செங்கா 38

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதியன் செங்காவின் கண்களை துடைத்து விட்டான். செங்கா அவனது கையை தட்டி விட்டாள்.

"நீ என்னை பலவீனமாக்குற.. உன்னாலதான் நான் என்னையே குறைவா மதிப்பிடுறேன்.. உன்னை எனுக்கு புடிக்கவே இல்ல.. தூர போ.." என்றவள் அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தாள்.

"பலமோ பலவீனமோ.. ஏதோ ஒன்னா நான் உன்னை தொல்லை பண்ற வரைக்கும் நல்லதுதான்.." என்று முனகிய அதியன் அவளை பின்தொடர்ந்து நடந்தான்.

நடந்தான். நடந்தான். நடந்துக் கொண்டே இருந்தான். வெகுநேரத்திற்கு பிறகு மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

"பசிக்குது.." என்று வயிற்றை பிடித்தான் அதியன்.

மரத்தின் நிழலில் இருந்த பாறை ஒன்றின் மீது ஏறி அமர்ந்த செங்கா தனது பேக்கை கழட்டினாள். பையினுள் இருந்த வாழை இலை சுற்றிய உணவு பொட்டலத்தை எடுத்து வெளியே வைத்தாள்.

"நான் கட்டுச்சோறு கட்டி வந்து கரட்டுல தின்னு கூட ரொம்ப வருசமாச்சி. இதை எவன் சொமந்துட்டு திரியறதுன்னு சோறு கொண்டு வர மாட்டேன். ஆனா என் விதி இன்னைக்கு உனுக்கோசரம் சோறு கட்டியாந்திருக்கேன். வா. வந்து ஒட்கார்ந்து தின்னு.." என்றவள் இன்னொரு பொட்டலத்தை எடுத்து பிரித்து உண்ண ஆரம்பித்தாள்.

அதியன் அவளருகில் அமர்ந்து உணவு பொட்டலத்தை கையில் எடுத்தான். கலையரசி கை பக்குவத்தில் தயாராகி இருந்த புளி சாதம் ருசியாக இருந்தது.

"உங்க அம்மா டேஸ்டா சமைச்சிருக்காங்க.." என்ற அதியனை கிண்டலாக பார்த்தாள் செங்கா.

"நாளைக்கு இன்னேரம் நான் சமைச்சி தரேன். அப்ப என்ன சொல்றன்னு பார்க்கலாம் இரு.." என்றாள்.

"மலை மேல வந்துட்டோமே.. அடுத்து என்ன செய்வ நீ.?" சுற்றிலும் பார்த்தபடி கேட்டான் அதியன். உச்சியிலிருந்து பார்த்ததில் சுற்றிலும் இருந்த இடங்கள் அழகாய் தெரிந்தன. கண்களுக்கு அழகாய் தெரிந்த அனைத்தையும் தனது போனில் புகைப்படம் பிடித்தான் அவன்.

"அதோ அங்கே ஒரு மலை தெரியுதா..?" செங்கா கை காட்டிய திசையில் பார்த்தான் அதியன்.

"ஆமா. தெரியுது.." என்றவனிடம் "அந்த மலைக்குதான் நாம போக போறோம்.." என்றாள் செங்கா.

அதியன் அதிர்ச்சியோடு அந்த மலையை மீண்டும் பார்த்தான்‌. தூரத்தில் தெரிந்தது அந்த மலை. நடுவில் குட்டி குட்டி மலைகள் நிறைய தெரிந்தன.

"அவ்வளவு தூரம் நாம எப்படி நடந்து போக முடியும்.?" அதிர்ச்சியோடு கேட்டவனை கிண்டலாக பார்த்தவள் "நடந்துதான் போகணும்.." என்றாள்.

"என்னால முடியாது செங்கா.‌" என்றவன் அமர்ந்திருந்த பாறையில் சாய்ந்து விழுந்தான்.

"அப்படின்னா நீ இங்கேயே தூங்கு.. நான் மட்டும் அங்கே போறேன்.." என்ற செங்கா தனது பேக்கை எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அதியன் அவசரமாக எழுந்து அவன் பின்னால் ஓடினான்.

"நான் ஆரம்பத்துலயே சொன்னன். இது உனுக்கு சரி வராதுன்னு. இன்னமும் கெட்டு போவல. நீ இப்புடியே திரும்பி நடந்து போ. நான் என் வழியை பார்த்து போறேன்.." என்றவள் இலைகளின் சருகுகளால் மூடப்பட்டு இருந்த ஒற்றையடி பாதையில் இறங்கி நடந்தாள்.

"இந்த அதியன் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டான்.." என்றவன் அவளை தொடர்ந்து நடந்தான்.

"இதுக்கு மேல உன் விதி. அதை மாத்த யாரால முடியும்.? சரி.. இது நெட்டாங்குத்து பாதை. சரியா நடக்கலன்னா உருளதண்டம் போட்டுடுவ.. சீக்கிரமா கீழே போயிடலாம்ன்னு அப்புடி ஏதும் பண்ணிடாத. கீழே உருண்டு எழும் முன்னாடி கல்லு முள்ளுல மாட்டி மேல போய் சேர்ந்துடுவ. இப்பவாவது நான் சொல்றதை கேளு. இந்த கோலை பத்திரமா ஒவ்வொரு அடிக்கும் ஊனி ஊனி நடந்து வா. தடுமாற்றமா இருந்தா எதுவாது மரத்தை புடிச்சிக்க. என்னை ஏதும் புடிச்சிடாத. நீ வுழுந்தாலும் பரவால்ல. நான் வுழுந்தா பாவம் இல்லையா.?" என்றவள் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைத்து நடந்தாள்.

சரிவில் நடக்க அதியனுக்கு சற்று தடுமாற்றமாகதான் இருந்தது. ஆனால் செங்காவின் பேச்சு அவனுக்கு சிறு கோபத்தை தந்து விட்டது. எப்போதும் இளக்காரமாகவே பேசுகிறாளே என்று எண்ணியவன் இந்த முறை அவளது கிண்டலுக்கு பதிலடி தரும் விதமாகவேனும் சரியாக கீழே இறங்கி செல்ல வேண்டும் என்று எண்ணினான்.

களைப்பு அதிகம் இல்லை இம்முறை. ஆனால் கரணம் தப்பினால் மரணம் எனும்படி ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைக்க வேண்டியதாக இருந்தது. இப்படியெல்லாம் இவளை யார் சுற்ற சொல்கிறார்கள் என்று அடிக்கடி வருத்தப்பட்டான்.

எவ்வளவு கவனமாக இருந்தும் கூட அவனுக்கு ஒரு இடத்தில் சறுக்கி விட்டுவிட்டது. மூன்றடி சறுக்கி சென்றவன் அவசரத்தில் ஒரு செடியின் கிளை பிடித்து நின்றான்.

"பார்த்து போப்பா.." என்று குரல் தந்தாள் செங்கா.

அன்று மாலை ஐந்திற்குதான் செங்கா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

செங்கா தான் எப்போதும் தங்கும் பாறை மீது ஏறி தனது பேக்கை ஒரு ஓரமாக எறிந்தாள். பாறையின் ஓர் இடத்தில் சாய்ந்து அமர்ந்தாள். கால்கள் இரண்டையும் பிடித்து விட்டுக் கொண்டாள்.

"இப்படி கால் வலியோடு உன்னை யார் சுத்த சொல்றாங்க.?" என கேட்டான் அதியன்.

"யாரும் சொல்லல.? ஆனா இதுதான் நல்லா இருக்கு. எந்த வித காரணமும் இல்லாம காத்தாட்டம் சுத்திட்டே இருக்கத்தான் புடிச்சிருக்கு.." என்றவள் கால்களை உதறியபடி எழுந்து நின்றாள்.

"கணப்புக்கு வெறகு காலி. நான் போய் நாலு குச்சிங்களை தேடி எடுத்துட்டு வரேன். நீ இப்புடி ஒரு ஓரமா உட்கார்ந்து இரு. இந்த இடத்துக்கு மிருகம் ஏதும் வராதுதான். ஆனா பாம்பு பல்லி எதுனா வரும். பார்த்து பத்திரமா ஒட்கார்ந்திரு.." என்றவள் அவன் பதில் மொழி சொல்லும் முன்பே அங்கிருந்து ஓடி விட்டாள்.

அதியன் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தான். ஏதோ சொர்க்கத்திலுள்ள மலை முகடு போல தெரிந்தது அந்த இடம். அந்த பாறையின் மறுபக்கம் சென்று எட்டிப் பார்த்தான். பாதாளம் போல ஆழமாக இருந்தது அந்த பக்கம். வாயின் இருபக்கம் கையை குவித்து வைத்தவன் "ஹோ.." வென காற்றோடு கத்தினான்.

அவனது கத்தல் எதிர் மலையில் பட்டு எதிரொலித்தது. எதிரொலி தந்த உற்சாகத்தில் மீண்டும் "செங்கா.." என்று கத்தினான்.

"செங்கா.. ஐ லவ் யூ.." என்று மீண்டும் கத்தினான். எதிரொலி முன்பை விட அதிகமாக ஒலித்தது. எதிரொலி கேட்க கேட்க மீண்டும் மீண்டும் அதையே கத்தினான்.

கத்தியதில் தொண்டை வறண்ட பிறகே அமைதியானான்.

அரை மணி நேரம் கழித்து செங்கா வந்து சேர்ந்தாள். பெரிய விறகு கட்டை கொண்டு வந்து பாறையின் ஒரு ஓரத்தில் எறிந்தாள்.

பாறையின் கீழே குதித்து ஓடையிலிருந்த தண்ணீரை அள்ளி முகத்திற்கு அடித்தாள். பின்னர் தாவணியின் முந்தானையில் முகத்தை துடைத்தபடி மேலே வந்தாள்.

"என் பேரை எதுக்கு இப்ப ஏலம் போட்ட நீ.?" என்றாள் அதியனிடம்.

"உன் பேர் ஸ்வீட்டா இருக்கேன்னு சொல்லி பார்த்தேன்.." என்றவன் அவளது முகத்தை உற்று பார்த்தான்.

"உன் கன்னத்துல ஏன் வீங்கி இருக்கு.?" என்றான் சந்தேகமாக.

"அது செவுப்பு எறும்பு கடிச்சி வச்சிடுச்சி.." என்றவள் தன் கன்னத்தை தேய்த்து விட்டு கொண்டாள்.

"மருந்து போட்டுக்கோ.." அதியன் அக்கறையோடு சொன்னான்.

"இந்த கடிக்கெல்லாம் மருந்தா.? நான் யார் தெரியுமா.. தேளு கடிச்சா கூட மருந்து போட மாட்டேன்.." என்றாள் புருவம் உயர்த்தி.

அவள் தனது செய்கையை வீரம் என நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அதியனுக்குள் சிறு பயம்தான் தோன்றியது. இவளது கவன குறைவு ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கி விட்டால் என்ன செய்வது என பயந்தான். காரணமே இன்றி இப்படி வலி அனுபவிப்பது பைத்தியக்காரதனமாக தோன்றியது அவனுக்கு.

சருகுகளை ஒன்று சேர்த்து நெருப்பை பற்ற வைத்தாள் செங்கா. விறகுகளை அழகாய் அடுக்கினாள். நெருப்பு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

அந்தி சாயும் வெயிலை பார்த்துக் கொண்டிருந்த அதியன் காற்றில் குளிர் பரவுவதை உணர்ந்தான். அனலின் அருகே வந்து அமர்ந்தான்.

"குளுவுருதா.? உன் போர்வையை எடுத்து போத்திக்க.." என்றாள் செங்கா.

அதியன் தனது பேக்கிலிருந்த ஸ்வெட்டரை எடுத்து போட்டுக் கொண்டான்.

"உனக்கு குளிரலையா.?" அதியன் சந்தேகமாக அவளை கேட்டான்.

இல்லையென தலையசைத்தாள் செங்கா. அவளது தாவணி மெலிதாகதான் இருந்தது. அவள் தூக்கி செருகியிருந்த பாவாடை இன்னமும் முட்டியில்தான் நின்றிருந்தது.

"நிஜமா குளிரலையா.? இந்த டிரெஸ்ல கூட உனக்கு குளிரலையா.?" ஆச்சரியமாக கேட்டவனிடம் மீண்டும் இல்லையென்றே தலையசைத்தாள் செங்கா.

"நடுநிசியில பெய்யுற மழையில நனைஞ்சி இருக்கேன். நடு பகல்ல பெய்யுற மழையில நனைஞ்சிக்கிட்டே இந்த ஓடையில குளிச்சிருக்கேன். அதெல்லாம் புடிச்சிருக்குப்பா.." என்றவள் மேற்கில் இருந்த கருப்பு கலந்த சிவப்பை பார்த்தாள்.

"சூரியன் மறைஞ்சிட்ட பெறவும் மேவம் அழவா இருக்கு.." என்றாள் கண்கள் மின்ன.

அதியன் கண்களை மூடித் திறந்தான். மேகத்தை ரசித்துக் கொண்டிருந்தவளை அவன் ரசித்தான்.

"சில சமயத்துல நீ பேசுறது வேற பாசை மாதிரி தோணுது. ஆனாலும் எனக்கு புரியுது.." என்றான் அவன் அவளை ரசித்தபடி.

செங்கா சிரித்தாள்.

"சில நேரத்துல நீ ஓவியம் மாதிரி இருக்க.." அதியன் அவளது முகத்தை பார்த்தபடி சொன்னான்.

"இல்ல.. அங்க பாரு. அந்த மேவம்.. அந்த மலைங்க. அந்த மரங்க.. அந்த வானம் அதுதான் ஓவியம். இறைவனோட படைப்புல இன்னும் அழவு மாறாம இருக்கறது இதுங்கதான். இப்புடியே பார்த்துட்டு இருக்கணும். பசிக்க கூடாது. தாவம் எடுக்க கூடாது. எதையும் யோசிக்க கூடாது.." என்றவளை கண் சிமிட்டி பார்த்தவன் "உன்னை பார்க்கும்போது எனக்கும் அப்படிதான் தோணுது.." என்றான்.

செங்கா சிரிப்போடு திரும்பி அவனை பார்த்தாள். "உனுக்கு பைத்தியம்.." என்றாள்.

"உன்னை விட கம்மியாதான்.." என்ற அவனும் சிரித்தான்.

இருள் நன்றாக சூழ்ந்த பின் செங்கா தன்னிடமிருந்த உணவை அவனிடம் தந்தாள்.

"இதுவும் இன்னும் ஒரு வேலைக்கும் சோறு இருக்கு.." என்றவள் சாதத்தை சாப்பிட தொடங்கினாள்.

இருவரும் உண்டு முடித்த பிறகு தனது போர்வையை தரையில் விரித்தாள் செங்கா. "நீ இதுல தூங்கு. உன் போர்வையை போர்த்திக்கோ.." என்றாள்.

"உனக்கு.?" அவன் சந்தேகமாக கேட்க தனது தாவணி ஒன்றை தரையில் விரித்து அதன் மீது அமர்ந்தாள் செங்கா.

"எனுக்கு இதே போதும்.. இது அதிகம்.." என்றாள்.

"இது எப்படி குளிருக்கு தாங்கும்.?" என கேட்டவனிடம் "குளிராத போது இதுவே எனுக்கு அதிகம்தான்.." என்றவள் கொட்டாவி விட்டாள்.

"உனக்கு தூக்கம் வருதா.?" என கேட்டபடி அவளருகே எழுந்து வந்தான் அதியன்.

"ஆமா ரொம்ப தூக்கம் வருது. பூமியே இரண்டா உடைஞ்சாலும் நடுவுல எழ மாட்டேன் நான்.. உனுக்கு எதுனா ஒன்னுக்கு இரண்டுக்கு வந்தா சின்ன புள்ளைங்க மாதிரி என்ன எழுப்பாம நீயே போய்ட்டு வந்துக்க.." என்றவள் தரையில் தலை சாய்த்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1050

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN