செங்கா 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சீனுவின் வீட்டை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே வாசலை நோக்கி நடந்தாள் செங்கா.

"எவ்ளோ பெரிய வூடு.. எப்பாடி.. இதை கட்டவே பத்து வருசம் ஆயிருக்கும் போலவே.. யம்மா உன்னையும் பாராட்டியே ஆவுணும்.. இப்படிபட்ட வூட்டை வுட்டுட்டு வந்து எங்கப்பன்னை கட்டிக்கிட்டியே.. சரி வுடு.. இனி உன்னை ஏதும் நான் கிண்டுலும் நக்கலும் பண்ணாம இருந்துக்கறேன்.." என்றபடி நடந்தவள் திறந்திருந்த கதவை ஒருமுறை தட்டினாள். செருப்பை கழட்டி விட்டுவிட்டு உள்ளே நடந்தாள்.

"யப்போவ்.. யம்மோவ்.. மவ வருவான்னு வாசல்ல காத்திருப்பிங்கன்னு நெனைச்சிட்டு வந்தேன் நான்.. ஆனா இந்த வூட்டுல என்னை வான்னு கூப்புட கூட ஒரு நாய் பேய் இல்ல.." என்றபடி மேலும் நடந்தாள்.

அதியன் தேவனையே குறுகுறுவென பார்த்தான். "இந்த பொண்ணு மேல இருக்கற சந்தேகம் போக மாட்டேங்குது தேவா.. ப்ளீஸ் வா.. அவளை போய் பாலோவ் பண்ணலாம்.. விஷ்வா இருக்கற இடம் கண்டிப்பா இவளுக்குதான் தெரிஞ்சிருக்கும்.." என்றான்.

தனது மேஜை மேல் இருந்த பைல்களை எடுத்து பத்திரப்படுத்தி கொண்டிருந்த தேவன் நண்பனை சந்தேகமாக பார்த்தான். "மூணாங்கிளாஸ்ல உன் முட்டை பிரியாணியை நான் திருடி தின்னதுக்கு பழி வாங்கதான் நீ இப்படியெல்லாம் பண்றியா.?" என்றுக் கேட்டான்.

அதியன் முகம் சுளித்து அவனை பார்த்தான். "ச்சீ ச்சீ.. நான் அப்படியெல்லாம் இல்ல. விஷ்வாவை காணோம்டா.. பாவம் அவன்.." என்று மீண்டும் விஷ்வா புராணம் பாட தேவன் நாற்காலியை விட்டு எழுந்து நின்றான்.

"அந்த விஷ்வா காணாம போனதுக்கு பதிலா நானே காணாம போயிருக்கலாம்.." என்று முணுமுணுத்தவன் "எங்க இனியன் சார் உன் முட்டியை உடைக்காம அந்த பொண்ணை சமாதானம் பண்ணி இங்கிருந்து கூட்டி போக காரணமே உன் பிரெண்டும் அந்த பொண்ணோட அக்காவும் லவ்வர்ஸ்ங்கற காரணம்தான்.. இன்னைக்கு நீயும் அந்த பொண்ணும் சண்டை போட்டுக்கிட்டா நாளை வரும் நாளில் பொன்னா விஷ்வா காதல்ல ஏதும் பிரச்சனை வந்துடுமோன்னு யோசிக்கிறாரு அவர். அதனாலதான் உன்னை சும்மா விட்டுட்டு போயிருக்காரு அவர்.. இல்லன்னா வயசு பொண்ணை கடத்திட்டு வந்தியான்னு கேட்டு உன்னை காலத்துக்கும் ஜெயில்ல தள்ளி இருப்பாரு.. நீயும் அதையே கொஞ்சம் யோசி.. உன் பிரெண்ட் அவளோட அக்காவை லவ் பண்றான். இரண்டு பேரும் வேறு ஏதாவது காரணத்துக்காக கூட எங்கேயாவது டூர் மாதிரி போயிருக்கலாம். இல்ல ஓடிப்போய் கல்யாணம் கூட பண்ணி இருக்கலாம். நீ நடுவுல புகுந்து தேவையில்லாத பிரச்சினைகளை பண்ணிட்டு இருக்காத.." என்றான்.

அதியனுக்கு தேவன் சொன்னதில் உடன்பாடு இல்லை. மூன்று நாட்களாக விஷ்வா தனக்கு ஃபோன் செய்யாமல் தன் வீட்டுக்கு கூட தகவலை சொல்லாமல் இருக்க வேண்டிய அவசியம் என்னவென்று யோசித்தான்.

"இல்ல தேவா.. எனக்கு ஏதோ சரியா படல.. அவன் அம்மாவுக்கு கூட மூணு நாள் ஃபோன் பண்ணல.. நீ இப்ப வா. அந்த பொண்ணை பாலோவ் பண்ணலாம்.. ப்ளீஸ்.." என்றான்.
தேவனுக்கு நெற்றியில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

"நீ ஏன்டா நான் சொல்வதை புரிஞ்சிக்க மாட்டேங்கிற.? அந்த பொண்ணோட தாத்தா சமீபத்துலதான் செத்தாரு.. அதுக்கு காரியம் பண்ண வந்திருக்கா இவ. இவளை பாலோவ் பண்ணி நீ என்னத்தை கண்டுபிடிக்க போற.?" கோபமாக கேட்டான் தேவன்.

"அவ ஒருவேளை தன் அக்காவோடு ஃபோன்ல பேசிக்கிட்டே இங்கே பொய் கம்ப்ளைண்ட் தந்திருந்தா.? இல்ல அவ அக்கா காணாம போகாம அவங்க தாத்தா வீட்டுல இருந்தா.?" அதியன் தன் சந்தேகங்களை சொன்னான்.

"முடியலடா டேய்.. நீயெல்லாம் கதை எழுத போடாப்பா.. நல்லா வருவ.." என்றபடி தனது வண்டி சாவியை கையில் எடுத்தான் தேவன்.

"இன்னைக்கு ஒரு நைட் மட்டும் நண்பனாச்சேன்னு உன் பேச்சை நான் கேட்கப்போறேன்.. மகனே இதுல ஏதாவது வில்லங்கம் வந்து சேர்ந்ததுன்னு வச்சிக்க உன்னை கொண்டுப்போய் கடல்ல தள்ளிட்டு வந்துடுவேன். அப்புறம் இன்னொரு விசயம்.. இன்னைக்கு ஒரே ஒருநாள்தான்.. அப்புறம் நீ எப்பவுமே இந்த விசயமா என்னை தொல்லையே பண்ண கூடாது.. உன் பிரெண்ட் அவனா வீடு வந்து சேரும்வரை நீ என்னை தேடி வர கூடாது.." என்றான்.

அதியன் யோசித்து விட்டு "சரி.." என்றான்.

அதியனை அழைத்துக் கொண்டு சீனுவின் வீடு நோக்கி கிளம்பினான் தேவன்.

செங்கா சுற்றும் முற்றும் பார்த்தபடியே அந்த வீட்டுக்குள் நடந்தாள். அவளது தாத்தா போட்டாவாக சுவரில் இருந்தார்.

"இவருதான் அந்த தாத்தனா.? ஆனா இதென்னடா கொடும.? காரியம் பண்ண வேண்டிய தாத்தனோட போட்டா செவுத்துல இருக்கு.. நாளஞ்சி நாளைக்கு கீழயே வச்சிருந்தாதான் என்ன கொறையுதாம் இவுங்களுக்கு.?" என கேட்டபடி நடந்தவள் டைனிங் ஹால் வாயிலில் வந்து நின்றாள்.

நாற்காலிகளில் அமர்ந்தபடி நான்கைந்து பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கிச்சனிலிருந்து டைனிங் ஹாலுக்குள் வந்த ஒருவன் செங்காவை பார்த்து விட்டு "அண்ணி.." என்றான் ஆச்சரியமாக.

அடியாட்கள் சூழ உணவை சாப்பிட்டு கொண்டிருந்த சீனு நிமிர்ந்தான்.

"பொன்னா.." என்றபடி எழுந்து வந்தான். அவனுக்குள் ஏகப்பட்ட கோபம் இருந்தது. ஆனால் அவளே வீடு தேடி வந்ததில் சிறு மகிழ்வும் இருந்தது.

"பொன்னா.." என அழைத்தபடி வந்த சீனுவை யோசனையாக பார்த்தாள் செங்கா. அவளது கண்களில் குழப்பம் இருந்தது.

"இங்க சீனு மாமன் யாரு.?" என்றாள் மற்றவர்களை பார்த்து. அனைவரும் சீனுவை கை காட்டி விட்டனர்.

அவள் மாமன் என அழைத்தில் சந்தோசம் இருந்தாலும் அவள் அறியாதது போல் கேட்பது கண்டு குழம்பினான் சீனு.

செங்கா தன் முன் நின்றவனை மேலும் கீழும் பார்த்தாள். ஏதோ ஒரு பூதத்தை பார்ப்பதை போல விழிகளை உருட்டி உருட்டி பார்த்தாள்.

"அட நீதான் சீனு மாமனா.? நான் பொன்னா இல்ல செங்கா.. எங்க அப்பனும் அம்மாளும் உன்கிட்ட சொல்லல.. தாத்தனுக்கு தெவசம் பண்ண வந்தவங்க என்கிட்ட கூட சொல்லாம வந்துட்டாங்க மாமோவ்.. நானே தேடி கண்டுபுடிச்சி இம்புட்டு தூரம் வந்து சேர்ந்தேன்.. ஆமா அப்பனும் அம்மாளும் எங்க.? மவ வருவான்னு கூட காத்துட்டு இல்லாம அதுக்குள்ள தூங்கி போயிட்டாங்களா.?" என்று கேட்டாள்.

சீனுவிற்கு ஏமாற்றத்தில் முகம் கறுத்து விட்டது. செங்காவை ஆராய்ந்து பார்த்தான். பொன்னாவை போல உருவ ஒற்றுமை இருந்தாலும் இவளிடம் உள்ள வித்தியாசங்களை பார்த்த உடனே அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. பொன்னாவை போல மிரண்டு போய் பார்க்காமல் ஆச்சரியத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தவள் "தம்பி இங்க ஒரு தட்ட வச்சி சோத்தை கொட்டு.." என்றாள்.

சீனு அவளை பார்த்தபடியே வந்து தனது நாற்காலியில் அமர்ந்தான்.

"உங்க வீட்டுல மொத்தம் எத்தனை பேர்.?" என்றான் உணவை உண்டபடியே. தன்னை நம்பி சாதாரணமாக பேசும் ஒரு சிறு பெண்ணுக்குள் உடனடி பயத்தை தந்து விடக்கூடாது என எண்ணினான் அவன்.

"அப்பன் அம்மா அப்புறம் நானும் பொன்னாலும் இரட்டை பொறவி.. நாலு பேர்தான் வூட்டுல.. ஆமா இந்த வூட்டுல எத்தனை பேரு.? இவுங்க எல்லாம் எனக்கு என்ன மொறை ஆவுது.?" என்றாள் சுற்றி இருப்பவர்களை கையை காட்டி.

'பையன் இருக்கான்னு பொய் சொல்லி இருக்கிங்களா.? இப்ப உங்க இன்னொரு மகள் தானா வந்து என்கிட்ட சிக்கிக்கிட்டா.. இனிதான் இருக்கு உங்களுக்கு கச்சேரி..' என நினைத்தவன் "இந்த வீட்டில நான் மட்டும்தான் இருக்கேன்.. இவங்க எல்லோரும் வேலைக்காரங்க.." என்றான் அவளது முகத்தை ஆராய்ந்தபடியே.

'இனியன் மாமா சொன்ன மாதிரி ஆளு தனிக்கட்டைதான் போல..' என எண்ணியவள் தன் அருகில் வந்து நின்று உணவு பரிமாறியவனை சோம்பலாக பார்த்தாள்.

"நாலு நாலு பருக்கையா எடுத்து வச்சிட்டு இருக்கியே சோத்தை நான் இப்ப திங்கறதா இல்ல நாளைக்கு இன்னேரத்துக்கு திங்கறதா.? உன் கைக்கு என்ன வேதியா வந்துடுச்சி உங்கப்பன் வூட்டு சொத்து அழியற மாதிரி கிள்ளி கிள்ளி சோத்தை வைக்கற.. தள்ளி போ.. நானே சோத்தை போட்டுக்கறேன்.." என்று எரிச்சலோடு சொன்னாள். அவன் சிறு பயத்தோடு சாதம் இருந்த பாத்திரத்தை அங்கேயே வைத்து விட்டு நகர்ந்துக் கொண்டான். அடியாளாக வேலை பார்க்கும் அவனை இதுவரை பெண்கள் யாரும் இப்படி பேசியதே இல்லை. நேராக நின்று சாதாரணமாக பேசவே பெண்கள் பயப்படுவர். அப்படி இருக்கையில் இப்படி ஒருத்தி திட்டியது அவனுக்கு கோபத்தையும் அதே சமயம் ஆச்சரியத்தையும் தந்தது.

சோற்றையும் குழம்பையும் தட்டில் பரிமாறி கலந்து நான்கே வாயில் அள்ளி போட்டுக் கொண்டு நிமிர்ந்தாள். சீனு அவளை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

'பொண்ணா இவ.? பேய் மாதிரி சாப்பிடுறா.!' அவனது ஆச்சரியம் அறிந்தவளாக அருகில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்தபடி பேச ஆரம்பித்தாள்.

"காலங்காத்தால ஒரு வாய் கம்பஞ்சோறு தின்னது மாமா.. அதான் பசி.." என்றவள் எழுந்தாள்.

சீனுவுக்கு உணவு உண்ணும் எண்ணமே இல்லாமல் போய்விட்டது. அவனும் எழுந்துக் கொண்டான்.

செங்கா அங்கிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக பார்த்தபடியே நடந்தாள்.

"ஏன் மாமோவ் நெசமாவே உனுக்கும் பொன்னாளுக்கும் பேசி முடிச்சிருக்கா.?" என்று கேட்டாள். அவள் திருமண பேச்சை பற்றி கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் "ஆமா.." என்றான். காலையில் சாமிநாதன் பேசியது இவளோடுதான் என்பது இப்போது புரிந்தது.

சீனுவை திரும்பி பார்த்து உதட்டை சுழித்தாள் செங்கா.

"சீனு மாமன்னு எங்கப்பன் சொன்னப்ப நீ கூட ஏதோ வயுசு பையனா இருப்ப. பொன்னாளும் நீயும் ரோட்டல நடந்து போனா ஊரு கண்ணே உங்க மேலதான் இருக்கும்ன்னு நெனைச்சேன்.. ஆனா நீ என்னாடான்னா அரை கெழவனா முக்கா சொட்டையா இருக்க.. அது பரவாலன்னு பார்த்தாலும் ஊரு பூரா கூத்தியாள வச்சிட்டு இருக்கன்னு எல்லாரும் பேசிக்கறாங்க. எங்க அப்பன் இத்தனை தெரிஞ்ச பெறவும் எப்புடி வாக்கு தந்துச்சின்னு தெரில.. ஆனா பாரு.. எங்கூட்டுல முக்காவாசி நாட்டாமை நான்தான்.. எங்க அக்காளுக்கும் உனுக்கும் கொஞ்சமும் பொருந்தி போவாது.. அவுளுக்கு விஷ்வான்னு ஒருத்தன நானே பேசி முடிச்சிட்டேன். அதுனால நீ வேற பொண்ண பார்த்துக்க. மூஞ்சிக்கு நேரா இப்படி சொல்லிட்டனேன்னு கோச்சிக்காத. நாளபின்ன உங்குளுக்குள்ள சண்டை ஏதும் வந்து என் பொறந்தவ கண்ணை கசக்கிட்டு வந்து நின்னா நல்லாருக்காது இல்ல. அதான் இப்பவே சொல்லிட்டேன்.." என்றாள்.

சீனு கோபத்தில் கை விரல்களை இறுக்கினான். ஒரு சின்ன பெண் தன்னை பற்றி இப்படி பேசியது அவனுக்குள் இருந்த ஆத்திரத்தை பல மடங்காக தூண்டி விட்டு விட்டது. சுவற்றில் இருந்த ஓவியம் ஒன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் தலைமுடியை பிடித்து இழுத்தபடி எங்கோ நடந்தான்.

"ஏய்.. மரியாதையா என்னை வுடுடா.." என்றவள் அவனை தாக்கும் முன் அருகில் இருந்த ஒரு கதவை உதைத்து உள்ளே சென்று செங்காவை தரையில் தள்ளினான். பின்னர் கதவை உள்பக்கம் தாளிட்டு விட்டு முன்னால் நடந்தான்.

"டேய் பரதேசி நாயே. என்னை ஏன்டா இப்புடி கொண்டாந்து தள்ளுன.?" ஆத்திரத்தோடு எழுந்து நின்றாள் செங்கா.

"செங்கா.." சாமிநாதனின் குரலை கேட்டு திரும்பினாள். அந்த அறையின் நடுவே இருந்த இரு நாற்காலிகளில் சாமிநாதனும் கலையரசியும் கட்டிப்போட்டு வைத்திருப்பதை கண்டவளுக்கு முதல் முறையாக முழு சந்தேகம் பிறந்தது. நொடியில் அனைத்தையும் புரிந்துக் கொண்டாள்.

"யப்பா.. யம்மா.." என்று அவர்களை நோக்கி ஓடினாள்.

அவளுக்கு முன்னால் நடந்து சாமிநாதனின் அருகே சென்றிருந்த சீனு அருகிருந்த கட்டை ஒன்றை எடுத்து சாமிநாதனின் மேல் ஓங்கி அடித்தான். சாமிநாதன் "அம்மா.." என கத்தியபடி நாற்காலியோடு தரையில் சாய்ந்தான்.

"யப்போவ்.." அதிர்ச்சியில் கத்தினாள் செங்கா. ஒரே நொடியில் கண்ணீர் கன்னம் தாண்டி விட்டது அவளுக்கு. கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.

"என்கிட்டயே நாடகம் நடிக்கிறியா நீ.?" என கேட்ட சீனு ஒரே அடியில் அவனை கொன்று விடும் நோக்கில் மீண்டும் கட்டையை ஓங்கி முழு வேகத்தில் சாமிநாதனின் மேல் அடித்தான். செங்கா ஓடி சென்று "யப்பா.." என்றபடி சாமிநாதனின் மேல் விழுந்தாள். அதனால் சீனு அடித்த அடி செங்காவின் முதுகின் மீது படீரென விழுந்தது. (இக்கதையின் அன்பான வாசகர் ஒருவரின் வேண்டுக்கோளுக்கு இணங்கி சாமிநாதனை நான் கொல்லவில்லை என்பதை இங்கு அறிவித்து கொள்கிறேன்.🙂)

"யப்பா.." உயிர் போகும் வலியில் அலறினாள் செங்கா. அதே நேரத்தில் அங்கே "ஓ காட்.." என்றொரு குரலும் கேட்டது.

இங்கே செங்கா வலியில் அலறிய அதே நேரத்தில் "அம்மா.." என்று கத்தியபடி வியர்த்து போய் எழுந்து அமர்ந்தாள் பொன்னா. சுற்றியிருக்கும் இருளையும் உத்திரத்தில் தொங்கி கொண்டிருந்த சிறு விளக்கையும் பார்த்தாள். சற்று தொலைவில் மயங்கி கிடந்த விஷ்வாவையும் பார்த்தாள். அதன் பிறகே தன்னை பார்த்தாள். உடம்பெங்கும் இருந்த காயங்கள் தந்த வலியை உணர்ந்தவள் "அப்பா.." என முனகினாள். அவளது முதல் கத்தலுக்கே எழுந்து விட்ட அவ்விடத்து மனிதர்கள் அந்த குடிலை நோக்கி நடந்தனர். யாரோ ஒரு பெரியவர் தன்னை நோக்கி வருவதை பார்த்தபடியே மீண்டும் மயங்கினாள் பொன்னா.

சீனுவின் அடி செங்காவின் முதுகில் பலமாக விழுந்து விட்டது. சீனு குறுக்கே விழுந்து அடி வாங்கியவளை ஆத்திரத்தோடு பார்த்தான்.

"உங்க அக்காவை கட்ட எனக்கு பொருத்தம் இல்லையா.? சாவுடி நீயும் சேர்ந்து.." என்றவன் கட்டையை மீண்டும் ஓங்கினான். வலியோடு கவிழ்ந்து படுத்திருந்த செங்கா நொடியில் திரும்பி சீனுவின் ஓங்கிய கரம் கீழே இறங்கும் முன் அவனது அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதையை தந்தாள். அவனுக்கும் அடி சற்று பலமாக பட்டு விட்டதில் கட்டையை கை நழுவ விட்டு தள்ளாடி ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

வலியில் உயிர் போகும் முதுகை ஒரு கையால் பிடித்தபடி பற்களை இறுக்க கடித்தபடி கால் நடுங்க எழுந்து நின்றாள் செங்கா. இருட்டி கொண்டு வரும் கண்களின் மேல் கையை வைத்து கசக்கினாள்.

"எங்க அப்பனையே அடிக்கிறியாடா நாயே நீ.?" என கேட்டவள் கால் அடியில் கிடந்த கட்டையை கையில் எடுத்தாள். கண்ணீர் கரை புரளும் கண்களோடு தந்தையை திரும்பி பார்த்தாள். சாமிநாதன் இன்னமும் வலியில் துடித்துக் கொண்டிருந்தான்.

அடி வயிற்றில் வாங்கிய உதையின் வலியை பொறுத்தபடி நிமிர்ந்த சீனு செங்காவை ஆத்திரத்தோடு பார்த்தபடி அவளை நோக்கி பாய்ந்தான். செங்கா ஒரு கையால் முதுகை பிடித்தபடியே மறுகையில் இருந்த கட்டையை சீனுவின் இடுப்புக்கு நேரே ஓங்கி அடித்தாள். அவனது "அம்மா.."வென்ற கத்தல் சத்தம் அந்த வீடு முழுக்க கேட்டது. சுற்றி ஒலித்த எந்த குரலும் செங்காவின் செவியில் விழவேயில்லை. தன் கையில் இருந்த கட்டையால் சீனுவுக்கு சடீர் சடீரென அடிகளை மட்டும் தந்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு செங்காவின் கையில் இருந்த கட்டை நான்கைந்தாக சிதறியது. சீனு ரத்த காயங்களோடு தரையில் வீழ்ந்தான். அதே நேரத்தில் செங்காவும் மயங்கி சரிந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1438
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN