எடுத்தனர். மீதி இருவர் கலையரசியையும் சாமிநாதனையும் கொண்டு போய் காரில் ஏற்றினர். காரை பூட்டி விட்டு வந்து அவர்களும் அந்த வீட்டை இடிக்க தன் கூட்டாளிகளுக்கு உதவி செய்தனர்.

"அந்த பொண்ணுக்கு நம்ம அட்ரஸ் எப்படி தெரியும்.?" என கேட்டான் சீனுவோடு வந்த டிரைவர்.

"ஏன் தெரியாம.? இவங்க ஃபோனை பத்திரப்படுத்தி வை.. அதுவும் இல்லாம இத்தனை வருசமா அப்பா அம்மா பிறந்து வளர்ந்த ஊர் எதுன்னு கூடவா அவளுக்கு தெரிஞ்சிருக்காது.? படிச்சவதானே.? வந்து சேருவா.." என்றான் பற்களை கடித்தபடி. மொத்த குடும்பமும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றியது போல் இருந்தது அவனுக்கு.
மொத்த ஊரும் உறங்கி கொண்டிருந்த அந்த நடு இரவில் அந்த வீட்டை இடித்துக் கொண்டிருந்தனர் இவர்கள்.

தூரத்து வீடுகளில் இருந்த பந்தலில் படுத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி கடப்பாரை இடிக்கும் சத்தம் கேட்டு கண் விழித்தாள்‌. அதே வேளையில் கண்ணை பறிக்கும் மின்னல் மின்னியது. காதை செவிடாக்கும் இடியும் இடித்தது. அடுத்த நொடியில் அந்த இருட்டையும் குருடாக்கும் வகையில் அடர்ந்த மழை சோவென பெய்ய ஆரம்பித்தது. ஏதோ கனவு கண்டிருப்போம் போல என நினைத்து அவள் மீண்டும் உறங்கினாள்.

வீட்டை இடித்துக் கொண்டவர்கள் மழை வந்ததும் தங்களது வேலையை நிறுத்தினர்.

"அந்த வீட்டை முழுசா இடிச்சிட்டுதான் நீங்க ஊருக்கு வரணும்.." என்று உரக்க கத்தி சொன்ன சீனு தனது காரில் ஏறினான்.

"காரை எடு.." என்றான் டிரைவரிடம். அந்த காரின் பின் இருக்கையில் கை கால் கட்டப்பட்டு சிறையாகி இருந்த கலையரசியும் சாமிநாதனும் இடிந்து விழும் தங்களது வீட்டை கண்ணீரோடு பார்த்தனர். தொலைந்த மகள், உருவிழக்கும் தங்களது வீடு, சிறைபிடிக்கப்பட்ட தங்களது நிலமை என தங்களுக்கு எதிராக இயற்கையே சதி செய்வது போல் தோன்றியது அவர்களுக்கு.

"நீ வெளங்கவே மாட்ட‌.." கண்ணீரோடு சொன்னாள் கலையரசி. சீனு சிரித்தான்.
அந்த கார் அந்த ஊரை விட்டு கிளம்பியது. அடியாட்கள் நால்வரும் வீட்டை இடித்து தரை மட்டமாக்கி கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை விடிந்ததும் போலிஸிடம் ஓடி வந்தார் லாரன்ஸ்.

"சார்.. ஒரு கேஸ் பைல் பண்ணனும்.. என் மனைவியை நேத்து மதியத்தில் இருந்து காணோம்.." என்றார்.

அதே வேளையில் மற்றொருவன் வேகமாக வந்தான் "சார்.. என் காரை கண்டுபிடிச்சிங்களா.? நேத்து மதியத்துல இருந்து காணோம் சார்.." என்றான்.
சப் இன்ஸ்பெக்டர் இருவரையும் பார்த்தார். "உங்க காரை இன்னும் கண்டுபிடிக்கல.. கண்டுப்பிடிச்சதும் நாங்களே தகவல் சொல்றோம்.." என்றார். பின்னர் லாரன்ஸ் பக்கம் திரும்பியவர் "நீங்க அந்த பிரபல வக்கீல் லாரன்ஸ் இல்லையா.?" என கேட்டார். லாரன்ஸ் ஆமென தலையை ஆட்டினார்.

"கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க சார்.. உங்க மனைவி போட்டோவையும் கொடுங்க.. அதுக்கும் முன்னால அவங்க தெரிஞ்சவங்க வீடுகளுக்கு ஏதாவது போயிருக்காங்களான்னு விசாரிங்க.." என்றார்.

"சார் என் வொய்ப் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர்.." என்றவர் தன் கையில் இருந்த பைல் ஒன்றை நீட்டினார். "இது என் வொய்ப் மெடிக்கல் ரிப்போர்ட்.." என்றார்.

அதை வாங்கி படித்தவர் வருத்தத்தோடு லாரன்ஸை பார்த்தார். "கவலைபடாதிங்க சார்.. நாங்க சீக்கிரமே கண்டுபிடிக்க முயற்சி பண்றோம்.." என்றார்.

லாரன்ஸ் கம்ப்ளைன்டை எழுதி தந்துவிட்டு திரும்பி நடந்தார். நேற்று பூங்கோதை காணாமல் போனதிலிருந்து இவர் வெகுவாக அலைந்து விட்டார். தெரிந்த வீட்டின் கதவுகள் அத்தனையையும் தட்டி விட்டார். பூங்கோதை இதுவரை இருந்த மருத்துவமனைக்கும் சென்று விசாரித்து வந்தார். ஆனால் அவளை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. காயத்ரிக்கும் கூட நான்கைந்து முறை போன் செய்து விசாரித்து விட்டார். ஆனால் மனைவியை பற்றிய தகவலென ஏதும் கிடைக்கவில்லை. அவர் சோகமே உருவாக வீட்டுக்கு திரும்பினார்.

செங்கா ஓடையில் குளித்து விட்டு மேலே கரை ஏறியபோது ஒரு இளைஞன் அந்த கரையருகே இருந்த செடிகளில் இருந்த இலைகளை பறித்துக் கொண்டிருந்தான். செங்கா உடையை மாற்றிக் கொண்டு ஈரதலையை கொண்டையாக முடிந்தபடி அவனருகே வந்தாள்.

"நீ அந்த மலைவாசி ஊர்காரன்தானே.?" என கேட்டாள் ஆவலாக.

அவளை விடவும் அதிகமாக இவர்கள் இந்த மலைகளோடும் காடுகளோடும் சொந்தமாக இருந்தனர். இது அவளுக்கு நிறைய முறை பொறாமையை தந்துள்ளது. தான் விரும்பும் காட்டிற்கு செல்ல பிள்ளைகள் அந்த மலைவாசி மக்கள்தான் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தான் ஏன் அந்த கிராமத்து மக்களில் ஒருவருக்கு குழந்தையாக பிறக்கவில்லை என்று தனக்குத்தானே கேட்டு அடிக்கடி வருத்தப்படுவாள்.

"உன்னைதான் கேட்கறேன்.. நீ அந்த மலைவாசிகாரன்தானே.?" மீண்டும் அவனிடம் கேட்டாள். அவன் இவளை திரும்பி கூட பார்க்கவில்லை. தன் முன்னால் இருக்கும் செடியிலிருந்த இலைகளை பறிப்பது ஒன்றே தன் நோக்கம் என்று குறியாக இருந்தான்.

"இந்த இலையெல்லாம் என்னத்துக்கு.? இது ஏதும் மருந்து செய்யவா.?" அவன் பதிலே சொல்லவில்லை என்றாலும் கூட அவளால் அடுத்த கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு ஆர்வம் இருந்தது காட்டை பற்றி புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள.

அவன் அந்த செடியில் இருந்த மொத்த இலைகளையும் பறித்து விட்டு அடுத்த செடியை தேடி கிளம்பினான். செங்காவும் அவனை பின் தொடர்ந்தாள். அவன் அடுத்தொரு செடியில் இலைகளை பறித்தான். செங்கா தன் ஆவலை அடக்க இயலாமல் தானும் சில இலைகளை பறித்து அவனிடம் நீட்டினாள். அவன் இவளது முகத்தை பார்த்து விட்டு அந்த இலைகளை வாங்கி தனது துணிப்பையில் போட்டுக் கொண்டான். அது செங்காவிற்கு மிகுந்த சந்தோசத்தை தந்துவிட்டது.

பெரும் புன்னகையோடு அவனோடு சேர்ந்து இலைகள் அனைத்தையும் பறித்து அவனிடம் தந்தாள். அவன் ஏதும் சொல்லாமல் வாங்கி கொண்டான்.

"உங்க ஊருக்கு என்னை ஒரு முறை கூட்டி போறியா.?" என்றாள் ஆவலோடு. அவன் பதில் சொல்லவில்லை. தனது துணி பை இலைகளால் நிரம்பியதும் அருகில் இருக்கும் பள்ளத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

அவர்களது கிராமம் இரண்டு மலைகளுக்கு அப்பால் இருந்தது. ஏதேனும் ஒரு விசேசம் நடக்கும்போது அவர்கள் இருக்கும் மலையின் உச்சியில் சிறு நெருப்பு எரியும். தூரத்தில் இருந்து அதை பார்ப்பாள் செங்கா. மலை உயரம் என்பதால் அவள் தயங்கவில்லை. அவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிதான் பயந்தாள். அந்த கிராமத்திற்கு இதுவரை ரேஞ்சர் கூட போனதில்லை. ஏனெனில் அவர்கள் வெளி மனிதர்களை தங்கள் கிராமத்திற்குள் விடுவதில்லை என்ற செய்தி அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் அந்த மலைக்கு சென்று அந்த மக்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் இவளுக்கு தீராமலேயே இருந்தது.

செங்கா பறித்து தந்த இலைகளை வாங்கி கொண்டு காடுகள் இடையே பாய்ந்து ஓடினான் அந்த இளைஞன். ஒரு மணி நேரத்தில் தங்களது கிராமத்தை அடைந்தான். பந்தய குதிரையை விடவும் இவன் வேகமாக ஓடி வந்திருந்தான். மூச்சு வாங்கியபடி தன் பையை அங்கிருந்த ஒரு முதியவரிடம் நீட்டினான். அந்த முதியவர் அதை வாங்கி தன் பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் தந்து ஏதோ சைகை காட்டினார். அந்த பெண் அந்த இலைகளை கல்லில் வைத்து அரைத்தாள். அந்த குடிலில் இருந்த திண்ணையில் படுக்க வைக்கப்பட்டிருந்த விஷ்வாவும் பொன்னாவும் மயங்கியிருந்தனர். அவர்களது மொத்த உடையும் ரத்தத்தால் நனைந்திருந்தது. அளவுக்கு அதிகமாகவே காயம்பட்டு இருந்தது இருவருக்கும்.

மறுபக்க திண்ணையில் மயங்கி கிடந்தாள் பூங்கோதை. காயங்கள் அதிகம் இல்லை என்றாலும் கூட நடந்த விபத்து அவளது மூளையை உணர்விழக்க செய்திருந்தது. அவள் எத்தனை நாட்கள் கோமாவில் இருப்பாள் என்பதை அந்த பெரியவராலும் யூகிக்க முடியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1127
VOTE
COMMENT
SHARE
FOLLOW

இதுல உள்ள கேரக்டரோட வயசுகளை சொல்லிடுறேன்ப்பா..

செங்கா, பொன்னா - 21 (எந்தன் நேசத்துல இவங்க வயசு 14. பொன்னா ஸ்கூல் கேர்ள்ன்னு அப்பவே மென்சன் பண்ணி இருப்பேன்ப்பா. அந்த கதை முடிஞ்சி ஏழு வருசத்துக்கு அப்புறம் நடக்குற கதை இது.)
அதியன், விஷ்வா -27 (கை பிடித்த கண்ணாலாவுல இவங்க வயசு 25. அந்த கதை முடிஞ்சி இரண்டு வருசத்துக்கு அப்புறம் நடக்குற கதை இது.)
சீனு - 35
கலையரசி, சாமிநாதன் - 49
செழியன் - 24
ரக்சனா - 21
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN