நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 48

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா ட்ரேயில் காப்பி கோப்பைகளை வைத்து எடுத்து வந்து தந்தாள். புவனா என்னவோ அவளை பெண் பார்க்க வந்தது போல அவளின் முகத்தை ஆராய்ந்து விட்டு, அவளை மேலும் கீழுமாக ஒரு தினுசாக பார்த்து விட்டு, சடங்கானவளுக்கு தரப்பட்ட பலகாரத்தை போல அந்த காப்பியை சில நொடிகள் நோட்டம் விட்டுவிட்டு கோப்பையை கையில் எடுத்தாள்.

ரியா எப்போதும் துள்ளலோடு இருப்பாள் என்பது அவளின் செய்கையிலேயே சந்தியாவிற்கு புரிந்து போனது. "தேங்க்ஸ்.." என்றபடி காப்பியை எடுத்துக் கொண்டாள் அவள்.

சக்திக்கும் மகேஷ்க்கும் காப்பியை தந்தவள் இனியன் முன்னால் வந்து நிற்கும் போதுதான் 'எனக்கு ஏன் இவங்க எல்லாரும் என்னை பொண்ணு பார்க்க வந்த மாதிரி பீல் ஆகுது.?' என எண்ணினாள்.

இனியன் காப்பியை எடுத்துக் கொண்டதும் கிச்சனை நோக்கி நடந்தாள் சந்தியா.

"காப்பி அந்த அளவுக்கு டேஸ்டா இல்லையே.." என்று இழுத்தாள் புவனா.

இனியனுக்கு சிரிப்பாக வந்தது. 'மல்லியக்கா காப்பிக்கே இந்த கமெண்ட்னா சந்தியா காப்பி போட்டிருந்தா இன்னேரம் அத்தை ப்ளைட் ஏறி இருப்பாங்க போல..' என எண்ணினான்.

"என் பொண்டாட்டி கிச்சன் பக்கம் அதிகம் போனது இல்ல அத்தை.. நான் ஆக்ராவுல உங்களுக்கு தினம் தினம் போட்டு தந்த காப்பியை போல டேஸ்டா இல்லாம இது கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும்.." என்றான்.

மகேஷ் பற்களை அரைத்தபடி சக்தியை முறைத்தான். அவள் மகேஷின் முறைப்பை கண்டும் காணாதது போல முகத்தை திருப்பி கொண்டாள்.

இனியன் இப்படி சொல்லி விடவும் புவனாவின் முகத்தில் இருள் பரவியது.

சந்தியாவிற்கு தன் கையில் இருக்கும் டிரேயை கொண்டு புவனாவின் தலையில் அடிக்க வேண்டும் என தோன்றியது. பல்லை கடித்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றவள் டிரேயை வைத்து விட்டு வெளியே நடந்தாள்.

அறைக்கு செல்ல நடந்தவளை "சந்தியா.." என அழைத்து நிறுத்தினான் இனியன்.

"என்ன.?" என்றாள் தன் எரிச்சலை வெளிக்காட்டாமல்.

"இங்கே வந்து இப்படி உட்காரு.. அத்தை ஏதாவது உன்கிட்ட பேச நினைப்பாங்க.‌."

சந்தியா அமைதியாக வந்து அவர்களின் எதிரே அமர்ந்தாள். புவனா காப்பியை குடித்தபடியே சந்தியாவை கண்களால் அளந்தாள்.

"கொஞ்சம் விலுவிலுன்னுதான் இருக்கா.. காத்தடிச்சா உடைஞ்சிடுவாளோ என்னவோ.? நேரா நேரத்துக்கு சாப்பிடுறியாம்மா.? இல்லன்னா பார்க்கறவங்க இவன் பொண்டாட்டிக்கு ஒழுங்கா சோறு போடுறது இல்லன்னு இல்லையா நினைப்பாங்க.?" புவனா சொல்லியதை கேட்டும் செவிடு போல இருந்தாள் சந்தியா. அவளுக்கும் இனியனுக்கும் சண்டை வந்து இரு வாரங்கள் ஆகி விட்டது. இந்த இரு வாரங்களாக அவள் ஒழுங்காக உண்ணவில்லை என்பது உண்மைதான். ஆனால் இரு வார மாற்றமே அந்த அளவிற்கு வேறுபாட்டை தரும் என்று சந்தியாவிற்கு தோன்றவில்லை.

சக்தி எழுந்தாள். "அண்ணி.. காப்பி குடிச்சிட்டா எழுந்து வாங்க.. நீங்க தங்க ரூமை காட்டுறேன்.." என்றாள்.

புவனா சந்தியாவை பார்த்தபடியே எழுந்து நடந்தாள்.

'இவங்க முன்ன பின்ன பொண்ணுங்களை பார்த்ததே இல்லையா.?' என யோசித்தாள் சந்தியா.

ரியாவும் மகேஷும் ஏதேதோ கதைகளை பேச ஆரம்பித்தனர். சந்தியா அமைதியாக அங்கிருந்து நழுவி தனது அறைக்குள் வந்து புகுந்து கொண்டாள்.

அடுத்த ஒருவாரம் ரியாவின் துள்ளல் மிகுந்த கொலுசொலியோடே கடந்தது. சந்தியாவிற்கும் பார்மில் அதிக வேலைகள் இல்லாமல் போய்விட்டது. இருக்கும் சில்லறை வேலைகளை தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டாள் நித்யரூபா. அதனால் ஒருவாரமும் வீட்டில்தான் இருந்தாள் அவள்.

சந்தியாவிற்கு புவனாவை சுத்தமாக பிடிக்கவில்லை. இனியனோடு கொஞ்சும்போது ரியாவையும் பிடிக்கவில்லை.

ரியா தன்னருகில் இருக்கும் போதெல்லாம் சந்தியா தனக்குள் நெருடல் ஒன்றை உணர்க்கிறாள் என்பதை ஒரு வாரம் கழிந்த பிறகே அறிந்தான் இனியன்.

அவனின் மனம் சாத்தானை போல யோசனை செய்ய ஆரம்பித்தது. சந்தியா அவனை மன்னிக்க முடியாதென சொல்லியது அவனுக்குள் கிறுக்குதனமான எண்ணங்களை மட்டுமே தந்தது. ரியா போனில் முத்தம் தந்ததற்கே கோபப்பட்டவள் இப்போது இவளோடு தான் சேர்ந்து சுத்தினால் என்ன செய்வாள் என யோசித்தான். பொறாமையிலாவது தன்னோடு வந்து பேசுவாளா என யோசித்தான். இதுதான் சாக்கு என்று இன்னும் அதிகமாக கோபப்படுவாளோ என்றும் பயந்து அமைதியாகி கொண்டான்.

சந்தியா தனது ஃபோனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தபோது அவள் முன்னால் வந்து நின்றவன் "சந்தியா நானும் ரியாவும் பார்க் போறோம். நீயும் வரியா.?" என்றான். அப்படியாவது அவளோடு சேர்ந்து சுத்தும் வாய்ப்பு கிடைக்குமென எண்ணினான் அவன்.

சந்தியா தனது போனிலிருந்து பார்வையை நிமிர்த்தி அவனை பார்த்தாள். "தேர்ட் வீலா நான் எதுக்கு.?" என கேட்டாள்.

"தேர்ட் வீல்..?" அவளை எரிச்சலோடு பார்த்தவன் "இதுதான் லாஸ்ட்.. இனி நானா வந்து உன்னோடு பேசினேன்னா உன் செருப்பால கூட அடி.." என்றான். அவள் மௌனமாகவே இருந்தாள். அவன் கையை இறுக்கியபடி வெளியே நடந்தான்.

இந்த ஒரு வாரத்தில் அவனும் ரியாவும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்ததே அவளுக்கு சோகத்தை மட்டும்தான் தந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர்கள் பூங்காவில் கை கோர்த்து சுத்துவதை வேறு பொறாமையோடு பார்க்க வேண்டுமா என எண்ணினாள்.

ரியாவும் அவனும் பூங்காவுக்கு சென்று விட்டு இருள் சூழும் வேளையில் வீடு வந்து சேர்ந்தனர்.

"செமையா இருந்தது மாமா.. நாளைக்கும் எங்கேயாவது சுத்த போகலாம்.." என்றாள்.

அவள் ஹாலில் பேசியது அறைக்குள் இருந்த சந்தியாவுக்கும் தெளிவாக கேட்டது.

"சரி ரியா.." என்றவன் அறைக்குள் நுழைந்தபோது சந்தியா ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள். ஹேக்கிங் சமாச்சாரம் தெரிந்ததிலிருந்தே இந்த மூன்று வாரங்களாக இப்படிதான் யோசனையில் இருக்கிறாள் என்பதால் அவளது யோசனை அவனை ஏதும் செய்யவில்லை. ஆனால் அவனை கண்டதும் அவள் சுவற்று பக்கம் திரும்பி அமர்ந்துக் கொண்டதுதான் அவனுக்கு இன்னும் கோபத்தை தந்தது.

'புருசன் வேற ஒருத்தியோடு தனியா ஊர் சுத்திட்டு வந்திருக்கானேன்னு கொஞ்சமாவது யோசனை பண்றாளா.?' என எரிச்சலானவன் தானும் முகத்தை திருப்பி கொண்டான்.

சுவர் பக்கம் பார்த்து அமர்ந்திருந்த சந்தியா தனது கையில் இருந்த கொலுசை யோசனையோடு பார்த்தாள். அந்த கொலுசை அவள் இனியன் ஊருக்கு வந்த முதல் நாளில் தொலைத்து விட்டிருந்தாள். அந்த கொலுசை இன்று இனியனின் அலமாரியை எதேச்சையாக திறந்து பார்க்கும் போது கண்டெடுத்தாள். அந்த கொலுசு அவளுக்குள் இருந்த சிந்தனையை இன்னும் அதிகமாக்கி விட்டிருந்தது.

அன்று இரவு இனியன் தூங்கிய பிறகும் கூட கொலுசை பார்த்தபடி வெகுநேரம் விழித்தபடி அமர்ந்திருந்தாள் சந்தியா.

மறுநாள் முழுவதும் அவள் தன் அறையை விட்டே வெளியே வரவில்லை. மாலை நேரத்தில் அவளை தேடிக் கொண்டு ரியா வந்தாள்.

"அக்கா.." என்றபடி உள்ளே வந்தவள் தயக்கத்தோடு சந்தியாவின் அருகே அமர்ந்தாள்.

"உங்ககிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துப்பிங்களா.?" என்றாள் தன் கை விரல் நகத்தை கடித்தபடி.

"சொல்லும்மா.." என்ற சந்தியாவின் குரல் கட்டை குரலாக இருந்தது. இந்த மூன்று வாரங்களாக அவள் யாரிடனும் அதிகமாக பேசவில்லை. யாராவது தேடி வந்து பேசினாலும் கூட தன்னால் முடிந்த அளவுக்கு தவிர்த்தே வந்திருந்தாள்.

"ஏன் நீங்க மாமா மேல கோபமா இருக்கிங்க.?" சிறு குரலில் கேட்டாள் ரியா. தனது கேள்விக்காக அவள் தன்னை திட்டி விடுவாளோ என்று அவள் பயந்திருந்தது அவளது கண்களில் நன்றாக தெரிந்தது.

"கோபமெல்லாம் இல்லம்மா.." என்றவளின் கையை பிடித்தாள் ரியா.

"மாமா ரொம்ப நல்லவர் அக்கா.. இத்தனை வருசமா எங்க அம்மா அவரை எவ்வளவோ திட்டி இருக்காங்க.. ரொம்ப சின்ன பையனா இருக்கும்போது அடிச்சி கூட இருக்காங்க. ஆனா அவர் அதை கூட எங்க அப்பாக்கிட்ட சொன்னதே இல்ல.. அவருக்கு அத்தைன்னா உயிர். ஆனா அத்தை அவரை ஆக்ராவிலதான் இருக்கணும்ன்னு சொன்ன போது கூட அத்தை பேச்சு கேட்டு அமைதியாதான் இருந்தாரு. அவருக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எங்கே இருக்கிங்களோ அங்கேயேதான் அவர் பார்வையும் இருக்கு.. ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணாம உங்களோட ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறாரு.. ஆனா நீங்கதான் அவரை திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறிங்க.." செல்ல கோபத்தோடு சொன்னாள் ரியா.

சந்தியா அவளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் தரையை பார்த்தாள்.

"உங்களுக்கு அவரை ஏன் பிடிக்கல அக்கா. அவர் ரொம்ப நல்லவரு.. நீங்க எது கேட்டாலும் வாங்கி தருவாரு.. நீங்க என்ன சொல்றிங்களோ அதுபடியே நடந்துப்பாரு.. அப்புறம் ஏன் உங்களுக்கு அவரை பிடிக்கல.?" வருத்தத்தோடு கேட்டாள்.

"ரியா.." இனியனின் கர்ஜனை கேட்டு பதறி போய் எழுந்து நின்றாள் ரியா.

"மாமா.. அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா.?" என்றவள் தனது கை கடிகாரத்தை பார்த்தாள். மணி ஐந்தரையை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.

இனியனின் முகம் பாறையை போன்று கடுகடுவென இருப்பதை கண்டு அந்த அறையை விட்டு அவசரமாக வெளியேறினாள் ரியா. போகும் முன் "சாரி.." என சொல்லி விட்டுதான் சென்றாள்.

இனியன் ஆத்திரத்தில் இருந்தான். தங்களது சண்டையை ஒரு சின்ன பெண் கவனித்து விட்டாளே. அந்த அளவிற்கு கவன குறைவோடு இருந்து விட்டோமே என தன் மீதே கோபமாக இருந்தான். கட்டிலில் சிலை போல் அமர்ந்திருந்தவளின் மீது கோபம் கோபமாக வந்தது. அவள் ஒருத்தி சரியாக இல்லாததால்தான் ஒரு சின்ன பெண் அறிவுரை கூறும் அளவிற்கு ஆகி விட்டது என்று ஆத்திரம் கொண்டான்.

"இப்ப மகாராணிக்கு சந்தோசமா.? நேத்து வந்த ரியா கண்டுபிடிச்சிட்டா நமக்குள்ள ஏதோ சண்டைன்னு.. நாளைக்கு உன் அத்தையும் மாமாவும் உன் பெரியப்பாவும் இதே மாதிரி வந்து கேட்பாங்க.. அவங்ககிட்ட சொல்லு இரண்டு பேருக்கும் இடையில நடந்த அத்தனை சண்டையை பத்தியும். நீங்க ஒன்னா சேர்ந்து வாழ்ந்து சாதிச்சது போதும்ன்னு அத்து விட்டுட்டு போகட்டும்.. உனக்கும் அதுதானே ஆசை.?" என்றவன் கோபத்தோடு மேஜையின் மீது இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து தரையில் அடித்து விட்டு வெளியே நடந்தான்.

அவனது கோபம் கண்டு கண்களை இறுக்க மூடியிருந்த சந்தியா அவன் அறையை விட்டு வெளியே சென்று வெகு நேரம் கழிந்த பின் கண்களை திறந்தாள். திறந்த கண்களில் இருந்து பெரிய முத்தாக கண்ணீர் சிந்தியது.

"அத்து விட்டுட்டு போகட்டும்.." என அவன் சொன்னது அவளுக்கு நெஞ்சத்தில் பாரத்தை தந்தது. முகத்தை மூடியபடி விக்கி விக்கி அழுதாள்.

இனியன் அருகில் இருந்த ஒரு அறைக்குள் கோபம் குறையாமல் நுழைந்தான். வீட்டில் இருந்த சிறு ஜிம் அது. தனது சட்டையை கழட்டி வீசி விட்டு பன்ஜிங் பேக் முன் வந்து நின்றவன் தனது கோபத்தை அந்த பன்ஜிங் பேக் மீது காட்ட ஆரம்பித்தான்.

இருவருக்கும் இடையில் நடந்த சண்டை வெளியே தெரிந்தால் அது நிச்சயம் பிரச்சனையைதான் கொண்டு வரும் என்று நன்கு அறிவான் இனியன். அதுவும் தன் அம்மாவுக்கு தெரிந்தால் தன்னை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் தன்னிடமிருந்து சந்தியாவை பிரித்து தன் முன்னாலேயே வேறு ஒருவனுக்கு அவளை கட்டி வைத்து விடுவாள் என்று நினைத்து பயந்து போனான். அவனது பயமும் கோபமும் வலிமையான குத்துக்களாக மாறி எதிரிலிருந்த மணற்பையின் மீது விழுந்து கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1085

VOTE

COMMENT

FOLLOW

SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN