செங்கா 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதியன் நிமிடத்திற்கு நாலு முறை விஷ்வாவுக்கு ஃபோன் செய்துக் கொண்டிருந்தான்.

பள்ளத்தாக்கில் கார் உருண்டு விழுகையில் விஷ்வாவின் பாக்கெட்டில் இருந்து தவறி கீழே விழுந்திருந்த அவனின் ஃபோன் அரைகுறை உயிரோடு ரிங்காகி கொண்டிருந்தது.
கலையரசியையும் சாமிநாதனையும் சீனு தனது வீட்டில் இருந்த ஒரு தனி அறையில் அடைத்து வைத்தான்.

"அவ இங்கே வரும் வரைக்கும் நீங்க இரண்டு பேரும் இந்த ரூமை விட்டு வெளியே போக முடியாது.." என்றவன் தன் அடியாட்களிடம் "இவங்க இங்கே இருக்கறது வெளியே யாருக்கும் தெரிய கூடாது.. முக்கியமா அந்த லாரன்ஸ்க்கு தெரிய கூடாது.." என்றான்.
அவர்கள் தலையசைத்து விட்டு அங்கேயே காவலுக்கு நின்றனர்.

செடிமலை கிராமத்து மக்கள் இடிந்து விழுந்திருந்த சாமிநாதனின் வீட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாமிநாதன் போனுக்கு அழைப்பு விடுத்து பார்த்தனர். ஆனால் அது அணைந்து உள்ளதாக தெரிந்தது.

நேற்று பெய்த மழையில் வீடு இடிந்து விட்டதாக நினைத்து பயந்தவர்கள் போலிஸ்க்கு தகவலை சொல்லி விட்டு அந்த வீட்டை பிரித்தனர். ஆனால் இடிந்து கிடந்த வீட்டிற்குள் யாரும் இல்லை. வந்து பார்த்த போலிஸாரும் "இவங்க எங்கேயாவது பயணம் போயிருப்பாங்க.. அந்த நேரத்துல வீடு இடிஞ்சி விழுந்துடுச்சி போல.." என்று தங்களின் யூகத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

"அவங்க வீட்டுக்கு நேத்து சொந்தக்காரங்க வந்திருந்தாங்கப்பா.. அவங்களோடு சேர்ந்து ஊருக்கு போயிருப்பாங்க போல. அந்த நேரம்ன்னு பார்த்து வீடு வேற இடிஞ்சி விழுந்துடுச்சி.. நல்ல வேளையாக அவங்க ஊருக்கு போனாங்க.. இங்கேயே இருந்திருந்தா பாவம் இந்த இடிபாடுகள்ல மாட்டி ஏதாவது ஆகியிருக்கும்.." என்றார் வயதானவர் ஒருவர்.

"அதுவும் நிசம்தான்.. ஆனா மறுபடி ஊருக்கு திரும்பி வந்தாங்கன்னா இந்த இடிஞ்ச வீட்டை பார்த்து மனசொடிஞ்சி போயிடுவாங்க.." என்றான் இளைஞன் ஒருவன்.

"எதுக்கும் இன்னொரு முறை போன் பண்ணி பாருங்க.. வீடு இடிஞ்ச விசயத்தை அவனுக்கு சொல்லிடுவோம்.." என்ற பெரியவர் தான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான் என்றெண்ணி அங்கிருந்து கிளம்பினார்.

அந்த இளைஞன் சாமிநாதனுக்கு ஃபோன் செய்தான். ஆனால் இம்முறையும் ஸ்விச் ஆஃப் என்றே வந்தது. அப்புறமாக தகவல் சொல்லலாம் என்றெண்ணியவன் தனது தினசரி வேலைகளை பார்க்க கிளம்பினான்.

இரண்டு நாட்கள் கழித்து‌..

சிபி பிரதர்ஸ் தங்களது டீலை சீமா கன்ட்ஸ்ரக்சனுக்கே தந்தனர்.

விஷ்வா மீது கொலை வெறியில் இருந்தான் அதியன். நண்பனின் திருமணத்தில் கூட அவனால் முழுமனதோடு கலந்துக் கொள்ள முடியவில்லை. பல கோடி ரூபாய் டீல் தங்களது கையை விட்டு போனது அவனுக்கு பெரிய அடியை தந்துவிட்டது. கோபம் தீராமலேயே விமானம் ஏறினான் அவன்.

சனிக்கிழமை காலையில்..

செங்கா இன்றாவது வீட்டிற்கு திரும்பலாம் என நினைத்தாள். அவளுக்கு ஏனோ அம்மாவும் அப்பாவும் கண்ணுக்குள்ளேயே இருப்பது போல இருந்தது. தனது பேக்கை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். நேற்று மதியம் சில கிழங்குகளை தோண்டி எடுத்திருந்தாள். தான் சுட்டு தின்றபோதே வீட்டிற்கு என்று தனியே கொஞ்சம் கிழங்குகளை எடுத்து வைத்திருந்தாள். அதையும் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள். அதை பத்திரப்படுத்துக்கையில் அருவியிடம் இருந்து எடுத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்தது.

"மனுசனுக்கு நான் துப்பாக்கியை எடுத்தது தெரிஞ்சிருக்குமா தெரிஞ்சிருக்காதா.?" என காற்றோடு கேட்டவள் அதையும் எடுத்து பத்திரப்படுத்தினாள்.

குளித்து விட்டு பொன்னா போன முறை ஊருக்கு வரும்போது வாங்கி வந்த புது மாடல் டாப் அன்ட் ஸ்கர்ட்டை அணிந்துக் கொண்டாள்.

ஓடையின் பாதையோரமே இறங்கி ஊருக்கு கிளம்பினாள். போனுக்கு டவர் கிடைக்கும் இடம் வந்ததும் தனது ஃபோனை ஆன் செய்து பொன்னாவிற்கு ஃபோன் செய்தாள். மறுமுனை ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

"இந்த புள்ளை போனுக்கு கூட சார்ஜ் போடாம என்ன பண்றாளோ.?" என கேட்டாள். "அப்பாறமாவாவது ஃபோன் பண்ணி பார்க்கலாம்.." என்று ஃபோனை பேக்கில் போட்டுக் கொண்டாள்.

வீட்டுக்கு செல்லும் வழியில் நடக்கையில் மனதில் ஏதோ சிறு சஞ்சலம் தோன்றியது அவளுக்குள். இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் வீட்டிற்கு சென்று விடுவோம் என்ற சந்தோசம் அந்த சஞ்சலத்தை மனதில் ஏற்றாமல் தடுத்து விட்டது.

ஊருக்குள் வந்ததும் அவளது நடையில் துள்ளல் சேர்ந்து விட்டது. "பேச்சை மீறி காட்டுக்கு போனியாடின்னு கேட்டு அம்மா தொடப்பக்கட்டையிலயே சாத்தப்போவுது.." என்று தனக்குள் புலம்பிக் கொண்டு வீட்டருகே வந்தவள் தன் வீடு இருந்த இடத்தில் வெறும் மண்மேடு இருப்பதை கண்டு குழம்பி போனாள்.

"எங்க வூடுதானே இது.? இது எப்படி இடிஞ்சிருக்கும்.? அம்மாளும் அப்பனும் எங்க.?" என தன்னையே கேட்டுக் கொண்டாள்.

தூரத்தில் வீட்டில் இருந்த திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த கிழவன் முன்னால் வந்தாள்.

"எங்க வூடு எங்க தாத்தா.? என் அம்மாளும் அப்பனும் எங்க.?" என்றாள்.

"அட.. செங்காளா.? இங்க வா.. சோறு தின்னு.." என்று அழைத்தார் அவர்.

"எனக்கு வேணாம்.. எங்க அப்பன் எங்க.?" அவளுக்கு அவளது கேள்வி முக்கியமாக இருந்தது.
"அவங்க உங்க சொந்தகாரங்க வீட்டுக்கு போயிருக்காங்க செங்கா.. அவங்க போன நேரம்ன்னு பார்த்து உங்க வீடு இடிஞ்சி விழுந்துடுச்சி.. அவங்களுக்கு நல்லநேரம் வீடு இடியும்போது வீட்டுல இல்லாம போனாங்க.." என்றார் அவர்.

"எனக்கு தெரியாம எந்த சொந்தகாரங்க இருக்காங்க.?" குழப்பமாக கேட்டபடி சாமிநாதனுக்கு ஃபோன் செய்தாள். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. எதிர் முனையில் ஸ்விட்ச் ஆஃப் என வரவும் ஃபோன் அழைப்பை துண்டித்து விட்டு தனது வீட்டை நோக்கி நடந்தாள். இடிந்து மண் மேடாகி இருந்த இடத்தில் அமர்ந்தாள்.

"எங்க போனிங்க ரெண்டு பேரும்.? பெத்த மவ வருவாளே.. வந்து வெறும் வூட்டை பார்த்தா அழுவாளேன்னு உங்களுக்கு தோணலையா.?" என்று மண்மேட்டை பார்த்து கேட்டாள்.

"உங்க போனுக்கு என்ன வேதி வந்துச்சி.? யாருக்கு ஃபோன பண்ணாலும் சுவிட்ச் ஆப்புன்னே வருது.. நீங்க போயிருக்க ஊருல சுத்தமாவே கரண்டு இல்லாத இருண்ட ஊரா.? இந்த பொன்னா புள்ளையும் ஃபோன சுவிட்ச் ஆப்பு பண்ணி வச்சிருக்கா.. படிக்க போறவளுக்கு ஃபோன் என்னாத்துக்குன்னு நான் அப்பவே சொன்னேன்.. யார் என் பேச்சை கேட்டிங்க.?" என்று புலம்பியவள் சில நிமிடங்களுக்கு பிறகு எழுந்து நின்றாள்.

"இந்த வூட்டை நானே எடுத்து கட்டட்டுமா.? ஆனா வூட்டை தார்சு வூடா கட்டணும்ன்னு சொல்லிட்டு இருந்துச்சி அப்பா வேற.. அதுக்குன்னு இன்னொரு காலமா வர போவுது.? இப்பவே வந்து பார்த்துட்டு இதை மாத்தி கட்டட்டும்.." என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.

அதியன் தனது அலுவலகம் சென்றான். விஷ்வாவை பற்றி அனைவரிடமும் விசாரித்தான். ஆனால் யாருக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றே சொன்னார்கள். மற்ற பல இடங்களிலும் கூட விசாரித்தான். ஆனால் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. சோர்ந்து போய் மதியம் விஷ்வாவின் வீடு வந்து சேர்ந்தான்.

"விஷ்வாவை எல்லா இடத்திலும் தேடிட்டேன்ம்மா.. சரியா தெரியாம போலிஸ் கம்ப்ளைண்டும் தர முடியாது.. நாம ஏதாவது கம்ப்ளைண்ட் பண்ண நேரத்துல இவன் அந்த பொண்ணோட சுத்த போயிருந்தான்னா கடைசியில் அதுவே பெரிய வில்லங்கம் ஆகிடும்.. அந்த புவி வீடு எங்கேன்னு உங்களுக்கு தெரியுமா அம்மா.?" என கேட்டான் காயத்ரியிடம்.

"நான் அந்த பொண்ணை அவன் செல்போன்ல பார்த்ததோடு சரிப்பா.. நேர்ல கூட்டி வாடான்னு சொன்னதுக்கு கூட அவன் கூட்டிட்டு வரலப்பா.." என்றாள்.

"நான் அந்த பொண்ணை போட்டோவுல கூட பார்த்தது இல்லம்மா.. புவி புவின்னு புலம்பிட்டு இருப்பானே தவிர ஒரு தடவை கூட என்கிட்ட அவளை அறிமுகப்படுத்தி வைக்கலம்மா.. அவ காலேஜ் கூட எனக்கு தெரியாது.." என்றவனுக்கு நண்பனை நினைத்து கவலையாக இருந்தது.

"எனக்கு அந்த பொண்ணோட காலேஜ் ஹாஸ்டல் தெரியும்.." என்று சொன்னாள் ரக்சனா.
அம்மாவும் அதியனும் அவளை பார்த்தனர்.

"என் பிரெண்டோட காலேஜ்லதான் புவி படிக்கிறா.. நான் ஒருமுறை என் பிரெண்டை மீட் பண்ண போனபோது புவியும் அண்ணனும் ஹாஸ்டல் வெளியே நின்னு பேசிட்டு இருந்ததை பார்த்தேன்.." என்றாள்.

"அப்படின்னா என்ன கூட வா.." என்ற விஷ்வா அவளை அழைத்துக் கொண்டு அவள் சொன்ன ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தான்.

"நீங்க யாரு.? உங்களுக்கு யார் வேணும்.?" வாட்ச்மேன் வழக்கமான கேள்விகளை கேட்டார்.
"புவியை பார்க்கணும்.." என்றாள் ரக்சனா.

"அப்படி யாரும் இங்கே இல்லை.." என்றார் வாட்ச்மேன்.

ரக்சனாவும் அதியனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"இந்த ஹாஸ்டல்தான்னு உனக்கு கரெக்டா தெரியுமா.?" சந்தேகமாக கேட்டான் அதியன்.
"தெரியும்.. இருங்க ஒரு நிமிசம்.." என்றவள் தனது ஃபோனை எடுத்தாள்.

"அண்ணன் புவியோட போட்டோவை வாட்சப் ஸ்டேட்டஸா ஒருமுறை வச்சிருந்தான். நான் அதை ஸ்க்ரீன் சேவ் பண்ணி வச்சிருந்தேன்.." என்றவள் புவியின் போட்டோவை வாட்ச்மேனிடம் காட்டினாள்.

"இந்த பொண்ணுதான்.." என்றாள்.

"பொன்னாவா.? அந்த பொண்ணு திங்கட்கிழமை ஊருக்கு போனா.. இன்னும் திரும்பி வரல.. சரியான காரணம் இல்லன்னா இங்கிருந்து கிளம்புங்க.." என்றார்.
"பொன்னா..?" அதியனுக்கு குழப்பமாக இருந்தது.

"இவ ஏன் தன் பேரை உன் அண்ணன்கிட்ட மாத்தி சொன்னா.? லவ் லவ்வுன்னு ஏதாவது கோல்ட் டிக்கர்க்கிட்ட மாட்டிக்கிட்டானா இவன்.?" என்று ரக்சனாவிடம் கேட்டான்.

"முழுசா விசாரிக்காம எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.." என்று சொன்ன ரக்சனா தனது தோழிக்கு ஃபோன் செய்தாள். தாங்கள் இருக்கும் இடத்திற்கு வர சொன்னாள்.
அவளது தோழி வந்தவுடன் பொன்னாவை பற்றிய விபரங்களை கேட்டாள்.

"அந்த பொன்னாவா.? அவ சரியான காட்டான்ப்பா.. அவளெல்லாம் பொண்ணுங்க லிஸ்ட்லயே சேர்த்த கூடாது.. என்னையே ஒருமுறை அறைஞ்சிட்டா.." என்றாள் அவள்.
ரக்சனாவின் முகத்தில் குழப்பம் தெளிவாக தெரிந்தது.

"என் அண்ணனும் இந்த பொண்ணும்.." ரக்சனா முழுமையாக சொல்லும் முன் அதியன் இடை புகுந்தான்.

"இந்த பொண்ணோட அட்ரஸ் வேணும்.. கிடைக்குமா.?" என்றான்.

அழகான பெண்கள் மட்டுமல்ல அழகான ஆண்கள் கேட்டாலும் சில விபரங்கள் சுலபமாக கிடைத்து விடும் என்பதற்கு ஏற்ப, உள்ளே ஓடிய ரூபிகா சற்று நேரத்தில் பொன்னாவின் அட்ரஸோடு திரும்பி வந்தாள்.

"இது பொன்னாவோட அட்ரஸ்.. அவளோட ரூம் மேட்கிட்ட வாங்கிட்டு வந்தேன்.." என்றவள் அட்ரஸை வாங்க கை நீட்டிய ரக்சனாவை தவிர்த்து விட்டு அதியனிடம் பேப்பர் துண்டை நீட்டினாள்.

ரக்சனா தனது கோபத்தை வெளிக்காட்டவில்லை. அதியன் அட்ரஸை வாங்கி படித்து பார்த்தான்.

அவனது கல்லூரி பருவத்தில் ஒருமுறை அவன் தன் நண்பர்களோடு சுற்றுலா செல்லுகையில் இந்த அட்ரஸ்க்கும் அருகில் இருந்த ஏதோ ஒரு மலையில் டிரெக்கிங் ஏறியது இப்போது நினைவுக்கு வந்தது.

ரக்சனாவை பார்த்தவன் "நீ வீட்டுக்கு போ ம்மா.. நான் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் விசாரிச்சிட்டு வந்திடுறேன்.." என்றான்.

"அங்கே போனதும் மறக்காம எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க.." என்றாள் அவள் கவலையோடு.

"சரிம்மா.." என்றவன் தனது காரில் ஏறி இன்ஜினை இயக்கினான்.

செங்கா தனது வீட்டின் முன்னால் சிறு தீ மூட்டினாள். கிழங்கு ஒன்றை கம்பி ஒன்றில் சொருகி தீயில் காட்டினாள். சாமிநாதனுக்கும் பொன்னாவுக்கும் இடைவிடாமல் ஃபோன் செய்துக் கொண்டே இருந்தாள். யாராவது ஒருவரின் ஃபோன் ரிங் ஆகி விடாதா என்று ஏக்கமாக காத்திருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1098
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN