நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் கன்னத்தில் கை வைத்தபடி இறந்தவளை பற்றிய யோசனையில் இருந்தான் இனியன். விடிய விடிய தூக்கமே வரவில்லை அவனுக்கு. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கேமராவில் நடந்த அனைத்தும் பதிவாகி இருந்ததால் குமரன் அவனை காலையில் வந்து சேர்ந்தால் போதும் என சொல்லி விட்டார். வீட்டிலேயே இருந்து விட்டவனுக்கு இறந்தவளின் நினைவு விட்டு போகவில்லை.
படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஹாலுக்கு வந்து விட்டான். அவனை போலவே மற்றவர்களும் தூக்கமின்றி வந்து சேர்ந்து விட்டனர். சொந்தமாக இல்லாதவளாக இருந்தாலும் கூட மேகலை இத்தனை நாள் இங்கு தங்கி இருந்ததில் அனைவருமே அவளை தங்கள் வீட்டில் ஒருத்தியாக நினைத்து விட்டனர். சொந்த வீட்டு பெண் இறந்த அதே சோகம் அவர்கள் நெஞ்சில் இருந்தது.

சோகத்தோடு இருந்த இனியன் தன் அருகே அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சந்தியா தூங்கி எழுந்து வந்ததை கண்டவன் எழுந்து அவளருகே ஓடினான்.

"சந்தியா உடம்புல எங்கேயாவது வலிக்குதா.?" என கேட்டவன் அவளை இருக்கையில் அமர வைத்தான்.

"இல்ல.. என்ன ஆச்சி.? என்னை யாரோ கடத்திட்டாங்க இனியா.." குழப்பதோடு சொன்னவள் முன் மண்டியிட்டவன் அவளின் கையை பற்றினான்.

"நீ இப்ப வீட்டுக்கு வந்துட்ட சந்தியா.. நான் உன்னை தனியா போராட விடுவேனா.?" என கேட்டவன் அவளின் கன்னத்தை பார்த்தான். இன்னமும் கன்னத்தில் அறை வாங்கிய தடம் கன்னி போய் தெரிந்தது.

அவளது கன்னத்தில் தனது உள்ளங்கையை பதித்தவன் "சாரி.. என்னாலதான் உனக்கு இப்படி ஆயிடுச்சி.." என்றான்.

அவனது சோக குரல் அவளுக்கு வேதனையை தந்தது. "இதுக்கெல்லாம் ஏன் இப்படி சொல்ற.? போலிஸ்ன்னா இந்த மாதிரி ஏதாவது பிரச்சனை வரத்தானே செய்யும்.?" என்றவள் சில நொடிகள் யோசனைக்கு பிறகு "யார் என்னை கடத்தியது‌.?" என்றாள்.

"மேகலையோட ஃபேமிலியை சேர்ந்த ஒருத்தன்.." என்றவனின் தலை தானாக தரை பார்த்தது. அவனது குரலில் எப்போதும் இருக்கும் கம்பீரம் இன்று இல்லாமல் போனது சந்தியாவுக்கு நெருடலை தந்தது‌.

"விடு பரவால்ல.. அதான் என்னை பத்திரமா கூட்டி வந்துட்டியே.." என்றவளுக்கு அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

மற்றவர்களும் ஆளுக்கொரு பக்கம் சோகமாக அமர்ந்திருந்தது கண்டு குழம்பி போனாள் சந்தியா. "என்ன ஆச்சி.? ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா இருக்கிங்க.?" சந்தேகத்தோடு கேட்டாள் அவள்.

"சந்தியா.." சக்திதான் அழைத்தாள்.

"என்ன ஆச்சி அத்தை.?"

"மேகலை இறந்து போயிட்டா.."

"காலங்காத்தால ஏன் இப்படி ஒரு விளையாட்டு.?" என கேட்டவள் அனைவரும் துக்கத்தோடு இருப்பது கண்டு அதிர்ந்து போனாள்.

"எ.. என்ன ஆச்சி.?" அவர்கள் சொன்னது உண்மையாக இருக்க கூடாது என எண்ணியபடியே கேட்டாள்.

நடந்த அனைத்தையும் மகேஷ் விவரித்தான். மேகலை இனியனுக்கு முத்தமிட்டதை தவிர மற்ற அனைத்தையும் விலாவாரியாக சொன்னான்.

மகேஷ் சொன்ன செய்த அவளுக்கு தாங்க முடியா துயரத்தை தந்து விட்டது. இந்த சில மாதங்களில் தனக்கு தோழியாக மாறி விட்டிருந்தவள் இன்று இறந்து போனதை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

"மேகா.." கதறி அழ ஆரம்பித்தவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் இனியன்.
அவனுக்கும் அழுகை அழுகையாக வந்தது. குடும்பத்தில் ஒருத்தியானவள் இறந்தது மிக பெரிய இழப்பை தந்தது அவனுக்கு.

"நீயெல்லாம் என்ன போலிஸ்.? அவளை காப்பாத்த கூட உன்னால முடியாதா.? பாவம் தெரியுமா அவ.? எப்பவும் மேடம் மேடம்ன்னு என் பின்னாடியே சுத்திட்டு இருப்பா.. அவளை போல கொலைக்காரன் கையில கொடுத்திருக்கியே.." அழுகையோடு இனியனின் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.

அவன் நெஞ்சில் சோகம் மட்டும்தான் இருந்தது. அவனது மனசாட்சி இவ்வளவு நேரமும் கேட்ட கேள்வியை சந்தியா கேட்டு விட்டாள். அவளது கேள்வி அவனது மனசாட்சிக்கு சிறு ஆறுதலை தந்தது.

"ஆமா நான்தான் கவனமா இல்லாம போயிட்டேன்.." என்றவனின் குரல் கரகரத்து போயிருந்ததை கண்டவளுக்கு அவனும் சோகத்தில் இருக்கிறான் என புரிந்தது. அது இன்னும் அதிகமான அழுகையை தந்தது அவளுக்கு.

பொழுது விடிந்தது.

தனது அலுவலகம் சென்றான் இனியன்.

"ஒரு போலிஸ் அதிகாரியா இருந்துட்டு இப்படி ஒரு நிலமையை ரொம்ப மோசமா கையாண்டு இருக்கிங்க இனியன்.." ஒரு அதிகாரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

"உங்களுக்கு பெரிய ஹீரோன்னு நினைப்பா.? நீங்களே எல்லா முடிவையும் எடுக்கறதா இருந்தா அப்புறம் சீனியர் ஆபிசர்ஸ்ன்னு நாங்க எதுக்கு இருக்கோம்.?" என்று ஒருவர் கோபத்தோடு கேட்டார்.

உயர் அதிகாரிகளுக்கு சரியான பதில் வழங்க முடியாத அளவிற்கு அவனுக்குள் இழப்பு இருந்தது.

அவனுக்கு ஒரு வாரம் சஸ்பென்ஷன் ஆர்டர் கிடைத்தது.

மேகலையின் உடல் போஸ்ட்மார்ட்டம் முடித்து வந்தது. அந்த உடலுக்கு இறு சடங்கு செய்து மின் தகனத்துக்கு உட்படுத்தி விட்டு வீடு வந்தான் மகேஷ்.

இனியனின் வீடு ஒரு வாரத்திற்கு துக்க வீடாகதான் இருந்தது. இறந்தவளை நினைத்து சந்தியாவும் இனியனும் வருத்தத்தில் இருந்தனர்.

மேகலையின் இறப்புக்கு இனியன் காரணம் இல்லை என மகேஷ் அவனுக்கு எக்கச்சக்க அறிவுரைகளை சொன்னான். இனியன் தவறு தன் மீது இல்லையென முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனாலும் ஒரு வாரத்தில் ஓரளவுக்கு தனது பழைய நிலைக்கு திரும்பி விட்டான்.

சம்பவம் நடந்த இடத்தில் கேமராவில் பதிவாகி இருந்ததை குமரன் பார்த்து முடித்தார். இனியனும் மகேஷீம் புத்திசாலித்தனமாக செயல்பட முயன்றும் கூட மேகலை அவளாக சென்று இறந்து போனது புரிந்து போனது.

"சாரி சார்.. கொலைக்கும் இனியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நாமதான் தேவையில்லாம சஸ்பென்ஷன் தந்துட்டோம்.. திரும்பி வர சொல்ல சொல்லிடுங்க சார்.." என்றார் ஒருவர்.

"இல்ல.. ஒரு வாரம் முடிஞ்சே வரட்டும்.. அந்தப் பொண்ணு செத்துட்டதுல இனியனுக்கு குற்ற உணர்ச்சி இருக்கும். அதுல இருந்து வெளி வரதுக்கு சில நாட்கள் தேவைப்படும்.." என சொல்லி விட்டார் குமரன்.

சந்தியா சோகத்திலேயே இருப்பதை கண்டு அவளை வெளியே அழைத்து சென்று வந்தான் இனியன்.

"அவ உன் பிரெண்டுன்னு தெரியும்.. அவ சாவுக்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாகிட்டேன்.. என்னை மன்னிச்சிடு.." என்று மனைவியிடம் மன்னிப்பும் கேட்டான்.
அவனை தன் தோளோடு அணைத்துக் கொண்டவள் "கை தவறி உடையும் பொருளுக்கு நம்ம கவன குறைவுதான் காரணம்.. ஆனா அதுக்காக கையை வெட்டிக்க முடியாது.. இனி வரும் காலத்திலாவது இன்னும் கவனத்தோடு இருக்க கத்துக்கணும்.. அவ்வளவுதான்.." என்றாள்.

இருவரும் இணைந்து பூங்காவுக்கும் உணவக்கத்திற்கும் சென்று விட்டு வீடு திரும்பினர்.
திரும்பும் வழியில் தனது ஃபோன் தொலைந்து போனதால் புது ஃபோன் ஒன்றை வாங்கி கொண்டாள் சந்தியா.

"ஆனா அவன் ஏன்ப்பா செத்து போனான்.?" குழப்பத்தோடு கேட்டாள் சந்தியா.

"எனக்கும் தெரியலம்மா.. யாரும் அவங்களோட காரணத்தை வாய் திறந்து சொன்னாதானே தெரியும்.? அவனோட தற்கொலை கடைசி வரை மர்மம்தான்.." என்றவன் வீட்டிற்கு வந்தபின் தோட்டத்திற்கு சென்று அவளுக்காக ரோஜா ஒன்றை பறித்து வந்தான்.

"ரோஜாவை வச்சிக்க.. ஒரு வாரமா ஒரு மாதிரியா நம்ம வாழ்க்கைக்கு நாமளே சம்பந்தம் இல்லாதவங்களை போல இருந்துட்டோம்.." அவள் முன் ரோஜாவை நீட்டினான்.

ரோஜாவை கையில் வாங்கியவள் "தேங்க்ஸ்.." என்றாள் சிறு நாணத்தோடு.

"ஐ லவ் யூ.." என்றான் இனியன்.

"நானும்.." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அருகில் யாரும் இல்லை என்பதை அறிந்ததும் அவனது கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தாள்.

அவளை தன்னருகே இழுத்து நிறுத்தியவன் அவளது கம்மலை சுண்டி விட்டான்.

"உன்னை கடத்திட்டு போயிட்டிங்கன்னு தெரிஞ்சவுடனே நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா.? அன்னைக்கு நான் உன்னை பார்க்க பார்ம்க்கு வருவதா சொல்லமா இருந்திருந்தா உனக்கு இப்படி ஒரு துரதிஷ்டவசமான சந்தர்ப்பம் அமைஞ்சிருக்காது.. சாரி.." என்றான் வருத்தத்தோடு.

அவனின் சட்டை பட்டனில் விளையாடியவள் "என்கிட்ட ஏன் சாரி கேட்கற.? அவன் என்னை கடத்துவான்னு யாருக்கு தெரியும்.? அதுவும் இல்லாம நான் அதிகமா பயப்படல.. நீ என்னை காப்பாத்த வருவன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.." என்று சொன்னாள். அவளின் குரலில் உறுதியின் தன்மை அதிகமாக இருந்தது. அதை கண்டு இனியனுக்கு சற்று பெருமையாக இருந்தது. ஆனால் முழுதாக மகிழ முடியாதவாறு மேகலையின் முகம் வந்து போனது.

அடுத்த நாள் தனது வேலைக்கு கிளம்பினான் இனியன். அவன் அந்த பக்கம் சென்ற சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்தார் குமரன்.

"வாங்கப்பா.." என வரவேற்ற சந்தியாவின் தலையில் வருடி தந்தவர் "எப்படி இருக்கம்மா.?" என்று நலம் விசாரித்தார் அவர்.

"நல்லேருக்கேன் ப்பா.. உட்காருங்க டீ கொண்டு வரேன்.." தனது புடவை முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு திரும்பினாள்.

"நான் கிளம்பணும் ம்மா.. இன்னொரு நாளைக்கு வந்து டீ சாப்பிடுறேன்.. நான் இங்கே வந்ததே உன் ஃபோனை திருப்பி கொடுத்துட்டு போகதான்.. மாப்பிள்ளை எங்கே.?" என கேட்டவர் தனது பாக்கெட்டில் இருந்த போனை வெளியே எடுத்தார்.

"அவரு வேலைக்கு கிளம்பி போயிட்டார் அப்பா.. ஆனா என் போன் தொலைஞ்சி போச்சுன்னு நினைச்சேனே நான்.." என்றவளின் கையில் ஃபோனை தந்தார் அவர்.

"இல்லம்மா.. உன்னை கடத்தி வச்சிருந்த இடத்துல ஃபோன் கிடைச்சது.. ஆனா உடனே ஃபோனை கொடுக்க முடியாத சூழல்‌.. அதனால்தான் இப்ப நானே நேர்ல வந்து உன்னையும் பார்த்துட்டு போனையும் தந்துட்டு போகலாம்ன்னு வந்தேன்‌.."

சந்தியா ஃபோனை ஆன் செய்து பார்த்தாள். நன்றாகத்தான் இருந்தது.

"தேங்க்ஸ் அப்பா.. இந்த ஃபோன் இனியன் எனக்கு முதல் முதலா வாங்கி தந்தது.." என்றவளின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

"ஓகோ.." என்று குறும்பாக சிரித்தார் அவர்.

"அதனால்தான் உன் ஃபோனை அவன் ஹேக் பண்ணி வச்சிருந்தானா.? பொண்டாட்டி மேல ரொம்பவும் அக்கறை என் மாப்பிள்ளைக்கு.. ஆனா இந்த காலத்து பசங்களே ரொம்ப வித்தியாசம்தான்.."

சந்தியா முகம் சட்டென மாறியது.
"என்ன ஹேக்.?" என்றவளுக்கு இதயம் வேகமாக துடித்தது.

குமரனும் குழப்பமாக அவளை பார்த்தார். "உனக்கு தெரியாதா.? உன் ஃபோனை இனியன் மொத்தமா ஹேக் பண்ணி வச்சிருக்கான்.. உன் மொபைலோட லொக்கேஷன் மட்டுமில்லாம கேமரா, மைக்குன்னு மொத்தமா ஹேக் பண்ணி வச்சிருக்கான்.. அவன் ஃபோன்ல இருந்து உன் போனோட ஆக்டிவிட்டியையும் ஃபோன் வச்சிருக்கிற உன்னோட ஆக்டிவிட்டியையும் முழுசா கண்காணிக்க முடியும்.. இதை வச்சிதான் அவன் உன்னை கடத்தப்பட்ட இடத்தை கண்டுபிடிச்சி உடனே உன்னை வந்து காப்பாத்தினான்..
மாப்பிள்ளை உன் பாதுகாப்புக்காக உன்னை கேட்டுட்டுதான் இதை செட் பண்ணி வச்சிருக்கான்னு நினைச்சேனே.." என்றவருக்கு குழப்பமும் கோபமும் ஒரு சேர வந்தது.

அவர் சொன்னதை கேட்டிருந்த சந்தியா சிலையாக நின்றாள். இதற்கு முன் நடந்த சில விசயங்களை நினைத்து பார்த்தாள். தனது ஃபோனில் தனக்கு தெரியாமலேயே இனியன் இப்படி ஒரே ஹேக்கிங் செட்டிங்கை செய்துள்ளான் என்பது புரிந்து போனது அவளுக்கு.
அவன் முதல் நாள் தனது ஃபோனை பிடுங்கி கொண்டு பிறகு இந்த ஃபோனை தந்ததை நினைத்து பார்த்தாள். எவ்வளவு கீழ்தரமான எண்ணத்தோடு இந்த ஃபோனை தன்னிடம் தந்துள்ளான் அவன் என நினைத்த போது கோபத்தை விட தன்னை நினைத்து அழுகைதான் வர இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1089
VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN