செங்கா 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காயத்ரி சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த கலையரசி "எதுவா இருந்தாலும் அவங்க இரண்டு பேரும் வீடு வந்து சேர்ந்த பிறகு பேசிக்கலாம்ங்க.. என் பொண்ணு மேல நான் ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன். அவ இப்படி ஒரு காரியம் பண்ணதை என்னால ஏத்துக்கவே முடியல.." என்றாள். காயத்ரியும் அதன் பிறகு என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக அவளருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

ஐ.சி.யூ வில் மயங்கி இருந்த செங்காவை கதவின் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் அதியன். அவளை எதற்காக இப்படி பார்க்கிறோம் என்பதை கூட அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவளை இப்படி பார்த்துக் கொண்டே இருப்பது அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அவனின் தோளை தட்டினான் தேவன். திரும்பி பார்த்து "என்னடா.?" என கேட்டான் அதியன்.

"கொஞ்சம் அந்த பக்கம் வரியா.? உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.." என்று அதியனை தன்னோடு ஒரு ஓரமாக இழுத்து சென்றான் தேவன்.

"என்னடா.?"

தேவன் தன் முகத்தை துடைத்துக் கொண்டான். அதியனிடம் விசயத்தை சொல்ல தயங்கினான்.

"விஷ்வாவோட காரை கண்டுபிடிச்சிருக்காங்கடா.." என்றான் வருத்தமான குரலில்.
"எங்கடா இருக்கான் அவன்.?" அவசரமாக கேட்டான் அதியன்.

"அதியா சாரி.. ஆனா அவன் காரை செடிமலை கிராமத்து பக்கத்துல இருக்கற ஒரு மலையை சுத்தி பார்க்க போன ஒரு ஸ்டூடன்ட் குரூப்தான் கண்டு பிடிச்சிருக்காங்க.. கார் ஆக்ஸிடென்ட் ஆகி பள்ளத்தாக்கு ஒன்னுல உருண்டு இருக்கு.." அதியனுக்கு முகத்தில் இருந்த ஜீவன் செத்து விட்டது.

"என்னடா சொல்ற.?" என்றவனுக்கு இதயம் படபடவென துடித்துக் கொண்டது. தனது நண்பனுக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவே இல்லை.

"தெரியலடா.. இன்னும் பாடி எதையும் கண்டுபிடிக்கல.. அந்த கார்ல பாடியும் இல்ல. வெறும் கார் மட்டும்தான் இருக்கு. கார் முழுக்க ரத்தம் இருக்கு.. ஆனா பாடியை காணோம்.. எதாவது விலங்குகள் ஏதாவது இழுத்துட்டு போயிடுச்சான்னு தேடிட்டு இருக்காங்க.." அதியன் அவன் சொன்னதை கேட்டு முகத்தை மூடியபடி அங்கேயே மண்டியிட்டு விட்டான்.

"என்னடா இது.? இப்படி பண்ற நீயும்.? நீயே இப்படி இருந்தா அப்புறம் உன் பிரெண்டோட குடும்பத்துக்கு நீ எப்படி தகவல் சொல்வ.?" என கோபமாக கேட்டான் தேவன்.

"அவன் காரை எப்பவுமே வேகமா கூட ஓட்ட மாட்டான்டா. அவனுக்கு ஏன்டா இப்படி ஆச்சி.?" கண்ணீரோடு கேட்டவனை தன்னோடு அணைத்துக் கொண்டான் தேவன்.
"எல்லாம் விதிதான்டா.. அந்த கார்ல மூணு பேர் பயணம் பண்ணதுக்கான தடயம் கிடைச்சிருக்கான்டா. அதுல அந்த பொன்னாவும் இருக்க சான்ஸ் இருக்கு. ஏனா ரத்த கறையோடு துப்பட்டா ஒன்னு பின் சீட்டுல கிடைச்சிருக்கு.."

அதியனுக்கு ஆறுதல் சொல்லும் வழி என்னவென்று தேவனுக்கு தெரியவில்லை. கால் மணி நேரம் கடந்தபிறகு "இதை அந்த பொண்ணோட பேரண்ட்ஸ்க்கும் விஷ்வாவோட அம்மாக்கிட்டயும் சொல்லிடுடா.. இது அவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும்.‌." என்றான் தேவன்.

அதியன் தன் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான். இதை எப்படி இரு வீட்டாரும் தாங்கி கொள்வார்களோ என நினைத்து கவலை கொண்டான்.

அதிகாலை பொழுது விடிந்த நேரத்தில் மீண்டும் கண் விழித்தாள் பொன்னா. தன்னையும் தன்னை சுற்றியும் பார்த்தாள். தான் எங்கு இருக்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்களுக்கும் மேலே பிடித்தது. தனக்கு அருகே இருந்த கட்டில் ஒன்றில் விஷ்வா பச்சிலை கட்டுக்களோடு படித்திருப்பது கண்டு சிரமத்தோடு எழுந்து அமர்ந்தாள்.

"வி.." வார்த்தைகள் வெளி வர மறுத்தது. குரல் மறுத்து போனது போல இருந்தது.

"இந்த சுடுதண்ணியை கொஞ்சம் குடிம்மா.." என்று பெரியவர் ஒருவர் தண்ணீர் பாத்திரத்தை அவளிடம் நீட்டினார். அவரை தயக்கத்தோடு பார்த்தபடி அவர் தந்த தண்ணீரை வாங்கி குடித்தாள். அதன் பிறகே தொண்டையில் இருந்த வறட்சி சிறிது மட்டுப்பட்டது போல இருந்தது.

"எங்களுக்கு என்ன ஆச்சி.?" பயத்தோடு கேட்டாள்.

"இங்கே இருந்து இரண்டு மைல் தூரத்துல இருக்கற ஒரு பள்ளத்தாக்குல நீங்க வந்த வாகனம் கவுந்துடுச்சி. அதுலதான் நீங்க மூணு பேரும் அடிப்பட்டு இருந்திங்க. எங்க ஆளுங்க உங்களை பார்த்துட்டு இங்கே தூக்கி வந்தாங்க. நான்தான் உங்களுக்கு மருத்துவம் பார்த்துட்டு இருக்கேன்.." என்றார் அவர்.

பொன்னா விஷ்வாவின் அடிப்பட்ட உடலை கண்டு வருத்தமடைந்தாள். கண்ணீர் கண்களில் கோர்வை கட்டியது. அவள் எழுந்ததை கண்டு அந்த இடத்தை சேர்ந்த நான்கைந்து பேர் அங்கு வந்து ஒரு ஓரமாக நின்று அவளை பார்த்தனர்.

பொன்னா தன் காதலனை கண்டு "வி.. விஷ்வா.." என்றாள் கவலையோடு.

"அந்த பையனுக்கு மயக்கம் தெளிய இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்மா.. எப்படியும் இன்னைக்கு சாயங்காலம் கண்ணை திறந்துடுவான்னு நம்புறேன். ஆனா அந்த அம்மா கண்ணை திறக்க எத்தனை நாள் ஆகும்ன்னுதான் எனக்கே தெரியல.." என்றார்.
அந்த அம்மா யாரென்று பொன்னாவுக்கும் தெரியவில்லை. அந்த அம்மாவை பற்றி யோசிக்கவும் அவளுக்கு தோணவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தவள் "நாங்க இங்கே வந்து எவ்வளவு நேரம் ஆச்சி.?" என்றாள். ஏனெனில் விஷ்வாவின் ஆறிய காயங்களை பார்க்கும்போது நேற்றிரவு வந்தது போல தோன்றவில்லை அவளுக்கு.

"மூணு நாள் ஆச்சிம்மா.." அவர் சொன்னவுடன் அவளுக்கு முதலில் வந்தது சீனுவின் நினைவுதான். அடியாட்களை காவலுக்கு விட்டு சென்றவன் தான் அங்கு இல்லை என தெரிந்ததும் என்ன செய்தானோ என்று பயந்தவளுக்கு அந்த பயத்தின் காரணமாக கை கால்கள் நடுங்கியது.

"தாத்தா நான் செடிமலை கிராமத்துக்கார பொண்ணுதான்.. உங்க யாருக்கிட்டயாவது ஃபோன் இருந்தா தரீங்களா ப்ளீஸ்.. எங்க அப்பாவும் அம்மாவும் என்னை காணமேன்னு இன்னேரம் அழுதுட்டு இருப்பாங்க.." என்றாள் கண்ணீரோடு.

"என்கிட்ட இருக்குக்கா ஃபோன்.. ஆனா இங்கே டவர் கிடைக்காது. அதோ அந்த மூலையில் நின்னு பேசினாதான் டவர் கிடைக்கும்.." பதினேழு பதினெட்டு வயது சிறுவன் ஒருவன் சூரிய ஒளியின் மூலம் சார்ஜர் போட்டுக்கொள்ளும் ஒரு கேட்ஜட்டில் இருந்து தன் கைபேசியை எடுத்து தந்தான்.

பொன்னா சிரமத்தோடு எழுந்து நின்றாள். அங்கிருந்த இளம்பெண் ஒருத்தி ஓடி வந்து அவளை பிடித்துக் கொண்டாள்.

"நான் உங்களை கூட்டி போறேன்.." என்று அவளை நடத்தி சென்றாள்.

டவர் கிடைக்கும் இடத்திற்கு வந்ததும் தனது அப்பாவின் எண்ணுக்கு அழைத்தாள் பொன்னா.

விஷ்வாவும் பொன்னாவும் கார் விபத்தில் இறந்த செய்தியை கூற கனத்த மனதோடு வந்தான் அதியன். அதே நேரத்தில் கலையரசி தன் இடுப்பில் சொருகி இருந்த ஃபோன் ஒலிப்பதை கண்டு எடுத்து பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ அம்மா.."

"பொன்னா.." சந்தேகமாக கேட்ட கலையரசி "எங்கடி போன நாலு நாளா.? நீ எவனையாவது கட்டிக்க ஆசைப்பட்டா அதை எங்ககிட்ட சொல்லி இருக்க கூடாதா.? நானும் உங்க அப்பனும் செத்தாடி போயிட்டோம்.?" கோபமாக கேட்டாள்.

"அம்மா.. நான் ஓடி போலம்மா. இங்க ஒரு மலை கிராமத்துல இருக்கேன்.." என்றாள்.
"மலை கிராமமா.?" குழப்பமாக கேட்டாள் கலையரசி.

அவள் பொன்னா என்று அழைத்த நொடியே அதியனுக்குள் சிறு உயிர் வந்து விட்டது. அவள் மீண்டும் மலை கிராமம் என்று சொன்னவுடன் அவசரமாக கலையரசியிடம் வந்து "ப்ளீஸ்.. நான் பேசிட்டு தரேன்.." என்றான் கெஞ்சலாக‌.

கலையரசி அவனை விசித்திரமாக பார்த்து விட்டு அவனிடம் ஃபோனை தந்தாள்.
"விஷ்வா நல்லா இருக்கானா.?" முதல் கேள்வியே நண்பனின் நலனை பற்றி கேட்டான் அதியன்.

"நீங்க.?" தயக்கமாக கேட்டாள் பொன்னா.

"நான் அதியன்.. விஷ்வாவோட பிரெண்ட்.. நீங்க போன கார் ஆக்ஸிடென்ட் ஆச்சின்னு இப்போதுதான் தெரிஞ்சது. அவன் நல்லாருக்கானான்னு முதல்ல சொல்லுங்க.." அவசரப்படுத்தி அவன் கேட்க, கலையரசியும் காயத்ரியும் அதிர்ந்து போயினர். "கார் ஆக்ஸிடென்டா.?" இருவரும் பதட்டமாக கேட்டனர்.

அவர்களது பதட்டத்தை கண்டுக்கொள்ளாதவன் போல பொன்னாவின் பதிலுக்காய் காத்திருந்தான்.

"அவர் இன்னும் மயக்கமாதான் இருக்காரு. எனக்கும் இப்பதான் மயக்கம் தெளிஞ்சது. அதான் அம்மா பயந்திருப்பாங்களேன்னு ஃபோன் பண்ணேன்.. நீங்க எப்படி எங்க வீட்டுக்கு வந்திங்க.?" சிறு குரலில் கேட்டாள் அவள்.

"அதை அப்புறமா சொல்றேன்.. நீங்க எங்கே இருக்கிங்கன்னு கரெக்டா சொல்ல முடியுமா.? நான் உடனே வரேன்.." என்றான். பொன்னா தான் இருக்கும் இடத்தை சொன்னாள்.

"எனக்காக கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.." என்றவன் ஃபோனை கலையரசியிடம் தந்து விட்டு "அவங்க இரண்டு பேரையும் நான் கூட்டி வரேன்.." என்றுவிட்டு அவசரமாக வெளியே ஓடினான்.

"தேவா.. விஷ்வா உயிரோடுதான் இருக்கான்.. நான் அவனை கூட்டி வர போறேன்.. நீயும் வா.." என்றவன் தேவன் மறுமொழி சொல்லும் முன் அவனை தன்னோடு இழுத்துக் கொண்டு புறப்பட்டான்.

கலையரசி பதறும் மனதோடு பொன்னாவிடம் பேச ஆரம்பித்தாள். "போனை ஸ்பீக்கர்ல போடுங்க.." என்று காயத்ரி கெஞ்சினாள். தாய் மனம் என்னவென்று புரிந்தவளாக கலையரசியும் ஃபோனை ஸ்பீக்கரில் வைத்தாள்.

"எங்கம்மா இருக்க.?" கவலையோடு கேட்டாள் கலையரசி.

"இங்கதான்ம்மா. நம்ம ஊருக்கு அந்த பக்கம் தூரமா ஒரு மலை கிராமம் இருக்குமே.. செங்கா கூட அந்த மலைக்கு குடி போக போறேன்னு சொல்லி உன்கிட்ட தொடப்ப கட்டையில அடி வாங்கினாளே அந்த மலையில்தான் இருக்கேன்.. நான் எங்கயும் போலம்மா. என்னை பார்க்க வந்தாரு‌ விஷ்வா. அவரை பத்தி உங்ககிட்ட முன்னாடியே சொல்லாதது என் தப்புதான். ஆனா நான் கூட்டிட்டு ஓடலம்மா. என்னை பார்க்க வந்தவரை வழியனுப்பி வைக்க அவரோடு சேர்ந்து கார் வரைக்கும் நடந்தேன்‌. அவ்வளவுதான். யாரோ.." என்றவள் சில நொடிகளுக்கு பிறகு "யாரோ ஒரு லேடி.. ஆமா ஒரு லேடிதாம்மா உன் வயசுதான் இருக்கும்.. நிலா வெளிச்சத்தில முகம் சரியா தெரியல. ஆனா ஒரு மத்திம வயசு லேடிதான்ம்மா.. விஷ்வாவோட தலையில கட்டையால் அடிச்சிட்டாங்க. நான் பயந்து கத்த இருந்த நேரத்துல என் தலை மேலயும் அடிச்சிட்டாங்க. கண் விழிச்சி பார்த்தா இங்க இருக்கேன். கார் ஆக்ஸிடென்ட்ன்னு சொல்றாங்க.." என்றாள்.

"உனக்கு ஒன்னும் இல்லதானேம்மா.?" கலையரசி கவலையோடு கேட்டாள்.

"எனக்கு ஒன்னும் இல்லம்மா.. ஆனா லேசா தலைவலிக்குது.. கை காலெல்லாம் நடுங்குது.. உங்களுக்கு ஒன்னும் ஆகலதானே.? சீனு மாமன் உங்களை ஏதாவது திட்டிடாராம்மா.?" பயத்தோடு கேட்டாள்.

"எங்களுக்கு ஒன்னும் இல்லம்மா. அந்த தம்பி உங்களை கூட்டி வர கிளம்பி இருக்கு. நீயும் விஷ்வாவும் பத்திரமா வாங்கம்மா.." என்றவளுக்கு மகளிடம் இங்கு நடந்த எதையும் சொல்ல மனம் வரவில்லை.

"ம். சரிம்மா.. மயக்கத்துல ஏதோ கெட்ட கெட்ட கனவா வந்ததும்மா.. இந்த செங்கா கழுதை கரட்டுல இருந்து வந்துட்டாளா.? அவளுக்கு ஏதோ ஆகற மாதிரி எனக்கு நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சிக்கிச்சிம்மா.." என்றாள்.

"டிவின்ஸ் இன்ஸ்டிங்க்ஸ் போல." என்று முணுமுணுத்தாள் காயத்ரி‌.

"அவளுக்கு என்ன.? கழுதை எப்பவும் கழுதையாதான் இருக்கும். நீ பத்திரமா வா.." என்று அவளின் கேள்வியை தவிர்த்தாள் கலையரசி.

"சரிம்மா.." என்றவள் ஃபோன் அழைப்பை துண்டித்து விட்டு தன்னருகில் இருந்த இளம்பெண்ணின் உதவியோடு மீண்டும் குடிலை நோக்கி நடந்தாள்

"கார் ஆக்ஸிடென்ட்ன்னு கேட்டதும் உயிரே போயிடுச்சிங்க.. இரண்டு பேரும் நல்லபடியா பிழைச்சிக்கிட்டதுக்கு சாமிக்குதான் நன்றி சொல்லணும்.." என்று தலைக்கு மேல் கையை கொண்டு சென்று கும்பிட்டாள் காயத்ரி.

கலையரசி மனதுக்குள் கடவுளிடம் நன்றி சொல்லி விட்டு நாற்காலியில் அமர்ந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1105
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN