செங்கா 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஓரு வாரம் யூடி தராத்துக்கு சாரி மக்களே.. எங்க பாட்டி போன வாரம் இறந்துட்டாங்க.. அதனாலதான் என்னால ஒரு வாரத்துக்கு யூடி தர முடியல..

செங்கா அதியனையும் பொன்னாவையும் பார்த்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

"இவன்தான் கற்பனை கோட்டை கட்டிட்டு இருக்கான். நீ ஏன் பைத்தியமாட்டம் ஒளறிட்டு இருக்க.?" என்று பொன்னாவிடம் கோபமாக கேட்டாள் செங்கா.

"அவன் இவன்னு என்னடி பேச்சு.. அவர்ன்னு பேசி பழகு.." கண்டிப்போடு சொன்னாள் பொன்னா.
செங்கா கசப்பாக சிரித்தாள். "உங்க இரண்டு பேருக்குமே நெசம் புரியல. நான் இப்புடிதான். அவரு இவருன்னு பேச வராது எனக்கு. அப்புடி பேசவும் புடிக்காது. என் இயல்ப மாத்த பாக்கறிங்க நீங்க. வெள்ளாடு கருப்பாதான் இருக்கும். டவுனுக்கு போனாலும் வெள்ளாடு வெள்ளையா மாறாது. என் பேச்சை மாத்திக்கிட்டு என் வாழ்க்கையை மாத்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு எனக்கு.? உங்க ஆசாபாசத்துக்காக நான் என் இயல்பை ஏன் மாத்திக்கணும்.?" என கேட்டவள் அங்கிருந்து வெளியே நடந்தாள்.

பொன்னா சோகத்தோடு அதியனை பார்த்தாள்.

"அவ பேசியதை மனசுல வச்சிக்காதிங்க.." என்றாள். அதியன் புரிந்தவனாக தலை அசைத்தான்.

"அவ காடும் மலையும் மட்டுமே உலகம்ன்னு நம்புறா.. மரம் மட்டைகளோட மனசை படிச்சவ அவ. ஆனா மனுசங்க மனசை படிக்க தெரியல.." வருத்தமா சொன்னாள் பொன்னா‌.

"நீ வருத்தப்படாதப்பா.. நான் அவக்கிட்ட பேசிக்கறேன்.. ஆனா உங்க அம்மா அப்பா என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னுதான் தெரியல.." அதியன் குழப்பத்தோடு சொன்னான்.

பொன்னா செய்யும் வேலையை விட்டுவிட்டு இவனை பார்த்தாள்.

"எங்க அம்மாவுக்கு பையன் நல்லவனா இருக்கணும்.. ஆனா எங்க அப்பாவுக்கு பையனை செங்காவுக்கு பிடிச்சிருக்கணும். அவ்வளவுதான் அவளோட கல்யாணத்துக்கு அவங்க வச்சிருக்கும் கன்டிசன். நீங்க நல்லவரா செங்காவுக்கு பிடிச்சவரா இருந்தா எங்க அப்பாவும் அம்மாவும் உங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க. என்னோட காதலையே எங்க அப்பா ஏத்துக்கிட்ட போது அவ காதலை ஏத்துக்க மாட்டாங்களா என்ன.?" என்றாள் நம்பிக்கையோடு.

அந்தி சாயும் வேளையில் செங்கா வயலை நோக்கி நடந்தாள். அவள் வயலுக்கு வந்ததை பார்த்த உடன் சாமிநாதன் தனது வேலையை அத்தோடு முடித்துக் கொண்டு மேட்டுக்கு ஏறி வந்தார். அவரை தொடர்ந்து கலையரசியும் வந்தாள்.

அப்பாவின் கையில் இருந்த மண்வெட்டியை வாங்கிக் கொண்டாள் செங்கா. வீடு நோக்கி நடந்தவரின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

"என்னடா ஆச்சு.? என்னமோ புதுசா பம்முற.?" சந்தேகமாக கேட்டார் சாமிநாதன்.

"விஷ்வா மாமா சேத்தாளி வூட்டுக்கு வந்திருக்கான்.." என்றாள் அவள்.

"அதியன் தம்பி வந்திருக்கா.? பொன்னா சாப்பாடு தண்ணி தந்தாளோ இல்லையோ.." என்று புலம்பிய கலையரசி அவர்கள் இருவருக்கும் முன்னால் வீடு நோக்கி நடந்தாள்.

சாமிநாதன் மகளை திரும்பி பார்த்தார். அவள் தரையில் இருந்த கற்களை அப்படியும் இப்படியும் தள்ளியபடி நிமிர்ந்து அப்பாவை பார்த்தாள்.

"எதுக்கு வந்திருக்காங்கன்னு உனக்கு தெரியுமா.?" என்றார் அவர் யோசனையோடு. அவள் தெரியாதென தலையசைத்தாள்.

அவர் அவளது தோளில் கை போட்டபடி தன்னோடு சேர்த்து அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தார்.

"நான் உங்க தாத்தா மாதிரி கிடையாது செங்கா. பொம்பள புள்ளைங்களா இருந்தாலும் நான் என் பொண்ணுங்களோட மனசை மதிக்கறேன். உனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்குன்னு சொல்லி நீ கூட்டி வந்தா அவன் நல்லவனா இருந்தா அவனுக்கும் உனக்கும் கல்யாணத்தை நடத்தி வைப்பேன். உனக்கு யாரையுமே பிடிக்கலன்னாலும் நான் உன்னை ஒருத்தனுக்கு வலுக்கட்டாயமா கட்டி வச்சி துரத்தி விட மாட்டேன். இது உன் வாழ்க்கை. உன் வாழ்க்கையோட மொத்த அதிகாரத்தையும் நான் உன் கையில தந்து ரொம்ப நாள் ஆச்சி. இதுக்கு மேல உன் வாழ்க்கையை ஆட்சி செய்ய வேண்டியது நீ மட்டும்தான். உனக்கு உதவி மட்டும்தான் நான் செய்ய முடியும். ஆனா காலம் முழுக்க உன்னோட ஒவ்வொரு நொடிகளையும் கவனத்தோடு பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உன்கிட்டதான் இருக்கு.." என்றார்.
செங்கா தரையை பார்த்தபடியே நடந்தாள்.

"மனசெல்லாம் குழப்பமாக இருக்குப்பா.." என்று சொன்ன செங்காவிற்கு உண்மையாகவே குழப்பமாகதான் இருந்தது.

"எதுவா இருந்தாலும் பொறுமையா முடிவு பண்ணும்மா.. உனக்கு வெட்டி முறிக்க இங்கே எந்த அவசர வேலையும் இல்ல.." சிரிப்போடு சொல்லிய சாமிநாதனை கண்டு அவளும் சிரித்தாள்.

அவளும் அப்பாவும் வீட்டிற்கு வந்தபோது அதியனோடு பேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் கலையரசி.
சாமிநாதனை கண்டதும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான் அதியன்.

"நல்லாருக்கிங்களா அங்கிள்.?" என்றான் அக்கறையோடு. செங்கா அவனை கண்டும் காணாதது போல தனது அறைக்குள் சென்று நுழைந்துக் கொண்டாள்.

"நல்லாருக்கேன்ப்பா.. இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க..ஏதாவது வேலையாப்பா.?" என்றார் சாமிநாதன்.
அதியன் பின்னந்தலையை தடவினான்.

"உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அங்கிள்.." என்றான்.

சாமிநாதனை அவனை குறுகுறுவென பார்த்தார். "வாப்பா.. அப்படி ஓரமா போய் பேசலாம்.." என்று சொல்லி விட்டு வெளியே நடந்தார்.

வாசலின் ஒரு ஓரத்தில் கயிற்று கட்டிலை சாய்த்து விட்டு அமர்ந்தார் அவர். "இப்படி உட்காருப்பா.." என்றார் அதியனிடம்.

அதியன் அவர் அருகே அமர்ந்தான்.

"நீங்க என்ன பேச போறிங்க தம்பி.?" அவரே முதலில் ஆரம்பித்தார்.

"நா.. நான்.. எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி தரிங்களா.?" என்றான் சட்டென.

இவனது வேகம் கண்டு அவருக்கு சற்று திகைப்பாக இருந்தது.

"நான் நல்ல பையன்தான் அங்கிள்.. நல்லா படிச்சிருக்கேன்.. பிசினஸை நல்ல முறையில் ரன் பண்றேன்.. கெட்ட பழக்கம்ன்னு எனக்கு எதுவுமே இல்ல அங்கிள்.. இந்த மொத்த உலகத்தையும் சல்லடை போட்டு சலிச்சா கூட நீங்க என்னை மாதிரி ஒரு நல்ல பையனை பார்க்கவே முடியாது.." என்றான். 'உன்னை பத்தி நீயே ஏன்டா இவ்வளவு புகழ்ச்சியை அடுக்குற.? தற்புகழ்ச்சியில நீதான் மன்னனுக்கு எல்லாம் மன்னன் போல..' என்றது அவனது மனசாட்சி.

சாமிநாதன் அவனை யோசனையோடு பார்த்தார். "அப்புறம் ஏன் என் பொண்ணை பிடிக்கலன்னு சொல்லிட்டு போனிங்க.?" என்றார்.

அதியன் குழம்பினான். "நான் எப்ப அப்படி சொன்னேன்.?" என்றான்.

"நீங்க செங்காவை பிடிக்கலன்னு சொன்னதா அவதான் சொன்னா.." என்றார் அவர்.

அதியன் மறுத்து தலையசைத்தான். "நான் பிடிக்கலன்னு சொல்லவே இல்ல அங்கிள்.. அவ பிடிச்சிருக்கான்னு கேட்டா. ஆனா நான் பதில் சொல்லும் முன்னாடி அவளே எதையோ முடிவு பண்ணிக்கிட்டா.. இதுக்கு நான் என்ன பண்ண முடியும்.? ஆனா எனக்கு அவளை நிஜமாவே ரொம்ப பிடிக்கும்.." என்று சொன்னான் அவன்.

சாமிநாதன் பெருமூச்சி விட்டார். "எனக்கு சுத்தி வளைச்சி பேச பிடிக்கல தம்பி. அதனால நேராவே விசயத்துக்கு வரேன். ஆறு மாசம் முன்னாடி வரைக்கும் என் பொண்ணு இந்த கரடுகளை விட்டுட்டு ஒருத்தனை கல்யாணம் பண்ணுவான்னு நான் கற்பனையில் கூட நினைச்சது இல்ல. ஏனா அவ குணம் அப்படி. அவளை வீட்டுல கட்டிப்போட எங்களால முடியல. அவளோட ஆசையை கெடுக்க கூடாதுன்னு நான் ஆரம்பத்துல கொடுத்த செல்லம் இப்ப எங்களுக்கு எதிராவே திரும்பி நிற்குது. நானும் சாதாரண மனுசன்தான். எனக்கும் என் பொண்ணு நல்லபடியா கல்யாணம் பண்ணி நல்லபடியா வாழ்க்கை நடத்தி குடும்பமா வாழணும்ன்னு ஆசை இருக்கு. ஆனா இவளோட மனசை மாத்தும் வழிதான் எனக்கு தெரியல. ஆசைன்னா என்னான்னு தெரியாதுன்னு நினைச்ச என் பொண்ணு முத முறையா நீங்க அவளை பிடிக்கலன்னு சொன்னதை நினைச்சி அழுதா.. எல்லா தந்தைகளும் காதலுக்கு எதிரி இல்ல. நானும் உங்க வயசை கடந்து வந்தவன்தான். நானும் காதலிச்சி கல்யாணம் பண்ணவன்தான். உங்க மேல இருக்கற நம்பிக்கையை விட எனக்கு என் பொண்ணு மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு. என் பொண்ணு உங்க காதலுக்கு சம்மதிச்சிட்டா அப்புறம் உங்க அம்மா அப்பாவை வந்து பொண்ணு கேட்க சொல்லுங்க. நான் கல்யாணம் பண்ணி தரேன்.." என்றார்.

அவர் சொன்னது கேட்ட பிறகே அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனாலும் உடனடியாக சம்மதித்து விட்டாரே என்று சிறு பயமும் இருந்தது. அவரோ தன் மகளும் குடும்பமாக வாழ போகிறாள் என்ற சந்தோசத்தில் இருந்தார்.

"ஒரு சின்ன பர்மிசன் தரிங்களா அங்கிள்.?" தயக்கமாக கேட்டான் அதியன்.

"என்னப்பா.?" என்றார் அவர்‌.

"இந்த முறை செங்கா காட்டுக்கு போகும் போது நானும் அவளோடு போக உங்க சம்மதம் வேணும்.." என்றான்.

சாமிநாதன் அதிர்ச்சியோடு அவனை பார்த்தார். "என் பொண்ணை டவுனுக்கு கூட்டி போய் அவளுக்கு வாழ்க்கையை கத்து தருவிங்கன்னு பார்த்தா நீங்களும் காட்டுக்கு போறேன்னு சொல்றிங்க..?" என்றார் அவர் அதிர்ச்சி மாறாமல்.

"அப்படி இல்ல அங்கிள்.. அவளுக்கு என் மேல நம்பிக்கை வரணும்.. அதுக்காகதான் நான் அவளோடு சேர்ந்து அவளோட வாழ்க்கையை வாழ ஆசைப்படுறேன்.." என்றான்.

"என்னம்மோ பண்ணுங்க.." என்று சலிப்பாக சொல்லி விட்டு எழுந்து நின்றார் அவர்.

"உங்களுக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கையா அங்கிள்.? கேட்டவுடனே அவளோடு நானும் காட்டுக்கு போக சம்மதம் சொல்லிட்டிங்க.!?" என்றான் ஆச்சரியத்தோடு. 'இந்த கேள்வி இப்ப ரொம்ப முக்கியமா.?' என கேட்டது அவனது மனம்.

சாமிநாதன் சிரித்தார். "ஏன்ப்பா இப்படி ஆச்சரியப்படுறிங்க.? காட்டுல நீங்களும் என் பொண்ணும் தனியா ஒன்னும் இல்ல.. எத்தனையோ ஜீவராசிகள் இருக்கு.. சிங்கம் புலியே என் பொண்ணுக்கிட்ட தோத்துதான் ஓடும். அங்கே பாதுகாப்பு அவளுக்கு தேவையில்ல. உங்களுக்குதான் தேவை. அவளோட முழு பலமும் காட்டுலதான் இருக்கு. அதனால காட்டுக்குள்ள இருக்கும் போது எதையாவது ஏடாகூடமா பேசி அவளுக்கு கோபத்தை கிளப்பிடாதிங்க.. உங்களை அங்கேயே புதைச்சிட்டு வந்து அவரு அப்பவே கிளம்பிட்டாருன்னு இங்கே சொல்லிடுவா.." என்றார் அவனின் காதோரம்.

அவர் விளையாட்டாக சொல்லுகிறாரோ என்று எண்ணினான் அதியன். 'உன் மேல இருக்கற நம்பிக்கையோ இல்ல அவ மேல இருக்கற நம்பிக்கையோ.. அவரே பர்மிசன் கொடுத்த பிறகு எதுக்கு இப்படி கேள்வி கேட்டு உன் மனசுல இல்லாத கெட்ட எண்ணத்தை அவரே யோசிக்கும்படி பண்ற.?' அவன் மனம் மீண்டும் திட்டியது.

"ரொம்ப யோசிக்காதிங்க தம்பி.. என் பொண்ணு இத்தனை வருசமா காட்டுலதான் இருக்கா‌. எத்தனையோ இரவுகளில் என் பொண்ணு இப்ப என்ன பண்றாளோ.. எந்த மிருகத்திடமாவது மாட்டிக்கிட்டாளோ.. சட்டத்துக்கிட்ட இருந்து தப்பிச்சி நாட்டில இருந்து ஓடி வந்த ஏதாவது ஒரு சைக்கோ கொலைக்காரன் இந்த காட்டுக்குள்ள புகுந்து என் மகளை பார்த்துடுவானோ.. இப்படி எத்தனையோ பயம் இருந்திருக்கு.. அது முன்னாடி ஒப்பிடும்போது கட்டிக்க ஆசைப்பட்டு அவளோடு காட்டுக்குள்ள போற உங்களை நினைச்சி சந்தேகப்பட ஏதும் இல்ல. என் பொண்ணு ஒரு வாரத்துக்கு கொஞ்சம் பத்திரமா இருப்பான்னு சின்ன நம்பிக்கை வேணா இருக்கும்.." என்றார். அவரின் இத்தனை நாள் பயத்தை கேட்டவனுக்கு அவரை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

"தேங்க்ஸ் அங்கிள்.." என்று அவரை கட்டிக் கொண்டான். "நான் நிஜமாவே உங்களுக்கு ஒரு நல்ல மருமகனா இருப்பேன். உங்களோட மகனாவும் இருப்பேன்.." என்றான் அதீத சந்தோசத்தில்.

அவர் புன்னகையோடு அவனது முதுகை வருடி விட்டார். "சின்ன பிள்ளைங்க அவங்க ஆசைப்பட்ட மாதிரியே நல்லா வாழ்ந்தா எங்களுக்கும் சந்தோசம்தான்ப்பா.." என்றவர் வீட்டுக்குள் நடந்தார்.

அவரது நம்பிக்கையை பெற்று விட்டோம் என்ற சந்தோசம் அவனுக்கு அதிகமாக இருந்தது. தாள இயலா சந்தோஷத்தோடு விஷ்வாவுக்கு ஃபோன் செய்தான் அவன்.

"ஹலோ.." என்ற விஷ்வாவின் குரலில் சிறு கோபம் இருந்தது. ஆனால் அதை அறிந்துக் கொள்ளும் அளவுக்கு அதியனுக்கு பொறுமை இல்லை.

"நான் ஒரு வாரத்துக்கு செங்காவோடு சேர்ந்து காட்டுக்கு போக போறேன்.. அங்கிள் எனக்கு அனுமதி தந்துட்டாரு.. அவருக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கை இருக்கும்ன்னு நான் நினைச்சி கூட பார்க்கல.." பூரிப்போடு சொன்னான் அவன்.

"ரொம்ப ஆணவம் வேணாம்.. உனக்கு அவரை பத்தி இன்னும் முழுசா தெரியல அவ்வளவுதான்.
அப்பாவி போல இருக்கற அவர்கிட்ட நம்ம இரண்டு பேரோட ஜாதகமுமே இருக்கு.." என்றான் விஷ்வா.

"என்னடா சொல்ற நீ.?" என்று குழப்பமாக கேட்டான் அதின்.

"இந்த மூணு மாச கேப்ல நாலு வேற வேற இன்வெஸ்டிக்கேட்டர்க்கிட்ட விசாரிச்சிருக்காரு என்னை பத்தி. அவங்க என்னோடது மட்டுமில்லாம என் பிரெண்ட்ஸ் என் பேமிலின்னு மொத்த பேரோட லைஃப் ஹிஸ்ட்ரியுமே தேடி துருவி எடுத்து அவர்கிட்ட கொடுத்திருக்காங்க.. இல்லன்னா அவர் எனக்கும் புவிக்கும் அவ்வளவு ஈஸியா கல்யாணம் சம்பந்தம் பேசிடுவார்ன்னு நினைக்கிறியா.?" என்றான் அவன்.
விஷ்வா சொன்னது கேட்டு இவனுக்கு நெஞ்சம் குப்பென அடித்தது.

"இதென்ன புதுசா இருக்கு.?" என்றான் அதிர்ச்சியோடு.

"டேய்.. அவரு தன் வாழ்நாள்ல பாதியை நகரத்துலயும் பாதியை கிராமத்திலயும் வாழ்ந்திருக்காரு.. மனுசங்க மேல எவ்வளவு நம்பிக்கை வைக்கணும்.. மனுசங்களை எவ்வளவு தூரம் வரைக்கும் சந்தேகப்படணும்ன்னு அவருக்கு ரொம்ப நல்லா தெரியும்.. அதனால நீ உன்னை நினைச்சே ரொம்ப பெருமை பட்டுக்காத.." என்றான் எரிச்சலாக.

"ஏன்டா இப்படி எரிச்சலா பேசுற..? நல்லாதானே இருக்க.?" அதியன் குழப்பமாக கேட்டான்.

"நீயும் உன் தம்பியும் இருக்கற வரைக்கும் நான் எப்படிடா நல்லா இருப்பேன்..? உன் தம்பி அவனோட வருங்கால மாமியாரை இழுத்துட்டு ஓடிட்டான்டா.." என்றான் விஷ்வா எரிச்சல் நீங்காமல்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1262
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN