நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 56

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் தன்னால் முடிந்த அளவுக்கு தனது காதலுக்குள் ஈகோவை கொண்டு வராமல் இருக்க முயற்சி செய்தான்.

பாட்டி அவர்கள் இருவருக்கும் ஓயாத வேலைகளை தந்து கொண்டிருந்தாள். பெரும்பாலும் இணைந்து செய்யும்படியான வேலைகளையே தந்தாள். இருவரும் சிறு சிறு செல்ல சண்டைகளை போட்டுக் கொண்டாலும் தங்களுக்குள் இருந்த நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டனர்.

"உன்னை பார்க்காம இருந்த அஞ்சி வருசமும் எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா.?" என்றான் ஸ்டோர் ரூமை சுத்தப்படுத்தி கொண்டே.

பாட்டி அவர்கள் இருவருக்கும் ஸ்டோர் ரூமை சுத்தம் செய்யும் வேலையை தந்திருந்தாள் இன்று.
சந்தியா தன் கையில் இருந்த ஒட்டடை குச்சியை ஒரு ஓரம் சாய்த்து வைத்து விட்டு அவனருகே வந்தாள்.

"நானும்தான் உன்னை மிஸ் பண்ணேன்.." என்றாள் நேருக்கு நேர் நின்று.

அவளது இந்த தைரியம் அவனுக்கு பிடித்திருந்தது. காதலில் அவளது தைரியம் எந்த அளவிற்கானது என்பதை அவன் மறந்து விட்டான் போல.

"அப்ப ஏன் எனக்கு அதை சொல்லல.?" கைகளை கட்டியபடி கேட்டான் அவன்.

"ஏன் சொல்லணும்.? பிராடுதானே நீ.?" என்றவள் முகத்தை திருப்பி கொண்டு திரும்பி செல்ல முயல சட்டென அவளது கையை பற்றி நிறுத்தினான் இனியன்.

"ஆமா நான் பிராடுதான்.. ஆனா நீ பிராடு இல்லையா.? மனசுல இருப்பதை வெளியே சொல்லாம மறைக்கிற நீயும் பிராடுதானே.?" அதிகாரமாக கேட்டான் அவன். இத்தனை நாட்கள் இடைவெளியில் பழகி விட்டதாலோ என்னவோ அவனது அதிகாரம் கண்டு அவளுக்கு பயமேதும் ஏற்படவில்லை.
அவனது கழுத்தில் வியர்த்த வியர்வை துளிகளை கண்டவள் தன் புடவை முந்தானை கொண்டு ஈரத்தை துடைத்து விட்டாள்.

"நான் ஏன் என் மனசுல உள்ளதை வெளியே சொல்லணும்.? இஷ்டமா இருந்தா சொல்லாமலேயே புரிஞ்சி நடந்துக்க.. இல்லன்னா கிளம்பிக்கிட்டே இரு.." என்றவளின் கழுத்தை சுற்றி கையை போட்டு வளைத்தான் இனியன்.

அவனது பிடியிலிருந்து அவளால் நகர முடியவில்லை.

"என்னை விடு.."

"நானும் இனி வெளியே சொல்லாம மனசுலயே நினைச்சிக்கலாம்ன்னு இருக்கேன்.. இப்ப என் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சி அதுக்கு பதில் சொல்லு.. நான் உன்னை விடுறேன்.." என்றான்.

சந்தியா சிறு கோபத்தோடு அவனை பார்த்தாள். அவளை தெனாவட்டாக பார்த்து நின்றான் அவன்.
சற்று எம்பி நின்றவள் அவனது கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்தாள். இனியன் ஒரு நொடி அதிர்ந்து போனான். ஆனால் அவனது கையில் பிடி விலகவில்லை. மேலும் அதிகமாக அவளை இறுக்கியது.

"என்னை விடு... நான்தான் முத்தம் தந்துட்டேன் இல்லையா.?" அவளை சிரிப்போடு பார்த்தான் இனியன்.
"நான் ஒன்னும் முத்தம் வேணும்ன்னு நினைக்கலையே.."

"எனக்கு என்னன்னு தெரியல.." என சொல்லி விட்டு பார்வையை வேறு பக்கம் திருப்பியவளின் முகத்தை பற்றி தன் பக்கம் திரும்பினான்.

"என் மனசுல உள்ளதை வெளியே சொல்லலன்னா உனக்கு தெரியாது.. அதுபோல உன் மனசுல உள்ளதை நீ என்கிட்ட சொல்லலன்னா எனக்கும் தெரியாது.. மனசை படிக்கிற சக்தி இருந்திருந்தா இங்கே மனசங்களுக்குள்ள தேவையில்லாத பிரிவும் சண்டையும் வந்திருக்காது.. கற்பனை கோட்டையை கட்டாம ரியாலிட்டியா உன்னோட பிரச்சனைகளை உன் தேவைகளை என்கிட்ட சொல்லு.. இனி நானும் எனக்கு என்ன தோணுதோ அதை உன்கிட்ட சொல்றேன்.. தேவையில்லாத மனக்கசப்பு இரண்டு பேருக்குமே வேணாம்.. உனக்கு என்னை திட்ட தோணினா திட்டு.. அடிக்க தோணினா அடி.. ஆனா நான் இப்படின்னு உன் மனசுக்குள்ளயே எதையாவது நினைச்சிட்டு ஏமாந்துட்டோ எதிர்ப்பார்த்துட்டோ இருக்காத.. எனக்கு நீ வேணும்.. இந்த ஆயுசு முடியற வரைக்கும் என் கூடவே என் நிழலை கூட பிரியாம நீ எனக்கு வேணும்.. அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.. உனக்கும் என் கூட காலத்துக்கும் வாழணும்ன்னு ஆசை இருந்தா உன் மனசுல உள்ளதை என்கிட்ட சொல்லு.. மனசார என்னோடு வாழு.. இல்லன்னா சொல்லிடு. நான் விட்டு விலகிக்கிறேன்.."

அவனது கடைசி வாக்கியம் அவளது மனதை கொஞ்சம் அசைத்து விட்டது. வாடி போன முகத்தோடு அவனை பார்த்தாள்.

"நீ என்னை விரும்புறன்னு எனக்கும் தெரியும் சந்தியா.. ஆனா சின்ன சின்ன சண்டைகளால் நமக்குள்ள பிரச்சனை வந்தா அது நம்ம குடும்பத்தையும் பாதிக்கும். உன்னை கேட்காம நான் உன் ஃபோனை ஹேக் பண்ணது தப்புதான். அதனாலதான் நம்ம குழந்தையை கருவுலயே பறி கொடுத்துட்டோம்.. ஆனா இதுல உன் தப்பும் இருக்கு. என் மேல கோபம் இருந்தா என்னை நாலு சாத்து சாத்தாம உன்னையே தண்டிச்சிக்கிட்டு பூமி பார்க்காத குழந்தையை சொர்க்கத்துக்கு அனுப்பிட்ட.. இனி இந்த மாதிரி எதுவும் நடக்க வேணாம்.."

சந்தியா சரியென தலையசைத்தாள். "சாரி என்னாலதான் இப்படி நடந்தது. உன் மேல உள்ள கோபத்தை நான் உன் மேல மட்டும்தான் காட்டி இருக்கணும்.." என்றவள் போராட்டத்தை விட்டுவிட்டு அவனது நெஞ்சில் தன் தலையை சாய்த்தாள்.

அரை மணி நேரம் கழித்து அந்த அறைக்கு வந்த பாட்டி அறை இன்னும் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதை கண்டு இருவரையும் கத்தினாள். இருவரும் அவசர அவசரமாக அந்த அறையை சுத்தம் செய்தனர்.

"சொந்த வீட்டுலயே பாட்டி என்னை வேலைக்காரி ஆக்கிட்டாங்க.." என்று சலித்துக் கொண்டாள் சந்தியா.

"நான் ஆக்ராவுல இந்த வேலையெல்லாம் டெய்லியும் செய்வேன்.." தரையில் கிடந்த பொருட்களை எடுத்து அடுக்கி வைத்தபடி சொன்னான் இனியன்.

சந்தியா தான் செய்யும் வேலையை விட்டுவிட்டு அவனை பார்த்தாள்.

"சாரி.. நீ இப்படியெல்லாம் சோதனையோடு வளர என் அப்பாவும் ஒரு காரணம்.. அவர் சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கறேன்.. ஆனா இனிமேல் இப்படி ஆக்ரா பத்தி என் முன்னாடி ஏதும் சொல்லாத.. கில்டி பீலிங் ஓவரா கொல்லுது.." சிறு குரலில் சொன்னவளை ஆச்சரியத்தோடு பார்த்தான் அவன். தனது ஆதங்கம் ஏதோ ஒரு வகையில் குற்றச்சாட்டாக மாறி அவளின் மனதை வருத்தம் அடைய செய்கிறது என்பதை புரிந்து கொண்டவன் இனி ஆக்ரா பற்றியும் அத்தை பற்றியும் ஏதும் நினைக்கவே கூடாது என முடிவெடுத்து விட்டான்.

சந்தியாவும் இனியனும் அந்த அறையை சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தனர். அவர்கள் இருவரும் மீதும் ஒட்டியிருந்த தூசிகளை கண்டு இருவருமே நகைத்து கொண்டனர்.

சந்தியாவை இழுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் இனியன். இருவரும் குளித்து விட்டு வந்தபோது பாட்டி அவர்களை அழைத்து கையில் பூஜை பொருட்களை தந்து கோவிலுக்கு சென்று வர சொன்னாள்.

இருவரும் சம்மதம் சொல்லி விட்டு கிளம்பினர்.

மனகஷ்டம் தீர வந்த பக்தர்கள் இடையே சிரிப்பொலியோடு மண்டபத்திற்குள் ஓடி மகிழ்ந்த சிறுவர்களை கண்டு இருவருமே மனம் மகிழ்ந்தனர்.

கடவுளை வணங்கி விட்டு இருவரும் வெளியே வந்தபோது மனதில் ஏதோ சிறு திருப்தி இருந்தது. புது வாழ்க்கைக்கான கனவுகள் இருந்தது.

"சந்தியா.." வீட்டு வாசலில் அவளின் கை பற்றி நிறுத்தினான் இனியன்.

"சொல்லு இனியா.."

"நான் ஒரு முட்டாள்ன்னு எனக்கு தெரியாது.. ஆனா உன்னை பைத்தியமா லவ் பண்றேன்.."

"ம். தெரியும்.." தரை பார்த்து தலையாட்டினாள். அவளது முகத்தை பற்றி நிமிர்த்தியவன் "இது நாள் வரை உன் மனசை கஷ்டப்படுத்தியதுக்காக என்னை மன்னிச்சிடு.." என்றான். அவளது நெற்றியில் முத்தம் தந்தான்.

சில நாட்கள் முன்பு மங்கையை சென்று பார்த்தபோது அவள் தன்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது சந்தியாவிற்கு.

"வருசம் முழுக்க சண்டை போட்டுக்கிட்டும் முறைச்சிக்கிட்டுமே இருந்தா உன் வாழ்வோட கடைசி நிமிசத்துல மிஞ்சுறது உன் சோக நினைவா மட்டும்தான் இருக்கும். மன்னிச்சி கொஞ்சம் அனுசரணையா போகறதால நம்ம டென்ஷன் குறையாதுன்னா நாம ஏன் மன்னிக்க கூடாது.. தெரியாத ஒருத்தன் காலை மிதிச்சிட்டு மன்னிப்பு கேட்டாலும் அதை அங்கேயே மன்னிக்காம முழுசா மறந்துடுறவங்கதான் நாம.. ஆனா நமக்கு பிடிச்சவங்க ஏதாவது ஒரு தப்பை செய்யும்போதுதான் அதை பெரிசு பண்றோம். ஏனா நமக்கு எங்கேயெல்லாம் அளவுக்கு அதிகமான உரிமை இருக்கோ அங்கே நம்மளோட கோபமும் அதிகமா இருக்கும். ஆனா யாரா இருந்தாலும் அவங்க செஞ்ச தப்பை ரியலைஸ் பண்ண வைக்கிறது மட்டும்தான் நம்ம வேலை. எப்ப அவங்க தான் செஞ்சது தப்புன்னு பீல் பண்ணி மன்னிப்பு கேட்கறாங்களோ அப்பவே அதை மன்னிச்சிடுறதுதான் நல்லது. இந்த சமுதாயம் மனுசங்களுக்கு அளவுக்கு அதிகமான சுயநலத்தைதான் கத்து தந்திருக்கு. இன்னைக்கு நீ மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டா அதுவும் ஒரு பிரச்சனையா மாறி அவங்களை இன்னும் சில தவறுகளை செய்ய வைக்கும். ஒரு தப்புக்காக காலம் முழுக்க மன்னிப்பு கேட்கற மகான்கள் இந்த பூமியில் தேடி பார்த்தா கூட கிடைக்க மாட்டாங்க..

அதுக்காக நீ உன் மூளை சொல்றதை கேட்டு உன் இஷ்டப்படிதான் இருப்பேன்னு சொன்னா அதுவும் பிரச்சனை இல்ல. இவனை விட்டுட்டு நீ இன்னொருத்தனை கூட கட்டிக்கலாம்.. ஆனா இவன் மேல வந்த காதல் வேறு ஒருத்தன் மேல உனக்கு வராது. இதான் நிஜம். பிரச்சனைன்னு நினைச்சா இங்கே எல்லாமே பிரச்சனைதான்‌. ஆனா காதல்ன்னு நினைச்சா இங்கே எதுவுமே பெரிய பிரச்சனையா இருக்காது.. காதல் நம்மளை ஒரு மாய உலகத்துல மிதக்க வைக்குதுன்னா நீ ஏன் அதுக்குள்ளயே வாழ கூடாது.? நமக்கு பிடிச்சிருந்தா நாம எந்த முட்டாள்தனத்தையும் டிரை பண்ணலாம்.. இதுதான் நான் உனக்கு சொல்ற கடைசி அறிவுரை.. என்னோட கவுன்சிலிங் இதோடு முடியுது.. நீ நல்லபடியா வாழ்ந்தா அது எனக்கும் ரொம்ப சந்தோசம்.." என்றவள் அவளுக்கு விடை சொல்லி அனுப்பி விட்டாள்.

"எனக்கு உன் மேல வருத்தம் இன்னமும் இருக்கு. ஆனாலும் ஐ லவ் யூ.." என்றாள். அவன் நிம்மதி புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டான்.

"வீட்டு வாசல்ல நீ இப்படி கட்டி பிடிச்சிட்டா அதை மத்தவங்க பார்த்துடுவாங்க.‌." சிறு நாணத்தோடு சொல்லி விட்டு விலகி நின்றுக் கொண்டாள்.

பாதியாய் சாத்தியிருந்த கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். வீடெங்கும் சிவப்பு வண்ண பலூன்கள் பறந்துக் கொண்டிருந்தது. குழப்பத்தோடு சுற்றிலும் பார்த்தாள்.

பாட்டி ஒரு அறையிலிருந்து வெளியே வந்தாள்.

"இதெல்லாம் என்ன பாட்டி.?" என கேட்டவளின் கையை பற்றியவள் "சாரிடா குட்டி.. இனியன் சொன்ன புகாரை நம்பி நான் உன்கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது.. உன்னை திட்டி இருக்க கூடாது.. நீ என் செல்ல பேத்தி. அதை யாராலயும் மாத்த முடியாது.. அவன் மேல இருந்த பாசத்தால உன்கிட்ட ஓரவஞ்சனையா நடந்துக்கிட்டது என் தப்புதான். சாரி.‌." என்றவள் சந்தியாவின் கன்னத்தில் சிறு முத்தம் பதித்து விட்டு மீண்டும் தனது அறைக்கு புறப்பட்டாள்.

"பாட்டி.." குழப்பத்தோடு அழைத்தவளின் முன்னால் வந்து நின்றான் மகேஷ்.

"சாரிம்மா.. உன்னை என் மகளாதான் நினைச்சி வளர்த்தேன்.. ஆனா என் பையன் வந்தவுடனே அவன் உன் மனசை உடைச்சதை பத்தி கவனிக்காம விட்டுட்டேன். அப்போது அவனோட நம்பிக்கையை வாங்கறது எனக்கு ரொம்ப முக்கியமா இருந்தது. ஆனா அந்த நம்பிக்கைக்கு ஏதோ ஒரு விதத்துல நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையை பலியா தந்துட்டேன்.. ஐ யம் சாரி.." என்றவன் அவளது நெற்றியில் முத்தம் தந்தான்.

"இல்ல மாமா.. நான்தான் சாரி சொல்லணும்.. முன்ன பின்ன தெரியாதவன் கூட காதல்ல விழுந்ததே ஒருவகையில் நான் உங்க மேல வச்ச நம்பிக்கையை உடைச்ச மாதிரிதான்.. சாரி.‌."

அவளது தலையை வருடி விட்டான் மகேஷ். "நீ நான் வளர்த்த பொண்ணு.. தப்பான ஒருத்தன் மேல காதல்ல விழ மாட்டன்னு நம்பிக்கை இருந்தது. அப்படி நீ ஒரு தப்பானவனை காதலிச்சி இருந்தா கூட நான் தப்பு சொல்ல மாட்டேன்.. உன் வாழ்க்கை பயணத்துல உனக்கு கிடைச்ச ஒரு பெரிய பாடமா அதை எடுத்துக்கன்னு மட்டும்தான் சொல்லி இருப்பேன். ஏனா முடிஞ்ச நொடி திரும்பி வராது. செஞ்சிட்ட தவறுகளுக்காக உன் வாழ்நாள் முழுக்க தண்டனை தர அளவுக்கு கொடூரன் இல்ல நான். யூ ஆர் மை பிரீசியஸ் ப்ரின்சஸ்.." என்றவன் அவளை அங்கேயே நிறுத்தி விட்டு தான் வந்த வழியிலேயே நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1181
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN