நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

செங்கா 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விஷ்வா யோசனையோடு அதியனை பார்த்தான்.

"நீயும் செங்காவும் சொந்தக்காரங்களா.? ஆனா ஏன்டா இதை எனக்கு இவ்வளவு நாள் சொல்லல.?" என்று கேட்டான் அவன்.

அதியன் அவனை எரிச்சலோடு பார்த்தான்.

"நாங்க சொந்தக்காரங்க இல்ல.. என் தம்பியும் உன் தங்கச்சியும் லவ் பண்றாங்க.. அந்த வகையில் பார்த்தா செங்கா எனக்கு தங்கச்சிதான் ஆகறா.. அதனால நடக்காத ஒன்னை பத்தி பேசுறதை விட்டுட்டு உன் வேலையை போய் பாரு.." என்றான் அதியன்.

"என் தங்கச்சியை உன் தம்பிக்கு கட்டி தரதா நான் எப்ப சொன்னேன்.? அவங்க இரண்டு பேரும் கட்டிக்க போறது கிடையாது.. இதனால உனக்கும் செங்காவுக்கும் நடுவுல எந்த பிரச்சனையும் இல்ல.." கோபத்தோடு விஷ்வா சொல்ல அவனை வெறுப்பாக பார்த்தான் அதியன்.

"ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்புமா இருக்காதடா.. என் தம்பியும் நல்ல பையன்தான்.. அவனும் ரக்சனாவும் ரொம்ப வருசமா லவ் பண்றாங்க. பாவம் அவங்களை பிரிச்சி வைக்காத.. இன்னைக்கு வந்த மச்சினியோட ஆசையை பார்க்கற நீ ஏன் உன் கூட பிறந்தவ காதலை பத்தி யோசிக்க மாட்டேங்கற.?"

விஷ்வா சோர்வாக வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

"ரக்சனா கல்யாணத்தை பத்தி நாங்க இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாதுடா.. அவ என் தங்கைதான். ஆனா ரத்த சொந்தம் நாங்க இல்ல. உன்னை நம்பி இந்த உண்மையை சொல்றேன். ப்ளீஸ்.. ரகசியமா வச்சிக்க. அவளோட பேரண்ட்ஸ் வேற.. இதை சொல்ல கூட எனக்கு மனசு வரல. அந்த அளவுக்கு நான் அவ மேல பாசம் வச்சிருக்கேன். இந்த உண்மை வெளி உலகத்துக்கு தெரியறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல.. அவளை பெத்த அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவங்க. அது வெளியே தெரிஞ்சா எல்லாரும் அவளை கிண்டல் பண்ணுவாங்க. ரக்சனாவை என் கூட பிறந்தவளா நினைச்சிட்டு இருக்கேன் நான். ஆனா அவ வேற வீட்டு பொண்ணுங்கற உண்மையை என்னால ஏத்துக்க முடியல. அவளோட அப்பா ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போதும் எங்க அவக்கிட்ட உண்மையை சொல்லி அவளை தன்னோடு கூட்டிட்டு போயிடுவாரோன்னு ரொம்ப பயமா இருக்கும். நேத்து அவளுக்கு தான் யாருங்கற உண்மை தெரிஞ்சிடுச்சி . அவ எங்கே எங்களை விட்டுட்டு அவளோட பயாலஜிக்கல் பேரண்ட்ஸ்க்கிட்ட போயிடுவாளோன்னு ரொம்ப பயமா இருக்கு.." என்றவன் தலையை பிடித்தபடி தரையை பார்த்தான்.

அவன் சொன்ன விசயம் அதியனுக்கும் அதிக அதிர்ச்சியை தந்து விட்டது. விஷ்வா ரக்சனா மீது கொண்ட பாசம் எந்த அளவிற்கானது என்பதை அதியன் அறிவான். சின்ன வயதிலிருந்தே விஷ்வாவிற்கு ரக்சனா என்றால் உயிர். அவளுக்கு காய்ச்சல் வந்தால் இவனுக்கும் காய்ச்சல் வரும். உடன் பிறந்தவர்கள் பலருக்கும் உள்ள ஒற்றுமை இது என இவ்வளவு நாள் எண்ணி வந்த அதியனுக்கு அவள் இவனது சொந்த தங்கை இல்லை என்று விசயம் மிகவும் ஆச்சரியத்தை தந்தது.

"செங்கா மேல இருக்கற பாசத்துல நீ இப்படி ஒரு பொய்யை சொல்றியா.?" என சந்தேகமாக கேட்டான் அவன்.

விஷ்வா அவனை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்கள் கலங்கி இருந்தது.

"இது பொய்யா இருக்கணும்ன்னுதான் நானும் ஆசைப்படுறேன் அதியா. ஆனா உண்மையை மாத்துற சக்தி என்கிட்ட இல்ல. நேத்து உண்மை தெரிஞ்ச நேரத்துல இருந்து ரக்சனா யோசனையாவே இருக்கா. அவளோட நினைப்புல என்ன ஓடுதோன்னு நினைக்கும்போது ரொம்ப பயமா இருக்கு.." என்றான் அவன். அவனை பார்க்கும்போது அதியனுக்கு பாவமாக இருந்தது. அவன் அருகே சென்று அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

"அவ அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு போக மாட்டாடா.. அதுவும் இல்லாம அப்படி போனாதான் என்ன.? அவ பெண்பிள்ளைதானே.? அவளை நாளைக்கு கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பி வைக்கதானே போறிங்க.? அப்படி புருசன் வீட்டுக்கு போறதுக்கு பதிலா இப்படி அவளோட பேரண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கான்னு நினைச்சிக்க.." என்றவனை விலக்கினான் விஷ்வா.

"அவளை கல்யாணம் பண்ணி நாங்க எந்த வீட்டுக்கும் அனுப்ப போறது இல்ல. எவனா இருந்தாலும் அவளை கட்டிக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையா வரட்டும்.." என்று அவன் கோபமாக சொல்ல அதியனுக்கும் கோபமாக வந்தது.

"தங்கச்சி பாசத்துல கண் மண் தெரியாம உளறாதே. என் தம்பி வீட்டோட மாப்பிள்ளையா வர மாட்டான். நீயும்தான் கல்யாணம் பண்ணிக்க போற. அதுவும் பசங்க இல்லாத வீட்டுல பொண்ணு கட்ட போற.. அவங்க வீட்டுக்கு நீ வீட்டோட மாப்பிள்ளையா போவியா.?" என்றான் கைகளை கட்டியபடி.

"வீட்டோட மாப்பிள்ளையா போக மாட்டேன். ஆனா அவங்களை என்னோடு கூட்டி வந்து வச்சிக்குவேன்..:" என அவன் சொல்ல அதியனுக்கு இன்னும் கடுப்பாக இருந்தது.

"தேவையில்லா விசயத்தை பேசுறதுக்கு பதிலா மரியாதையா போய் செங்காகிட்ட உன் காதலை சொல்லி உன் லைப்பை காப்பாத்திக்கற வழியை பாரு.." என்றான் விஷ்வா.

இல்லையென தலையசைத்தான் அதியன். "எனக்கு என் தம்பி லைப் ரொம்ப முக்கியம். நீ அவனுக்கும் ரக்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வை. அப்புறம் நான் செங்காகிட்ட பேசறேன்.." என்றான் பிடிவாதமாக.

விஷ்வா அவனை முறைத்தான். "பாசத்துல ரொம்ப பொங்கற போல.. ஆனா இன்னும் வேலைக்கு கூட போகாத உன் தம்பிக்கு நீ கேட்டன்னு உடனே என் தங்கச்சியை கட்டி வைக்கிற அளவுக்கு முட்டாள் இல்ல நான். அதுவும் இல்லாம என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணினா நேரா எங்கிட்டயே வந்து சொல்வா.. உன் தம்பியை மாதிரி தூதூ விட மாட்டா.." என்றவன் எழுந்து நடந்தான்.

"என் தம்பி ஒன்னும் தூதூ விடல. நானேதான் கேட்கறேன். என் தம்பிக்கு நாளைக்கே வேலைக்கு ஏற்பாடு பண்றேன். மரியாதையா அவனுக்கு உன் தங்கச்சியை கட்டி வை.." என்று அதியன் சொல்ல வாசற்படி அருகே சென்ற விஷ்வா அங்கேயே நின்று திரும்பி பார்த்தான்.

"வேலையை வாங்கி கொடு.. ஆனா உங்க அப்பா அம்மாவை வந்து சம்பந்தம் பேச சொல்லு.
வருங்காலத்தில உண்மை தெரிஞ்ச பிறகு கிரிஸ்டியானிட்டி பொண்ணு எங்களுக்கு ஒத்து வராதுன்னு எதாவது சொல்லி வச்சாங்கன்னா அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன். கேர்ஃபுல்." என்றவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

அதியன் சென்றவனின் முதுகை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்தான். 'கிருஸ்துவ பெண்..!? செழியா உனக்கு சோதனை மேல சோதனைடா. எப்படிதான் அம்மா அப்பாக்கிட்ட சம்மதம் வாங்க போறியோ.?' என்று பெருமூச்சு விட்டான்.

ரக்சனா உண்மையில் விஷ்வாவின் தங்கை இல்லையெனில் இனி தனது ஆசைக்கும் எந்த தடங்கலும் இல்லை என்பது அவனுக்கு புரிந்தது. இருண்ட உலகம் ஒன்றில் மெல்லிய ஒளிக்கற்றை ஒளிர ஆரம்பித்ததை போல மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு.

செங்கா சீனுவை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் சொல்லியது இவனுக்கு வருத்தமாக இருந்தது. 'ஏன் இப்படி அவ லூசு மாதிரி பண்ணுறா.?' என்று மனதோடு புலம்பினான்.

தன் ஃபோனை எடுத்து பொன்னாவிற்கு அழைத்தான்.

"ஹலோ பொன்னா.. கேட்கறனேன்னு தப்பா எடுத்துக்காத.. உன் சிஸ்டர் ஃபோன் நம்பரை எனக்கு மெஸேஜ் பண்றியா.?" என்றான் தயக்கமாக.

எதிர் முனையில் மௌனம் விளையாடியது.

"ஹலோ.. பொன்னா.." என்றான்.

"ஏய்.. கழுதை உனக்கு போன் வந்திருக்கு.." என்று செங்கா மறுமுனையில் கத்துவதை கேட்டவன் "செங்கா.. நான் உன்கிட்டதான் பேசணும்.. ப்ளீஸ் ஃபோனை தந்துடாத.." என்றான் அவசரமாக.

மறுமுனையில் மீண்டும் மௌனம் தொடர்ந்தது.

"செங்கா.. நீ ஏன் சீனுவை கட்டிக்கறதா சொன்னன்னு தெரியல. அதுக்கு நான் காரணமா இருந்தா சாரி.." என்றான்.

எதிர்முனையில் செங்கா செருமிக் கொள்வது கேட்டது. "நீ காரணம் இல்ல. எனுக்கு என் மாமனை புடிச்சிருந்திச்சின்னு கேட்டன்.." என்றாள் உணர்ச்சிகளற்ற குரலில்.

அதியன் அவள் சொன்னதை கேட்டு நெற்றியை தேய்த்தான். "உனக்கு நிஜமா உன் மாமாவை பிடிச்சிருக்கா.?" என்றான் அழுத்தமாக.

அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின்னர் "ஆமா.." என்றாள்.

"அப்படின்னா என்னை பிடிக்கலையா.?"

"உனுக்குதான் என்னை புடிக்கல.." அவள் சட்டென இப்படி சொல்லவும் இவனுக்கு வருத்தமாக இருந்தது.‌

"எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா.?" என்றான் மீண்டும் அவன். அவன் சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தை தந்து விட்டது போலும். சில நொடிகள் எந்த சத்தமும் வரவில்லை எதிர் பக்கத்தில் இருந்து.

"உனக்கு என்னை பிடிச்சிருக்கா செங்கா.?" என்றான் அவன் மீண்டும்.

"புடிச்சிருந்தா மட்டும் என்ன செய்றது.? இது ஒத்து வராத ஒன்னுன்னு எனுக்கு இன்னைக்குதான் புரிஞ்சது. நான் வேற நீ வேற. இரண்டு பேருக்கும் நடுவுல ஓராயிரம் வித்தியாசம். மலைக்கும் மடுவுக்கும் நடுவுல வித்தியாசம் இருந்தா பரவால்ல. ஆனா இது மலைக்கும் பள்ளத்துக்கும் நடுவுல இருக்கற வித்தியாசம். என் வாழ்க்க வேற. உம்படைய வாழ்க்க வேற. இரண்டும் ஒன்னு சேர்ந்தா ஊர் சிரிக்கும். அதனால நீ உம்படைய வேலையை பாரு. நான் என் வாழ்க்கையை பாக்கறன். என் போனு நம்பரு கேட்டு பொன்னாளுக்கு போனு பண்ணாத.." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அவள் இப்படி சொல்லி விட்டு போனை வைத்தது அதியனுக்கு குழப்பத்தை மட்டும் அதிகப்படுத்தியது.
அவள் சொன்னது அனைத்தையும் மீண்டும் மீண்டும் யோசித்தான். இரவு தூங்கும் போது வந்த கனவில் கூட அவளின் வார்த்தைகளைதான் யோசித்தான்.

மறுநாள் விடிந்ததும் தனது பயண பையை எடுத்து கொண்டு தனது அறையை விட்டு வெளியே வந்தான் அதியன்.

ரக்சனா அப்போதுதான் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள்‌. வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து காப்பியை பருகியபடியே ஃபோனில் பொன்னாவுக்கு காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்த விஷ்வா இரு திசையில் இருந்து வந்த அதியனையும் ரக்சனாவையும் மாறி மாறி பார்த்தான்.

"இரண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது ஷாப்பிங் போக போறிங்களா.?" என்றான் யோசனையோடு.

இல்லையென தலையசைத்தபடி ரக்சனாவை பார்த்தான் அதியன்.

"என் பிரெண்ட் வீட்டுக்கு போறேன் அண்ணா நான்.." என்றாள் ரக்சனா.

விஷ்வா ஃபோனை நாற்காலியில் வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

"இங்கே பாரு ரக்சனாம்மா. நான் உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கேன். அதே அளவுக்கு உன் காதலையும் கூட மனசார மதிக்கிறேன். ஆனா கல்யாணம் பண்ணும் முன்னாடி செழியனோடு சேர்ந்து அடிக்கடி ஊர் சுத்தாத. இதனால உனக்குத்தான் நாளைக்கு பிரச்சனை வரும்.." என்றான் மென்மையான குரலில். இரவெல்லாம் யோசித்து பார்த்ததில் ரக்சனாவுக்கு செழியனை திருமணம் செய்து வைப்பதில் தான் தடை சொல்வதில் நியாயம் இல்லையென்றே அவனுக்கு தோன்றியது. அவர்களது காதலை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள உடனே மனம் வரவில்லை என்றாலும் கூட அவர்களின் காதலை ஒதுக்கி தள்ளி அவனுக்கு மனம் வரவில்லை.

ரக்சனா அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள். "இல்ல அண்ணா.. அப்படி ஊர் சுத்த மாட்டேன் நான்.." என்றவள் அவனை விட்டு விலகி நின்றாள். "சீக்கிரம் வந்துடுறேன் அண்ணா.." என்றவள் வெளியே நடந்தாள்.

வாசல் கேட்டை தாண்டி கண் மறையும் தூரம் வந்தவள் அங்கே பைக்கில் அமர்ந்திருந்த செழியனின் அருகே வந்தாள். "நான் சொல்ற அட்ரஸ்க்கு போ.." என்றவள் பைக்கின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

அதியனின் தோளில் இருந்த பையை பார்த்த விஷ்வா "டூர் எங்கேயாவது போக போறியாடா.?" என்றான்.

அவன் தன் தங்கையோடு பேசியதை கேட்டதிலேயே புத்தி தெளிந்த அதியன் "ஒரு சின்ன வேலை. அதான் வெளியூர் போறேன். ஆபிஸை இரண்டு வாரத்துக்கு நீ பார்த்துக்க.." என சொல்லி நண்பனின் தோளில் தட்டி தந்தான்.

"நான் எப்படிடா ஒருத்தனும் பார்த்துக்க முடியும்.?" என்று சிணுங்கலாக கேட்டவனின் கன்னம் கிள்ளியவன் "நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தபோது நானே ஒருத்தனும் பார்த்துக்கிட்டேன் இல்லையா‌.? இப்ப நீ பார்த்துக்க.. பிசினஸ் பார்ட்னர்ஸ்ன்னா ஈக்வெல் ரைட்ஸ் மட்டுமில்ல ஈக்வெல் வொர்க்கும் இருக்கணும். உனக்கு ஹெல்ப் பண்ண செழியன்கிட்ட சொல்லி இருக்கேன். அவனை திட்டாம முறைக்காம அன்பா நடத்தி வேலை வாங்கு. டாடா.." என்றவன் காயத்ரியிடம் சொல்லி கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

"எங்கே போறேன்னு சொல்லாமலேயே போறானே.." என்று குழம்பினான் விஷ்வா.

"ஒரு வாரத்துக்கு நானும் ஆதிவாசியா வாழ போறேன்.." என்று காற்றோடு சொல்லியபடி காரை ஸ்டார்ட் செய்தான் அதியன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1187

VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN