செங்கா 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதியன் நடந்துக் கொண்டே இருந்தான். மூச்சிறைத்தது. செங்காவின் சோர்வில்லா நடையை கண்டு அவள் மனுசிதானா என்று சந்தேகப்பட்டான். செங்கா ஆரம்பத்திலிருந்து அப்படியேதான் சக்தியோடு இருந்தாள். அவள் முகத்தில் துளி கூட சோர்வு தென்படவில்லை.

அதியன் கேட்டான் என்பதற்காக அவளும் மெதுவாகவே நடந்தாள்‌. ஆனாலும் அதியனால் முடியவில்லை. அந்த மலை செங்கோணம்தான் என்பது அவனின் மனதின் வாதமாக இருந்தது.

செங்கா ஒரு இடத்தில் சுற்றி போவதை கண்டவன் நடையை மீதி செய்யலாம் என்றெண்ணி நேராக நடந்தான்.

"ஹேய்.. அந்த வழி இல்லப்பா.." என்று கத்தியபடி அவனருகே வந்து அவனது கையை பிடித்து நிறுத்தினாள் செங்கா.

"நாம இப்ப உச்சிக்குதானே போகணும்.? அந்த வழியில போனா சுத்தி போகற மாதிரி இருக்கு. வா நாம இதுலயே போகலாம்.. செடிகள் கூட அதிகம் இல்ல.." என்றவன் அவளது கையை பற்றிக் கொண்டு நடந்தான்.

"யோவ் பட்டணம்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. இந்த வழியில போனா நமக்கு நேரம்தான் வீணாகும். நீ அமைதியா என்னோடு வா.. நான் உனுக்கு எந்த சேதாரமும் இல்லாம கூட்டி போறேன்.." என்றாள் செங்கா.

"இந்த ஒரு முறை நான் சொல்வதை நீ கேளு.. நீ என் பேச்சை கேட்டு என்னோடு நடந்து வா.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு நேராக நடந்தான்.

"இந்த வழி வேணாம் பட்டணம்.." என்று புலம்பிக் கொண்டே வந்தாள் செங்கா.

அரை மணி நேர பயணத்திற்கு பின் ஆளுயர புதர்கள் அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்தது. அதியன் செங்காவை பார்த்தான். அவள் சலிப்போடு நெற்றியை பிடித்தாள்.

"இந்த ஒரு புதரை தாண்ட முடியாமதான் நீ அவ்வளவு தூரம் சுத்தி போறியா.? நாம இந்த புதரையே பாலோவ் பண்ணி போகலாம். கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல வழி இருக்கும்.." என்றவன் மறுத்து தலையசைத்தவளை மீண்டும் தன்னோடு இழுத்துக் கொண்டு புறப்பட்டான். கால் மணி நேரம் நடந்த பிறகும் கூட அந்த புதர்கள் நீண்டுக் கொண்டேதான் சென்றன.

அதியனுக்கே சோர்வாக இருந்தது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் அந்த புதர் வேலியில் குறுகிய சந்து ஒன்றை கவனித்து விட்டான் அதியன்.

"பார்த்தியா.? நான் முன்னாடியே சொன்ன மாதிரி வழியை கண்டுப்பிடிச்சிட்டேன்.." என்றவன் அந்த வழியில் நடக்க முயன்றான். செங்கா அவசரமாக அவனை பிடித்து நிறுத்தினாள்.

"இது முள் புதை.. இதுல சிக்கினா மகனே நீ அத்தோடு காலி.. அமைதியா என் கூட வா.. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா சுலப பாதை கெடைச்சிடும்.." என்றாள் கண்டிப்பு நிறைந்த குரலில்.

அவளை கிண்டலாக பார்த்தான் அதியன்.

"இது முள் புதையா.? உன்னை நம்பி வந்தா நீ இப்படிதான் ஏமாத்துவியா.?" என கேட்ட அதியன் அவள் சொல்வதை பொருட்படுத்தாமல் அந்த புதரின் குறுகிய சந்தில் நுழைந்தான். அடுத்த நொடி மேலே நகர இயலாமல் என்னவோ அவனை பிடித்துக் கொண்டது. கீழே பார்த்தான். அவனது சட்டையிலும் பேண்டிலும் குட்டி குட்டியாக முட்கள் குத்தியிருந்தன. அவைகளிடமிருந்து தன்னை வெளியே இழுத்துக் கொள்ள முயன்றான். ஆனால் அந்த முட்கள் அனைத்தும் அரை வட்ட வடிவில் வளைந்திருந்த காரணத்தால் அவனால் அவைகளிடமிருந்து வெளி செல்ல முடியவில்லை. பரிதாபமாக முகத்தை வைத்தபடி செங்காவை பார்த்தான்.

"அது எல்லாம் கொக்கி முள்ளுங்க.. உன் துணி கந்தலானா மட்டும்தான் நீ வெளியவே வர முடியும்.. அதிகமா அசையாத.. அசைய அசையதான் முள்ளுங்க இன்னும் அதிகமா உன்னை சேதாரம் பண்ணும்.." என்று எச்சரிக்கை செய்தாள் செங்கா.

"இப்ப என்ன பண்றது.?" அவன் அப்பாவியாக கேட்டான்.

"ஒவ்வொரு முள்ளாதான் எடுக்கணும். பொறுமையா இரு. நான் எடுத்து விடுறன்.." என்றவள் தனது பேக்கை ஒரு ஓரமாக வைத்தாள். பாவடையை எடுத்து சொருகிக் கொண்டாள்.

அதியனின் உடையை பிடித்திருந்த ஒவ்வொரு முள்ளையும் விலக்கி விட்டாள். "என் பேச்சை கேட்காம வந்த.. இப்ப பாரு.. கொக்கி முள்ளுல மாட்டவே கூடாது தெரியுமா.?" என்றாள்.

"எல்லா சினிமாவிலும் பொண்ணுங்கதான் முள்ளுல மாட்டுவாங்க. இங்கே என் தலையெழுத்து நான் மாட்டியிருக்கேன்.." அதியன் புலம்பினான்.

"நானும்தான் மாட்டியிருக்கேன்ப்பா. ஒருமுறை துரத்தி வந்த யானைக்கிட்ட இருந்து தப்பிச்சவ தெரியாம இதே மாதிரி கொக்கி முள்ளு புதையில மாட்டிக்கிட்டேன். வெளியே வரவே இரண்டு மணி நேரம் ஆச்சி தெரியுமா.? யானை மறுபடியும் என் வழியில வந்துடுமோன்னு பயந்து அவசர அவசரமா வெளிய வர முயற்சி பண்ணேன். ஆனா எல்லாம் வீணாதான் போச்சி. அதுவும் இல்லாம அந்த முள்ளுங்க பண்ண வேலையால உடம்பெல்லாம் ஒரே கீறலுங்க. இங்க பாரு. என் மொவத்துல கூட கீறலோட தழும்புங்க இருக்கும்.." என்றவள் ஒவ்வொரு முள்ளாக விலக்கி விட்டதில் சலித்துப்போய் நின்று விட்டாள்.

"இந்த சட்டையும் பேண்டும் உனக்கு வேணுமா.?" என்றாள் யோசனையோடு.

"ஏன்.?" அவன் குழப்பமாக கேட்டான்.

அவள் சென்று தனது தோள்ப்பையில் இருந்த சிறு கத்தரிக்கோல் ஒன்றை எடுத்து வந்தாள்.

"இப்புடியே எடுத்துட்டு இருந்தா நெசமா ரொம்ப நேரம் ஆவும். அப்படியே எடுத்தாலும் கூட உன் சட்டையும் பேண்டும் எதுக்கும் உதவாத மாதிரி கந்தலா கிழிஞ்சி போயிடும். அதுக்கு இந்த கத்தரியை வச்சி வெட்டுனா வேலை சுலபமா முடிஞ்சிடுமேன்னு பார்க்கறன்.." என்றவள் அவனது சட்டையை வெட்ட ஆரம்பித்தாள்.

"போர் தவுசன் ருபி சட்டை வேஸ்டா போச்சி.." அவன் சொன்னதை கேட்டு ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள் செங்கா.

"இதை ஏன் நாலாயிரத்துக்கு வாங்கின.? நானுறு ரூவாய்க்கு எங்கப்பன் எடுக்கற சட்டை கூட இதை வுட நல்ல அம்சமா இருக்குமே.." என்றவள் சட்டையின் மறுபக்கத்தையும் வெட்டினாள்.

"இந்த சின்ன கத்தரியால இந்த பேண்டை எப்படி வெட்டுறது.? கொஞ்சம் நேரமாவும் போல.." என்றவள் காலின் கீழ் பகுதியிலிருந்து பேண்டை கத்தரித்தாள்.

ஓரளவு கத்தரித்து முடித்தவள் கத்தரிக்கோலை அவன் கையில் தந்தாள். "மீதியை நீயே கத்தரிச்சிட்டு வெளியே வந்து சேரு.. நான் அந்த பக்கமா போறேன்.." என்றவள் தனது பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு தூரமாக சென்றாள்.

அதியன் தன் கையில் இருந்த கத்தரிக்கோலையும் தூரத்தில் நடந்த செங்காவையும் மாறி மாறி பார்த்தான்.

"பாதியில விட்டுட்டு போயிட்டாளே.." என புலம்பியவன் மீதியை கத்தரிக்க ஆரம்பித்தான். கொஞ்சமாக அசைந்தால் கூட முட்கள் நறுக் நறுக்கென பிடித்து குத்தியது. பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு உடையை அங்கேயே விட்டுவிட்டு அவன் மட்டும் தப்பி வெளியேறினான்.

உடம்பின் பல இடங்களில் கொக்கி முள்ளால் ரத்த கீறல்கள் இருந்தது. ரத்தம் கசிந்த இடங்களில் எரிச்சலாக இருந்தது. புதரில் மாட்டி இருந்த சட்டையை வெளியே இழுத்து பார்த்தான். நான்கைந்து துண்டுகளாக கை வந்து சேர்ந்திருந்தது. பெருமூச்சோடு அதை அங்கேயே எறிந்தான்.

தனது பையிலிருந்த உடையை எடுத்து உடுத்திக் கொள்ளும் போதுதான் செங்கா அவனை விட்டுச் சென்ற காரணம் புரிந்தது.

"இவளுக்கும் வெட்கம் மடம் நாணமெல்லாம் இருக்கத்தான் செய்யுது போல.." என்று கிண்டலாக சொன்னவன் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு நடந்தான்.

நான்கைந்து மரங்களை தாண்டி சென்றான். செங்கா மரம் ஒன்றின் மீது சாய்ந்தபடி நின்றிருந்தாள். இவனை கண்டதும் இவனருகே வந்தாள்.

"வலி அதிகமா.?" என்றாள் அவனை மேலும் கீழும் சோதித்தபடி. அவனது அரைக்கால் சட்டைக்கும் கீழே முட்டியிலிருந்து ஷு வரை இருந்த மேனி பகுதியில் குத்தியிருந்த முட்களால் நான்கைந்து இடங்களில் ரத்த துளிகள் சிவப்பாக தெரிந்தது.

அவன் முன் அமர்ந்த செங்கா தனது தாவணி முந்தானையால் அவனது கால் பகுதியில் இருந்த ரத்த துளிகளை துடைத்தாள்.

"காலெல்லாம் முள் குத்தியிருந்தா அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா.?" என்றாள் நிமிர்ந்து பார்த்து.

"என்ன.?" என்றான் அதியன் புருவம் உயர்த்தி.

"அந்த அளவுக்கு நீ அந்த புதருல பெரண்டு எழுந்திருக்க. அமைதியா நின்னிருந்தா இப்படி முள் பிடிச்சிருக்காது.." என்றவள் மற்ற ரத்த துளிகளையும் துடைத்து விட்டுவிட்டு பெருமூச்சோடு எழுந்து நின்றாள்.

"உன் காலை பார்த்தியா என்ன நெறம்ன்னு..? ஐஸ் பொட்டியில வச்ச தக்காளி மாதிரி இருக்க நீ‌‌.. நெறம் கூட நமக்குள்ள ஒத்து வரல.. நீ ஏன் என் கூட சுத்துற.? ஊருல உனுக்கு வேற பொண்ணே கெடைக்கலையா.?" செங்காவின் குரலில் சிறு சலிப்பு இருந்தது. அவன் எதற்காக தன் பின்னால் சுற்ற வேண்டும் என்று குழம்பினாள்.

"இந்த நிறம் நிரந்தரம் இல்லையே.. நானும் வெயில்ல வேலை செஞ்சா உன் கலருக்குதான் வருவேன். ஆனா காதல் நிரந்தரம் ஆச்சே.." என்றவனை கண்டு நெற்றியில் அடித்து கொண்டாள் செங்கா.

"உனுக்கு பைத்தியம் முத்தி போச்சி.. உனுக்கு பட்டாதான் புத்தி வரும்.. வா வந்து இந்த தடத்துல நட.." என்றவள் செடிகளின் இடையே நடக்க ஆரம்பித்தாள்.

அதியன் அவளை பின்தொடர்ந்து நடந்தான். செங்கா தன் கையிலிருந்த குச்சியை வைத்து முன்னால் தட்டிக் கொண்டே நடந்தாள்.

பத்து நிமிட பயணத்திலேயே ஒற்றையடி பாதை ஒன்றை கண்டுபிடித்து அதில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் செங்கா.

"இதுதான் வழியா.?" என கேட்டவன் ஆளுயர புதர்களை திரும்பி பார்த்தான்.

"ஆமா.." என்றவள் வழியில் இருந்த படி போன்ற உயர பாறைகளின் மீது ஏற ஆரம்பித்தாள்.

"ச்சே.. இன்னும் பத்து நிமிசம் நடந்திருந்தா சரியான வழியில் போயிருக்கலாம். இப்படி டைம் வேஸ்ட் பண்ணிட்டேனே.." என புலம்பியவனை திரும்பி பார்த்து அவன் நெஞ்சின் மீது கை வைத்து அவனை நிறுத்தினாள் செங்கா.

அதியன் அவளது முகத்தை நெருக்கத்தில் கண்டதும் மூச்சி விட மறந்து போனான். செங்காவும் தான் சொல்ல வந்ததை மறந்து போனாள். அவனது முகத்தை ஆராய்ந்தாள். அவனது கண்களில் தனது எண்ணத்தை தொலைய செய்தாள்.

அவனின் கண்மணிகளில் தெரிந்த தன் பிம்பம் கண்டவள் தன் கண்களை மூடி திறந்தாள். "அந்த வழியை எப்புடி தப்பா தேர்ந்தெடுத்தியோ அப்புடிதான் இப்ப என்னையும் நீ தேர்ந்தெடுத்துருக்க.. இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா உனுக்கு புடிச்ச மாதிரி உன் அளவுக்கு அழவா இருக்கற பொண்ணை நேசிச்சி கட்டிக்கலாம். என் பின்னாடி வந்து உன் வாழ்க்கையை தொலைக்காத.." என்றாள் வருத்தம் நிறைந்த குரலில்.

அவள் சொன்னது புத்தியில் உறைக்க சற்று நேரம் பிடித்தது அதியனுக்கு.

அவள் அவனை விட்டுவிட்டு திரும்பி நடக்க முயல உடனே அவளை பிடித்து தன் பக்கம் திருப்பினான் அதியன்.

"உன் கண்ணோட்டம் ரொம்ப தப்பா இருக்கு செங்கா. உன்னை நீயே ஏன் குறைவா மதிப்பிடுற.?" என்றான் சிறு கோபத்தோடு.

செங்காவிற்கு கண்கள் கலங்கியது. "நான் எமனையே பலகாரம் செய்யுற ஆளு. ஆனா நீ எனக்குள்ள பலவீனத்தை தந்துட்ட.. உன்னை பார்க்கற ஒவ்வொரு தடவையும் நீ ஒசத்தி நான் தாழ்த்தினேதான் தோணுது. உன் முன்னாடி என்னால சமமா நிக்க முடியாதோன்னு மனசுல பயமா இருக்கு. எனுக்கு படபடன்னு இங்கிலீசு பேச வராது. தலையை பின்னி பூ வச்சிக்க புடிக்காது. தரையை கூட்டுற மாதிரி அழவா சேலை கட்ட புடிக்காது. கணுக்காலுக்கு கீழ துணி மோதுனாவே எனுக்கு ஒரு மாதிரியா இருக்கும். உனுக்கு இது புரியவே மாட்டேங்குது. இரண்டு பேரும் கட்டிக்கிட்டு ஊருக்குள்ள நடந்தா நல்ல பொருத்தன்னு ஊரே சொல்லணும். அத வுட்டுட்டு இந்த பையனுக்கு என்ன கண்ணு அவுஞ்சி போச்சான்னு உன்னைய திட்ட கூடாது.." என்றவள் தனது புறங்கையால் தன் கண்ணோரத்தை துடைத்துக் கொண்டாள்.

அதியனுக்கு அவள் சொன்னது ஆச்சரியத்தை தந்தது. அவள் தன்னை காதலிக்கும் காரணத்தால்தான் இப்படி ஒப்பீடு செய்து பார்த்துக் கொண்டிருக்காள் என்பது புரிந்தது. அவளும் தன்னை காதலிக்கிறாள் என்ற ஒரு விசயமே அவனுக்குள் பலபல மகிழ்ச்சியை தந்தது. அவளுக்குள் இருக்கும் ஒப்பீட்டை எப்படி மாற்றுவது என்பதுதான் அவனுக்கு புரியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

Word count 1154

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN