செங்கா 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்கா சொன்னது கேட்டு அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

"லூசு மாதிரி பேசாத பேபிம்மா.." என்று திட்டினான் அருகில் இருந்த விஷ்வா.

சாமிநாதனுக்கு செங்கா ஏன் இப்படி சொன்னாள் என்று கவலையாக இருந்தது. அவள் காரணமின்றி இவ்வளவு பெரிய முடிவை எடுக்க மாட்டாள் என்பதால் அவள் மனம் இப்படி மாறி காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார் அவர். ஆனால் எதுவும் அவருக்கு பிடிபடவில்லை.

விஷ்வாவுக்கு அதியன் மேல் கொலை வெறியாக இருந்தது.

"பெரியவங்க நாங்க இருக்கும்போது நீ எதுக்குடி முந்திரி கொட்டை மாதிரி முந்துற.?" என எரிச்சலோடு கேட்டாள் கலையரசி.

"விடுங்க அத்தை.. சின்ன புள்ளை ஏதோ தெரியாம சொல்லிட்டா.. அதுக்கேன் அவளை திட்டுறிங்க.?" என்று செங்காவிற்கு ஆதரவாக பேசினான் சீனு.

செங்கா பேசியதை விட அவன் பேசுவதுதான் அங்கிருந்தவர்களுக்கு அதிக குழப்பத்தை தந்துக் கொண்டிருந்தது.

"நான் தெரியாம பேசல மாமா.. நானும் வயுசு புள்ளதான்.. உனுக்கு பொன்னாவை புடிச்சிருக்கும்போது என்னை ஏன் புடிக்கல.? நானும் அவுளும் ஒரே மாதிரிதானே இருக்கோம்.? நானும் நல்லா சோறாக்குவேன்.. வூட்டு வேலை எல்லாம் செய்வன். பள்ளிக்கோடம் போய் படிக்கல.. அவ்வளுவுதான்.. அதுக்கோசரம் என்னை வேணாம்ன்னு சொன்னா அதுக்கும் மேல நான் மட்டும் என்ன பண்ண முடியும்.?" என ஒரு மாதிரி குரலில் கேட்டவள் சோகமாக அங்கிருந்து எழுந்து போனாள்.

"ஏய் செங்கா.. உனக்கு என்னடி வந்துச்சி.?" என்று கத்தினாள் பொன்னா. ஆனால் அவளின் வார்த்தைகளை காதில் வாங்காமல் செங்கா வீட்டை விட்டு வெளியே நடந்தாள்.

சீனுவுக்கு முகத்தில் ஈயாடவில்லை. வாசல் தாண்டி நடந்த செங்காவை கண் சிமிட்டாமல் பார்த்தான்.
"அவளுக்கு என்ன ஆச்சி.?" என்று பொன்னாவிடம் கேட்டாள் கலையரசி.

பொன்னா இடம் வலமாக தலையசைத்தாள்.

சீனு கலையரசியை பார்த்தான்.

"நான் ஊருக்கு கிளம்பறேன் அத்தை.. செங்கா வந்து ஏதும் கேட்டா தாத்தா செத்து ஒரு வருசம் முடியல.. முடிஞ்ச பிறகுதான் எதையும் பேச முடியும்ன்னு சொல்லிடுங்க.. இந்த எட்டு மாசத்துக்குள்ள அவளுக்கு வேற இடத்துல பார்த்து கட்டி வச்சிடுங்க.. இல்லன்னா தாத்தாவுக்கு வருசத்து காரியம் பண்ணி முடிச்ச உடனே நானே இவளை கட்டிப்பேன்.." என்றவன் அங்கிருந்து எழுந்து நடந்தான்.

அவனிடம் என்ன சொல்வதென கலையரசிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நிமிடத்தில் இப்படி ஒரு குழப்பத்தில் தள்ளி விட்டுவிட்ட செங்கா மீது ஆத்திரமாக வந்தது அவளுக்கு.

விஷ்வா நகத்தை கடித்தபடி யோசனையில் இருந்தான்.

சாமிநாதன் மகளை தேடிக் கொண்டு புறப்பட்டார். ஆற்றோரம் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தாள் மகள். அவளின் அருகே சென்று அமர்ந்தவர் அவளின் பார்வை போன பக்கம் தன் பார்வையையும் செலுத்தி மலைகளை பார்த்தார்.

செங்கா தன் அருகில் வந்து அமர்ந்த அப்பாவை கண்டதும் அவரின் நெஞ்சில் தலை சாய்த்து கொண்டாள். சாமிநாதன் அவளின் முதுகை வருடி தந்தார்.

"ஏன்ப்பா என்னை யாருக்கும் புடிக்கல.?" என கேட்டவளுக்கு கண்ணீர் விழியை தாண்டி வழிந்தது.

அவர் தன் மகளை அணைத்துக் கொண்டார். "உன்னை எல்லோருக்கும் புடிக்கும்மா.. நீ என் செல்ல பிள்ளை.." என்றார் அவர்.

செங்கா இல்லையென தலையசைத்தாள். "நான் அழவா இல்லப்பா.. நான் பள்ளிக்கோடம் போவாத தற்குறி.. எனுக்கு நாவரீவம் ஏதும் தெரியல.." என்றவளுக்கு அழுகையாக வந்தது.

"நீ என மவ டா செங்கா.. நீ தைரியசாலி.. எதிருல எமனே வந்தாலும் தோற்க மாட்டா.. எதுக்கு இப்படி தேவையில்லாததையெல்லாம் யோசிக்கற.? முகத்துல இருக்கற அழகு வருசம் போனா போயிடும்.. ஆனா உள்ளத்துல இருக்கற அழகு கடைசி வரைக்கும் வரும். உனக்கு முகமும் அழகுதான்.. உள்ளமும் பேரழகுதான்டா.. படிச்சவங்க மட்டும் உசத்தியா என்னடா.? படிச்சும் கூட முட்டாளா இருக்கறது இல்லையா பலரும்.? நீ படிக்கலன்னாலும் புத்திசாலி புள்ளைடா.. அங்கே வெளியே அவங்க கொண்டாடுற நாகரீகம் அத்தனையும் ஏதோ ஒருநாள் இப்படி ஒரு காடு மலையிலிருந்து உருவானதுதான்டா.." என்றவர் அழுதவளின் தலை முடியை கோதி விட்டார்.

"என் மவ எவ்வளவு உசத்தின்னு எனக்கு மட்டும்தான்டா தெரியும்.. எதுக்கும் கலங்காதவ இப்ப ஏன்டா இப்படி அழுற.? பெத்த மனசு பரிதவிக்குதுடா உன் அழுகையை பார்த்து.. உன் மனசுல என்ன ஓடுதுன்னு அப்பனுக்கு சொன்னாதானே தெரியும்.?" என்றவர் அவளின் முகத்தை நிமிர்த்தி அவளது கண்ணீரை துடைத்து விட்டார்.

"உனக்கு ஏன் இப்படியெல்லாம் கவலை.? அப்பன்கிட்ட சொல்லு.. நான் சரி பண்றேன்.." என்றார்.

செங்கா கண்களை துடைத்துக் கொண்டாள். "சொன்னா திட்ட மாட்டியே.?" என்றாள் எச்சரிக்கையோடு.

"என் மவள நான் ஏன் திட்டப்போறேன்.?" என கேட்டார் அவர்.

"விஷ்வா மாமா சேத்தாளி இருக்கான் இல்ல.?"

"ம்.. அதியன்.."

"ஆமா அவன்தான் என்னை புடிக்கலன்னு சொல்லிப்புட்டான்.." என்றவள் உடனே விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

சாமிநாதனுக்கு அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

"உனக்கு அவரை பிடிச்சிருக்கா.?" சந்தேகமாக கேட்டார் அவர்.

செங்கா அப்படியும் இப்படியுமாக தலையை ஆட்டினாள். "தெரியல.." என்றாள்.

சாமிநாதன் அவளது தலையை தடவி தந்தார். "என் மக சிங்கமே எதிருல வந்தாலும் ஒரு கை பார்ப்பா.. ஆனா இப்படி அழ மாட்டா.." என்றார்.

"மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா.." முகத்தை மூடியபடி அழுகையின் நடுவே சொன்னவளை காணும்போது அவருக்கும் கஷ்டமாக இருந்தது.

"உனக்கு பிடிச்சிருந்தா போராடி பாரு.. பிடிக்கலன்னா அடுத்த வேலையை பாரு.. ஆனா ஏன் சீனுவை கல்யாணம் பண்ணிக்கிறதா வார்த்தையை விடுற.?" என்று கேட்டவருக்கு கடைசி வாசகங்களை சொல்லும் போது வருத்தமாக இருந்தது.

"ஏன் சீனு மாமனுக்கு என்ன கொறைச்சல்.? ஊரு பூரா வப்பாட்டி வச்சிருக்காரு.. அவ்வளவுதானே.?" என கேட்டவளை கோபமாக பார்த்தார் அவர்.

"அதோ அந்த ஆத்துல உன்னை கல்லை கட்டி தூக்கி போட்டா செத்துடுவ.. அவ்வளவுதானே.? அதுக்காக உன்னை தூக்கியா போட முடியும்.?" என அவர் கேட்க அவள் விக்கிக் கொண்டே நிமிர்ந்து பார்த்தாள்.

"உனக்கு யாரையாவது பிடிச்சிருந்து அவனுக்கும் உன்னை பிடிச்சிருந்தா காதலிச்சி கல்யாணம் பண்ணிக்க.. இல்லன்னா நான் ராசா மாதிரி ஒரு பையனை பார்த்து தரேன்.. அப்ப கட்டிக்கிட்டு காதலி.. அதை விட்டுட்டு யார் மேலயோ இருக்கற கோபத்துல இன்னொருத்தனுக்கு வாக்கு தராத.. வாழ்க்கை விளையாட்டு பொருள் இல்ல உடைஞ்சா மறுபடியும் புதுசா வாங்கிக்க.." என்றவர் எழுந்து நின்றார்.

"எழுந்து வா வீட்டுக்கு போகலாம்.. போய் வயிறு நிறைய சாப்பிடலாம்.. சாப்பிட்ட கையோடு தூங்கலாம்.. சாயங்காலம் பொழுது சாயுற வேளையில் எழலாம்.. மனசுல இருக்கற கஷ்டம் எல்லாம் அதுக்குள்ள காணாம போயிடும்.." என்றார்.

தூங்கி எழுந்தாலும் மனதின் வேதனை நீங்காது என்று அறிந்தவளுக்கு தந்தையின் சொல்லை தட்ட மனம் வரவில்லை. முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவர் பின்னால் நடந்தாள்.

விஷ்வா அதியனுக்கு ஓயாமல் ஃபோன் செய்து பார்த்தான். ஆனால் எதிர் முனையில் எந்த தகவலும் இல்லை.

பொன்னாவை தேடி வந்தான் விஷ்வா.

"நான் அம்மா தங்கையோடு ஊருக்கு கிளம்பறேன் புவி.. ஒரு வாரம் இருந்துட்டு போகலாம்ன்னுதான் நினைச்சேன்.. ஆனா சாரி.. அர்ஜென்ட் வொர்க்.. நீ ஏதும் தப்பா எடுத்துக்காத.." என்றவன் சில நொடிகள் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"கல்யாண வேலைகளை பத்தி நான் மாமாக்கிட்ட ஃபோன்ல பேசிக்கறேன்.. உனக்குத்தான் காலேஜ் முடிஞ்சிடுச்சி.. உன்னை பார்க்காம ஒன்னரை மாசம் எப்படி இருக்க போறேன்னு தெரியல.." என்று பெருமூச்சு விட்டவன் "முடிஞ்சா இரண்டு வாரம் கழிச்சி வந்து உன்னை பார்த்துட்டு போறேன். சரியா.?" என்றான்.

அவள் சரியென தலையசைத்தாள்.

அவளை விட்டு விலகி நின்றான். "தினமும் டைம் கிடைக்கும் போதெல்லாம் ஃபோன் பண்றேன்.. மறக்காம கால் அட்டென்ட் பண்ணு.." என்றான். அவள் மீண்டும் சரியென தலையசைத்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் விஷ்வா அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். செழியனும் அவர்களோடு இணைந்து புறப்பட்டான்.

சொந்த பந்தங்களும் கூட ஒவ்வொருவராக கிளம்பி விட்டனர். வெறிச்சென்று இருந்த வீட்டின் நடு ஹாலில் தலைகீழாக போட்டிருந்த இரண்டு கட்டில்களில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர் சாமிநாதனும் செங்காவும். மாலை பொழுது மறையும் வரையிலும் உறங்கி கொண்டுதான் இருந்தார்கள் இருவரும். அழுத களைப்பில் உறங்கினாள் செங்கா. வீட்டை கட்டி பார்த்துவிட்ட களைப்பில் உறங்கி கொண்டிருந்தார் சாமிநாதன்.

கலையரசியும் பொன்னாவும் வீடெங்கும் இறைந்து கிடைந்த பொருட்களை ஒழுங்கு படுத்தும் வேளையில் இருந்தனர். இருவருக்கும் முதுகு வலித்தது செய்த வேலையின் காரணமாக.

பொன்னா கடைசி முறையாக சென்று செங்காவை எழுப்பி பார்த்தாள். ம்கூம். எருமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக கொஞ்சமும் அசராமல் உறங்கி கொண்டிருந்தாள் செங்கா. அப்பாவின் தோளில் தட்டினாள். அவர் அவரது கையை தட்டி விட்டுவிட்டு திரும்பி படுத்துக் கொண்டார்.

"அவங்களை எழுப்பிட்டு இருக்கற நேரத்துல நாம இன்னும் நாலு வேலைகளை செஞ்சி முடிச்சிடலாம் வாடி.." என்று சலிப்போடு அழைத்தாள் அம்மா.

"இந்த பாத்திரத்தையெல்லாம் மேலே எடுத்து வைக்க என்னால முடியாதும்மா.. எனக்கு ஏணியில் ஏறினாலே கால் நடுங்கும்.." என்று தயங்கி நின்றாள் பொன்னா.

"எல்லாத்தையும் கீழேயே ஒரு ஓரமா வை.. செங்காவை எடுத்து வைக்க சொல்லி நாளைக்கு காலையில் சொல்லலாம்.." என்று சொன்ன கலையரசி வாசலில் இருந்த குப்பைகளை கூட்டி தள்ள சென்றாள்.

அதியன் தனது அறையில் அமர்ந்து வேலை சம்பந்தமான பைல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான். இரவு சூழ்ந்ததை கூட கவனிக்கவில்லை அவன்.

அவனது கவனத்தை கலைக்கும்படி அந்த அறை கதவு படபடவென தட்டப்பட்டது. இந்த நேரத்தில் யார் வந்துள்ளது என குழப்பத்தோடு சென்று கதவை திறந்தான். விஷ்வா நின்றுக் கொண்டிருந்தான்.

"என்னடா அதுக்குள்ள வந்துட்ட.? இன்னும் ஒரு வாரம் ஆகும்ன்னு நினைச்சேனே.." என கேட்டவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்தை விட்டான் அவன்.

உதட்டில் கசிந்த ரத்தத்தை துடைத்தபடி நண்பனை புரியாமல் பார்த்தான் அதியன். "ஏன்டா.?" என்றான்.

"செங்காவோட மனசை உடைச்சியே அதுக்காக.." என்றவன் அவனது முகத்தில் மீண்டும் ஒரு குத்து விட்டான்.

"நீ ஒரு சேடிஸ்ட் தெரியுமா.? உன்னை லவ் பண்ணா அந்த பொண்ணு வாழ்க்கை நாசமா போயிடும்.. இதுதான் நிஜம்.. செங்கா சீனுவை கல்யாணம் பண்ணி தன் வாழ்க்கையை நாசமாக்கிக்க நீதான் காரணம்.." என்றான் ஆத்திரத்தோடு.

"புரியல.." என்றான் அதியன்.

"உன் கோழைத்தனத்தால் இவ சீனுவை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டா.. உனக்கு புரியுதா அவ வலி.. ஏமாற்றம் தாங்காம அவ எடுத்த இந்த முடிவுல எவ்வளவு வலி இருக்கும்ன்னு உனக்கு தெரியாது.. அவ எவ்வளவு தைரியசாலி தெரியுமா.? ஆனா சின்னதா ஆசையை காட்டி அவளை மொத்தமா உடைச்சிட்ட.." என்றான் கோபத்தோடு.

அதியன் நெற்றியை தேய்த்தான். "நான் ஒன்னும் அவ மனசுல ஆசையை வளர்க்கல.." என்றான் மெல்லிய குரலில்.

விஷ்வா சிரித்தான். "நீ ஆசையை வளர்க்கல.. அவதான் ஆசைப்பட்டு ஏமாந்துட்டா.. நீதான் பெரிய அப்பாட்டக்கர் ஆச்சே.. சாதாரண கிராமத்து பொண்ணோட காதலையெல்லாம் ஏத்துக்குவியா.? கையில் நாலு டிகிரி சர்டிபிகேட்டும், நுனி நாக்கு இங்கிலீஸும், தொடை தெரியும் ஷார்ட்ஸுமா இருக்கறவங்க மட்டும்தான் உன் லிஸ்ட்ல பொண்ணுங்க இல்லையா.? இவ ஏதோ காட்டான்தானேங்கற நினைப்பு.." என்றான் வெறுப்பாக.

"நீ ஏன் புரியாம பேசுற விஷ்வா.. அவ எனக்கு தங்கச்சி முறை ஆகறா.. அவ ஆசைப்பட்டான்னு நான் எப்படி ஓகே சொல்ல முடியும்.?" என்று அவன் கேட்க அவனை குழப்பமாக பார்த்தான் விஷ்வா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1122
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN