நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புலரும் பொழுதை ஜன்னல் வழி பார்த்தபடியே கிச்சனுக்குள் நுழைந்தாள் பொன்னி.

"சந்தியா இனியா.." என அவள் உரத்த குரலில் கத்த மொத்த பேரும் ஓடி வந்தனர்.

"ஏன்ம்மா.?" கண்ணை கசக்கியபடி வந்து நின்ற மகேஷிடம் கிச்சன் தரையை காட்டினாள் பொன்னி.

கிச்சனுக்குள் கணுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் நின்றுக் கொண்டிருந்தது. கிச்சனின் ஷெல்ப் முதல் அடுப்பு வரை அனைத்தும் தண்ணீரில் நனைந்து போய் ஈரம் காயாமல் இருந்தது.

"உங்க இரண்டு பேருக்கும் ஒரே ஒரு சின்ன வேலை தந்தேன். ஆனா இப்படி கிச்சனையே முழுசா மாத்தி வச்சிருக்கிங்க.." இடுப்பில் கை வைத்தபடி பொன்னி கோபமாக கேட்டாள்.

இனியனும் சந்தியாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். நேற்று இரவு தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடியதில் அந்த சமையலறை அந்த நிலைக்கு வந்து விட்டது. விளையாட்டின் ஆர்வத்தில் தாங்கள் செய்த சொதப்பல்களை இருவருமே மறந்து விட்டனர்.

"சாரி பாட்டி.." சந்தியா சிறு குரலில் மன்னிப்பு கேட்டாள்.

"இதை நீங்க இரண்டு பேரும்தான் சரி பண்ணணும்.."

"பாட்டி எனக்கு வேலை இருக்கு.." அவசரமாக சொன்னான் இனியன்.

"எனக்கும் பார்ம்ல அவசர வேலை இருக்கு.." சந்தியாவும் சொன்னாள்.

"இது நல்ல கூத்தா இருக்கே.. நீங்க பண்ணதை நீங்கதான் சரியாக்கணும்.. இதை சரி பண்ணி முடிச்சிட்டு அப்படியே சமைச்சி வச்சிடுங்க.." என்றவள் தனது மற்ற வேலைகளை கவனிக்க சென்றாள்.

சக்தியும் மகேஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ஓசையில்லாமல் அங்கிருந்து நழுவினர்.

இனியனும் சந்தியாவும் சேர்ந்து கிச்சனை துடைத்து எடுத்தனர். அதற்கே வெகுநேரம் ஆகி விட்டது.

"பசிக்குது.." என்றபடி கிச்சன் மேடையில் ஏறி அமர்ந்தாள் சந்தியா.

"இந்த காய்கறிகளை வெட்டி கொடு.. நான் மத்த வேலைகளை செய்றேன்.." என்றான் இனியன்.

சந்தியா வெங்காயத்தை நறுக்கினாள். பின்னர் கேரட்டை நறுக்க ஆரம்பித்தாள்.

இனியன் பாட்டு ஒன்றை முனகியபடி அடுப்பில் வேலையாக இருந்தான். தனது வேலையை விட்டுவிட்டு அவனை பார்த்து கொண்டிருந்த சந்தியா யோசனை வந்தவளாக கத்தியையும் தனது விரலையும் மாறி மாறி பார்த்தாள். இனியனையும் ஒரு கணம் பார்த்தாள்.

தனது கை விரலில் காயம் உண்டாக்க கத்தியை கொண்டு சென்றாள்.

"பைத்தியம் மாதிரி செய்யாத சந்தியா.." இனியனின் குரலில் திடுக்கிட்டு விழுந்தாள் அவள்.

இனியன் அவள் முன்னால் வந்து அவளது கையில் இருந்த கத்தியை வாங்கினான். அவளது முகத்தை பற்றி நிமிர்த்தினான்.

"உன்னோட காயங்கள் எனக்கு வலியை தரும்தான்.. ஆனா அது உனக்கும் வலிகளை தரும். அதனால லூசுதனமா நடந்துக்காத..'' என்றவன் அவளது தாடையில் முத்தமிட்டு விட்டு நகரந்தான்.

"நீ எந்த வேலையும் செய்யாத.. நானே செய்றேன்.." என்றவன் அனைத்து வேலைகளையும் தானே செய்து முடித்தான்.

வேலைக்கு சென்றவன் அன்றைய மாலை வேளையில் மங்கை தனக்கான சிகிச்சைக்கு அழைத்திருந்தது நினைவு வந்து மங்கையிடம் சென்றான்.

"வாங்க இனியன்.. எப்படி இருக்கிங்க.?" புன்னகையோடு வரவேற்றாள் அவள்.

"நான் நல்லாருக்கேன் டாக்டர்.." என்றவனை புரிந்தவளாக பார்த்தாள் அவள்.

"இந்த பொம்மையை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு.?" என்றாள் சிறு கண்ணாடி சிலையை காட்டி.

"நல்லாருக்கு டாக்டர்.."

"நமக்கு கிடைச்ச உறவுகள் கூட இந்த கண்ணாடி பொம்மை மாதிரிதான். கவனமா கையாளணும்.. இதை இறுக்க பிடிச்சா உடைஞ்சிடும். உடைஞ்ச கண்ணாடி நம்ம கையில்தான் குத்தும்.. நீங்க உங்களுக்கு பிடிச்ச ஒருத்தரோட மனசை உடைக்கற ஒவ்வொரு முறையும் உங்க மனசுதான் அங்கே உடையுதுன்னு புரிஞ்சிக்கங்க.. தெரிஞ்சி செஞ்சாலும் தெரியாம செஞ்சாலும் இந்த லவ் ஒரு பூமராங் மாதிரிதான். நீங்க ஈகோவோடு ஒதுங்கி இருந்தா கடைசி வரை காதல் கை கூடாது.."

"புரிஞ்சது டாக்டர்.."

"ஓகே இப்ப விசயத்துக்கு வருவோம்.. முதல் விசயம் அந்த பொண்ணு உங்களை ரொம்ப லவ் பண்றா.. எந்த அளவுக்குன்னா நீங்களே பிரிஞ்சி போக நினைச்சாலும் அவ பிரிய மாட்டா.."

"ஆனா அவளுக்குதான் முதல்ல இருந்தே என் மேல கோபம் டாக்டர்.." வருத்தத்தோடு சொன்னான் இனியன்.

"கோபம் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு காதலும் இருக்குன்னு புரிஞ்சிக்கங்க.. பார்த்த உடனே வந்துட்டாலும் அந்த காதலை அவ தன் உயிரா மதிச்சா.. அதுதான் அவளுக்கு அளவில்லா கோபத்தை தந்துடுச்சி.. அந்த பொண்ணோட பிடிவாத குணத்துக்கு நீங்க அவக்கிட்ட மன்னிப்பு கேட்கறதா இருந்தா அது சாதாரணமா முடியாது. அதே கொஞ்சம் டிராமாடிக்கா கேட்டா அவ உடனே பணிஞ்சிடுவா.. ஆனா இதை மிஸ்யூஸ் பண்ணிட்டா பிறகு அதுக்கப்புறம் அவக்கிட்ட மன்னிப்பு கேட்க எந்த வழியும் இருக்காது.."

"ஓ.."

"உங்க குணத்துக்கு உங்களால மன்னிப்பு கேட்க முடியாதுதான்.. ஆனா அவளுக்கு தேவைப்படுறது உங்களோட சாஃப்ட் சைட்தானே தவிர முரட்டு குணம் இல்ல..அவளுக்கு தேவையான கொஞ்சலும் கெஞ்சலும் கிடைக்கலன்னா அவ தன்னையே டார்ச்சர் பண்ணிப்பா.. அவளுக்கு முழுக்க முழுக்க தேவைப்படுறது உங்க அன்பு பார்வை அவ மேல மட்டும் இருக்கணும்ங்கறதுதான். அதுக்காக அவ என்ன வேணாலும் செய்வா.. சாப்பிடாம இருக்கறது.. தூங்காம இருக்கறது.. இல்லாத விசயத்தை கூட பெரிசு பண்ணி சண்டை போடுறதுன்னு எல்லாமே உங்க கான்ஸட்ரேசன் அவ மேல இருக்கணும்னு நினைக்கிறதாலதான்.." என்றாள்.

"ஆனா அவதான் தேவையில்லாம சண்டை போடுறா டாக்டர்.."

"அவ தேவையில்லாம சண்டை போட்டா அதை நீங்க சரி பண்ணுங்க.. உங்களுக்கு ஒரு சின்ன டீடெயில் சொல்றேன்.. நீங்க ஃபோனை ஹேக் பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உங்களுக்கே தெரியும். அவ நினைச்சா உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ணி உங்களையே ஜெயிலுக்கு அனுப்பலாம்.. ஆனா அவ அதை செய்யல.. ஏனா அவளோட கோபம் ஹேக்கிங் மேட்டரால் இல்ல.. உங்களை காதலிக்கிறதா சொல்லிட்டு செத்து போன அந்த பொண்ணாலதான்.."

இனியன் நம்ப முடியாமல் பார்த்தான்.

"அவக்கிட்ட பேசியதுல நான் தெரிஞ்சிக்கிட்ட விசயம் இது.. அவளோட பொசசிவ்னெஸ் உங்களுடையதை விட அதிகம்.. அதான் உண்மை. அவளால உங்க பக்கத்துல வேற ஒரு பொண்ணை வச்சி கற்பனை கூட பண்ண முடியாது. இப்படி இருக்கையில செத்து போன பொண்ணு உங்களை காதலிக்கிறதா சொல்லி உங்க மடியில் உயிரை விட்டிருக்கா.. நீங்க எந்த சைகையும் காட்டாம அவளுக்கு உங்க மேல காதல் வந்திருக்காமான்னு சந்தியா யோசிக்கிறா.. செத்தவ ஒருவேளை இப்ப உயிரோடு இருந்திருந்தா என்ன நடந்திருக்குமோன்னு தேவையில்லாத விசயங்களை மனசுல போட்டு குழப்பிக்கறா.. இந்த உலகத்துலயே நமது மிக பெரிய எதிரி நம்ம கற்பனைதான்.. அந்த கற்பனைதான் உங்க மனைவியை அதிகளவில் ஆட்டி படைக்குது.. அவங்களுக்கு ரியாலிட்டியை புரிய வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு.."

"ஓகே டாக்டர்.." என்றவன் கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுந்து நின்றான்.

இரண்டடி நடந்தவனை "இனியன்.." என அழைத்து நிறுத்தினாள் மங்கை.

"சொல்லுங்க டாக்டர்.."

"அந்த பொண்ணு எப்படி பிடிவாதமா இருக்கோ அதுபோலதான் உங்க ஈகோவும்.. அவ உங்களோட காதலி.. உங்களோட மனைவி.. அவளுக்காக உங்க ஈகோவை கொஞ்சமா தள்ளி வைக்கிறதால ஒன்னும் நஷ்டமாகாது.. இந்த லைஃப்ல நாளைக்குன்னு எதுவும் நிரந்தரம் இல்ல.. இருக்கற செகண்ட்ஸை அனுபவிச்சி வாழுறதுலதான் லைஃப் இருக்கு.. கொஞ்சம் ஓவர் ரியாக்டா, கொஞ்சம் டிராமாட்டிக்கா இருக்கறதால் நமக்கு சந்தோசம் கிடைக்கும்ன்னா நாம அப்படி இருக்கறதுல தப்பு இல்ல.. நாளைக்கு நூறாவது வருசம் முடிஞ்சி காலன் வர நேரத்துல 'அச்சோ.. இப்படி வாழ்ந்திருந்தா ஆகியிருக்குமே.. அப்படி வாழ்ந்திருந்தா ஆகியிருக்குமே'ன்னு யோசிக்கிறதால் நகர்ந்துட்ட நிமிடங்கள் திரும்பி வராது.. நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.."

முழுதாக புரியவில்லை என்றாலும் புரிந்தது என தலையசைத்து விட்டு வெளியே நடந்தான் இனியன்.
வீட்டிற்கு வரும் வழிகளில் மருத்துவர் சொன்னதை நினைத்துக் கொண்டே வந்தான். காலையில் சந்தியா கத்தியை கையில் எடுத்தது அவனது கவனம் பெறுவதற்குதான் என்பதை புரிந்து கொண்டான்.
"என் ஒவ்வொரு நிமிசத்திலும் நீதான் உன் நினைவுதான் இருக்கு சந்தியா.. அதை ஏன் நீ புரிஞ்சிக்கல.? இல்ல நான் புரிய வைக்காம விட்டுட்டேனா.?" என்று தனக்கு தானே கேட்டு கொண்டவன் தன் எதிரே வந்த லாரியை கவனிக்க தவறி விட்டான்.

லாரியின் ஹாரன் சத்தத்தில் நினைவை விட்டு வெளியே வந்தவன் அருகில் வரும் லாரியில் இருந்து தப்பிக்க பைக்கை ஒரு ஓரமாக வளைத்தான். தார்சாலையின் கீழே செல்லும் மண் ரோட்டில் பைக்கை பிரேக் பிடித்து நிறுத்தியவன் தன் மீது சூடான காற்றை வீசியடித்தபடி கடந்து செல்லும் லாரியை பார்த்தான். தூரத்தில் சென்றபின் லாரி டிரைவர் இவன் எப்படி உள்ளான் என்று எட்டி பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்பினார்.

"கொஞ்சம் மிஸ்ஸிங்.. இல்லன்னா லாரி டயர்ல சட்னி ஆகி இருப்பேன்.." என்றவன் வியர்த்த தன் முகத்தை துடைத்துக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

"இந்த செகண்ட் இந்த லாரியில் அடிப்பட்டு செத்திருந்தா கூட ஏன் எனக்கு சாவு வந்ததுன்னு கடவுள்கிட்ட கேட்க முடியாது.. ஆனா இந்த செகண்ட் நம்ம வாழ்க்கையை நாம சந்தோசமா வாழலன்னா அதுக்கு முழு பொறுப்பும் நாமதானே.?" இனியனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடியது.

வீட்டு வாசலில் அவன் பைக்கை நிறுத்தியதும் பைக்கின் சத்தம் கேட்டு கதவருகே வந்து நின்று எட்டி பார்த்தாள் சந்தியா.

தனது தொப்பியை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்தான். அவன் அருகில் வருவதை கண்டு திரும்பி போக முயன்றாள் சந்தியா.

"சந்தியா.." இனியனின் குரலில் சட்டென நின்றாள். திரும்பி இவனை பார்த்தாள்.

இனியன் தன் பாக்கெட்டில் இருந்த ஒற்றை ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டினான். லாரி தாண்டி சென்றபின் அருகில் இருந்த பூக்கடையில் அதை வாங்கி இருந்தான்.

"எனக்கா.?" ஆர்வத்தோடு கேட்டவளின் கண்களில் மறைக்க இயலா சந்தோசம் மின்னியது.
ஆமென தலையசைத்தவனை புன்னகையோடு பார்த்தாள்.

"தேங்க்ஸ்.." என்றாள்.

'இந்த ஒத்தை சந்தோசத்தை உன் முகத்துல கொண்டு வர வைக்கணும்ன்னு நான் என் மனசுக்குள்ள எத்தனை நாள் நினைச்சிருப்பேன் தெரியுமா.? அன்னைக்கே புது ஃபோனை தந்ததுக்கு பதிலா இந்த அஞ்சி ரூபா பூவை தந்திருந்தா பேச ஆரம்பிச்சிருப்பியான்னு தெரியல.. ஆனா மனசுக்குள்ளயாவது சந்தோசப்பட்டு இருப்பன்னு நினைக்கிறேன்..' மனதுக்குள் யோசித்தவன் பூவை ஆசையோடு பார்த்திருந்தவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சந்தியா.." என்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் முழுக்க குழந்தைத்தனம் இருந்தது.

'இதை ஏன் நான் முன்னாடியே கவனிக்காம போனேன்.? உன் அப்பாவி குணமும் உன் பிடிவாதமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சந்தியா.. குழந்தையா இருக்கும் உனக்கு ஏத்த சரியான சர்வாதிகாரி நான்தான். ஆனா இனி என் அதிகாரம் முழுக்க அன்பால் மட்டும்தான் நிறைஞ்சி இருக்கும்..' என எண்ணியபடியே நிமிர்ந்து பார்த்தவளின் நெற்றியில் முத்தத்தை பதித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1058
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN