நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் அலுவலகம் கிளம்பிய பிறகு யதிராவும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

ஐந்து நிமிடங்கள் தாமதமாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள். குரு அந்த ஐந்து நிமிட தாமதத்திற்கு அரைமணி நேரம் அறிவுரை சொன்னான்‌. யதிரா அவன் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு சரியென தலையசைத்தாள்.

தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் பெருமூச்சோடு நெஞ்சில் கை வைத்தாள்‌. குருவின் அறிவுரைகளை கேட்டு அவளது இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

'எல்லாம் மாமாவால் வருவது.. காலங்காத்தால ரொமான்ஸ்.. அவரால நான் லேட்டா புறப்பட்டு வந்து இங்கே திட்டு வாங்கிட்டேன்..' என்று மனதுக்குள் புலம்பினாள். இனிமேல் காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரம் வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

கே.கே முகிலின் முன்னால் வந்து அமர்ந்தாள். அவளது முகத்தை பார்க்கும்போது ஏதோ முக்கியமான விசயம் என்று அவனுக்கு புரிந்தது.

"என்ன கே.கே.?" என்றான்.

"உங்க அக்காவும் மாமாவும் ஏன் விவாகரத்து வாங்கினாங்கன்னு என்னால இன்னும் கண்டுபிடிக்க முடியல சார்.." என்றாள்.

அவள் சொன்னது அவனுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டது.

"சரி விடு. இன்னும் டைம் எடுத்துக்க." என்றான் சோர்வாக.

"ஆனா இன்னொன்னு கண்டுபிடிச்சிருக்கேன் சார்.." என்றவள் தனது கையை பிசைந்தாள்.

"என்னன்னு சொல்லு கே.கே.." என்றான் முகில்.

"உங்க அக்கா மூணு வருசத்துக்கு முன்னாடி அவங்களோட எக்ஸ் ஹஸ்பண்ட்க்கு ஐம்பது லட்ச ரூபா தந்திருக்காங்க.." என்றாள்.

அவள் சொன்னது கேட்டு வயிற்றை பிடித்தபடி சிரித்தான் முகில். "ஐம்பது லட்சமா..? அதுவும் சௌந்தர்யா அவனுக்கு தந்திருக்காளா..? நீ ஏன் காலையிலேயே இவ்வளவு காமெடி பண்ற கே.கே..?" என்று கேட்டான் முகில்.

கே.கே ஒரு பேப்பரை எடுத்து அவன் முன் வைத்தாள். "உங்க வீட்டு மேல உங்க அக்கா வாங்கிய லோன் பற்றிய விவரம் இதுல இருக்கு சார்.." என்றவள் அடுத்த பேப்பரை எடுத்தாள். "இது உங்க அக்காவோட மொத்த நகை மேல இருக்கும் கடன் அளவு.. அப்புறம் இது உங்க அக்கா தனி தனி லோன் மூலமா வாங்கியிருக்கும் கடன் பற்றிய தகவல்கள்.." என்றாள்.

முகில் குழப்பத்தோடு அவற்றை பார்வையிட்டான். அனைத்து கடன்களும் சௌந்தர்யா பெயரில்தான் இருந்தது.

"ஆனா.." வார்த்தை வராமல் தயங்கியவனின் முன்னால் இன்னொரு பேப்பர் துண்டை எடுத்து வைத்தாள் கே.கே.

"இது உங்க அக்கா அக்கவுண்ட்ல இருந்து ரூபனோட அக்கவுண்டுக்கு பணம் மாறியதுக்கான ஆதாரம்.." என்றாள்‌.

முகில் தலையை பிடித்தான். "என்ன நடந்தது அவங்களுக்குள்ள.?" என்றான்.

"எனக்கும் தெரியல சார். உங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் இடையில வேற ஏதோ பிரச்சனை இருக்கும்ன்னு தோணுது.." என்றாள் கே.கே.

"எனக்காக இன்னும் கொஞ்சம் விசாரி கே.கே." என்றான் முகில்.

"ஓகே சார்.." என்று எழுந்தவள் தயக்கமாக அவனை பார்த்தாள்.

"நீங்க இவ்வளவு நாள் சம்பாதிச்சி தந்த பணத்தை கூட முக்கால்வாசி உங்க அக்காதான் செலவு பண்ணியிருக்காங்க சார்.." என்றாள்.

அவன் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தான். கே.கே அவனது தோளில் தட்டி தந்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

'சௌந்தர்யா.. என்னதான் செஞ்ச நீ.? எதுக்காக நீ இவ்வளவு பணத்தை கை மாத்தி விட்ட.? நீ எவ்வளவு பெரிய பேராசைகாரின்னு எனக்கு தெரியும். நீ இன்னொருத்தனுக்கு அதுவும் பிரிஞ்சி போன ஒருத்தனுக்கு இவ்வளவு பணம் தர வேண்டிய அவசியம் என்ன‌.?' என்று யோசித்தான்.

சௌந்தர்யாவிடமோ ரூபனிடமோ நேரடியாக கேட்டால் நிச்சயம் தகவல் வந்து சேராது என்பதை அறிவான் அவனும். கே.கே தனது பாணியில் எதையாவது கண்டுபிடிக்கும் வரை அமைதி காத்துதான் இருக்க வேண்டும் என்று புரிந்துக் கொண்டான்.

யதிரா அவசரத்தில் அன்றைய உணவை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்து விட்டாள். அதனால் கேண்டினுக்கு போய் சாப்பிடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. கைப்பையில் இருக்கும் பணத்தை எண்ணி பார்த்தாள். பணம் குறைவாகதான் இருந்தது. காப்பியாவது பருகி வரலாம் என நினைத்து எழுந்தாள்.

யதிரா கேண்டினுக்கு வந்ததும் அவளிடம் ஏற்கனவே பழக்கமாகி இருந்த மற்றவர்கள் கையசைத்து அவளை தங்கள் அருகே அழைத்தனர். யதிரா அவர்களின் கூட்டத்தின் நடுவே சென்று அமர்ந்தாள்.

"நான் புட் ஆர்டர் பண்ண போறேன்.. உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க. நானே வாங்கிட்டு வரேன்.." என்று எழுந்தான் வர்சன்.

"இல்ல நானே வாங்கிக்கறேன்.." என்று அவசரமாக சொன்னாள் யதிரா.

"அட பரவால்ல சொல்லுங்க.." என்று மீண்டும் கேட்டான் அவன். சுற்றி இருந்தவர்களில் இன்னும் இருவர் எழுந்து நின்று மற்றவர்களுக்கு என்ன தேவை என கேட்டு சென்றனர். இவர்களின் தினசரி வழக்கம் இது என புரிந்துக் கொண்ட யதிரா "ஒரு காப்பி.." என்றாள்.

"சாப்பிட என்ன வேணுங்க.?" என்று கேட்டான் வர்சன்.

"காப்பி மட்டும் போதும்.." என்றவளை அனைவரும் குழப்பமாக பார்த்தனர்.

வர்சன் அவளை குறுகுறுவென பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

"அப்புறம் யதிரா.. உங்க வீட்டுல யார் யாரெல்லாம் இருக்கிங்க.?" என்று கேட்டாள் நடுத்தர வயதை நெருங்கி கொண்டிருக்கும் வேணி.

"நான்.. அம்மா.. அண்ணன்.. அண்ணி.." என்றவளுக்கு உங்கள் வீடு என கேட்டதும் பிறந்த வீடுதான் சட்டென நினைவுக்கு வந்தது. முகிலை பற்றி சொல்லாமல் போனோமே என தாமதமாகதான் அறிவு வந்தது. அவனை பற்றி சொல்ல வாயெடுத்தவள் சட்டென நிறுத்திக் கொண்டாள். கழுத்தில் தாலி இல்லை, விரலில் மோதிரம் இல்லை, காலில் மெட்டியும் இல்லை.. தான் தனது முன்னாள் கணவனோடு சேர்ந்து இப்போது கேர்ள் பிரெண்டாக வாழ்ந்து வருகிறோம் என சொன்னால் அனைவரும் தன்னை பற்றி எப்படி எடுத்துத் கொள்வார்கள் என குழம்பியவளுக்கு முகிலை பற்றி சொல்லாமல் இருப்பதே நலம் என்று தோன்றியது.

வர்சன் அவனுக்கான உணவோடும் யதிராவுக்கான காப்பியோடும் வந்து அமர்ந்தான். அவன் தந்த காப்பியை கவனத்தோடு வாங்கினாள் யதிரா.

"உனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்த்திருக்காங்களா.?" என்று அடுத்த விசாரணையை தொடங்கினாள் சமீபத்தில் திருமணம் முடிந்திருக்கும் சுந்தரி.

இவளது கேள்வி யதிராவின் கவனம் கலைத்து விட்டது‌. சூடான காப்பி நாக்கை சுட்டு விட்டது. அருகே இருந்த தண்ணீரை எடுத்து அவசரமாக குடித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த வர்சன் அவளை கண்டு சிரித்தான்.

"சின்ன கேள்விக்கு ஏன் இவ்வளவு டென்சன்.?" என்றான் சிரிப்பிற்கு இடையில்.

அடுத்து என்னவெல்லாம் கிண்டல் செய்ய போகிறார்களோ என்ன மாதிரியான கேள்வியெல்லாம் கேட்க போகிறார்களோ என கவலையோடு இருந்தாள் யதிரா‌‌.

அதை வேளையில் ஓவியா கேண்டினுக்குள் நுழையவும் அனைவரது கவனமும் அவள் பக்கம் திரும்பியது.

"இவதான் நம்ம புது எம்.டியோட பி.ஏ. அந்த ரோபோட் தலையனை தினமும் நேர்ல பார்ப்பவ இவ மட்டும்தான்.." என்றாள் வேணி இவர்களிடம் கிசுகிசுப்பான குரலில்.

ஓவியா உணவை வாங்கிக்கொண்டு அமர்வதற்கு இடம் தேடினாள்.

"ஹேய்.. இங்கே வாங்க ப்யூட்டி.." என்று தன்னருகில் இருந்த நாற்காலியை கை காட்டினான் வர்சன்.

ஓவியா சில நொடிகள் தயங்கி நின்று விட்டு இவர்களின் அருகே வந்தாள். சினேகமாக புன்னகைத்து விட்டு வர்சனின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

"ஹாய் நான் வர்சன்.." என்றான் வர்சன்.

"நான் ஓவியா.." என்றாள் அவள்.

"ஸ்வீட் நேம்.. நான் சுந்தரி.. இவங்க வேணி.. நம்மோட சீனியர்.. அது யதிரா.. உங்களை மாதிரி நியூவா வேலைக்கு சேர்ந்திருப்பவங்க.. அப்புறம் இது லோகன்.. நேத்து இரண்டாவது குழந்தைக்கு பேர் வச்சிருக்காரு.." என்று தன்னையும் மற்றவர்களையும் அறிமுகப்படுத்தினாள் சுந்தரி.

"ஹாய்.." எல்லாருக்கும் பொதுவாக கையசைத்தாள் ஓவியா.

யதிரா அவளை கண் கொட்டாமல் பார்த்தாள். பொம்மைக்கு உயிர் வந்தது போலவே இருந்தாள் அவள். அவள் அணிந்திருந்த சுடிதார் அவளது மேனியோடு பிறந்தது போல அவ்வளவு அழகாய் பொருந்தி இருந்தது.

"நீ அந்த ரோபோட்.. நம்ம எம்‌.டியை பார்த்து இருக்கியா.?" என்று கேட்டாள் வேணி.

ஓவியா ஆமென தலையசைத்தாள்.

"அவருக்கு எத்தனை வயசு இருக்கும்.?" ஆர்வமாக கேட்டாள் சுந்தரி.

"ட்வெண்டி எய்ட் ஆர் நைன்.." யோசனையோடு சொன்னாள் ஓவியா.

"ஓ.. சின்ன வயசுதான் போல.. நம்ம யதிராவுக்கு செட் ஆவாருன்னு நினைக்கிறேன்.." என்று வேணி சொல்ல யதிரா காப்பி கப்பை கீழே வைத்துவிட்டு தலையை தட்டிக் கொண்டாள். வர்சன் அவளை பரிதாபமாக பார்த்துவிட்டு அவளது தலையில் வருடினான். யதிரா அவசரமாக அவனது கையை விலக்கி விட்டாள்.

"எதுக்கு நீ அடிக்கடி பயந்து போற.?" என்று யதிராவிடம் சலிப்பாக கேட்டாள் சுந்தரி.

"சாரி.. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்.." என்றவள் அங்கிருந்து எழுந்து போனாள்.

யதிராவை விசித்திரமாக பார்த்த சுந்தரி ஓவியா பக்கம் திரும்பினாள்.

"நீ அவளை விடு.. எம்.டியோட போட்டோ உன்கிட்ட இருக்கா.? இருந்தா காட்டு.." என்றாள் ஆவலாக.

ஓவியாவிற்கு முகில் சொன்னது நினைவிற்கு வந்தது.

"என்கிட்ட போட்டோ ஏதும் இல்ல.." என்றாள் தயக்கமாக.

"சரி ஹைட் வெயிட்டாவது சொல்லு.." என்றாள் வேணி.

இங்கே ஏன் வந்து அமர்ந்தோம் என்று கவலைப்பட்டாள் ஓவியா.

"எனக்கு சரியா தெரியல.. நான் அவரை இன்னும் சரியா பார்க்கல.. ஒன்னு இரண்டு தடவைதான் பார்த்திருப்பேன். ஆனா அப்போதும் கூட அவரை கவனிச்சி பார்க்கற அளவுக்கு எனக்கு டைம் கிடைக்கல.." என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னாள் ஓவியா.

சுந்தரி அவளின் தோளில் தட்டி தந்தாள். "சரி விடு.. இனி டைம் கிடைக்கும் போது ஒரு போட்டோ எடுத்து வந்து காட்டு.." என்றாள்.

ஓவியா ஒப்புக்கு இருக்கட்டும் என்று சரியென தலையசைத்தாள்.

"அவர் பேர் என்ன.?" என்று இம்முறை வர்சன் கேட்டான்.

ஓவியா அவனை படபடக்கும் விழிகளோடு பார்த்தாள். அவளுக்கு அவனருகில் அமர்ந்திருப்பதே இதயத்தை படபடவென துடிக்க செய்துக் கொண்டிருந்தது.

"மு.. முகில்.." என்றாள் தடுமாற்றமாக.

"எனக்கு பேர் பிடிக்கல.." என்று சட்டென சொன்னாள் வேணி.

"சீனியர் பேரோடு கம்பேர் பண்ணும் போது அவர் பேர் டல்லடிக்கதான் செய்யுது.." என்று கிண்டலாக சொன்னாள் சுந்தரி.

சுந்தரியின் கிண்டலால் வர்சனும் லோகனும் சிரித்தனர். புன்னகை ஓடும் வர்சனின் இதழ்களை தன்னை மறந்து பார்த்தாள் ஓவியா.

இவர்களின் சிரிப்பு முடிந்த நேரத்தில் யதிரா அங்கு வந்து சேர்ந்தாள். தான் குடித்து வைத்து சென்ற காப்பியின் காலியான பேப்பர் கப்பை கையில் எடுத்துக் கொண்டவள் "அப்புறமா பார்க்கலாம்.." என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

"ஹேய் யதி.. நில்லுங்க நானும் வரேன்.." என்று அவசரமாக எழுந்தான் வர்சன்.

வர்சன் யதிராவை பின் தொடர்ந்து சென்றபின் சுந்தரியும் வேணியும் ஒருவரையொருவர் பார்த்து கண்ணடித்துக் கொண்டனர்.

"நம்ம ஆபிஸ்ல புது ஜோடி உருவாக போறாங்க.." என்று சொன்னாள் வேணி.

அங்கிருந்த அனைவரும் எழுந்து சென்றபோது ஓவியா மட்டும் ஏமாற்றம் நிறைந்த முகத்தோடு தனது கேபினுக்கு கிளம்பினாள்.

அடுத்து அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1050

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN