செங்கா 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காடுகளின் இடையே நடந்துக் கொண்டிருந்தான் அதியன். அடர்ந்த காட்டில் ஒவ்வொரு மரமும் அவனுக்கு அதிசயமாகவே தெரிந்தது. செங்காவிற்கு இணையாக அவனால் நடக்க முடியவில்லை. அங்கங்கே நின்று மரங்களை அண்ணாந்து பார்த்து வியந்துக் கொண்டிருந்தான். இவனது வியப்பு கண்டு செங்காவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

பாறைகளை பார்க்கும் போதெல்லாம் வழியை விட்டுவிட்டு ஓடி சென்று பாறைகளின் மீது ஏறி நின்றான். மேலே நின்றபடி சுற்றிலும் இருந்த நிலப்பரப்பை பார்த்தான். அவனது செய்கைகளை காணும்போதெல்லாம் செங்கா நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"என்னை வுடவும் பயங்கர பைத்தியமா இருப்பான் போலிருக்கே..!" என்று ஆச்சரியப்பட்டாள்.

"நீ இப்புடியே திரும்பி போறியா.?" என்றாள் அவனிடம்.

"ஏன்.?" என கேட்டவனை மேலும் கீழும் பார்த்தவள் "இன்னும் காட்டுக்குள்ளவே போகல.. அதுக்குள்ளயே நீ இவ்வளவு இம்சை பண்ற.." என்றாள் சலிப்பாக.

"காட்டுக்குள்ள போகலையா இன்னும்.? அப்படின்னா இதெல்லாம் என்ன.?" தன்னை சுற்றி இருந்த நிலங்களை சுட்டிக்காட்டி கேட்டான் அதியன்.

"இது சமநிலம்.. இதுல உன் கொரளி வித்தையை காட்டுனா போதுமா.?" என கேட்டவள் தனக்கு முன்னால் இருந்த சிறு திட்டை கை காட்டினாள்.

"இந்த திட்டுக்கும் அந்த பக்கம்தான் நிசமானே காடே இருக்கு.." என்றாள்.

அவன் அவள் கை காட்டிய மண் திட்டை நோக்கி நடந்தான். அவள் அவனது ஆர்வக்கோளாறை எண்ணி வியந்தபடி அவன் பின்னால் நடந்தாள்.

செங்கா கை காட்டிய மேட்டில் ஏறிய அதியன் அதற்கு அடுத்து தெரிந்த வானுயர்ந்த மலைகளை கண்டு சிலையாக நின்று விட்டான்.

"அதுதான் காடு... போலாமா.?" என கேட்ட செங்காவின் குரலில் கிண்டல் கொஞ்சமாக இருந்தது.

"இ.. இந்த மலையில் எப்படி ஏறுறது.? செங்கோணமா இருக்கும் போல இருக்கே.." என்றான் அதியன் கவலையாக.

செங்கா இல்லையென தலையசைத்தாள். "செங்கோணம் இல்ல.. கொஞ்சம் சாய்வாதான் இருக்கும்.." என்றாள் யோசனையோடு.

"யாருக்காவது ஃபோன் பண்ணனும்ன்னா இப்பவே பேசிடு.. அப்பாறம் மேல ஏறினா டவரு கெடைக்காது.." என்றாள்.

யாருடனாவது போன் பேச வேண்டுமா என யோசித்தான் அதியன். செங்காவின் அருகில் மற்ற யாரும் நினைவில் வரவே இல்லை.

"இல்ல.. எல்லார்க்கிட்டயும் பேசிட்டேன்.." என்றான்.

"அப்ப சரி வா போவோம்.." என்ற செங்கா தனது பேக்கை தோள் மாற்றி போட்டுக் கொண்டு நடந்தாள்.

சிறு பள்ளத்தில் இறங்கி அந்த மலைக்கு செல்ல வேண்டியதாய் இருந்தது. செங்கா ஏதோ ஒரு இசையை விசிலாக அடித்தபடி அந்த பள்ளத்தில் இறங்கிய நேரத்தில் "செங்கா.." என்றொரு குரல் கேட்டது.

இருவரும் நின்று திரும்பி பார்த்தனர். அருவி புன்னகையோடு அவர்கள் அருகே வந்தாள்.

"மறுபடியும் காட்டை காக்க வந்துட்டியா.?" என்றார் அவர்.

"இந்த காடு எனக்கு சொந்தம்.. இந்த மொத்த காட்டுக்கும் நான் சொந்தம். இதை வுட்டுட்டு நான் எங்க இருக்க முடியும்.?" என்று கேட்டாள் அவள்.

அவர் அதியனை யோசனையோடு பார்த்தார். "இந்த தம்பி யாரு.?" என்றார்.

"ஹலோ சார்.." என்று அவருக்கு கை தர சென்ற அதியனை விலக்கி தள்ளிவிட்டு முன்னால் நின்ற செங்கா "எங்கக்கா வூட்டுகாரனுக்கு சேத்தாளி இவன்.. காட்டை சுத்தி காட்டுன்னு சொன்னான். அதான் கூட்டியாந்தேன்.." என்றவளை முறைத்தான் அதியன்.

அருவி அதியனை பார்த்து புன்னகைத்தார். "செங்கா நல்ல பொறுப்பான பொண்ணுதான். நீங்க பயப்படாம இருக்கலாம்.." என்றவர் ரிங்கான தனது ஃபோனை பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தார்.

"ஹலோ.." என்றவர் சில நொடிகளில் ஃபோன் இணைப்பை துண்டித்துக் கொண்டு ஃபோனை பாக்கெட்டில் வைத்தார்.

"அந்த பாட்டை வை.. இந்த பாட்டை காலர்டியூனா வைன்னு ஒரே தொல்லை.." என்றார் சலிப்போடு அவர்.

செங்கா அவரது பேண்ட் பாக்கெட்டில் தெரிந்த துப்பாக்கியை ஆர்வமாக பார்த்தாள்.

"துப்பாக்கியா யண்ணா அது.?" என்றாள்.

அவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்து அவள் முன் காட்டினார். "அன்னைக்கு துப்பாக்கியை எங்கேயோ தொலைச்சிட்டேன் செங்கா. இதை மறுபடியும் செஞ்சேன்.." என்றார்.

அதியன் அந்த துப்பாக்கியை பார்த்தவுடனே புரிந்து கொண்டான் அதுவும் அன்றைக்கு செங்கா வைத்திருந்ததும் ஒரே மாதிரியான துப்பாக்கி என்பதை.

'கேட்டு வாங்கினேன்னு சொன்னா.. இவரு தொலைஞ்சி போனதா சொல்றாரு.. அடிப்பாவி பிராடு..' அதியன் அதிர்ச்சியோடு செங்காவை பார்த்தான்.

"சரி வுடு யண்ணா.. அதான் புதுசா செஞ்சிக்கிட்டியே.. சரி நாங்க இப்படியே கெளம்பறங்க.. நீ பத்தரமா வூடு போய் சேரு.." என்ற செங்கா அதியனை தன்னோடு இழுத்துக் கொண்டு நடந்தாள்.

"நீ திருடியா.?" என்றான் அவன் கிசுகிசுப்பாக.

"நான் கேட்டேன்ப்பா. அவருதான் கொடுக்கல. அதான் ஆட்டைய போட்டுட்டேன்.. அவருக்கு இது தெரிஞ்சா மறுபடியும் கூட்டு சேத்த மாட்டாரு.. அவரு சரியான முள்ளான் மொகரை.. அதனால இதை அவுருக்கிட்ட சொல்லிப்புடாத" என்றாள்.

அதியனுக்கு அருவியை நினைத்து பரிதாபமாக இருந்தது.

சிறிது தூரம் நடந்த அதியன் "எனக்கு ஏன் மூச்சு வாங்குது.?" என்றான் குழப்பமாக.

"மலையில ஏறினா மூச்சு வாங்கதான் செய்யும்.." என்ற செங்கா விசிலடித்தபடியே நடந்தாள்.

"உனக்கு ஏன் மூச்சு வாங்கல.?" அதியன் சந்தேகமாக கேட்டான்.

"சர்வீசும்மா.. அதிகம் பேசாம நட.. இல்லன்னா பேச்சுலயே களைச்சிடுவ.." என்றவள் வழியில் இருந்த ஒவ்வொரு செடியையும் கையில் பிடித்தபடி நடந்தாள்.

அதியன் சற்று நேரத்தில் தனது கையையும் காலையும் கீறிக் கொண்டான். "என்னவோ கடிக்குது செங்கா.." என்றான்.

"சுள்ளான் கடிக்கும்ப்பா.. காட்டுல இருக்கற வெள்ளை கொசு.." என்றாள்.

"உன்னை ஏன் கடிக்கல.?" அவன் மீண்டும் சந்தேகப்பட்டு கேட்டான்.

"தெரியலப்பா.. என்னை சுள்ளான் கடிக்கறதே இல்ல.." என்றவள் முன்னால் நடக்க இவன் முட்டியை பிடித்தபடி நின்றான்.

"கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்.." என்றவன் அங்கிருந்த கல் ஒன்றின் மீது அமர்ந்தான்.

"முட்டி செத்தவனே.." என்றபடி அவனருகே வந்து அமர்ந்தாள் செங்கா.

"உனுக்கு என்ன தலையெழுத்தா இப்புடி மூச்சி வாங்க கரடு ஏறணும்ன்னு.? வந்த வழியிலயே எறங்கி போனா எங்க ஊருக்கு போயிடலாம். அப்புறம் நீ ஊருக்கும் போயிடலாம். எனுக்குதான் எந்த வேலை வெட்டியும் இல்லாம காட்டாறாட்டம் சுத்தணும்ன்னு தலையெழுத்து. உனக்கு ஏன்.? நீ கெளம்பு.." என்றவள் இதை சொல்லிவிட்டு எழுந்து நின்றாள்.

அவளின் கையை பற்றினான் அதியன். அவள் அவனை திரும்பி பார்த்தாள். நெற்றியில் பூத்த ஒற்றை வியர்வையை துடைத்தபடி எழுந்தான் அதியன்.

"இதுநாள் வரைக்கும் உனக்கும் எனக்கும் தலையெழுத்து வேற வேற.. ஆனா இனி நம்ம இரண்டு பேருக்கும் ஒரே தலையெழுத்துதான்.. இதை நீயே சீக்கிரம் புரிஞ்சிப்ப.. நட.." என்றான்.

செங்கா அவனை வியப்போடு பார்த்தாள். "ஏன் இப்புடி சீனி சக்கரையாட்டம் பேசுற.?" என்றாள் உதட்டை கடித்தபடி.

அவளின் கன்னம் தட்டி சிரித்தான் அதியன். "அமைதியா நட.." என்றான்.

செங்கா திரும்பி நடக்க ஆரம்பித்தாள். யோசனையோடு மீண்டும் நின்றாள். அருகிலிருந்த மரம் ஒன்றின் அருகே சென்று ஒரு கிளையை உடைத்து சீவி எடுத்து வந்தாள். அதியனிடம் தந்தாள்.

"இதை ஊனிக்கிட்டே நட.. களைப்பு கம்மியா இருக்கும்.." என்றாள்.

'இப்பவே ஊன்றுக்கோலை கையில் பிடிக்க வேண்டியதா போச்சே..' என்று சலிப்போடு நினைத்தவன் அந்த கோலை கையில் வாங்கிக் கொண்டு நடந்தான். முன்பை விட சற்று பரவாயில்லை என்பது போல தோன்றியது.

'பாவி மகளே..! இதை முன்னாடியே வெட்டி தந்திருக்க கூடாதா.?' என்று அவளை மனதுக்குள் கருவினான்.

வழியோரத்தில் பாறாங்கல்லை பார்க்கும் நேரங்களிலெல்லாம் அமர்ந்தான் அதியன். செங்கா அவனை குறையாக சொன்னாள்‌. அவனால் அவளின் வேகத்திற்கு ஏற்றார்போல விடுவிடுவென மலையேறவும் முடியவில்லை. அவளின் திட்டுக்களுக்காக திரும்பி செல்லவும் மனம் வரவில்லை.

"நானும் ஒருமுறை காட்டுக்கு டிரெக்கிங் போயிருக்கேன்.." என்றான் ஐந்தாவது இடத்தில் அமர்ந்தபோது.

"அப்பாறம் ஏன் இத்தனை தடவை ஒட்கார்ந்து எழற.?" சந்தேகமாக கேட்டாள் செங்கா.

"அவங்க மனுசங்களை போல நடப்பாங்க. அதனால அவங்க கூட நடந்த போது எதுவும் தெரியல. ஆனா நீ பிசாசு மாதிரி ஓட்டமா ஓடுற.. உன்னோடு நடந்தா நாலே எட்டுல மூச்சு வாங்கிடுது.." என்றான் சலிப்போடு.

பெருமூச்சோடு அவன் முன் அமர்ந்தாள் செங்கா. "மெதுவா நடந்தா எனுக்கு காலு வலிக்கும்ப்பா.. அதுவும் இல்லாம மெதுவா நடக்கவும் வராது எனுக்கு.." என்றாள் வருத்தமாக.

"எனக்காக கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணேன்.. இந்த ஒருமுறை மட்டும்.." என்றான் அதியன்.

'என் இயல்பை மாத்துற நீ..' என திட்ட நினைத்தவள் அவனது சோர்ந்து போன முகம் கண்டு சரியென தலையசைத்தாள்.

"சரி வா.. மொல்லமாவே நடக்கலாம்.." என்றாள்.

சீனு தனது தாத்தாவின் புகைப்படத்திற்கு மாலையை அணிவித்தான். ஊதுவத்தி ஏற்றினான். இரு கை கூப்பி கும்பிட்டு விட்டு வந்து இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

"பாஸ்.." என்றான் அவனது அடியாட்களில் ஒருவன்.

"என்ன.?" என்றான் சீனு.

"நீங்க ஏன் உங்க அத்தையையும் மாமாவையும் அமைதியா விட்டுடிங்க.. பொன்னாவுக்கு இன்னும் கொஞ்ச நாளுல கல்யாணம் நடக்க போகுது.. ஆனா நீங்க இதுவரைக்கும் ஏதும் செய்யல.. கடைசி நேரத்துல தூக்கிட்டு வர ப்ளான் பண்ணி இருக்கிங்களா.?" என்றான் சந்தேகமாக.

"நான் இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்களை இந்த வீட்டுக்கு கூட்டி வந்து குடும்பம் நடத்தி இருக்கேன். ஆனா விருப்பம் இல்லாத ஒருத்தியை வலுக்கட்டாயமா இங்கே கூட்டி வந்ததை பார்த்திருக்கியா.?" என்று கேட்டான் சீனு.

அடியாள் இல்லையென தலையசைத்தான்.

"என்னை விரும்புறவளை மட்டும்தான் நான் கூட்டி வந்து குடும்பம் நடத்தியிருக்கேன்.. ஆனா பொன்னாவை பார்த்ததும் மனசுல ஆசை வந்துடுச்சி. அதனாலதான் வழக்கத்தை மீறி அவளை வலுக்கட்டாயமா அடைய நினைச்சேன்.. இதையே காரணமா காட்டி எங்க குடும்ப மானத்தை கப்பலேத்திட்டு போன என் அத்தையை பழி வாங்க நினைச்சி கடத்தி வந்து கட்டி வச்சேன். ஆனா அது எல்லாத்தையும் செங்கா மாத்திடடா.. பொன்னாவோட உடம்பு எனக்கு தந்த கிக்கை விட செங்காவோட பார்வை தந்த கிக் அதிகம். செங்கா முன்னாடி ஒப்பிடும்போது பொன்னா மேட்டரே இல்லன்னு லேட்டாதான் புரிஞ்சது. லவ் கருமமெல்லாம் என் வாழ்க்கையில செட்டே ஆகாது. ஆனா எனக்கு செங்கா கிடைச்சா அது பேரதிஷ்டம்ன்னு எனக்குள்ள நானே நம்புற அளவுக்கு அவ என்னை மாத்திட்டா.. அவ எனக்கு கிடைச்சா ரொம்ப சந்தோசப்படுவேன். ஆனா கண்டிப்பா வலுக்கட்டாயப்படுத்த மாட்டேன்.." என்றான்.

அவன் சொன்னது கண்டு அடியாளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சீமா கன்ஸ்ட்ரக்சனின் நிறுவனர் தன் முன் இருந்தவர்களை கோபத்தோடு பார்த்தார். மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ப்ளானை மீறி விஷ்வா உயிர் பிழைத்து விட்டான். போனால் போகிறது என்று அந்த விசயத்தை விட்டுவிட்டார் இவர். ஆனால் இந்த மூன்று மாதங்களில் அதியனாலும் விஷ்வாவாலும் அவருக்கு பல கோடிகள் நட்டமாகி விட்டது. அதியன் விஷ்வாவின் நேர்மையால் பலரும் தங்களின் ப்ரோஜக்ட் விசயங்களுக்கு அவர்களைதான் அணுகினர். நம்பர் ஒன் இடத்தில் இருந்த சீமா கன்ஸ்ட்ரக்சன் இந்த மூன்று மாத இடைவெளியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இதை சீமா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் அடியோடு வெறுத்தார். அவருக்கு பல நிறுவனங்கள் இருந்தது. அவருக்கு என்று பல தொழில்களும் இருந்தது. அனைத்திலும் அவரது பெயர்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இந்த ஒரு தொழிலில் மட்டும் தனக்கு இப்படி ஒரு எதிரி இருப்பது இவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"ஏற்கனவே நடந்த மாதிரி இதுவும் மிஸ்ஸானா அப்புறம் நான் உன்னை இந்த பில்டிங்கோட உச்சியில இருந்து கீழே தள்ளி விட்டுடுவேன்.." என்றார் கூலிப்படையை சேர்ந்த ஒருவனிடம்.

"இந்த முறை மிஸ்ஸாகாது சார்.. விஷ்வாவுக்கு இந்த முறை கண்டிப்பா மரணம்தான்.." என்றான் அவன்

அவர் யோசனையோடு மறுப்பாக தலையசைத்தார்.

"விஷ்வா வேணாம்.. அவனையே மறுபடியும் நாம டச் பண்ணா நம்மளை அவங்க மோப்பம் பிடிச்சிட சான்ஸ் இருக்கு.. இந்த முறை அதியனை போட்டு தள்ளிடு.. அவனை இங்கே காணோம். அவனோட லவ்வரை பார்க்க போயிருப்பதா அவனோட நிறுவனத்தை சேர்ந்த ஒருத்தன் செய்தி சொல்லி இருக்கான். அவன் எங்கே போயிருக்கான்னு தேடி பிடிச்சி வேலை முடிச்சி விட்டுடு.. யாரும் சீமா நிறுவனத்துக்கு போட்டியா வரவே கூடாது.." என்றார்.

"ஓகே சார்.." என்றவன் அங்கிருந்து கிளம்பி போனான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1182

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN