நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன்னை அணைத்த யதிராவை "மிஸ் பண்ணியா.?" என கேட்டவன் அவளை அணைத்தபடியே உள்ளே வந்து கதவை சாத்தினான்.
அவள் ஆமென தலையசைத்தாள்.
"அஞ்சு மணியிலிருந்து வாசலையே பார்த்துட்டு இருந்தேன் மாமா.." என்றாள்.
"ஓ.. சரி.. ஆனா இனி நானா வந்து கதவை தட்டியபிறகு என் குரலை கேட்ட பிறகு கதவை திற. சரியா.?" என்றான்.

"சரி மாமா.." என்றாள் கொஞ்சலாக அவள்.

அவள் பேசும் ஒவ்வொரு நொடியும் அவளது குரலை கேட்டுக் கொண்டே இருக்க தோன்றியது அவனுக்கு.

யதிராவின் குரல் அவனது வீட்டில் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அவள் எப்போதும் சிறு சிணுங்கலோடுதான் முகிலோடு பேசுவாள். அவனோடு பேசும்போது எப்போதும் கொஞ்சல் இருக்கும் குரலில். அவனுக்கு அது சிறு குழந்தையின் கொஞ்சல் போல் ரசிக்கும்படி இருந்தாலும் கூட சௌந்தர்யாவுக்கு எரிச்சலைதான் தரும்.

"எதுக்குடி இப்படி இழுத்து இழுத்து கொஞ்சி பேசுற.? நார்மலா பேசவே தெரியாதா உனக்கு.? கருமம் காதுலயே கேட்க முடிய மாட்டேங்குது உன் குரலை.. அவன் உன் புருசன்தான். யாரு இல்லன்னு சொன்னது.? அதுக்காக இப்படி வழிஞ்சிக்கிட்டே பேசினா எரிச்சலா இருக்கறது இல்ல.? எப்படிடா இதையெல்லாம் நீ பொறுத்துட்டு இருக்க.?" என்று கடைசியாக முகிலிடமும் கேட்டு அவன் மனதில் கோபத்தை வரவைக்க முயல்வாள். அப்போதெல்லாம் ஏதும் சொல்லாமல் முகில் அமைதியாக இருந்துக் கொள்வான்.

ஒரே நேரத்தில் நான்கு ஆண்களோடு கொஞ்சி விட்டு கட்டியவனிடம் எரிந்து விழும் சில பெண்கள் மத்தியில் தன்னிடம் மட்டும் கொஞ்சி பேசும் மனைவி கிடைத்தது எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று அன்று இவனுக்கு தெரியாது. ஆனால் பொது சமூகத்தை பற்றி மூன்று வருடம் வாழ்ந்து பார்த்து கற்றுக் கொண்டவனுக்கு தன் மனைவியின் கொஞ்சல் கண்டு எரிச்சல் வரவில்லை இப்போதும் கூட. ஆனால் அன்று அறியாத தூய்மையை இன்று அவளது குரலில் அறிந்துக் கொண்டான்.

"ஏன் மாமா இவ்வளவு லேட்.?" என்றாள் யோசனையாக யதிரா.

"இன்னைக்கு புதுசா ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கேன்ம்மா.. அதனாலதான் கொஞ்சம் வேலை இருந்துடுச்சி. பாரின் போன என் பிரெண்டும் இன்னைக்கு திரும்பி வந்துட்டான். அவன்கிட்ட அவனோட காரை விட்டுட்டு பஸ் பிடிச்சி வந்து சேர்ந்தேன்.. அதுக்குள்ள இவ்வளவு நேரம் போயிடுச்சி.." என்றவன் அவளை விலக்கி நிறுத்தி விட்டு சட்டையை கழற்ற ஆரம்பித்தான்.

"பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க மாமா.. நான் காபி போட்டு தரேன்..?" அவனது முகத்தில் தெரிந்த களைப்பை பார்த்து விட்டு சொன்னாள்.

"காலை ஒரு நேரம் பால் வாங்கதான்ம்மா பட்ஜெட் இருக்கு.. நீ போய் டிக்காசன் ஒரு க்ளாஸ் கொண்டு வா.." என்றான்.

அவள் அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். அவன் லுங்கிக்கு மாறிக்கொண்டு வெளியே வந்தபோது டிக்காசன் டம்ளரை அவனெதிரே நீட்டினாள்.

சுவரோடு சாய்ந்து தரையில் அமர்ந்தவன் அவளை தன்னருகே அமர சொல்லி கை காட்டினான். அவள் அவனெதிரே அமர்ந்தாள்.

"வீட்டுல இருக்கறது போரடிச்சதா.?" என்றான் டிக்காசனை பருகியபடி.

"இல்ல மாமா.." என்றாள் அவள்.

அவன் யோசனையோடு அவளை பார்த்தான். அவளது கண்கள் சிவந்திருந்தது.

"ஏன்ம்மா.. அழுதியா.?" என்றான் அவளது முகத்தை ஆராய்ந்தபடியே.

அவள் தன் கை விரல் நகங்களை பார்த்தாள். தயங்கினாள்.

"அண்ணன் முகமெல்லாம் காயமா இருந்தது.. எங்கேயோ விழுந்துட்டான் போல.." என்றவள் சொல்லி முடித்ததும் கண்களை துடைத்துக் கொண்டாள். அவளை காணுகையில் அவனுக்கு பரிதாபமாக இருந்தது. அப்பாவிதனத்தின் அளவு கூடினால் விபரீதம் என்று அவளுக்கு எப்போது புரியும் என கவலைப்பட்டான்.ஆனால் அதை பற்றி எதுவும் சொல்லவில்லை.

உறங்கும் வரை இருவரும் பழைய நினைவுகள் பலவற்றை பேசினர்.

மறுநாள் காலை முகில் அலுவலகம் கிளம்பினான். "பத்திரமாக இரு.." என அவளிடம் சொன்னவன் கே.கே விடம் பாதுகாப்பை ஒப்படைத்து விட்டு சென்றான். தினம் இப்படியே சென்றது.

இரவுகளில் யதிரா உறங்கிய பிறகு தனது அலுவலக வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் முகில்.

ஒரு வாரம் சென்றது.

அந்த வாரத்தில் ஒருநாள் அண்ணனுக்கு தெரியாதபடி அம்மாவிடம் போனில் பேசினாள் யதிரா. அம்மா அழுதாள். யதிராவுக்கு பதில் சொல்ல வரவில்லை. அதனால் இவளும் அழுதாள். அம்மா இவளின் நலம் விசாரித்தாள். பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு போன் இணைப்பை துண்டித்துக் கொண்டாள். அம்மாவிடம் பேசியதை மாலை வீடு வந்த முகிலிடம் சொன்னாள். அவன் அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு "உனக்கு விருப்பமா இருந்தா உன் அம்மாவோடு தினமும் கூட பேசு.." என்றான். அதன் பிறகு தினமும் மதிய வேளைகளில் அம்மாவிடம் பேசினாள்.

அந்த வார முடிவில் முகில் கேட்கும் முன்பே வீட்டில் தனித்து இருக்க சலிப்பாக உள்ளது என்றாள் யதிரா. அவன் ஏதும் சொல்லவில்லை. அவள் சொன்னதை காதில் வாங்காதது போல இருந்துக் கொண்டான்.

மீண்டும் ஒரு வாரம் சென்றது. முகிலுக்கு வேலை பின்னி எடுத்தது. தினமும் களைத்து போய் வீடு வந்தான். அவன் களைத்து போன முகம் கண்டு யதிராவுக்கும் கவலையாக இருந்தது.

அதற்கடுத்த வாரத்தில் அவளிடம் இருநூறு ரூபாயை தந்தான் முகில்.
"காய்கறி வாங்க மார்கெட் போயிட்டு வந்துடு யதி.." என்றான். அவள் அந்த இருநூறை திருப்பி திருப்பி பார்த்தாள்.

"ஆனா இந்த காசை வச்சி எப்படி மாமா மார்கெட் போக முடியும்.?" என குழப்பமாக கேட்டாள் அவள்.

"சாரிம்மா.. என்கிட்ட வேற காசு இல்ல.. இதை வச்சி இந்த வாரத்தை அட்ஜெஸ்ட் பண்ணிக்க.." என்றவன் வேலைக்கு புறப்பட்டான்.

காரை ஓட்டி வந்த கே.கேவிடம் "யதி காய்கறி மார்க்கெட் போக போறா.. கொஞ்சம் கவனமா பார்த்துக்க.." என சொல்லி விட்டு கிளம்பினான்.

யதிரா அந்த இருநூறு ரூபாயை பார்த்தபடியே அரை மணி நேரம் அமர்ந்திருந்தாள். முகில் பணம் இல்லை என சொல்லி சென்றது கஷ்டமாக இருந்தது. தன்னால்தான் அவனுக்கு இவ்வளவு சிரமம் என நினைத்தாள்.

காய்கறி சந்தைக்கு கிளம்பினாள். இருநூறு ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு வார காய்கறிகளை வாங்கும் வழி கடைசி வரையிலும் தெரியவில்லை. தக்காளி அரை கிலோவும் வெங்காயம் அரை கிலோவும் வாங்கினாள். நூறு ரூபாய் அதற்கே தீர்ந்து விட்டது. ஒவ்வொரு காயின் விலையையும் விசாரித்தாள். அன்று விலை குறைவாக இருந்த முள்ளங்கியையும் கத்தரிக்காயையும் வாங்கி கொண்டாள். மீதி ஐம்பது ரூபாய்தான் இருந்தது. நகத்தை கடித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். கொத்தவரை கிலோ இருபது என தூரத்தில் ஒரு கிழவி கூவிக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று கொத்தவரையை வாங்கி கொண்டாள். அந்த கொத்தவரையை மூன்று வேளை பொரியல் செய்யலாம் என கணக்கு போட்டாள். அந்த கிழவியிடமே பாகற்காய் அரை கிலோ இருபதுக்கு வாங்கி கொண்டாள்.

வீட்டிற்கு திரும்பி நடந்தாள். எதை எந்த வேளைகளில் சமைக்கலாம் என்று கணக்கு போட்டாள். எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அவள் அறியாதவாறு அவளை கண்காணித்து நடந்த கே.கே அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் தான் தினம் அமரும் மரத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.மாலையில் வீடு திரும்பிய முகிலிடம் யதிராவின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டு கிளம்பி போனாள்.
முகில் அவள் வாங்கி வந்த காய்களை பார்த்தான். எவ்வளவு செலவு ஆனது என கேட்கவில்லை.

மூன்று நாட்கள் முடிந்தபோதே பாதி காய்கறிகள் வாடி போனது. அதையே சமைத்த யதிராவுக்கு முகில் அதை சாப்பிடும்போது மனம் வாடியது. கடைசி இரண்டு நாட்கள் முற்றி போன காய்களை தூர எறிந்து விட்டு தக்காளி சட்னி, தக்காளி சாதம் என்று செய்து முடித்தாள்.

மீண்டும் அந்த வாரத்திலும் முகில் இருநூறு ரூபாயையே அவளிடம் தந்தான். பணமில்லை என புலம்பும் அவனிடம் அதிக பணம் கேட்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. போன வாரத்திலேயே அவன் தெளிவாக சொல்லி விட்டான் நீ என்ன சமைத்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று. அப்படி இருக்கும்போது தான் என்ன செய்வது என அமைதி காத்தாள்.
மீண்டும் விலை குறைவாக இருந்த காய்கறிகளை தேடி பார்த்து வாங்கினாள். சந்தையை இரண்டு சுற்று சுற்றியதில் தோட்டத்திலிருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரும் இரண்டு கிழவிகளையும் ஒரு நடுத்தர மனிதனையும் பற்றி தெரிந்துக் கொண்டாள். அவர்கள் கொண்டு வந்து விற்ற நாட்டு காய்களை நியாயமான விலைக்கு வாங்கி கொண்டாள். போன வாரத்தை விட இந்த வாரம் இருபது ரூபாய் அதிகமாக வீட்டிற்கு எடுத்து சென்றாள்.

சந்தையில் ஒரு பெண்மணி ஈர துணியில் காய்களை மூடி வைத்ததை கண்டு வந்தவள் அதே போல் தானும் வீட்டில் செய்தாள். ஒரு வாரத்திற்கு காய்கள் வாடாமல் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் போன வாரத்தை விட இந்த வாரம் வாடல் சற்று குறைவாகவே இருக்கும் என்று கணக்கிட்டாள். மாலையில் வீடு திரும்பிய முகில் அவளது செய்கை கண்டு மனதுக்குள் சபாஷ் சொல்லி கொண்டான்.

அந்த வாரத்தின் இறுதி நாளில் தான் கடைக்கு செல்வதாக சொன்னான் முகில். ஆனால் அவள் தானும் உடன் வருவதாக சொல்லவில்லை. அதனால் வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்னன்னவென்று அவளிடம் எழுதி தரும்படி சொன்னான். அவள் மளிகை பொருட்களையும் மற்ற பொருட்களையும் எழுதி வந்து பட்டியலிட்ட காகிதத்தை அவனிடம் தந்தாள்.

அவனே கடைக்கு சென்று வந்தான். பணம் இல்லை என்று அவன் சொல்லி இருந்ததாலோ என்னவோ அனைத்தையும் குறைவான அளவிலேயே வாங்கி வரும்படி எழுதி இருந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் அனைத்தையும் சரிப்பார்த்து எடுத்து வைத்தாள் அவள்.

"யதிம்மா.." என்றான் இவன் சமையலறை வாயிலில் வந்து சாய்ந்து நின்றபடி.

"சொல்லுங்க மாமா.." என்றாள் அவள் சீரக டப்பாவில் சீரகத்தை கொட்டியபடியே.
"அது வந்தும்மா.. நீ.." என்றவன் கேட்க தயங்கி நின்றான்.

"சொல்லுங்க மாமா.." என்றாள் அவள் மீண்டும்.

"அது வந்து நாப்கின் மூணு பாக்கெட் எழுதி இருந்தம்மா.. அதான் கேட்கலாம்ன்னு.." என்றவன் அவளருகே வந்து மற்ற பொருட்களை அந்தந்த டப்பாவில் கொட்ட ஆரம்பித்தான்.

அவள் பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் காத்தாள்.

"உனக்கு ஒரு பாக்கெட்டே மீதியாகுமே.. ஆனா இப்ப மூணு பாக்கெட் எழுதி இருக்கவும் ஒரு மாதிரி ஆயிடுச்சி.. கை தவறி எழுதிட்டியாமா.? இல்ல.." மேலே கேட்க தயங்கினான்.
அவள் கடுகு டப்பாவிற்கு மூடியை போட்டுவிட்டு அவன் பக்கம் திரும்பினாள்.

"அப்ப நான் சின்ன பொண்ணு மாமா.. இப்ப அப்படியா.? மூணு வருசம் இடையில் கடந்திருக்கு இல்லையா.?" என்று தடுமாறி சொன்னவள் அந்த இடத்திலிருந்து அவசரமாக நகர்ந்தாள்.

'மூணு வருசத்துக்கும் மூணு பாக்கெட்டுக்கும் நடுவுல ரொம்ப வித்தியாசம் இருக்கு யதிம்மா.. பிரச்சனை ஏதாவது இருந்தா வாய் திறந்து சொன்னாதானே தெரியும்.?' என மனதுக்குள் புலம்பியவனுக்கு மூன்று பாக்கெட் வாங்கி வந்தது ரொம்பவும் உறுத்தலாக இருந்தது.

மறு வாரமும் சந்தைக்கு சென்றாள் யதிரா அதே இருநூறோடு. காய்கறிகளை அளவாக வாங்கி கொண்டு நடந்தவள் ஒரு ஓரமாக காய்கறி நாற்றுகள் விற்கப்படுவதை கண்டு ஒரு நம்பிக்கையில் சென்று நாற்றுகள் சிலவற்றை வாங்கினாள். வீட்டிற்கு வந்ததும் அந்த செடிகளை நட்டு தண்ணீரை ஊற்றினாள். அந்த செடிகள் நல்ல முறையில் வளர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். இரண்டு செடி வளர்ந்தால் கூட வாரத்தில் மூன்று நாட்களுக்கு குழம்பு பிரச்சனை இருக்காது என்ற எண்ணம் அவளுக்கு அந்த செடிகளை பொக்கிஷமாக நினைக்க வைத்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1110
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN