நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 57

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா வியப்பில் இருந்து மீளாமல் இருக்கும் போதே அங்கு சக்தி வந்தாள்.

"அத்தை.."

"என்னை மன்னிச்சிடும்மா.. உன் வாழ்க்கை இப்படி கரடு முரடாக நானும் ஒரு வகையில் காரணமாகிட்டேன்.. நான் உங்க தாத்தாவுக்கு பயந்து இனியனை தனியே விடாம இருந்திருந்தா அவனும் நார்மலான ஒரு கேரக்டரோடு இருந்திருப்பானோ என்னவோ.? நான் உங்க இரண்டு பேரையும் அஞ்சி வருசம் பிரிச்சி வச்சிருந்தது அதை விட பெரிய தப்பு.. என் பையனை நானே நம்பாம போனதை நினைச்சி இப்போது வருத்தப்படுறேன்.. அவன் உன்னை உண்மையாவே நேசிச்சதை நான் நம்பாததுக்கு தண்டனை முழுக்க உனக்கு அமைஞ்சிடுச்சி.. சாரிம்மா.." என்றவள் அவளது கன்னத்தில் முத்தத்தை தந்தாள். சந்தியாவை ஓரடி தள்ளி நிறுத்தி விட்டு வந்த திசையிலேயே திரும்பி நடந்தாள்.

"அத்தை.. இங்கே என்ன நடக்குது.?" என கேட்டவளின் மீது மதுராந்த தூத பூக்கள் மழையாக பொழிந்தது. சிறு ஆனந்த அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள். அவள் தலைக்கு மேலிருந்த பை ஒன்றிலிருந்து பூக்கள் கொட்டி கொண்டிருந்தன.

பூக்களில் நனைந்து நின்றவளின் முன்னால் வந்து நின்றான் இனியன்.

"இனியா.."

"சாரி சந்தியா.. உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. என் குணத்துக்கு இதுக்கு மேலேயும் கூட எத்தனையோ தப்புகளை செஞ்சிட்டு எத்தனையோ மன்னிப்புகளை கேட்பேன்.. ஆனா நான் தெரியாம செய்யும் சிறு சிறு தவறுகளை நீ மன்னிச்சிடுவன்னு நம்புறேன்.. நான் பர்பெக்ட் கிடையாது.. இருபத்தி நாலு மணி நேரமும் நீ என்னோடு வேணும்.. ஆனா முழு நேரமும் கொஞ்சுவேன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. நீ ஏதாவது சின்னதா சிலிர்த்து கொண்டா கூட நானும் முகத்தை திருப்பிப்பேன்தான்.. நம்ம வாழ்க்கையில் ஊடல் எத்தனையோ வந்து போகலாம்.. நான் செய்யும் அக்கப்போரை பார்த்து என் மண்டையை உடைக்கலாம்ன்னு கூட உனக்கு தோணலாம்.. ஆனா எது எப்படி இருந்தாலும் என் ஈகோவை தாண்டி உன் பிடிவாதத்தை தாண்டி நான் உன்னை காதலிக்கிறேன்.. நான் ஒரு இம்சை.. செல்ல இம்சை.. நான் ஒரு சர்வாதிகாரி.‌. காதல் சர்வாதிகாரி.. என்னை உன் காதலனா ஏத்துக்கறியா.?"
அவள் ஆச்சரியத்தில் நின்றிருந்தாள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தன் முதுகு பக்கம் இருந்து ஒரு ரோஜா பூ கொத்துகளை எடுத்து அவள் முன்னால் நீட்டினான்.

"எனக்கு இந்த மண்டியிட்டு கேட்கிறது வராது சந்தியா.. அதனால இப்படியே வாங்கிக்கோயேன்.. ஐ லவ் யூ.." சந்தியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

மண்டியிடா விட்டால் என்ன.? காதலுக்கான நம்பிக்கை தனக்குள் உள்ளதே என நினைத்தவள் அவன் தந்த பூங்கொத்தை கையில் வாங்கினாள்.

"நானும் உன்னை மாதிரிதான்.. பர்பெக்ட் கிடையாது.. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கோபம் வரும்.. இந்த வீட்டுல எப்போதும் எனக்கு இன்பார்டன்ட் இருக்கணும்ன்னு நினைப்பேன்.. எல்லோருடைய செல்ல பிள்ளையாவும் நானே இருக்கணும்.. அவ்வளவுதான்.." என்றவளுக்கு பதில் புன்னகையை தந்தான் இனியன்.

"ஐயம் நாட் பர்பெக்ட்.. பட் யூ ஆர் மை பர்பெக்ட்.." என்றவன் அவளை தன்னோடு அணைத்து கொண்டான்.

"இந்த பூக்கள் ஏது இனியா.‌.?" அவனை அணைத்தபடியே கேட்டாள் அவள்.

"உன் பார்ம்ல இருந்து பறிச்சதுதான்.." அவனை விலக்கி நிறுத்தி விட்டு முறைத்தாள் சந்தியா.

"பைத்தியமா நீ.? எதுக்கு என் பார்ம்ல இருந்து பூக்களை பறிச்ச.?" என்றவள் அவனின் தோள்பட்டையில் அடி தந்தாள்.

"எனக்கு நீதான் முக்கியம்.. இந்த பூக்கள் இல்ல.."

அவள் பரிதாபத்தோடு தரையில் இருந்த பூக்களை பார்த்தாள். அந்த பூக்கள் மலர வேண்டுமென அவள் பட்ட பாடுகள் கண் முன் வந்து போயின.

"என் அத்தனை நாள் கஷ்டத்தையும் ஒரே நாளுல காலி பண்ணிட்டியே.?" என சலித்துக் கொண்டாள்.

"விடும்மா.. நான் என்ன செடியையா பறிச்சேன்.? பூக்கள்தானே.? மறுபடியும் மலர்ந்துட போகுது.." சமாதானம் சொன்னான்.

ஆனாலும் அவளுக்கு வருத்தமே தீரவில்லை. இந்த பூக்களை செடிகளில் தினம் தினம் ரசித்துக் கொண்டிருந்தாள் அவள். இனி ரசிக்க ஒன்றுமில்லை என்ற எண்ணம் மனதை வாட்டியது.

"இனியா.. சந்தியா.." என்றபடி வந்தாள் பாட்டி.

இருவரும் திரும்பி பார்த்தனர்.

"இந்த பூக்களை எல்லாம் சுத்தம் பண்ணிடுங்க.." என்றாள்.

"பாட்டி.." சிணுங்கினாள் சந்தியா.

"சிணுங்கல் போதும் ராஜாத்தி.. சீக்கிரம் சுத்தம் பண்ணிட்டு வா.. பசிக்குது.. சாப்பிடலாம்.." என்றவள் சமையலறைக்குள் புகுந்தாள்.

சந்தியா இனியனை முறைத்தாள். "எல்லாம் உன்னால வந்தது. எதுக்கு இப்படிலாம் செஞ்ச.? இப்ப பாரு இதையும் நாமதான் சுத்தம் செய்யணும்.." என்றவள் தன் சிணுங்கலை நிறுத்தாமலேயே வேலைகளை தொடங்கினாள்.

'படத்துல இந்த மாதிரி செஞ்சா செமையா இருக்கு.. ஆனா நிஜத்துல இப்படி சீன் முடிஞ்ச பிறகு நம்மளையே க்ளீன் பண்ண சொல்றதுதான் உண்மையிலேயே வேதனையா இருக்கு..' என அவனும் மனதுக்குள் புலம்பியபடியே பூக்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

இருவரும் இந்த இடத்தை சுத்தம் செய்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. மதுராந்த பூக்களை கொண்டு போய் குப்பையில் கொட்டுகையில் சந்தியாவிற்கு அழுகை வரும்போல இருந்தது. தன் அருகில் இருந்தவனின் முதுகில் சுளீரென ஒரு அடியை விட்டாள்.

"ஏன்டி..?" என கேட்டவனை கொலை வெறியோடு பார்த்தாள்.

"உன் டிராமாவுக்காக என் பூக்கள் ஏன் உயிரை விடணும்.?"

அவளது தாடையை பிடித்து அசைத்தவன் "நீ ஏன் இவ்வளவு சில்லறையா இருக்க.?" என்றான்.

"சில்லறையா இருந்தா என்ன தப்பு.? பூக்கள் எனக்கு சொந்தமானது.."

"சோ வாட்.? நீ எனக்கு சொந்தமானவளாச்சே.. அதனால அந்த பூக்களும் கூட எனக்குதான் சொந்தம்.‌." என்றான்.

அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு வீட்டுக்குள் நடந்தாள் சந்தியா. அவனும் சிரிப்போடு அவளை தொடர்ந்தான்.

"இவளோட மன பாரம் குறைஞ்சி இருக்குமா.?" சக்தியிடம் கேட்டான் மகேஷ்.

"ஏதோ நமக்கு தோணிய மாதிரி செஞ்சிட்டோம்.. இதுக்கு மேல அவ மன பாரம் குறையுறது அவ மனசுலதான் இருக்கு.." என பதிலை சொன்னாள் சக்தி.

பொன்னி அனைவருக்கும் உணவை பரிமாறினாள். பாயாசத்தையும் பரிமாறினாள்.

"சாப்பாடு செம டேஸ்ட் பாட்டி.." என்றபடி சாப்பிட்டாள் சந்தியா.

"நீயும் ஒரு பொட்ட புள்ளை.. சோறு ஆக்க தெரியுதா உனக்கு.?" என்று சீறினாள் பொன்னி.

'ஒரு நொடி வெயில்.. மறு நொடி மழை.. இதுதான் வாழ்க்கையா.?' என யோசித்தவள் "ஓகே பாட்டி.. இனி நானே சமைக்கிறேன்.. பொன்னியோட பேத்தி சந்தியாதான் இந்த உலகத்துலயே சிறந்த சமையல் கலை தெரிஞ்சவன்னு நாடே புகழுற அளவுக்கு சமைக்க கத்துக்கறேன்..'' என்றாள். அவள் சொன்ன தோரணையை கண்டு இனியனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. பல்லை கடித்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

இரண்டு வாரங்கள் கடந்த ஒரு பாதி இரவில் முத்து குடிப்போதையோடு வீட்டின் முன் வந்து நின்றார்.

"அந்த கீழ் சாதிகாரி கூட சேர்ந்துக்கிட்டு என்னையே மாந்தோப்புல தனியா விடுறிங்களா.? இன்னைக்கு உங்க மண்டையை பிளந்துடுறேன்.." போதையில் உளறினார் அவர்.

தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்த்தவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.

"தாத்தா.. அமைதியா வந்து தூங்குங்க.. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்.." என்றான் இனியன்.

"என் பேரன் நீ.. என் குலத்தோட வாரிசு நீ.. உனக்கு நம்ம சாதியோட பெருமையும் கர்வமும் தெரியணும்.. நம்மளோட வம்சம் எப்படிப்பட்டது தெரியுமா.? அதுல போய் கலப்படம் பண்ணிட்டான் உன் அப்பன்.. நீ அவன் பேச்சை கேட்காத.. நீயாவது நம்ம சாதி பெருமையை காப்பாத்து.. இவங்க எல்லாரும்.." அவர் மீதி சொல்லி முடிக்கும் முன் அவரது தலையில் வந்து மோதியது ஒரு சமையல் கரண்டி.

வாசலில் இடுப்பு சேலையை தூக்கி சொருகியபடி ஆவேசமாக நின்றிருந்தாள் பொன்னி.

"இது என் வீடு.. இது என் குடும்பம்.. இதை கட்டி காக்கற நான்தான்.. என் குடும்பத்துக்கு என் வீட்டுக்கு என்ன தேவையோ அதை நானே பார்த்துப்பேன்.. நீ மரியாதையா இங்கிருந்து போயிடு.." என்றாள்.

"பாட்டி.. இவர் போதையில் இருக்காரு.. ஏன் இப்படி பண்றிங்க.?" சோகமாக கேட்டபடி முத்துவை தோட்டத்து குளியலறைக்கு இழுத்து சென்றான் இனியன்.

அவரை குளியறைக்குள் தள்ளி ஜில்லென்று தண்ணீரை மேலே கொட்டினான்.

"உன் பாட்டிக்கு கொழுப்பு அதிகம்டா.. அவ சரியா இருந்திருந்தா எந்த குழப்பமும் வந்திருக்காது.." முனகினார் அவர்.

"ஒரு நாளைக்கு கவலைப்பட எத்தனை விசயம் இருக்குன்னு தெரியுமா தாத்தா.? இதுல தேவையே இல்லாத சாதியை பத்தி கவலைப்பட்டு என்ன செய்ய போறோம்ன்னு சொல்லுங்க.. என்னை பிடிச்சிருக்கு. ஆனா என் அம்மாவை குறை சொல்றிங்க.. என் அம்மா இல்லன்னா நான் பிறந்திருக்க முடியுமா.? சாதி கௌரவத்தை விட மனுசங்க மனசு முக்கியம் இல்லையா.?" என கேட்டவன் அவரை எழுப்பி நிறுத்தினான். அருகிலிருந்த கொடியிலிருந்து துண்டையும் லுங்கியையும் எடுத்து வந்தான்.
முத்துவின் தலையை துடைத்து விட்டான். "உங்களுக்கு வேணா எங்க அம்மா தேவையில்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு என் அம்மா தேவை.. சாதிக்காக இத்தனை வருசமா எங்க அம்மாவை வெறுத்திங்க நீங்க.. இனி எனக்காக என் அம்மாவை வெறுக்காம இருங்களேன்.. என்னை விடவா உங்க சாதி உங்களுக்கு முக்கியம்.?" என கேட்டான்.

பாதி போதை தெளிந்தும் மீதி தெளியாமலும் இருந்தவர் இனியனின் கையை பற்றினார்.

"மன்னிச்சிடுடா இனியா.. இனி உனக்காக நான் சாதி பத்தி பேசாம இருக்கேன்.." என்றார். அவர் போதையில் உளருகிறார் என்று அவனுக்கும் புரிந்தது. ஆனாலும் ஏதும் சொல்லாமல் அவருக்கு உடையை மாற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றான்.

அதற்குள் அனைவரும் உறங்க சென்று விட்டிருந்தனர்.

"பாட்டி.. கதவை திறங்க.." பொன்னியின் அறை கதவை தட்டினான் இனியன்.

பொன்னி கதவை திறந்தாள். "என்னடா உனக்கு.?" என்றாள் எரிச்சலோடு.

"தாத்தா தூங்கணுமேன்னு கூட்டி வந்தேன்.."

"அந்த கிழவனை கொண்டு போய் வாசல்ல தள்ளு.. கதவோரம் உருண்டு இருந்துட்டு காலையில் எழுந்து தோப்புக்கு கிளம்பட்டும்.." என்றவள் கதவை சாத்திக் கொண்டாள்.

"அடியேய்.. என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு எளக்காரமா இருக்காடி..? நான் இப்ப நினைச்சாலும் எவளை வேணாலும் கல்யாணம் பண்ணுவேன் தெரியுமா.?" என அவர் சொல்ல இனியன் தலையில் அடித்து கொண்டான்.

"மப்புல உளராத தாத்தா.." என்றான்.

பொன்னி அறை கதவை திறந்தாள்.

"உன் அன்னைய மொகரை லட்சணத்துக்கே எவளும் கிடைக்கலன்னுதானே உங்கொப்பன் என்னை கட்டி வச்சாரு.. இப்ப ஏழு கிழவனா ஆன பிறகு காடு வா வா வீடு போ போங்கற வயசுல உனக்கு வப்பாட்டி வேணுமோ.? போ.. போய் வீதி வீதியா தேடு.. எவளாச்சம் ஒருத்தி உன்னை திரும்பி பார்த்துட்டா நான் என் ஒரு பக்க காதை அறுத்துக்கறேன்.."

இனியன் இன்னொரு முறை தலையில் அடித்துக் கொண்டான்.

"நீயுமா பாட்டி.? அவர்தான் போதையில பேசுறாரு.. நீயும் ஏன்.?" என்றான்.

"நீ அமைதியா போடா.. இந்த ஆளு மேல அவ்வளவு வெறி.. ஆனா இத்தனை வருசமா எதையும் வெளி காட்ட முடியாம போச்சி.. ஆனா இனிதான் இந்த ஆளுக்கு கச்சேரியே வச்சிருக்கேன்.." என்றவள் முத்துவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஹாலில் இருந்த சோபாவிற்கு வந்தாள்.

"இஷ்டமா இருந்தா இங்கே தூங்கு.. இல்லன்னா இப்பவே வீட்டை விட்டு கிளம்பு.." என்றபடி அவரை சோபாவில் தள்ளினாள்.

"இந்த இருட்டுல என்னால தோப்புக்கு போக முடியாதுன்னு இப்படி பண்றியா.? இருடி.. பொழுது விடியட்டும்.. அப்புறம் உன் வாயை உடைக்கிறேன்.." என்றவர் கவிழ்ந்து படுத்தார்.

"போய் தூங்குடா நீ.." என்று இனியனை விரட்டிய பொன்னி தானும் தூங்க சென்றாள்.

பத்து நிமிடம் கழித்து இனியன் போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். தாத்தா குளிரில் உறங்குகிறாரே என கவலைப்பட்டு வந்தவன் முத்துவிற்கு பொன்னி போர்வையை போர்த்தி விடுவதை கண்டு திகைத்து போனான்.

முத்து தன் மீது போர்வை படருவதை கண்டதும் கண் விழித்தார். தள்ளாட்டத்தோடு எழுந்து அமர்ந்தார்.

"தண்ணீர் ஏதும் வேணுமா.?" என கேட்டபடி கிச்சனை நோக்கி புறப்பட்டாள் பொன்னி. அவளது கையை பிடித்து நிறுத்தினார் முத்து.

"ஏய் கிழவி.. நீ கிழவிதானடி.?" என்றார்.

"ஆமா கெழவா.." என்றவளை தன் அருகே இழுத்து அமர வைத்தார் அவர்.

"கெழவனா நானா.? நான் இன்னும் வயசு பையன்டி.." என்றவர் அவளது முகத்தை ஆவலோடு உற்று பார்க்க இனியன் சத்தமில்லாமல் தனது அறைக்கு வந்து சேர்ந்தான்.

"என்ன நடக்குது இங்கே.? வெளியே அத்தனை கத்து கத்தினாங்க.. இப்ப ரொமான்ஸ் மூடுக்கு போயிட்டாங்க.. ச்சை.. இந்த நேரத்துலயா நான் போர்வையை எடுத்துட்டு போகணும்.?" என நினைத்து நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"ராத்திரியில் எதுக்கு உளறிட்டு இருக்க.? வந்து தூங்கு வா.." என்றவள் மீண்டும் கண்களை மூடி கொண்டாள்.

"தூக்கம் வந்து பாழா போச்சி.." என புலம்பிக் கொண்டே கட்டிலில் விழுந்தான் அவன்.

"இந்த உலகத்துல எதுதான் உண்மை.? உண்மையிலேயே சில புருசன் பொண்டாட்டிங்க நிஜமான சண்டைதான் போடுறாங்களா.? இல்ல சண்டை போடுற மாதிரி நடிக்கிறாங்களா.? ஆனா ஒன்னு மட்டும் தெரியுது.. இங்கே பல பேரு வேணும்ன்னே வம்புக்காகவே சண்டை போடுறாங்க.." அவனது புலம்பல் சந்தியாவின் காதுகளிலும் விழுந்தது. அவனது நெஞ்சில் தனது தலையை சாய்த்துக் கொண்டவள் "அமைதியா தூங்கு.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1291
VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN