நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்காவின் அழுகையை விட தேவனுக்கு அதிகம் அதிர்ச்சியை தந்தது அதியனின் வார்த்தைகள்தான்.

"இவ நிஜமாவே உன் கண்ணுக்கு க்யூட்டா தெரியறாளா.?" என்றான்.

செங்காவையே பார்த்துக் கொண்டிருந்தவன் மேலும் கீழுமாக தலையை அசைத்தான்.

"அட கொடுமையே.. நீ இவளை லவ் ஏதும் பண்றியாடா.?" அதிர்ச்சியோடு அவன் கேட்க, அதியனும் அதிர்ச்சியோடு திரும்பி நண்பனை பார்த்தான்.

"இல்லடா.." என தலையசைத்தவன் செங்காவை பார்த்துவிட்டு மீண்டும் நண்பன் பக்கம் திரும்பினான்.

"சும்மா க்யூட்டா இருக்கான்னு சொன்னேன். நமக்கு இந்த லவ்வெல்லாம் ஒத்து வராது.. அப்படியே லவ் பண்ணாலும் கூட நான் இவளை லவ் பண்ண முடியாதுடா.. லவ் பண்ணவும் கூடாது.." என்றவன் அமைதியாக அங்கிருந்து நடந்து வெளியேறினான்.

"யப்பா.. எம்புட்டு பெரிய கட்டையை எடுத்து எங்கப்பன்னை அடிச்சி புட்டான்.. எங்கப்பன்னுக்கு என்னா வலி வலிச்சிருக்குமோ.. யப்பா.. என் சாமியை அடிச்சிப்புட்டானே.." என செங்கா இன்னமும் அழுதுக் கொண்டே இருந்தாள்.

"பாப்பா.. நீ இப்படிலாம் அழவும் கூடாது.. எழுந்தும் உட்கார கூடாது.. அமைதியா படு.." என்று நர்ஸ் ஒருத்தி வந்து எச்சரித்தாள்.

"என் வேதனை இந்த மனுசங்க யாருக்கும் புரியலையே யப்பா.." என அவள் நர்ஸின் வார்த்தையை காதில் வாங்காமல் மீண்டும் ஒப்பாரி பாடினாள்.

கலையரசி அவளை வலுக்கட்டாயமாக படுக்க வைக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. நர்ஸ் மேஜை மேல் இருந்த ஒரு மருந்து பாட்டிலை எடுத்து ஊசியில் ஏற்றி செங்காவின் கையில் மருந்தை செலுத்தினாள்.

"எதுக்கு இப்புடி ஓயாம ஊசியா போட்டு என்னை கொல்லுறிங்க.? நான் நல்லாத்தானே இருக்கேன்.? அப்புறம் ஏன் உடம்புல இத்தனை ஊசியை குத்துறிங்க.?" என கேட்டவளுக்கு பதில் ஏதும் அளிக்காமல் அந்த அறையின் வாயிலை பார்த்தாள் நர்ஸ்.

"நீங்கயெல்லாம் போய் ரெஸ்ட் எடுங்கப்பா.." என்றாள். அவர்கள் செங்காவை பரிதாபமாக பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

கலையரசியின் முந்தானையை இழுத்து கண்ணீரையும் மூக்கையும் துடைத்த செங்கா "யம்மா எங்கப்பன் என்ன பண்ணுது.?" என்று கேட்டாள்.

"நல்லாருக்காருடி.. கையில லேசா அடி. கட்டு போட்டிருக்கு.. மத்தபடி நல்லாதான் இருக்காரு.." என்றாள்.
"தூக்கம் வர மாதிரி இருக்கு.." என்றவளை படுக்க வைத்தாள் கலையரசி.

"தூங்கு.. அப்புறமா உங்க அப்பா உன்னை வந்து பார்ப்பாரு.." என்று சமாதானம் சொன்னாள்.

"உங்கொண்ணன் மவன் செத்துட்டான்னாம்மா.?" அரை கண்களை மூடியபடி கேட்டாள் செங்கா.

"நீ ஜெயிலுக்கு போக கூடாதுன்னு உயிர் பிழைச்சிட்டான்டி.." அவளது தலைமுடியை வருடி விட்டபடி சொன்னாள் கலையரசி.

"அவன் உயிரோடு இருக்கறதுக்கு பதிலா நான் ஜெயிலுக்கே போயிருக்கலாம்.. பரதேசி நாயி.. எங்கப்பன்னை அடிச்சி புட்டானே.." என்று முனங்கியவள் சில நொடிகளில் உறங்கி போனாள்.

"மயக்க ஊசி போட்டிருக்கேன்ங்க.. இந்த பொண்ணு கண் விழிக்க அஞ்சாறு மணி நேரம் ஆகும்.." என்ற நர்ஸ் தனது அடுத்த வேலையை பார்க்க கிளம்பினாள்.

லாரன்ஸ் பூங்கோதையின் கையை பிடித்தபடி அவளருகே அமர்ந்திருந்தார். அவரின் பின்னால் வந்து நின்றாள் காயத்ரி.

"இவங்களுக்கு இப்ப எப்படி இருக்கு அண்ணா.?" பூங்கோதையை பார்த்தபடி கேட்டாள்.

"காயங்கள் அதிகம் இல்லம்மா.. ஆனா அதிர்ச்சியால மயங்கி இருக்கா.. கண் விழிக்க எத்தனை நாள் ஆகும்ன்னு தெரியலன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. பைத்தியக்காரி எதுக்கு போய் விஷ்வாவை கடத்தியிருப்பா.?" என்று கடிந்து கொண்டார்.

காயத்ரி பூங்கோதையின் முகத்தையே பார்த்தாள். ரக்சனாவின் சாயல் அப்படியே இருந்தது. பெருமூச்சி விட்டு கொண்டாள்.

"ரக்சனாவை நான் அனுப்ப மாட்டேன்னு சொன்னதால என் மகனை கடத்த டிரை பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் அண்ணா.." என்றவள் தன் விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.

"என் பையன் மூணு நாளா காணாம போனதும் எனக்கு முக்கால் உயிர் போன மாதிரி ஆயிடுச்சி.. இவங்களுக்கு என்னதான் மனநலம் அப்பப்ப பாதிக்கப்பட்டாலும் கூட இப்ப சில வேளைகளில் நார்மலா இருக்கற மாதிரிதான் இருக்கு. ரக்சனாக்கிட்ட உண்மையை சொல்லிடலாமான்னு நான் நினைக்கிறேன்.."

லாரன்ஸ் தலையசைத்தபடி எழுந்து நின்றார். "வேணாங்க.. என் பொண்ணு இவ்வளவு நாளும் உங்களைதான் அம்மான்னு நினைச்சிட்டு இருக்கா.. அவளை பெத்தவ வேற ஒருத்தி.. அவளும் ஒரு பைத்தியக்காரின்னு என் பொண்ணுக்கு தெரிஞ்சா ரொம்ப மனசு கஷ்டப்படுவா.. உங்களை கெஞ்சி கேட்கிறேங்க.. இதை ரக்சனாக்கிட்ட சொல்லிடாதிங்க.. எங்க குடும்பத்துல அவ ஒருத்தியாவது முழுநிம்மதியோடு இருக்கட்டும்.." என அவர் கெஞ்சலாக கேட்க காயத்ரியால் மறுத்து சொல்ல முடியவில்லை.

விஷ்வாவின் அருகே அமர்ந்திருந்தாள் ரக்சனா. விஷ்வாவின் உடல் காயங்களை பார்க்கும்போது கண்ணீர் கசிந்தது அவளுக்கு.

தேவன் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே நடந்தான். அதியன் அவனோடு இணைந்து நடந்தான்.

"பொன்னாவோட அம்மா கேஸ் தரலன்னு சொல்லிட்டாங்க.. அதனால சீனுவை என்ன செய்றதுன்னு எங்களுக்கும் தெரியல.‌ பார்க்கலாம். செங்கா கண் விழிச்ச பிறகு ஏதாவது புகார் தரலான்னு.. நான் கிளம்பறேன்டா அதியா.. உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருந்தா லவ் பண்ணு.. நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழதானே இந்த வாழ்க்கையே.." என்றவன் அவனிடம் கையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.

'மனசுக்கு பிடிச்சிட்டா போதுமா.? விஷ்வாவும் பொன்னாவும் லவ் பண்றாங்க.. என் தம்பியும் ரக்சனாவும் லவ் பண்றாங்க.. அந்த கணக்குல பார்த்தா எனக்கு செங்கா தங்கச்சி முறை ஆகறாடா..' என்று அவன் மனதுக்குள் சொல்லிய வினாடி அவன் மீது வந்து வேகமாய் மோதியபடி மருத்துவமனைக்குள் ஓடினான் ஒரு இளைஞன்.

"கூட பிறந்த அண்ணன் கல்லு மாதிரி நிக்கறேன்.. கண் மண் தெரியாம ஓடுறான் பாரு.. எருமை மாடு.." என்று திட்டியவன் தன்னை இடித்து விட்டு உள்ளே ஓடிய தம்பியை பின்தொடர்ந்து நடந்தான்.
"ரக்சனா.. ஆர் யூ ஓகே பேபி.? ஏன் இப்படி அழுதிருக்கம்மா.? உன் அண்ணாவுக்கு ஒன்னும் ஆகாது.. நீ கவலைப்படாதே.." ரக்சனாவை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு செழியன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே நடந்தான் அதியன்.

"அண்ணா.. நீ கனடாவுல இருந்து எப்ப வந்த.?" என கேட்ட செழியன் ரக்சனாவின் முதுகை வருடி தந்தபடியே அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அதியன் உதட்டை கடித்தபடி செழியனை தாண்டி இருந்த சுவற்றை வெறித்தான். "நான் வந்து இரண்டு நாள் ஆச்சி.." என்றான் எரிச்சலை வெளி காட்டாமல்.

"ஓ. சரிண்ணா.." என்றவன் மீண்டும் ரக்சனாவின் முகம் பார்த்தான்.

"எதுக்கு நீ கவலைப்படுற பேபி.. உன் அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது.. டிரஸ்ட் மீ.." என்று சொல்லி அவளது நெற்றியில் முத்தமிட்டான் செழியன்.

'இவன் அடிப்பட்டவனை பார்க்க வந்தானா இல்ல அவளை கொஞ்ச வந்தானா.?' என்று மனதுக்குள் கேட்டுக் கொண்ட அதியன் வாசலை பார்த்து விட்டு "அவங்க அம்மா வராங்க.." என்றான் அவசர குரலில்.
செழியன் அவசரமாக ரக்சனாவை விட்டு விலகி வந்து விஷ்வாவின் மறுபக்கம் நின்றான்.
"விஷ்வாண்ணா.." என்று வேதனை குரலில் அழைத்தபடி கட்டுப்போட்டு மயக்கத்தில் படுத்திருந்தவன் மேல் விழுந்து அவனை அணைத்து கொண்டான்.

"அடப்பாவி.. கட்டுப்போட்டு படுத்திருப்பவன் மேல இப்படி போய் விழுறியே.. அவன் மூச்சடைச்சி செத்துட போறான்டா.." என்று அதிர்ச்சியோடு சொன்ன அதியன் வேகமாக ஓடி செழியனை எழுப்பினான்.

சில நொடிகளில் அந்த அறைக்குள் வந்தாள் காயத்ரி.

"செழியா.. இப்போதுதான் வந்தியாப்பா.?" என்று கேட்டாள் அவள்.

"ஆமாம்மா.. இப்பதான் வந்தான்.‌." தம்பிக்கு பதில் இவனே பதிலை சொன்னான்.

"விஷ்வாண்ணாவுக்கு இப்படி ஆச்சேன்னு எனக்கு மனசு நொந்து போச்சிம்மா‌‌.. அதான் ஓடி வந்துட்டேன்.." என்று சொன்னான் செழியன்.

"எல்லாம் விதிப்பா.‌." என்று கண்களை துடைத்துக் கொண்டாள் காயத்ரி.

"நீ வீட்டுக்கு திரும்பி போகும்போது பாப்பாவையும் கூட்டிப்போய் எங்க வீட்டுல விட்டுடுப்பா.." என்றாள் காயத்ரி செழியனிடம் சில நிமிடங்களுக்கு பிறகு.

"சரிம்மா.." என்றபடி ரக்சனாவை பார்த்தான் அவன். அவனது கண்கள் சந்தோசத்தில் மின்னியதை அதியன் கவனித்தான்.

'என்னடா காதல் இது.? பார்த்து பல வருசம் ஆன பிறகும் கூட ஒவ்வொரு செகண்டும் புதுசா பார்க்கற மாதிரி புதுசா பழகுற மாதிரி எக்ஸைட் ஆகணுமா என்ன.?' என தனக்கு தானே கேட்டபடி விஷ்வாவின் அருகே சென்று அமர்ந்தான்.

"நீங்களும் வீட்டுக்கு போங்கம்மா.. நானே விஷ்வாவை பார்த்துக்கறேன்‌‌.." என்றபடி விஷ்வா மீது இருந்த போர்வையை சரி செய்தான் அதியன்.

"இல்லப்பா.. பொன்னாவோட அம்மா தனியாவே மூணு ரூமுக்கும் அலைஞ்சிட்டு இருக்காங்க.. நான் அவங்களுக்காவது துணையா இருக்கேன்.." என்றவள் பெருமூச்சோடு விஷ்வாவை பார்த்தாள்.

"எப்படி ஒரு சூழ்நிலையில் என்னையும் சம்பந்தி குடும்பத்தையும் சந்திக்க வச்சிருக்க நீ.?" என்று கேட்டாள். அதியன் மயங்கி இருந்த விஷ்வாவின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

"விடுங்கம்மா.. இவனுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரியுமா என்ன.?" என்று சோகமாக கேட்டான். தனது நண்பன் கண் விழித்ததும் நடந்தது அறிந்து எந்த அளவிற்கு வேதனை படுவானோ என்றெண்ணி அவனது வேதனையை இப்போது அதியனும் பட்டான்.

அரை மணிநேரம் கடந்த பிறகு "நான் வீட்டுக்கு கிளம்பறேன்.. நீயும் வரியா ரக்சனா.‌." என்று கிளம்பினான் செழியன்.

ரக்சனா அம்மாவை பார்த்தாள். "பத்திரமா இரும்மா.. பக்கத்து வீட்டு பாட்டி உன் துணைக்கு வந்து தூங்குவாங்க‌. நான் போன் பண்ணி சொல்லிடுறேன். சரியா‌.?" என கேட்டாள் காயத்ரி. சரியென தலையசைத்துவிட்டு செழியனின் பின்னால் நடந்தாள் ரக்சனா.

"ஒரு நிமிசம்மா.. வந்துடுறேன்.." என சொல்லிவிட்டு தம்பியின் பின்னால் ஓடினான் அதியன்.

"செழியா நில்லு.." என்றான்.

ரக்சனாவின் கை பிடித்து நடந்துக் கொண்டிருந்தவன் திரும்பி பார்த்தான். ரக்சனாவை விட்டுவிட்டு அண்ணன் அருகே வந்தான்.

"ஏன் அண்ணா.?"

அதியன் ரக்சனாவை பார்த்துவிட்டு தம்பியை பார்த்தான். "விஷ்வா ஹாஸ்பிட்டல்ல இருக்கான்டா.. அதனால நீ.." என்றவன் தயங்கி நின்றான்.

"என்ன அண்ணா சீக்கிரம் சொல்லு.. நான் கிளம்பணும்.." என்று ரக்சனாவை திரும்பி பார்த்து தலை சாய்த்து சிரித்தான் அவன்.

"அது வந்து செழியா.. ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷன் இங்கே.‌. அதனால தயவு செஞ்சி நீயும் ஏதும் குழப்பம் பண்ணிடாதே.. ரக்சனாவை அவங்க வீட்டுல விட்டதும் தயவு செஞ்சி அங்கிருந்து உடனே கிளம்பிடு.. இதுக்கு மேல இதை விளக்கி சொல்ல வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.." என்று தயங்கி தயங்கி சொன்னான்.

செழியன் அண்ணனை முறைத்தான். "இப்படி ஒரு சான்ஸ் மறுபடி எப்பவாவது கிடைக்குமா எனக்கு.? இப்படி ஒரு சான்ஸை முட்டாள்தான் மிஸ் பண்ணுவான்.. நான் என்ன முட்டாளா.?" என்று மூக்கு சிவக்க கேட்டான் அவன்.

"அடப்பாவி அதுக்காக இப்படி அவளோட அண்ணன் ஹாஸ்பிட்டல்ல அடிப்பட்டு படுத்திருக்கும்போதா வில்லங்கமா யோசிப்ப.?" என்று கோபமாக கேட்டான் அதியன்.

முதலில் ஒன்றும் புரியாத செழியன் விசயம் புரிந்ததும் நெற்றியில் அடித்துக் கொண்டான். "நீ ஏன் இப்படி அல்பமா இருக்க.? நான் அவளை சமாதானம் செய்யவும் அவளுக்கு ஆறுதல் சொல்லவும் அவளோட துயரத்துல எனக்கும் பங்கு இருக்குன்னு காட்டவும் இந்த சான்ஸ் கிடைச்சிருக்குன்னு சொன்னேன்‌‌.. நீ கெட்டப்புத்தியோடு இரு தப்பில்ல.. ஆனா நானும் அதே மாதிரி கெட்ட புத்தியோடு இருப்பன்னு கணக்கு போடாதே.." என எரிந்து விழுந்து விட்டு ரக்சனாவின் அருகே போனான்.

அதியன் அவனின் முதுகை பார்த்து நின்றுக் கொண்டிருக்க செழியன் "போலாம் பேபி.." என்று ரக்சனாவின் இடுப்பில் கை போட்டு அணைத்தபடி அவளை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"அடப்பாவி எனக்காடா கெட்ட புத்தி.?" அதியன் அதிர்ச்சியோடு கேட்டது செழியனின் காதில் விழவே இல்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

Word count 1121
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN