செங்கா 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதியன் தன்னை பார்த்து சிரித்த செங்காவை வியந்து பார்த்தபடி நின்றான்.

'இவளுக்கு சிரிக்க தெரியும்ன்னே எனக்கு இன்னைக்குதான் தெரியும்.. என்னா சிரிப்புடா சாமி இது.? கவிதைன்னா என்னன்னு கேட்கற என்னையே கவி பாட வச்சிடுவா போல இருக்கே.!' என அவன் வியந்து நின்ற வேளையில் "பட்டணத்துகாரரு ஓயாம பார்க்க காரணம் என்னவாம்.?" என்றாள் செங்கா.

அதியன் தன் சிந்தையிலிருந்து வெளியே வந்தான். "பட்டிக்காட்டு காட்டான் ஒருத்தி அடையாளம் தெரியாம மாறிட்டா.. அதைதான் பார்த்துட்டு இருந்தேன்.." என அவன் சொல்ல அவள் அதற்கும் சிரித்தாள்.

"இது எல்லாமே வெலங்கு மாதிரி இருக்கு.. இந்த ஜிமிக்கிக்கு எம்படைய காது அந்துட்டு வந்துடும்.. இந்த கொலுசை போட்டுட்டு நடந்தா பூனைக்கு மணி கட்டுன மாதிரியே இருக்கு.. நடுராத்தியில எம்படைய கொலுசு சத்தத்தை கேட்டு நானே மோகினி வந்துடுச்சோன்னு நெனைச்சி எழுந்து ஒட்கார்ந்துடுறேன்.. இதலாம் கூட பரவால்ல.. இங்க பாரு எம்படைய கையை.. இந்த பொன்னா கழுதை மருதாணி வைக்கிறேன்னு இப்புடி பண்ணி வச்சிருக்கா.. இத வச்சி வுட ஒரு மணி நேரம்.. இது காய இரண்டு மணி நேரம் ஆவுமாம்.. அதுவரிக்கும் நான் எப்புடி சாப்புடாம இருப்பேன் சொல்லு. எனுக்கு வேற இப்பவே பசிக்குது.."

அவள் சொன்னதை கேட்டு அதியனுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஆனால் அவள் முன் சிரித்தால் வில்லங்கம் ஆகுமென நினைத்து சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"சரி வா நான்தான் ஊட்டி விடுறேன்.." என அதியன் கிண்டலாக சொன்னான்.

"நெசமாவா.?" என அவள் ஆச்சரியத்தோடு கேட்க அவன் தன் கிண்டல் சொல்லை எண்ணி வருந்திவிட்டு, "ஆமா.." என்றான்.

"அப்ப சரி.. என்னை எறக்கி வுடு.." என்றவள் அவள் என்ன சொன்னாள் என்பதை அவன் புரிந்துக் கொள்ளும் முன்பே அவன் மீது சாய்ந்து தனது இருகைகளையும் அவனது கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டாள்.

தன் மேல் சாய்ந்தவளை அவன் சட்டென தாங்கி பிடித்துக் கொண்டான்.

அவளது அந்த திடீர் செய்கை கண்டு அவன் அதிர்ந்து போய் விட்டான். தன் முகத்தின் அருகே முகம் வைத்தபடி சாய்ந்து இருந்தவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் "உ.. உன் மேல இருந்து ஏதோ ஒரு ஸ்மெல் வருது.." என்றான் குழப்பமாக.

அவள் சில நொடிகள் யோசித்தாள். அப்புறம் உதட்டை கடித்தபடி அவனை பார்த்தாள். அவனது காதோரம் தன் முகத்தை கொண்டு சென்றவள் "அதோ அந்த கீழ் காட்டுக்கார பாட்டி அவங்க மரத்துல இருந்து கள்ளு இறக்கி குடிக்க வச்சிருந்திச்சா.? நான் சும்மா ஒரு முழுங்கு குடிச்சி பார்க்கலாம்ன்னு வாய்ல வச்சேன்.. ஆனா கொஞ்சம் சேர்த்தி குடிச்சிபுட்டேன்.. அதான் லேசா தலை கிறுகிறுக்குது.. இதை எங்கப்பன்னக்கிட்டயும் அம்மாக்கிட்டயும் சொல்லிப்புடாத.." என்றாள்.

விழிகளை உருட்டி அவளை பார்த்தவன் "அதானே.. இல்லன்னா நீயாவது என்கிட்ட இவ்வளவு சகஜமா பேசுறதாவது.? எப்பவும் அடி தந்துட்டுதானே பேசுவ நீ.?" என ஏமாற்றத்தோடு கேட்டான் அவன்.

அவனை பார்த்து சிரித்தவள் "ஆனா எனுக்குதான் போதையே ஏறலையே.." என்றாள்.

கிண்டலாக விழிகளை சுழற்றி பார்த்தவன் "நம்பிட்டேன்.. முத்தம் பத்தியெல்லாம் நீ பேசும்போதே நான் சுதாரிச்சிருக்கணும்.." என்று சொல்லி விட்டு அவளை தூக்கி கீழே விட்டான்.

"நீயும் நல்லா வெயிட்டாதான் இருக்க.." என்றவனின் நெற்றியோடு தன் நெற்றியை மோதி உரசியவள் "அதான் உன்னால தூக்க முடியுதே.. அப்புறம் என்னவாம்.?" என்றாள்.

அவளது முகத்தை அங்குலம் அங்குலமாக சோதித்தான் அவன். அவளது நெற்றியில் இருந்த சிறு பொட்டு அழகாக இருந்தது. கண்களுக்கு மை இட்டு இருந்தாள் அவள். அவளது விழிகள் அந்த மையினால் இன்னும் சற்று அழகு கூடி இருந்தது போல இருந்தது.

"நீ இன்னைக்கு அழகா இருக்க.." என்றான் தன்னை மறந்து நின்றபடி.

"அட கண் அவிஞ்சவனே.. கண்ணாடியில பார்த்தா ராத்திரி நேர மோகினி மாதிரி இருக்கேன்.. என்னை பார்த்து அழவா இருக்கேன்னு சொல்ற பாரு.." அவள் சலித்துக் கொள்ள, அவனுக்கு சிரிப்பு வந்தது.

"நான்தான் உன்னை கீழே இறக்கி விட்டுட்டேனே.. தள்ளி நிற்கலாம் இல்லையா.? யாராவது பார்த்தா தப்பா நினைச்சிட போறாங்க.." என்று அவன் சொல்ல சிரித்தவள் "நான் தப்பா நெனைக்கிறவனுக்கு பயப்பட மாட்டன்.. ஆனா நீதான் என்னை வுடாம புடிச்சி வச்சிருக்க.. அப்புறம் எப்புடி நான் வெலகி நிக்கறது.?" என்றாள் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி.

அவன் தன் கரங்களை பார்த்தான். அவளது இடுப்பில் இறுக்கமாக பதிந்திருந்தது இரு கரங்களும். அவசரமாக விலக்கி கொண்டான்.

"சாரி நான் கவனிக்கல.." என்றான் தன் பின்னந்தலையில் மெதுவாக அடித்தபடி.

"நீ நல்லா வெட்கப்படுற.. நல்லாதான் இருக்கு.." என்று சொன்னவளை ஆச்சரியமாக பார்த்தவன் "போதையில் உளறாம அமைதியா இரு.." என்றான்.

அவள் சிரிப்போடு தலையசைத்தாள். "நம்பலன்னா போ.. சரி வா.. எங்க வூட்டு பால் காச்சுக்கு வந்திருக்க.. வெளியவே இருந்தா எப்புடி.? வா என் கூட.." என்றவள் முன்னால் நடக்க, 'எப்ப போதை தெளிஞ்சி விலக போறாளோ.. தெரியலையே..' என்று நினைத்தபடி அவளை பின்தொடர்ந்தான் அதியன்.

வீட்டின் வாசலில் நாற்காலிகளிலும் கயிற்று கட்டில்களிலும் அமர்ந்திருந்தவர்கள் அதியனை பார்த்து புன்னகைத்தனர்.

"இது யாரு செங்கா.?" என்றனர்.

"இது விஷ்வா மாமனோட சேத்தாளி.." என்றவள் துள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைய அவளை தொடர்ந்தவன் "சேத்தாளின்னா என்ன.?" என்றான்.

நின்று அவனை திரும்பி பார்த்தவள் "கூட்டாளிப்பா.. பிரெண்டு.." என்றாள்.

"ஓ.." என்றவனை ஒரு மாதிரி பார்த்தவள் "யம்மா வூட்டுக்கு ஒரம்பரை வந்திருக்கு பாரு.." என்று கத்தினாள்.

"ஒரம்பரைன்னா என்ன..? ஏதும் ஆடு மாட்டுக்கான மீனிங்கா.?" என அவன் குழம்ப, சிரித்தவள் "விருந்தாளின்னு அர்த்தம்ப்பா.." என்றாள்.

விசாலமாக இருந்த ஹாலை சுற்றி பார்த்தான் அவன். "அதோ அந்த கட்டில்ல போய் ஒட்காரு.. நான் போய் இந்த கையில இருக்கற மருதாணியை அழிச்சிட்டு வரேன்.." என்று கிளம்பினாள்.

"ஏய்.. வேண்டாம் நில்லு.. நானே ஊட்டி விடுறன்.." என்றவனை பார்த்து சிரித்தவள் "எருமை மாட்டு வயசுல இருக்கற எனுக்கு நீ சோறு ஊட்டி விட்டா பார்க்கறவங்க சிரிப்பாங்கப்பா.." என்றவள் அவன் மறுவார்த்தை சொல்லும் முன் அங்கிருந்து ஓடி போனாள்.

ஹாலில் ஆங்காங்கே அமர்ந்திருந்த பெண்கள் கூட்டத்தை பார்த்தான் அதியன். ஒரு பக்கம் வெங்காயம் பூண்டு காய்கறிகளை அரிந்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் கொட்டி வைத்த பூக்களை சில பெண்கள் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் சிலர் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அண்ணா இந்த கொக்கியை அந்த உத்திரத்து கம்பியில் மாட்டி தாங்க.." என்று ஒரு இளம்பெண் குழந்தையோடு வந்து இவனிடம் கேட்டாள். அவன் ஏன் என்று தெரியாமலேயே அதை மாட்டி விட்டான்.

"ஒரு நிமிசம் இந்த கொழந்தையை புடிங்களேன்.." என்றவள் தன்னிடம் தந்த குழந்தையை பயத்தோடு கைகளில் வாங்கினான். அந்த குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது. 'உங்க அம்மா திரும்ப வாங்கும் முன்னாடி எழுந்துடாத குட்டி பாப்பா..' என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டான்.

அந்த பெண் தான் எடுத்து வந்திருந்த புடவையை அவன் மாட்டி தந்த கம்பியில் தொட்டிலாய் கட்டி குழந்தையை வாங்கி தொட்டிலில் இட்டாள்.

"தேங்க்ஸ் அண்ணா.." என்றாள். அவன் சரியென தலையசைத்துவிட்டு அவளை விட்டு விலகி நடந்தான்.
"அதியன்.." குரல் கேட்கவும் திரும்பி பார்த்தான்.

புடவை ஒன்றை கட்டியிருந்த பொன்னா கையில் இருந்த உணவு தட்டில் இருந்த ஜிலேபியை கடித்தபடியே அவனிடம் வந்தாள்.

"இப்பதான் வந்திங்களா.? சாரி நான் கவனிக்கல.. வாங்க சாப்பிடுவிங்க.." என்று அழைத்தாள்.
"எனக்கு பசிக்கலப்பா.." என்றவன் அவள் கையில் இருந்த உணவு தட்டை பார்த்து விட்டு "நீ சாப்பிடு.." என்றான்.

தட்டை பார்த்தவள் "இது எனக்கு இல்லைங்க.. இது அந்த செங்கா எருமைக்கு.. பசிக்குதுன்னு முன்ன இருந்து கத்திட்டு இருந்தா.. அதான் நானே சாப்பாட்டை போட்டு எடுத்து வந்தேன்.." என்றவள் ஜிலேபியை இன்னும் கொஞ்சம் கடித்துக் கொண்டாள்.

ஈரக்கையை துடைத்தபடி வந்து சேர்ந்தாள் செங்கா.

"பசிக்குது.. பசிக்குது.. இந்த செங்கா பிள்ளைக்கு பசிக்குது.." என பாட்டு பாடி வந்தவளை கண்டு பொன்னாவும் அதியனும் சிரித்தனர்.

"சொந்தக்காரங்க முன்னாடி மானத்தை வாங்காம வயிறு நிறைய சாப்பிட்டுக்க மகராசி.." என்று தட்டை சகோதரியின் கையில் திணித்தாள் பொன்னா.

தட்டை பார்த்துவிட்டு அதிர்ச்சியாக நிமிர்ந்தாள் செங்கா. "சிலேபி பாதி காணம்.." என்றாள் கோபமாக.
தனது வாயை துடைத்து கொண்ட பொன்னா "ஜிலேபி நிறைய இருக்கு.. வேணும்ன்னா இன்னும் நாலு கொண்டு வந்து தரேன் விடு.." என்றாள்.

"நெறையா இருக்கு இல்ல.? அப்புறம் ஏன் எரும என் தட்டுல இருக்கறதை எடுத்து தின்ன.?" என்று கோபத்தோடு பொன்னாவை நெருங்கினாள்.

"உன் மேல ஏன் ஏதோ ஒரு வாசனை வருது.?" என்று பொன்னா மூச்சை இழுத்து விட்டு கொண்டு கேட்கவும் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல.. நீ போயி நாலு சிலேபி எடுத்துட்டு வா.." என்ற செங்கா சென்று கட்டில் ஒன்றின் மீது அமர்ந்தாள்.

அதியன் அவளருகே வந்து அமர்ந்தான். "சொந்தக்காரங்க நிறைய வந்திருக்காங்க போல இருக்கு.." என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

உணவை சாப்பிட்ட படியே ஆமென தலையசைத்தாள் செங்கா. "எங்க அப்பன் வழியிலயும் எங்கம்மா வழியிலயும் இருக்கற சொந்தக்காரங்க எல்லாம் சாயங்காலம்தான் வருவாங்க.. இது எல்லாம் எங்க சொந்தம்.. இந்த ஊர்க்காரங்க.. இவுங்க எல்லாரும்தான் எங்களுக்கு உண்மையான சொந்தக்காரங்க.. எங்க அப்பனும் அம்மாளும் ஊரை வுட்டு ஓடி வந்துட்டவங்க.. இவுங்க செத்து போனதாதான் இத்தனை நாளும் ரெண்டு வூட்டுலயும் நம்பிட்டு இருந்தாங்க.. ஆனா இப்ப எங்க அப்பன் புது வூடு கட்டுனதும் இப்பவாவது தனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு எல்லார்க்கிட்டயும் காட்ட ஆசைப்பட்டு இந்த பால் காச்சுறதையே சிறப்பா பண்ணிட்டு இருக்கு.." என்றவளின் உதட்டசைவையே பார்த்து கொண்டிருந்தான் அவன்.

"எங்க அப்பனும் அம்மாளும் அனாதையா இந்த ஊருக்கு வந்ததாலும் இந்த மொத்த ஊரும் அவங்க ரெண்டு பேரையும் சொந்தமா ஏத்துக்கிச்சி.. இப்ப கூட எங்கூட்டு விசேசத்தை அவங்க வூட்டு விசேசமா நெனைச்சி எல்லாம் பண்ணுறாங்க.." என்றவள் அவன் பக்கம் பார்த்தாள். "அதோ அந்த பெரிய பித்தாள அண்டா இருக்கே.. உம்படைய கண்ணுக்கு தெரியுதா.?" என்றாள்.

திரும்பி பார்த்தவன் "ம். தெரியுதே.. ஏன்.?" என்றான்.

"சோறு விக்கிக்கிச்சி.. போய் ஒரு சொம்பு தண்ணி மொண்டு வாயேன்.." என்றவள் மீண்டும் உணவை நிறுத்தாமல் சாப்பிட்டாள்.

'நானா.?' என கேட்க நினைத்தவன் 'சின்ன ஹெல்ப்தானே.?' என நினைத்து எழுந்து சென்றான்.

அண்டாவின் ஓரம் இருந்த சொம்பை எடுத்து தண்ணீரை நிரப்பியவன் விஷ்வாவின் குரல் அருகில் கேட்கவும் சுற்றம் முற்றும் தேடினான். அண்டாவின் அருகே இருந்த அறையை எட்டி பார்த்தான்.
"இந்த பாத்திரமா அத்தை.?" ஏணி ஒன்றில் ஏறி நின்றபடி மேல் செல்ஃப்பில் இருந்த பாத்திரம் ஒன்றை கை காட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா.

"ஆமா மாப்பிள்ளை.. அதான்.." என்று கீழே நின்றபடி சொன்னாள் கலையரசி.

"இது செட்டாகாது அத்தை.. அந்த அகல பாத்திரம்தான் பூந்தியை எடுத்து போட சரியா இருக்கும்.. அந்த பாத்திரத்துல அப்பளம் பொறிச்சி வச்சிடலாம்.. தட்டை போட்டு மூடி வச்சிட்டா அப்பளம் நமுத்து போகாது.." என்று விஷ்வா சொல்ல அதியன் அதிர்ச்சியோடு நண்பனை பார்த்தான்.

"சொந்த வீட்டுல தரையில் விழுந்து கிடக்கும் ஒரு டிவி ரிமோட்டை கூட தூக்கி டேபிள் மேல வைக்க மாட்டான்.. மாமியார் வீட்டுக்கு வந்ததும் அசல் சமையல்காரன் ரேஞ்சுக்கு பேசுறியேடா.." என்று அவன் தனக்குள் ஆச்சரியப்பட்ட வேளையில் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி போல பக்கத்து ஜன்னல் வழி தெரிந்த வெட்டவெளியில் தேங்காயை ஒவ்வொன்றாக மட்டை உரித்து ரக்சனாவிடம் தந்து கொண்டிருந்தான் செழியன்.

"பேபி.. நீ வெயில்ல நிற்காதம்மா.. அந்த பக்கமா நிழல்ல நிற்கலாம் இல்ல.?" என கேட்டவன் அடுத்த தேங்காயை நான்கே வெட்டில் அழகாய் உரித்து ரக்சனாவிடம் தந்தான்.

"அடப்பாவி உனக்கு அருவாள் பிடிச்சி தேங்காய் வெட்ட தெரியும்ன்னே எனக்கு இன்னைக்குதான்டா தெரியும்.. மாப்பிள்ளை தோழன் நானே இன்னைக்குதான் வந்திருக்கேன்.. இவன் ஏன் எனக்கு முன்னாடி வந்து லுங்கியும் பனியனுமா நின்னு தேங்கா உரிச்சிட்டு இருக்கான்.?" என்று காற்றோடு கேட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1203
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN