செங்கா 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
லாரன்ஸ் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

"அவ என் வொய்ப் சார். மனநலம் பாதிக்கப்பட்டவ.. அவ பாதுகாப்புக்காகதான் நான் ரூம்ல வச்சி பார்த்துக்கிட்டேன்.. ஆனா சங்கிலியால ஏதும் கட்டிப்போடல.." என்றார் இன்ஸ்பெக்டரிடம்.

இன்ஸ்பெக்டர் தன் கையில் இருந்த புகார் கடிதத்தை அவர் முன்னால் காட்டினார்.

"இது உங்க மனைவி தந்த புகார்.. அவங்களை நீங்க சங்கிலியால கட்டிப்போட்டு தனியறையில அடைச்சி வந்திருந்ததா கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்க. சட்டத்தை பத்தி உங்களுக்கே ரொம்ப நல்லா தெரியும். அவங்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தா அதுக்கான சிகிச்சை தந்திருக்கணும் நீங்க. ஆனா சிகிச்சையை மறுத்திருக்கிங்க. அதுக்காக உங்க மேல தனி புகார் பதிவு செய்ய முடியும்.. நீங்க உங்க வாதத்தை என்கிட்ட சொல்றதுக்கு பதிலா உங்க மனைவிக்கிட்டயும் உங்க மகள்கிட்டயும் பேசுங்க.. அப்படி முடியாதுன்னா நேரா ஜட்ச்க்கிட்டயே பேசிகங்க.." என்றவர் தனது அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

லாரன்ஸ்க்கு கோபத்தில் ரத்தம் கொதித்தது. ரக்சனா மீது ஆத்திரமாக வந்தது.

காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தவர் நேராக காயத்ரியின் வீட்டுக்குத்தான் சென்றார்.

"ரக்சனா.." என்றார் கதவை ஓங்கி தட்டியபடி.

விஷ்வா வந்து கதவை திறந்தான். அவரை எரிச்சலோடு முறைத்தான்.

"என்ன வேணும்.?" என்றான் வேண்டா வெறுப்பாக.

"ரக்சனாவோடு பேசணும் நான்.." என்றார் அவர்.

"அவ பூங்கோதை ஆன்டியை பார்க்க ஹாஸ்பிட்டல் போயிருக்கா.. இன்னைக்கு இங்கே கூட்டி வந்துடுவா.. சாயங்காலம் வாங்க.. பூங்கோதை ஆன்டியோடும் கூட பேசுவிங்க.." என்றவன் கதவை அறைந்து சாத்தினான். லாரன்ஸ்க்கு கோபம் அதிகமானது. ரக்சனாவை நேரில் பார்த்ததும் அவளுக்கு இரண்டு அறைகளை தர வேண்டும் என நினைத்தார்.

மாடு போன்ற உயரத்தில் நீண்ட கொம்புகளோடு ஓடிய மிருகத்தை கண்டு பதறி போனான் அதியன்.

"என்ன இது.?" என்றான்.

"மான்ப்பா.." என்ற செங்காவை சந்தேகமாக பார்த்தான் அவன்.

"நானும் ஜூவில் மான் பார்த்திருக்கேன்.." என்றான்.

"அட இதுவும் மான்தான்ப்பா.. கடத்தி மான்.." என்றவள் மீண்டும் தன் பக்கம் ஓடி வந்து மறைந்த மானை ஆச்சரியமாக பார்த்தாள்.

"அந்த மானை தேடி போலாம் வா.." என்றவள் மான் ஓடிய திசையில் ஓடினாள். அதியன் வேறு வழியின்றி அவளை தொடர்ந்து ஓடினான்.

"இந்த இடத்துக்கு மிருகம் ஏதும் வராதுன்னு சொன்ன.?" குழப்பத்தோடு கேட்டான் அதியன்.

"ஆமாப்பா.. அதோ அந்த மேல் பாறைக்கு எந்த வெலங்கும் வராது.." என்று சொல்லியபடி ஓடியவளை நிறுத்தியவன் கோபத்தோடு தன் பக்கம் அவளை திரும்பினான்.

"நீ ஏன் இப்படி பண்ற.? இவ்வளவு ஆபத்தான காட்டுல ஏன் இருக்க.?" என்றான்.

"தெரியல.." என்றாள் செங்கா. அவளது கண்கள் அங்கிருந்த மரங்களையும் இலைகளையும் பார்த்தது.

"மூணாவதுல வாத்தியார் அடிச்சிப்புட்டாங்கன்னு பள்ளிக்கோடம் போவ புடிக்காம இந்த கரட்டுக்குள்ள ஓடி வந்தேன். ஒரு நாள் முழுசா கரட்டுலயேதான் சுத்துனன். பசிக்கல.. எதுவும் தோணவும் இல்ல.. ராத்திரி உயரமா இருந்த பாறாங்கல்லு மேல ஏறி தூங்கனன். மறு நாள் பொழுது எறங்கற நேரத்துக்குதான் வூட்டுக்கு போனன். அப்பா பயங்கரமா அடிச்சிபுடுச்சி. எங்கம்மா அழுதுச்சி. இரண்டு பேரும் என்னைய எங்கங்கயோ தேடுனாங்களாம்.. மறுபடியும் பள்ளிக்கோடம் போனன். ஆனா அங்க ஒட்காரவே முடியல. மறுபடியும் காட்டுக்கு ஓடி வந்துட்டன். தெனமும் பள்ளிக்கோடம் போறதா சொல்லிப்புட்டு கரட்டுக்கு ஓடி வந்துடுவன். அதுவும் கொஞ்ச நாளுல எங்கப்பன்னுக்கு தெரிஞ்சிடுச்சி. மறுபடியும் அடி வுழுந்துச்சி. எங்கம்மா செலாக்கை காய வச்சி இரண்டு காலுலயும் சூடு வச்சிச்சி. ஆனா காயம் நல்லானவுடனே மறுபடியும் ஓடியாந்துட்டன். என்னம்மோ இங்கதான் புடிச்சிருக்கு. மனுச மக்க தொந்தரவு இல்ல. நாளைக்கு இந்த பாடம் படிக்கணும்ன்னு யோசிச்சி வருத்தப்பட அவுசியம் இல்ல. கையில காசு இல்லயேன்னு கவலைபட வேணாம். நான் என்ன மாதிரி உடுப்பு போட்டாலும் கேட்க ஆளில்ல. நான் எப்புடி பேசுனாலும் என்ன கிண்டல் பண்ண யாரும் இல்ல.." என்றாள் நடந்தபடி.

"உங்க அப்பா உன்னை நினைச்சி கவலைப்படுறாரு.." என்றான் அதியன் அவள் கை பிடித்து நடந்தபடி.

"தெரியும். ஆனா எனுக்கு வேற எதுவும் புடிக்கல. இப்புடியே இருக்கதான் புடிச்சிருக்கு. சூடு வச்சும் கூட மறுபடியும் கரடுக்கு சுத்த வந்துட்டதால அவங்களாலயும் அதுக்கு மேல என்ன பண்றதுன்னு தெரியல போல. இல்ல வளந்தா அறுவு வரும்ன்னு நெனைச்சிட்டாங்க போல.. எங்கப்பன் என் பாதுகாப்புக்காக வேட்டை நாய் கூட ஒன்னு வாங்கி தந்துச்சி. உசுராட்டம் பழகும் என்கிட்ட. இந்த கரட்டுல என் காலடி படாத எடத்துல கூட என் ஜிக்கியோட காலடி இருந்திருக்கும். ஆனா ஆறு மாசம் முன்னாடி செத்து போச்சி. அதுக்கு வயசாயிடுச்சி போல.." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி தொடர்ந்து நடந்தாள்.

"என்னை பத்தரமா பாத்துக்கும் ஜிக்கி. தூரத்துல எதுனா ஆடு மேஞ்சா கூட இது இங்க கொரல் கொடுக்கும்.." என்றாள் பழைய நினைவோடு.

அதியனுக்கு அவள் சொல்வது எதுவுமே சரியாக தோணவில்லை. அவள் சொல்வதை பார்த்தாள் இப்படி இருக்க பழகி விட்டாள் என்று தோன்றியது. போதையை போல இந்த வாழ்க்கை அவளை மயக்கி வைத்துள்ளது என்று எண்ணினான்.

"இந்த காட்டு வாச்சருங்க கூட நெறைய முறை என்னை உள்ள வுடாம தொரத்த பார்த்தாங்க.. ஆனா காடு என்ன உங்கப்பன் வூட்டுத்தாடான்னு நெனைச்சிக்கிட்டு அவுங்க பார்க்காத பழகாத தடத்துல பூந்து வந்துடுவன் நான்.." என்றாள் சிறு சிரிப்போடு.

அந்த மலையின் சரிவில் இறங்கி கொண்டிருந்தவள் சட்டென நின்றாள். அவர்களுக்கு முன்னால் இருந்த மரத்தை தாண்டி இருந்த சரிவின் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன ஆறு மான்கள்.

"மேச்சலுக்கு இங்க வந்திருக்குங்க போல.." என்றவள் மரத்தின் மறைவில் நின்றபடி பார்த்தாள்.

"இதெல்லாம் மேங்காட்டுலதான் இருக்கும்.. இங்கல்லாம் எப்பவாவதுதான் வரும். அழவா இருக்கு இல்ல.?" என்றாள் அவனிடம்.

அதியன் ஆமென தலையசைத்தான். "அழகாதான் இருக்கு. இந்த இடமும் இந்த மானும் இங்கே நீயும் ரொம்ப அழகா இருக்கிங்க.. ஆனா ஆபத்தோடு அழகை ரசிக்க வேண்டிய அவசியம் என்ன உனக்கு.?" என்றான்.

செங்கா அவனது தோளில் அடித்தாள். "அதை வுடுப்பா.. எங்கப்பன்னும் எங்கம்மாளும் அழுது பார்த்தும் நான் இதை வுடல.. கெஞ்சி பார்த்து, கொஞ்சி பார்த்து, அவ்ளோ ஏன் ஒரு தரம் என்னைய கட்டி போட்டுக் கூட வச்சாங்க. என்னால இருக்கவே முடியல. கவுத்தை அத்து எறிஞ்சிட்டு ஓடியாந்துட்டேன். அப்ப பதினைஞ்சி நாளா வூட்டு பக்கமே போவல.." என்றாள் சிரிப்போடு.

அவள் சொல்வதை கேட்கும்போது அதியனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மான்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.

"வேட்டக்காரங்க கண்ணுல நான் பட்டாலும் பரவால்ல. இந்த மானுங்க படாம இருக்கணும்.." என்று கவலையோடு அவள் சொல்ல, அவனுக்கு மனம் இன்னும் நொந்து போனது.

இவளது குணத்திற்கு நிச்சயம் வேட்டைக்காரர்களையும் பகையாளிக்கி வைத்திருப்பாள் என்பது புரிந்தது. அவர்களாலும் இவளுக்கு ஆபத்து இருக்கிறது என்ற விசயம் அவனை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மான்களை பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளில் கை போட்டான். அவளை தன் அருகே இழுத்தான். அவள் புரியாமல் திரும்பி பார்த்தாள்.

"நீயும் நானும் இனி கூட்டாளியா இருக்கலாமா.?" என்றான் அவளது முகத்தை பார்த்தபடி.

அவள் குழம்பினாள். கண்களை மூடி திறந்தாள். "கூட்டாளிதானே.? சரிப்பா.." என்றவளிடம் மறுத்து தலையசைத்தான் அதியன்.

"கூட்டாளியா வேணும் நீ.. நட்புல இல்ல.. என் வாழ்க்கையில கூட்டாளியா வேணும் நீ.. என் மொத்த வாழ்க்கையையும் நான் உன்னோடு பங்கு போட்டுக்க ஆசைப்படுறேன்.." என்றான்.

செங்காவின் முகத்தில் ஆச்சரியம் நிரம்பியது. சிறிது பயம். சிறிது தயக்கம். அத்தோடு சிறிது நாணமும் வந்தது.

"ஒரே விசயத்தை திருப்பி திருப்பி கேட்காதப்பா.. நான் ஒரு காட்டான்.." என்றவளின் வாய் மீது தனது கையை வைத்தான் அவன்.

"பரவால்ல. நீ எப்படியோ இரு. எனக்கானவள் பர்பெக்ட் இல்லன்னு வேற ஒருத்தியை தேட முடியாது என்னால. ஏனா பர்பெக்ட் எல்லாம் என்னுடையதாக ஆகாது.. ஒருத்தங்களை பிடிச்சிருக்கா என்பதுதான் மேட்டர். அவங்களோட நிறை குறையை மேட்டரா பார்க்க கூடாது.." என்றான்.

செங்கா அவனை விழியசைக்காமல் பார்த்தாள்.

"உன் லைஃப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு செங்கா. உன் லைப்பை ஒரு வாரம் நானும் வாழ போறேன்னு நினைச்சி சந்தோசப்படுறேன். அதுபோல என் லைப்பை நீயும் ஒரு வாரம் வாழ்ந்து பார்க்கணும்ன்னு ஆசைப்படுறேன். உன்னோடு நான் ஒரு வாரம். என்னோடு நீ ஒரு வாரம். அதுக்கப்புறம் யோசனை பண்ணி பாரு. உன் லைஃப்ல பாதியை எனக்கு தந்துட்டு என் லைஃப்ல பாதியை நீ எடுத்துக்க உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு.. இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் எப்படி உன்னை மட்டும் பார்க்கிறேனோ அதே மாதிரி நீயும் என்னையும் என் காதலையும் மட்டும் பாரு. அவங்க இப்படி சொல்வாங்க, இவங்க இப்படி சொல்வாங்கன்னு யோசிக்காத.." என்றான்.

செங்கா சிலையாகவே நின்றாள். அவன் சொல்வது நிதர்சனத்திற்கு சிறிதும் ஒத்து வராது என்று எண்ணினாள்.

"நான்.." அவளை மேலே பேச விடாமல் மீண்டும் அவளது வாயை பொத்தினான் அதியன்.

"இதுக்கான பதிலை நீ தர இன்னும் இரண்டு வாரம் இருக்கு. முந்திரிக்கொட்டை தனமா பதில் சொல்லாத.." என்றான் கண்டிப்போடு.

அவள் விழிகளை மூடி திறந்தாள். ஆனால் ஏதும் பேச முயலவில்லை.

"சாப்பிட போகலாம் வா.." என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்தபடி வந்த வழியிலேயே நடந்தான்.

செங்கா அவனது முகத்தையே பார்த்தாள்‌. அவனை பார்க்கும் போதெல்லாம் அவன் ஏதோ தேவகுமாரன், தான் ஏதோ சிறு பிராணி என்பது போலவே தோன்றியது அவளுக்கு. அவளது மனத்தின் குழப்பத்தால் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது.

இருவரும் உயர பாறைக்கு வந்து சேர்ந்தனர். கட்டுச்சோற்றின் கடைசி பொட்டலத்தை உண்டனர்.

"அடுத்து என்ன செய்வ நீ.?" என்று அதியன் கேட்டான்.

"சு.. சும்மா சுத்துவேன்.." என்றவளுக்கு நாக்கு குழறியது கண்டு அதியனுக்கு சிறிது திருப்தியாக இருந்தது.

"சரி வா.. சுத்தலாம்.." என்றவன் எழுந்தான். செங்காவும் எழுந்து நடந்தாள். இருவரும் அந்த ஓடையின் கரையில் நடந்தனர். அதியன் அவளது கையை பற்றியபடியே நடந்தான்.

செங்கா இணைந்திருந்த தங்களது கரங்களை பார்த்தபடியே நடந்தாள். முன்பு போல அவளது நடையில் ஓட்டம் இல்லை. ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள். அதை அவள் அறியவே இல்லை. ஆனால் அதியன் கவனித்தான்.

"எலந்த பழம் வேணுமா.?" என்றாள் கரையோரம் இருந்த ஒரு மரத்தை பார்த்து விட்டு. அவளது குரலில் எப்போதும் இருக்கும் துள்ளல் இப்போது இல்லை. அவள் குழப்பத்தில் இருப்பதே தனக்கான முதல் வெற்றி என்று நினைத்தான் அதியன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1042

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN