நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தண்ணீரோடு அதியன் செங்காவிடம் வந்தபோது அவள் உணவை சாப்பிட்டு முடித்திருந்தாள்.

"ஒரு சொம்பு தண்ணியை மொண்டு வர உனக்கு இவ்வளா நேரமா.?" என கேட்டவள் அவன் கையிலிருந்த தண்ணீரை வாங்கி குடித்தாள்.

"யம்மா.." என்று அவள் சமையலறையை நோக்கி குரல் கொடுத்த வேளையில் "சும்மா ஏன் அம்மாவை ஏலம் போட்டுட்டு இருக்க.? வா நான் உனக்கு தலை வாரி விடுறேன்.." என்று சீப்போடு அருகில் வந்தாள் பொன்னா.

அவசரமாக தனது கூந்தலை அள்ளி கொண்டையாக போட்டு கொண்டவள் "அவ்வளவுதான்.. இனி எனுக்கு தலை சீவி விடுறன்னு பக்கத்துல வந்த அவ்வளவுதான்.. உம்படைய பேச்சை கேட்டு நான் ஏற்கனவே கோமாளி மாதிரி இருக்கன்.. இனி ஏதும் பண்ண மாட்டன்.." என்றாள். பொன்னா அவளை கோபத்தோடு நெருங்க செங்கா அதியனின் முதுகின் பின்னால் போய் நின்றுக் கொண்டாள்.

"என் தலையில கை வைக்காத கழுத.. ஒரு மாதிரியா இருக்கும்.." என்றவள் தன் தீண்டலால் நெளிந்தபடி நின்றிருந்த அதியனின் முதுகில் தன் முகத்தை பதித்தாள்.

அதியன் செங்காவின் செயலையும் பொன்னாவையும் கண்டு வியந்தான்.

"இங்கே என்ன நடக்குது.?" என்றான்.

"அவளுக்கு தலைமுடியை பின்னிக்க பிடிக்காது அதியன்.. அவ தலையில யாராவது கை வச்சா கூச்சமா இருக்குன்னு சொல்லி ஓடிடுவா.. ஆனா இன்னைக்கு சொந்தக்காரங்க எல்லாம் வர போறாங்க.. அப்ப இவ இப்படி இருந்தா நல்லாருக்குமா சொல்லுங்க.. தனக்காக இல்லன்னாலும் எங்க அப்பா அம்மாவுக்காகவாது தலையை சீவிக்கலாம் இல்லையா.?" என்றாள் வருத்தம் நிரம்பிய குரலில்.

"நான் ஊருக்காக வாழ மாட்டன்.." என்று வெடுக்கென குரல் தந்தாள் செங்கா.

பொன்னா பல்லை கடித்தபடி அவளை எட்டி பார்த்தாள்.

"அப்படின்னா சரி.. விசேசத்துக்கு வரும் சொந்தக்காரங்க சாமிநாதன் பெத்த மக அவுத்து விட்ட கழுதைன்னு பேசிட்டு போகட்டும்.. அவங்க பேசுவது கேட்டு அப்பா மனசு வாடட்டும்.." என்றாள் எரிச்சலாக.

செங்கா தயக்கத்தோடு முன்னால் வந்து நின்றாள். "ஆனா உன்னைய மாதிரி கோமாளியா பின்னி வுட கூடாது.. அம்மா மாதிரி சாதாரணமா பின்னி வுடணும்.." என்றபடி அவளுக்கு தலையை தந்துவிட்டு அதியன் பக்கம் பார்த்து நின்றாள்.

அதியனுக்கு அவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் சிரிப்புதான் வந்தது. அடங்காபிடாரிக்குள் இவ்வளவு குழந்தைத்தனம் இருக்கும் என அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை.

பொன்னா தலையில் சீப்பை வைத்ததும் இவள் பல்லை கடித்தபடி கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். உண்மையிலேயே கூச்சம்தான் என்று புரிந்து கொண்ட அதியனுக்கு அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

பொன்னா தலையை சீவி முடித்ததும் இரண்டு முழம் மல்லிகையை எடுத்து வந்து கூந்தலில் சூடி விட்டாள். செங்காவிற்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவளது முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது.

"இப்பதான் லட்சணமா இருக்க.. அப்படி போய் வாசல்ல ஒரு ஓரமா உட்காரு.. வர சொந்தக்காரங்களை வாங்கன்னு உள்ளே அழை.. குடிக்க தண்ணி கொண்டு போய் கொடு.. சாப்பிட வாங்கன்னு அழை.. யாராவது நீ யாருன்னு கேட்டாங்கன்னா நான் சாமிநாதன் கலையரசியோட இரண்டாவது பொண்ணுன்னு சொல்லு.. என்ன படிக்கிறன்னு யாராவது கேட்பாங்க.. அப்படி யாராவது கேட்டா இப்ப வீட்டுலதான் இருக்கேன்னு சொல்லு.. கரடு கரடா கழுதையா சுத்துறன்னு சொல்லி வைக்காத.." என்று அறிவுரை கூறினாள் பொன்னா.

செங்கா சரியென தலையசைத்தபடியே தன் கூந்தலில் உள்ள பூச்சரத்தில் இருந்த பூக்களை ஒவ்வொன்றாக கிள்ளி கீழே எறிந்து கொண்டிருந்தாள். அவளது கையில் ஒரு அடியை விட்டாள் பொன்னா. "இப்படி பூவை கிள்ளி போடாதே.. நைட் வரைக்கும் பூ வாட கூடாது.. காலையில் தூங்கி எழும் வரை பூவை தலையில் இருந்து எடுக்க கூடாது.." என எச்சரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

செங்கா பொன்னா சென்ற திசையை முறைத்துக் கொண்டு நின்றாள். செங்காவையே பார்த்து நின்ற அதியன் அவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான். அவனை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள் செங்கா.

"என்னை எங்க கூட்டி போற.?" என்றவளை வாசலுக்கு அழைத்து வந்து ஓரமாக நிழலில் இருந்த ஒரு கல்லின் மீது அமர வைத்தான். அவளின் அருகில் அவனும் அமர்ந்தான்.

"நீ அழகா இருக்க.. இந்த கெட்டப் உனக்கு ரொம்ப சரியா பொருந்தி போகுது.." என்றான் மென்மையாக.

"ஆனா எனுக்கு ஒரு மாதிரியா இருக்கு.. முதுகுல இப்புடி தலைமுடி பட்டா எரிச்சலா இருக்கு.." என்றாள் முகம் சுளித்தபடி.

"கொஞ்ச நேரம் பழகிட்டா சரியா போயிடும்.." என்றவன் தன் எதிரில் இருந்த உயர்ந்த மலைகளை பார்த்தான்.

"அழகா இருக்கு இந்த மலையும் காடுகளும்.." என்றான்.

"ஆமா.." என்றவளுக்கு அவன் தன்னை அழகாய் இருக்கிறாய் என்று சொன்னபோது வராத சந்தோசம் இப்போது வந்தது.

இருவரும் அந்த மலையை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

பத்து நிமிடம் கடந்திருந்த வேளையில் ஒரு சிறுமி இவர்கள் அருகே ஓடி வந்தாள். "செங்கா அக்கா.. எனக்கு கரும்பு வேணும்.." என்றாள் அழுகையோடு.

"சரி வா.. உடைச்சி தரேன்.." என எழுந்தவள் "நீயும் வரியா.?" என்றாள் அதியனிடம்.

'கரும்பை உடைச்சி தர கூப்பிடுறாளா.?' என குழப்பமாக எழுந்து நின்றவன் கரும்பு தின்ன கூலியா என நினைத்தபடி நடந்தான். அவள் வேலியின் பின்வாசல் வழியாக வெளியே நடப்பதை கண்டு மேலும் குழம்பி போனான்.

"இங்கே எங்க போற.?" என கேட்டபடி பின்னால் நடந்தான்.

"காட்டுக்கு.. கரும்பு காட்டுக்கு.." என்றவள் வயல்வெளியில் இறங்கி நடந்தாள். அந்த சின்ன பெண் அவளுக்கும் முன்னால் துள்ளிக் கொண்டு ஓடினாள்.

"வாவ்.. இங்க கரும்பு தோட்டம் கூட இருக்கா..?" என்று ஆச்சரியமாக கேட்டவனை திரும்பி பார்த்தவள் "ஏன் இருக்க கூடாதா.?" என்றாள்.

"அப்படி இல்ல.." என்றவன் பருத்தி காட்டை தாண்டியதும் தெரிந்த கரும்பை கண்டதும் மனதுக்குள் துள்ளி குதித்தான்.

"இவ்வளவு கரும்பா..?" என கேட்டு முன்னால் நடந்தவனின் காலரை பிடித்து இழுத்து நிறுத்தினாள் செங்கா. "கண்ணை மூடிக்கிட்டு போவாத.. இங்க எறும்பு அதிகமா இருக்கும்.." என்றாள்.

அவளே சென்று மூன்று கரும்பு துண்டுகளை உடைத்து வந்தாள். சிறுமியிடம் ஒன்றை நீட்டினாள். அந்த சிறுமி அதை வாங்கி கொண்டதும் அங்கிருந்து ஓடி விட்டாள்.

"ஏய்.. மெதுவா போடி.." என்று செங்கா கத்தியது அவளது காதில் விழவே இல்லை. அதியன் செங்காவின் கையில் இருந்த கரும்பை வாங்கி கடித்தான்.

"நல்ல இனிப்பா இருக்கு.." என்றான்.

கரும்பை ஒரு வாய் கடித்தவள் "கரும்புன்னா ரொம்ப பிடிக்குமா.?" என்றாள் ஆச்சரியத்தோடு.

"ஆமாப்பா.. சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடிக்கும்.. ஒவ்வொரு முறை பொங்கலுக்கும் நிறைய கரும்பு வாங்கி சாப்பிடுவேன்.." என்றவனின் கன்னம் கிள்ளியவள் "சில நேரத்துல தேவாங்கு மாதிரி இருந்தாலும் கூட நீயும் நல்ல ரசனக்காரன்தான்.." என்றாள்.

முறைப்போடு அவளது கையை தட்டி விட்டவன் "தேவாங்குன்னு நீ சொல்லாத.. அசல் மங்கி நீதான்.." என்றவனை பார்த்து சிரித்து விட்டு முன்னால் நடந்தாள் செங்கா.

அவள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவர்கள் வீட்டு வாசலில் பெரிய டெம்போ வேன் ஒன்று பாத்திரங்களையும் பர்னிச்சர்களையும் நிரப்பியபடி நின்றுக் கொண்டிருந்தது.

"இது என்ன.?" என்று கேட்டான் அதியன்.

"எனக்கும் தெரியல.. ஒருவேளை எங்க அப்பா இதையெல்லாம் அனுப்பி விட சொல்லி கடைக்கு லிஸ்ட் கொடுத்து விட்டிருப்பாரோ.?" என்று சந்தேகமாக கேட்டாள் அங்கு வந்த பொன்னா.

கலையரசி வந்து பார்த்துவிட்டு குழம்பி நின்ற வேளையில் கார் ஒன்று வந்து வாசலில் நின்றது. சீனு இறங்கினான்.

"அத்தை.." என்றபடி முன்னால் வந்தான். கலையரசி குழம்பி நின்றபோது அவள் காலில் நெடுமரமாக விழுந்தான்.

"என்னை மன்னிச்சிடுங்க அத்தை.. உங்களையும் என்னையும் தவிர நம்ம மீதி குடும்பமே அழிஞ்சி போச்சி.. உங்களோட முக்கியத்துவம் என்னன்னு எனக்கு இப்போதுதான் புரிஞ்சது.. தயவு செஞ்சி என்னை மன்னிச்சி ஏத்துக்கங்க அத்தை.. என் ஒருத்தனை மட்டும் அனாதையா தவிக்க விடாதிங்க.." என்றான் சிறு விம்மலோடு.

செங்கா அம்மாவையும் சீனுவையும் பார்த்தபடி தன் கையில் இருந்த கரும்பை பலத்தோடு கடித்து மென்று துப்பினாள்.

சீனு பேசியதை கேட்டு கலையரசி கண்களிலும் கண்ணீர் நிரம்பி நின்றது. தன் பிறந்த வீட்டின் ஒரே வாரிசு ஒரே ரத்த சொந்தம் அவன் என்பதால் அவனை சட்டென விலகி போக சொல்ல அவளால் முடியவில்லை. ஆனால் அதே சமயம் கை கட்டோடு இருந்த சாமிநாதனும் முதுகில் கட்டுப்போட்டு படுத்திருந்த செங்காவும் நினைவில் வந்து நின்றனர்.

அவள் செய்வது அறியாது திகைத்து நின்ற நேரத்தில் அருகில் இருந்த கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி இருந்தனர் சாமிநாதன் மற்றும் மகேஷ் தம்பதி.

சீனுவை கண்டதும் கையை முறுக்கி கொண்டு முன்னால் நடந்த மகேஷை பிடித்து நிறுத்தினாள் சக்தி.
"லூசு தனமா எதையாவது பண்ணி கலையரசி மனசை உடைச்சிடாத.. அவ பாவம்.. ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் கூட தன் பிறந்த வீட்டு சைட்ல இருந்து ஒருத்தன் வந்து இப்படி காலுல விழுந்தா அவளுக்கும் சஞ்சலமாதான் இருக்கும்.." என்றாள்.

சக்தியின் பேச்சை கேட்டு அவனை அமைதியாக விட மனமில்லை மகேஷுக்கு. ஆனால் சொந்தபந்தம் கூடியிருக்கும் ஒரு இடத்தில் யோசிக்காமல் எதையும் செய்ய கூடாது என்று பொறுமையாக இருந்தார்.
தன் மனைவியின் காலில் விழுந்து கிடந்த சீனுவை கண்டு ஆத்திரமானார் சாமிநாதன். ஒரு ஓரத்தில் நின்றபடி கரும்பை கோபத்தோடு கடித்துக் கொண்டிருந்த செங்காவை பார்த்தார். தனது செல்ல மகளின் உயிரோடு விளையாடியவனை தன் வீட்டில் பார்க்க அவருக்கு துளியும் பிடிக்கவில்லை.

"இப்ப இவன் ஏன் இங்கே வந்திருக்கான்.?" என்றார் மனைவியிடம் எரிச்சலாக. கலையரசி கண்ணீரோடு கணவனையும் அண்ணன் மகனையும் பார்த்தாள். காலில் விழுந்து கண்ணீரோடு கெஞ்சியவனை விலக்கவும் அவளால் முடியவில்லை. அதே சமயம் அவனுக்காக கணவரிடம் பரிந்து பேசவும் அவளுக்கு மனம் வரவில்லை.

சாமிநாதனுக்கு மனைவியின் நிலை புரிந்தது. இத்தனை வருடமாக தனக்காக பிறந்த வீட்டை திரும்பியும் பார்க்காதவள் இன்று தன்னை தேடி வந்து காலில் விழுபவனை வெறுத்து ஒதுக்க தயங்குகிறாள் என்பது புரிந்தது. ஆனால் நல்ல பாம்பு என்று தெரிந்தே அவனை எப்படி வீட்டுக்குள் விடுவது என்றும் தயங்கினார் அவர்.

மற்ற சொந்தங்கள் சீனுவை பரிதாபத்தோடு பார்த்தது. அப்பளம் ஒன்றை கடித்து தின்றபடியே பொன்னாவின் அருகில் வந்து நின்ற விஷ்வா சீனுவை கொலை வெறியோடு முறைத்தான். மாமியாரின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் அவனுக்கு கஷ்டத்தை தந்தது.

சாமிநாதனின் அருகே சென்றான் விஷ்வா. "பரவால்ல மாமா.. ஏத்துக்கங்க.. அன்னைக்கு மாதிரி இன்னைக்கு நீங்க மூணு பேர் மட்டும் இல்ல.. உங்களுக்கு மகனா நான் இருக்கேன்.. இவன் இனி என்ன பண்ணிடுவான்னு நானும் பார்க்கறேன்.." என்றான்.

"நானும் இங்கதான் இருக்கன்ப்பா.. அம்மாவுக்காக நீங்க அவனை உள்ள விடறதா இருந்தா பரவால்ல விடுங்க.. ஏதாவது கோக்குமாக்கு செஞ்சான்னா இவன் தலையில ஒரு முடி இல்லாம நான் பொசுக்கி வுட்டுடுறேன்.." என்றாள் செங்கா கரும்பை கடித்தபடி.

சாமிநாதன் தனது பதிலுக்காக காத்து நின்ற மனைவியை பார்த்தார். "உன் அண்ணன் மகனை அழைச்சிட்டு போய் சாப்பாடு கொடு.." என்றார்.

சீனு எழுந்து நின்றான். சாமிநாதனின் காலில் விழுந்தான். "மாமா.. நான் செஞ்சதெல்லாம் தப்புதான்.. என்னை மன்னிச்சிடுங்க மாமா.." என்றான் கெஞ்சலாக.

"உன் தப்பை மன்னிக்கற அளவுக்கு நான் பெரிய மகான் கிடையாது.. என் பொண்டாட்டி மனசுக்காக உன்னை அனுசரிச்சி போறேன்.. மறுபடியும் ஏதாவது இப்படி செஞ்சா நானே உன்னை வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்.." என்றார்.

சீனு முகத்தை துடைத்தபடி எழுந்து நின்றான். "நன்றி மாமா.." என்று கையெடுத்து கும்பிட்டான்.
சாமிநாதனின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த செங்காவை பார்த்தவன் ஆச்சரியத்தில் விழிகளை விரித்தான். சற்று தள்ளி நின்ற பொன்னாவை பார்த்தவன் மீண்டும் செங்காவை பார்த்தான். கரும்பின் சாறு உதடுகளை தாண்டி வழிய பல்லின் இடையே இருந்த கரும்பை கடித்துக் கொண்டிருந்தவளை கண்டவனுக்கு ஏதோ போல இருந்தது.

நிறம் மங்கிய சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டு கலைந்த தலையும் அழுக்கு முகமுமாக அன்று தன்னிடம் அறிமுகமானவள் இன்று இப்படி ஒரு தேவதையாக தன் முன் நிற்பாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவள் சாமிநாதனை காப்பாற்ற வேண்டி குறுக்கே விழுந்தது கண்ணில் வந்து போனது. காதலா என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஏனோ பொன்னாவை பார்த்த காம கண்களோடு அவளை பார்க்க தோன்றவில்லை. மாறாக சிறு ஆசை மனதில் வந்தது.

விழியசைக்க மறுத்து அவன் பார்த்துக் கொண்டிருக்க செங்காவின் உதடு தாண்டி வழிந்த கரும்பு சாறை தன் கைக்குட்டையால் துடைத்து விட்டான் அவளது அருகில் இருந்த அதியன்.

அவள் என்னவெனும் விதமாக அதியனை திரும்பி பார்த்தாள். "குழந்தை மாதிரி இருக்க நீ.." என்றவன் அவளது உதடுகளையும் துடைத்து விட்டான். அவனது செய்கையால் அவளது கன்னத்தில் சிறு சிகப்பு படர்ந்ததையும் கவனித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

word count 1268
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN