நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதியன் செங்காவை கிண்டலாக பார்த்தான்.

"என் பிரெண்டை நீதான் கடத்தி வச்சிருக்கன்னு நான் கம்ப்ளைண்ட் பண்ணா அப்புறம் ஜட்ஜ் உன் காலைதான் உடைக்க சொல்வாரு.." என்றான்.

செங்கா ஆச்சரியத்தோடு இரு கைகளையும் தட்டினாள்.

"அப்ப வழக்கு ஏதும் பதிவு பண்ணாமதான் என்னை உள்ள புடிச்சி போட்டு இருக்கிங்களா.? அடேய் முட்டகண்ணு போலிசு நீ இதோட காலி.." என்றாள் நக்கல் சிரிப்போடு.

தேவன் அதியனின் முதுகில் ஒரு அடியை விட்டான்.

"பச்சை துரோகி.. உன்னை எவன்டா பேச சொன்னது.?" என்று கோபமாக கேட்டவன் செங்கா புறம் திரும்பினான்.

"இங்க பாரும்மா.. இவனோட பிரெண்டை காணோம். உன்னை விசாரிக்கதான் இங்கே கூட்டி வந்திருக்கோம்.." என்றான் பொறுமை.

"யோவ் போலிசு.. விசாரணை பண்றதா இருந்தா என்னை வெளியே இருக்கற சேர்லயோ இல்ல பென்ஞ்சிலியோதான் உட்கார வச்சிருக்கணும். இப்படி கையில வெலங்கை போட்டு ஜெயிலுக்குள்ள அடைச்சி வச்சிருக்க கூடாது.. போலிசா இருந்துட்டு நீயே ப்ராடா இருக்க.. அப்படின்னா உன்னோட இந்த பிரெண்டும் பிராடுதான்.. அவனோட இன்னொரு வெளக்கெண்ணய் பிரெண்டும் பிராடாதான் இருப்பான்.. அந்த பரதேசி எங்க போய் தொலைஞ்சதுன்னே தெரியாம என்னை புடிச்சி உள்ள வச்சிருக்கிங்க.." என்றாள் ஆத்திரத்தோடு.

தேவன் கறுத்து போன முகத்தோடு அதியனை பார்த்தான். 'இப்ப உனக்கு சந்தோசமா.?' என்று அவனது விழிகள் நண்பனிடம் கேட்டது.

"ஏய் வாயாடி.. என் பிரெண்ட் இருக்கற இடத்தை சொல்லலன்னா நீ ஆயுளுக்கும் உள்ளதான் இருக்கணும்.." என்றான் அதியன்.

செங்கா நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

'சும்மா இருக்கறவளை இவன் வேற ரொம்ப சொறிஞ்சி விடுறானே..'

"நீ நினைக்கிற பொன்னா நான் இல்ல.. நீ சொல்ற விஷ்வாவையும் எனக்கு தெரியாது.. நான் செங்கா.." என்றாள் பற்களை கடித்தபடி மிகவும் பொறுமையாக.

தேவன் அதியனை குழப்பமாக பார்த்தான். "பொண்ணை மாத்தி கடத்திட்டு வந்துட்டியா.?" என்றான்.

"தேவா இவ பிராடுடா.. ஏற்கனவே இவ பேரை புவின்னுதான் விஷ்வாக்கிட்ட சொல்லி வச்சிருக்கா.. புவி.. பொன்னா.. செங்கா.. இந்த பிராடுக்கு இன்னும் எத்தனை பேர் இருக்கோ யாருக்கு தெரியும்..?" என்றான் செங்காவை பார்த்து முறைத்தபடி.

செங்கா அவனை நக்கல் பார்வை பார்த்தாள்.

"உனக்கு நெசமாவே மூளை இல்லன்னு நல்லா தெரியுது.. நீ ஒதுங்கி போ.. நான் இந்த முட்டக்கண்ணு போலிசுக்கிட்டயே பேசிக்கறேன்.." என்றவள் தேவனை பார்த்தாள்.

"உனக்காவது மேல் டப்பா வேலை செய்யுதான்னு பார்க்கலாம்.. நான் செங்கா.. என் பொறந்தவ பேருதான் பொன்னா.. இப்ப புரிஞ்சதா.?" என்றாள்.

தேவன் இல்லையென தலையசைத்தான். "பொறந்தவ.. மீனிங் என்ன.?" என்றான் சிறு குரலில்.

"யப்பா.. பொறந்தவன்னா என் கூட பொறந்ததுன்னு அர்த்தம்.. என் அக்கா.." என்று விளக்கம் தந்தாள்.

"ஓ.." என்ற தேவனின் கையை கிள்ளினான் அதியன்.

"அவ பொய் சொல்றா.. அக்காவும் தங்கையும் எங்கயாவது அச்சு அசலா ஒரே மாதிரி இருப்பாங்களா.?" என்றான்.

"நாங்க இரட்டை போருப்பா.. இதுவும் புரியாதா.? நானும் என் பொறந்தவளும் இரட்டை பொறவி.. ஒன்னா ஒரே நாளுல பொறந்தவங்க.." என்றாள்.

தேவனுக்கு இப்போது தெளிவாக புரிந்தது.

"பொன்னான்னு நினைச்சி அவளோட டிவின்னை கூட்டி வந்திருக்க நீ.." என்றான் கோபமாக.

"யோவ் போலிசு.. அவன் கூட்டி வரல.. கடத்திட்டு வந்திருக்கான்.." என்று குரல் தந்தாள் செங்கா.

அதியன் அவளை முறைத்தான். "இவ பிராடுடா.. டிவின்ஸ்ன்னு சொல்லி உன்னை ஏமாத்த பார்க்கறா.." என்றான் ஆத்திரத்தோடு.

அதியனை கொல்ல வேண்டும் போல இருந்தது செங்காவிற்கு.

"மூளை கெட்டவனே.. உனக்கெல்லாம் ரவ கூட அறுவு இல்லன்னு இப்பதான்டா தெரியுது.." என்றவள் தேவன் பக்கம் திரும்பினாள். "யோவ் போலிசு.. நீ போய் என் பையில ஓரத்து சிப்புல என் ஃபோன் இருக்கும், எடுத்துட்டு வா.." என்றாள்.

தேவன் அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு போய் அந்த பேக்கை திறந்து ஃபோனை எடுத்து வந்தான்.

"பொன்னா ஒரு காட்டெருமைன்னு பாசுவேர்டு போடு.. ஃபோன் லாக் எடுத்துக்கும்.." என்றாள்.

தேவன் அதியனை பார்த்தபடியே அந்த போனின் லாக்கை எடுத்தான்.

"அதுல நானும் அவளும் சேர்ந்து எடுத்த போட்டா நெறைய இருக்கும் பாரு.." என்றாள்.
அவள் சொன்னது போலவே நிறைய புகைப்படங்கள் இருந்தது. தேவன் கோபத்தோடு அதியனை பார்த்தான்.

"மாத்தி கூட்டி வந்திருக்கடா.." என்றான்.

"கடத்தி வந்துருக்கான்.." மீண்டும் திருத்தினாள் செங்கா.

"ஏதோ ஒன்னு.. நாங்க இரண்டு பேரும் பேசும்போது நீ கொஞ்சம் குறுக்க வராம இரு.." என்று அவளை அதட்டினான் தேவன்.

"ஏய் லூசு போலிசு.. என் கைல இருக்கற வெலங்கை கழட்டி வுட்டுட்டு நீ அவன்கிட்ட எதனாலும் பேசி தொலை.. நான் குறுக்க வரல.." என்றாள்.

தேவன் அவளை முறைத்து பார்த்தான். "போலிஸ்க்கு உரிய மரியாதை தரலன்னு நான் உன் மேல கேஸ் பைல் பண்ண போறேன்.." என்றான்.

செங்கா கம்பி கதவின் மீது ஒய்யாரமாக சாய்ந்து நின்றாள்.

"ஒரு இளம்பெண்ணை கடத்தி வந்ததுக்கு அவன் மேல ஒரு கேசும், வழக்கேதும் பதியாம ஒரு பொம்பள புள்ளைய ஜெயில்ல வச்சிருக்கறதுக்கு உன் மேல ஒரு கேசும் எழுது.. அப்பாறம் என் மேல கேசு எழுதுவ.." என்றாள். அவள் சொன்ன தொனி கண்டு தேவனுக்கு சற்று உதறல் எடுத்தது. 'நேர்மையான போலிசெல்லாம் வழக்கு பதியாம ஒருத்தரை பிடிச்சி வச்சிருந்தா இப்படிதான் உதறும் போல..' அவனது மனசாட்சி வேறு நேரம் கெட்ட நேரத்தில் குரல் தந்தது.

"இவ பேச்சாலயே உன்னை பயப்படுத்த பார்க்கறாடா.. இவ சொல்ற எதையும் நம்பாத.. இந்த போட்டோ மார்பிங்கா இருக்கலாம்.. இல்லன்னா இவ பொன்னாவா இருந்துட்டே செங்கான்னு பொய் சொல்லலாம்.." என்றான் அதியன்.

"நான் பயந்தேன்னு உனக்கு எப்படா சொன்னேன்.?" கோபத்தோடு கேட்டான் தேவன்.

"என்னை மொதல்ல வெளிய வுடுங்க.." என்று இடைப்புகுந்து கத்தினாள் செங்கா.

"இதென்ன போலிஸ் ஸ்டேசனா இல்ல சந்தையா.? எதுக்குமா இப்படி கத்துற.?" கான்ஸ்டபிள் ஒருவர் பொறுக்க முடியாமல் கத்தினார்.

"ஒரு பச்ச புள்ளையை புடிச்சி உள்ள போட்டுட்டு கத்த கூடாதுன்னு சொல்றியே.. உனக்கு மண்டையில மசாலா இருக்கா குண்டு தாத்தா.?" என அவள் கேட்க அவரும் கறுத்து போன முகத்தோடு திரும்பிக் கொண்டார்.

"நான் உன் பல்லை உடைக்கப்போறேன்.." என்று தன் விரல்களை இறுக்கினான் அதியன்.

"அதுக்கும் முன்னாடி என்னை வெளிய வுட சொல்லுடா.."

அதியன் அவளுக்கு தனது பதிலை சொல்ல இருந்த நேரத்தில் குறுக்கில் வந்து நின்றான் தேவன்.

"அதியா ப்ளீஸ்.. நானே விசாரிக்கிறேன்.. நீ கொஞ்சம் பேசாம இரு.." என்றவன் செங்கா பக்கம் திரும்பினான்.

"நீங்க டிவின்ஸ்கறதுக்கு வேற ஏதாவது ஆதாரம் இருக்கா.?" என்றான்.

ஆமென தலையசைத்தாள் அவள். "என் போன்ல பைலு போல்டர்ன்னு ஒன்னு இருக்கும் பாரு. அதுல பொன்னா ஓட்டு போடுற கார்டும் என்னோட ஓட்டு போடுற கார்டும் டிஜிட்டல் காப்பியா இருக்கும். அதை கம்ப்யூட்டர்ல போட்டு தேடி பாரு.. அப்ப தெரியும்.. அப்படியே அதுலயே ரெண்டு பேரோட ஆதாரும் எங்கூட்டு ரேசன் கார்டும் இருக்கும். இத்தனையும் பத்தலன்னா அவ படிக்கற காலேஜ்க்கு போய் விசாரணை பண்ணு.. அந்த புள்ளை மட்டும்தான் படிக்கறா.. நான் எந்த பள்ளிக்கோடமும் போனது இல்ல.. இதை எங்க ஊர்ல விசாரிச்சா கூட தெரியும்.. இத்தனையும் நம்பலன்னா சொல்லு.. நான் வேற ஆதாரம் தரேன்.." என்றாள்.

அவளது போனில் இருந்த ஆதார், ரேசன், வாக்காளர் அடையாள அட்டை என்று மூன்றையும் சோதித்துக் கொண்டிருந்த தேவன் நிமிர்ந்தான். "இல்ல இதுவே போதும்ன்னு நினைக்கிறேன்.. செக் பண்ணிட்டு வந்து சொல்றேன் இரு.." என்றவன் அவசரமாக அத்தனையையும் சோதித்தான்.

"இவ சொல்றது உண்மைதான்டா.. இவ அப்பாவி.." என்றான் தேவன்.

"உனக்கேன்டா புரியல.. இவ பிராடுடா.. விஷ்வாவை காணோம்.." என்ற அதியனுக்கு தன் பிரச்சனை மட்டுமே மலையளவு தெரிந்தது.

"நீ ஒருத்தன்டா.." என்று சலித்துக் கொண்ட தேவன் செங்கா பக்கம் திரும்பினான்.

"இங்க பாரும்மா.. நீ பொன்னா இல்ல.. அது ஓகே.. ஆனா இப்ப அந்த பொன்னா பொண்ணை இங்கே வர சொல்லி போன் பண்ணு.. அவ வந்தாதான் நான் உன்னை வெளியே விடுவேன்.." என்றான்.

தேவன் தனக்காக செய்யும் உதவி கண்டு அதியனுக்கு சிறிது நிம்மதி பிறந்தது.

"என் கை வெலங்கை அவுத்து வுடு.. நான் போன் பண்றேன்.." என்றாள் செங்கா.

தேவன் தயங்கி நின்றான். "இந்த இரும்பு கதவை ஒடைச்சிட்டு போற அளவுக்கு சக்தி இருந்தா இன்னேரம் நான் ஏழு மலை ஏழு கடல் தாண்டி போயிருப்பேன்.." என்றாள் நக்கலாக.

தேவன் கதவின் வெளியே இருந்தபடியே அவளது கை விலங்கை அவிழ்த்து விட்டான். அவளது போனையும் அவளிடம் தந்தான்.

"ஹலோ. நான் செங்கா பேசறன்.. நான் இங்க ஒரு போலிசு ஸ்டேசன்ல இருக்கேன்.. நீ இங்க வந்தாதான் என்னை வெளிய வுடுவம்ன்னு புடிச்சி வச்சிருக்காங்க.." என்றாள் ஃபோனில்.
கால் நிமிடத்திற்கு பிறகு தேவனை பார்த்தாள். "இந்த போலிசு ஸ்டேசன் அட்ரஸ் என்னாது.?" என்றாள்.

எப்படியோ விஷ்வா கிடைக்கப்போகிறான் என்று நம்பினான் அதியன்.

தேவன் அது எந்த ஸ்டேசன் என்பதை சொன்னான். அதை போனில் சொல்லி விட்டு ஃபோன் அழைப்பை துண்டித்தாள் செங்கா.

"நீ கேட்கற ஆளு வர வரைக்கும் எனக்கு ஒரு கெளாஸ் டீ போய் வாங்கிட்டு வா.." என்றாள் தேவனிடம்.

"என்னை பார்த்தா உனக்கு வேலைக்காரன் மாதிரி தெரியுதா.?" என எரிச்சலாக கேட்டான் அவன்.

"நீ சாதாரண பொது சனத்துக்கு வேலை செய்றவன்தானே.? ஆனா அதை வுட்டுட்டு இந்த முட்டைக்கோஸ் மொவரைக்குதானே ஜால்ரா போட்டுட்டு என்னை புடிச்சி உள்ள போட்டுருக்க.?" என்று அதியன் பக்கம் கையை காட்டியவள் "அவனை வுட நான் எதல தாழ்த்தியானேன்..? அதனால இப்ப போய் டீ வாங்கிட்டு வா.." என்றாள்.

தேவனுக்கு முகம் வாடிப்போய் விட்டது. அவன் உண்மையிலேயே மிகவும் நேர்மையான காவல் துறை அதிகாரி. ஆனால் நண்பனுக்காக சிறு உதவி செய்வதாக நினைத்து செங்காவை அடைத்து வைத்திருந்தவனுக்கு அவள் கேட்ட கேள்விகள் மனதை மிகவும் பாதித்து விட்டது. தேவனின் முக வாட்டத்தை கண்டு கான்ஸ்டபிள் ஒருவர் போய் டீ வாங்கி வந்து செங்காவிடம் நீட்டினார்.

டீயோடு சென்று ஒரு மூலையில் அமர்ந்தாள் செங்கா. டீ டம்ளரை அங்கும் இங்குமாக ஆட்டினாள்.

அவளை பார்த்தபடி நாற்காலி ஒன்றில் அமர்ந்தான் அதியன். அவளையே வைத்த கண் வாங்காமல் முறைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்த செங்கா "இந்த கதவை தொறந்து வுடட்டும்.. அப்புறம் காட்டுறன்டா இந்த செங்கா யாருன்னு.." என்று சிறு குரலில் கர்ஜித்தாள்.

அவளது முடிந்திருந்த கேசமும், அவள் விருப்பம் இல்லாமல் அணிந்திருந்த சுடிதாரும், அவளது கோப முகமும் கண்டவனுக்கு அவள் காட்டானை போலதான் தெரிந்தாள்.
சுவற்றில் சாய்ந்தபடி அலட்சியமாக அமர்ந்திருந்த அவளுக்குள் சிறு பயம் கூட இல்லை என்பது அதியனுக்கும் தெளிவாக தெரிந்தது.

பொன்னா வருவாள் என்று அதியன் காத்திருந்தான். ஆனால் சற்று நேரத்தில் காக்கி உடையில் ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர் வந்தார். அவரை கண்டு அவசரமாக எழுந்து நின்று வீரவணக்கம் வைத்தான் தேவன்.

"அசிஸ்டென்ட் கமிஷனர் ஏன் இந்த நேரத்துக்கு இங்கே வந்திருக்காரு.? ஸ்டேசன்ல ஒரு பொண்ணு இருக்கறது தெரிஞ்சா என்னை திட்டி தீர்த்துடுவாரே..?" என்று அவன் சிறு குரலில் பதறியது கேட்டு அதியன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

"விஷ்வாவை கண்டுபிடிக்க சொல்லி இவர்கிட்ட கேட்கலாமே.?" என அவன் யோசித்த நொடிகளில் "செங்கா.." என்றபடி அந்த அசிஸ்டென்ட் கமிஷனர் சுற்றும் முற்றும் தேடினார்‌.
செங்கா அசிஸ்டென்ட் கமிஷனர் குரலை கேட்டு எழுந்து நின்றாள். "இனியன் மாமோவ்.." என்று குரல் தந்தாள் கம்பி கதவின் பின்னால் நின்றபடி.

'இவங்க எப்படி கனெக்ட் ஆனாங்க.?' குழப்பமும் ஆச்சரியமுமாக இருந்தது தேவனுக்கு.
அசிஸ்டென்ட் கமிஷனர் இனியன் சாமிநாதனின் நண்பனான மகேஷின் மகன்.
சமீபத்தில்தான் அசிஸ்டென்ட் கமிஷனராக பதவி உயர்வு பெற்றிருந்தான். அவன் பதட்டமாக செங்காவின் அருகே வந்தான்.

"பொன்னா.." என்றான் அவன் குழப்பமாக.

"நான் செங்கா.." என்றாள் கோபத்தோடு.

"இல்ல சுடிதார் போட்டிருக்கியேன்னு பார்த்தேன்.." அவன் குழப்பமாக சொன்னான்.
"இந்த கருமத்தை மாட்டிட்டு இருக்கணும்ன்னு தலையெழுத்து எனக்கு.. நீ எப்புடி அதுக்குள்ள இம்புட்டு தூரம் வந்த.? அதுக்கு முன்னால நீ இந்த கதவை தொறந்து வுட சொல்லு.." என்றாள்.

"தேவன் இவளை முதல்ல ரீலீஸ் பண்ணுங்க.. அப்புறம் நாம தனியா கொஞ்சம் பேசிக்கலாம்.." என்ற இனியனின் குரலில் தேவன் சற்று பயந்து போனான். இனியனுக்கும் தேவனுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. ஆனாலும் வேலை என்று வந்து சிறிது பிசிறினாலும் திட்டி தீர்த்து விடுவான் இனியன்.

இனி என்ன நடக்குமோ என்று நினைத்தபடி கம்பி கதவை திறந்து விட்டான் தேவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1262

VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN