செங்கா 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வானம் பார்த்தபடி படுத்திருந்த செங்காவை பெருமூச்சோடு பார்த்தான் அதியன்.

"நான் டென்ட் கொண்டு வந்திருக்கேன்.." என்றான் சிறு குரலில்.

செங்கா இவன் பக்கம் திரும்பினாள். "சரி.. அதோ அந்த பக்கமா உன் டென்டை போட்டுக்கோ.." என்றாள். மீண்டும் நட்சத்திரங்களை எண்ணும் வேளைக்கு திரும்பினாள்.

"டென்ட்ல இரண்டு பேர் தூங்கலாம்.." அதியன் சொன்னதை கேட்டு கையை ஆட்டினாள் அவள்.

"நான் வரல. நீ தூங்கு. எனுக்கு இப்புடி வானம் பாத்து தூங்கனாதான் நல்லாருக்கும்.. மழை காலமா இருந்தா கூட அதோ அந்த கல்லுக்கு அடியில தூங்குவேன். அப்ப கூட தூங்கற வரைக்கும் இடியையும் மின்னலையும் பார்த்துட்டுதான் படுத்திருப்பேன்.." என்றவள் கொட்டாவி விட்டாள்.

"நடந்து வந்த அலுப்பு தூக்கம் வருது.." என்றாள் கண்களை மூடியபடியே.

அதியன் தனது பேக்கை திறந்து டென்டை எடுத்தான். பாறையின் மீது விரித்தான். போனில் டார்ச்சை இயக்கி டென்டுக்குள் வைத்தான்.

"செங்கா.. எழுந்து டென்ட்ல வந்து தூங்கு.." என்று அவளை தட்டி எழுப்பினான்.

அவள் அசையவே இல்லை. அதியன் கொஞ்ச நேரம் தொடர்ந்து எழுப்பி பார்த்தான். எருமை மாட்டின் மீது மலை பெய்வது போல அசையாமல் இருந்தாள். அவளை தூக்கினான்.

"வெயிட்டா இருக்கா.." என்று முனகியபடியே அவளை டென்டுக்குள் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டான். அவள் உடனே போர்வை உதைத்து தள்ளி விட்டாள். மீண்டும் போர்த்தி விட்டான். அவள் மீண்டும் தள்ளி விட்டாள். அதியன் அத்தோடு விட்டுவிட்டு சற்று தள்ளி படுத்துக் கொண்டான். போனில் பாடல்களை இசைக்க விட்டான். சற்று நேரத்தில் உறங்கி போனான்.

செங்கா மீண்டும் கண் விழித்தபோது பறவைகளின் கீச்சொலிகள் வனம் முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது. தான் படுத்திருக்கும் டென்டை பார்த்தாள்.

"மூச்சி முட்டுது.." என்று முனகினாள் கண்களை கசக்கியபடி. அதியன் ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

"பட்டணத்துக்கார மவராசா எழுந்திரு.. பொழுது விடிஞ்சிடுச்சி.." என்றாள் அவனது தோளில் தட்டியபடி.

அதியன் அவளது குரலில் எழுந்து அமர்ந்தான். "பொழுது விடிஞ்சிடுச்சா.?" என்றான் கொட்டாவியை விட்டபடியே.

செங்கா டென்டின் கதவை திறந்தாள். "அப்படி ஒரு அழகான காட்சியை மறைச்சிட்டு இப்படி ஒரு டென்டுல என்னை தூங்க வச்சிட்டியே.." என சலித்துக் கொண்டாள் அவள்.

அதியன் அவள் பார்த்த திசையில் பார்த்தான். அந்த மலையின் மறுபக்கத்தில் அதியன் நேற்று எட்டிப்பார்த்த பள்ளத்தாக்கு இப்போது முழுதாக பனி மூடி இருந்தது. அந்த மலையை நேர்கோடாக கொண்டது போல மேகம் வானத்தில் கூரை அமைத்திருந்தது.

"வாவ். ஏரோபிளேன் வியூ.." என்றான் மேக விரிப்பை வியந்து பார்த்தபடி.

"இது கரட்டு வியூ பேயே.." என்றவள் டென்டை விட்டு வெளியே வந்தாள். தாவணியை சரிசெய்துக் கொண்டாள். கையையும் கழுத்தையும் நெட்டி முறித்தாள். அதியன் தனது போனோடு வெளியே வந்தான். மேக கூட்டத்தை புகைப்படம் எடுத்தான்.

அந்த அழகிய மேகங்களின் இடையே சில பறவைகள் மேலே பறந்து வந்தன.

"செங்கா அங்கே பாரு.. பறவைங்க.." என்றான் ஆச்சரியத்தோடு.

அடுத்த சில நிமிடங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்றுக் கொண்டேயிருந்தன.

"செமையா இருக்கு.." என்றான்.

இடுப்பை அப்படியும் இப்படியும் திருப்பிக் கொண்டிருந்த செங்கா கிழக்கு பக்கம் பார்த்து கையெடுத்து வணங்கினாள். அதியனும் அவள் பார்த்த திசையில் பார்த்தான். மேக விரிப்பின் மறு பக்கத்தில் சூரியன் மெல்ல மேலெழும்பிக் கொண்டிருந்தது. அதியன் அந்த சூரியனையும் புகைப்படம் எடுத்தான்.

"இதையெல்லாம் பார்க்க கண்கள் இரண்டும் போதாதுப்பா.." என்றான் ரசித்து பார்த்தபடி.

"ஆமா. இதெல்லாம்தான் உண்மையான அழவு.." என்றவள் தனது கொண்டையை அவிழ்த்தாள்‌. தலைமுடி பின்னங்கால் முட்டியை தொட்டது.

"நான் குளிக்க போறேன். நீயும் வரியா.?" என கேட்டவள் தனது பேக்கிலிருந்து உடைகளை எடுத்து தோள் மீது போட்டுக் கொண்டாள்.

"இதையெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமே.." என்றான் அவன்.

"சில்ற பையனாட்டாம் இருக்காத. இதே மாதிரிதான் நாளைக்கும் தெரியும். அழவான விசயத்தை பார்த்தா பார்த்த கணமே மனசுல புடிச்சி வச்சிக்கணும். அதே விசயத்துல இருக்க கூடாது.." என்றவள் பாறையிலிருந்து கீழே இறங்கினாள். அதியன் அந்த மேக படுக்கையை ஏக்கத்தோடு பார்த்தபடியே அவளை தொடர்ந்து நடந்தான்.

மலையின் முன் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஓடைக்கு வந்ததும் கல் ஒன்றின் மீது மாற்று உடையை எறிந்தாள். அதியனும் தனது உடைகளை ஓரத்து கல் ஒன்றின் மீது வைத்தான். விழுந்து விடுமோ என்று எண்ணி தரையில் கிடந்த கல் ஒன்றை எடுத்து துணி மீது வைத்தான். அவன் செய்கை பார்த்து செங்கா சிரித்தாள்.

வேப்ப மரத்தை தேடி சென்று குச்சி ஒன்றை உடைத்தவள் அதை இரண்டாக உடைத்து அதியனிடம் ஒன்றை வீசினாள்.

"இதை என்ன பண்றது.?" அவன் குழப்பத்தோடு கேட்டான்.

"பல் வெளக்கறதுக்கு.." என்றவளை கவனமாக கவனித்தவன் அவள் செய்வது போலவே வேப்பங்குச்சியின் நுனியில் கடித்தான்.

"ச்சீ.. கசக்குது.." என்றவன் குச்சியை தூர எறிந்தான்.

செங்கா மீண்டும் ஒரு குச்சியை உடைத்து அவன் கையில் தந்தாள்.

"உன் பேஸ்டையும் பிரசையும் விட இந்த வேப்பங்குச்சி எவ்வளவு ஒசந்ததுன்னு உனுக்கு தெரியல.. இந்தா இதை வச்சி பல்ல தொலக்கு.." என்றாள்.

வேப்பங்குச்சி வேம்பாகவே கசந்தது. அதியன் பல்லை கடித்தபடி பற்களை தீட்டி முடித்தான்.

செங்கா வேப்பங்குச்சியை தூர எறிந்து விட்டு ஓடையின் கரைக்கு வந்தாள். தாவணியை கழட்டினாள்.

"என்ன பண்ற நீ.?" அதியன் அவசரமாக கேட்டான்.

"குளிக்கப்போறேன்.." என்றவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று ரவிக்கையை கழட்டினாள்.

அதியன் சட்டென திரும்பி நின்றான்.

செங்கா நெஞ்சுக்கும் மேல் பாவாடையை ஏற்றிக் கொண்டு அவன் பக்கம் பார்த்தாள்.

"நீ ஏன் அந்த பக்கம் பார்த்துட்டு நிக்கற.? குளிக்கலையா.?" என இவள் கேட்க அவன் திரும்பி பார்த்தான்.

செங்கா ஓடைக்குள் காலை வைத்திருந்தாள். அவளது முட்டிக்கும் மேல் இருந்தது பாவாடை. அவளது கூந்தலும் அந்த முட்டி வரை முதுகில் படர்ந்திருந்தது.

அவன் கண் சிமிட்டி பார்த்த நேரத்தில் ஓடையில் மூழ்கினாள் செங்கா. அவள் மீண்டும் மேலே தலை காட்டியபோது அதியன் தன் கையிலிருந்த வேப்பங்குச்சியை கீழே விட்டு விட்டான்.

மூடியிருந்த அவளது விழிகளின் மீது வழிந்தது அவளின் கூந்தலில் இருந்து சிதறியோடிய நீர். அதியன் கண்களை இமைத்தான். செங்கா கண் விழித்து பார்த்தாள்.

"குளிக்கலையா.?" என்றாள் அவள்.

"ம்.." பிரமை பிடித்தவன் போல தலையசைத்தவன் சற்று தூரம் தள்ளிச் சென்று தண்ணீரில் இறங்கினான். ஜில்லென்று இருந்தது தண்ணீர். காலை வைத்த உடன் சட்டென மேலேறினான்.

'இதுல எப்படி குளிக்கறது.? ஐஸ் வாட்டர் மாதிரி இருக்கே.‌.' என்று குழம்பியவன் செங்காவை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

அவள் தண்ணீர் நீச்சலடித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் நொடியெல்லாம் தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். அவளை பார்த்துக் கொண்டே தண்ணீரில் இறங்கினான். உடல் இன்னும் அதிகமாக சிலிர்த்தது.

குளுமையான தண்ணீரை முழுமையாக ஏற்றுக் கொண்ட பிறகு யோசித்து பார்த்தான். அந்த சில்லிப்பிலும் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்தான். ஓடையின் எதிர் திசையில் நீச்சலடித்து சென்றான். ஓடி வரும் தண்ணீரை எதிர்த்து செல்வது பிடித்திருந்தது.

செங்கா குளித்து முடித்து கரையேறி மாற்று உடை மாற்றினாள். அதியன் தூரமாய் நீச்சலடித்துக் கொண்டிருந்தான். அவன் வரும்போது வரட்டும் என எண்ணியவள் அருகிருந்த பாறையின் மீது ஏறி அமர்ந்தாள். அடிக்கும் வெயிலுக்கு தலைமுடி காய எவ்வளவு நேரம் ஆகும் என யோசித்தபடி முட்டியை கட்டிக் கொண்டாள். சூரியனின் கதிர்கள் நேராக முகத்தில் பட்டது. கண்களை மூடிக் கொண்டாள். குளிர் ஓடை தந்த சில்லிப்பும் இப்போது சூரியனின் கதிர்கள் தரும் இளஞ்சூடும் ஒன்று சேர்ந்து ஒரு வித மயக்கத்தை தந்தது.

அதியன் வெகு நேரம் கழித்து கரை ஏறினான். கரை ஏற மனமே வரவில்லை. தண்ணீரிலிருந்து மேலே வந்ததும் அதிகமாக குளிர் எடுத்தது. செங்காவை பார்த்தான். அவள் கல் ஒன்றின் மீது அமர்ந்திருந்தாள். மறுபக்கம் பார்த்து அமர்ந்திருப்பவளை கண்டவன் தனது உடைகளை எடுத்துக் கொண்டு தூரமாக இருந்த புதர் மறைவிற்கு சென்று உடையினை மாற்றி வந்தான்.

செங்காவின் அருகே வந்தான். கண்களை மூடி முட்டியின் மீது தலை சாய்த்து அமர்ந்திருந்தவளை கண்டவன் ஒரு கணம் திகைத்தான். அவளின் முகத்தில் பட்டு தெறித்த சூரியனின் கதிர்களால் அவள் முகம் செவ்வானம் போல இருந்தது. சிறு காற்றில் பறந்துக் கொண்டிருந்தது அவளின் கூந்தல். அவளது இதழில் மென்நகை ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதியன் அவள் முன்னால் அமர்ந்தான். அவளது கன்னத்தில் தனது கரத்தை பதித்தான். அவள் கண்களை திறவாமலேயே தனது புன்னகையை சற்று அதிகப்படுத்தினாள். அதியனுக்கு அவளது முகத்தை பார்க்கும்போது தான் ஒரு மாய உலகத்தில் இருப்பது போல இருந்தது‌. எதிரில் இருப்பவள் சிலையா ஓவியமா என்று சந்தேகித்தான். தன்னை மறந்து அவள் முன் இப்படி மயங்கி இருப்பது அவனுக்கு பிடித்திருந்தது.

கன்னம் வருடிக் கொண்டிருந்தவன் அவளை நெருங்கினான். அவளது இதழோரத்தில் முத்தம் ஒன்றை பதித்தான். செங்காவின் புன்னகை அதிகமானது. அதியன் அவளது புன்னகை முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

நேரம் எவ்வளவு சென்றது என அவனுக்கு தெரியவில்லை. திடீரென ஏதோ ஒரு மிருகம் மரங்களின் இடையே ஓடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழுந்தான். அதே வேளையில் செங்காவும் படக்கென கண் விழித்து நேராக அமர்ந்தாள். தன் முன் அமர்ந்திருப்பவனை கண்டவள் "என் பக்கத்துல என்ன பண்ற.?" என்றாள் சந்தேகமாக.

அவளது கேள்வியால் அதியன் குழம்பி போனான். ஏதோ மிருகம் மீண்டும் மருண்டு ஓடும் சத்தம் கேட்டு எழுந்து நின்றாள் செங்கா. அதியனும் சத்தம் வந்த திசையை பார்த்தான்.

"செங்கா.." என்றான் தயக்கமாக.

"எந்த மிருவம் வந்தாலும் நான் உன்ன உசுரோட காப்பாத்துறேன். பயப்படாத.." என்றாள் அவள்.

"அது இல்ல.. நீயும் என்னை லவ் பண்றதானே.?" என்றான்.

செங்கா குழப்பமாக அவனை பார்த்தாள்.

"என்னை பிடிச்சிருக்குதானே உனக்கு.? அதனாலதானே நீ ஹேப்பியான.?" என்றான் அவன் மீண்டும்.

"என்னத்தை உளருற.? நல்ல வெயிலுக்கு நல்லா தூங்கிட்டு இருந்தேன்.. என்னவோ மிருவம் ஓடி என் தூக்கத்தை கலைச்சிபுடுச்சின்னு கடுப்புல இருக்கேன். நீ என்னா பைத்தியம் மாதிரி ஏதேதோ கேட்டுட்டு இருக்க.?" என்றாள் கூந்தலை அள்ளி முடிந்தபடி.

"அடிப்பாவி தூங்கிட்டு இருந்தியா இவ்வளவு நேரம்.?" என கேட்டவனுக்கு அவளது தூக்கத்தின் மீது கோபம் வந்தது.

"ஆமாப்பா.. ஏதோ கனா கூட வந்துச்சி.." என்றவள் கழுத்தை உடைத்து அப்படியும் இப்படியும் திருப்பினாள். "ஆனா நல்ல கனாதான்.. என்னான்னு தெரியல.. ஆனா நல்லா இருந்துச்சி.." என்றவள் ஓடையில் இறங்கி தான் முன்பு அணிந்திருந்த உடைகளை அலசி கொண்டு வந்து கொடி புதரின் மீது காயப்போட்டாள்.

"கனவா.? விளங்கும்.." என்று முனகியவன் தனது உடைகளையும் கொடி புதரின் மீது காய வைத்தான்.

"போய் சாப்பிடலாமா.?" என கேட்டவளிடம் சரியென தலையசைத்தபடி அருகே வந்தான். திடீரென சடசடவென சத்தமிட்டபடி மிருகம் ஒன்று புதர் ஒன்றிலிருந்து தாவி குதித்து ஓடி வந்தது. இவர்களின் எதிரில் ஓடியது மறுபக்கத்தில் சென்று மறைந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1092

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN