நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவன் ஓடிவந்து செங்கா இருந்த சிறையின் கதவை திறந்து விட்டான்.

"சார் இந்த பொண்ணை உங்களுக்கு எப்படி தெரியும்.?" தயக்கமாக இனியனிடம் கேட்டான் தேவன்.

"எங்க அப்பாவும் செங்காவோட அப்பாவும் பிரெண்ட்ஸ்.. எதுக்காக நீங்க இவளை அரெஸ்ட் பண்ணி வச்சிருந்திங்கன்னு சொல்ல முடியுமா.?" என கேட்டபடி தேவன் மேஜையின் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் இனியன்.

இனியனுக்கு வலது பக்கம் அமர்ந்திருந்த அதியனை முறைத்தபடி அவனின் இடது பக்கம் வந்து நின்றாள் செங்கா.

"அதோ அந்த எருமைதான் என் மேல பொய்யா கேஸ் குடுத்துட்டான் மாமா.." என்றாள் அதியனை கை காட்டி.

இனியன் அதியன் பக்கம் பார்த்தான். அதியன் செங்காவை முறைத்து விட்டு அதியனை பார்த்தான்.

"என் பிரெண்டை நாலு நாளா காணோம் சார்.. அவன் கடைசியா பார்க்க போனது அவனோட காதலியைதான்.. அவனோட ஃபோன் சிக்னல் கூட கடைசியா அவங்க ஊர் பக்கத்துலதான் கட் ஆகி இருக்கு.. அதனாலதான் இந்த பொண்ணை வீணா நான் சந்தேகப்பட்டுட்டேன்.." பொறுமையான குரலில் சொன்னான் அதியன். தன்னை பற்றியும் விஷ்வாவை பற்றியும் விபரமாக சொன்னான். தேவனும் நடந்ததை விவரித்தான்.

"ஓகோ.? அப்படி வரியா நீ.?" என்று அதியனை முறைத்த செங்கா தேவன் பக்கம் திரும்பினாள்.

"இப்ப நான் கேசை தரேன்.. நீ எழுது.." என்றாள்.

தேவன் இனியனை தயக்கமாக பார்த்தான். இனியனுக்கும் செங்கா என்ன செய்ய இருக்கிறாள் என புரியவில்லை. அதனால் அவனும் அவளைதான் குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"என் பொறந்தவ பொன்னாம்பல் காணாம போயிட்டா.. அதுக்கு காரணம் இதோ இந்த மாங்கா மடையனோட பிரெண்டு விஷ்வாதான்னு எழுது.. படிக்கற புள்ளையை காதல்ன்னு சொல்லி ஏமாத்தி கடத்திட்டு போய் வச்சிருக்கான்னும் எழுதிக்கோ.. அந்த புள்ளையை காணோம்ன்னு அவ பொறந்தவ கதறி அழுந்து கேசு தந்தான்னு பேப்பர்காரங்களுக்கெல்லாம் தகவலை கொடு.. இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல என் பொறந்தாளை கண்டுபிடிச்சி இந்த பன்னாடையோட பிரெண்டை புடிச்சி செயில்ல போடலன்னா நான் இந்த டேசன் வாசல் முன்னாடி உட்கார்ந்து போராட்டம் ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்னும் தகவலை கொடு.." என்றாள்.

பேனாவை கையில் எடுத்த தேவன் இவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் பேனாவை கீழே விட்டான்.

"பொன்னா காணாம போயிட்டாளா.?" அதிர்ச்சியோடு கேட்டான் இனியன்.
அதியன் ஆத்திரத்தோடு எழுந்து நின்றான்.

"தப்பு உங்க மேலதான் இருக்கே தவிர என் பிரெண்ட் மேல இல்ல.. அவனை நீங்கதான் கடத்தி வச்சிருக்கிங்க.." என்று எழுந்து நின்று கோபமாக சொன்னான் அதியன்.

"எங்க வூட்டு பொண்ணு உங்க வூட்டை தேடி வரல.. உன் பிரெண்டுதான் எங்கூடு தேடியாந்து எங்கக்காள கடத்தி போயிருக்கான். இதுக்கு ஆதாரமா கொஞ்சம் நேரம் முன்னாடி நீயே உன் பிரெண்டு போனு சிக்னலு எங்க ஊர் பக்கத்துல கட் ஆகியிருக்குன்னு சொல்லிருக்க.." என்றாள் தன் இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியபடி.

"செங்கா என் கேள்விக்கு பதில் சொல்லு.. நீ எப்படி இங்கே வந்த.? பொன்னா எங்கே இப்போ.?" என்றான் இனியன் அவளை தன்பக்கம் திருப்பியபடி.

பெருமூச்சு விட்டாள் செங்கா. "எனக்கே எதுவும் உருப்படியா தெரியாது மாமா.. கரட்டுக்கு போய்ட்டு வந்து பார்த்தா வூடு இடிஞ்சி கெடந்துச்சி.. சரி மழைக்கு இடிஞ்சி விழுந்திருக்கும்ன்னு நெனைச்சேன் நானும். வூட்டுல இருந்த அப்பனும் அம்மாளும் சொந்தக்காரங்க வூட்டுக்கு போயிட்டாங்கன்னு பக்கத்து வூட்டு பாட்டி சொன்னுச்சி.. சரின்னு எங்க அப்பனுக்கு ஃபோன் பண்ணேன். அப்பன் பொன்னா காணம்ன்னு போலிஸ்ல கம்ப்ளைண்ட தந்துட்டு அப்பாறமா பாட்டி வூட்டுக்கு வான்னு சொன்னுச்சி.. சரின்னு நானும் கெளம்பி வரலாம்ன்னு இருந்தேன். அப்பதான் இந்த எருமை வந்து என்னை எங்கேயே கடத்திட்டு வந்துருச்சி.." என்று அதியனை குறிப்பிட்டு சொன்னவள் தேவன் பக்கம் பார்த்தாள்.

"அப்படியே இந்த காண்டாமிருகத்து மேலயும் ஒரு கேசை எழுது.. செடிமலை கிராமத்து அப்பாவியான செங்காந்தள் என்ற இளம்பொண்ணை மயக்க மருந்து அடிச்சி கடத்திட்டு வந்த இளைஞன் கைதுன்னு எழுது.." என்றவள் ஒரு நொடி யோசித்துவிட்டு "அந்த இளைஞன்னு சொன்ன வார்த்தையை மாத்தி அடிச்சிட்டு ரவுடிபையன்னு எழுதிக்கோ.." என்றாள்.

தேவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அதியனை பார்ப்பதா இல்லை இனியனை பார்ப்பதா என்று குழப்பத்தில் இருந்தான் அவன்.

இனியன் கோபத்தோடு அதியனை பார்த்தான். அவனின் பார்வை புரிந்தவனாக அதியனே பேச ஆரம்பித்தான். "நீங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்ல சார்.." என்றவன் தன் கால் பகுதிகளை காட்டினான்.

"நான் சாதாரணமா ஏதாவது கேட்டாளே அடிக்கிறா சார் இவ.. அதனால்தான் கூப்பிட்டா வரமாட்டான்னு மயக்க மருந்து அடிச்சேன்.. அதுக்கும் காரணம் இருக்கு சார்.. இவக்கிட்ட துப்பாக்கி இருந்தது.." என்றான்.

இனியன் செங்காவை சந்தேகமாக பார்த்தான். "அது காட்டுப்பன்னிக்கு போடுற மயக்க ஊசி துப்பாக்கி மாமா.. எங்க ஊரு காட்டு வாட்சர்க்கிட்ட இருந்து எனக்கு வேணும்ன்னு புடுங்கி வச்சிருந்தேன்.." என்றாள்.

"அது எனக்கெப்படி தெரியும்.? அதான் இவ தீவிரவாதின்னு நினைச்சி.." அதற்கு மேல் என்ன சொல்வதென தெரியாமல் பின்னங்கழுத்தை தடவினான் அதியன்.

விசயம் என்னவென்று இனியனுக்கு புரிந்து போனது. செங்காவின் தோளில் கை வைத்து அவளது முகத்தை பார்த்தான். "அவரு மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்கா உன் மேல சந்தேகப்பட்டுட்டாரு. உங்க அக்காவும் அவரோட பிரெண்டும் லவ் பண்ணி இருப்பாங்க போல. ஆனா ஏன் வீட்டுக்கு சொல்லாம ஓடிப்போனாங்கன்னுதான் தெரியல.. இதுல அவருக்கும் சம்பந்தம் இல்ல.. உனக்கும் சம்பந்தம் இல்ல. அதனால அவர் செஞ்ச தப்பை மன்னிச்சிட்டு அவரை அடிச்சதுக்காக அவர்கிட்ட சாரி கேளு.." என்றான்.

"அட ஓர வஞ்சனைக்கு பொறந்தவனே.." என்ற செங்கா அவன் கையை தட்டி விட்டுவிட்டு பின்னால் தள்ளி நின்றாள்.

"எதோ இரண்டு கழுதை நேசிச்சி வூட்டை வுட்டு ஓடிப்போனதுக்கு அவன் என்னை கடத்திட்டு வந்துருக்கான். அதுக்கு அவன்தான் என் கால்ல வுழுந்து மாப்போடணும்.. அத வுட்டுட்டு நான் அவன்கிட்ட மாப்பு கேட்கணுமா.?" என்றவள் தேவன் பக்கம் திரும்பினாள்.

"யோவ் போலிசு இந்த போலிசு மாமன் மேலயும் நான் கம்ப்ளைண்ட் தரேன்..‌ போலிசு ஆபிசரு இனியன் தப்பு செய்யாத பொண்ணை மன்னிப்பு கேட்க சொல்லி பங்கப்படுத்தினார்ன்னு ஒரு கேசு எழுதுய்யா.." என்றாள்.

இனியன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"ஓகே.. ஐயம் சாரி.. நான் தெரியாம சொல்லிட்டேன்.." என்று உடனடியாக தனது மன்னிப்பை கேட்டான் இனியன்.

"அவரையும் மன்னிப்பு கேட்க சொல்றேன்.. அவர் அவரோட பிரெண்டை காணமேன்னு கவலையில் இருக்காரு.. அவர் மேல கேஸ் ஏதும் தராத.." என்றான். அதியன் பக்கம் பார்த்து அவனிடம் கண் சைகை காட்டினான்.

"சாரிப்பா.. என் பிரெண்டை கண்டுபிடிக்க வேண்டிய அவசரத்துல உன் மேல சந்தேகப்பட்டு கடத்தி வந்துட்டேன் சாரி.." என்றான். அவன் மன்னிப்பு கேட்டது முழுக்க இனியனின் முகத்திற்காகதான் என்பது இனியனுக்கே புரிந்துதான் இருந்தது.

"அப்படி வா வழிக்கு.." என்றவள் மேஜை மீது இருந்த பேக்கை எடுத்து எடுத்து அதில் தனது பொருட்களை அடுக்க ஆரம்பித்தாள்.

"மாமோவ்.. உங்க ஊரு எங்க இருக்கு.? நான் எங்க பாட்டி வூட்டுக்கு போவணும்.." என்றாள் மேஜை ஓரம் இருந்த அருவியின் துப்பாக்கியை எடுத்து பத்திரப்படுத்தியப்படி.

அதியனும் தேவனும் செங்காவை ஆச்சரியமாக பார்த்தனர்.

"நீ இப்ப எங்க ஊர்லதான் இருக்க செங்கா.." என்றான் இனியன்.

செங்கா செய்யும் வேலையை விட்டுவிட்டு திரும்பி பார்த்தாள்.

"நெசமாவா.?" என்றவளிடம் இனியன் ஆமென தலையசைத்தான்.

ஜன்னல் வழி தெரிந்த இருளையும் பார்த்தாள் செங்கா.

"ஓ.." என்றவள் அதியன் பக்கம் பார்த்தாள். தனது தோள்ப்பையின் ஒரு ஜிப்பை அவிழ்த்து அதிலிருந்த ஒரு நூறு ரூபாயை எடுத்தாள். அதியன் முன்னால் நீட்டினாள்.

"இந்தா வச்சிக்கா.. நான் கூட பஸ் சார்ஜ்க்கு முன்னூறு நானுறு ஆவுமேன்னு பயந்து போய் இருந்தேன்.. நீயே கூட்டியாந்து வுட்டுருக்க.. இந்த காசை வச்சிக்க.." என்றாள். அதியன் அவள் கையில் இருந்த காசையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.

"அட ஏம்ப்பா இப்புடி பாக்குற.? இது செல்லுற காசுதான்.. நாலு வருசம் முன்னாடி எங்க அக்காளுக்கு எங்க அப்பன் தந்த இரண்டாயிரம் ரூவாயில இருந்து நான் உருவுனது.. வாங்கிக்கா.. உன் வண்டிக்கு ஏதும் பெட்ரோல் டீசலு போட்டுக்குவ.." என்றாள்.

அவள் கையில் இருந்த நூறு ரூபாயை தன் கையில் வாங்கினான் இனியன். "இதுக்கு பதிலா அவருக்கு தேங்க்ஸ் சொல்லலாம் இல்ல..?" என்றான்.

"ஓகோ..?" என்றவள் இனியன் கையில் இருந்த காசை பிடுங்கி தன் பையில் வைத்துக் கொண்டாள்.

"நன்றி ப்பா.." என்றாள் அதியன் பக்கம் திரும்பி.

"சரி நான் கெளம்புறேன்.. என் பொறந்தவளை கண்டுப்புடிச்சதும் மறக்காம எனக்கு ஃபோன் பண்ணி சொல்லுய்யா போலிசு.." என்றவள் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.

"மேடம் ஒரு நிமிசம்.." அவசரமா அழைத்தான் தேவன்.

"என்ன.?" என்று திரும்பினாள் அவள்.

"நீங்க ப்ராப்பரா எந்த கம்ப்ளைண்டும் தரலையே.." என்று குழப்பத்தோடு சொன்னான் அவன்.

"பேப்பரையும் பேனாவையும் குடுப்பா.." என்றவள் அவனெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

தேவன் குழப்பமாக பேப்பரை நீட்டினான். தேவனின் சட்டையில் குத்தியிருந்த பெயர் பேட்ஜை பார்த்தாள்.

"உயர்திரு காவல் துறை உதவி ஆய்வாளர் தேவன் அவர்களுக்கு செடிமலை கிராமத்து வாசியான சாமிநாதனின் இளைய மகள் செங்காந்தள் தரும் புகார் கடிதம் ஏதெனில் எனது மூத்த சகோதரி பொன்னாம்பல் வயது இருபத்தியொன்று.." எழுதுவதை நிறுத்தி விட்டு அதியன் பக்கம் பார்த்தாள்.

"உன் பிரெண்டுக்காரன் காணாம போய் எத்தனை நாளு ஆவுது.?" என்றாள்.

"மூணு நாள்.. ஏன்.?" என கேட்டவனுக்கு பதிலை தராதவள் மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.

"கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. அவளை காணாமல் எங்களின் மொத்த குடும்பமும் உணவின்றி உறக்கமின்றி கவலையோடு இருக்கின்றனர். அதனால் அவளை விரைவில் கண்டுபிடித்து எங்களிடம் சேர்ப்பிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள செங்காந்தள்.." கையெழுத்தை போட்டு விட்டு எழுந்து நின்றாள்.

"இவ பிராடு தேவா.. ஸ்கூல் போலன்னு சொல்லிட்டு எப்படி அழகா எழுதுறா பாரு.." என்று தனது சந்தேகத்தை சொன்னான் அதியன்.

"டேய் டப்சாகண்ணா.. நான் பள்ளிக்கோடம் போவலன்னுதானே சொன்னன்.? எப்படா படிக்கலன்னு சொன்னன்.? புள்ளை கை நாட்டா போயிட கூடாதுன்னு எங்க அப்பன் எனக்கும் எழுத படிக்க சொல்லி கொடுத்துருக்கு.. படிக்க தெரியாதவ போனுக்கு பாஸ்வேர்டு எப்படி டைப் பண்ணுவான்னு முன்னாடியே யோசிச்சி இருக்க வேணாம்.? அரை வேக்காடு. பேருக்கு பின்னாடி டிகிரியை போட்டுக்கிற எங்க அக்காளுக்கு எந்த வெதத்திலயும் இந்த செங்கா தாழ்த்தியே கெடையாது.." என்றவள் பேப்பரை தேவனிடம் நீட்டினாள்.

"ஏதோ எனக்கு தெரிஞ்சா மாதிரி எழுதி இருக்கேன்.. முன்ன பின்ன பத்து பன்னெண்டு புகார் கடுதாசி எழுதி இருந்தா எனக்கும் நீ சொன்ன ப்ராப்பர்ன்னா என்னான்னு தெரிஞ்சிருக்குமோ என்னவோ.?" என்றவளிடமிருந்த பேப்பரை வாங்கிக் கொண்டான் தேவன்.

"உம்படைய வாட்சப்பு நம்பரை சொல்லு..." என்றாள் தனது ஃபோனை எடுத்தபடி.

"எதுக்கு.?" என கேட்டபடி நம்பரை சொன்னான் அவன்.

"எங்க அக்கா போட்டாவை உம்படைய நம்பருக்கு அனுப்பிச்சி இருக்கேன் பார்த்துக்கோ.. அதை ப்ரிண்ட் போட்டு எல்லா டேசனுக்கும் அனுப்பி வச்சிடு.. அப்பதான் எல்லாரும் தேடுவாங்க.. உனக்கு ஏதும் சிபாரிசி வேணும்ன்னா இந்த இனியன் மாமாவை புடிச்சி வச்சிக்கா.. மாமன் பெரிய போலிசா ஆச்சின்னு எங்க அப்பன் சொல்லிட்டு இருந்துச்சி.. ஒரு சிபாரிசுக்கு கூட ஒதவலன்னா அப்பாறம் என்னா பெரிய போலிசு..?" என கேட்டவள் வாயிலை நோக்கி கிளம்பினாள்.

அங்கிருந்த அனைவரும் அவளை ஆச்சரியத்தோடு பார்த்து நின்றிருக்க மீண்டும் திரும்பி வந்தாள் அவள்.

"மாமோவ்.. எங்க பாட்டி வூடு எங்க இருக்குன்னு ஒனக்கு ஏதும் தெரியுமா.?" என்றாள்.
"நானே கூட்டிப்போறேன்ம்மா.. சாமிநாதன் மாமா வீடு எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் இருக்கு.. நீ போய் என் பைக் பக்கத்துல நில்லு.. நான் கொஞ்ச நேரத்துல வரேன்.." என்று சொன்னான் இனியன்.

"இல்ல.. அவுங்க வூடு இல்ல.. இந்த மாமன் பேரு என்னாது..? ஏதோ சர்க்கரையோ சீனியோ வருமே.. ஆங்.. சீனு.. அந்த சீனு மாமன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு.. நீயே கூட்டி போய் வுட்டாலும் சம்மதமே.." என்றாள்.

சீனுவின் பெயர் கேட்டதும் இனியன் முகம் கோபத்தில் சிவந்து போனது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அவனது அம்மா சக்தியை கத்தியால் குத்தி விட்டான் சீனு.
ஆனால் ஐந்து வருடமாக கேசை இழுத்தடித்து பொய் சாட்சிகள் பலவற்றை தயாரித்து எப்படியோ வழக்கிலிருந்து தப்பி விட்டான். அவன் மீண்டும் எப்போது தன் கையில் வசமாக சிக்குவான் என்று காத்திருக்கிறான் இனியன்.

"ஓ.. உங்க தாத்தாவுக்கு காரியம் செய்ய வந்திருக்கிங்களா.?" என கேட்டவன், "தேவன் நான் காலையில வந்து உங்களை பார்க்கறேன்.." என்றான். அதியன் பக்கம் பார்த்தான். "உங்க பிரெண்டை கண்டுபிடிக்க நான் ஹெல்ப் பண்றேன் சார்.. அதுக்கும் முன்னாடி ஒரு கம்ப்ளைண்டை கொடுங்க.. படிச்சவங்க நீங்களே எங்களை புரிஞ்சிக்கலன்னா நாங்களும் என்ன பண்ண முடியும்.?" என்றவன் செங்காவின் பின்னால் ஓடினான்.

சீனு வீட்டின் தெருமுனையில் தனது பைக்கை நிறுத்தினான் இனியன். வரும் வழியெல்லாம் சீனுவை பற்றியும் அவனது காதலிகளை பற்றியும் அவன் செய்த கொலை முயற்சி பற்றியும் செங்காவிடம் விவரித்திருந்தான் அவன்.

"நீ தனி கணக்குதான் செங்கா.. ஆனாலும் அவன்கிட்ட பார்த்து பழகு.. அவன் சொல்ற எதையும் நம்பாதே..சரியா.? உங்க தாத்தாவோட காரியம் முடிஞ்சதும் உங்க அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துடு.. சரியா.?" என்றான்.
"ம். சரி.." என்றவள் இருட்டில் நடந்தாள்.

அந்த பாதையின் கடைசியில் இருந்த பெரிய வீட்டின் காம்பவுண்ட் கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1350
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN