நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் கோபம் குறையாமல் நின்றிருந்தான்.

"சாரி சார்.. யதிரா உங்க கேர்ள் பிரெண்டுன்னு நிஜமா தெரியாது.." மன்னிப்பு கேட்டான் வர்சன்.
முகில் தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தான். அதிலிருந்த தண்ணீர் முழுவதையும் குடித்தான். அப்போதும் கூட கோபம் முழுதாய் குறையவில்லை.

"அவ தனக்கு பாய் பிரெண்ட் இருக்கறதா சொன்ன பிறகும் நீங்க அவளுக்கு முத்தம் தந்தா அது தப்பு இல்லையா.? ஒரு பொண்ணை விரும்புவது தப்பு கிடையாது. ஆனா அவங்க மனசுல யாரும் இல்லைன்னு கன்பார்ம் ஆன பிறகுதானே நீங்க உங்க காதலை சொல்லணும்.. அதுவும் வலுக்கட்டாயமாக ஒரு பொண்ணுக்கு.. அதுவும் நேத்தேதான் பார்த்த பொண்ணுக்கு முத்தம் தருவது ரொம்ப ஓவர் தெரியுமா.?" என்றான் எரிச்சல் குறையாமல்.

"ரியலி சாரி சார். உங்க கோபத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது. அவங்களை பிடிச்சிருந்தது.
அதனாலதான் ஓவர் ரியேக்ட் பண்ணிட்டேன். சாரி.." என்றான் வருத்தத்தோடு. அவனது முகத்தில் இருந்த வருத்தம் குருவுக்கும் புரிந்தது.

"தெரியாம பண்ணிட்டான்ப்பா. விடு. இவன் நல்ல பையன்தான். நான் பார்த்து பழகிய வரைக்கும் எந்த பொண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில பார்க்காத ஒருத்தன்.." என்றான் குரு.

"உங்க கோபம் எனக்கும் புரியுது சார். எனக்கு சாதாரண முத்தம். ஆனா உங்களுக்கு லைஃப் பிராப்ளம். நான் இப்பவே போய் அவங்ககிட்ட சாரி கேட்டுடுறேன்.." என்ற வர்சன் திரும்பினான்.

"வேண்டாம்.." என்று அவனை தடுத்தான் முகில். "நான் இங்கே இருக்கேன்னு அவளுக்கு தெரிய கூடாது.." என்றான் தலையை கோதியபடி.

"புரியல சார்.." என்று தன்னை பார்த்தவனின் அருகே வந்தான் முகில்.

"ஒரு முத்தத்தை அவசரப்பட்டு தந்துட்டமேன்னு உங்களுக்குள்ள இருக்கற குற்ற உணர்ச்சியை என்னால புரிஞ்சிக்க முடியுது. அதனால சொல்றேன் கேளுங்க.‌." என்றவன் யதிராவிற்கும் தனக்கும் இடையில் இருந்த மூன்று வருட பிரிவையும் இப்போது தான் எடுத்திருக்கும் முடிவையும் பற்றி சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த வர்சன் முகிலை அணைத்துக் கொண்டான். "நீங்க கிரேட் சார். எங்க அப்பா எங்களோட சின்ன வயசுலயே விட்டுட்டு செத்துட்டாரு சார். அம்மா எங்க பாட்டி வீட்டுல ரொம்ப கஷ்டப்பட்டுதான் எங்களை வளர்த்தாங்க. எங்க அத்தைங்க இரண்டு பேரும் எங்க அம்மாவை கேவலமா திட்டுவாங்க. ஓசி சோறு சாப்பிடுதுங்கன்னு நாங்க சாப்பிடுற டைம்ல எங்களை திட்டுவாங்க. நானும் என் சிஸ்டரும் பெருசாகும் முன்னாடி எங்க அம்மா நிறைய முறை சூஸைட் பண்ண டிரை பண்ணி இருக்காங்க. ஒவ்வொரு முறையும் எங்களையும் சேர்த்துதான் ஆத்துக்கோ கிணத்துக்கோ கூட்டி போவாங்க. ஆனா கடைசி நிமிசத்துல மனசு மாறி வீட்டுக்கு திரும்ப கூட்டி வந்துடுவாங்க. அவங்களோட வலிகள்ல பாதி எனக்கும்தான் சொந்தம் சார். கை நிறைய சம்பாதிச்சி நான் அவங்களை இன்னைக்கு கௌரவமா வாழ வச்சாலும் கூட அவங்க பட்ட அவமானங்களை என்னால சாகற வரைக்கும் மறக்க முடியாது சார். தற்கொலைக்கு போன இடத்துல அந்த செகண்ட் மனசு மாறாம இருந்திருந்தா எப்பவோ நாம செத்திருப்போமேன்னு நினைச்சி தினமும் பயப்படுறேன் சார். ஆனா சத்தியமா இப்ப நீங்க உங்க மைன்ட் செட் பத்தி சொல்லன்னா நானும் கூட வருங்காலத்துல என் மனைவிக்கு செல்லம் கொடுத்து குழந்தையா வாழ வச்சி இருந்திருப்பேன். ஒரு முத்தம் என்னோட கண்ணை திறந்து வைக்கும்ன்னு நான் நினைக்கவே இல்ல சார்.." என்றவனின் முதுகில் தடவி தந்தான் முகில்.

"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்.." என்றபடி எழுந்து நின்றவன் தனது கண்களை துடைத்து கொண்டான்.

அவனது சிவந்த கண்களை காணும்போது முகிலுக்கு வருத்தமாக இருந்தது. "பழசை நினைக்க வேண்டாம் விடுங்கப்பா.." என்றான் ஆறுதலாக.

குரு அவனருகே வந்து வர்சனை தோளோடு அணைத்துக் கொண்டான். "வருத்தபடாதப்பா.. கஷ்டத்துல வளருவது ஒன்னும் தப்பு கிடையாது. தாண்டி வந்துட்ட பிறகும் இறந்த காலத்தை நினைச்சி பீல் பண்ணாம நிகழ்காலத்தை நல்லபடியா வாழ பாரு.." என்று சொன்னான்.

வர்சன் சரியென தலையசைத்தான். முகில் பெருமூச்சோடு தண்ணீர் பாட்டிலை எடுத்து வர்சனிடம் நீட்டினான். வர்சன் தண்ணீரை குடித்து விட்டு நிமிர்ந்தான்.

"நான் சொன்ன எதுவும் வெளியே தெரிய வேண்டாம்.. ப்ளிஸ்.." என்றான் முகில் அவனிடம்.
"உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் சார்‌. நீங்க என்னை நிச்சயமா நம்பலாம். என்னை மதிச்சி நீங்க உங்க பர்சனல் சொன்னிங்க. நீங்க என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன் சார். உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணும்ன்னா கூட நான் செய்றேன்.." என்றவன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பி சென்றான்.

குரு நாற்காலி ஒன்றில் சோர்ந்து அமர்ந்தான். "கஷ்டங்களை அனுபவிக்காத மனுசனை நேர்ல பார்க்க ஆசையா இருக்குடா.." என்றான்.

"கடவுளே கஷ்டத்துல உள்ளவர்தான்.. நீ எழுந்து போய் உன் வேலையை பாரு.." என்று அவனை விரட்டினான் முகில்.

அழுது சிவந்த முகத்தோடு வீடு வந்து சேர்ந்த யதிரா ஜில்லென்ற தண்ணீரால் முகத்தை பல முறை கழுவினாள்.

முகில் வீட்டிற்கு வந்ததும் அதிகம் பேசவில்லை அவள். முகிலுக்கு அவளது மன வருத்தம் புரிந்தது. சற்று நேரம் சிந்தித்தான். படுக்கையறைக்குள் சென்று திரும்பினான்.

"யதிரா.." என்றவன் திரும்பி பார்த்தவளின் முன்னால் தன் கையில் இருந்த புகைப்படத்தை காட்டினான்.
யதிரா கண்களில் கண்ணீர் தளும்பியது. அது அவனும் அவளும் எடுத்துக் கொண்டு திருமண புகைப்படம். சௌந்தர்யா இரண்டாய் கிழித்து இருவரிடமும் தந்திருந்ததை அவன் ஒட்ட வைத்து பிரேம் போட்டு கொண்டு வந்திருந்தான்.

யதிரா புகைப்படத்தின் மீது வருடினாள். கிழிந்து சேர்ந்த பகுதிகள் தெரியாமல் இருக்க கிராபிக்ஸில் பூ தோரணங்களை சேர்த்து இருந்தனர்.

"போட்டோவை எப்ப மாமா சரி செஞ்சிங்க..?" என கேட்டவளை தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டான் அவன்.

"இரண்டு நாள் ஆச்சி. இன்னைக்குதான் சொல்ல தோணுச்சி. லேட்டா காட்டியதுக்கு சாரி.." என்றான்.

"இந்த போட்டோவை இரண்டா கிழிச்சி அனுப்பி இருந்தபோது மனசு ரொம்ப வலிச்சது மாமா. தினம் அழுவேன் இந்த போட்டோவை பார்த்துக்கிட்டு.." என்றவள் இப்போதும் அழுதுக் கொண்டுதான் இருந்தாள்.

"சரி விடு.. இந்த போட்டோவை சரி பண்ணிட்டேன் பாரு. இனி நீயும் நானும் சேர்ந்து ஆயிரம் போட்டோஸ் எடுத்துக்கலாம். யாராலையும் கிழிச்செறிய முடியாத மாதிரி ஆளுயரத்துல பிரேம் போட்டு நாலு பக்க சுவர்களிலும் மாட்டி விடலாம். வீடு முழுக்க நம்ம போட்டோஸ்தான் இருக்கணும்.." என்றவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.

"எதுக்குதான் இப்படி அழறியோ.? குழந்தைகளே பரவால்ல.." என்றவன் அவளது விழிகளின் மீது முத்தங்களை பதித்தான். யதிரா கன்னம் வெட்கத்தில் சிவந்தது.

"ஒவ்வொரு நொடியையும் புதுசா நினைச்சி புதுசா பழகி புதுசா வெட்கப்பட உன்னாலதான் முடியும்.." என்றான் கிண்டலாக.

"போங்க மாமா.." என சிணுங்கியவளை சிரிப்போடு அணைத்துக் கொண்டான் முகில்.

மறுநாள் அலுவலகம் கிளம்பிய முகிலுக்கு ஃபோன் செய்தாள் சௌந்தர்யா.

"உடனே வீட்டுக்கு வாடா.." என்றவள் இவன் பதில் சொல்லும் முன்பே ஃபோன் இணைப்பை துண்டித்துக் கொண்டாள். முகில் ஃபோனை வெறுப்பாக பார்த்தான்.

அவன் அந்த வீட்டுக்கு சென்ற போது அப்பா வாசலில் நாற்காலியில் இருந்தார். முகிலுக்கு அவர் அருகில் செல்ல கூட விருப்பமில்லை. அதனால் அம்மாவுக்கு போன் செய்தான்.

அம்மா இவன் பேசியவுடன் உடனே வெளியே ஓடி வந்தாள்.

"உள்ளே வாடா‌.." என்று அழைத்தாள்.

"எனக்கு வேலை இருக்கும்மா.. சௌந்தர்யா எதுக்கோ என்னை வர சொன்னா.? அவளை வர சொல்லு. நான் பேசிட்டு கிளம்பறேன்.." என இவன் பேசி முடித்தபோது சௌந்தர்யா வெளியே வந்தாள்.

"போன ரக்சாபந்தனுக்கு கயிறு வாங்கி வச்சேன். ஆனா கட்ட நேரம் கூடல. அதனாலதான் இப்ப உனக்கு கட்டி விடுறேன்.." என்றவள் கருப்பு கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தாள்.

முகில் அந்த கயிறையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். சிரிப்பு வரும் போல இருந்தது. ஆனால் சிரிப்பை கட்டு படுத்திக் கொண்டான்.

அவள் கயிற்றை கட்டினாள்.

"சௌந்தர்யா நீ எப்போதுமே ரக்சாபந்தன் கொண்டாடியது கிடையாது. ஆனாலும் இந்த கருப்பு கயிறை ரக்சாபந்தன் கயிறுன்னு கட்டுற. நானும் நம்புறேன்.." என்றவன் அம்மா பக்கம் திரும்பினான்.
"உங்க பொண்ணு இந்த வீட்டு மேல கடன் வாங்கி இருக்கா. இன்னைக்கு இவ பேர்ல அம்பது லட்ச ரூபா கடன் இருக்கு.." என்றான் சட்டென.

அவன் சொன்னது கேட்டு சௌந்தர்யாவின் முகத்தில் இருந்த ஜீவன் இறந்து போனது. அவளது பயம் அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அளவில்லா பயத்தோடு இருந்த அவளது கண்களை கண்டு குழம்பி போனான் முகில். அவளை போட்டு தர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவன் இங்கே புறப்பட்டு வந்ததே. ஆனால் இந்த அளவிற்கு அவள் பயப்பட வேண்டிய அவசியம் என்ன என்று குழம்பாமல் இருக்க முடியவில்லை அவனால்‌.

அப்பா தனது நாற்காலியிலிருந்து எழுந்து வந்தார். "ஆமா என் பொண்ணு அம்பது லட்ச ரூபா கடன் வாங்கி இருந்தாதான். ஆனா இரண்டே மாசத்துல மொத்த கடனையும் திருப்பி கட்டினாடா.. உன்னை மாதிரி உதவாக்கரை தண்டசோறு இல்ல இவ. அந்த கழிசடை பேச்சுக்காக இவளை பத்தி குறை சொல்றதை விடு.." என்றவர் ஆத்திரத்தோடு அவனை பார்த்து விட்டு மீண்டும் தனது நாற்காலிக்கே சென்று விட்டார்.

சௌந்தர்யா முகத்தில் பயம் இன்னும் அதிகமாக அதிகரித்தது.

அம்மா அப்பாவின் கோபத்தை கண்டு கண்களை துடைத்தபடியே வீட்டுக்குள் சென்று விட்டாள்.

முகில் இறுக்கிய கையோடு நின்றான். சௌந்தர்யா அவனை தூரமாக இழுத்து சென்றாள்.

"உனக்கு என்ன தெரியும்.?" என்றாள் பயத்தை மறைத்து கொண்டு.

"என்ன தெரியணும்.?" என்றவனை எரிச்சலோடு பார்த்தாள் அவள்.

"உன் மூளையை உன் சொந்த விசயத்துக்கு மட்டும் யூஸ் பண்ணு. என்னை பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டு திரியாத. இட்ஸ் மை வார்னிங்.." என்றவள் அவனை முறைத்து விட்டு வீட்டுக்குள்ளே போனாள்.

முகில் குழப்பத்தோடு அலுவலகம் வந்து சேர்ந்தான். கே.கே அதே வேளையில் அவசரமாக அவனிடம் ஓடி வந்தாள். தனது கையிலிருந்த பேப்பர் துண்டை முகிலிடம் நீட்டினாள்.

"உங்க அக்கா ஐம்பது லட்சம் கடன் வாங்கிய இரண்டே மாசத்துல பாதர் இன் லா இறந்ததுக்கு இன்சூரன்ஸ் மூணு கோடி ரூபா வந்திருக்கு. அதை உங்க அக்காவும் அவங்களோட எக்ஸ்ம் சரிபாதியா பிரிச்சி இருக்காங்க. இது உங்க மாமா அக்கவுண்ட்ல இருந்து சௌந்தர்யா அக்கவுண்ட்க்கு டிரான்ஸ்பர் ஆன ஒன்னரை கோடியோட விவரம்.." என்றாள்.

"இவ ஏன் சொத்தை அடமானம் வச்சி ஐம்பது லட்சம் கடன் தரணும்.? அவன் ஏன் சம்பந்தமே இல்லாம அதுவும் தன்கிட்ட டைவர்ஸ் வாங்கிட்டு போனவளுக்கு தன் அப்பாவோட இன்ஸ்சூரன்ஸ் காசை தரணும்.? சம்திங் ராங்.." என்றவனுக்கு தனது யோசனையில் எதுவும் கிட்டவில்லை.

"இவங்களுக்குள்ள என்னதான் நடந்ததுன்னு சீக்கிரம் கண்டுபிடி கே.கே.." என்றான் தலையை பிடித்தபடி.

"ஓகே சார்.." என்றாள் கே.கே.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1061
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN