நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் ஹாலின் நடுவே அமர்ந்துக் கொண்டிருந்தான். அக்காவையும் அம்மாவையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்டறிய நினைத்து ஒவ்வொருவர் முகத்தையும் படிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அக்கா அங்கும் இங்கும் கலகலப்பாக நடந்துக் கொண்டிருந்தாள். காதுகுத்து விழாவுக்கு எதாவது விட்டு போனதா என்று பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்தாள்‌.
அம்மா சமையல் கட்டிலேயே இருந்தாள். மூன்று வருடங்களுக்கு பிறகு மகன் வீடு வந்துள்ளான் என்ற மகிழ்ச்சியில் பலகாரங்களாக செய்து கொண்டு வந்து அவன் முன்னால் வைத்துக் கொண்டே இருந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னால் வரை எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது உணவே ஒவ்வொரு வேலையும் விசமாக இருந்தது. தொண்டையில் இறங்க மறுத்த பலகாரங்களை எறும்பை போல் சிறிது சிறிதாக கடித்துக் கொண்டிருந்தான்.

தனது மனதில் உள்ள சந்தேகம் உண்மையா பொய்யா என எப்படி தெரிந்துக் கொள்வது என மூளையை கசக்கினான்.

"காப்பி வேணுமா..?" அவனது யோசனையின் இடையே வந்து கொஞ்சலாக கேட்டாள் சுபா.
அவளை சில நொடிகள் பார்த்தவன் யோசனையோடு "என் ரூமுக்கு கொண்டு வா.." என்றுவிட்டு எழுந்து மாடிக்கு நடந்தான்.

நெற்றியை தேய்த்தபடி அங்கும் இங்குமாக அவன் நடந்துக் கொண்டிருந்த வேளையில் காப்பி கோப்பையோடு அறைக்குள் வந்தாள் சுபா.

"காப்பி.." என்று நீட்டியவளை தாண்டிப்போய் கதவை தாழிட்டு விட்டு வந்தான்.
கதவு சாத்தப்பட்டதை பற்றி அவள் எதுவும் சொல்லவில்லை.

அவளது கையில் இருந்த காப்பி கோப்பையை வாங்கி அலங்கார மேஜையின் மீது வைத்தவன் "நீ எனக்கு ரூட் விடுறியா.?" என்று தாடையை தேய்த்தபடி கேட்டான்.

அவள் நாணத்தோடு தரையை பார்த்தாள். "உங்க அக்காதான் உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பேசிக்கிட்டாங்க.." என்றாள்.

"ஓகோ.." என்று யோசித்தவன் "அப்படின்னா உனக்கு என் மேல எந்த ஆசையும் இல்லையா..?" என்று கேட்டான்.

அவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். "எனக்கும் பிடிச்சிருக்கு.." என்றாள் அவசரமாக.
அவளின் குணாதிசியம் அவனுக்கு சுலபமாக புரிந்து போனது. அவனது அருகே வந்து அவளது கன்னத்தில் அசைந்தாடிய கூந்தலை எடுத்து காதுகளின் பின்னால் விட்டான். அவள் முகத்தில் மகிழ்ச்சி இழையோடியதை புரிந்துக் கொண்டான்.

"உன் அக்காவும் என் அக்காவும் எத்தனை வருசமா பிரெண்ட்ஸ்.?" என்றான்.

"ரொம்ப வருசமா.. ஏழாவது படிக்கும்போது இருந்து பிரெண்ட்ஸ்ன்னு சொல்லிப்பாங்க.." குரலில் கிளுகிளுப்பு சேர்த்து சொன்னாள்.

"என்னை பத்தி உங்க அக்காவுக்கு எத்தனை வருசமா தெரியும்.?"

அவள் யோசித்தாள். "ரொம்ப வருசமா தெரியும்.. நான் அதிகமா சாப்பிடும்போதெல்லாம் 'நீ இப்படி சாப்பிட்டா அப்புறம் சௌந்தர்யாவோட குண்டு தம்பி மாதிரிதான் ஆயிடுவ'ன்னு அப்போதெல்லாம் அக்கா அடிக்கடி சொல்வா.." என்றவள் அதை சொல்லி முடித்த பிறகே இதை சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று நினைத்தாள்.

அவன் உதட்டின் உள் பகுதியை அழுத்தமாக கடித்ததால் கசிந்த ரத்தம் அவனது நாக்கில் பட்டது.

'நான் யாருன்னு மேக்னாவுக்கு ரொம்ப நல்லா தெரியும்.. இது மாத்தி வந்த ரிப்போர்ட்டா இருக்க வாய்ப்பே இல்ல.. இது முழுக்க முழுக்க செட்டப்பாதான் இருக்க முடியும்.. ஆனா அக்கா இப்படி ஒரு துரோகத்தை நீ யாருக்கு வேணாலும் செஞ்சிருக்கலாம்.. ஆனா எனக்கு செஞ்சிருக்கவே கூடாது..' என்று உள்ளுக்குள் வெம்பியவன் சுபாவை விட்டு விலகி நின்றான்.

"எனக்கு காபி வேணாம்.. எடுத்துட்டு போ.. நான் கொஞ்சம் வெளியே போகணும்.." என்றவன் காரின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.

"முகில்.. எங்கடா போற.?" என கேட்ட அக்காவின் கேள்வியை காதில் வாங்காமல் கிளம்பினான்.

மாலை வேளையில் நண்பன் குருமூர்த்தியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினான் முகில். இளம்பெண் ஒருத்தி வந்து கதவை தட்டினாள்.

"யார் நீங்க.?" என்றாள்.

"நான் குருவோட பிரெண்ட்.. அவனை பார்க்கணும்.." இவனது குரல் கேட்டு உள்ளிருந்து வந்து பார்த்தான் குரு.

"வாடா.." இரும்பு குரலில் வெறுப்பாக சொல்லி விட்டு மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் ஏறினான் அவன். முகில் அவனை தொடர்ந்து மாடி ஏறினான்.

வீசும் காற்றை பார்த்தபடி மொட்டை மாடி கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்ற குரு நண்பனை மேலும் கீழும் பார்த்தான். பார்வையில் வெறுப்பு அதிகமாக இருந்தது.

"நீ இன்னுமா சாகல.?" என்றான் எரிச்சலாக முகத்தை திருப்பியபடி. மூன்று வருடங்களுக்கு முன்னால் முகில் தனக்கு கேன்சர் என்று இதே மொட்டைமாடியில் நின்றுதான் சொல்லி விட்டு சென்று விட்டான். நண்பனின் நோய் குருவின் மனதிலும் சோகத்தை தந்துவிட்டது. நண்பன் இன்று இறந்திருப்பானோ நேற்று இறந்திருப்பானோ என்று தினம் தினம் அவன் தனக்குள் பயந்து கிடந்ததை அவன் மட்டும்தானே அறிவான்.? வெளி சொல்லா முடியாத துக்கத்தோடு அவன் யதிராவை எதேச்சையாக பார்க்கும் ஒவ்வொரு முறையும் தனக்குள் அனுபவித்த வலிகளை பற்றி யார் அறிவார்.? நண்பன் இறந்திருப்பான் என்று தினம் வாடிக் கொண்டிருந்தவன் இன்று முகில் வீட்டு வழியே சென்று கொண்டிருந்த அதே நேரத்தில்தான் முகில் தனது வீட்டிற்கு வந்திருந்தான். 'முகில் போலவே உருவத்தோடு முகிலின் வீட்டுக்கு வந்துள்ள இவன் யார்.?' என்று நண்பனை அடையாளம் காண இயலாமல் இவன் குழம்பி நின்ற வேளையில்தான் சௌந்தர்யா அவனை அழைத்துக் கொண்டு உள்ளே செல்வதை கவனித்தான். அவன் முகில்தான் என்று புரிந்ததும் நண்பன் உயிரோடு இருக்கிறான் என்ற சந்தோசம் வந்தாலும் கூட தன்னிடம் அவன் சொல்லி சென்ற பொய்தான் மனம் முழுக்க நிரம்பி அவனுக்கு கோபத்தை அளித்தது.

"நீ ஏன் என் மேல கோபமா இருக்கன்னு புரிஞ்சிக்க முடியுது குரு.. ஆனா.."
குரு அவனை கைக்காட்டி நிறுத்தினான். "யதிராவோடு வாழ பிடிக்கல.. அதனால்தான் நான் டைவர்ஸ் பண்ணேன்னு நீ சொல்லியிருந்தா கூட உன்னை பாவியா மட்டும்தான் பார்த்திருப்பேன்.. ஆனா மனசாட்சி இல்லாத ஒரு பொய்யை சொல்லி துரோகி ஆகிட்டியேடா.." என்றவன் நண்பனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

வேதனையாக சிரித்தான் முகில். "உனக்கே இந்த விசயம் இவ்வளவு கோபத்தை தந்திருக்குன்னா எனக்கு கேன்சர்ன்னு பொய்யா ஒரு ரிப்போர்ட் தந்து என் வாழ்க்கையே அழிச்சிருக்காங்கங்கற உண்மை தெரிஞ்ச எனக்கு கோபம் வரது தப்பு இல்ல இல்லையா.?" என்றான்.

குரு அவனை எரிச்சலோடு பார்த்தான். "இன்னும் இதே மாதிரி எத்தனை பொய்தான் சொல்ல போற நீ.? இப்படி வாய் கூசாம பொய் சொல்ல உனக்கே அசிங்கமா இல்லையா.?" என்று தீராத ஆத்திரத்தோடு நண்பனின் சட்டையை பிடித்து கேட்டான்.

"என்னை மத்த எல்லோரையும் விட நீ ரொம்ப நல்லா புரிஞ்சி வச்சிருந்த.. அதனால்தான் இந்த சோகத்துல கூட நான் உன்னை தேடி வந்தேன்டா.. நடந்த எல்லாத்தையும் சொல்றேன்.. கேட்டுட்டு அப்புறம் என்னை அடிச்சி கூட கொல்லுடா.." என்று நண்பனின் கையை தன் சட்டையிலிருந்து எடுத்து விட்டான் முகில்.

"இந்த முறை என்ன பொய்யை சொல்ல போற.?" என்று எரிச்சல் தீராமல் கேட்ட நண்பனிடம் நடந்த அனைத்தையும் தான் அறிந்த அனைத்தையும் சொன்னான் முகில்.

முகில் சொன்னதை ஏற்றுக் கொள்ள மனம் தயங்கினாலும் கூட அவனது அப்பாவி தனம் பற்றி முழுதாக அறிந்து வைத்திருந்த குருவிற்கு நடந்ததை யூகித்து பார்க்க முடிந்தது.

"ஐயம் சாரிடா.. நான்தான் கோபத்துல உன்னை அவசரப்பட்டு அடிச்சிட்டேன்.." என்று நண்பனை அணைத்துக் கொண்டவனுக்கு சௌந்தர்யா மீது கோபமாக வந்தது.

"உன் அக்கா ஒரு சேடிஸ்ட்.. தன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை பழி வாங்கத்தான் அவ இப்படி பண்ணி இருக்கா.." என்றான் ஆத்திரத்தோடு.

முகில் கசப்பாக சிரித்தான். "இப்படியும் கூட அவளுக்கு ஒரு காரணம் உண்டு.. ஆனா நாங்க பிரிஞ்சதுல என்ன நியாயம்டா இருக்கு..?" என கேட்டவனுக்கு குரல் உடைந்திருந்ததை கண்டு நண்பனுக்கும் மனம் வருந்தியது.

"உடனே போய் யதிராக்கிட்ட உண்மையை சொல்லி கூட்டி வந்துடுடா.." என்று அவன் சொல்ல இல்லையென தலையை அசைத்தான் முகில்.

"வாழ்க்கைன்னா என்னன்னு இப்பதான்டா எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சிருக்கு.. நம்ம வாழ்க்கை நமக்கு எந்த அளவுக்கு சொந்தமானது அந்த வாழ்க்கையில் நம்மளோட முக்கியத்துவம் என்னன்னும் இத்தனை வருசம் கழிச்சி இப்பதான்டா புரிஞ்சது.." என்றவன் "நான் உண்மையை சொல்லி கூப்பிட்டா அவ உடனே வந்துடுவா.. அவளோட இன்னசென்ஸ் அந்த அளவுதான் இருக்கு.. ஆனா நான் எப்படி இந்த வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டனோ அதே மாதிரி யதிராவும் புரிஞ்சிக்கணும்ன்டா.. ஒருவேளை நான் நிஜமாவே செத்து போயிருந்தா என்னடா ஆகியிருக்கும்.? இவ இப்படியே அவ அண்ணனை நம்பியோ இல்ல புது புருசனோ நம்பியோ வாழ்ந்திருப்பா இல்லையா.? ஒரு பொண்ணு ஒருத்தரை நம்பி வாழ்வது தப்பில்லடா.. ஆனா அந்த ஒருத்தரை மட்டுமே தன் வாழ்க்கையோட எல்லாமுமா நினைச்சி தன் ஒவ்வொரு செகண்டையும் அவங்ககிட்டயே ஒப்படைச்சிட்டு கண் மூடிதனமான நம்பிக்கையோடு இருக்கறது ரொம்ப தப்புடா.. எங்க அம்மா அப்பப்ப எங்க அப்பாவை வீட்டு வேலை செய்ய சொல்வாங்க.. எங்க அப்பா எதிர்த்து பேசுவாரு.. அதுக்கு எங்க அம்மா 'நாளைக்கு நான் இல்லன்னா இந்த வீட்டை நீங்கதான் கவனிச்சிக்கணும்.. நான் சின்ன வயசுல செத்து போனா கூட நீங்க இன்னொருத்தியை கட்டிட்டு வந்துடுவிங்க. வீட்டை அவ பார்த்துப்பா.. ஆனா ஒருவேளை நான் நடு வயசுல ஏதும் செத்து போயிட்டா அப்புறம் நீங்கதான் ரொம்ப கஷ்டப்படுவிங்க.. பசியுள்ள எல்லோருமேதான் சமைக்க கத்துக்கணும்'ன்னு சொல்வாங்க.. ஆனா நாம ஆண்கள் எத்தனை பேர் நம்ம மனைவியோட எதிர்காலத்தை பத்தி யோசனை பண்றோம்ன்னு சொல்லு.. சாவு யாருக்கு வராம இருக்கு.? ஆனா நாம செத்த பிறகு புத்தியுள்ள தைரியமுள்ள பெண்கள் எப்படியாவது ஆயிரம் கஷ்டப்பட்டாவது வாழ்க்கையை வாழ்ந்துடுறாங்க.. ஆனா என் யதிரா மாதிரி உள்ளவங்க என்ன பண்ணுவாங்க.? பிறந்த வீட்டுல அண்ணன் மனைவிக்கிட்டயோ தம்பி மனைவிக்கிட்டயோ திட்டு வாங்கிக்கிட்டு செத்து போனவனையோ விட்டுட்டு போனவனையோ மறக்க முடியலன்னு மறுமணமும் செய்யாம ஏதோ ஒரு மூலையில் ஒடுங்கி கிடந்து அப்படியே வாழ்ந்துட்டு அந்த புருசன் நினைப்போடவே செத்து போயிடுறாங்க.. உலகம் ஏதும் அறியாம முழுக்க முழுக்க நம்மளை மட்டும் நம்பி கை பிடிக்கற மனைவிக்கு நாம என்னத்தை கத்து தரோம்.? வெளி உலகம் தெரிஞ்சா அவளுக்கு திமிர் வந்துடும்ன்னு நினைச்சோ இல்ல வெளி உலக வாழ்க்கையை மனைவி ஹேண்டில் பண்ண முடியாம சறுக்கி விழுந்துடுவான்னு பயந்தோ நாலு சுவத்துக்குள்ளயே வாழவிட்டு அவளை ஒன்னும் தெரியாதவளாவே வச்சிடுறோம்.. வாழ்க்கை முழுக்க அவளுக்கு நாம பாதுகாப்பா இருப்போம், வாழ்க்கை முழுக்க அவளோட கண்ணுல தூசி விழாம நாம பார்த்துப்போம்ன்னு நம்புறோம்.. ஆனா ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம அவளை விட்டுட்டு போகும்போது அவளோட நிலமை என்னவா இருக்கும்ன்னு யோசிக்க தவறிட்டோம்.. கணவனை மட்டும் முழுசா நம்பி வாழ்ற பொண்ணுக்கு புருசன் திடீர்ன்னு ஒருநாள் இல்லாம போனா அவ பிறந்து இரண்டே நாளுல தாயையும் தந்தையும் மத்த சொந்தத்தையும் பறி தந்த குழந்தையை போல ஒரு அனாதைதான்டா.." என்றான்.
குரு நண்பனை ஆச்சரியமாக பார்த்தான்.

"யதிராவை மாத்த உன்னால முடியாதுடா.. அவ கேரக்டர் ஜஸ்ட் ஒரு ஒட்டுண்ணி தாவரம் போல.. அவளுக்கு துணை இருந்தா மட்டும்தான் அவ இருப்பா.. இப்ப கூட நீ அவகிட்ட போய் நான் உன்னை மனைவியா ஏத்துக்கறேன்.. என்னோடு வந்துடுன்னு கூப்பிட்டா உடனே வந்துடுவாடா.." என்று நண்பன் சோகமாக சொல்ல சிரித்தான் முகில்.

"அவ என் பொண்டாட்டிடா.. அவ ஒட்டுண்ணி இல்ல.. அவ தனியொரு ஆலமர விழுது.. ஆலமரத்தோட வேரே செத்தாலும் விழுது மூலமா அந்த மரத்துக்கு உயிர் தருவா.. நான் தர வைப்பேன்.. அவளோட இன்னசென்ஸ்க்குள்ள ஒளிஞ்சிருக்கற தைரியத்தையும் எதார்த்த உலகத்தை ஹேண்டில் பண்ற விவேகத்தையும் நான் வெளி கொண்டு வருவேன்.. நான் கூப்பிட்டா அவ கண்டிப்பா உடனே என்னோடு வருவா.. ஆனா சரியான காரணம் கூட சொல்லாம தாலியை வாங்கிட்டு போன என்னோடு அவ கேள்வி ஏதும் கேட்காம கிளம்பி வந்தா அந்த இடத்துலதான் அவ முதல்ல பெயில் ஆவா.. ஆனா கொஞ்ச நாள் கழிச்சி அவ இப்படி என்னோடு வாழ வந்தது தப்புன்னு ரோசம் வந்து என்னை விட்டு விலகுவா.. அப்பதான்டா அவ தன் வாழ்க்கையிலயே பாஸாகுவா.. அவளை அப்படி பாஸாக வைக்கிறதுதான்டா இனி என் முக்கியமான வேலையே.." என்று அவன் சபதம் போல கூற குருவுக்கு இன்னும் ஆச்சரியம் அதிகரித்தது.

"இத்தனை கஷ்டப்படுறது அவ உன்னை விட்டு விலகதானா.? இதுக்கு நீ உண்மையை சொன்னா ஈஸியா வேலை முடிஞ்சிடுமேடா.."

இல்லையென தலையாட்டியவன் "உண்மையை தெரிஞ்சி அவ என்ன பண்ண போறா.? முதல்ல வாழ்க்கைன்னா என்ன தன் வாழ்க்கையில் தனக்கான முக்கியத்துவம்ன்னா என்னன்னு அவ தெரிஞ்சிக்கட்டும். அப்புறம் நான் உண்மையை சொல்றேன். அப்ப அவ என்னை திட்டிட்டு விலகி போனாலும் கூட எனக்கு சந்தோசம்தான்.."

"அதுக்காக என்னடா பண்ண போற நீ.?" என கேட்ட நண்பனுக்கு தனது திட்டத்தை சொன்னான் முகில்.

"அடப்பாவி.." என்று குரு அதிர்ச்சியில் வாய் மீது கை வைத்தான்.

"அப்ப உங்க அக்கா அன்ட் பேமிலி.." அதிர்ச்சி நீங்காமல் கேட்டவனுக்கு "அதை பொறுத்திருந்து நீயே பார்.." என்றான்.

நண்பன் அவனை விசித்திரமாக பார்த்து நின்றான். "இப்ப நான் உன்னை தேடி வந்ததே ஒரு உதவி கேட்டுதான்.. எனக்கு ஒரு வீடு விலைக்கு வேணும்.. சின்னதா இருந்தாலும் பரவாயில்ல.." என்றான்.

"நான் விசாரிச்சிட்டு நாளைக்கு சொல்றேன்டா.." என்றவனின் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் தனது நம்பரை பதிந்து அவனிடம் தந்தான்.

"விசாரிச்சிட்டு ஃபோன் பண்ணுடா.." என்றவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

"சாது மிரண்டா காடு கொள்ளாதுங்கறது உண்மைதான் போல.." சென்றவனை பார்த்து ஆச்சரியப்பட்டான் குரு. "யதிரா பாப்பா.. பார்த்து பத்திரமா இருந்துக்கம்மா.. உன் ஆளு வைக்கிற எல்லா டெஸ்ட்லயும் எப்படியாவது பாஸாகிடும்மா. ஆனா அவனை வெறுத்துட்டு ஒதுங்கி போயிடாதம்மா..." என்றான் காற்றோடு.

வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த யதிரா தன் முன் வந்து நின்ற முகிலை கண்டதும் "மாமா.." என்று அனிச்சையாக அழைத்தாள்.

அவன் நெருங்கி வந்து நின்றதும் "ஏன் மாமா காலையில் என் கூட பேசவே இல்ல.? என் மேல ஏன் உங்களுக்கு கோபம்ன்னு ஏன் சொல்லவே மாட்டேங்கிறிங்க.?" என அழுகையோடு கேட்டாள்.

"நீ என்னோடு சேர்ந்து வாழ வரியா.?" முகில் இப்படி கேட்கவும் அவள் குழப்பமாக நிமிர்ந்தாள்.

அவள் வாய் திறந்து பதில் சொல்லும் முன் "பொண்டாட்டியா இல்ல.." என்றான் அவன்.
அவள் புரியாமல் குழப்பமாக பார்த்தாள். அவளை விட்டு ஓரடி விலகி நின்றவன் "உன்னை பொண்டாட்டியா நினைச்சி வாழ கூப்பிடல.. ஜஸ்ட் லிவிங் டூ கெதர்.. என் கேர்ள் பிரெண்டா என்னோடு வாழ வரியான்னு கேட்டேன்.." என்றான் முகில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE
COMMENT
SHARE
FOLLOW

யதிரா மாதிரி பெண்கள் போன தலைமுறையோடு முடிஞ்சிட்டதா நினைக்காதிங்க.. இந்த காலத்துல கூட இந்த மாதிரி உலகம் அறியா பெண்களும் வாழதான் செய்றாங்க.. பேங்க்ல ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ண கூட புருசன்தான் வேணும். மார்கெட் போய் காய்கறி வாங்கவும் கட்டைப்பையோடு புருசன் கூடவே வரணும்.. குழந்தைக்கு குளிரடிச்சா கூட அதுக்கு எந்த பெட்சீட் போத்துறதுன்னு சொல்ல புருசனோட யோசனை வேணும்.. அட ரோடு கிராஸ் பண்ண கூட புருசன் கையைதான் பிடிக்கணும்.. ( ஆனாலும் ஒரு விந்தையை பாருங்க.. இப்படி இருக்க பெண்களோட லிஸ்டை எடுத்தா அதுல முதல் இடத்துலயே நான் முன்னுரையில சொன்ன அந்த பிரெண்டுதான் இருப்பா..(கணவரை டார்ச்சர் செய்யும் மகராசி). "மாமா மேங்காத்து அடிக்குது.. வாசலை தெக்க இருந்து வடக்க கூட்டுட்டா.? இல்ல மேற்க இருந்து கிழக்க கூட்டுட்டா.?"ன்னு கேட்டு வைப்பா அவ..😐😐 அவ ஹஸ் பதிலும் இங்கே முக்கியம்ப்பா.. "நீ வாசலையே கூட்டாத.. அந்த காத்தே குப்பையை கூட்டிட்டு போயிடும்ன்னு சொல்வாரு" அவரு..🙄)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN