நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதியன் தன்னை வெட்கத்தோடு பார்த்தவளை கண்டு ஆச்சரியப்பட்டான்.

"வாவ்.. நீயும் பொண்ணுதான் போல.. வெட்கப்பட கூட உனக்கு தெரியுது.." என்று ஆச்சரியத்தோடு அவன் கிசுகிசுக்க கண்களை இறுக்க மூடிய செங்கா அவனது காலின் மீது ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்.

"அப்பா.." சத்தம் வெளிவராமல் முனகியபடி காலை உதறியவன் அவளை முறைத்தான்.

அவளும் அவனை கண்களை உருட்டி முறைத்தாள்.

"அப்புறம் எவ்வயாவது தனியா சிக்கு.. உம்படைய கண்ணை நோண்டி எடுத்துடுறேன்.." என சிறு குரலில் எச்சரித்தவள் அங்கிருந்து விடுவிடுவென்று நடந்து போனாள்.

சீனுவை உள்ளே அழைத்து சென்றாள் கலையரசி. "அவர் எனக்காகதான் உன்னை வீட்டுக்குள்ள விட்டிருக்காரு சீனு.. நீ ஏதாவது வில்லங்கம் செய்ய நினைச்சா அப்புறம் நம்ம குடும்பத்துக்குன்னு இருக்கற கடைசி ஆண் வாரிசும் இல்லாம போயிடும். நல்லா புத்தியில வச்சிக்கோ.." என புத்தி கூறி விட்டு அவனை அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர சொல்லி கையை காட்டினாள். நடுத்தர வயது பெண் ஒருத்தி வந்து அவன் முன்னால் டீ டம்ளரை நீட்டினாள். அங்கிருந்த மனிதர்களை வியந்து பார்த்தபடியே டீயை பருக ஆரம்பித்தான் அவன்.

"அந்த டெம்போவில் இருக்கற பொருளெல்லாம் உங்களுக்கு சீதனமா வாங்கிட்டு வந்தேன் அத்தை.. தாத்தா பாட்டி இருந்தா பெருசாவே பண்ணி இருப்பாங்க.. ஆனா எனக்கு என்ன வாங்கறதுன்னு தெரியல. அதான் மனசுல பட்டதை வாங்கி வந்தேன்.." என்று சீனு சொன்னதை கேட்டவளுக்கு அவனிடம் மறுத்து சொல்ல மனம் வரவில்லை.

ஒரு சந்தர்ப்பம் தந்துதான் பார்ப்போமே என்று நினைத்தவள் அங்கிருந்த சிலரிடம் "வெளியே டெம்போவுல இருக்கற பொருளையெல்லாம் உள்ளே கொண்டு வந்து வச்சிடுங்க.." என்றாள்.

வாசலில் இருந்த கூட்டம் அவரவர் வேலையை பார்க்க சென்ற பின் அப்பளத்தின் கடைசி துண்டை வாயில் போட்டுக் கொண்டு திரும்பிய விஷ்வா "அதியா.. எப்படா வந்த.?" என்றான்.

"கெட்ட வார்த்தையில் கூட திட்டுங்கடா கேட்டுக்கறேன்.. ஆனா எப்ப வந்தன்னு கேட்டு எரிச்சலாக்காதிங்க.." என்று எரிச்சலோடு அதியன் சொல்ல அவனின் தோளில் கை போட்டபடி அருகே வந்து நின்றான் செழியன்.

"ஏன் அண்ணா கோவிச்சிக்கற.? நீ லேட்டா வந்துட்டு எங்க மேல கோபப்படலாமா.?" என்று கேட்டான் அவன்.

தம்பிக்கு பதில் சொல்ல அவன் முகத்தை பார்த்த அதியன் தம்பியின் கழுத்தில் சிவப்பாக ஏதோ இருப்பதை கண்டு "ரக்சனா லிப்ஸ்டிக் யூஸ் பண்றாளா.?" என்று அவனது காதோரம் கிசுகிசுப்பாக கேட்டான்.

"ஆமா அண்ணா.. உனக்கெப்படி தெரியும்.?" ஆச்சரியமாக கேட்டான் செழியன்.

"உன் கழுத்துல லிப்ஸ் மார்க் இருக்கு.. விஷ்வா பார்க்கும் முன்னாடி அழிச்சி தொலைடா.. இல்லன்னா உனக்கு பதிலா அவன் என்னைதான் கேள்வி கேட்பான்.." என்று எரிந்து விழுந்தவன் தம்பியின் பிடியிலிருந்து விலகி வந்து நண்பன் அருகே நின்றான்.

"நீ என்ன பச்ச புள்ளையா.? அப்பளத்தை சாப்பிட்டபடியே வீட்டை சுத்தி வர.?" என்றான் அதட்டலாக.
அவனை முறைத்த விஷ்வா "கரும்பை பாதி தின்னுட்டு கையில் வச்சிருக்கற நீயெல்லாம் இதை சொல்லலாமா.? போடா அந்த பக்கம்.." என்றான்.

"விஷ்வா தம்பி.. வாழைக்காய் பஜ்ஜி போட்டாச்சி.. சாப்பிட்டு பார்த்து எப்படின்னு சொல்லுங்க.." என்று வந்து ஒரு தட்டை தந்து சென்றாள் ஒரு பாட்டி.

பஜ்ஜியை எடுத்து கடித்தவன் "டேஸ்ட் சூப்பரு மாராக்கா பாட்டி.." என்று கத்தினான். அந்த பாட்டி திரும்பி பார்த்து புன்னகைத்து விட்டு போனாள்.

"ஏன்டா இப்படி எல்லோரும் வேற ஏதோ மாதிரி நடந்துக்கிறிங்க.?" என்று கேட்ட அதியனுக்கு உண்மையில் தான் மட்டும் தனித்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.

"டேய் இது வில்லேஜ்டா.. கொஞ்ச நேரம் பழகினா போதும்.. எல்லோரும் சொந்தம்தான்.. இங்கே பந்தா பண்ணிட்டு இருந்து என்ன பண்றது.? இது என் மாமியார் வீடு. என் வீடு மாதிரிதான். என் வீட்டுல நான் அப்பளம் தின்னா என்ன தப்பு.? இல்ல பஜ்ஜி தின்னாதான் என்ன தப்பு.? இந்தா வேணும்ன்னா நீயும் இரண்டு எடுத்து சாப்பிடு.." என்று பஜ்ஜி தட்டை அவன் முன் நீட்டினான்.

அதியன் வெட்ட போகும் ஆட்டை போல தலையை ஆட்டி வேண்டாமென மறுத்தான்.

"வேணாம்ன்னா போ.. நானே சாப்பிட்டுகிறேன்.." என்றவன் "பேபிம்மா மாமாவுக்கு பாயாசம் கொண்டு வா.." என்று உள்ளே பார்த்து குரல் தந்தான்.

பொன்னா வருவாள் என எதிர்பார்த்திருந்த இடத்தில் பாயாசத்தோடு செங்கா ஓடி வந்தாள்.

"மாமா.. பாயாசம்.." என்றாள்.

அனைவரும் வேண்டுமென்றே தன்னை வெறுப்பேற்றுவது போல தோன்றியது அதியனுக்கு.

"நீ பேபின்னு கூப்பிட்டதும் இவ ஏன்டா பாயாசத்தோட வந்தா.?" எரிச்சலோடு நண்பனிடம் கேட்டான் அதியன்.

பாயாசத்தை விஷ்வாவிடம் தந்த செங்கா அதியனை முறைத்து பார்த்து விட்டு திரும்பி உள்ளே போனாள்.

பாயாசத்தை ஒரு விழுங்கு குடித்துவிட்டு நண்பனிடம் திரும்பிய விஷ்வா "இவதான்டா பேபி.. என்னை மாமான்னு ஆசையா கூப்பிடுற மச்சினிக்கு நான் வச்ச செல்ல பேரு நல்லா இருக்கு இல்ல.?" என்று பல்லை காட்டியபடி கேட்டான்.

உதட்டை கடித்தபடி நண்பனை முறைத்தவன் "படு கேவலமா இருக்கு.." என்று எரிந்து விழுந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

பொன்னா தன் தோழி ஒருத்தியோடு பேசிக் கொண்டிருக்க அவளின் மீது சாய்ந்தபடி நின்றிருந்தாள் செங்கா. அதியனை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டாள். அதியன் அமைதியாக அவர்களை கடந்து சென்றான். காலியாக இருக்கும் அறைகளின் கதவுகளை திறந்து பார்த்தான். எல்லா அறையிலும் யாராவது இருந்தார்கள். கடைசி அறை மட்டும் காலியாக வெறும் கட்டிலோடு இருந்தது. அதியன் சோம்பலாக சென்று கட்டிலின் மீது அமர்ந்தான். இவ்வளவு தூரம் கார் ஓட்டி வந்த களைப்பு சட்டென பிடித்துக் கொண்டதால் தன்னையும் மறந்து கட்டிலில் சாய்ந்தவன் அப்படியே உறங்கி போனான்.

நேரம் செல்ல செல்ல உறவினர்களால் வீடு நிரம்ப ஆரம்பித்தது. காயத்ரியும் சக்தியும் வந்த அனைவரையும் வரவேற்று கவனித்துக் கொண்டார்கள்.

மாலை வேளையில் செங்காவை ஒரு ஓரத்திற்கு இழுத்து சென்றாள் பொன்னா. "உனக்கும் அதியனுக்கும் இடையில் என்ன கனெக்சன்.?" என்று கையை கட்டியபடி அவளை சந்தேகமாக பார்த்து கேட்டாள்.

செங்கா இடமும் வலமும் தலையை அசைத்தாள். "எங்களுக்குள்ள என்ன இருக்கு.? அந்த தேவாங்குக்கும் எனக்கும் நடுவுல என்ன சம்பந்தம்.?" என்று திருப்பி கேட்டவளை கண்கள் சாய்த்து பார்த்தாள் பொன்னா.

"உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் கழுத.. நீ இதுவரைக்கும் எந்த பையன்கிட்டயும் சிரிச்சி பேசுனது கிடையாது.. ஆனா அதியனை பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி கண்ணை சாச்சி கன்னம் சிவந்து ஒரு மாதிரியாதான் பார்க்கற.. அவரும் நான் ஒவ்வொரு முறை ஊருக்கு வந்துட்டு போகும்போதும் உன்னை பத்தியே விசாரிக்கறாரு.. என்ன எங்க யாருக்கும் தெரியாம நீங்க தனி படம் ஓட்டிட்டு இருக்கிங்களா.?" என்று கேட்டாள்.

செங்கா இல்லையென்று தலையை அசைத்தாள். "சின்ன பொண்ணுக்கிட்ட பேசற பேச்சா இது.? தூர போ.." என்றவள் பொன்னாவை விலக்கி தள்ளி விட்டு அங்கிருந்து ஓடிப்போனாள்.

"இவளுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சி போல.. அதான் இப்புடியெல்லாம் கேட்கறா.." என புலம்பியபடியே தனது அறைக்கு வந்தவள் கதவை தாளிட்டு விட்டு தாவணியை கழட்டியபடியே திரும்பினாள். அறையில் இருந்த கட்டிலில் அதியன் குப்புற படுத்து உறங்குவதை கண்டு திகைத்தவள் சட்டென கதவின் தாழ்பாளை திறந்து விட்டுவிட்டு அவனருகே வந்தாள்.

"பட்டணத்துகார மகராசா.. கொஞ்சம் எந்திருக்கிறியா.?" என்று அவனது தோளை தட்டினாள். அதியன் படக்கென எழுந்து அமர்ந்தான். தன் அருகில் அமர்ந்திருந்த செங்காவை கண்டவன் கை கடிகாரத்தை பார்த்தான்.

"சாரி தூங்கிட்டேன் போல.." என்று கண்களை கசக்கிக்கொண்டான் அவன்.

"இங்கே என்ன பண்ற நீ.?" கொட்டாவி விட்டுக் கொண்டே அவன் கேட்க "உன்னைத்தான் ரசிச்சிட்டு இருந்தேன்.." என்று கன்னத்தில் கை வைத்தபடி சொன்னாள் அவள்.

அவன் திகைத்து போய் அவசரமாக கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்றான். "என்ன உளருற நீ.?" என்றான் கலைந்த தலையை சரிசெய்தபடியே.

"அரை வேக்காடு.. நீ எம்படைய ரூம்ல வந்து படுத்து தூங்கிட்டு என்னையே கேள்வி கேட்டா என்ன பதில நான் சொல்றது.?" என அவள் கேட்க அவன் அவசரமாக கதவை நோக்கி நடந்தான்.

"சாரி.. இது உன் ரூம்ன்னு தெரியாது.‌ சாரி.." என்றவன் கதவை தொட்ட வேளையில் "அப்புடியே நில்லு.." என்றபடி அவனருகே வந்தாள் செங்கா.

என்னவென்று திரும்பி பார்த்தவனின் அருகே வந்து நின்றவள் "உன் கரும்பு.. கட்டில்ல கெடந்தது.." என்று அவன் பாதி தின்ற கரும்பின் மீதியை நீட்டினாள். அவசரமாக வாங்கி கொண்டவன் திரும்பிய வேளையில் "ஒரு சின்ன சந்தேகம்.." என்று தன் பின்னந்தலையை கீறினாள் செங்கா‌.

"என்ன.?" அவளை திரும்பி பார்த்து கதவில் சாய்ந்து நின்றபடி கேட்டவன் அவளின் குழப்பம் நிறைந்த முகத்தை ஆராய்ந்தான்.

"நான் கேட்டா நீ தப்பா நெனைச்சிக்க கூடாது சரியா.?" என்றாள் எச்சரிக்கையாக.

"தப்பா ஏன் நினைக்க போறேன்.. நீ கேளு.." என்றவனுக்கு அவளது தயக்கம் புரியவில்லை.
"இல்ல.. அது.. அது வந்து.. நீ என்னை நேசிக்கிறியா.?" தாவணியை இறுக்க பிடித்தபடி கேட்டவள் தயக்கமாக அவனை பார்த்தாள்.

அவன் அவளது கேள்வியால் சிலையாக நின்று விட்டான். அவள் இப்படி சட்டென ஒரு கேள்வியை தன் முன் வைப்பாள் என்று அவன் நினைத்து கூட பார்த்தது இல்லை.

"நான்.. நான்.." வார்த்தைகள் வராமல் குழம்பி நின்றவனை ஏமாற்றத்தோடு பார்த்தவள் "பரவால்ல.. நான் வெளையாட்டுக்குதான் கேட்டன்.. எனுக்கு மட்டும் தெரியாதா உம்படைய தரம் என்ன எம்படைய தரம் என்னன்னு.." என்று கேட்டு சிரித்தவளின் முகத்தில் ஏமாற்றம் அப்படியே தெரிந்தது.

அதியனுக்கு அவளது உள்ளம் புரிந்தது. ஆனால் செழியனும் ரக்சனாவும் இணைந்திருப்பதுதான் அவன் கண்ணில் வந்து போனது. தான் இவளுக்கு சரியென சொன்னால் நிச்சயம் தம்பி தன் காதலை கோட்டை விட்டாக வேண்டும் என்ற நிதர்சனம் உரைத்தது.

"இது அப்படி இல்ல செங்கா.. இதுல என்ன தரம் இருக்கு.?" அவளுக்கு சமாதான சொற்களாவது சொல்லலாம் என்று முயன்றான்.

"இல்ல.. பரவால்ல.. ஏதும் சொல்ல வேண்டாம்.." என்று அவசரமாக மறுத்தாள்.

"செங்கா.. நான்.." அதியனுக்கும் என்ன சொல்வதென தெரியவில்லை.

"எங்கம்மா என்னை முன்ன இருந்து கூப்புட்டுச்சி.. நான் போவணும்.." என்றவள் தயங்கி தாவணியின் நுனியை பிடித்தபடி நின்றாள்.

அதியன் பெருமூச்சோடு விலகி நின்றான். அவள் கதவை திறந்து கொண்டு அவசரமாக வெளியே ஓடினாள்.

"ஏன்டி இப்படி ஓடி வர..?" என்று பொன்னா கேட்டதும் அதற்கு செங்கா மழுப்பலாக பதிலை சொன்னதும் அதியனின் செவியில் விழுந்தது. இரு கைகளாலும் தலையை பிடித்து கொண்டான். பெரிய இழப்பு ஒன்றை சந்தித்தது போல இருந்தது அவனுக்கு.

கரும்பை கையில் பிடித்தபடி அவன் வெளியே வந்தபோது தூரத்திலிருந்து இவனை பார்த்தான் சீனு. அவன் கண்களில் கோபம் தென்பட்டது.

அதியன் செங்கா எங்கிருக்கிறாள் என்று சுற்றும் முற்றும் தேடி பார்த்தான். அவள் இருந்த இடமே தெரியவில்லை.

வாசலுக்கு வந்தான். சுற்றிலும் இருள் தெரிந்தது. விளக்கொளியின் இடையே செங்கா எங்கே என்று தேடினான். பொன்னாவும் விஷ்வாவும் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"செங்கா எங்கே.?" என்றான் அவர்களின் அருகே சென்று.

"உன் ஆளை பார்க்காம ஒரு செகண்ட் கூட இருக்க முடியலையா.?" விஷ்வா கிண்டலாக கேட்கவும் அதியனுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

"லூசு மாதிரி பேசாத விஷ்வா.." என்றான் எரிச்சலோடு. செங்கா என்ன நினைத்திருப்பாளோ என்ற கேள்வி அவனை பாடாய்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் நண்பனின் கிண்டலால் சற்று அதிகமாகவே கோபப்பட்டு விட்டான்.

அதியனை முறைத்தான் விஷ்வா. "நான் லூசு மாதிரி பேசுறேனா.? அப்புறம் ஏன்டா அவளுக்கு உன் கர்ச்சீப்பால உதட்டை துடைச்சி விட்ட.?" என்றான் அவனின் கோபத்தோடு.

குழம்பி நின்ற அதியனுக்கு விஷ்வா எதை கேட்கிறான் என புரிந்ததும் பற்களை கடித்தான். "நீ பார்த்தியா.? ஆனா அது சும்மா.." என்றவனின் முன்னால் கை காட்டி நிறுத்தினான் விஷ்வா.

"போதும் அதியா.. அவ மேல உனக்கு எந்த பீலிங்கும் இல்லன்னா அதோடு நிறுத்திக்க.. அவ எங்கேன்னு கேட்டு அவளை தேடாத.. அவ ஆண்களோடு அதிகம் பழகாதவ.. நெருங்கி பழகி அவ மனசுல ஆசையை தந்துடாத.. இதோடு நிறுத்திக்க.." என்றவன் நண்பனை முறைத்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1202
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN