நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சீனுவின் வீட்டின் முன்னால் தனது காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் அதியன். தேவன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அதியன் அருகே வந்தான்.

அதியன் காவல் இல்லாத அந்த வீட்டின் காம்பவுண்ட் கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

"டேய் கொஞ்சம் மெதுவா போடா.. மாட்டிக்கிட்டா வம்பா போயிடும்.." என்று எச்சரித்தான் தேவன்.

"இந்த பிராடை இன்னைக்கு கையும் களவுமா பிடிச்சி காட்டுறேன் இரு.." என்றவன் திறந்திருந்த வீட்டின் உள்ளே அங்கும் இங்குமாக நோட்டம் விட்டுவிட்டு உள்ளே நடந்தான்.
சில அடிகள் நடந்தவன் திடீரென தேவனை தன்னோடு இழுத்துக் கொண்டு ஒரு சுவற்றின் பின்னால் சென்று மறைந்து நின்றான்.

செங்கா சீனுவோடு பேசிக் கொண்டிருப்பதை இருவரும் பார்த்தனர்.

"எங்க அக்காளுக்கு நான் விஷ்வான்னு ஒருத்தனை பேசி முடிச்சிட்டேன்.." என்று செங்கா சொல்ல அதியன் தேவன் பக்கம் திரும்பினான்.

"நான் சொன்னேன் இல்ல.? இவளுக்கு விஷ்வா இருக்கற இடம் தெரிஞ்சிருக்கு.. அதான் இப்படி சொல்றா." என்றான் கிசுகிசுப்பாக.

"அவ சீனுவுக்கும் அவளோட அக்காவுக்கும் கல்யாணம் நடக்க கூடாதுன்னு இப்படி சொல்றாடா.. ஏன்டா இந்த சின்ன விசயத்தை கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு இருக்க.? இல்ல எல்லாம் புரிஞ்சிருந்தாலும் கூட இவ மேல சும்மா பழி போடணும்ன்னே இப்படி சொல்லிட்டு இருக்கியா.? தனக்கு நேர் எதிரான கதாபாத்திரங்களை பார்க்கும்போது சிலருக்கு ஈர்ப்பு வருமே அந்த மாதிரி ஏதும் வந்துடுச்சா.?" என்றான் சந்தேகமாக.
அதியன் உடனடியாக இல்லையென தலையசைத்தான். "இல்ல இல்ல.. இவ மேல எனக்கெதுக்கு ஈர்ப்பு வர போகுது.?" என்றவன் சீனு செங்காவை பிடித்து இழுத்து செல்வதை கண்டு தன்னை மறந்து அவர்கள் பின்னால் ஓடினான்.

அவன் பின்னால் ஓடி வருவதை பார்க்காமலேயே சீனு செங்காவை பிடித்து கொண்டுப்போய் ஒரு அறையில் தள்ளி கதவை உள்பக்கம் பூட்டி கொண்டான்.
அதியனின் பின்னால் ஓடி வந்த தேவன் "என்னடா நடக்குது இங்கே.?" என்றான் அதிர்ச்சியாக.

"தெரியலடா.. அந்த ஆளை பார்க்க வில்லங்கம் பிடிச்சவன் போல தெரியறான்.. அவனால அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துட போகுது.. சின்ன பொண்ணுடா அவ வேற.. சீக்கிரம் ஏதாவது பண்ணுடா.."தன் கண் முன் பெண்ணொருத்தி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுவதை கண் கொண்டு பார்க்க முடியாமல் நண்பனை அவசரப்படுத்தினான் அதியன்.

தேவன் அந்த அறையின் கதவை தட்டினான். ஆனால் அதே வேளையில் சாமிநாதனின் அலறல் சத்தம் கேட்டது.

"இது யாரு.?" என கேட்டு நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
சாமிநாதனின் சத்தம் வந்த அதே நேரத்தில் செங்காவும் கத்தினாள்.

இருவரின் அலறல் சத்தத்தில் அடியாட்கள் ஓடி வந்தனர். தேவனின் உடையை கண்டதும் அவர்கள் சற்று தூரத்திலேயே தயங்கி நின்றனர்.

"போலிஸ்டா.. சீனு இரண்டு பேரை கடத்தி வச்சிருக்கறது இவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி போல.. இந்த போலிஸ் நம்மளை பார்க்கும் முன்னாடியே வாங்கடா நாம எல்லோரும் இங்கிருந்து எஸ்கேப் ஆயிடலாம்.." என்ற ஒருவன் சத்தமிடாமல் அங்கிருந்து நழுவினான். அவனை தொடர்ந்து மற்றவர்களும் அங்கிருந்து கிளம்பினர்.

அதியன் அந்த அறையின் கதவை ஒட்டியிருந்த கண்ணாடி ஜன்னலை சிரமப்பட்டு உடைத்து திறந்தான். அங்கு கட்டிப்போட்டு வைத்திருந்த கலையரசியைதான் முதலில் பார்த்தான் அவன்.

"அவரை விட்டுடு சீனு.." என கலையரசி கண்ணீரோடு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அதியனின் முதுகின் பின் நின்று தேவன் எட்டிப்பார்த்த அதே வேளையில் சீனு சாமிநாதனை மீண்டும் அடிக்க முயன்றான். ஆனால் செங்கா குறுக்கே வந்து விழுந்து அந்த அடியை வாங்கிக் கொண்டாள்.

"யப்பா.." வலி தாங்காமல் அவள் அலறினாள்.

"ஓ மை காட்.." அதியன் செங்காவை அதிர்ச்சியோடு பார்த்தான். அவளது அந்த ஒருநொடி முடிவை ஆண்டுகள் ஆனாலும் தன்னால் எடுக்க முடியாது என்பதை அறிவான் அவன். அவளுடையது பாசமா தியாகமா என்று அறியாவிட்டாலும் கூட அவளது அந்த நொடி நேர தைரியம் அதியனை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

"ஏதாவது பண்ணுடா.." தேவனை அவசரப்படுத்தியபடியே அந்த கதவை உடைக்க முயன்றான் அதியன். அதே நேரத்தில் செங்கா சீனுவிற்கு ஒரு உதையை தந்து விட்டு எழுந்து நின்றாள்.

தனது துப்பாக்கியை எடுக்க முயன்ற தேவன் செங்கா சீனுவிற்கு தந்த முதல் அடியை கண்டு துப்பாக்கியை மறந்து ஆச்சரியத்தில் வாய் திறந்து பார்த்தபடி நின்றான்.

செங்கா வலியில் துடித்தபடியே சீனுவிற்கு அடிகளை தர ஆரம்பித்தாள்.

அதியன் ஜன்னல் வழியே அவளை அவ்வப்போது பார்த்தபடியே அந்த கதவை ஓங்கி உதைத்து திறக்க முயன்றான். தேவனும் நண்பனுக்கு உதவியாய் அந்த கதவை இடித்தான்.
இருவரும் அந்த கதவை உடைத்து திறந்த நேரத்தில் சீனு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தான். செங்காவும் சில்லு சில்லாக சிதறிய கட்டையை கை நழுவ விட்டு மயங்கி விழுந்தாள். விழுந்தவளை ஓடிப்போய் தாங்கினான் அதியன்.

"சீக்கிரம் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ணுடா.." என்றவன் செங்காவின் கன்னத்தை தட்டினான். அவள் கண்களை திறக்கவேயில்லை.

தேவன் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தபடியே ஓடிச்சென்று சாமிநாதனை நேராய் நிறுத்தி அவனது கட்டுக்களை அவிழ்த்து விட்டான். போனில் தகவலை சொல்லியபடியே கலையரசியின் கட்டுக்களையும் அவிழ்த்து விட்டான்.

சாமிநாதனின் வலது கையில் பலத்த அடிப்பட்டு விட்டது. அந்த கையை அசைக்க கூட முடியவில்லை அவனால்.

"செங்கா.. செங்கா.." வேதனையோடு அழைத்தபடி அவளருகே வந்து அவளை அழைத்தான். கலையரசிக்கு அழுகையாக வந்தது.

ஆம்புலன்ஸ் வந்த அதே நேரத்தில் இனியனும் அங்கு வந்தான். அடிப்பட்டு கிடந்த மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டான்.

"நல்ல நேரத்தில பார்த்து இவங்களுக்கு உதவி பண்ணியிருக்கிங்க.. தேங்க்ஸ்.." என்று அதியனிடம் சொன்னான். அதியனுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.
"நீங்க செங்கா மேல சந்தேகப்பட்டுதான் இங்கே வந்திங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுங்க.. ஆனா அவ அப்பாவி.. அவளுக்கு பொன்னாவோட காதல் கூட நீங்க சொல்லும் முன்னாடி தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.. கட்டுச்சோறு கட்டிக்கிட்டு கரட்டுல திரியற பொண்ணுப்பா அவ.. இனிமேலாவது அவ மேல சந்தேகப்படாதிங்க.." என்றவன் தனது வேலைகளை கவனிக்க சென்றான்.

தேவனோடு சேர்ந்து தானும் மருத்துவமனைக்கு சென்றான் அதியன்.

"உன் காலை எக்ஸ்ரே எடுத்து பார்த்துடு அதியா.." என்று நண்பனிடம் சொன்னான் தேவன்.

"ஏன்டா.?"

"அந்த பொண்ணு அடிச்சான்னு நீ சொன்னபோது கூட எனக்கு அவ்வளவா புரியல.. ஆனா இப்பதான் அவ அடி என்னன்னு புரிஞ்சது. இவ அடிச்சதால எதிர்காலத்துல உன் காலுக்கு ஏதும் ஆகிட கூடாது இல்ல.. அதான் முன்னெச்சரிக்கையா ஒரு எக்ஸ்ரேவோ ஸ்கேனோ எடுத்து பார்த்துடு.." என்றான்.

அதியன் தன் காலை நினைத்து பார்த்தான். ஆவாரம் கொத்தில் அவள் விட்ட அடியையும் நினைத்து பார்த்தான். ஆனால் நண்பனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.

சாமிநாதன் ஒரு கையில் கட்டுப்போட்டு படுத்திருந்தான்.

"செங்கா எங்கே.?" கலையரசியிடம் விசாரித்தான் தேவன்.

"முதுகுல அடி பலமா விழுந்திருக்குன்னு அவளை ஆப்ரேஷன் தியேட்டர் கொண்டு போயிருக்காங்க.." என்றவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

"அவளுக்கு ஒன்னும் ஆகாது.. அழாதிங்க.." ஆறுதல் சொல்வதாக நினைத்து சொன்னான் அதியன்.

"நீங்களும் போலிஸா தம்பி.?" தேவனோடு வந்ததால் அவனும் காவல்துறையை சேர்ந்தவனோ என நினைத்து கேட்டாள் கலையரசி.

"இல்லைங்க.. நான் அதியன்.. விஷ்வாவோட பிரெண்ட்.." என்றவன் அவள் புரியாமல் பார்ப்பதை கண்டு "விஷ்வா பொன்னாவோட லவ்வர்.." என்றான்.

தேவன் அதியனின் கையை கிள்ளினான். "முந்திரிக்கொட்டை.." என்று நண்பனை திட்டினான் அவன்.

கலையரசி அதியனை கோபத்தோடு பார்த்தாள். "ஓ இப்பதான் விசயமே புரியுது. பிரெண்ட் போன் பண்ணி இருக்கா. பேசிட்டு வரேன்னு வெளியே போனவ அதோடு காணாம போயிட்டா.. உன் பிரெண்ட் காதலிச்சா அதை நேரா எங்ககிட்ட சொல்லாம என் பொண்ணை இழுத்துட்டு போனா அது என்ன நியாயம் தம்பி.? உன் பிரெண்ட் பண்ண காரியத்தாலதான் இந்த சீனு எருமை எங்களை இங்க கொண்டு வந்து கட்டிப்போட்டு வச்சிருந்தான். அதனால்தான் இன்னைக்கு என் வீட்டுக்காரரும் என் பொண்ணும் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்க. எங்க அவங்க.?" கோபமாக கேட்டாள் அவள்.
அதியன் உடனடியாக தலையசைத்து மறுத்தான். "என் பிரெண்டையும் மூணு நாளா காணோம்ங்க.. நான் அவனை தேடி அலைஞ்சுதான் கடைசியா உங்க பொண்ணை மீட் பண்ணேன்.." என்றான் அவசரமாக.

"அவ மறுபடி வீட்டுக்கு வரட்டும்.. காலு இரண்டையும் நாலா உடைச்சி அடுப்புல வைக்கிறேன்.." என்று திட்டியவள் கன்னத்தில் கை வைத்தபடி சோகமாய் நாற்காலியில் அமர்ந்தாள்.

அதியனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் அவனும் அவளருகிலேயே அமைதியாய் அமர்ந்தான். பொன்னாவை விஷ்வாதான் இழுத்து போய் உள்ளானோ என்று இப்போது இவனுக்கும் சந்தேகம் பிறந்தது. ஏன் இப்படி அவசரப்பட்டான் என்று விஷ்வாவை மனதுக்குள் திட்டி தீர்த்தான்.

மறுநாள் காலை விடிந்தது. அதியன் சென்று கேண்டினில் டீ வாங்கி வந்து கலையரசியிடம் தந்தான். கலையரசி அதை வாங்காமல் அவனை கோபத்தோடு முறைத்தாள்.

"விஷ்வா யாருக்கும் சொல்லாம காதலியை இழுத்துட்டு போற ஆள் கிடையாதுங்க.. அவன் ரொம்ப நல்லவன். அதனால விசயம் என்னன்னு தெரியும் முன்னாடி அவன் மேலயோ என் மேலயோ கோபப்படாதிங்க.." என்றான்.

கலையரசி டீ வீணாக போய் விடக்கூடாதே என்று எண்ணியவளை போல கடைசியாக அந்த டீயை வாங்கி கொண்டாள்.

காவல் நிலையத்துக்கு வரச்சொல்லி அதிகாலை நேரத்திலேயே லாரன்ஸ்க்கு ஃபோன் ஒன்று வந்தது. அவர் மனைவியை பார்த்து விடலாம் என்று ஆவலோடு ஓடி வந்தார்.

அங்கே அவரை போலவே இன்னொருவரும் அங்கு வந்து அமர்ந்திருந்தார்.

"உங்க மனைவி இவரோட காரை எடுத்துட்டு போயிருப்பது இப்பதான் தெரிய வந்திருக்கு.. உங்க மனைவி உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவங்கதானா.?" என்று சந்தேகமாக கேட்டார் அந்த போலிஸ் அதிகாரி.

"என் மனைவி காரை ஓட்டி போயிருக்க சான்ஸே இல்ல சார்.." என்று மறுத்த லாரன்ஸிடம் தன் போனில் இருந்த வீடியோவை காட்டினார் அந்த போலிஸ்.

"ஒரு பெட்ரோல் பங்குல உங்க மனைவி இவரோட காருக்கு பெட்ரோல் நிரப்பியது பதிவான வீடியோ இது.. இவரோட காரை செடிமலைங்கற ஒரு குக்கிராமம் பக்கத்துல கண்டுபிடிச்சிருக்கோம்.. ஆனா உங்க மனைவியை கண்டுபிடிக்க முடியல.. அவங்களை மும்முரமா எங்க போலிசார் தேடிட்டு இருக்காங்க.." என்றார் அவர்.

'செடிமலை..? எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கே..' என்று யோசித்தார் அவர். நேற்று அவர் ரக்சனாவை பார்க்கும் ஆவலோடு விஷ்வா வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சென்றிருந்த நேரத்தில்தான் காயத்ரி விஷ்வாவின் நண்பன் ஒருவனோடு போனில் பேசிக் கொண்டிருந்ததை இவர் கேட்டார். காயத்ரியின் உரையாடலில்தான் தான் செடிமலை என்ற பெயரை கேட்டிருந்தது அவருக்கு இப்போது நினைவுக்கு வந்தது.

"வேற ஏதாவது தகவல் கிடைச்சா உடனே எனக்கு சொல்லுங்க சார்.." என்று கேட்டுக் கொண்டபடி எழுந்து நின்றார் லாரன்ஸ்.

"உங்க கார் மிஸ்ஸானதுக்கு என் மனைவி சார்ப்பா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார்.. அவ மனநலம் பாதிக்கப்பட்டவள்.. உங்களுக்கு புது கார் கூட நான் வாங்கி தரேன் சார். ஆனா மனநலம் பாதிக்கப்பட்ட என் மனைவியை திட்டிடாதிங்க.. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா என்னை கூப்பிடுங்க.." என்றவர் தன் விசிட்டிங் கார்டை அவரிடம் தந்துவிட்டு வெளியே நடந்தார்.

காயத்ரிக்கு ஃபோன் செய்தார். "ஹலோ காயத்ரி.. உங்களுக்கு செடிமலை கிராமம் பத்தி எப்படி தெரியும்.?" என கேட்டார்.

காயத்ரி சிறிது குழம்பினாள். பின்னர் தயக்கத்தோடு பேச ஆரம்பித்தாள். "என் பையனை நாலு நாளா காணோம் அண்ணா.. அவனோட லவ்வரை பார்க்க போறதா சொல்லிட்டு போனான். அந்த பொண்ணோட ஊர்தான் செடிமலை. அந்த ஊருக்கு போனவன் மூணு நாளைக்கு மேல ஆச்சி இன்னும் வீடு வந்து சேரல.. அந்த பொண்ணை திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டானோ என்னவோங்கற சந்தேகத்தால என்னாலயும் போலிஸ் கம்ப்ளைண்ட் தர முடியல.." என்று சொன்னாள்.

"சரிங்கம்மா.. நான் அப்புறமா ஃபோன் பண்றேன்.." என்று போன் அழைப்பை துண்டித்துக் கொண்ட லாரன்ஸ்க்கு குழப்பம் மட்டுமே அதிகமாகி கொண்டிருந்தது.

"இவ ஏன் செடிமலை கிராமம் வரைக்கும் போகணும்.? இவ காணாம போனதும் விஷ்வா காணாம போனதும் ஒரே டைம்லன்னு இப்ப தெரியுது. ஆனா அப்படி எங்க காணாம போனாங்க இரண்டு பேரும்.?" என குழம்பினார் அவர்.

காயத்ரி லாரன்ஸிடம் பேசி விட்டு போனை வைத்த உடனே அதியன் அழைத்தான்.

"அம்மா.. நீங்க நான் சொல்ற ஹாஸ்பிடல் வரிங்களா.?" என்றான்.

"விஷ்வாவுக்கு என்னடா ஆச்சி.?" என பதறியவளிடம் "அவனுக்கு எதுவும் ஆகல. நான் இன்னும் அவனை பார்க்கவே இல்லம்மா.." என்றான். அதன்பிறகே காயத்ரிக்கு சற்று பதட்டம் குறைந்தது.

"பொன்னா.. புவியோட அப்பாவும் தங்கையும் இங்கே ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.." என்றவன் தனக்கு தெரிந்த விவரங்களை அவளிடம் சொன்னான்.

"உடனே கிளம்பி வரேன்ப்பா.." என்று ஃபோனை வைத்த காயத்ரி அடுத்த அரை மணி நேரத்தில் கலையரசியின் முன்னால் வந்து நின்றாள்.

கலையரசியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் "தப்பு பையன் மேலதான்னு நினைக்கிறேன்.. ஆனா நீங்க ஏதும் கோபப்படாதிங்க.. அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சி கூட்டி வந்ததும் எதுவா இருந்தாலும் சுமூகமா பேசி தீர்த்துக்கலாம்.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1280
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN