செங்கா 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இசையில் தன்னை சிலையாய் மாற்றி வைத்திருந்தவளை தூரத்தில் இருந்து விழியசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அதியன்.

தன்னை ஒருவன் அக்கரையிலிருந்து கவனிக்கின்றான் என்ற விசயம் அறியாமல் கண்களை மூடி குழலை வாசித்துக் கொண்டிருந்தாள் செங்கா.

சீனு காலையில் கண் விழித்தபோதே பொன்னாவின் நினைவுடன்தான் எழுந்தான். அவள் இன்றைக்காவது ஃபோன் செய்வாள் என்று நம்பினான். காலையில் எழுந்தவனுக்கு காப்பி கொண்டு வந்த தந்தான் அடியாள் ஒருவன்.

"என் மாமன் செல்லுக்கு நேத்து நைட்டாவது ஃபோன் ஏதும் வந்ததா.?" காப்பியை உறிஞ்சியபடியே அடியாளிடம் கேட்டான்.

அவன் தன் பேன்ட் பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டான். அந்த போன் அவனிடம் தரப்பட்ட நிமிடத்திலிருந்தே அமைதியாகதான் இருந்தது.
"இன்னும் இல்ல சார்.." என்றான்.‌

"இரண்டு மூணு நாளைக்கும் மேல ஆயிடுச்சி.. அவ இன்னும் ஃபோன் பண்ணாம இருக்கா.. சரியான ஓடுகாலி கழுதை.. அவளுக்கு இப்ப ஃபோன் பண்ணு.. இப்பவாவது ஃபோனை எடுக்கறாளா பார்ப்போம்.." என்றான் சீனு.

அந்த அடியாள் ஃபோனை கையில் எடுத்தான். "சார்.. ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு.."
சீனு காப்பி குடிப்பதை நிறுத்திவிட்டு தன் எதிரில் இருந்தவனை முறைத்தான்.
"எப்போதிருந்து ஃபோன் ஆப்ல இருக்கு.?" என்றான்.

"தெரியல.." அடியாள் தலை குனிந்தபடி தயக்கமாக சொன்னான்.

"உனக்கு சம்பளம் தந்து மட்டும் என்ன உபயோகம் சொல்லு.." என்றவன் கோபமாக எழுந்து நிற்க, "சார் நான் இப்பவே போய் சார்ஜ் போடுறேன்.." என்றபடி வெளியே ஓடினான் அவன்.
செங்கா சூரியனின் கதிர்கள் தன் முகத்தில் பட ஆரம்பித்ததும் தனது இசையை நிறுத்திக் கொண்டாள். குழலை மீண்டும் தன் இடுப்பில் சொருகி கொண்டாள். ஆலமரத்தடி மேடை மீது இருந்து இறங்கியவள் தனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அதியன் அவள் தன் முகம் காட்டாமல் சென்று விட்டது பெரிய ஏமாற்றத்தை தந்து விட்டது.

மனதின் அடித்தளத்தை தொட்ட இசைக்கு சொந்தக்காரி அந்த முகத்தை திருப்பி காட்டி இருக்க கூடாதா என்று ஏங்கினான். கேட்கும் தாளங்கள் அனைத்தும் அடிமையாக்கி விடுவதில்லைதான். ஆனால் இவளது குழலின் இசையில் ஏதோ ஒன்றை உணர்ந்தான் அதியன். ஏமாற்றத்தோடு நின்றிருந்தவன் தனது ஃபோன் ஒலிக்கவும் எடுத்து பேசினான்.

"அண்ணனை பார்த்துட்டிங்களா.?" ரக்சனா எதிர்ப்பார்ப்பு நிறைந்த குரலோடு கேட்டாள்.

"இன்னும் இல்லம்மா.. இன்னும் அரை மணி நேரத்துல நானே ஃபோன் பண்றேன்ம்மா.." அதியன் தனது காருக்கு நடந்தபடியே அவளுக்கு பதில் சொன்னான்.

"சரி.." என்றவள் அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அதியன் அடுத்து வரும் பாலத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கினான்.
பாதி வழி சென்ற பிறகே குளிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது செங்காவிற்கு. மீண்டும் ஆற்றை நோக்கி நடந்தவள் ஆலமரத்தடி மேடையில் போனையும் குழலையும் வைத்தாள். ஆற்றில் ஆழமான ஒரு இடத்தை யூகித்தவள் ஓடிச்சென்று அந்த இடத்தில் விசையோடு குதித்தாள். தண்ணீருக்குள்ளேயே வெகுநேரம் இருந்தாள். மேலே வர கூட மனம் வரவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் மூச்சு காற்று தீர்ந்து விடவும் மேலே வந்தாள். சிறிது நேரம் நீச்சலை அடித்தாள். "யம்மா.. யப்பா.." என்று நான்கைந்து முறை நடுநடுவே புலம்பினாள்.

வீட்டிற்கு திரும்பி வந்தாள். அவளது பேக் கட்டில் மீது கடந்தது. பேக்கை திறந்தவளுக்கு உடையெல்லாம் அழுக்காய்தான் தெரிந்தது. அழுக்கு உடைகளின் கீழே ஒரு சுடிதார் இருந்தது. அது பொன்னா ஒரு முறை எடுத்து வந்ததுதான். 'செத்தாலும் இந்த காலுல மாட்டுற கருமத்தையெல்லாம் நான் மாட்டிக்க மாட்டேன்..' என அன்று பொன்னாவை திட்டியவள் இவள். இன்று அதைதான் கையில் எடுத்தாள். தூரத்து வீட்டின் புடைக்காலிக்குள் புகுந்து உடையை மாற்றிக் கொண்டு வந்தாள். ஈர உடைகளை அலசி அருகிருந்த சுண்டைக்காய் புதர் மீது காயப்போட்டாள்.

வீட்டு வாசலில் கலையரசி அடுக்கி வைத்திருந்த விறகு கட்டைகளில் இரண்டை உருவி வந்தாள். அதை பற்ற வைத்தாள். அவள் தூக்கி சென்றிருந்த கேழ்வரகு மாவு சிறிதளவு இருந்தது.

"நேத்தே வந்த நேரத்துல இருந்து இந்த குடிசையை பிரிக்க ஆரம்பிச்சி இருக்கலாம்.. சோத்துக்கு அரிசி எடுக்கலனாலும் தோசை கல்லாவது தேடி எடுத்திருக்கலாம்.." என்று புலம்பியபடி சென்று இலை ஒன்றை பறித்து வந்தாள். அவள் அடையை தயாரிக்க இருந்த நேரத்தில் கிழவி ஒருத்தி கம்மஞ்சோறும் சுண்டைக்காய் குழம்பும் இருந்த தட்டை கொண்டு வந்து அவளருகே இருந்த கட்டிலின் மீது வைத்தாள்.

"இதை தின்னு செங்கா.. உனக்குன்னு நான் ஒன்னும் தனி உலை வைக்கல.. என்னை வேத்து மனுசியா நினைக்காம தின்னு.." என்றாள்.

செங்காவிற்கு அந்த உணவை உண்ண மனம் வரவில்லை. ஆனால் வேத்து மனசி என்ற வார்த்தையை கிழவி உபயோகித்தது மனதிற்கு சிறிது வருத்தத்தை தந்து விட்டது.

'நான் செத்து போனா என் பேர புள்ளைங்களோடு சேர்ந்து நீயும் பந்தம் பிடிச்சி என்னை சுத்தணும்.. அப்பதான் நான் நல்லபடியா சொர்க்கபுரி போவேன்..' என்று இவளிடம் அவ்வப்போது சொல்லுபவள் அவள். அந்த வார்த்தை இன்றும் மனதில் வந்து போனது.

அடை தயாரிப்பதை பாதியில் நிறுத்தி விட்டு பாட்டி கொண்டு வந்து தந்த தட்டை கையில் எடுத்தாள். ஒரு வாய் உண்டு பார்த்தாள். நல்ல ருசியாகதான் இருந்தது. ஒரு வாரமாக அரை குறை வெந்த, காய்ந்த ரொட்டியை தின்றவளுக்கு இன்று இந்த சோறு ருசிகரமாகதான் இருந்தது.

அதியன் தன் முன் தெரிந்த ஊரை கண்டு காரை நிறுத்தினான். அருகில் மாடு ஓட்டி சென்ற ஒருத்தனை நிறுத்தியவன் "இங்கே செடிமலை கிராமம் எது.?" என்றான். அவன் இவனை மேலும் கீழும் பார்த்தான்.

"இதான் செடிமலை கிராமம்.." என்றான்.

அதியன் குழப்பமாக அந்த ஊரை பார்த்தான். இருந்ததே பத்து பன்னிரெண்டு வீடுகள்தான். அதுவும் ஒன்றுக்கொன்று சம்பந்தபடாமல் தூரம் தூரமாக இருந்தது.

"மலைவாசி மக்களா இவங்க.? ஆனா அவங்க கூட எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்துலதானே இருப்பாங்க.?" என்றவனுக்கு "இவங்க எல்லாம் ஏதோ ஒரு வகையில் புலம் பெயர்ந்தவர்கள்.. தங்களுக்குன்னு வயலை உருவாக்கி தங்களோட எல்லைக்குள்ள தானா வாழ்வாங்க.." என்று தன் நண்பன் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட ஊரை சேர்ந்த மக்களை பற்றி சொன்னது இன்று நினைவுக்கு வந்தது.

"இதுல எது பொன்னா வீடுன்னு எப்படி கண்டுபிடிக்கறது.?" குழம்பினான். அவனுக்கு பதில் சொன்ன மாடுக்காரன் கூட அங்கிருந்து கிளம்பி வெகுநேரம் ஆகி விட்டிருந்தது.

"இருக்கறது பத்து வீடுதானே.? ஒவ்வொன்னா விசாரிப்போம்.. இல்லன்னா ஒருத்தர்கிட்டயே விசாரிப்போம்.." என்றெண்ணி காரை அங்கேயே நிறுத்தி விட்டு கிழக்கில் இருந்த ஒத்தையடி பாதை ஒன்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

செங்கா உணவை முடித்துக் கொண்டதும் தனது ஒரே வேலையான தந்தைக்கு ஃபோன் செய்வதை மீண்டும் தொடங்கினாள். ஸ்விட்ச் ஆஃப் என அவள் நினைத்திருந்த நேரத்தில் போனின் ரிங் ஒலித்தது.

"யப்பா.." என்றாள் அழைப்பை ஏற்கும் முன்பே. அந்த ரிங்கிலேயே போன தன் உயிர் திரும்பி வந்தது போலிருந்தது அவளுக்கு. கட்டிலை விட்டு துள்ளி குதித்து எழுந்து நின்றாள்.

சாமிநாதனின் போன் ஒலிக்கவும் அந்த வீட்டில் இருந்த அனைவருமே ஆவலாகி விட்டனர். அந்த வீட்டிற்கு சீக்கிரமே அண்ணி வந்து விடுவாள் என மனம் மகிழ்ந்தனர்.

"சார்.. ஃபோன் ரிங் ஆகுது.." என்று அந்த போனை குழந்தையை போல் கொண்டு வந்து சீனுவிடம் தந்தான் ஒருவன்.

பொன்னா அழைத்திருப்பாள் என ஆசையோடு ஃபோனை வாங்கிய சீனு அதில் சிங்கக்குட்டி என்ற பெயரை கண்டதும் கடுப்பாகி போனான்.

"சிங்கக்குட்டி யாரு.? ஒருவேளை என் மச்சானா இருப்பானோ.?" என்று நினைத்தவன் ஃபோனை எடுத்துக் கொண்டு சாமிநாதனிடம் சென்றான்.

கை கால்கள் கட்டப்பட்டு இருந்த சாமிநாதன் சீனுவை கண்டதும் எரிச்சலானான். "மரியாதையா என் கட்டை அவுத்து விடுடா.." என்றான்.

"உன் சிங்கக்குட்டி ஃபோன் பண்றான்.. அவன் கூட பேச உனக்கு ஆசையா இல்லையா.?" என்று ஃபோனை காட்டினான் சீனு.

சாமிநாதனுக்கு நெஞ்சம் பதறியது. அவனருகே தரையில் இருந்த கலையரசியிடமிருந்து சிறு விம்மல் புறப்பட்டது. இருவரும் செங்காவை பற்றி அதிகம் கவலைப்பட்டு விட்டிருந்தனர். காட்டுக்கு சென்ற பின் வீடு திரும்புகையில் யாரும் இல்லையென்பதை கண்டு மனமுடைந்து போவாளே என்று நொடிக்கு நொடி கவலைக் கொண்டிருந்தனர் இருவரும்.

சீனு அவன் முன்னால் வந்து நின்றான். "நான் இப்ப இந்த ஃபோனை ஸ்பீக்கர்ல போட போறேன்.. தேவையில்லாத வார்த்தை பேசினன்னா உன் பொண்டாட்டிக்கு கால் இருக்காது. அவன்கிட்ட பதமா பேசி அவனை இங்கே வர சொல்லலன்னா அவ்வளவுதான்.." என்று எச்சரித்து விட்டு போனின் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் வைத்தான்.

செங்கா பேசும் முன்பே அவசரமாக முந்தினான் சாமிநாதன். "டேய் பையா.. வீட்டுக்கு வந்துட்டியாடா..? நீ வந்தப்பா வீடு இடிஞ்சிருக்கும்ன்னு எனக்கும் தெரியும்டா.. பையன் என்ன பண்றியோன்னுதான் நானும் உன் அம்மாவும் கவலையோடு இருந்தோம்டா.." செங்கா பேசவும் இடைவெளி தராமல் பேசிக் கொண்டிருந்தான் சாமிநாதன். செங்கா அதிகமாக குழம்பி போனாள். அவர்கள் ஃபோனை எடுத்தாலும் கூட அவர்கள் மன்னிப்பு கேட்கும்வரை தான் பதில் பேச கூடாது என நினைத்திருந்தவளுக்கு இது இன்னும் குழப்பத்தை தந்தது.

'நான் எப்ப பையனா ஆனேன்.? அப்பனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா.? இல்ல வேறு யாரோன்னு நினைச்சி பேசுதா.? என்னை முழுசாவே மறந்துட்டாங்களா இரண்டு பேரும்.?' என அவள் குழம்பி நிற்க அவன் மேலும் பேசினான்.

"உங்க அக்கா பொன்னாவை உங்க மாமன் மகன் சீனுவுக்கு கட்டி வைக்கலாம்ன்னு இருந்தோம்டா பையா. எல்லா பேசி முடிச்சிட்ட பிறகு அந்த கழுதை வீட்டை விட்டு எங்கேயோ ஓடி போச்சிடா.. அதனால நீ அவளை காணம்ன்னு போலிஸ்ல ஒரு கம்ப்ளைண்டை தந்துட்டு நேரா இங்கே வாடா.. சீனு மாமன் எங்களை கடத்தி வந்திருக்காருன்னு ஏதும் நினைச்சிடாதடா.. அவரு.." சாமிநாதன் மேலும் சொல்லும் முன் அழைப்பின் இணைப்பை துண்டித்தான் சீனு‌. சாமிநாதனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான்.

"என்ன போட்டு தர பார்க்கறியா.? உன் மகன் வரட்டும்.. அவனுக்கும் இதே மாதிரி ஒரு சேரை ரெடி பண்ணி கட்டி வைக்கிறேன்.." என்றவன் அந்த அறையை பூட்டி விட்டு வெளியே நடந்தான்.

செங்காவால் தன் அப்பா சொன்னதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. "சீனு யாரு.? எனக்கு மாமன் மகனா.? ஆனா இதுக்கு முன்னாடி அவனை பத்தி நீங்க சொன்னதே இல்லையே.. ஆனாலும் அவனுக்கு ஏன் பொன்னாவை பேசி முடிக்கணும்.? படிக்க போனவ மாமனுக்கு பேசி முடிச்சதை கேட்டு ஏன் ஓடிப்போகணும்.? நீங்க போவும் முன்னாடியே வீடு இடிஞ்சி போயிருக்கு.. ஆனா பெத்த புள்ளை வருவாளேங்கற கவலை இல்லாம பழைய சொந்தத்தை புதுபிச்சிக்க போயிருக்கிங்க.. ஆனா ஆவாத வூட்டு விருந்தாளியாச்சே நீங்க.. அப்பாறம் ஏன் பொன்னாவுக்கு பேசி முடிச்சிங்க.. சீனு மாமன் கடத்தி வைக்கலன்னு எதுக்கு சொன்னப்பா.?" என்று காற்றோடு புலம்பியவள் மறுபடி சாமிநாதனுக்கு அழைக்க நினைத்தாள்.

"விளங்காத உங்க சொந்தக்காரங்க ஏதும் உங்களை கடத்திட்டு போயிட்டாங்களா.?" சிறு பயத்தோடு சாமிநாதனுக்கு அழைப்பு விடுத்து ஃபோனை அவள் காதில் வைத்த நேரத்தில் கரம் ஒன்று அவளது கையை விசையோடு மறுபக்கம் திருப்பி நிறுத்தியது. போன் பிடித்திருந்த கையை அந்த கரம் பிடித்து திருப்பிய காரணத்தால் செங்கா வைத்திருந்த ஃபோன் கை தவறி கீழே விழுந்தது.

கீழே விழுந்த போனை வருத்தமாக பார்த்தாள் செங்கா. அந்த போனை எடுக்க குனிந்தாள். ஆனால் அவளை பிடித்து வைத்திருந்த கரம் அவளை அசைய விடவில்லை.

அவளே பயங்கர குழப்பத்தில் இருந்தாள். தந்தையை கடத்தி விட்டார்களோ என்ற சிறு சந்தேகமே அவளுக்குள் அதிகபடி படபடப்பை தந்துவிட்டது. போன் கீழே விழும் அளவுக்கு தன்னை விசையோடு பிடித்து திருப்பியது யாரென திரும்பி பார்த்தாள். எவனோ ஒருவன் திமிரோடும் கோபத்தோடும் இவளை முறைத்தபடி நின்றிருந்தான்.

"யாரை கேட்டு நீ என் ஃபோனை தள்ளி வுட்ட?" என கேட்டவள் தனது மறு கரத்தால் அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை தந்தாள். அவளது கை வண்ணத்தால் அறை விழுந்த சத்தம் அறை வாங்கிய அதியனுக்கே மிக தெளிவாக கேட்டது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1189
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN