நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது.

விஷ்வாவின் அருகே அமர்ந்திருந்த காயத்ரி அரவம் கேட்டு திரும்பி பார்த்தாள். பொன்னா தயக்கமாக அந்த அறைக்குள் வந்தாள். இவ்வளவு நேரம் தந்தையின் அருகே அமர்ந்திருந்தவளுக்கு விஷ்வாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் இங்கு வந்திருந்தாள்.

"உள்ளே வாம்மா.." என்று புன்னகையோடு அழைத்தாள் காயத்ரி. பொன்னா தயக்கம் நீங்காமலேயே வந்து அவள் அருகே நின்றாள்.

காயத்ரிக்கும் அவளது தயக்கம் புரிந்தது. சூழ்நிலையை கலகலப்பாக நினைத்தாள் அவள்.
"நல்ல லட்சணமான பொண்ணா இருக்கம்மா.." என்றாள். பொன்னாவின் கன்னத்தில் சிறு வெட்க சிவப்பு அரும்பியது.

"என் பேர் புவி இல்ல.. பொன்னா.. பொன்னாம்பல்.." என்று தயக்கமாக சொன்னாள் பொன்னா.
"பொன்னாம்பல்.. நல்ல பேரா இருக்கே.. அப்புறம் ஏன் இவன் மாத்தி சொன்னான்.?" இயல்பான குரலில் கேட்டாள் காயத்ரி.

பொன்னா தரையை பார்த்தாள். "என் பேர் பழமையா இருக்குன்னு நீங்க நினைச்சிடுவிங்கன்னு இவர் மாத்தி சொன்னதா சொன்னாரு.." என்றாள் வருத்தத்தோடு.

காயத்ரி அவளின் தலையை வருடிவிட்டாள். "உன் பேரு பழமையா ஏதும் இல்ல.. நல்ல அழகான பேரா இருக்கு.." என்றாள்.

"தேங்க்ஸ்.." என்றாள் சிறு வெட்கத்தோடு.

சில நிமிடங்கள் இப்படியே கடக்க, "நீ கொஞ்சம் இவனை பார்த்துட்டு இருக்கியா நான் போய் ஒரு ஃபோன் பண்ணிட்டு வரேன்.?" என்று கேட்டாள் காயத்ரி.

"சரிங்க.." பொன்னா தலையசைத்ததும் எழுந்து வெளியே நடந்தாள் காயத்ரி.

காயத்ரி அங்கிருந்து சென்றதும் விஷ்வாவின் அருகே வந்து அமர்ந்தாள் பொன்னா. அவனது கையை பற்றியபடி அவனது முகத்தை பார்த்தாள். தலையில் போட்டிருந்த கட்டும் அவனது கைகளில் இருந்த சிராய்ப்பும் பொன்னாவிற்கு மன வருத்தத்தை தந்தது.

"சாரி விஷ்வா.. நீங்க என்னை பார்க்க வந்ததாலதான் இப்படி உங்களுக்கு ஆச்சி.." என்று அவனது கையை எடுத்து தன் நெற்றியில் வைத்து கொண்டாள். கண்களை மூடி அவனது கையை பற்றியபடி அமர்ந்திருந்தவளுக்கு கண்களின் ஓரத்தில் ஈரமாகியது.

செங்கா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அதனால் அவளை விட்டுவிட்டு சாமிநாதனை கவனிக்க வந்த கலையரசி அவனருகிலேயே அமர்ந்தபடி உறங்கி போனாள்.

மருத்துவமனையில் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்த அதியன் போனால் போகிறதென்று‌ தனியாக இருந்த செங்காவிற்கு துணையாக இருக்க நினைத்து அவள் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அதியன். அவளது கையிலும் காலிலும் சில தழும்புகள் தெரிந்தன. உற்று பார்க்கையில் அவளது கன்னங்களில் கூட சிறு சிறு தழும்புகள் இருந்தது.

காட்டில் ஒரு முறை துரத்தி வந்த யானை ஒன்றுக்கு அவள் பயந்தோடி முள் புதரில் சிக்கியதால் உண்டான காய தழும்புகள் அது என்று அவனுக்கெப்படி தெரியும்.?

"நான் என் வாழ்நாள்ல உன்னை மாதிரி ஒரு பொண்ணை பார்த்ததே இல்லை தெரியுமா.? நீ ஏன் இப்படி இருக்கன்னு தெரியல. நீ கொஞ்சம் க்யூட்தான். ஆனா ரொம்ப அடங்காபிடாரியா இருக்க.." என்றவன் அதன் பிறகும் வெகு நேரத்திற்கு அவளையேதான் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

விஷ்வாவின் அருகே அமர்ந்திருந்த பொன்னா அங்கிருந்து கிளம்ப நினைத்து எழுந்து நின்றாள். "நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்கறேன்.." என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப விஷ்வா என்னவோ முனகினான். பொன்னா ஆச்சரியத்தோடு திரும்பி பார்த்தாள். அவன் முகம் சுளித்தபடி கையை அசைக்க முயற்சித்து கொண்டிருந்தான்.

"விஷ்வா.." அவனது கன்னம் பற்றி அசைத்தாள் பொன்னா. அவன் மீண்டும் ஏதோ முனகினான். பின்னர் கொஞ்சமாக கண்களை திறந்து பார்த்தான்.

"பு.. புவி.." என்றான் திக்கலாக. அவனது தலையில் கொட்ட வேண்டும் போல கோபம் வந்தது பொன்னாவிற்கு.

"என்ன ஆச்சி எனக்கு.? ஏன் உன் கழுத்தெல்லாம் காயமா இருக்கு.?" என்று கேட்டான்.

"எனக்கும் முழுசா தெரியாது.." என்றவள் தனக்கு நினைவில் இருந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.

"இப்ப உன் அப்பா நல்லாருக்காரா.?" முக வாட்டத்தோடு கேட்டான் அவன்.

"இப்ப நல்லாருக்காரு.." என்று சொன்னவள் காயத்ரி உள்ளே வருவதை கண்டு அவனை விட்டு சற்று விலகி நின்றாள்.

"விஷ்வா.. தடிபயலே.. ஏன்டா என்னை இப்படி பயப்படுத்தின.?" என கோபமும் அழுகையுமாக கேட்டாள் காயத்ரி.

சிரிப்போடு அம்மாவை பார்த்தவன் "சாரிம்மா.." என்றான்.

மருத்துவர் வந்து அவனை பரிசோதித்தார். இனி அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டு சென்றார்.

விஷ்வா கண் விழித்த செய்தி ஓடி வந்து பார்த்தான் அதியன். கை விட்டு போன டீல்தான் அவனுக்கு முதல் நினைவாக வந்தது. ஆனால் அடுத்ததாக நூலிழையில் அவன் இறந்து போயிருப்பான் என்ற நினைவு வந்ததும் அமைதியாகி கொண்டான்.

"இப்ப எப்படி இருக்கு.?" என கேட்டு அவனை அணைத்துக் கொண்டான்.

"இப்ப பரவாலடா.." என்று நண்பனுக்கு பதில் சொன்னவன் தனது பார்வையை உடனடியாக பொன்னா பக்கம் திருப்பி அவளின் கழுத்து காயங்களை வருத்தத்தோடு பார்த்தான்.

'இவங்களை திருத்த ஆண்டவனால கூட முடியாதுடா சாமி..' என நினைத்த அதியன் அவனிடமிருந்து விலகி கொண்டான்.

மறுநாள் காலையில் சாமிநாதன் அருகில் இருந்த நாற்காலியில் அமரந்தபடி உறங்கி கொண்டிருந்த கலையரசியை வந்து உலுக்கினாள் மகேஷின் மனைவி சக்தி. கண்விழித்து பார்த்த கலையரசி தன் தோழியை கண்டதும் பரவசத்தோடு எழுந்து அணைத்துக் கொண்டாள்.

"சக்தி.."

மறுபக்கம் வந்து நின்ற மகேஷ் சாமிநாதனை வருத்தத்தோடு பார்த்தார்.

(எந்தன் நேசம் கதையில் சாமிநாதனை அவன் இவன் என்றே அழைத்திருந்தோம். ஏனா இவங்க வாழ்வியலை அதுல சொன்னதால அவர் இவர்ன்னு மரியாதை தரல.. ஆனா இனி இவங்க ஹீரோயின்ஸ்க்கு பேரண்ட்ஸா பதவி உயர்வு பெற்றதால் இனி அவர் இவர் என்றே அழைக்கப்படுவார்கள். எந்தன் நேசத்தையும் காதல் சர்வாதிகாரியையும் தொடர்ச்சியா படிச்சிட்டு இதுக்கு வந்தவங்களுக்கு முதல் ஒன்னு இரண்டு எபி கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கும். கதை எழுதும்போது எனக்கே அப்படிதான் இருந்தது.😛 ஆனா அப்புறம் சரியா போயிடும்ன்னு நம்புறேன். ஆனா மகேஷை அவர் இவர்ன்னு கூப்பிடதான் ஒரு மாதிரியாவே இருக்குப்பா..😳)

"நாதா.. டேய் நாதா.." உறங்கி கொண்டிருந்தவரை உலுக்கி எழுப்பினார் மகேஷ். கண்விழித்து பார்த்த சாமிநாதன் நண்பனை கண்டதும் எழுந்து அமர்ந்தார்.

"எப்படா வந்த மகேஷ்.?" உறங்கி எழுந்த கண்களை கசக்கியபடி கேட்டார்.

"இப்பதான் வந்தேன்.. எங்கம்மா வேண்டுதல்ன்னு எங்க இரண்டு பேரையும் திருப்பதி அனுப்பிட்டாங்க. அதனாலதான் நேத்தே உங்களை வந்து பார்க்க முடியல.. சாரிடா.." என்ற மகேஷ் நண்பனை அணைத்துக் கொண்டார்.

"ஒரே நேரத்துல மொத்த குடும்பமும் ஹாஸ்பிட்டல்ல படுத்திட்டுருக்காங்க மகேஷ்‌‌.. மூணு பேரும் மூணு பெட்ல இருந்தா எனக்கு எப்படி.." மேலே சொல்ல இயலாமல் அழுத கலையரசியை தன்னோடு அணைத்துக் கொண்டாள் சக்தி.

"விடுப்பா.. இவங்களுக்கு ஒன்னும் ஆகாது.." என்று ஆறுதல் சொன்னாள்.

"நான் ரொம்ப பயந்துட்டேன் சக்தி.." என்று தோழியை அணைத்தபடி அழுது தீர்த்தாள் கலையரசி.

"எனக்கு அந்த சீனு மேல செம கடுப்பு.. அவனை என் ஸ்டைல்ல தூக்கறன்னு சொன்னேன்.. ஆனா என் பையன்தான் நான் சட்டபடி அவனை தண்டிக்கணும்ன்னு சொல்லி எனக்கு தடை போட்டுட்டான்.. இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அவனை நான் மாறு கை மாறு கால் வாங்கி விட்டிருப்பேன்.." என்று கர்ஜித்தார் மகேஷ்.

சாமிநாதன் நெற்றியின் மீது இடது கையை வைத்தபடி கட்டிலில் படுத்தார்.

"மனைவியும் மகனும் போலிஸா இருக்கற வீட்டுல ரவுடித்தனம் செய்ய உன்னாலதான்டாப்பா முடியும்.." என வியந்தார் அவர்.

"எல்லாம் என் தலையெழுத்து சாமிநாதா.." என்று அதுதான் சாக்கென்று சலித்துக் கொண்டாள் சக்தி.

"நான் போய் என் காட்டுவாசி மருமகளை பார்க்கறேன்.." என்று எழுந்து நின்றார் மகேஷ். "அவ எந்த ரூம்ல இருக்கா.?" என்றார் கலையரசியிடம்.

கலையரசி தகவலை சொன்னதும் வெளியே நடந்தார். "உன் புருசன் இப்ப கூட என்னை பார்க்க வரல.. என் மகளை பார்க்கதான் வந்திருக்கான் போல.. உன் மகனுக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா அவனுக்கு கூட என் மகளை கட்டி தந்திருப்பேன் நான்.." என்று சிரிப்போடு சொன்னார் சாமிநாதன். சக்தியும் அவனோடு சேர்ந்து சிரித்தாள்.

மகேஷ் செங்காவின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். சாய்ந்து அமர்ந்திருந்த செங்கா தன் கரங்களால் முகத்தை மூடிக் கொண்டிருந்தாள்.

அவளருகே வந்து அமர்ந்த மகேஷ் அவளது முகத்தை பற்றியிருந்த கையை எடுத்து விட்டார். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய விசித்து விசித்து அழுதுக் கொண்டிருந்தாள்.
"என்னாச்சிம்மா.?" பதட்டமாக கேட்டார் மகேஷ்.

"மாமோவ்.. எங்கப்பன்னை அந்த சீனு அடிச்சிபுட்டான்.." என்று தன் அருகே வந்தவரின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள் அவள்.

"சரி விடு.. அவனை இந்த மாமன் அடிச்சிபுடுறேன்.." என்று அவளுக்கு ஆறுதல் சொன்னார் மகேஷ்.
செங்காவை சும்மா பார்த்து செல்லலாம் என்று அந்த பக்கம் வந்த அதியன் அவளது அழுகை கண்டு அதிர்ச்சியோடு வாய் மீது கை வைத்தான். "இவ இன்னுமா இதை விடல..?" என்று ஆச்சரியத்தோடு தனக்கு தானே கேட்டுக் கொண்டான்.

"நான் அத்தனை அடி அடிச்சும் அவன் பொழச்சிக்கிட்டான் மாமா.. எனுக்கு ஏன் மாமா அவனை அடிச்சி கொல்ற அளவுக்கு தெம்பில்லாம போச்சி.?" என்று அவள் ஒப்பாரி பாடலாக கேள்வியை கேட்டாள்.
"உனக்கு இன்னைக்கு தெம்பு இல்லன்னா என்ன விடு.. நாளைக்கு தெம்பு வந்ததும் அவனை அடிச்சிக்கலாம்.. எங்க போயிட போறான் அந்த பன்னாட பையன்.? உன்கிட்ட வாங்கிய அடியால் உடம்பு தேறி எழட்டும்.. அப்புறம் போட்டு பின்னி எடுத்துடலாம்.." என்று ஆறுதலை சொன்னார் மகேஷ். சீனு எழுந்து பழையபடி நடக்க சில மாதங்கள் ஆகும் என மருத்துவர் சொன்னதை கடைசி வரை செங்காவிடம் சொல்லவே இல்லை அவர்.

ஒருவாரம் ஓடி விட்டிருந்தது.

சாமிநாதன் தன் இரு மகள்களோடு இடிந்து கிடந்த தன் வீட்டின் முன்னால் நின்றுக் கொண்டிருந்தார். அவர்களோடு உடன் வந்திருந்த மகேஷ் அந்த வீட்டின் கீழே சிக்கியிருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தார்.

"கலையோட அப்பாதான் அந்த வீட்டையும் சொத்தையும் அவ பேருக்கே எழுதி வச்சிருக்காரு இல்ல. இனி நீங்க அங்கேயே தங்கலாம் இல்ல.?" என்று கேட்டாள் சக்தி.

"இல்ல சக்தி.. இதுதான் எங்க வீடு.. அதோ தெரியுதே வயல்காடு அதுதான் எங்க சொத்து.. இது நாங்களா சம்பாதிச்ச சொத்து.. இதுக்கு இந்த மொத்த உலகத்தையே தந்தாலும் கூட சரிசமம் ஆகாது.. எங்களால இந்த இடத்தை விட்டுட்டு வேற எங்கேயும் தங்க முடியாது.." என்று சொன்னார் சாமிநாதன்.

அதே வேளையில் மண்ணுக்கடியில் தேடிக் கொண்டிருந்த மகேஷ் பெட்டி ஒன்றை எடுத்து வெளியே வைத்தார்.

"இந்த பெட்டியாடா.?" என்று கேட்டார் நண்பனிடம்.

"ஆமான்டா.." என்று பெட்டியை திறந்து பேங்க் கணக்கு புத்தகங்களை கையில் எடுத்தார்.

"புது வீடு கட்டணும்ன்னு சேர்த்து வச்சிருந்தேன்டா இந்த காசை.. இன்னும் ஒன்னு இரண்டு மாசத்துல நானே வேலையை ஆரம்பிக்கலாம்ன்னு இருந்தேன்‌. ஆனா காலம் அதுக்கும் முன்னாடியே கூடி வந்துடுச்சி போல.." என்றவர் இடிந்து கிடந்த வீட்டை பெருமூச்சோடு பார்த்தார்.

"போன வெள்ளாமையில் அடிச்ச எட்டு மூட்டை கேழ்வரகும் மூணு மூட்டை கம்பும் இப்படி வீட்டை இடிச்சதுல வீணா போயிடுச்சிடா. இப்படி ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா அதையெல்லாம் வித்திருப்பேன்.." என்றவருக்கு மனம் வேதனை கொண்டது.

அடுத்து வந்த நாட்களில் சாமிநாதன் வீடு கட்டும் வேலையை தொடங்கினார்.

அங்கு பக்கத்தில் இருந்த ஒரு பாட்டி அவர்கள் நால்வரையும் தன் வீட்டில் தங்கி கொள்ள சொல்லி இடம் தந்தாள். மகேஷும் சாமிநாதனுக்கு உதவிகளை செய்தார்.

வீடு கட்ட முதல் பூசையை போட்டுவிட்டு பொன்னாவும் தன் கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.
செங்காவிற்கு முதுகில் பட்ட அடியால் ஒரு மாதத்திற்கு படுத்தபடி ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லி விட்டார். ஆனாலும் அவள் அவ்வப்போது எழுந்து நடந்துக் கொண்டுதான் இருந்தாள்.

ஒரு மாதங்கள் முடிந்த பிறகே பூங்கோதை கோமாவில் இருந்து கண் விழித்தாள். அவள் எழுந்தது லாரன்ஸ்க்கு பெரும் நிம்மதியை தந்தது. ஆனால் அதன்பிறகு அவள் ஏதும் அதிகம் பேசவில்லை. எப்போதும் எதையாவது வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

சீனு உடம்பிலிருந்த கட்டுக்களை அவிழ்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தான். அவனை தேடி வந்த கலையரசி அவன் முன் பத்திரத்தை நீட்டினாள்.

"எனக்கும் என் குடும்பத்துக்கும் இந்த சொத்து தேவையில்லை சீனு.. எங்களுக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு நாங்க கையெழுத்து போட்டிருக்கோம்.. எல்லோரும் உன் மேல கேஸ் கொடுக்க சொன்னப்ப நான் வேணாம்ன்னு தடுத்து உன்னை சுதந்திரமா விட காரணம் என் அண்ணன் மேல இருக்கும் அரைகுறை பாசம்தான்.. ஆனா நீ இனி எப்பவும் எங்களை தொந்தரவு செய்யாதே.." என சொல்லிவிட்டு சென்றாள்.

தன் கையில் இருந்த பத்திரத்தை பார்த்து சிரித்தான் சீனு. "எனக்கு உன் மகள் முழுசா வேணும் அத்தை.. பொண்டாட்டியா வேணும்.." என்றான் கையிலிருந்த காகிதத்தை கசக்கியபடி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE
COMMENT
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN